மன்னங்காடு சடங்குகள்

Customs and rituals in Mannankadu

Traditional practices, customs and rituals, abound in Mannankadu. Economic progress of the past two decades has brought in a sea of change in rural life. Economic growth leads to social progress and consequent cultural changes. Many traditional practices are discarded and some new ones are incorporated. Here we attempt to develop a documentary resource of important native practices. This, we hope, will provide a snapshot of current practices that can be compared with the past practices (if made available) and will help compare with evolved practices of the future. Researchers or anyone who would like to discuss this subject may contact us at info@mannankadu.org.

ஒரு தனி மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல படிநிலை நிகழ்ச்சிகள் ஒருசில வரையறுக்கப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு சமுதாயத்திற்குள் பரவலாகப் செயல் படுத்தப்படுகின்றன. இவ்வழக்கங்களே சடங்குகள் ஆகும். சடங்குகளை பண்பாட்டின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம் எனலாம். உலகம் முழுவதும் சடங்குகள், காலத்தின் தேவைகேற்ப மாற்றியும், சடங்கு செய்வோரின் வசதிக்கேற்றார்போல் எளிமைப் படுத்தப்பட்டோ அல்லது விரிவாக்கப்பட்டோ மாறுபாட்டுடன் பின்பற்றப்படுகின்றன. இந்த மாறுபாடுகள்தான் சடங்குகளின் பரிணாமத்திற்கு வித்திடுகின்றனof. தவிரவும், ஒரே ஊருக்குள் ஒரேசடங்கினை இருவேறு சமுதாயத்தினர் சற்றே வேறுபட்ட முறையில் பின்பற்றுவது சடங்கின் பன்முகத் தன்மைக்கு எடுத்துக்காட்டாகும். பண்பாட்டிற்கு நேரடித் தொடர்பில்லாத சடங்குகளும் மதங்களை ஊடகமாகக் கொண்டு பண்பாட்டுடன் ஒன்றிணைந்து காலப்போக்கில் நிலைத்து விடுகின்றன.

நூறாண்டுகளுக்கு முன் நம்மூரில் வாழ்ந்த பெரியோரின் வாழ்க்கை நடைமுறைகள் என்னவென்று நமக்குத் தெரியாது. இன்று நாம் பின்பற்றுவது அவர்களின் பழைய சடங்குகளின் பரிணமித்த வடிவத்தைத்தான். சடங்குகளின் பரிணாம வேகம் அதிகரிக்கும் பொழுது அச்சடங்குகளின் பலகூறுகள் திடீரென கைவிடப்பட்டும் புதிதாக பலகூறுகள் சேர்க்கப்பட்டும் விடுகின்றன.

எடுத்துக்காட்டாக, இக்காலத்தில் ஓர் இறப்பு நிகழ்ந்த வீட்டில் பெண்களின் ஒப்பாரி பெரும்பாலும் வழக்கொழிந்ததும், அதே வீட்டில் பதினாறாம் நாள் கருமாதிச் சடங்குகள் எட்டாம் நாளோ, பத்தாம் நாளோ நடைபெறுவதும், இறந்தவரின் உருவப்படத்தைத் திறக்கும் 'படத்திறப்பு விழா'வும் கடந்த பதினைந்து வருடங்களுக்குள் நம்மை வந்தடைந்த மாற்றங்கள் தானே.

இந்தியாவில் இன்று நாம் காணும் பொருளாதார வளர்ச்சி நாம் கணிக்க முடியாத வகையில் சமுதாய மாற்றத்திற்கு உரமிட்டும் நீர்வார்த்துகொண்டும் உள்ளது. சடங்குகளும் இந்த சமுதாய மாற்றங்களுக்கு தம்மை உட்படுத்தி ஈடுகொடுத்து காலவெள்ளத்தில் மக்களுடன் நீந்திச்செல்கின்றன. இக்காலச் சடங்கு நடைமுறைகளை எழுத்து வடிவத்தில் கொண்டு வந்து வெளிஉலகிற்கு தெரிவிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

மன்னங்காடு கிராமத்திலும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பல ஊர்களிலும் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினர் பின்பற்றும் சடங்குகளை மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது அனுபவத்தில் அறிந்ததையும், மூத்தவர்களை அணுகி விசாரித்ததையும் அடிப்படையாகக் கொண்டு எளிமைப்படுத்தி நமக்கு 'சடங்குகள்' என்ற தொகுப்பினைத் தந்திருக்கிறார். துரைசாமி காவேரி அம்மாள் அறக்கட்டளை இத்தொகுப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

ஆம், இத்துடன் வேலை முடிந்துவிட்டது எனக்கொள்ளாமல், இம்முயற்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எண்ணியிருக்கிறோம். அதாவது, ஊரின் மற்ற பிரிவினரும் தத்தமது சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள சடங்குகளை தெளிவாகவும், பொறுப்புடனும் எழுதி சமர்ப்பிபார்களாயின் அவர்களை வரவேற்கிறோம். ஒரே ஊருக்குள் வெவ்வேறு சமுதாயப் பிரிவினருக்கிடையே உள்ள சடங்கு வேறுபாடுகளை ஒரே இடத்தில் கிடைக்கவைப்பதன் மூலம் நாம் சாதாரணம் என நினைக்கும் நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். அத்துடன், சடங்கு வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்கும் வேறுபாடுகளைப் பாராட்டும் திறனையும் நாம் பெறுவதற்கும் இது உதவக்கூடும். மேலும், சமுதாய ஆய்வாளர்களுக்கும் இந்த சிறிய முயற்சி பயனளிக்கக் கூடும். வணக்கம் - அன்பன் துரைசாமி நவநீதம், ஜனவரி 31, 2013.

சடங்குகள்

மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு

மனித நாகரிகத்தின் இன்றியமையாத ஒரு பகுதி சடங்குகள். சடங்குகள் மனித வாழ்க்கையை நெறிப் படுத்த உதவுகிறது. உடல், மன ரீதியான ஆரோக்கியத்தைப் பேணுகிறது. உலகில் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் அவரவர் சமூகச் சடங்குகளை பின்பற்றி வருகிறார்கள். எத்தனை நாகரிகங்கள் புதிதாகத் தோன்றினாலும் சடங்குகளின் உண்மைத் தன்மை மாறக் கூடாது... என்பதில் நம் முன்னோர்கள் கவனமுடன் இருந்தார்கள். ஆனால் நாம் விஞ்ஞான முன்னேற்றத்தை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர மறுக்கிறோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை சடங்குகள் பின்பற்றப் படுகிறது.

சில சடங்குகள் பெண்களின் வாழ்க்கையை சிரமப்படுத்தினாலும், ஆண்களுக்கு முன்னுரிமையே வழங்குகிறது. இதன் அடிப்படை உண்மை என்னவென்றால் உடல் ரீதியில் ஆண்கள் வலுவானவர்கள். பெண்கள் வலு குறைந்தவர்கள். இவற்றைக் கொண்டே சடங்குகள் தீர்மானிக்கப் பட்டன. நமது தேசத்தில் வாழ்க்கை நெறிமுறைகள் (கலாச்சாரம்) மிகக் கடுமையானதால் ஒரு சில சடங்குகள் பெண்களை இரண்டாம் பட்சமாகவே எண்ணச் செய்கிறது. சடங்குகளில் உள்ள வாழ்வியலைத் தெரிந்து கொண்டால் நாம் அதனை வரும் தலைமுறைகளும் பின்பற்றச் செய்யலாம்!தஞ்சாவூரைச் சேர்ந்த பட்டுக்கோட்டையில் ‘முசுகுந்த நாடு’ எனப்படும் வேளாளர் சமுதாயச் சடங்குகள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

திருமணம்

திருமணம் என்பது இந்து தர்மப்படி பஞ்ச (ஐந்து) மகா கடமைகளைக் கொண்டது. இதனை நிறைவேற்றவே ஆண், பெண் தம்பதிகள் ஆகிறார்கள். திருமண பந்தம் எனப்படுவது இருபாலரும்

தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை பயப்பதாகவே அமைய வேண்டும். திருமணமான பின் செய்ய வேண்டிய ஐந்து கடமைகள் (யஜ்ஞங்கள்) என்ன என்பதை நமக்கு வேதங்கள் தெரிவிக்கின்றன! 1.பித்ரு கடமைகள் 2.பிரம்ம கடமைகள் 3.ரிஷி கடமைகள் 4.மனுஷ்ய கடமைகள் 5.பூத கடமைகள்.

பித்ரு கடமைகள்

பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நித்ய, நைமித்ய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும். பித்ரு லோகம் எனப்படுவது இறந்த பின் ஜீவன் காத்திருக்குமிடம்.(ஸ்வர்க்க நரகத்திற்கு போகு முன்) பித்ரு லோகத்திற்கு போய்ச்சேருகிறது. வைதீகம் (மேலுலக ) புண்ணியம் செய்யப்படும் காரியங்களே புண்ணியத்தைக் கொடுக்கிறது.

பிரம்ம கடமைகள்

பிரம்ம கடமை என்பது வேதத்திற்குச் செய்யப்படும் கடமைகள் ஆகும். முதற்படியாக குலகுருவிற்கு தங்களின் கடமைகளைச் செய்ய வேண்டும். இரண்டாவதாக குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள். மூன்றாவதாக குல ஷாக்கா எனப்படும் வேதத்திற்கு அடுத்த நிலையிலிருக்கும் பகவத் கீதையிலிருந்து அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் நித்திய பாராயணம் செய்ய வேண்டும்.

ரிஷி கடமைகள்

ரிஷிகளுக்கும் ரிஷி பரம்பரைகளுக்கும் சேவை செய்வது. ரிஷிகளைப் பற்றி புகழ்ந்து பேசுவது, வேதங்களைப் பற்றிய அறிவைப் பேசுவது,ரிஷி கடமைகள் மிகவும் புண்ணியத்தைக் கொடுக்கிறது. ஐந்து கடமைகளுள் முதல் மூன்று கடமைகளே மிகவும் புண்ணியத்தைக் கொடுப்பதாய் வேதங்கள் கூறுகிறது.

மனுஷ்ய கடமைகள்

தன் சக காலத்தில் வசிக்கும் தொடர்புடைய மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். (உறவினர்கள்,நண்பர்கள்,உடன் பிறந்தோர்கள் ) நம்மிடம் வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை முறையாகச் செய்ய வேண்டும்.சக்தி மீறிய எதிர்பார்ப்புகளை மரியாதையுடன் தவிர்த்து விட வேண்டும். சக்திக்கு ஏற்ப நியாயமானதாய் இருந்தால் செய்ய வேண்டும். இதன் விதி: இப்பிறவியிலேயே பயன் தருவதாகச் செய்ய வேண்டும்.

பூத கடமைகள்

மனிதர்களைத் தவிர ஏனைய ஆறறிவு,ஐந்து அறிவு ஜீவன்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பூத கடமைகள். அதனதன் எதிர்பார்ப்புகளைச் செய்ய வேண்டும்.நம் தொடர்புடைய உயிரிகளுக்கு உரிய கடமைகளைச் செய்து இயற்கையை நன்றியுடன், நேசிக்க வேண்டும். இதில் பூதம் எனப்படுவது பஞ்ச பூதங்கள் ஆகும். பஞ்ச மகா கடமைகளில் மிக முக்கியம் ரிஷி கடமைகள்,. முதல் போதனை தெய்வ கடமைகள்.

திருமணத்தின் போது பஞ்ச மகா கடமைகளை மணமக்கள் இருவரும் துவக்குகிறார்கள். ‘நாம் இருவரும் ஐந்து கடமைகளையும் நிறைவேற்றுவோம்’ என மணமகன் மணமகளுக்கு வாக்குக் கொடுப்பதே ‘வாக்குப்பட்டவள்’ (வாக்கப் பட்டவள் ) என்றானது. ‘கற்பு’ என்பது: கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது என வேதங்கள் கூறுகிறது. எனவே கற்பு என்பது இரு பாலருக்கும் பொது!

நமது தேசம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்சொன்ன கடமைகளை நெறி பிறழாமல் செய்து வந்தது. அதன் பின் அந்நியர்களின் ஆக்கிரமிப்பால்(சாஸ்திரங்களின் இருண்ட காலங்கள்) சடங்குகளும் சம்பிரதாயங்களும் பொருள் தெரியாமல் போய் விட்டது. இளைய தலை முறையினர் இதனைப் பின்பற்றுவார்கள் என நம்புவோம்!

இந்து வைதிகத் திருமணங்களில் ஒவ்வொரு சமூக மக்களுக்கு ஏற்ப நடைமுறைகளும் சம்பிரதாயங்களும் வேறுபடும். திருமணத்திற்கு ஐந்து அம்சங்கள் முக்கியமானவை. 1. (வாங்நிச்சயம்) நிச்சயதார்த்தம். 2. (வரப்ரேஷணம்) மணமகனை வரித்தல் 3. பெண்ணைத் தானம் செய்தல் (கன்யாதானம்) 4. மணமகன் மணமகளின் கரம் பற்றுதல் (பாணிக்ரஹனம்)5. சப்தபதீ (ஏழு அடிகள் வைப்பது).

வைதீகத் திருமணத்தில் மிகவும் முக்கியம் சப்தபதீ! இது இல்லாத திருமணத்தை வைதீகம் ஏற்காது.வேத காலங்களில் தாலி கட்டுவது இருந்ததாகத் தெரியவில்லை.இது ஒரு பிற்கால ஏற்பாடே!

முசுகுந்தநாடு எனப்படும் முப்பத்தி இரண்டு கிராமங்களில், (தற்சமயம் முப்பத்தி ஆறு) திருமணம் நிகழ்த்த பொதுவாக மணமகன் வீட்டார்தான் மணமகள் வீட்டாரிடம் திருமணம் பற்றிய தகவலைத் தெரிவிப்பது வழக்கம். அந்தந்த ஊரிலுள்ள உறவுக்காரர்கள் மூலம் முதலில் மணமகள் வீட்டாரிடம்மணமகளையும், அவர்களது குடும்பத்தை விசாரிப்பார்கள். தங்களின் குடும்பத்தரத்திற்கு ஏற்ப மணப்பெண் கிடைத்தால், முறைமாமன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சம்மதம் கேட்ட பின் சம்மதிப்பார்கள்.

அதன் பின் குல தெய்வ உத்தரவு கேட்கப்படும். பெண் வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் ஜாதகம் எடுத்து வரச் செய்து இரு வீட்டார் பங்காளிகளின் சம்மதத்துடன் திருமணப் பொருத்தம் பார்க்கப்படும். மணமகனோ,மணமகளோ நேரில் பார்ப்பது இல்லை. இன்றும்!இதற்கு 7,9,11என பாக்குகள் வைத்து மாமன், மைத்துனர்களை அழைப்பது அக்காலத்தவர் மரபு.

முகூர்த்த ஓலை

மணப்பெண்வீட்டில் ஒரு முகூர்த்த நாளில் அவர்களின் பங்காளிகள், மாமன்கள், உறவினர்கள் கூடி மணமகன் வீட்டாரை வரவழைத்து திருமணம் நிச்சயிக்கும் சடங்கு. (நிச்சயதார்த்தம்) இதனை முற்காலத்தில் ஓலையில் எழுதுவதால்,‘முகூர்த்த ஓலை’ எழுதுவது என இன்றும் வழக்கில் உள்ளது. இரவில் மணமகன் வீட்டார் பெண்ணைப் பார்க்க அவர்களின் வசதிக்கேற்ப மேளதாளங்களுடன் சீர்வரிசை சகிதம் வருவார்கள். பெண்ணிற்கு நாத்தனார் முறை உள்ளோர் பெண்ணை அலங்காரம் செய்வார்கள். அதன்பின் புரோகிதரால் ‘முகூர்த்த ஓலை’ எழுதப்படும். சபையினருக்கு உரத்த குரலில் புரோகிதர் வாசிப்பார். இரு வீட்டாரின் வயதில் மூத்த பங்காளிகள் தாம்பாளங்களில் பழம், பாக்கு வெற்றிலைகள் வைத்து தாம்பாளம் மாற்றிக் கொள்வார்கள்.சிற்றுண்டியுடன் இனிதே விழா நடைபெறும்.

முகூர்த்தப் பத்திரிகை

இருவீட்டாரும் முகூர்த்த நாள் பார்த்து,அவரவர் பங்காளிகளுடன் ஆலோசித்து நிச்சயதார்த்தத்தில் புரோகிதரின் முகூர்த்த ஒலைப்படி பத்திரிகை அச்சடிக்கக் கொடுப்பார்கள்.

முகூர்த்தக் கால்

திருமண நாளிலிருந்து 5,7,9,11 நாட்கள் முன்பு முகூர்த்த நாள் பார்த்து, இரு வீட்டாரின் இல்ல வாசலில் பந்தக்கால் எனப்படும் முகூர்த்தக் கால் நடுவது. பந்தல் போடும் ஈசானிய மூலையில் நடும்போது உறவினர்கள், மாமன்கள், பங்காளிகளால் அழைக்கப் படுவார்கள்.

கால் ஊன்றுமிடத்தில் பசுவின் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். அதில் வெண்கலத் தாம்பாளத்தில் பூ, பழங்கள், பத்தி ஏற்றி வைக்கப்படும். குத்து விளக்கு ஒன்றினை நிறை விளக்காக வைக்க வேண்டும். பந்தக்கால் ஒன்றினை எடுத்து தண்ணீரில் கழுவி அதன் உச்சியில் பூச்சரம், மாவிலைக் கொத்து கட்டப்படும். கால் ஊன்றும் ஈசானிய மூலையில் வைத்து மாமன், உறவினர்கள், பங்காளிகளால் காலுக்கு சாம்பிராணி புகை காண்பித்து, அரைத்த மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து வணங்குவர். அதன் பின் மூவர் அல்லது ஐவரால் கால் ஊன்றப்படும்.

மணமகன் இல்லத்தில் காலுக்கு முன்புறம் கால் ஊன்றிய பின், மூன்று பெரிய மண் பானைகள் வைக்கப்படும். அதன் எதிரே சுமார் ஐந்தடி தூரத்தில் கிழக்குப் பார்த்து இரு பாலரும் நின்று ஒரு பாத்திரத்திலிருந்து நெல் மணிகளை அள்ளி இரு கைகளாலும் பானைகளில் அள்ளிப் போட வேண்டும். பிறகு வருபவர்களுக்கு பூ, பழம், பருகக் கொடுத்து உபசரிக்க வேண்டும். மஞ்சள் பூசிய தேங்காய் மூடி, வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும். பத்திரிகையினை குல தெய்வத்திற்கு வைத்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.

வந்திருக்கும் மாமனுக்கு மஞ்சள் பூசிய பத்திரிகையினை தாம்பாளத்தில் வைத்து பங்காளிகளால் கொடுக்கப்பட வேண்டும்.மணமகன் வீட்டார் அன்று நகை ஆசாரியை அழைத்து வந்து அவருக்கு உரிய மரியாதை செய்து, மாங்கல்யத்திற்குப் பொன்னும் மெட்டியும் செய்யக் கொடுக்க வேண்டும். அல்லது அதற்கு ‘முன் பணம்’ கொடுக்க வேண்டும். அன்றே பங்காளிகள் முகூர்த்தப் புடவை, வேட்டி, பாட்டி உறைப் புடவை எடுக்கச் செல்ல வேண்டும். பத்திரிகை கொடுக்க இரு வீட்டாரின் குடும்பத்தினருடன் பங்காளிகளும் இரு பாலருடன் செல்ல வேண்டும். அன்றைய தினத்திலிருந்து இரு குடும்பத்தினரும் திருமணம் முடியும் வரை அசைவம் சமைப்பது கூடாது. துக்க வீடுகளுக்கும் செல்லக் கூடாது. அன்று இரவே வீட்டுத் தெய்வங்களுக்கு படையல் போட்டு வணங்க வேண்டும்..

மூன்றாம் தண்ணீர்

திருமணத்திற்கு முன் மூன்றாம் நாள் மணமகன், மணமகள் இருவரின் மாமன் முறைப் பெண்மணிகளையும், உறவினர்கள், பங்காளிகளை அழைக்க வேண்டும். அவரவர் இல்லத்தில் இருவருக்கும் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து திருமஞ்சன நீராட்ட வேண்டும்.பிறகு மணப் பெண்ணிற்கு சலவைத் தொழிலாளர் பெண்மணியால் தலை துவட்டப்பட வேண்டும். பால்,பழம் கொடுத்து பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கச் செய்ய வேண்டும். கைகளில் கண்ணாடி வளையல்கள், நகைகள், மெட்டி(மெட்டி அணியும் விரலில் கர்ப்பப் பைக்கான ‘அக்கு பிரஷர்’ புள்ளி அழுத்தி விடப்படுகிறது.) அணிவிக்கவேண்டும்.

பெண் அழைப்பு

அன்று பகலில் நான்கு வாழை மரங்களை வாழைத் தாருடன் மணமகன் வீட்டுப் பந்தலின் நடுப் பகுதியில் மண்ணால் மேடையிட்டு மெழுகி மாக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மேற் புறத்தில் நான்குபக்கங்களிலும்மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். நான்கு வாழை மரங்களும், நான்கு வேதங்களைக் குறிக்கும். மாவிலைகள், நாலாயிரம் தேவர்களைக் குறிக்கும். இவர்களின் ஆசீர்வாதங்களுடன் திருமணம் நிகழ்வதாக ஐதீகம்.

இரவுமணமகன் வீட்டார், மேள தாளத்துடனும் வாண வேடிக்கைகளுமாய் மணமகள் இல்லம் சென்று மணமகளை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்ணிற்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வெண்கலத் தாம்பாளத்தில் ஒரு மரக்கால் அரிசி வைத்து பூச்சரம், வெற்றிலைப் பாக்குடன் சலவைத் தொழிலாளரின் சலவை வேட்டியில் வைத்துக் கட்ட வேண்டும். இதற்குப் ‘பேழைக் கூடை’ என்று பெயர். (முந்தைய காலங்களில் தாழங்கூடை, பெரம்புக் கூடைகளில் கொண்டு சென்றதால் இப் பெயர் பெற்றது.)

இதனை நாத்தனார் முறை உள்ளவர்கள் கொண்டு செல்ல வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு மேளதாளத்துடன் செல்லும்போது மாப்பிள்ளை வீட்டார், பெண் இல்லத்தை அடைந்ததும் அவர்களை வயதில் மூத்த பங்காளி மஞ்சள் நீரால் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்.

பெண் இல்லத்தில், பெண்ணை அலங்கரித்து... பட்டுப் புடவை உடுத்தி நடு வீட்டில் கிழக்கு முகமாய் கோரைப் பாயின் கீழ் நெல் மணிகளைப் பரப்பி, பாயின் இரு பக்கங்களிலும் குத்து விளக்கை நிறை விளக்காக வைக்க வேண்டும். பெண்ணின் மடியில் தேங்காய், மஞ்சள் கொடுத்து பாயில் உட்காரச் செய்ய வேண்டும். பெண்ணின் மாமன்கள் பன்னிரெண்டு மரக்கால் அல்லது ஒரு மூட்டை அரிசியை, மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்க அளக்க வேண்டும்.

அன்று இரவு மாப்பிள்ளை வீட்டில், மணமக்களின் திருமண உடைகளையும், திருமாங்கல்யத்தையும் வைத்து வீட்டுத் தெய்வத்திற்குப் படைக்க வேண்டும்.

பெண்ணிற்கு மாமன் முறை உள்ளோர், பெண்ணுக்கு மாலை அணிவித்து பந்தலுக்கு அழைத்து வர வேண்டும். உறவினர்கள், பெரியோர்களின் ஆசீர்வாதம் வாங்கிய பின் தோழியருடன் உயரிய வாகனத்தில் மேள தாளத்துடன் வாண வேடிக்கையுமாய் மணமகன் இல்லம் அழைத்துச் செல்ல வேண்டும். செல்லும் போது இடைப் பட்ட இடத்திலுள்ள கோவில்களில் சிதறுகாய் உடைத்து வணங்கிச் செல்ல வேண்டும்.

.மணமகன் வீட்டில் வயதில் மூத்த பெண்மணி, பெண்ணை மஞ்சள் நீரில் ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும். மூன்று மூத்த பெண்மணிகள் ‘நிறை நாழி’ எனப்படும் படியில் நிரப்பிய நெல்லின் மேல் வெற்றிலையால் சொருகி ... அதனை மணப் பெண்ணுடன் பிடித்து வரவேண்டும். பந்தல் நெடுகிலும் சலவைத் தொழிலாளர் பெண்மணியால் புடவை விரித்து, அதில் நெல் இறைக்கப்பட்டு மணப்பெண் மணமகனின் இல்லம் நோக்கி மேளதாளத்துடன் வலது காலை எடுத்து வைத்துச் செல்ல வேண்டும். பெண்ணை நடு வீட்டில் கோரைப் பாயினுள் நெல் நிரப்பி கிழக்கு முகமாய் அமரச் செய்து மாமி முறை உள்ளோர் பால், பழம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

முகூர்த்தம்

ஒரு முகூர்த்த நேரம் என்பது 1.30 மணி நேரம். (மூன்றே முக்கால் நாழிகை)

முகூர்த்தத்திற்கு தேவையான பொருட்கள்: நவதானியங்களை எருக் கலந்து வைக்க வேண்டும். கழுத்து மணி ,பசும்பால், ஒதிய மரக்கிளை, மா மரக்கிளை, இதற்கு அணிவிக்க பட்டுத் துணி. சுடாத கோலமிட்ட மண் பானைகள் மூன்று. பானைக்குள் நீர். முளைப் பாரி வைக்க ஏழு சுடாத மண் கிண்ணங்கள். ஹோமத்திற்கு வேண்டிய பொருட்களுடன் ஆலங்குச்சி, அரசங்குச்சி, நாயுருவிச்செடிகளை நான்கு நாட்களுக்கு முன்பு சேகரித்து வைக்க வேண்டும்.

மணநாள் அன்று மணமக்கள் இருவரும் நீராடி புத்துணர்வோடு இருக்க வேண்டும். புரோகிதர் ஹோம குண்டத்தில் ஏற்கனவே சேகரித்து வைத்திருந்த பொருட்களை இட்டு நெய் ஊற்றி ஹோமம் வளர்ப்பார்.மணவறையில் மணமக்கள் அமர பட்டுப் பாயின் அடியில் நெல் நிரப்பி, கிழக்குப் புறமாய் அமர வைக்க

ஏற்பாடு செய்ய வேண்டும்.புரோகிதர் மணமகனை அழைக்க, மணமகன் பட்டுப் பாயில் கிழக்குப் புறமாய் சம்மணமிட்டு அமர வேண்டும். மாமனுடன் வந்து புண்ணிய ஸ்நானம் செய்ய வேண்டும்.ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் அரைத்து பிள்ளையார் பிடித்துவைக்க வேண்டும்.

சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் நீரும், நல்ல விளக்கும், அரிசிமாவில் செய்யப்பட்ட அடையும், கொண்டு மணமகனின் காலிலிருந்து தலை வரைவலமிருந்து இடமாய் மூன்று முறை திருஷ்டி சுற்ற வேண்டும். மாமன் மாப்பிள்ளையை வீட்டினுள் அழைத்துச் செல்ல வேண்டும்.

அடுத்து பெண்ணிற்கு அவளது முறை உள்ளோர் மேற் சொன்ன முறைகளையே செய்ய வேண்டும். பெண் உள்ளே செல்ல மாப்பிள்ளை மீண்டும் மணவறை வருவார்.

மாப்பிள்ளைக்கு மாமன், மைத்துனர், மணமகள் வீட்டார் முறை உள்ளவர்கள் மணமகனுக்கு நகைகள் (அநேகமாய் மோதிரமே அணிவிப்பர். ரிக் வேதத்தில் ‘அக்கு பிரஷர்’ முறை விவரிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பிரேஸ்லெட், ரிஸ்ட் வாட்ச், போன்றவை மிகுந்த பலனைக் கொடுக்கும்.மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடைப்பட்ட பகுதி பாலியல் பகுதி. புராஸ்டேட் புள்ளி இப்பகுதியில் இருப்பதால் ‘இன்று முதல் அவன் இதற்கு தகுதியானவன்’ என வேதம் குறிப்பிடுகிறது.) பணம் செய்வித்து, மாமன் தேங்காய் உடைக்க வேண்டும். மாப்பிள்ளை உள்ளே அழைத்துச் செல்லப் படுவார். அடுத்து மணமகள் மணவறை வரவேண்டும். மேற்சொன்ன அதே முறை செய்யப்பட்டு மீண்டும் வீட்டினுள் அழைத்துச் செல்லமணமகன் மணவறை வரவேண்டும். மணமகன் மாமனால் வலமிருந்து இடமாய் அழைத்து வரப்பட்டு உட்கார வைக்கவேண்டும்.

மணமகன் கையில் தேங்காய் கொடுக்கப்பட்டு புரோகிதர் மந்திரம் சொல்ல, மூன்று முறை தாம்பாளத்தில் உள்ள பச்சரிசியை அள்ளி தாம்பாளத்தில் போட வேண்டும். தேசிகர் மஞ்சள் முடிந்த மஞ்சள் கயிறை மணமகனின் கையில் கட்ட... மங்கல வாத்தியங்கள் இசைக்கப் பட்டு, பரியாரி சங்கு ஊதுவார். இதனைக் ’கங்கணம் கட்டுவது’ என அழைக்கப் படுகிறது. செயல் உறுதிக்காகக் கட்டப்படுகிறது.

அடுத்து அரசாணிக்கால் எனப்படும் முகூர்த்தக் கால் ஊன்ற வேண்டும். அரசாணிப் பானையில் சிறிதளவு தண்ணீர் இட்டு முறை உள்ளோர் காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வணங்கி பட்டுத் துணி கட்டி, கால் ஊன்றவேண்டும். அப்போது மேளதாளங்களுடன் சங்கு ஊதப்படும்.

மணமகனை மாமன் முறை உள்ளோர் மணமகன் உடையையும், மாலையையும் தாம்பாளத்தில் புரோகிதர் அளிக்க உடை அணியச் செல்ல வேண்டும்.

பெண்ணை மாமி முறை உள்ளோர் அழைத்து வரவேண்டும். அழைத்து மேற்குறிப்பிட்டவாறு மணமகனுக்கு அடுத்து மணமகளுக்கும் கங்கணம் கட்டி மண உடை உடுத்த அழைத்துச் செல்ல வேண்டும். மணமகன் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று ‘இன்றோடு பிரம்மச்சரிய விரதம் முடிந்த’தாய் பிரார்த்தனை செய்து உடை உடுத்தி, மைத்துனி முறை உள்ளோர் மணமகனுக்கு பந்தல் வாயிலில் மஞ்சள் நீரால் ஆரத்தி எடுத்து மணமகனுக்கு அம்மிக் குழவியில் கால் வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.

மணமகனை மணவறை அழைத்து வந்து மணமேடையில் அமர வைக்க வேண்டும். பெண்ணை அழைத்து வந்து நாத்தனார் முறை உள்ளோர் மிஞ்சி அணிவிக்க வேண்டும். இருவரையும் அழைத்து வந்து நுனி இலையைப் போட்டு அதில் அரிசியை வைத்து ஒன்பது பாக்குகள் வைத்து நவக்கிரக பூஜை செய்ய வேண்டும்.

அரசாணிப் பானையில் நீரூற்றி அரசாணிக் காலை ஊன்றவேண்டும். மணமகன் பெற்றோருக்கு மஞ்சள் குங்குமத்தால் பாத பூஜை செய்ய வேண்டும். அதே போல் மணமகளும் அவளது பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வேண்டும்.பிறகு மணமகனும், மணமகளும் அக்னியை வேண்டிக் கொண்டு அக்னியில் பொரி அள்ளிப் போட வேண்டும். பெண்ணின் பெற்றோர் மணமகனின் பெற்றோரிடம் பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும். புரோகிதர் இருவருக்கும் மாலை எடுத்துக் கொடுக்க மாப்பிள்ளை உட்கார்ந்தவாறு கிழக்கு நோக்கி வணங்கி மணமகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும். மணமகள் எழுந்து நின்று அதே போல் மணமகனுக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

மணமகன் வீட்டார் பச்சரிசியில் மஞ்சள் கலந்து உதிரிப் பூக்களுடன் வைத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இதற்கு அட்சதை என்று பெயர். புரோகிதரால் ஒரு தாம்பாளத்தில் சிறிதளவு பச்சரிசி, உதிரிப் பூக்களுடன் தேங்காயும் வைத்து அதன் மேல் மஞ்சள் கயிறால் கோர்க்கப்பட்ட திருமாங்கல்யத்தை வைத்து மணமகன் வீட்டார் வந்திருக்கும் அனைவரிடமும் தொட்டு ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

பிறகு புரோகிதரிடம் மாங்கல்யத் தாம்பாளம் அளிக்கப் பட... புரோகிதர் திருமாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் அளிக்க... முகூர்த்த நேர இறுதியில் மணமகன் மணமகளின் கழுத்தில்... மங்கல வாத்தியங்கள் முழங்க வந்திருப்போர் வாழ்த்த, அட்சதை தூவி இரண்டு முடிச்சுப் போட... நாத்தனார் மூன்றாவது முடிச்சைப் போடுவார்!

தாலி கட்டும்போது கூறப்படும் மந்திரம் இது:

மாங்கல்யம் தந்துனாநேந மம ஜீவன ஹேதுனா!

கண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ சரதச்சதம்!!

இதன் பொருள்: அழகிய பெண்ணே! என் வாழ்வின் காரணமாக இந்த மங்கலநாணை உன் கழுத்தில் பூட்டுகிறேன்! நீ நூறாண்டு வாழ்ந்து, என்னையும் வாழ்விப்பாயாக!

மணமான பின் தம்பதிகள் தர்ம சாஸ்திரப்படி குடித்தனம் நடத்தவும் பசுக்கள், பொருள், ஐஸ்வர்யம் மற்றும் எல்லாவிதச் செழிப்பையும் அடையவும் மணமகளை ஏழு காலடிகள் வைக்கச் சொல்வதே சப்தபதீ!

தாலி கட்டியபின் புரோகிதரால் ‘ஏக மிஷே’ என ஆரம்பிக்கும் ஏழு மந்திரங்களைக் கூறி, அக்னிக்கு வடக்குப் புறமாக பெண்ணின் வலது பாதத்தால் ஏழு அடிகள் கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ எடுத்து வைக்கும்படி செய்கிறான் மணமகன்.

1.ஏக மிஷே விஷ்ணுஸ்த்வா அன்வேது!

பெண்ணே! விஷ்ணு, குறைவிலா அன்னத்தின் பொருட்டு உன்னைப் பின் தொடரட்டும்.

2. த்வே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வா அன்வேது!

உடல் வலிமை பெறுவதற்காக விஷ்ணு இரண்டாவது அடியிலும் உன்னைப் பின் தொடரட்டும்.

3.த்ரீணி வ்ரதாய விஷ்ணுஸ்த்வா அன்வேது!

இல்லற விரதங்களைக் கடைப் பிடிக்க மூன்றாவது அடியிலும் விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.

4.சத்வாரி மாயோபவாய விஷ்ணுஸ்த்வா அன்வேது!

உனக்கு நல்ல சுகங்களை அளிப்பதற்காக நான்காவது அடியிலும் விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.

5.பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்ச்வா அன்வேது!

பசுச் செல்வத்திற்காக ஐந்தாவது அடியிலும் உன்னை விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.

6.ஷட் ருதுப்ய: விஷ்ணுஸ்த்வா அன்வேது!

ஆறு பருவங்களின் இன்பங்களை அடைய ஆறாவது அடியிலும் விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.

7.ஸப்த ஸப்தப்யோஹோப்த்ராப்யோ விஷ்ணுஸ்த்வா அன்வேது!

நீ என்னுடன் சேர்ந்து செய்ய வேண்டிய யஜ்ஞங்களை ஹோதா, பிரசாஸ்தா, ப்ராம் மணாச்சம்ஸி, போதா, நேஷ்டா, அச்சாவாகர், ஆக்நணீதரர், என ஏழு ஹோதாக்களால் ஸோம யாகம் முதலிய யாகங்களில் ஹோமம் செய்ய விஷ்ணு உன்னைப் பின் தொடரட்டும்.

இவ்வாறு மணமகன் மணமகளின் கரத்தைப்பற்றி மணவறையைச் சுற்றி வரவேண்டும்.

நாம் அணியும் அணிகலன்கள் நம்மை அலங்கரிக்க அல்ல.நம் உடலையும் மனதையும் பாதுகாக்கவே! எத்தனையோ உடல் உறுப்புகளில் அணிகலன்கள் அணியும் நாம் திருமணச் சடங்கில் கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டுவது ஏன்? மஞ்சளுக்கு மருத்துவ குணம் உண்டு. மஞ்சள் கயிறைக் கழுத்தில் அணிவித்தால் பின் கழுத்திலுள்ள ‘டாய் சூய்’ எனும் அக்கு பிரஷர் புள்ளியால் அழுத்தப்பட்டு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ உண்டாகிறது!

முழங்கையின் மேற் பரப்பில் அணியப்படும் வங்கி எனப்படுவது பெண்களின் மார்பகப் பராமரிப்புக்கு உகந்தது. ஒட்டியாணம் அணிவது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமாக கல்லீரல் பகுதிகளைத் தூண்டப்படுகிறது. கொலுசு, தண்டை அணிவது கணுக்காலிலுள்ள ‘யுவான் சோர்ஸ் புள்ளிகள் எனப்படும் முக்கிய அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டுவதற்கே! நெற்றிச் சரம் அணிவதால் ஒற்றைத் தலைவலியே வராது. காதில் தோடு அணிவது கண்களுக்கு சக்தி அளிக்கவே! மூக்குத்தி அணிவது பெருங்குடலுக்கு சக்தி அளித்து சைனஸ், அஜீரனத்திலிருந்து காக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள அணிகலன்களையே நாம் உடல் உறுப்புகளில் அணிந்து வருகிறோம். அதன் பொருள் விளங்காமல்! மணமான பின்பும் இந்த நகைகளை அணிவதே நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து குறைவற்ற செல்வத்தை அளிக்கும்!! நெற்றிச் சரம் தவிர ஆண்கள் முற்காலங்களில் மேற்சொன்ன நகைகளை அணிந்து வந்திருக்கிறார்கள்.

மணமக்கள் வலமிருந்து இடமாக மணவறையைச் சுற்றி (அக்னியை) மூன்றுமுறை வரவேண்டும். இந்துக்களின் சாஸ்திரப்படி அக்னியை வலம் வருதலே திருமணம் நிறைவு பெற்றதாகக் கொள்ளப் படுகிறது. அக்னியின் சாட்சியாக பஞ்சமகா யஜ்ஞத்தைத் துவக்க ஆரம்பிக்கிறார்கள்!

அடுத்து இருவரும் புரோகிதரால் அக்னிக்கு ‘ஸ்வாகா’ எனச் சொல்லி, தங்களை ஆசீர்வதிக்கும் படி நவக் கிரகத்திற்கு பூஜை செய்ய வேண்டும். நான்கு புறமும் உள்ள வாழை மரங்கள் (வேதங்கள்) மாவிலைகளை (தேவர்கள்) நான்கு திசைகளையும் வணங்க வேண்டும்.

புரோகிதரால் காலிலிருந்து தலை வரை ஆத்தி இலையைத் தூவி வாழ்த்த வேண்டும். பின் மாப்பிள்ளை பெண்ணிற்கு மெட்டி அணிவித்து அம்மி மிதித்து அருந்ததியைப் (நட்சத்திரம் ) பார்க்கச் செய்ய வேண்டும்.ஆண்கள் மொய்ப் பணம் அளிக்க, பெண்கள் சிறு ஓலைப்பெட்டிகளில், பைகளில்.. இரண்டு மரக்கால் முதல், உறவின் நெருக்கத்தைப் பொறுத்து, பன்னிரண்டு மரக்கால் வரை அரிசி கொண்டு வருவது வழக்கமாக சென்ற தலைமுறை வரை இருந்தது.

சீக்காஞ் சடங்கு

மணவறையில் பரியாரி மணமகளை மணமகனுக்கு சாஸ்திர பூர்வமாய் சாப்பாடு பரிமாறச் செய்ய வேண்டும். மணமகனின் கையில் சிறு கத்தியினைக் கொடுத்து பரிமாறிய உணவில் கத்தியை வைத்து எடுக்க, மணமகள் கத்தியைத் தண்ணீரால் கழுவ வேண்டும். ஒதிய மரத்தினை மணமகன் எடுக்க மணமகள் அரசாணிப் பானையில் தண்ணீர் கொண்டு சென்று வீட்டு எல்லைக்குள் ஒதிய மரத்தை நட்டு மணப்பெண் அதற்கு தண்ணீர் விட வேண்டும்.

முழுச்சீர்

வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவே நடத்தப் பட்டார்கள். வேத வியாக்யானங்களில் கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண் வேத வல்லுனர்கள் ஆண்களுக்கு நிகராக வியாக்யானம் செய்து வெற்றியும் கண்டார்கள். அதன் பிறகு வந்த கால கட்டங்களில் பெண்களின் அடிப்படை உரிமைகள் குறைய ஆரம்பித்தன. பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பது ‘மனு ஸ்மிருதியின்’ பிறகே ஏற்பட்ட ஒன்று! (மனு ஸ்மிருதி –இந்துக்களின் பண்பாடு,சடங்குகளை வாழும் முறையை வகுத்துக் கொடுப்பது. இதனை அடிப்படையாகக் கொண்டே நமது ‘இந்து மதச் சட்டம்’ வகுக்கப்பட்டிருக்கிறது.)

‘முழுச்சி’ என வழக்குச் சொல்லில் அழைக்கப்படும் முழுச்சீர் வரிசை வைபவம், திருமண விருந்துக்குப் பின் ஆண்களால் மட்டும் நடை பெறும். மணமகள் வீட்டிலிருந்து தென்னை ஓலையில் வேயப்பட்ட இலைகள், மோர்க் குடம், வாழை இலைக் கட்டு, பரங்கிப் பழம், பலாப் பழம், வீட்டிற்குத் தேவையான குடும்ப அடிப்படைச் சாமான்கள், குத்து விளக்கு, வாழைத்தார் ஆகியவற்றுடன் பெண் வீட்டார் பங்காளிகளை அழைத்துக் கொண்டு மேளதாளத்துடன் வரவேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் ஆரத்தி எடுத்து வரவேற்று குத்து விளக்கிற்கு வேட்டி அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். வந்தவர்களை உபசரித்து விருந்துண்ண வைக்க வேண்டும்

மதியம் முழுச்சீர் வைபவம் நடைபெறும். பந்தலின் நடுப் பக்கத்தில் பாய் விரித்து கிழக்குப் பக்கம் பெண் வீட்டாரும், மேற்குப் பக்கம் மணமகன் வீட்டாரும் அமர வேண்டும். நடுவில் இரு குத்து விளக்குகள் வைக்கப் பட்டு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். கிழக்கில் உள்ளோர் மேற்கில் உள்ளோருக்குக் கொடுக்க வேண்டும். மாமன் மைத்துனர்கள் இரு வீட்டாருக்கும் மொய்ப் பணம் அளிக்க வேண்டும்.

பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வைக்கும் பணத்தை விட ஒரு மடங்கு சேர்த்து முதலில் வைக்க வேண்டும். அடுத்து பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு முழுச் சீர் வரிசைப் பணம் வைத்துக் கொடுக்க வேண்டும். .

மாப்பிள்ளை வீட்டார் மிளகு, மஞ்சள், பழம், பாக்கு வைத்து பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும்.

மா. வீட்டார் 5 பணம் 500 பாக்கு. (ஒரு பணம்: இரண்டரை அணா)

பெண் வீட்டார் 3 பணம் 300 பாக்கு. நாத்தனார், மாமியார் பாக்கு என மா.வீட்டார் பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டும்.

பந்தலடிச் செலவு என பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்க வேண்டும். இறுதியில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு மிளகும் மஞ்சளும் வைத்துக் கொடுக்க வேண்டும். கிடா விலைப் பணம், பணியாரக் குடப் பணம் என வைத்துக் கொடுக்க வேண்டும். இறுதியில் இரு புறமும் உள்ள பெரியோர்கள் மரியாதை நிமித்தம் ஒருவருக் கொருவர் சந்தனம் பூசிக்கொள்ள வேண்டும். சுற்றியுள்ள உறவு முறைகளுக்கு கை கொள்ளுமளவிற்கு பாக்குகள் வழங்கப் பட வேண்டும்.

மணமக்கள் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப் பட்டு, மணவறையில் அக்னி மூலையிலுள்ள வாழைக் காய்களையும் தேங்காயும் கொடுத்து மணமகள் வீட்டிற்கு மங்கல வாத்தியங்களுடன் இருவரையும் அனுப்ப வேண்டும். வழியில் உள்ள தெய்வங்களுக்கு சிதறுகாய் உடைக்கச் செய்ய வேண்டும்.

பெண் வீடு சென்ற பின், அங்கு மணமக்களை வரவேற்று மஞ்சள் நீரில் ஆரத்தி எடுத்து 7,9,11 பெண்கள், திருஷ்டிக்காக தாம்பாளங்களில் விளக்குகளை வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமக்கள் பால், பழம் சாப்பிடுவர். பெண் வீட்டில், பங்காளி வீட்டார்களில் பிறந்து மணமான பெண்களுக்கு பணம் வைத்து மரியாதை செய்ய வேண்டும்.மணமக்கள் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுவர். பெண்கள் மணமக்களை வாழ்த்திப் பாடுவர்.

மணமகன் மூன்றாம் நாள் ‘பந்தக்கால்’ பார்க்க தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதுவரை செல்லக் கூடாது. மூன்றாம் நாள் பெண் வீட்டில் மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்து வைக்க வேண்டும். மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

மாங்கல்யம் பெருக்கிப் போடுதல்

திருமணமான மூன்றாவது மாதம் ஒரு முகூர்த்த நாளில் மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று இரு வீட்டாரும் அவர்களது இல்லம் அல்லது கோவில்களில் புதிய மஞ்சள் கயிற்றினில் மாங்கல்யத்துடன் உரிய அணிகலன்களைக் கோர்த்து மணமான பெண்கள் பெண்ணிற்கு அணிவிக்க வேண்டும். விருந்துண்டு மணமக்களை மணமகன் வீடு அழைத்துச் செல்ல வேண்டும்.

மணமக்கள் தங்களை இல்லற வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு,குடும்பஸ்தர்களாகி....பஞ்சமகா கடமைகளை நிறைவேற்ற ஈஸ்வர அர்ப்பணத்தோடு இனிதே வாழ்க்கையைத் துவங்க வேண்டும்!

ஓம் அச்யுத்தாய நமஹா...! எல்லாக் காரியங்களையும் அச்சுதனுக்கே சமர்ப்பிக்கிறேன்!

ஓம் அனந்த்தாய நமஹா...! முடிவற்றதைக் கொடுப்பதால் அவனுக்கு நமஸ்காரம்!

ஓம் கோவிந்த்தாய நமஹா...! வேதத்தினால் அறியப் படுபவனே உன்னையே சரணடைந்தேன்!

சஷ்டியப்த பூர்த்தி

அறுபதுக்கு அறுபது எனப்படும் திருமணச்சடங்கு ‘சஷ்டியப்த பூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. ஆணுக்கு அறுபது வயது நிறைவடையும் போது இந்தச் சடங்கு நிகழ்த்தப்படும். அறுபது கும்பம் வைத்து, அறுபதுக்கும் திரவியங்கள் வைத்து அதில் தூய நீரிட்டு, மஞ்சள், குங்குமம், அத்தர், சந்தனம் இட்டு அறுபதுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

கோவிலில் அல்லது வீட்டில் பெற்றோருக்கு பிள்ளைகள் செய்விப்பது.திருமணத்திற்கு மாங்கல்யம் அணிவிக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். நவக்கிரக பூஜை செய்து பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினத்திலிருந்து தம்பதிகள் சகோதர உறவு பூண்டு வாழ வேண்டும்.

பீமக்கர சாந்தி

அறுபதுக்கு அறுபது எந்தத் தேதியில் வைத்தார்களோ அதே தேதியில் எழுபதுக்கு எழுபது எனப்படும் பீமக்கர சாந்தி எனும் சடங்கினைச் செய்ய வேண்டும்.ஐந்து கும்பம் வைத்து வாசனா திரவியங்கள் வைத்து கோவிலில் செய்ய வேண்டும். திருமாங்கல்யம் அணிவிக்க வேண்டியதில்லை.

எண்பதுக்கு எண்பது

ஆயிரம் பிறைகள் கண்ட விழா என அழைக்கப்படுகிறது. பெற்ற மக்கள், பேரப் பிள்ளைகள், கொள்ளுப் பேரன்களை அழைத்து விழாவை நடத்த வேண்டும். இந்த விழாவில் திருமாங்கல்யம் பூட்ட வேண்டும். இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும். கொள்ளுப் பேரன் பேத்திகளுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்ட வேண்டும். ஸ்தல யாத்திரை சென்று காசியில் வாழலாம். தசதானம் எனப்படும் முப்பத்தியிரண்டு தானங்களாகிய பசு மாடு, பிரம்புத் தடி, செருப்பு, குடை, பவுன், வெள்ளி என கிழக்குப் பார்க்க அமர வைத்து சிவாச்சாரியாரை வைத்து புண்ணிய ஸ்நானம் செய்விக்க வேண்டும். தனக்கு கீழே உள்ளோரை ஆசீர்வதித்து ‘நலமே வாழ்க!’ என்று ஆசீர்வதிக்க வேண்டும். நான் சென்று வருகிறேன் என விடை பெற வேண்டும்!

வளைகாப்பு

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பஞ்ச மகா கடமைகளை தொடர்வதற்கு சந்ததிகளைப் பெருக்குவதாகும்.

வளைகாப்பு வைபவம் பொதுவாகப் பெண்ணின்கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. ‘அள்ளிக் குத்துதல்’ எனவும் இப்பகுதியில் இந்த விழா அழைக்கப் படுகிறது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி... அதாவது கைகளில் சுமார் ஒரு டஜன் கனமான கண்ணாடி வளையல்கள் அணிவித்து கைகளை இறுக்கிப் பிடித்தால், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ‘அக்கு பிரஷர்’ முறைப்படி கைகளின் உட் பக்கம் வெள்ளையணு சுரப்பி மையம் உள்ளது.(நோய் எதிர்ப்பு சக்தி ) கர்ப்பப்பை, சூலகம் போன்றவற்றின் புள்ளிகள் வளையல் போடுவதால் உணர்வுகளைத் தூண்டி சிகிச்சை அளிப்பதாகும். இதனை ஒரு விழாவாக நம் முன்னோர்கள் கொண்டாடினர். (சில சமூகத்தவர் ஏழாவது மாதத்திலேயே இந்நிகழ்ச்சியை நடத்துவர்.) அந்த முறை இன்றும் பின்பற்றப் படுகிறது.

பெண் வீட்டில் பெண்ணின் கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்தில் மூலிகை மருந்து அல்லது வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்து கொடுக்கப் படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாவது மாதமே இந்த வைபவம் நடத்தப் படுகிறது.

வளைகாப்புக்கு நல்ல நாள் பார்த்து உறவினர்களிடம் சொல்லி பெண் வீட்டில் வைபவம் நடத்த வேண்டும்.அவளது புகுந்த வீட்டிலிருந்து பூ,பழங்கள், பாக்கு வெத்திலையுடன், சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டிய பொருட்கள், பாத்திரங்களுடன் உறவினர், பங்காளிப் பெண்கள், வருவர். பெண் வீட்டிலும் அவளது உற்றார்,உறவினர் கலந்து கொள்வர். சுமங்கலிப் பெண்கள் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுமார் ஒரு டஜன் வளையல்கள் பூட்டுவர்.

பெண்ணின் வீட்டு முற்றத்தில் புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் , நாத்தனாரும் பொங்கல் வைக்க வேண்டும். சலவைத் தொழிலாளர் பெண்மணியின் உதவியாலேயே இந்த விழா நடத்தப் படுகிறது. பொங்கல் வைத்து, பொங்கலை இறக்கி உரலில் வைத்து பெண்ணை கிழக்குப் பார்க்க நிற்க வைத்து பானையைப் பிடிக்கச் சொல்லி சுமங்கலிப் பெண்கள், அவளது முதுகில் சிறு வெள்ளைத் துணியால் பாலைப் பிழிந்து விடுவர். பின்னர் பால் பாத்திரத்தில் காசு போடுவார்.

பிறகு பொங்கலைத் தாம்பாளத்தில் வைத்து பழம், பூக்கள் வைத்து வணங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் அளித்து விருந்துண்ண வேண்டும். பொங்கலை புகுந்த வீட்டிற்கும் நாத்தனாருக்கும் கொடுத்தனுப்ப வேண்டும். பெண்ணின் கைகளில் அணிவிக்கப்படும் வளையல்கள் குழந்தை பிறந்த பின்பே அகற்றப்படும்! ஆனால் அவ்வாறு அகற்றுவது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். நாகரிகம் கருதி வளையல்கள் கழற்றப்படுவதால் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைந்து விடும் அபாயத்தை எவரும் உணருவதில்லை! பெண்கள் எப்போதும் கண்ணாடி வளையல்களையே அணிதல் நலம்!

பதினாறு - பெயர் சூட்டு விழா

‘பதினாறு’ எனப்படும் பெயர் சூட்டு விழா, குழந்தை பிறந்த பதினாறாம் நாள், பெண்ணின் தாய் வீட்டில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் பதினாறாம் நாள் முன்னிரவு நேரத்தில், வயது முதிர்ந்த பெண்மணிகள் முன்னிலையில் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது.

குழந்தையின் தகப்பன் வீட்டார் பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, குழந்தைக்கு நகை, புதிய உடை, என பெண்களால் தாம்பாளங்களில் கொண்டு வரவேண்டும். வயது முதிர்ந்த பெண்மணியால் வீட்டின் நடுக் கூடத்தில் வைத்து, நல்லெண்ணையை ஆட்காட்டி விரலில் தொட்டு, இரண்டடி சதுரக் கோடு வரைய வேண்டும். அதன் நடுவில் நுனி வாழை இலையை வைத்து இலையின் நடுவில் சோறும் கருவாட்டுக் குழம்பும் முருங்கைக் கீரையும், அரிசிமாவில் செய்த கொழுக்கட்டையும் வைக்க வேண்டும். உள்ளங் கையளவு அரிசிமாவை வேகவைத்து அதில் எண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

வேப்பிலைக் கொத்தை ஒடித்து அதன் இலைகளை உருவிக் காம்பை வளைத்து வளையலாக்கி குழந்தையின் இரு கைகளிலும் போட வேண்டும். அலுமினியக் கம்பியும் தாமிரக் கம்பியும் இணைந்த வளையலும் செய்ய வேண்டும். அத்துடன் கறுப்புக் கண்ணாடி வளையலும் போடவேண்டும். வசம்புத் துண்டை சிறிது சிறிதாக வெட்டி, ஊறவைத்து, பூண்டின் வேர்ப் பகுதியையும் வெட்டி ஊறவைத்து சிறிதாக நறுக்கி, பால் மணியையும் நூலில் கோர்த்து குழந்தையின் இரு கைகளிலும் கட்ட வேண்டும். இது தாய்ப்பால் ஜீரணமாவதற்காக! இவைகளை அரிசி அளக்கும் படிக்குள் போட வேண்டும். பாலாடையில் தாய்ப்பால் வைத்து அதில் சிறு கல்லையும் நெல்லையும் போட வேண்டும்.

குழந்தையின் தகப்பன் வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் நகைகளோடு மேற்சொன்ன அணிகலன்களையும் போட வேண்டும்! தாய்க்கு பிறந்த வீட்டு புதுப் புடவையும், குழந்தைக்கு தகப்பன் வீட்டு புதுத்துணியும் அணிவிக்க வேண்டும்.தாயிடம் குழந்தையைக் கொடுத்து கிழக்குப் பார்க்க உட்கார வைக்க வேண்டும். படியிலிருக்கும் நகைகளைக் குலுக்க வேண்டும். பிறகு அவைகளை எடுத்து குழந்தைக்கு அணிவிக்க வேண்டும். பிறகு குழந்தையை தாயிடம் கொடுத்து மூன்று முறை சுற்றி வரவேண்டும். குழந்தையை கிழக்குப் பார்க்க கீழே கிடத்த வேண்டும். தாய் கிழக்குப் பார்க்க விழுந்து வணங்க வேண்டும். பிறகு வயதான பெண்மணி முறத்தை உயரேத் தூக்கி குப்புறப் பிடிக்க அதில் சிறு கிண்ணத்தில் நீர் வைத்துக் கொண்டு முறத்தில் அடிக்க வேண்டும். பிறகு குழந்தையை முறத்தில் போட்டுப் புடைக்க வேண்டும்! இந்தச் செயல் கழுத்து சுளுக்கு எடுப்பதற்காகவே!

கையிலிருந்த தண்ணீர்க் கிண்ணத்திலிருந்து நீரை எடுத்து கிழக்கு சுவரில் ஆயுத எழுத்து வடிவில் அடிக்க வேண்டும். கொழுக்கட்டையை ஆண் குழந்தைகளுக்கு கொடுப்பது கூடாது. விளக்கு கொழுக்கட்டையை குழந்தையில்லாத பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவளுக்கு குழந்தை பிறக்கும் என நம்பப்படுகிறது. சோற்றைப் பிசைந்து கீரையுடன் சேர்த்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும்! வயதில் மூத்த பெண்மணி குழந்தைக்குப் பெயர் சூட்டி தொட்டிலில் போட வேண்டும். பெரும்பாலும் தெய்வங்களின் பெயரும், தந்தை, தாய் வழி பாட்டன், பாட்டியின் பெயரும் வைக்கப்படும்.

வேதகால நியமப்படி ஆறு வயது முதல் பன்னிரண்டு வயது வரை குருகுல வாசம். குழந்தைகள் பஞ்சமகா யஜ்ஞங்களைத் தொடரச் செய்ய வேண்டும். கடைசிப் பிள்ளையின் திருமணம் முடியும் வரை ஒருவரின் கடமை முடிகிறது. பிறகு வேதங்கள் கூறியவாறு தாய் தந்தையர் ஸ்தல யாத்திரை மேற்கொள்ள வேண்டும். இறைவனைப் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். திரைகடல் ஓடியும் திரவியம் தேட வேண்டும். திரவியம் என்பது இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எவையெல்லாம் தேவையோ அவைகளைத் தேட வேண்டும்!

காது குத்துதல்

காது குத்துதல் என்பது நீடித்த ஆயுளையும், அவயங்கள் ஒழுங்காக இருக்கவும் செய்யப்படும் சடங்கு. குழந்தை பிறந்த ஒரு வயதில் செய்ய வேண்டும். காதில் உள்ள ஓட்டை (அக்கு பிரஷர் புள்ளி) நம் ஆயுள் காலம் முழுவதும் இருபாலருக்கும் இருக்கும்படி செய்ய வேண்டும். அதில் தங்க நகை அணிவிப்பது மிகச் சிறந்தது.

முறைப்படி தாய் மாமனை அழைத்து, குல தெய்வக் கோவிலில் இறைவன் ஆசீர்வாதத்துடன் வைத்து மாமன் வரிசையுடன் காது குத்தும் வைபவம் நடைபெறச் செய்ய வேண்டும்.

காது குத்துதல் அக்குபங்க்சர் முறையே! சரியான புள்ளியில் காது குத்தி நகை மாட்டும் போது வாழ்நாளில் கண் சம்பந்தப்பட்ட நோய் வருவது மிகவும் குறைவு! காதில் மட்டும் 123 அக்கு பிரஷர் புள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு புள்ளியும் ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மையுடவை. காதில் உள்ள வெளி விளிம்புகளில் வரிசையாகத் துளையிடுவதால் நோயின்றி வாழலாம். லம்பாடி, தோடர், குறவர் இன மக்கள் அணியும் அணிகலன்களே அவர்களது வாழ்க்கையை நோயற்றதாய்ச் செய்கிறது. இது ஆண்களுக்கும் பொருந்தும்!

கிரகப் பிரவேசம்

வீட்டிற்கு முன் தர்ப்பைப் புல் மாவிலை கட்ட வேண்டும். முதல் நாள் இரவு மூன்று அல்லது நான்கு மணியளவில் வீட்டின் நடுப் பகுதியில் ஹோமகுண்டம் நிறுவி மா, பலா, ஆல், அரசு, நாயுருவி குச்சிகளை ஹோமத்திற்கு சேர்க்க வேண்டும். குண்டத்தின் நான்கு புறமும் விபூதி பூசி குங்குமம் இட்டு நான்கு புறமும் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

ஹோமகுண்டத்திற்கு சிவாச்சாரியார் பூஜை செய்ய வேண்டும். பூசணிக்காயை வைத்து பொட்டு வைத்து அதற்கும் பூஜை செய்ய வேண்டும். பந்தம் கட்டி தீயிட்டு வீட்டை வலமிருந்து இடமாக சுற்றி வந்து வாசலில் போட வேண்டும். பசுவும் கன்றும் குளிப்பாட்ட பசுவை பொட்டிட்டு மாலையிட்டு வீட்டுப் பெண்மணி பிடித்து வர வேண்டும். கும்பத்திலிருந்து நீரைத் தெளிக்க வேண்டும். பசுவை குடும்பத் தலைவி வீட்டினுள் முதலில் பிடித்து வர வேண்டும்.

வீட்டை வலம் வர வேண்டி நிறை விளக்கு, உப்பு, தவிடு, அரிசி, பணப்பெட்டி, பால், பொங்கலிடும் பானை, நிறைகுடம் ஆகியவற்றை தென்மேற்கு மூலையிலிருந்து பங்காளி சுமங்கலி உறவுப் பெண்கள் எடுத்து வர வேண்டும். மேள தாளம் முழங்க அறைக்குள் வைக்க வேண்டும். குடும்பத் தலைவி முதலில் பால் காய்ச்ச வேண்டும். பொங்கல் வைக்க வேண்டும். வீட்டிலிருப்பவர் மாத்திரம் பால் சாப்பிடவேண்டும்.

மாமன் வரிசை கொண்டு வர வேண்டும். அப்போது வந்திருப்போருக்கு பூ, சந்தனம், பழம், கல்கண்டு அளிக்க வேண்டும். பெட்டியில் மாமன் பணம் போட வேண்டும். பட்டுப்பாயில் நெல் போட்டு குடும்பத்தினர் அமர வேண்டும்.

முதல் செலவுப் பணம்: தச்சருக்கு அளிக்க வேண்டும். வேட்டி இரண்டு அளிக்க வேண்டும். ஆசாரி மேலே சென்று தர்ப்பைப் புல்லில் தண்ணீர் ஊற்ற வேண்டும். குடும்பத்தினர் வீட்டினுள் செல்லும் போது தச்சர் அவர்களது தலையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். கொத்தனார் சித்தாளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பிறகு வருபவர்களை உபசரித்து உணவு பரிமாற வேண்டும்.

பூப்புனித நீராட்டு விழா

இந்த விழாவானது ஒரு பெண் திருமண வாழ்க்கைக்குத் தயாராகி விட்டாள் என்பதை முறைப்படி அறிவிப்பதற்காகும்!

தாய் மாமனுக்கே ஒரு பெண் முதல் உரிமையாகிறாள். ஏனெனில் தாய் மாமனே உரிமைப்படி அவளது வாழ்வில் அக்கறை எடுத்துக் கொள்கிறான். பெண் பூப்படைந்த மூன்றாம் நாள், ஐந்தாம் நாள் என மாமன் வீட்டாருக்கு சலவைத் தொழிலாளர் பெண்மணியின் மூலம் சொல்லி அனுப்பி அவளுக்கு தண்ணீர் ஊற்றப்படுகிறது. பெண்கள் மட்டுமே நிகழ்த்தப்படும் வைபவம்!

இந்த நாட்களில் பெண்ணின் உணவில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். பெண்ணிற்கு முட்டையை தினசரி வெறும் வயிற்றில் சமைக்காமல் கொடுப்பது மிக முக்கியம். ஏனெனில் அதுவே அவளது கர்ப்பப்பைக்கு பலமாகிறது. பின் வரும் நாட்களில் குழந்தைப் பிறப்பின் போது சுகப் பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது! அத்துடன் உளுந்தை விழுதாக அரைத்து அடையாகக் கொடுப்பதும் கர்ப்பப்பைக்கு நல்லது.

இதனை நாகரிகம் கருதி தற்போது எவரும் கொடுப்பதில்லை. இதன் பயன்பாட்டை மனதிற்கொண்டு பெண்ணின் உடல் நலம் காக்க வேண்டும். பதினைந்தாம் நாள் மாமன் வீட்டாரை வரவழைத்து பெண்ணிற்கு மஞ்சள் நீராட்டி, மாமன் சீரில் வந்த புதுப் புடவை உடுத்தி கோரைப்பாயில் நெல் பரப்பி கிழக்கு நோக்கி உட்கார வைக்கப்படுகிறது. பச்சரிசி மாவில் அடை, மஞ்சள் நீர், அரிசி சாதம், அம்மிக்கல், புட்டு போன்றவற்றை வைத்து மாமி முறை உள்ளோர் அடை சுற்ற வேண்டும்.

மாமன் வீட்டு சீதனமாய் தங்க செயின் அணிவிக்க வேண்டும். வேப்பிலையும் சிறு விளக்குமாற்றுக் குச்சியும் கொண்டு பெண்ணின் தலையில் மாமன் மகளைக் கொண்டு லேசாக அடிக்கச் செய்வர். அதன் பிறகே நீராட்டு விழா நிறைவு பெற்றதாகக் கொள்ளப்படும்! விருந்து உபசாரத்துடன் விழா இனிதே நடைபெறும்!

இறப்புச் சடங்குகள்

பொதுவாக வயது முதிர்ந்து ஒருவர் இறந்தால் செய்ய வேண்டிய சடங்குகளை இந்துக்கள் முறையாகச் செய்ய வேண்டும். வேறு எந்த மதத்தினரும் அவர்களது சடங்குகளை எந்தச் சூழ்நிலையிலும் தவறாது செய்து வருகிறார்கள். இறந்தவர்களின் ஆசி சந்ததியினரை நல்வழிப்படுத்தும். இறக்கப் போகிறார் என்பது தெரிந்தால், தசாதானம் எனப்படும் பத்து வகைத் தானங்கள் கொடுக்க வேண்டும். இதில் பசுவின் தானமும் அடக்கம். பசுவின் வாலைப் பிடித்து இறக்கப் போகிறவரை உருவச் செய்ய வேண்டும்.

இறந்தவுடன் உடலைக் குளிப்பாட்டி, துளசி நீர் கொடுத்து உடலின் 45 இடங்களில் விபூதியைப் பூச வேண்டும். தலைக்கு தெர்ப்பைப் புல் வைத்து தெற்குப் பார்க்க படுக்க வைக்க வேண்டும். கால் கட்டை விரல் துவங்கி தலை வரை துணியால் எட்டுக் கட்டு கட்ட வேண்டும்.

தலை மாட்டில் சாம்பிராணி அல்லது குங்கிலியம் புகைத்து தேங்காய் உடைத்து இறந்தவர்களை விட வயதில் இளையோர் காலில் விழுந்து வணங்க வேண்டும்.

பிறகு பெண்கள் மாரடித்துக் கொண்டு அழ வேண்டும். அதன் பின் துக்கம் சொல்ல வேண்டும். வாசலில் பந்தலிட்டு அந்திராட்சை செய்ய வேண்டும். புனித நீர் கொண்டு வந்து (காவிரி அல்லது கங்கை ) 9 கும்பம் வைத்து அதனுள் வாசனா திரவியங்கள் வைக்க வேண்டும். பந்தலைச் சுற்றி பச்சை மட்டை வைத்துக் கட்ட வேண்டும்.நடுவில் பெரிய கும்பம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

தேசிகரால் ஹோமம் வளர்க்கப்பட்டு பங்காளிகள் ஐந்து, ஏழு பேர் என தலை குளித்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். சவத்தை பந்தலுக்குள் வைத்து ஹோமம் வளர்த்து பவுன், வெள்ளி, மரம், பசு, இவைகளை வைத்து ஹோமம் வளர்த்து பொரி முதலியவைகளை குடத்தில் போட்டு சுடு காட்டிற்கு எடுத்துப் போகையில் கொண்டு செல்ல வேண்டும். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என வாய்க்கரிசி போட வேண்டும்.

மனைவி இருந்தால் பிறந்த வீட்டிலிருந்து புடவை எடுத்து வர வேண்டும். சவத்தைத் தூக்கிப் போய் பந்தலின் வாசலில் வைத்து மனைவியை பாடையின் கீழ் நிற்க வைத்து மஞ்சள் கலந்த நீரில் பூவைக் கொட்டி மனைவியைக் குளிப்பாட்ட வேண்டும். வீட்டினுள் அழைத்துச் சென்று பிறந்த வீட்டிலிருந்து எடுத்து வந்த புடவையை உடுத்தச் செய்ய வேண்டும்.

சுடு காட்டிற்கு சவத்தை எடுத்துப் போய் சவம் மேற்கிலிருக்கும்படி வைக்க வேண்டும். கொள்ளி வைப்பவர் மண் குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று முடி திருத்துபவரால் குடத்தில் மூன்று சுற்றிற்கு மூன்று முறை (மூன்று முறை என்பது மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையை விடுவது எனப் பொருள்படும்.) ஓட்டை போட, சவத்தைச் சுற்றி வரவேண்டும். பெற்றோருக்கு மூத்த மகனே சவத்தின் தலைமாட்டில் கொள்ளி வைக்க வேண்டும். வீட்டிற்குச் செல்லும்போது திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும்.

மறுநாள் விடியற்காலையில் மகள், தாய், தகப்பனாயிருப்பின் சவம் வைத்திருந்த சுடுகாட்டிற்குப் போய் சுடுகாட்டைச் சுற்றி மூன்று முறை நீர் ஊற்ற வேண்டும்.

காடு அமர்த்துதல்

படையல்: பச்சரிசி அடை, கீரை, சோறு வைத்து வாசலில் பந்தலின் நடுவில் வட்டமாய் மெழுகி அதன் மீது மேற்சொன்னவைகளை வைத்து அஸ்தி எடுக்க கலயம், மண் வெட்டி வைத்து சாம்பிராணி போட வேண்டும். சங்கு ஊத வேண்டும். பிறகு பெண்கள் மாரடித்து அழ வேண்டும். சுடு காட்டிற்குச் சென்று அருகில் குளம் இருந்தால் அதிலிருந்து தண்ணீர் எடுத்து சாம்பலில் ஊற்றி நெருப்பை அணைக்க வேண்டும். பிறகு எல்லா சாம்பலையும் ஓரத்தில் சேர்த்து வைத்து, நடுவில் உருவம் வரைந்து குழி வெட்டி அவற்றில் எலும்புகளை வைத்து மஞ்சள் போடி மற்றும் வாசனைத் திரவியங்களை வைத்து பாலூற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அதில் நவ தானியம் விதைக்க வேண்டும்.

சிறு எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்து கருமாதிக்கு வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் செங்கல் ஊன்றி பதினாறு நாட்களும் கலயத்திற்கும் செங்கல்லுக்கும் சாம்பிராணி போட வேண்டும்.

எட்டாம் நாள் சடங்கு

பழங்கள், பட்சணங்கள் வைத்து பங்காளிகளை அழைத்து படையல் போட வேண்டும். பெண்கள் மாரடித்து அழ வேண்டும். மாரடித்தல்: பெண்களின் இதயம் விரிவடையும் பயிற்சியே மாரடிப்பது. அந்தி, சந்தி என ஏழு நாட்கள் பெண்கள் மாரடித்து அழ வேண்டும். துக்க வீட்டில் பெண்களே இதனைச் செய்யும் காரணம், துக்கத்தில் பெண்களின் இதயம் துடிப்பது குறைந்து விடும். அதனை பலப் படுத்தவே பட்டினத்தார் ஏற்படுத்திய வழக்கம். இதனால் பெண்களுக்கு இதய நோயும் வராது தடுக்கப்பட்டது.

மனைவி இருக்கும் போது கணவன் இறந்தால், மனைவி, பதினைந்து நாட்களும் நோன்பிருக்க வேண்டும். பதினைந்தாம் நாள் இரவு பிறந்த வீட்டிற்குச் சென்று விளக்கேற்றி வணங்கித் திரும்ப வேண்டும். அதன் பிறகு பச்சை தென்னை மட்டையில் உட்கார வைத்து தாலிக்கொடியைக் கழற்றி பாலில் போடச் செய்வர். பிறந்த வீட்டுப் புடவையுடுத்தி நோன்பிருந்து மறுநாளே உணவு உண்பர்!

பதினாறாம் நாள் கருமாதி

பதினாறாம் நாள் ஏதேனும் ஒரு சிவன் கோயில் குளக்கரையில் ஆகாயம் பார்க்க எள், வாழைக்காய், அரிசி போட்டு பொங்க வேண்டும். தேசிகரை வைத்து குளக்கரையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். கல்லைக் குளக்கரையில் வைத்து பூஜை செய்து குளத்தினுள் போட வேண்டும். கரையில் சிறு மண்டபம் கட்டி நான்கு புறமும் தர்ப்பைப் புல்லில் உருவம் கட்டி எரித்துக் கரைத்து விட்டு பிண்டத்தை வைத்து அஷ்டதிக் பாலகர்களுக்கு பூஜை செய்து, பதினாறு பிண்டம் செய்வித்து கல் எதிரே வைத்து பூஜை செய்வித்து பிறந்த பெண்கள், பங்காளிகள் கல்லை எடுத்துப் போய் குளத்தினுள் போட்டு மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்! அதன் பின் கோயிலில் சென்று புத்தாடை உடுத்தி விளக்கேற்றி கடவுளை வணங்க வேண்டும். அன்று முதல் கோயிலுக்குச் செல்வது நடைமுறைக்கு வந்தாலும், மலைக் கோவில்களுக்குச் செல்வது கூடாது!

கல்லைத் தண்ணீரில் போட்ட பிறகே இறந்தவர்களின் புகைப் படம் வைத்து பூ மாலை அணிவித்து வணங்க வேண்டும்! கல்லைத் தண்ணீரில் போடுவது என்பது ஒருவரின் ஆன்மா சாந்தி அடைவது. பதினாறாம் நாளே அவர்களது ஆன்மா சாந்தி அடைகிறது. அதன் பிறகே அவர்களை தெய்வமாக வணங்க வேண்டும்!

வரும் மாதங்களில் இறந்தவர்களின் திதி வரும்போது அவர்களுக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். ஒரு வருடங்கள் இது போல் செய்தால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது நியதி. ஓராண்டு முடிவுற்றதும் இறந்தவர்களின் திதி வரும்போது தலை திவசத்தன்று இறந்தவர்களின் எலும்பை புண்ணிய தீர்த்தங்களில் விட வேண்டும்.

25.7.2012. உதவி: மன்னங்காடு திரு. சிவந்தி முத்துச்சாமி வேளாளர். நன்றி: ‘அக்குபிரஷர் அற்புதங்கள்’, டாக்டர். எம். என். சங்கர்.