vv

மன்னங்காடு வே. வெங்கடாசலம் கவிதைகள்

உவமைக்கவிஞர் முதுபெரும் சுரதா அவர்களால் மேடையில் பாராட்டப்பெற்ற வெங்கடாசலம்

தமது கவிதைகளில் சிலவற்றை இங்கே தருகின்றார்

1. நிம்மதி

அகோ மனிதா....!

உலகத்தின் உன்னதங்களை

உணர்ந்துகொள் – உடன்படுவாய்!

விஷமமான விஷயங்களை

விவரமாக்கு – வித்தகனாவாய்!

புரியாத புதிர்களைப்

புலப்படுத்து – புத்திசாலியாவாய்!

நிறைவேறாத நினைவுகளை

நிராகரித்துவிடு – நிம்மதியடைவாய்!

2. வாலிப வேஷம்

ஒ இளைஞனே...!

படிப்பு என்ற பெயரிலே

பேனாவை எடு,

பட்டமுண்டு

உழைப்பு என்ற பெயரிலே

உழுதுபார்,

உணவுண்டு

பண்ணை என்ற பெயரிலே

பசுமாடு மேய்,

பலனுண்டு

ஆனால் ஒன்று...

காதல் என்ற பெயரிலே

தாடி வளர்க்காதே,

அது வாலிப வேஷம்!

3. நாளைய சரித்திரம்

ஒ மனிதா...!

தோல்வி கண்டு

துவண்டு விடாதே - அது

வெற்றியின் அறிகுறி

ஏழ்மை கண்டு

ஏங்கி விடாதே - அது

நிலைகாட்டும் கருவி

மடமையில்

மயங்கிவிடாதே – அது

அறிவுக்கு எதிரி

அச்சம் கொண்டு

அடங்கிவிடாதே – அது

வீரத்திற்கு எதிரி

பசிப்பிணியில்

புழுங்கிவிடாதே – விடுத்து

உணவுக்கு விதைபோடு

காதல் தோல்வியில்

கலங்கிவிடாதே – அது

கலியுகத்தின் துட்சம்

மனிதனே நினைவுகொள்...!

கல்லறையில் எழுதப்படுவதல்ல

உன் சரித்திரம்

உன்

நம்பிக்கையில்

முயற்சியில்

உழைப்பில்

தோன்றுவது தான்

நாளைய சரித்திரம்

4. உன்னிடத்தில் நான்

நினைவுகள் நிழலாக

கனவுக்கு அர்த்தம் தேடிய – என்

ஆசைச் சுவடுகள்

அந்தியில் அஸ்தமனம்

இனியொரு உதயம் தேடி

உறங்காமல் உன்

பெயரைச் சொல்லி – என்

இதயம் துடித்திடும் ஓசைதனை

இன்றாவது கேட்டாயா?

நினைவைக் கலக்கினாய் – உனை

மாது என்று சொன்னேனா?

மதியைக் கலக்கினாய் – உனை

மது என்றுதான் சொன்னேனா?

ஆழ்மனதால் மாலையிட்டேன்

அது காமம் இல்லையடி

வார்த்தைகளால் மணமுடித்தேன் – பெண்ணே

வாழ்நாளில் எனை மறவாதே!

உன்னையே தேடித்தேடி – இன்று

என்னை நான் இழந்துவிட்டேன்

என் இதயத்தைக் கேட்டேன்

எங்கே நானென்று – பதிலோ,

உன்னிடத்தில் நான்

உறைந்து கிடப்பதாக...!!

5. தேடல் (ஆகஸ்டு 1, 2014)

தேடல் மிகவும் சுகமானது - உன்னில் நீ நிலைத்திருந்தால்.

தேடல் பெரிதும் சுமையானது - நீ தன்னைத்தானே தொலைத்திருந்தால்.

உதயமும் அஸ்தமனமும் அன்றாடம் நிகழ

பொழுதுபோகவில்லை என்கிறவன் குற்றவாளி.

நேற்றைய நிழலை இன்றைக்கு தரிசித்து

நாளைய பிம்பம் காணத் தவறுகிறவன் முட்டாள்.

எதிர்காலத்தை நினைத்து நினைத்து

நிகழ்காலத்தை இறந்தகாலமாக்குபவன் பைத்தியக்காரன்.

திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் தனது இலக்கை

எட்டிப் பிடிப்பவந்தான் திறமையுள்ள புத்திசாலி.

இதில் நீ யார்? எத்தகையவன்?

தேடு... தேடு... தேடிக்கொண்டேயிரு...

தேடல் மிகவும் சுகமானது - உன்னில் நீ நிலைத்திருந்தால்.

தேடல் பெரிதும் சுமையானது - நீ தன்னைத்தானே தொலைத்திருந்தால்.

Copyright © 2011 V. Venkatachalam, Mannankadu

தொடர்புக்கு:

வே. வெங்கடாசலம்

மன்னங்காடு அஞ்சல்

தாமரங்கோட்டை வழி

தஞ்சாவூர் மாவட்டம் 614 613

கைபேசி 9943314290