sm

இப்பக்கத்தில் புதிய படைப்புகள் கடைசியாக சேர்க்கப்பட்ட நாள் March 28, 2012

மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு அவர்களின் படைப்புகள்

முத்துக்கண்ணு அவர்கள் தமது கவிதை, கதை, கட்டுரைகளில் சிலவற்றை இங்கே நமக்குத் தருகிறார்.

இவரின் 'பூமியை வாழவிடு' கவிதை கவிஞர் வைரமுத்து அவர்களால் பாராட்டப்பெற்றது.

1. பூமியை வாழவிடு

அபயம்... அபயம்...

தீனக்குரல் எங்கே என

தேடிப்பார்க்கும் மானுட...

காலடியைக் குனிந்து பார்

பெற்றவளே பிதற்றுகிறேன்

பாசி முதல் பல்லாயிரம்

உயிரோடு உன்னையும படைத்தது

பகுத்தறிவால் பாதுகாப்பாய் என்றுதான்

அந்தோ விபரீதம்!

இயற்கையிடம் யுகங்களாய்

சுகப்பட்டவள் - உன்

செயற்கைப் பேராசையால்

உன்னிடமே

அபயம் கேட்டு அலறும் அவலம்

மாதம் மும்மாரி பொழியும்

காலம் தடுமாறி கடுங்கோடையானது

வாழ்க்கைக்கு வெப்பம் தேவை

வெப்பமே வாழ்க்கையானால்?

சூரியனின் கோபக்கனல்

ஓசோனை மீறல்

மரம், மழை, கடலாகிய மும்மூர்த்திகள்

என்னைக் காத்து உனக்கு

வாழ்வளிக்கிறார்கள்

இயற்கையை நேசி என்றதன்

காலக்கெடு முடிந்துவிட்டது

இயற்கையை நாசமாக்கும்

செயற்கையை அழி!

உன்னைக் காலம் கல்வெட்டில்

பதியும், இல்லையெனில்

என்னையே காலன் கொள்வான்!

உனக்கு...

எந்தக் கிரகம் அபயம் அளிக்கும்?

2. உண்மை (11.11.1997 அன்று இலங்கை வானொலி வானம்பாடியில் ஒலி பரப்பானது.)

அம்மா

பிறந்ததும் அழும் குழந்தையல்ல நான்

பிறக்கு முன் உன் நரம்பு வழியாய்

செவியில் உணர்வாய் என்றே அழைக்கிறேன்

ஆறு மாத சிசுவாய்

பெண் மனதைப் பெண் அறியாயோ

அம்மா

கட்டை விரலைக் கடையாணியாக்கிய

வீரப் பெண்ணாக இல்லாவிடினும்

கடமை தவறாத பெண்மையாக

உன் அன்புக் குவியலாய் நான் இருப்பேன்

உன் முடிவை மாற்றிக்கொள்

அம்மா

ஆறாவது பெண்ணாய் நீ பிறந்து

அவஸ்தைப் பட்டாயோ

மாப்பிள்ளைச் சந்தையில் தன்மானத்தை

விற்க வேண்டியிருக்கும் என

இப்போதே உன் மனதை விற்கத் துணிந்தாயோ

அம்மா

உன் இதயம் நேற்று வரை ஆண் என்றே

துடித்தது இன்று

சின்னத்திரையில் என்னைப் பார்த்ததும்

பெண் என்று துடியாய்த் துடிப்பது ஏன்

உண்மை சுடும்

உன்னைப் பொசுக்கியே விட்டது

அம்மா

என் உயிருக்குத் தேதி குறிக்கச் செய்து விட்டாய்

தாய்மையின் இலக்கணத்தை தண்டித்து விட்டாய்

‘குற்றம்’ செய்யத் துணிந்து விட்டு

‘தவறுகள்’ மன்னிக்கப் படலாம் என

சமாதானம் செய்கிறாய்

அம்மா

என்னை முழு நிலவாய் பிறப்பித்தால்

சத்திய சோதனைக்கு உட்படுவாய் என்றே

பிறை நிலவாய் இறப்பிக்க முனைந்தாயோ

சத்தியமாய் சோதனை செய்ய மாட்டேன்

உன் முடிவை மாற்றிக்கொள்

அம்மா

உன்னில் நான் மலர்ந்து

முலை முட்டி அமுதம் அருந்தி

கடவாய் ஒழுகி கண் மூடி

புன்னகைக்க வேண்டும்

என் முதல் பல் முளைத்தவுடன்

அப்பாவிடம் காட்டி ரசிக்க வேண்டும்

படியத் தலைவாரி தாழம்பூ பின்னலிட்டு

உச்சி மோந்து ஆசீர்வதிக்க வேண்டும்

அம்மா

உன்னிடம் பென்சில் தொலைத்து

பரிதாபமாய் பொய் சொல்ல வேண்டும்

ஐப்பசி மழையில் பாவாடை தூக்கி

காகிதக் கப்பல் விட வேண்டும்

நாக்குத் துருத்தி சிலேட்டுப் பலகையில்

‘உலக நீதி’ எழுத வேண்டும்

அம்மா

என் சகோதரியிடம் சண்டையிட்டு

கிணற்றடி மேடையில்

நான் உட்கார வேண்டும்

தாவணி வயதில் மருதாணி விரல்களை

தண்ணீருக்குள் காண வேண்டும்

அம்மா

இல்லற வாழ்க்கையின் இன்பமாய்

பெற்றவர்கள் பார்க்கும் மணவாளனுக்கு

மாலை அணிவித்து

மணமேடை சுற்ற வேண்டும்

அம்மா

நான் இன்பமாய்ச் சுமக்கும் என்

அன்பு மகளுக்கு உன் அருமைப் பெயர்

சூட்ட வேண்டும்

யுகமாய்ப் பொங்கிப் பெருகும்

பெண்மையின் பெருமைக் கடலை என்

வழித் தோன்றல்களுக்குப் புகட்ட வேண்டும்

அம்மா

என்னை அழித்து இன்பம் காணாதே

இன்பம் என்பது ஆக்கலில் மட்டும்தான்

3. 999 (பெரியாறு அணை பற்றி விமர்சனம்)

சிவகிரி மலை நீரை

சீமைக்காரன்

தேக்கி வைக்க

அணை ஒன்னை

கட்டிவச்சான்

ஆராலும் முடியாது

தெக்கித்தி சீமை

சீர்கெட்டு போகுதுன்னு

பஞ்சம் போக்கிடவே

பரங்கியனும் எசஞ்சானே

மண்ணுலகம் உள்ளமட்டும்

எம்பேரு வாழுமுன்னு

ஈட்டிய பொருளை எல்லாம்

ஈகைக்காக வித்தானே

ஒடம்பிலே ஓடுகிற

அணுவிலே

வெள்ளை அணுவாய் இருந்தோர்

வெஞ்சாப்பு கொண்டனரே

வெள்ளையன் செஞ்ச வேலையாலே

வெள்ளம் வரப்போகுதுன்னு

வெள்ளித்திரை ஓடுதாம்

பாராளும் சீமான்களே

பரங்கியனை உள்ளே விடுங்க

அவன் வந்து ஆண்டாத்தான்

அக்கப்போரு அடங்கும்

அழியாப் பேரு வரும்

4. நிலவு

கண்சிமிட்டி

பழித்தது நட்சத்திரங்கள்

நிலவைப் பார்த்து…

அதற்கு

இரவல் ஒளியாம்!

5. வேண்டுகோள்

ஞானப்பழம்

எனக்கு வேண்டாம்

நாரதரே

சுற்றிவர தாய் தந்தை

எனக்கில்லை.

6. நற்பெயர்

இருக்கும்வரை

நீர் வார்த்தால்

இறந்த பின்பே

உயிர்ப்பிக்கும் விதை.

7. மாமகள்

('மாமகள்' 6.1.2001 அன்று இலங்கை வானொலி ‘வானம்பாடி’யில் ஒலிபரப்பாகிய கதைக் கவிதை)

அச்சுதா அமரரேறே என்றே

ஆசையாய் அழைத்து

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழியென

திருப்பாவை பாடிய

திருப் பாவை யாரிவள்

பாற்கடல் நாயகனாம்

பரந்தாமனின் நாயகி பூமாதேவியே

ஹிரண்யாட்சனின் பிடியில்

பொறுமையின் அவதாரமாம்

பூமாதேவி இம்சைப்பட

வராஹ அவதாரம் எடுத்தான் மாதவன்

அசுரனை அழித்து

அகமுடையாளைக் காப்பாற்ற

காப்பாற்றிய பின்னும்

கயல் விழியின் கண்களில்

கண்ணீர் ஏன்

தாமரை வதனம் வாடியதேன்

ஆனந்தக் கண்ணீரின்

அறிகுறி அல்லவே

பகவான் பரிதவித்தான்

மனையாள் என்கிற மயக்கத்தில்

மனைவியின் துன்பம் தீர்த்தீர்

பூமியில் வாழும் உயிர்களனைத்தும்

என் உயிரே

அவர்கள் துன்பம் யார் தீர்ப்பர்

என் கண்ணீரின் காரணம் இதுவே

மறுமொழி பகன்றாள் பூமித்தாய்

பெண்ணே

பூமியில் உயிர்க்கும் எவ்வுயிரும்

என்னுயிரே யார்

எந்நிலையில் எத்தவரிழைப்பினும்

மனம் திருந்தி மாயவனே என

ஒரு மலரால் எனை அர்ச்சித்தாலும்

ஓடோடி வந்து அபயம் அளிப்பேன்

இதுவே உன் தாய்மைக்கு நான்

அளிக்கும் வெகுமதி

நன்றே நவின்றான் நாராயணன்

போதும் சுவாமி

பூரித்தாள் பூமாதேவி

மக்களைக் காப்பாற்ற

மாலவன் அவதாரம் பல எடுத்தான்

கால தேவன் விளையாட்டில்

கொடியோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்கா

கண்ணனின் கருணை உள்ளமோ

மற்றுமோர் சந்தர்ப்பம் தரலாமென

மகிழ்வுற்றது

மகத்தான தர்மோபதேசமாம்

கீதையை உபதேசித்தான்

பின்னரும்

மக்களனைவரும் மாக்களாயினர்

அதர்மம் தலை நிமிர்ந்தது

தர்மம் தலை குனிந்தது

பகவானே என்ன இது

பதறினாள் பத்தினி

தேவீ கலி காலமிது

அதர்மம் அதிகரித்து

ஆட்டம் போடும்

யார் மனசுத்தியுடன் கூவியழைப்பினும்

காப்பாற்றத் தயங்கேன்

மக்கள் மனதை மாசுற்ற கலி

ஆட்டுவதால் தர்ம சிந்தனை

தவியாய்த் தவிக்கிறது

பூவாய்ச் சிரித்தான் பூபாலன்

இந் நிலையை மாற்ற இயலாதோ

பயத்தால் விழித்தாள் பாவை

மாற்றலாம் மனையாளே நான்

முன்னமே உபதேசம் செய்து விட்டேன்

நீ சென்று தீமையை தீயாக்கு

என்றே அருள

திருவரங்க துளசி வனத்தில்

விஷ்ணு சித்தர் கைகளில்

பூவின் மேல் கிடைத்தாள் பூமாதேவி

பூ வளர்ந்து பூப்பெய்தினாள்

அவதார அவசியம் உணர்ந்தாள்

நம்பிக்கையாய் நினைந்தால்

வாரண நம்பி கைவிடுவானோ

மணந்தால் மதுசூதனன் என

மனமுருகி வேண்டினாள்

சித்தர் மகள் சித்தம் மாறினாளோ

சித்தமில்லா ஊர் சிரித்துப் பழிக்க

சித்தம் தெளிந்த சித்தருக்கே சந்தேகம்

பகவான் அவதாரம்

இக்கலியில் இல்லையம்மா

நன் மொழி புகன்றார்

வளர்ப்புத் தந்தை

அவளுக்குத் தெரியாதா

அவதார நோக்கம்

தந்தை சொல்லே மந்திரமென

ஏற்கவில்லை

பக்தியே உயிர்

பக்தியே ஊன்

பக்தியே உலகம்

பக்தியாய் வாழ்ந்தாள் பாவை

மார்கழி முழுதும் மங்கா நோன்பிருந்தாள்

பூமாலையோடு பாமாலை தொடுத்தாள்

அரங்கன் சூடும் மாலையை

அனுதினமும் தான் சூடிக் கொடுத்தாள்

பக்தியை மெச்சினான் பார்த்தசாரதி

கோதை அணிந்த மாலையே மண மாலையென

கோவில் அர்ச்சகர் சித்தர் கனவில்

சிலாகிக்க

மெய் சிலிர்த்தார் பெரியாழ்வார்

சூடிக்கொடுத்த மாமகளின்

அவதாரக் கனவு

அரங்கேறும் நாள்

மங்கல வாத்தியம் முழங்க

மக்கள் வெள்ளம் பின்னே வர

மங்கையவள் மணப் பெண்ணாக

திருவரங்கனின் அரங்கில்

திருமாலின் திருமதியாய்

திருமேனியில் கலந்த

அற்புதம் கண்டு

அதிசயித்தனர்

இக்கலியில் இப்படியோர் நிகழ்வெனில்

அவள் காட்டிய வழியில் சென்றால்

அக உலகும் புற உலகும்

அமைதியுறுமே

எண்ணிய எண்ணம் நிறைவேறுமே

புதிய நம்பிக்கை பிறந்தது

பாவை காட்டிய பக்திப் பாதையில்

பரவியதே மார்கழி நோன்பு

அச்சுதனின் புகழ் பாடும்

ஆன்மீக மாதம்

அவள் காட்டிய வழிகள் மூன்று

மலரால் அர்ச்சனை

பெயரால் அர்ச்சனை

சரணாகதி

அற்புதம் நிகழ்த்தி

பக்தியை ஊட்டினாள்

ஆண்டாள் கண்ணனை ஆண்டாள்

8. என் பிரியமுள்ள...

ரோஜாக்கள் அழகுதான்

வண்ணத்துப் பூச்சிகள் அற்புதம்தான்

பறவையினமாய்ப் பிறப்பின்

சுதந்திரம்தான் எனினும்

இவைகளுள் ஒன்றாய்ப் பிறந்திருந்தால்

என் தாயின் அன்பையும்

தந்தையின் அரவணைப்பையும்

உணர இயலாமற் போயிருப்பேன்

இறைவா இதற்காக என்

தலை தாழ்த்திய நன்றிகள்

எனை தாய்க்களித்த தந்தையே

உலகிற்கு எனை அளித்த தாயே

நாம் வசிக்கும் இடைத்தூரம்

மிக நீண்டதெனினும்

நம் பந்தம்

கண்களுக்கும் இமைகளுக்கும்

இடைப்பட்ட தூரமே

இருண்டதென நாம் எண்ணியிருக்கும்

எதிர்காலம் மெய்யாகிலும்

இருட்டு அல்ல

சற்றே கரும் பூச்சு கூடுதலான

நிழல்தான் இளைப்பாறுவோம்

இணைவதற்காக

சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களைக் கண்டே

எரியாதிருக்கும் நாம்

மெழுகு வர்த்தி ஒளிக்காகவா

கண் சுழிப்பது

எம் கண்களிலிருந்து இனி

கண்ணீரே பிரசவிக்காது அதுதான்

மன உறுதி எனும்

மறு பிறப்பெடுத்து விட்டதே

நாம்

தேய் பிறையை

தலை கீழாய்க் காண

கற்றுக் கொள்வோம் இனி

வாழ்வில் என்றென்றும்

வளர் பிறைதான்

9. அஸ்த’மனங்கள்’

அதிகாலை எழுந்து

அய்யாவுக்கு வெந்நீர் போட்டு

அம்மாவுக்கு துணி துவைத்து

சீற்றமிகு சின்னையாவின்

சினத்திற்கு அடிபணிந்து

பாப்பாவைக் குளிக்க வைத்து

முதுகு நிமிர்ந்தால்

மணி ஒன்பது

வேலை பெரிது

நான் சிறிது

பத்து வயது முடிந்த என் தலையில்

இருபது வயதுச் சுமைகள்

அம்மா பசிக்குது

நான்

கேட்டது ஒன்று

கிடைத்தது வேறு

மணி பத்தாகவில்லை

இப்போது என் முறைதான்

அம்மாவின் வயிறு நிறைந்தது

என் வயிறே உனக்கு கேட்கிறதா

அம்மா சாப்பிட்ட பிறகே உனக்கு

பசிக்கணும் புரிந்ததா

10. வீட்டுக்கொரு மனிதம்

இயற்கையை எண்ணி வியக்கும் மனிதா

அவையனைத்தும் உன்னை எண்ணி

வியக்கின்றன

அருவி நீர் கிணற்று நீராகிடவில்லை

குயில்கள் மயில்களாகி

நர்த்தனமாடவில்லை

பசுக்கள் புலிகளாகி இரை தேடி

பாயவில்லை

ஆனால் உன்னிடம் மனிதம்

வீழ்ந்ததேன்

கற்புக்கரசி மதுரை எரிய

சாபமிட்டாலும்

குழந்தைகள் பசுக்கள்

முதியோர்கள் இவை தவிர

எல்லாமும் எரிய சாபமிட்டாள்

தீராக் கோபத்திலும் மனிதம்

வாழ்ந்தது

அஹிம்சை சுதந்திரம் பெற்றும்

மனிதம் இழந்த மனிதரானோம்

மனிதம் இழந்த மனிதா

எழுந்து வா

இப் புண்ணிய தேசம் உன்னை

இரு கரம் நீட்டி வரவேற்கிறது

மரணம் மத்திபம்

மன்னிப்பே உத்தமம்

காடுகளை மனிதன் அழித்ததால்

பசுமை வேண்டி

வீட்டுக்கொரு மரம் வளர்க்கிறோம்

மனிதனை மனிதன் அழிப்பதால்

மனிதம் வேண்டி

வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம்

11. காலம்

கண்ணெதிரே காணாமற் போனவைகள்

என்னில் மட்டும் நீங்கா நினைவுகள்

சட்டென்று பறந்தோடும் சிட்டு

சரித்திரம் படைக்கும் மனிதர்கள்

ஓட்டாஞ் சல்லி விளையாட்டு

ஒன்பது பேர் கூட்டாஞ்சோறு

திமில் நிமிர்த்திய காளைகள்

திண்ணை உயர்ந்த கூரை வீடு

அருகம் புல் உண்ணும் காராம் பசு

ஆடியில் வீசிய புழுதிக் காற்று

கள்ளிக்கும் கள்ளிக்கும் கல்யாணம்

கார் கால பாப்பாத்திப் பூச்சி

மேற்கத்தி மாடு பூட்டிய

கிழக்கத்தி கட்டை வண்டிகள்

நெல் நிரம்பிய மண் குதிர்

நிலாப் பூச்சி விளையாட்டு

இடுப்பை இறுக்கும் பாவாடைச் சிறுமி

ஈரமுள்ள மாமனிதர்கள்

வீரம் செறிந்த ஆண் மக்கள்

வியாதியற்ற நடுத்தர வயது

தென்னங் குரும்பைத் தேர்

தென்றலில் உறங்கிய இரவுகள்

கள்ளிச் சொட்டு வெள்ளாட்டுப் பால்

பள்ளி செல்லாப் பிள்ளைகள்

சுண்ணாம்பு மணக்கும் பதநீர்

சுரைக் குடுக்கை விபூதி

பனிக் கட்டி அறியா கடல் மீன்

பழைய சோற்றுத் தண்ணீர்

கொட்டாங்கச்சி மைப் பொட்டு

கோலி விளையாடும் சிறுவர்கள்

உறி சுமந்த எருமைத் தயிர்

உருகி வழியும் பாசம்

பதறி அழும் துக்கம்

பாரதி போற்றிய தூய தமிழ்

நெல் குத்திய உலக்கை

நெறி பிறழா அரசியல்

தாய் சொல்லும் தாலாட்டு

தகப்பன் சொல்லும் ஊர்க்கதை

வீடு கொள்ளாப் பிள்ளைகள்

வேர் கொண்ட உறவுகள்

வெம்மை குறைந்த பகல்

வெட்கம் தளும்பிய பெண்மை

தியாகம் நிறைந்த மனங்கள்

தவம் மிகுந்த பெற்றோர்

பழமொழி சொல்லும் தாத்தாக்கள்

பாட்டுப் பாடும் தாதர்கள்

எத்தனை கோடி கொடுத்தாலும்

இத்தனையும் எங்கே கிடைக்கும் (11.2.2012)

12. முன்னொரு காலத்திலே...

இற்றைக்கு ஈரேழு ஆண்டின் முன்

இறை கிணறு இருந்தது

கப்பியின் ஓசை காது கிழியும்

கயறு இழுக்க கைகடுக்கும்

அக்கா தங்கை ஐந்து வாளியென முறை போட்டு

ஐம்பது வாளிகள் இறைத்தும் சலிப்பில்லை

இன்னும் ஐம்பது இழுத்தாலும்

அசராத வயது

கேப்பை சோளம் என ஏற்றம் இறைத்தே

ஏற்றம் கண்டோம்

பாட்டன் முப்பாட்டன்

காலத்திய வானம் பொய்த்தாலும்

கிணற்று நீர் பொய்க்கவில்லை

முன் பனிக் காலத்தில்

முகம் போர்த்திய போர்வை விலக்கி

சிக்குக் கோலமிட

சில்லென்ற நீரை உச்சந்தலை ஊற்றி

உவகை அடைய மந்தம் விலக்கும்

உற்சாக மருந்தாமே...

ஒரு வாளி ஊற்றினால் குலை நடுக்கம்

மறு வாளி ஊற்றும் போது சுறு சுறுப்பு

தாங்காத கோடையில் தரை தெரியும்

தூர் அள்ள தூர் அள்ள

துள்ளி ஊறும் மறுநாளே

என்னே நின் பரிவு

எங்கே போனது கிணறு

சல்லடை போட்டுத் தேடியும் காணோம்

மழை நீரைச் சேமித்தால்

மறுபடியும் கிணறு வெட்டலாம்

மனிதர்களே உணருங்கள்! (10.2.2012)

13. நிகழ்வு

இங்கிருந்து சென்ற பேருந்தை

இங்கிருந்து சென்ற லாரி முந்த

ஒலி கொடுத்து

வழி கேட்டது லாரி

கேட்டது கிடைக்காததால்

கெட்டது புத்தி

தறிகெட்டு ஓடிய லாரி

பேருந்தை முந்த

வீழ்ந்தது படு குழியில்

போக்கு வரத்து

சாவு எண்ணிக்கையில்

ஒரு சதம் கூடியது

வாழ்க வளமுடன்

லாரியின் முகத்தில்

வாழ்த்தியது வாசகம் 22.3.2012

14. நட்புச் சிறகு

என் வீட்டுத் தோட்டத்தில் எங்கிருந்தோ

ஒரு வண்ணத்துப் பூச்சி

பூக்களில் இலைகளில் அமர்ந்தும்

காற்றில் பறந்தும்

வித்தை காண்பித்தது

வியப்பூட்டியது

என்னை சிநேகத்துடன் நோக்கி

தோழியாய் வரம் கேட்க

நான் கடவுள் இல்லையே

எனினும் வரம் கொடுத்தேன்

என்னைத் துதித்து

கவி பாடி களிப்பெய்தியது

நான் அன்போடு அதற்கொரு

பெயரிட்டேன்

ஏற்றுக் கொண்டு பறந்து விட்டது

வண்ணத்துப் பூச்சியே

உன்னோடு சிறகடித்துப் பறக்க

என்னாலும் இயலாதே

என்றாலும் என் தோட்டத்தில்

ஒரு வசந்த வேளையில்

அந்த வண்ண வண்ணத்துப் பூச்சி

மீண்டும் ஓர் நாள் உலா வரும் 23.10.1999

15. சில நேரம்....

அண்ணன் திருமணம் முடித்ததும்

அண்ணியின் அடிப்பொடியானான்

அம்மா அப்பாவை மறந்தான்

அப்போதே உறுதி பூண்டான்

அவனுக்கு மணம் முடித்தால்

அன்பு மாறாமல் இருப்பேன்

அகிலம் போற்ற வாழ்வேன்

அது போல் மணம் நிகழ்ந்தது

அப்பா கேட்டார்

அன்பு மாறாதிருப்பாயா

ஒரு நிமிடம்

மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்

நன்றே சொன்னான் 22.3.012

கதைகள்

புதுமைப் பெண்களடி! - மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு, தினமணிகதிர் கதை

1. மனித மனிதர்கள்

இது வரை திரைப்படங்களில் மட்டுமே கிராமங்களைப் பார்த்து ரசித்த எனக்கு முதன் முதலாக அழகேசன் மூலமாக கிராமத்து அனுபவம் கிடைக்கப்போகிறது. 22 வயது வரை கிராமத்து வாசனையே அறியாதவன் நான்.

மனம் நிறைந்த கனவுகளோடு குளத்துக்கரையில் அய்யனார் சிற்றுந்தில் வந்திறங்கியபோது குளத்தின் மறுகரையில் சிறுவர்களும் ஆண்களுமாய் செடிமறைவில் காலைக்கடன்களை கழித்துக் கொண்டிருந்தார்கள். நான் மூக்கைப் பொத்திகொண்டு முகம் திருப்பினேன்.

படித்துறையில் பாவாடையை தூக்கிக்கட்டிய பெண்களைப் பார்த்து கூச்சமாய் உணர்ந்தேன்.

"அழகேசா... இந்தப்பையன் யாரு?" குருக்கள் மாதிரி பூணூல் போட்டிருந்தவர் என்னைக் கேட்டார்.

"இவம்பேரு தினேஷ் சாமி. என்னோட பிரெண்ட் . எம்.பி.ஏ கடைசி வருஷம். சிட்டியிலேயே பொறந்து வளர்ந்தவன்."

"பேஷா! நன்னாருங்கோ. நம்ம கோயிலுக்கு ஒரு வாட்டி அழைச்சிட்டு வாடா, அழகேசா!"

சொல்லிக்கொண்டே போனவர் படித்துறையில் இறங்கினார்.

"என்னடாது?! இப்படி நாஷ்தியா இருக்கே! எப்பிடிடாக் குளிக்கிறது?"

"உனக்கு எங்க பெரியம்மா வீட்ல பாத்ரூம் இருக்கு. கூட்டிட்டுப்போறேன்." சொல்லிக்கொண்டே வேகமாய் நடக்க அவன் பின்னால் ஓடினேன்.

வீட்டிற்கு போகும் வழியில், வருவோர் போவோரெல்லாம் என்னையே விசாரித்தது எரிச்சலாய் இருந்தது.

மூன்று நிமிட நடையில், ஒரு சிறிய ஓட்டு வீட்டின் முன் போய் நின்றதும், எங்கிருந்தோ ஒரு நாய் ஓடிவந்து என்னைக் குரைத்து, அழகேசனிடம் வாலாட்டியது. வீட்டுக் குள்ளிருந்து அம்மா, அப்பா, தங்கை என வந்தார்கள். தவணையில் வாங்கிய பிளாஸ்டிக் நாற்காலியை கூடத்தின்

நடுவில் போட்டு என்னை உட்கார வைத்தார்கள். தங்கை 'காப்பித்தண்ணி' கொண்டு வந்தாள். குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள்.

நெல் மூட்டைகள் நான்கு என் எதிரே நின்று கொண்டிருந்தன. கூடம் முழுக்கவும் விவசாயக் கருவிகள் இறைந்து கிடந்தன.

'கொஞ்சம் நீட்டா இருந்தா என்ன போச்சாம்’’? எனக்குள் சொல்லிக்கொண்டேன். "வாடா, பெரியம்மா வீட்டுக்கு குளிக்கப் போகலாமா?" அழகேசன் கைலிக்குள் நுழைந்து கொண்டே என்னைக் கேட்டான்.

"ம.. ம்ம்".

பெரியம்மா வீட்டுக்குப போகும் வழியின் எதிரே அழேசனின் நண்பர்கள் போலும், பைக்கில் வந்தவர்கள் என்னைக்கண்டு

"ஹூ இஸ் தி மேன்?" என கோஷமாய்க் கேட்டார்கள்.

"நான் சொல்லுவேனே... தினேஷ்ன்னு..!"

"ஓ..ஹல்லோ..!" என தட்டிக் கொடுத்தார்கள்."அப்புறமாய்ப் பார்ப்போம்!" அவசரமாய்ச் சொல்லி விட்டுப் போனார்கள்.

பெரியம்மா வீ ட்டில் பாத் ரூம் வேலை முடித்து வீடு திரும்பும் போது, அழகு சடாரென நின்றான்.

எங்கிருந்தோ வந்த இரைச்சலைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே, சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தான்....!

ஓடும்போதே என்னவோ சொல்லிக்கொண்டே ஓடினான். நான் சைக்கிளை தள்ளிக்கொண்டே அவன் பின்னே ஓடினேன். ஐந்து நிமிடத்தில் என்னைச்சுற்றி சிறுவர்கள், பெரியவர்கள் என திபுதிபு வென திட்டிக்கொண்டே ஓடினார்கள். தார்ச் சாலை, ஒற்றையடிப்பாதையென ஓடி... நான் ஊருக்குவந்தபோது முதலில் பார்த்த குளத்தருகே யாரோ இருவருக்குள் பயங்கர சண்டை! இருவர் கைகளிலும் வெட்டரிவாள்!

அவர்களின் நடுவே அழகேசன்!

பயப்படாதீர்கள்! அழகேசன் சமாதானப்படுத்திக் கொண்டே இருவரையும் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான். நானும், ஏனையோரும் அருகே போக பயந்து சற்று தூரத்திலேயே நின்றோம்.

பதினைந்து நிமிடப் போராட்டத்தில் சண்டையிட்ட இருவரும் காதில் கேட்கத் தகுதியற்ற வார்த்தைகளை உச்சரிக்க..

நான் அழகேசனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தேன். வீடு வரும் வரை அவனிடம் எதுவும் பேசவில்லை!

வீட்டிற்கு வந்தவுடன் பிடிபிடி யென பிடித்துக் கொண்டேன்!

“ஊராடா இது! முதல்ல என்னைக் கொண்டு போய் வீட்ல விடு!

“என்னடாது! கிராமத்தையே பாத்ததில்லைன்னியே...!”

“திஸ் இஸ் டூ இட் வில்லேஜ்!” என்று உதடு பிதுக்கினேன்.

மௌனமாயிருந்தான் அழகு.

“எனக்குப்பிடிக்கலை!”

“சரி, வாடா. சாப்பிடு. உன்னை மட்டும் பஸ் ஏத்தி விடுறேன்.”

இலவச டிவி தனுஷ் பாடலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.அதை ரசித்துக்கொண்டே சாப்பிட்டேன்.

வீட்டில் சொல்லிக்கொண்டு பயணத்திற்கு ரெடியானேன்.

சைக்கிளில், பஸ் ஏற வந்து கொண்டிருந்த போதுதான் அது நடந்தது!

மரம் ஏற்றி வந்த ட்ராக்டர் நிலை தடுமாற, மரங்கள் நாங்கள் வந்த பக்கம் சரிய...

அழகு, எத்தனையோ முயற்சித்தும் ஒரு மரம் என் தலையில்...

ஆஸ்பத்திரியில் கண் விழித்த போது என்னைச் சுற்றி ஒரே கூட்டம்!

“பொழைச்சிக் கிட்டான்!”

“தினேஷ்!” அழகு கதறி அழுதான். சுற்றி இருந்தவர்கள் அவனை சமாதானப் படுத்தினார்கள்.

கிட்டத்தட்ட கிராமமே அங்கே கூடி இருந்தது!

“இனி ஒண்ணுமில்லேப்பா!” என் தலைக்கு மேலே முகங்கள்...

எனக்கு விபரம் புரிந்தது!

‘இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் எனக்கு... எனக்காகவே வந்தவர்களா!?’

கிராமத்து வாழ்க்கை என்றால் என்ன? என்பது புரிந்தது. இதே மாநகரம் என்றால்... அங்கே,

அனாதை இல்லங்களாகவும், முதியோர் இல்லங்களாகவும், மனிதநேயம் கட்டாயப்படுத்தப் பட...

இங்கே, இயற்கையான மனித நேயத்தை சுவாசிக்கத் துவங்கினேன்!

கிராமங்களே..! நீங்கள் நகரம் நோக்கிச் செல்லாதீர்கள்! தயவு செய்து..!

2. உயிர்ச் சிலைகள்

அலுவலகத்திலிருந்து வரும்போதே ராமகோபாலன் மகிழ்ச்சியுடன் வந்தார். கமலாம்பிகை அவரை வியப்புடன் நோக்கினாள்!

“ப்ரமோஷன் ஏதும் கிடைச்சிருச்சாங்க?”

“கிடைச்ச மாதிரிதான்!”

கமலாம்பிகையை உற்சாகம் தழுவிக்கொண்டது.

“எங்க எம்.டி அடிகளாரைப் பார்க்கப் போறாராம். வர்ற ஞாயிற்றுக்கிழமை அவருக்கு கனகாபிஷேகமாம்!” ராமகோபாலன் சொல்லவும் கமலாம்பிகை முகம் சட்டென மாறியது.

“பாத பூஜை செய்யிறாங்களாம்! பதினைந்தாயிரம் கட்டியிருக்கேன்!”

கமலா, கணவனை முறைத்தபடியே காபி கொண்டு வரப் போனாள்.

“சதானந்தரோட பாதத்தைத் தொட்டாலே மோட்சம் கமலா!”

காபியுடன் வந்தவள்,” தெரியாமத்தான் கேக்கறேன். இதெல்லாம் நமக்குத் தேவையா? காம்பவுண்ட் சுவர் ரிப்பேர் பாக்கனும்னேன், காசில்லேன்னிங்களே!’

“ஏண்டி! காம்பவுண்ட் சுவரும், அடிகளாரும் ஒண்ணா? சந்தர்ப்பங்கிறது ஒரு தடவைதான் வரும்! அடிகளாரோட ஆத்மா என்னைக் கூப்ட்டிருக்கு...”

“கர்மம்...! கர்மம்...! எம்.டி நாலு கம்பெனி வெச்சிருக்கார்.அதைக் காப்பாத்துறதுக்காக அலையறார். நாம மிடில் கிலாசுங்க! கோடீஸ்வரனுக்கு ஆயிரமெல்லாம் சாதாரணம்!”

“இப்படியே நினைச்சு நினைச்சுத்தான் மிடில் கிளாஸ் ,மிடிலாவே இருக்கோம்!’

‘இவருக்கு எத்தனை சொன்னாலும் புத்தி வராது! எந்தக் குறையுமில்லாத வாழ்க்கைதான் வாழ்கிறோம். கமலாவுக்கு கோயில் சிலைகளிடம் உள்ள நம்பிக்கை இப்பேர்ப்பட்ட உயிர்ச் சிலைகளிடம் இருப்பதில்லை.! பொதுவாக பெண்கள்தான் இப்படியான பலகீனங்களுக்கு உட்படுவார்கள். இங்கே தலைகீழ்! இவரிடம் யார் எடுத்துச் சொல்வது? பட்டால்தான் தெளிவார்!’

திடீரென நினைவு வந்தவளாய் கணவனிடம் வந்தாள்.

“நாளைக்கு உங்க ஆபீஸ் பியுனுக்கு கல்யாண நாளாம்! நம்மகிட்ட ஆசீர்வாதம் வாங்க வர்ரதாச் சொல்லியிருக்கான்.”

“நம்மகிட்ட என்ன ஆசீர்வாதம் வேண்டியிருக்கு”?

“பாவம்,அவன் மனைவியும் அவனும் அனாதை ஆசிரமத்திலே வளர்ந்தவங்க இல்லையா, அதனாலே மனுஷங்களோட அருமை தெரியும் சாமியார், அடிகளார்னு போகாம நம்மகிட்டே வர்றாங்களே...!”

“அதெல்லாம் அவங்க அவங்க தனிப்பட்ட சந்தோஷம்! நாம என்ன கெட்டுப் போயிட்டோம்? அடிகளாரோட ஆசீர்வாதத்துல நம்ம பையனும், பொண்ணும் டாக்டர், ஆடிட்டர்னு இருக்காங்க!”

“பெற்றவர்களின் கவனிப்பு, பிள்ளைகளின் சொந்த உழைப்பு, சரியான வழிகாட்டல்! அவர்களின் திறமை! அவர்களின் முன்னேற்றத்திற்கு இதெல்லாம் பக்க பலம்! இதில் அடிகளார் எங்கே? பிள்ளைகளுக்குத் தெரிந்தால், குடும்ப அமைதி கெடும். கவலையில் ஆழ்ந்தாள்.

மறுநாள் காலை...

ஆறுமணிக்கு டிவியைப் போட்ட கமலாம்பிகைக்கு தூக்கிவாரிப் போட, கணவனை எழுப்பினாள்!

“ஏங்க, இங்க வந்து பாருங்களேன்!”

ராமகோபாலன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார். மனைவியிடம் விபரம் கேட்டார்.

அவள் பதிலேதும் கூறாது, டிவிப் பெட்டியைச் சுட்டிக் காட்டினாள்.

சிறப்புச் செய்தி: சதானந்த அடிகள் கைது! ஆசிரமத்தில் காவல் துறை விசாரணை...! என

செய்தி விரைந்து கொண்டிருந்தது!

ராமகோபாலன் சரிந்து உட்கார்ந்தார்! அவர் முகம் வெளுத்துப் போயிற்று!

எட்டு மணி வாக்கில் பியுனும் அவன் மனைவியும் வந்தார்கள். கமலாம்பிகை அவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தாள். கணவனையும், மனைவியையும் நிற்க வைத்து இருவரும் காலில் விழுந்தார்கள். ராமகோபாலன் இன்னும் தெளிவில்லாமலேயே இருந்தார்!

3. அசல்

பேருந்து விபத்தில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த, என் உறவினர் ஒருவரைப் பார்க்க நானும் என் மனைவியும் குழந்தையுடன் சென்றோம்.

காலைப் பத்து மணிக்கு மருத்துவமனை சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நோயாளிக்கும் உள்ள பிரிவில் கூட்டமாய் நின்றிருந்தார்கள். ஒரு வயதான பெரியவர் இருமலை மென்று கொண்டே வந்தார். அங்கிருந்த கட்டடங்கள், சண்டையிட்டுக் கொண்டது போல் திசைக்குஒன்றாய்த் திரும்பியிருந்தன.

மூக்கைப் பிடித்தவாறு என் மனைவி வந்தாள்.

“நா இதுவரை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே வந்ததில்லீங்க!” என முகம் சுழித்தாள்.

“என்ன பண்றது? வரவேண்டிய நேரம்... கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி சுகாதாரம் கம்மியாத்தான் இருக்கும். எல்லாம் பணம் பிடுங்கிகள்...’

“உங்களுக்கு யாரைப் பார்க்கணும்? நான் பணம் வாங்க மாட்டேன், சொல்லுங்க சார்!’

இளம் வயது நர்ஸ், என் பின்னாலிருந்து குரல் கொடுத்தாள்.

உறவினரின் பெயரைச் சொன்னேன். இடது புறமிருந்த கட்டடத்தைக் காட்டிவிட்டு அவள் பணியைக் கவனிக்கச் சென்றாள். நாங்கள் நன்றி சொல்லி விட்டு அங்கே சென்றோம். மனிதர் வலியில் முனகிக் கொண்டிருந்தார். முழங்காலில் மாவுக்கட்டு போட்டிருந்தார்கள். மனைவி உடன் இருந்தார். நாங்கள் கொண்டு போயிருந்த பிஸ்கட், பழவகைகளைக் கொடுத்தோம்.

“வெந்நீர், பால் கொண்டு வரவாம்மா?”

நாங்கள் சற்று முன் பார்த்த அதே நர்ஸ்.

‘பாலில்தான் வெந்நீரைக் கலப்பீங்களே...அப்புறம் எதுக்கு வெந்நீர் வேறே?’

நான் முணுமுனுத்தது அவளுக்குக் கேட்டு விட்டது போலும்! என்னை முறைத்தவாறே சென்றாள். சிறிது நேரத்தில் சொல்லிக்கொண்டு புறப்பட்டோம்.

வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தம் வந்தபோது நாங்கள்

செல்ல வேண்டிய பேருந்து தயார் நிலையில் உருமிக் கொண்டிருந்தது. பேருந்திற்குள் கண்டிப்பாக காற்று சிரமப்பட்டுத்தான் நுழைய வேண்டியிருக்கும்! அத்தனை கூட்டம்!

“நாம அடுத்த பஸ்சுக்கு போய்க்கலாமா?”

“ரொம்ப லேட்டகுங்க. மழை வேற வர்ர மாதிரி இருக்கே..” மனைவி சொல்லவும் துணிந்து ஏறினேன்.

கூட்டம் நெட்டித் தள்ளி ஏறவிடாமல் செய்தது. அங்குலம் அங்குலமாய் நகர்ந்து சென்றபோது, ஓரிடத்தில் இடப்புறமிருந்து, குபீரென வெளிக்காற்று முகத்திலறைய மூச்சு விட்டோம்! காற்று வந்த திசையை நோக்கினேன். ஒரு இருக்கை காலியாக இருந்தது. ஆனால்

யாரோ அந்த இருக்கையில் தாராள மயமாக்கலுடன் வாந்தி எடுத்திருந்தார்கள். குழந்தை வீறிட்டு

அழ, யாரும் கண்டு கொள்ளாமலேயே இருக்க...

“ஸார், கொஞ்சம் தள்ளிக்குங்களேன்.’ எங்கேயோ கேட்ட குரல்?

ஆ...! அரசு மருத்துவ மனை நர்ஸ்!

கூட்டம் நகர முயற்சிப்பது போலக் காட்டியது. குழந்தை அழுவது காதில் கேட்காதது போல் அனைவரும் ஜடப்பொருளாக வீற்றிருந்தார்கள்! நர்ஸ், தனது கைப்பையிலிருந்த சிறிய டவலை எடுத்து வாந்தியைத் துடைத்ததை முகம் சுளித்து திருப்பிக் கொண்டார்கள். நானும்தான்!

“யாராச்சும்,தண்ணி பாட்டில் இருந்தால் குடுங்களேன்.”

என்னுடன் சேர்த்து இரண்டு, மூன்று பாட்டில்கள் நீண்டன. அவள் துடைத்து முடித்ததுதான் தாமதம்... அருகிலிருந்தவர்கள் அந்த இடத்தில் உட்கார போட்டி போட்டார்கள்.

‘இப்போ என்ன அவசரம்? ஏன், இத்தனை நேரம் புத்தி எங்கே போச்சாம்?”

உச்சந்தலையில் குட்ட,” குழந்தையை வச்சுக்கிட்டு எத்தினி நேரம் நிக்கிறார்! யாருக்குமே தெரியலையே. நீங்க உக்காருங்க சார்!” என என்னை விளிக்க, மருத்துவமனையைப் பற்றி நான் கொண்டிருந்த எதிர்மறையான அபிப்ராயத்தை... அவளது பணியின் மகத்துவம் மாற்றியமைத்தது!

4. கூடு

காலில் குத்திய முள், உச்சந்தலை வரை வலித்தது தாளமுடியாமல், துடித்தான் சரவணன்.

“இந்தச் சனியன், எப்போதான் தொலையப் போகுதோ!”

‘சனியன்’ என அவன் சொன்னது,முள்ளை அல்ல... பக்கத்து வீட்டு விஸ்வத்தின் வேப்பமரம் இவர்கள் வீட்டுப் பக்கம் கிளை பரப்பியிருந்தது. நிழல் தரும் வரை, நாற்காலி, கட்டில் என அவரவர் வசதிப்படி காற்று வாங்கினார்கள். இரு வீட்டாரின் ஒற்றுமைக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

ஆறு மாதத்திற்கு முன் சரவணன் வீட்டுக் கிளையில், ஒரு காகம் கூடு கட்டியிருந்தது. ஆரம்பத்தில் அதனை யாரும் கவனிக்கவே இல்லை. நாளடைவில் அது கொண்டு வந்து சேர்த்திருந்த வெல்டிங் பட்டறைத் துண்டுக் கம்பிகள்,கருவேல முட்கள், என தனது இருப்பிடத்தை காலத்திற்குத் தகுந்தார் போல செப்பனிட்டு அமைத்திருந்தது. காலையில் எழுந்து பாத்ரூம் செல்கையில் காலை பதம் பார்க்கத் துவங்கிய போதுதான், பிரச்சினை ஆரம்பித்தது!

விஸ்வத்தைக் கூப்பிட்டுக் கிளையை வெட்டச் சொன்னான் சரவணன்.

“ஒரு காக்கா ய்க்காக ஒரு மரத்துக் கிளையை வெட்டவா? உங்களுக்கே அநியாயமா இல்லை!

நீங்க செய்வீங்களா?” என மரத்தின் சார்பாக எதிர்க் கேள்வி கேட்டான்.

சரவணனின் மனைவி, “இதுக்காக ஏங்க அடிச்சுக்கிறீங்க? கூட்டைக் கலைச்சுட்டாப் போச்சு!” என யோசனை சொன்னாள்.

சரவணனுக்கு சரியெனப் பட இந்தப் பக்கம் ஏணியை வைத்து காகத்தின் கூட்டை பிய்த்து எறிந்தான். ஒரு வாரம் காகம் வரவில்லை. சரவணனும், விஸ்வமும் நேரில் பார்த்துக் கொண்டாலும் மௌனம் காத்தார்கள். கூட்டை மறக்க ஆரம்பித்த போது...

திடீரென ஒரு நாள், எதேச்சையாக மரத்தைப் பார்த்த சரவணின் மகன்,”எல்லாரும் வாங்களேன்...!”

என சத்தமிட அனைவரும் ஆளுக்கொரு எதிர்பார்ப்புடன் ஓடினார்கள்.அவன் காட்டியது... வேப்பமரக் கிளை! காகம் கூடு கட்டிய வேப்பமரக் கிளை!

“இதுக்கு வேறே இடமே கிடைக்கலியா? மொதல்லே மரத்தை வெட்டினாத்தான் சரிப்படும்!’ சரவணன் இரைந்து சத்தம் போட,அடுத்தாற் போல் நின்றிருந்த விஸ்வத்திற்கு ‘சுரீர்’ என்றது.

“வெட்டினாத் தெரியும் சேதி...!” உறுமலுடன் சொன்னான்.

“அப்படின்னா கிளையை வெட்டுங்க!”

இருவரும் மாறி மாறி சத்தம் போட, மனைவியர் இருவரும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் போன சரவணன், விஸ்வத்தின் பலகீனங்களைச் சொல்லி திட்டினான். அன்றைய தினத்திலிருந்து இரு வீட்டாரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது!

ஒரு நாள், சரவணின் மனைவி விடியற் காலையில் எழுந்து வந்தபோது, காகத்தின் வெல்டிங் கம்பி ‘சுருக்’கென காலில் குத்தியது! எத்தனை முயற்சித்தும் கம்பியை எடுக்க முடியவில்லை! ஆட்டோ பிடித்து மருத்துவமனை சென்று... அறுவை சிகிச்சை செய்தால்தான் எடுக்கலாம், என்று சொல்லி விட்டார்கள்! சரவணனுக்கு இரண்டாயிரத்துக்கு மேல் செலவு ‘பணம் போகட்டும்... இதுக்கு எப்படியாச்சும் ஒரு முடிவு கட்டியே ஆகணும்!’ என தனக்குள் முடிவெடுத்தான்.

தெருக்கோடியில் வசித்து வந்த நரிக்குறவர் ஒருவரிடம் சொல்லி, துப்பாக்கி கொண்டுவரச் செய்து சுட்டு விடும் யோசனையைச் சொல்ல மனைவி, ‘சரி’ எனத் தலையாட்டினாள்.மறுநாள் காலையில் சரவணன் எழுந்து வந்த போது... ‘இதென்ன கருப்பாய்...!?’ அருகில் சென்றான். காகம்! இறந்துபோய்க் கிடந்தது!

‘எப்படி இறந்திருக்கும்? எப்படியோ செத்துப் போன வரைக்கும் சந்தோஷம்!’ என, காகத்தைத் தூக்கி விஸ்வத்தின் வீட்டுப் பக்கம் எறிந்தான் சரவணன். ஏழு மணிவாக்கில் வாசலில் இருந்த குப்பைத் தொட்டி பக்கமிருந்து காகங்கள் கரையும் சத்தம் சரவணனின் காதை வந்தடைய வாசல் காம்பவுண்ட் அருகில் சென்று பார்த்தான். காகம் குப்பைத் தொட்டியில் விரைத்துக் கிடக்க... அதனைச் சுற்றிலும் பத்துப் பதினைந்து காகங்கள்.. கரைந்து துக்கம் ‘கொண்டாடியது!

சரவணன் ‘எனக்கென்ன!’ என்பதுபோல் ஜன்னலை,கதவைச் சாத்த...சில நிமிடங்களில் அதிகப்படியான காகங்கள் கரைய ஆரம்பித்தன..இரு வீட்டாரும் ‘காகத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்பது போல் வீட்டிற்குள் அடைந்து கிடக்க, அந்த நேரத்தில் குப்பை அள்ள வந்த லாரி, குப்பையை அள்ள முடியாமல் தவித்தது...! சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை.

“யார் சார் வூட்ல?”

சரவணன் கதவு திறந்தான்.குப்பை அள்ளும் மாநகராட்சிப் பணியாளன் நின்றிருந்தான்.

‘என்ன?’ என்பது போல் பார்த்த சரவணனிடம், “காக்கா ஒண்ணு செத்துக் கெடக்குது சார், எல்லாக் காக்காய்களும் சேந்துக் கிட்டு ரவுசு பண்ணுதுங்க. தீவாளி வெடி மிச்சமிருந்தா குடு சார், வெடி போட்டாத்தான் இடத்தைக் காலி பண்ணும்!”

“பக்கத்து வீட்ல கேளுப்பா..” அவசரமாய் கதவு மூடப் போனவனின் முன், பணியாளனின் கோபக் குரல் தடுத்தது.

“இன்னா மனுசங்கய்யா...! அந்த வீட்டைக் கேட்டுட்டுத்தான் உன்னாண்ட வந்தேன்! அவன் உன்னைக் காட் னான்..! மனுசங்களாய்யா நீங்க...! நா என்ன பிச்சையாக் கேக்குறேன்? உங்களுக்கு... அந்த காக்காய் கூட்டமேத் தேவலாம்! தூ...!” எனக் காறி உமிழ்ந்ததை பக்கத்து வீட்டு விஸ்வம் பார்த்து, முகத்தைத் துடைத்துக் கொண்டான்...! சரவணனும்....!!

5. கல்-சிலை = கற்சிலை

நேற்றுக்கூட அந்தக் கல்லைப் பற்றிய பிரச்சினை எழுந்தது... 218-P வீட்டின் சதானந்தனின் மகன், சைக்கிளை கல்லில் மோதியதால், பலத்த அடி! '+'சைசில் நெற்றியில் தையல் போடப்பட்டு முகமே வீங்கிப் போய்க் கிடந்தது!

ஆர்.வி நகர் இரண்டாவது குறுக்குத் தெரு ஆரம்பத்தில், மூன்றுக்கு இரண்டு என்கிற நீள-அகலத்திலும் சுமார் ஒரு அடி கணத்திலும் ,கருமையான கருங்கல் ஒன்று கிடந்தது.கல்லுக்கு ரிஷி மூலம், நதி மூலம் தெருவாசிகள் யாருக்குமே தெரியாது! தெருவுக்கு முதன் முதலில் குடிவந்த 1-ஆம் எண் வீட்டுக்காரர் சீனுவாசனுக்குக் கூடத் 'தெரியாது!' என்றுதான் சொன்னார்! கல்லின் அடிப்பகுதி மண்ணில் புதைந் திருப்பதைப பார்த்தால் 'இருபது' வருடம் என்றுதான் ஊகிக்கலாம். இது வரை கல் லைப் பற்றி யாரும் கவலைப் படாமல்தான் இருந்தார்கள். கல்லுக்கு எதிர் வீட்டி ல் பஞ்சாபி குடும்பத்தார் வரும் வரை!

போன ஆண்டு கார்த்திகை மாதம் அரசு வங்கி ஒன்றில் ஜி.எம். ஆக பதவி ஏற்று, பஞ்சாபைச் சேர்ந்த ஜோகீந்தர் சிங் குடும்பத்தோடு வந்திற ங் கிய போதுதான் பிரச்சினையே ஆரம்பித்தது! அவருக்கு 'சிம்ரன்' கணக்காக இரட்டைப் பிறவிகளான பதினெட்டு வயதுப் பெண்கள்! அவர்கள் கல்லூரிக்குப் போகும் போதும், வரும் போதும் அங்கே இளைய வயது ஆடவர் கூட்டம் சேரத் துவங்கியது! பஞ்சாபிப் பெண்களைப் 'பார்வையிட' கல் ரொம்ப உபயோகமாய் இருந்தது.

இதற்கு முன் கல் 'தெய்வமே' என்றுதான் கிடந்தது.இப்போது, குறைந்தது ஏழு பேர் வரை கல்லை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். இளைஞர்கள் பாஷையில் பஞ்சாபிப் பெண்களை விமர்சிப்பது, பாட்டுப் பாடுவதுமாக அந்த இடம் ரொம்ப பிசியானது! பஞ்சாபிக்காரருக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லை! ஆண் பிள்ளைகளுக்கு வயதுக் கோளாறு! பெண்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினையாகி விடக்கூடும்! இடம் வேறு புதிது... கோபத்துடன் கையாண்டால், எதிர் விளைவுகள் அதிகம்! எனவே பெண்களுக்கு ஹாஸ்டல் ஏற்பாடு செய்து விட்டார்! அதன் பிறகும் கல்லில் கூட்டம் சேராவிட்டாலும், ஒன்றிரண்டு பேர்கள் மாலை வேளைகளில் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சதானந்தனின் மகன் இப்போது அடிபட்டதால்...தெருவாசிகள் ஒன்று சேர்ந்து கல்லுக்கு முடிவு கட்ட முனைந்தார்கள்! அனைவரும் பணம் போட்டு கூலி ஆட்கள் அமர்த்தி, கல்லை அப்புறப்படுத்துவது என தீர்மானம் நிறை வேற்றினார்கள்.ஆனால்... மறுநாள் கல்லைக் காணவில்லை! முன்னெப்போதையும் விட கல் அதிகம் பேசப்பட்டது.

கல் இருந்த இடத்தில் தெருவாசிகள் கூடி நின்று, அது இருந்த பள்ளத்தைப் பார்த்து பெருமூச்செரிந்தார்கள்!

"எப்பேர்ப்பட்ட கல் சார் அது! யாரு தூக்கிட்டு போயிருப்பங்க?"

"தூக்கிட்டுப் போறதுக்கு அது என்ன ஹேண்ட் பேகா?"

"குறைஞ்சது நாலு பேராவது வரும்னுதான் நமக்குத் தெரியுமே! சத்தம் போடாமே எப்படித் தூக்கினா னு வ?"

"நா எங்க வீட்டுக்குத் துணி துவைக்கிற கல்லா யூஸ் பண்ணலாம்னு இருந்தேன்!"

எப்படியோ... இதுவரை நாதியற்றுப் போய்க் கிடந்த கல்லை உயர்தினையாக்கி உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தவர்கள், திடீரென ஒருவர் காதில் ஒருவர் என கிசு கிசுக்க ஆரம்பித்தார்கள்! காரணம்,இந்த அமளியை கல்லுக்குப் பக்கத்து வீடான சந்திரசேகர் கண்டு கொள்ளாததுதான்!

அவர் பாட்டுக்கு தான் உண்டு, தன் வேலை உண்டு எனப் போய்க் கொண்டிருந்தார்! ஆனால் யாருக்கும் அவரிடம் நெருங்க தைரியம் இல்லை! அதனால் அவர்தான் ஆள் வைத்து கல்லைத் தூக்கச் சொல்லி 'கைமா' செய்துவிட்டதாகப் பேசி முடிவு செய்தார்கள்! நாட்கள் நத்தையாய் ஊர்ந்தது.கல்லைப் பற்றிய பேச்சுக்கள் தெருவாசிகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்து... ஒரு நிலையில், மறந்தே போனார்கள்!

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது! தெரு முனை வேப்ப மரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்று திடீரென உதித்திருந்தது!

தெருவாசிகள் ஒன்று சேர்ந்து இப்போது சந்திரசேகரின் வாசலில் மையம் கொண்டிருந்தார்கள்!

"என்ன வேணும்? நான்தான் கல்லை சிலையாக்கினேன்! என்னை என்ன வேணாலும் செய்துக்குங்க! ஒரு பிச்சைக் காரன், அதைப் பார்த்து..இந்தக் கல் சிலை வடிக்கிறக் கல்லுன்னு சொன்னான். சிற்ப வேலை செய்றவங்களை கூட்டிட்டு வந்து கேட்டேன்! எப்பவோ சிலை செய்றதுக்கு யாரோ கொண்டு வந்திருக்காங்க எதோ சூழ்நிலை செய்யமுடியலை..." சந்திரசேகர் சொல்வதைக் கேட்டு கூட்டம் சிலையானது! மனிதர்கள் சிலையாக... கல் உயிர்பெற்றுக் கொண்டிருந்தது!

6. ஆயுசு நூறு

மாமரத்து நிழலில் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த நடேசன் எழுந்தார். தூரத்தில்,அவர்களது வயல் வரப்பில் நண்டு பிடிக்கும் சிறுவர்கள் கும்மாளம் போட்ட படி ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ரசித்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். தன்னுடைய சின்ன வயது நினைவுகள் அவரை சிலிர்க்க வைத்தது. தலைக்கு மேல் கொக்கு மடையான்களின் கூட்டம் சில வினாடிகள், புயற் காற்றின் சீற்றத்துடன் பறந்தது. வானம் பிசிறில்லாத நீல நிறத்தில் முழுமை பெற்றிருந்தது. பச்சைக் கிளிகள் கொய்யா மரத்தில் அமர்ந்து சண்டையிட்டுக் கொண்டே பழம் பறித்துத் தின்றன.

தெற்கிலிருந்து சற்று வேகமாகக் காற்று வீசத் துவங்கியது. மத்தியான வெயிலின் உக்கிரம் தனிய ஆரம்பித்தது. நடேசனுக்கு அந்தக் காலத்திலிருந்தே விவசாயம்தான் குலத் தொழில். ‘யப்பா... என்னா வெயிலு! அந்தக் காலத்தில எல்லாம் மழையே இல்லாம எத்தனை மாசத்தை ஓட்டுனோம். இப்போ ஒரு மாசம் மழை இல்லேன்னா இரும்பு கூட பத்திக்கும் போலருக்கே..!’ தனக்குள் எண்ணமிட்டவாறே வீட்டிற்கு போக நினைத்தார். காலையில் பேத்தி பழையதும் நேற்று வைத்த மீன் குழம்பும் கொடுத்தாள். நாலு வாய் தான் சாப்பிட்டார். மீதமிருந்த கஞ்சியை நாய்ச் சட்டியில் ஊற்றி விட்டார். அவ்வளவுதான்! “நீ என்ன நெனைச்சு கிட்டு இந்த வேலை பாக்குறே? அரிசி என்ன சும்மாவா கொட்டிக் கிடக்கு... “ என ஆரம்பித்து கார்த்திகை மழையாய் பிடித்துக் கொண்டாள். ரோட்டில் போவோரெல்லாம் இவளை வேடிக்கை பார்த்தார்கள்! அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுபவளா அவள்?

நடேசனுக்கு வயது தொண்ணூற்றி இரண்டு! இடுப்பில் கதர் வேட்டி, தோளில் துண்டு. கறுப்பு நிறத்தில், ஒல்லியான குள்ள உருவம். உழைத்துக் களைக்காத உடம்பு. சொன்னால் நம்பவே மாட்டீர்கள். பின் பக்கமாய்ப் பார்த்தால் காந்தித் தாத்தா போலிருப்பார். இன்னொரு சிறப்பு, அவர் ஐப்பசி சதயத்தில் பிறந்தவர்! இதனை அவரே பெருமையுடன் சொல்வார். ’அதுக்காவ எல்லாரும் ராச ராச சோழனா ஆயிற முடியுமா?’ என்பதையும் சொல்லிக் கொள்வார். நடேசனின் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்.(நான்கு ஆண்கள், ஐந்து பெண்கள்.)இவர் நான்காவது பிள்ளை. அந்தக் காலத்தில் மூன்றாவது படித்தவர். அதனால், அனுபவ ரீதியாய் எழுதப் படிக்கத் தெரியும்.(சில எழுத்துப் பிழைகள் தவிர!) வெள்ளைக் காரன்கள், ஐம்பது வருடங்களின் புயற் சீற்றம் என யாராவது கேட்டால், புள்ளி விவரங்களோடு சொல்வார். ’வெள்ளைக் காரனுங்களோடே சண்டை போட்டீங்களா தாத்தா..’ என்றால் ‘இல்லடா..நா ஆடு மேய்க்கப் போயிறுவேன்.’ என சிரிக்காமல் சொல்வார்.

நாற்பத்தியேழு வயதில் தான் கல்யாணமே நடந்ததாம்! இவருக்கு முப்பத்தைந்து வயதான போது அக்காவுக்கு பெண் பிறக்க, ‘உனக்குத்தாண்டா எம் பொண்ணைக் கட்டணும்’னு பெரியக்கா சொல்ல கண்ணெதிரே வளர்ந்த தேவானையை... அக்காவின் மனம் குளிரக் கட்டினார். ஒரு மாமாங்கம் கழித்து, அதாவது இவரது ஐம்பத்தொன்பதாம் பிராயத்திலேயே பெண் பிறந்தாள். அதன் பின் ஆறு வருடங்கள் கழித்தே மகன் பிறந்தான், மகளை பதினைந்து வயதிலேயே மணம் முடித்ததால்’ அவள் உடனடியாய் ஒரு பெண்ணைப் பெற்றாள். வம்சம் தழைத்ததாய் சந்தோசப்பட்டார்! மகனுக்குப் பேத்தி வளர்மதியைக் கட்டினார். மகன் பொருளீட்ட வெளிநாடு சென்றான். பேத்தி ,கணவனிடம் தாத்தாவையும் பாட்டியையும் ஒன்று கிடக்க ஒன்று போட்டுக் கொடுக்க...நடேசனுக்கு பிள்ளை... இல்லையென்றானது! வயதான தம்பதிகள் இருவரையும் ‘தனி உலை’ வைக்க வைத்த புண்ணியவதி! அவர்கள் கட்டிய வீட்டின் ஓரத்திலேயே சார்புக் கொட்டகை இறக்கிக் கொடுக்கச் சொன்னான் மகன்! அவர்களுக்கென சிறிது நிலம் ஒதுக்கி அதில் வெள்ளாமை போட்டுக் கொண்டார்கள். அந்த நிலத்தில் அதிகம் விளைவது போலிருந்தால்... அறுவடை செய்வது பேத்தியாகத்தான் இருக்கும்.’நம்ம ரத்தம் தானேடி!’ என மனைவிக்கு ஆறுதல் சொல்வார். நான்கு ஆண்டுகளுக்கு முன் தேவானை ஒரு இரவுப் பொழுதில் கண் மூட..நடேசன் அழவில்லை!

‘மகராசி... போய்ச் சேர்ந்துட்டியா... கூடவே என்னையும் கூட்டிக்கிட்டுப் போனா என்ன?’ என்று மட்டும் சொன்னார். வளர்மதி, கணவனின் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ‘தாத்தாவுக்கு ஆயுள் எப்போது முடியும்?’ எனக் கேட்டுத் திரிந்தாள்! ‘இந்தக் கிளவி போனவ இவரையும் கூட்டிக்கிட்டுப் போய்த் தொலைஞ்சா என்ன?’ என்று கூசாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள்!

மனைவி இறந்தவுடன், ‘வயசான மனுசனை தனியா விடாதே.’ என பங்காளிகள் சொல்ல நடேசனுக்கு பேத்தியே கஞ்சி ஊத்தினாள்! நடேசனும் கடைசிக் காலத்தில், ஒன்றாக இருப்போம் என பெரும் போக்காய் நினைத்தார்! ஆனால், ஒவ்வொரு வேளையும், சாப்பாட்டுக்குப் பதிலாய் விஷத்தையே அருந்தினார்! ஆமாம்.

ஔவையாரின், கொடிது... கொடிது... என்பதில், ‘அன்பில்லாப் பெண்டிர், அவர் கையில் உண்பதாமே!’

எனும் இறுதி வரிகள் அவர் நினைவில் அடிக்கடி வந்து போகும்! அத்தனை கொடுமையை அனுபவித்தார்.

யாரிடமாவது பேத்தியைப் பற்றி மூச்சு விடுவாரா? ஆளைப் பார்த்தால் பிரச்சினையே இல்லாதவர் போல்தான் வலம் வருவார். ‘பேத்தி...தன்னுடைய மரபு அல்ல. அவள் அப்பனின் மரபு. என்பதை அவளைக் கல்யாணம் செய்த முப்பது நாட்களுள் கண்டு கொண்டார். சொந்தப் பேத்தியை யாரிடம் சொல்வது?

பொழுது சாய ஆரம்பித்து ஆடு, மாடுகள் வீட்டிற்குத் திரும்ப ஆரம்பித்தன.. நடேசன் வீட்டிற்குப் போக எழும் போது, வளர்மதி மூச்சு வாங்க ஓடி வந்தாள்!

‘தாத்தா... இங்கேயா இருக்கே! உன்னைய எங்கேன்னு தேடுறது? காலையிலேர்ந்து கஞ்சியே குடிக்கலையே எங்கனையாச்சும் விழுந்து கெடக்குறியோன்னு பதறிப் போய் ஓடியாறேன்!” மோவாயில் கை வைத்து பட படத்தாள்.

நடேசனுக்குத் தன் காதுகளையும், கண்களையும் நம்பவே முடிய வில்லை. ‘வளர்மதியா இவள்!?’

“கெளம்பு...பொழுது சாஞ்சி இன்னம் என்ன பண்றே?” திடீர்ப் பாசம், பரிவு... நடேசனை நிலை குலைய வைத்தது. தன் முகம் பார்த்துப் பேசுவாளா? இவரைப் பார்க்கும் போதெல்லாம் முகம் சுழித்த படியேதான் இருக்கும். இப்போது அளவுக்கதிகமான அன்பு...‘சரி, யாரோ சொல்லி புத்தி மாறி இருக்கிறாள். பேத்தி தானே! பழைய கணக்கை என்னத்திற்கு பார்ப்பது?’ தனக்குள் சமாதானம் செய்தவராய் எழுந்து பின்னே சென்றார்.

நாட்கள், மாதங்களாகி...வருடத்தைத் தொட்டது. வளர்மதி தாத்தாவிடம் கொண்ட பாசத்தில் இம்மியளவும் குறையாமல் பார்த்துக் கொண்டாள்! தெருவே அதிசயித்தது! ‘வளர்மதியா இவள்?’ கிழவருக்கு நேரத்திற்கு சாப்பாடு, டாக்டரிடம் முழு உடல் பரிசோதனை! அவர் என்ன சாப்பிடுகிறார் எனக் கேட்டு அதற்கேற்ற பக்குவம்! மகனும் தொலை பேசியில் அப்பாவுடன் பரிவாய்ப் பேசினான்!

நடேசன் எல்லாவற்றையும் சுத்தமாய் மறந்து, பேத்தியின் அன்பு நிழலில் வாழ்ந்தார். அன்று...வழக்கம் போல பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வளர்மதி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, எதிர் வீட்டுப் பெண் வேகமாய் வந்தாள்! கடைக்குப் போன நடேசன் தூரத்தில் வந்து கொண்டிருந்தார். இருவரும் அவரைக் கவனிக்கவில்லை.

பேசியவாறே வீட்டின் பின் பக்கமாய் இருவரும் சென்ற போது, நடேசன் வீட்டினுள் வந்து விட்டார்.

“என்னடி, கிழவரை நல்லா கவனிக்கிறியாமே...தெருவே உன்னைப் பத்திதான் பேச்சு!” என்றாள் எதிர் வீட்டுப் பெண்.

“ஆமாண்டி, நீ மட்டும் சொல்லலை... ஒரு லட்சம் கோட்டைதான்!” வளர்மதி பதட்டமாய் சொல்லவும், நடேசனின் அவையம் ஒடுங்கியது. கதவோரத்தில் நின்று கொண்டார்.

“நூறு வயசுக்கும் மேலே வயசானவங்களை கவனிச்சுப் பார்த்தோம்னா கவர்ன் மெண்ட்லே ஒரு லட்சம் கொடுக்கிறதா தெரிஞ்சதுக்கு அப்புறம் அவரை நான் ரொம்ப கவனிச்சுப் பார்த்துக் கிட்டேன்....”

அவள் மேலே தொடரும் முன்... கதவோரத்தில் யாரோ விழும் சத்தம்!

இருவரும் சத்தம் கேட்டு ஓட....நடேசன் விழுந்து கிடந்தார்...! பிணமாய்! 1.2.2012

7. ஆடை பாதி

பசங்க செய்றதை நாம ரசிக்கிறதா? கண்டிக்கிறதா? அந்த ஆள் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்? தெருவில எத்தனை வயசுப் பையன்கள் போறானுங்க?’ சுந்தரேசன் மணி பார்த்தான். 8.30. ஜன்னல் திரையை விலக்கி எதிர் வீட்டை எட்டிப் பார்த்தான். ’உடையழகி’ மோனிகா கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.’யூஸ் மீ’ என ஆங்கிலத்தில் எழுதியிருந்த பனியன் அணிந்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்திருந்தாள் ! தலை முடியை தோள் வரை விட்டு பறக்க விட்டிருந்தாள் . உதடுகள் லிப்ஸ்டிக் அணிந்திருந்தன.

“போதும் பார்த்தது! வீட்ல வயசுப் பையன் ஒருத்தன் இருக்கான்..!” மனைவி தேவி தோளைப் பிடித்து உலுக்கினாள்.”சே! நானும் ரெண்டு வயசுப் பசங்களுக்கு தகப்பன்... எதிர் வீட்டுக் காரனும் ஒரு வயசுப் பெண்ணுக்குத் தகப்பன்! ரோட்ல பசங்க போய்க்கிட்டிருக்காங்க...கொஞ்சம் கூட இங்கிதமில்லாம அந்தப் பெண் சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கா...”

“யாரோ எப்படியோ போறாங்க! ஆபீசுக்கு நேரமாச்சு! நீங்க கிளம்புங்க...” மனைவி அதட்டவும்

சுந்தரேசன் சுறு சுறுப்பானான்.

அழைப்பு மணி ஒலித்தது! கதவு திறந்தான், சுந்தரேசனின் புதல்வன் ரகு. ’உடையழகி’!

“எக்ஸ்கியுஸ், சார். உங்க செந்தா கிட்ட சயின்ஸ் கால்குலேட்டர் இருக்கா?” செந்தா என்பவள் இவர்களின் தவப் புதல்வி.

“அதெல்லாம் இல்லை!” என அவசரமாய் மறுத்தாள் தேவி. “சரி. நான் வரேன் ஆண்ட்டி!” படியி றங்கியவளை பார்த்தவாறே நின்றான் மகன்.

“ரகு, வெந்நீர் போட்ருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு!” தேவி மகனை திசை திருப்பினாள்.

“ஏம்மா, சயின்ஸ் கால்குலேட்டர்தான் எங்கிட்டே இருக்கே. உங்களுக்கும் தெரியும்!” ரகு சொல்லவும் அவனை முறைத்தாள்.”இப்போ கால்குலேட்டர்! அப்புறம்...!?”

“ஏம்மா, உங்களுக்கு சாதாரண எண்ணமே இருக்காதா?”

“சரி, இப்போ ஏன் நேரத்தை வீனாக்குறே? அந்தப் பெண் சரியில்லாதவ...!”

“அம்மா...! அவ எந்த டிரெஸ் போட்டா நமக்கென்ன? பக்கத்து வீடு! ஒரு சின்ன உதவி கூட செய்யலைன்னா நாமெல்லாம் என்ன மனுசங்க?” ரகு பட படத்தான்.

“இதப் பார் ரகு, நம்ம வீட்லயும் செந்தாமரை இருக்கா! அடுத்தவங்களோட பேசிப் பார்த்திருக்கியா?

இந்தக் காலத்திலேயும் சுடிதார், புடவைன்னு எத்தனை அடக்கம்! அவளைப் பார்த்தா பசங்க ஒதுங்கிப் போவாங்க ..!” மகளை ஏகத்துக்கு புகழ்ந்தாள்.

ரகு எந்த பதிலும் சொல்லாது குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

தேவியும், அவள் கணவனும் வீட்டை மாற்றி விடலாமா என்று கூட யோசித்தார்கள். பிறகு புதிதாய் வீடு பிடிக்கும் சிரமத்தை நினைந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள். இரண்டு வாரம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சென்றது. மோனி அவர்கள் வீட்டுப் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை! அன்று... கல்லூரிக்கு ப்போன செந்தாமரை திரும்பி வரவில்லை! வீடே தவித்தது...! எப்போதும் ஆறு மணிக்குள் திரும்பும் செந்தாவைக் காணவில்லை! அவள் தோழியருக்கு போன் செய்து கேட்டால், ஒருவரும் சரியான தகவல் கொடுக்காமல் மழுப்பினார்கள். என்னவோ நட ந்திருக்கிறது! காவல் துறைக்கு தகவல் கொடுத்தால், எல்லோருக்கும் தெரிந்து விடும்! குடும்ப மானம் போகும்! அவளது செல் போனுக்கு தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆப் என்றே வருகிறது! குடும்பத்தினர் மூன்று பேரும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு, நகம் கடித்தார்கள். அப்போது அழைப்பு மணி அழைக்கவும், ரகு கதவு திறந்தான். மோனி நின்றிருந்தாள்! ‘இந்த நேரத்தில இவ எதுக்கு வந்தா!?’

“உங்க கிட்டே செந்தாவைப் பத்தி பேசலாமா?” குரலைச் செறுமியபடி கேட்டாள். அனைவரும் ஒருவரை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்!

“நீங்க நினைக்கிற மாதிரி செந்தா, எந்த பிரண்ட் வீட்டுக்கும் போகலை. அவ கல்யாணம் பண்ணிக்கிட்டா!”

எல்லோரும் எழுந்தே விட்டார்கள!.

“என்னோட ப்ரண்ட்டோட அக்கா செந்தாவோட காலேஜ்லேதான் படிக்கிறா. செந்தாவுக்கும், ராம்ங் கிற பையனுக்கும் ரொம்ப நாளா நெருக்கம்..”

“ இதை ஏம்மா இத்தனை நாளா எங்க கிட்டே சொல்லலை!?” சுந்த ரேசன்தான் வாய் திறந்தான்.

“அதைச் சொல்றதுக்காகத்தான் ஒரு நாள் இல்லே, ரெண்டு நாள்... உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க என்னை சரியாவே ட்ரீட் பண்ணலை! கால்குலேட்டர் வாங்க வந்த போது, ஆண்ட்டி... நீங்க ரகு கிட்ட சொன்னது, எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு...!”

நிறுத்தி, பெருமூச்சு விட்டாள்! அனைவரும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.”நீங்க எல்லோரும், ஏன்! இந்த தெருவிலே உள்ளவங்க அத்தனை பேருமே என்னை ‘ஒரு மாதிரியானவ’ங்கிற பார்வையிலேதான் பார்த்துக் கிட்டிருக்கீங்க! நான் ஏன் இது மாதிரியான ட்ரெஸ் போடறேன்னு சொல்லிடறேன்! என்னோட அக்கா காலேஜிலே படிக்கும் போது செந்தா மாதிரியே ரொம்ப அடக்கமான பொண்ணா இருப்பா...இது மாதிரி பொண்ணுங்களைக் கண்டா பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னை மாதிரி டிரெஸ் போட்டிருக்கவங்க பசங்களுக்கும், பொதுவா எல்லாருக்குமே அடங்காதவ ன்னு நினைப்பு! எங்க அக்காவையும் ஒரு பையன் விரும்பி அவளை நாங்க இழந்துட்டோம்! நீங்களும் அந்த துயரத்தை அடையக் கூடாதுன்னு தான் நான் வார்ன் பண்ண வந்தேன். என்னோட டிரெஸ், பசங்களைக் கவர இல்லை ஆண்ட்டி! பசங்க என்னை வெறுக்கத்தான்!” அமைதியாகச் சொன்னவளை எழுந்து வந்து கட்டிக் கொண்டாள் தேவி! 1.2.2012

8. காணவில்லை!

முதலில் மாமரத்தில் உட்கார்ந்திருந்த காகம் அந்தக் கூரை வீட்டின் மேல் உட்கார்ந்தது. பிறகு வேப்ப மரத்தின் கிளையில் உட்கார்ந்து வேப்பம் பழங்களைத் தின்னத் துவங்கிய போது...கூரை வீட்டிலிருந்த பையன் காகத்தை கல்லால் வீச காகம் பறந்து போய், கூப்பிடு தூரத்திலிருந்த தகரக் கொட்டகை மேல் உட்கார்ந்தது. மதியம் நல்ல வெயில். அவ்வளவாய் காகங்கள் வெளியில் கிளம்பாத நேரம்.

‘அடுத்த இலக்கு எங்கே?’ என சிந்திக்கும் ஆற்றல் இல்லாததால் சும்மாவேனும் இறகைக் கொத்திக் கொண்டிருந்தது. கண்கள் எதேச்சையாக கீழே நோக்கும் போது கொட்டகையில் இருந்த சிறிய ஓட்டையின் வழியே....‘அது என்ன?’ காக்கையின் கண்கள் விரிந்தது. மறு வினாடியே யோசிக்காமல் ‘சர்’ரெனப் பறந்து கீழே இறங்கியது. தத்தித் தத்தி மெதுவே நடந்தது. கூடவே ஜாக்கிரதை உணர்வு எச்சரிக்க....அடடா..! திடீரென வந்த உழவு இயந்திரத்தின் ஓசை காகத்தை மேல் நோக்கி சரேலென பறக்க வைத்தது! இருந்தாலும் இலக்கின் மேல் வைத்த குறியை மறக்கவில்லை. பொறுமை காத்தது.

இயந்திரத்தை ஓட்டி வந்தவன் சிறிது நேரம் அதனை உரும விட்டு என்னவோ செய்தான். பிறகு யாரையோ அழைத்தவாறு வெளியில் சென்றான். காகம் வந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது சத்தமிடாமல் கீழே இறங்கி...கொட்டகையின் தென் மேற்கு திசையில் மூங்கில் கூடையருகே இருந்த கிழிந்த சாக்குச் சுருளில், அந்த கொட்டகைக்குச் சொந்தக்காரனின் நாட்டுக் கோழி முதல் முதலாய் இட்ட முட்டையை, ‘லபக்’கென கொத்திக் கொண்டு ஒரே வீச்சில் பறந்து கூரையின் மேல் உட்கார்ந்தது! சில வினாடிகளிலேயே முட்டையிலிருந்த தைலம் முழுவதும் காகத்தின் வயிற்றுள் இறங்க...காகம் கா.. கா வெனக் கத்திக் கொண்டே பறந்தோடியது!

அந்த வீட்டுப் பெண் அப்போதுதான் வெளியில் போய் விட்டுத் திரும்பி இருந்தாள். முட்டையிட்ட கோழி கொக்கரிப்பதைப் பார்த்து, “ஏ... சனியனே! இப்ப எதுக்குக் கத்துறே?” ஒரு குச்சியை எடுத்து விரட்ட கோழி இன்னும் சத்தமாய்க் கத்தியவாறு ஓடியது.

“அடி ஏண்டி அதை வெரட்றே? முட்டை இட்ருக்கும் போய்ப் பாரு!” மாமியார் மருமகளை விரட்டினாள்.

“எங்க இட்டுச்சு?”

“கொட்டாயிப் பக்கமிருந்துதான் ஓடியாந்துச்சு!”

மருமகள் கொட்டகையின் உள்ளே சென்று சாமான்கள் இருந்த பகுதியில், மூங்கில் கூடையில் முட்டையைத் தேடினாள்.

“இங்க காணுமே அத்தே...”

“காணுமா? அப்பிடின்னா அடுத்த வீட்டுக்காரியக் கேளு!”

“ஆமா..அந்தப் பொம்பிளை சண்டைக்கு வந்துரும்!” சொல்லியவாறே மூங்கில் கூடையை அருகிலிருந்த முறத்தால் முக்கால் வாசி மூடினாள்.

“கூடைய மூடி வச்சிட்டு வந்துட்டேன். நாளைக்கு முட்டை இட்டா பாத்துக்குவோம்!” மாமியாரின் பதிலை எதிர் பாராமல் வீட்டினுள் சென்றாள்.

மறுநாள் காகம் அதே நேரத்திற்கு கொட்டகையின் அதே இடத்தில், ஓசையின்றி வந்து உட்கார்ந்து கொண்டது! கோழி கிழிந்த சாக்கில் முட்டையிட்டு ஓடியதும் இறங்கிப் போய் ஈர முட்டையை அலகால் தூக்கிக் கொண்டு வந்து ஓட்டை போட்டுக் குடித்தது! உடனே பறந்தும் போனது! முட்டையிட்ட கோழி வழக்கம் போல் கொக்கரித்துக் கொண்டு ஓட மருமகள் வெளியில் வந்தாள். ஓடிப்போய் மூங்கில் கூடையைப் பார்த்தாள். அடி வயிறு பகீரென்றது!

“அடிப்பாவி!” தன்னையுமறியாமல் சத்தமாய்ச் சொல்ல...அது மாமியாரின் காதில் விழுந்து வைத்தது!

“என்ன இன்னைக்கும் எடுத்துப்புட்டாளா?”

மருமகள் பேசாமல் நின்றாள்.

அவளை எதிர் பாராமல் அடுத்த வீட்டுப் பெண்ணைத் திட்ட ஆரம்பித்தாள்.

அடுத்த வீட்டுப் பெண் தன்னைத் திட்டுவது தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியில் வந்து கிழவியின் பேச்சை உற்றுக் கேட்டாள்.

“இங்க பாரு கிளவி...எங்கொப்புரானே! உங்க முட்டைய நா எடுக்கலே...!” அடி வயிறு துடிக்க சத்தம் போட்டாள்.

“நீ எடுக்காமே யாரு எடுத்தது? கொட்டாயிக்கி அங்கிட்டாலேப் போயி பாருடி...முட்ட ஓடாக் கிடக்கு!”

“அடி...கிடின்னு பேசிக்கிட்டிருக்காதே...நாக்கு பிஞ்சிரும். நீ பொரிச்சுத் தின்னுட்டு என்னைய சொல்றியா?”

“இந்தப் பயலுக் கிட்ட செவரு வைடான்னு சொல்றேன். கேக்க மாட்டேங்கிறானே!” மகனை நொந்து கொண்டாள்.

“நீ என்ன சொல்றது? நானே வைக்கச் சொல்றேன்! உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு! மாங்காய அறுத்துப் புட்டேன்.. தேங்காயப் பறிச்சுப் புட்டேன்னு எப்பொ பாத்தாலும் இதே பொழப்பாப் போச்சு!”

மாங்காயையும் தேங்காயையும் அவள்தான் திருடுவாள்! ஆனால் இப்போது முட்டை போன இடம் நமக்குத் தெரியும்! அவர்களுக்குத் தெரியாதே! சுவர் வைக்கிறேன் என்பதெல்லாம் சும்மா பாவனை.

“இப்பிடி வாங்கத்தே...” மருமகள் கிழவியை அழைத்ததும் இருவரும் வீட்டினுள் வந்தார்கள்.

“நீங்க பேசாம இருங்க. நாம் போயி சின்னத்தம்பி மாமா கிட்ட குறி கேட்டுட்டு வாரேன்! அவரு உண்மையச் சொல்லிப்பிடுவாரு! விடியக் காலம்பற வரைக்கும் கொஞ்சம் மௌனமா இருப்போம்!” கிழவிக்கும் அதுதான் சரியெனப் பட்டது.

மறுநாள் குறி கேட்டு விட்டு வந்தவள் நேரே மாமியாரிடம் ஓடிவந்தாள்.

“அவரு ரெண்டு காலு ஜீவன் தான் தூக்கினதுங்கிறாரு! இன்னம் ஏழு நாளைக்குள்ளாற தெரிஞ்சிருமாம்!’

“நல்லா மாட்னியா... மவளே! இருடி ஒன்னைய கவனிச்சுக்கிறேன்.” கருவிய படி உள்ளே போனாள்,மாமியார்.

மறுநாள் மாமியாரும் மருமகளும் முட்டையிடும் நேரத்தை ஓரளவு கணக்கிட்டு கொட்டகையின் ஓரம் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். வெகு நேரம் காத்திருந்தும் கோழி வரவில்லை. மருமகள் வேலையாய் வீட்டிற்குள் செல்ல மாமியாருக்கு கண் அயர்ந்தது. அந்த நேரம் பார்த்து கோழி முட்டை இட்டு கொக்கரித்தபடி ஓட....கூரையின் மேல் காத்திருந்த காகம் முட்டையை கண் இமைக்கும் நேரத்தில் கொத்திக் கொண்டு பறந்து போய் அடுத்த வீட்டின் மேல் வைத்து குடித்தது. யார் கண்ணிலும் படாமல்!

திடீரென விழிப்பு வந்ததும், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். மூங்கில் கூடையைப் பார்த்து விட்டு வெளியில் வந்து....கொட்டகையின் சந்துப் பகுதியில் நடந்தாள். இரண்டு முட்டை ஓடுகளே கிடந்தன.

கிழவி இன்னும் பொறுமை காத்தாள். அடுத்தநாள், அதற்கடுத்த நாள் என கோழி கொக்கரிக்க மாமியாரும் மருமகளும் முட்டையைக் காணாது தவித்தார்கள். காரணம், கோழி நேரத்தை மாற்றி முட்டையிட ஆரம்பித்தது. முட்டை ஓடுகளையும் காணவில்லை. ஆகையால் அடுத்த வீட்டுக் காரியிடமும் சண்டை போட முடியவில்லை! ஆறு நாட்கள் கழித்து ஏழாம் நாள்! கோழியைப் பிடித்து கூடைக்குள் போட்டு அதன் மேல் முறத்தை எடுத்தது வைத்து விட்டு வெளியில் வந்து காத்திருந்தார்கள்.

கோழி முட்டையிட, காத்திருந்த காகம் பறந்து வந்தது... முறத்தைத் தட்டி விட்டு முட்டையைக் கௌவிக் கொண்டு போன போது மருமகள் விரட்டியடித்தாள். காகம் நிலை குலைந்து முட்டையைத் தவற விட்டது! முட்டை நடு வாசலில் விழுந்து உடைந்தது... மருமகள் அவசர அவசரமாய் அடுத்த வீட்டுக்காரி ‘பார்க்கிறா ளா’? எனப் பார்த்தாள். இருவரும் வீட்டினுள் சென்று காகத்தின் ‘திருட்டுத்தன’த்தை சத்தம் போடாமல்தான் பேச முடிந்தது! 12.1.2012

9. சாதி சனம்

‘சோதி’ங்கிற எங்க அத்தெ மவ என்னையே தான் கட்டிக்குவேன்னு ஒத்தக் கால்லே நிக்குறா...! ஆனாக்க எனக்கு’ பரிமளத்தைத் தானே பிடிக்கிது!’ ‘பரிமளம்ங்கிறது யாரு?! உன்னோட மாமா

பொண்ணா!” ‘ இல்லைங்க!’ ‘பின்னே?! சொல்லு...’

‘நாஞ் சொல்லப் போனா எங்கதய முழுசும் சொல்லணும்! கேக்கிறீங்களா?’

‘சொல்லு...சொல்லு..’

ம்...பொறுங்க, மனசுக்குள்ளே ரீவைண்டு பண்ணிக் கிட்டிருக்கேன்...’

‘.............................’

‘பண்ணிட்டேன்! ம்க்கும்! நா பன்னெண்டு வயசுலே எங்கம்மா பொரி உருண்டை வாங்க காசு குடுக்கலைன்னு எங்க ஊர்லேர்ந்து சென்னைக்கிப் போற தேங்கா லாரி இருக்குன்னே அதிலே தெரியாம ஏறிட்டேன்! எடையிலே எங்கயாச்சும் எறங்கிருவோம்னு தான் ஏறுனேன்! தூங்கிட்டேன்! பொறவு என்ன? லாரி தேங்கா கடையிலேயே என்னையே எறக்கி விட்ருச்சு. கடை முதலாளி என்னைய மெரட்டினாரு! நா கொஞ்சம் பயந்தேன்! ஆனா அசங்கலை! அவருக்கு அதே ரொம்ப பிடிச்சுப் போச்சு!

‘என்ன படிச்சிருக்கே?’ ன்னாரு.

என்னமோ பெரிய பி.ஏ, எம்.ஏ கணக்கா ‘மூணாப்பு’ன்னேன். சிரிச்சாரு. ‘எங்க கடையிலே வேலை செய்றி யா?’ன்னாரு, ‘சரி’ ன்னேன்! ஆரம்பத்துல எல்லாம் எடு பிடியாத்தான் இருந்தேன்... கொஞ்ச நாள்ல எம் மனக் கனக்கைப் பாத்துட்டு ‘பய சரியான ஆளுதான்...!’ அப்பிடின்னு நெனைச்சு, பொறுப்பெ கொஞ்சங் கொஞ்சமா குடுத்தாரு.. நானும் அவுரு கணக்குப் போட்டதை விடவும் நல்லாவே போட்டேன்னு வையிங்களேன்!

கொஞ்ச நாள்ல கடைதான் நான், நான்தான் கடையின்னு ஆனப்போ எங்கூர்க் காரரு ஒத்தர் என்னைய பாத்துப் பிட்டார்! ஊருல போயிச் சொல்லிப் பிட்டார்! பொறவு... சம்பாரிச்சா போதுமே...! கழுதை, காக்கான்னு வந்து ஒட்டிக்கிட்டு உறவாடி... ஆயி, அப்பனேல்லாம் பணம் கேட்டு வர குடுத்து அனுப்புனேன். ஊருக் கெல்லாம் போயிட்டு வருவேன்! சென்னைக்கி வார ஊர்ப்பயளுக எல்லாரும் வாஞ்சையா கடன் கேட்டு ‘இந்தாத் தாறேன்’னிட்டு போவானுவ! திரும்ப மாட்டானுவ! தொலையிராணுவன்னு நானும் விட்ருவேன்! நமக்கு ஒத்தர், உதவுனதால தானே நாம இந்த நிலமையிலே இருக்கோம்னு பெரும் போக்காப் போயிருவேன்!

எனக்கு இருவது வயசாகும் போது, முதலாளி, ‘நீ சொந்தமா யாவாரம் பண்ணு’ன்னப்போ எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை! ‘இப்பிடியெல்லாம் மனுஷன் இருப்பாரா?!’ ன்னு அன்னைக்கு முழுசும் தூங்கலை! ரெண்டு தெரு தள்ளி சொந்தமா கடை புடுச்சுக் குடுத்து, அவுரு குடுக்குற தேங்காயை சில்லறை யாவாரம் பண்ணேன். இது எப்பிடியோ ஊருல இருக்க எங்கத்தே மவளுக்குத் தெரிஞ்சு என்னையேத் தான் கட்டிக்கிவேன்னு ஒத்தக் கால்லே நிக்கிறா! ஆனாக்க எனக்கு, அவளைப் புடிக்கலை! ஏன்னு கேட்டா, எங்காசப் பாத்துத் தானே வர்றா...பரிமளம்ங்கிறது அனாதைப் புள்ளை! ஆயி, அப்பன் இல்லாதது! மனுஷங்களோட அருமை அதுக்குத்தான் தெரியும்! எங்க முதலாளி,பொறந்த நாளுக்கு அனாதைப் புள்ளைங்களுக்கு சட்டைத் துணி எல்லாம் வச்சுக் குடுப்பாரு! அப்போ வச்சுப் பாத்தது தான் பரிமளத்தை! அந்தப் புள்ளை ஆசிரமத்திலேயே இருந்து எல்லாருக்கும் உதவுறேன்னு சொல்லிருச்சாம்!

அந்த ஆசிரமத்த நடத்துன அம்மா சொன்னாங்க! அப்புறம் பரிமளத்துக் கிட்டே எடுத்து சொல்லச் சொன்னேன்! சொன்னாங்களாம்! அப்பவே முடிவு பண்ணேன் ‘சாதி, சனமுன்னு இருக்குற நாம யாருமே இல்லாதவங்களத் தான் கலியாணம் கட்டணும்!’ முதலாளிக் கிட்டே சொன்னப்போ என்னை தட்டிக் குடுத்தாரு...

எங்க முதலாளி, ‘என்னைய விட நீ மேலே போயிட்டேடா!’ன்னாரு. என்ன எம் முடிவு சரிதானே...! அப்ப சோதி யோட நெலமை என்னங்கிறீங்களா? அவளுக்கு ஊர்க் காட்லையே மாப்ள கிடைப்பான்! மனுசனாப் பொறந்தா தான தருமம் செய்றேன்னுட்டு, பெரிசா பேப்பர்லேயும், பேனர்லேயும் விளம்பரம் பண்றதை விட

இப்பிடிப் பண்றதும் தர்மம் தானே! 1.2.2012

9. சத்தம்

எனக்குப் பிடிக்காததை நான் பிறரிடம் திணிப்பதில்லை. பிறர் என்னிடம் திணிப்பதையும் நான் விரும்புவதில்லை. குழப்புகிறேனா? நேரடியாகவே வருகிறேன். எனக்கு இரைச்சலே பிடிக்காது. அதாவது சத்தம்!

சிறு வயதிலிருந்து என் பெற்றோருக்கு சத்தத்திலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வருவதே பெரிய வேலை.(வேதனை!) இதில் சுவாரஸ்யமான அனுபவங்களும் உண்டு. சோகமான அனுபவங்களும் உண்டு, அது என்னவோ நினைவு தெரிந்த நாளிலிருந்து சத்தம் என்றாலே அப்படி வெறுப்பு!

எட்டாம் வகுப்பு படிக்கும் வயதில் என் அம்மாவுடன் ஒரு பேருந்து பயணத்தின் போது... நடத்துனர் எதார்த்தமாய் என்னருகில் நின்று விசிலை காது ஜவ்வு கிழிவது போல் ஊத, அவர் முதுகில் ‘பளாரெ’ன ஒன்று வைத்தேன்! மனிதர் துடித்துப் போய்விட்டார்! மறுபடியும் ஜவ்வு கிழிய அவர் கொடுத்த ஒற்றை விசிலில், ஓட்டுனர் திடீரென பேருந்தை நிறுத்த...உள்ளேயிருந்தவர்கள் கண்ட மேனிக்கு விழுந்து புரண்டார்கள். என்னை நாடு கடத்துவது போல் பிடித்து வெளியே தள்ளினார், நடத்துனர்! கூடவே என் அம்மாவும்!

பேருந்து நிறுத்தத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடியே நாங்கள் இறங்க வேண்டிய கட்டாயம்!

“என்னடா நடந்துச்சு?” அம்மா அவமானம் தாங்க முடியாமல் கேட்டாள்.

விசில் ஊதியதைச் சொன்னேன்.பிறகு என்ன, ஒரே புத்திமதிதான்! (அம்மா ஆசிரியை!) நாம் பிறந்தது இந்தியாவுல... என மக்கள் தொகைக் கணக்கைச் சொல்லி, சகிப்புத் தன்மை... சகோதரத்துவம் என்று ‘சமூகவியல்’ பாடம் நடத்தியவாறு, ஒரு கி. மீ தூரம் வேகாத வெய்யிலில் என்னுடன் நடந்தாள்.

பிறகு பத்தாம் வகுப்பு படித்த போது...எங்கள் வீட்டெதிரே சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. சத்தம் தாங்க முடியாமல்...கோபம் தலைக்கேற,

அவர்கள் அடித்த மேளத்தை நான் அடித்தேன்! புரியவில்லையா? நான், மேளத்தைக் கல்லால் அடித்தேன்!

அது மேளத்தைப் பிய்த்துக் கொண்டு போய், எதிர் வீட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆறு வயது பப்லுவின் மண்டையைப் பதம் பார்க்க... என் பெற்றோருக்கு சில ஆயிரங்கள் செலவானது!

“உங்க பையனைக் கீழ்ப்பாக்கம் கொண்டு போய் ட்ரீட்மென்ட் எடுங்க சார்!”

‘இப்படி ஒரு பிள்ளை தேவைதானா?”

“நானா இருந்தா கொன்னே போட்ருவேன்!”

என்னுடைய ‘தனித்துவம்’ புரியாதவர்கள் என்னென்னவோ விமர்சித்தார்கள். அம்மா உண்மையாகவே என்னை மனோதத்துவ மருத்துவரிடம் காண்பித்தாள்.

‘இதெல்லாம் சின்ன வயசுக் கோளாறு...நாளானா சரியாயிடும்!’ ஆறுதல் சொல்லி மாத்திரைகளைக் கிறுக்கிக் கொடுத்தார்.

என்ன சொல்லி என்ன...வயது ஏற ஏற எனக்கு சத்தத்தின் மேல் வெறுப்பு அதிகமானதே தவிர விருப்பு வரவே இல்லை!

அப்பா பணி நிமித்தம் வீடு மாற்றம் செய்யும் போதெல்லாம், தெருவின் உட்புறமாய் வீடு இருப்பது போலவே பார்த்தார்! அதாவது சைக்கிள் சத்தம் மட்டுமே கேட்கும் தெருவாக அது இருக்கும். எங்கள் வசதிக்கு இது போன்ற ‘ஏரியா’ மரியாதைக் குறைவாம்!

என் மாமா என்னிடம் சொன்ன போது, ’மாமா,உங்களுக்கு ரெண்டு நாள் தொடர்ந்து அசைவம் சாப்பிடலைன்னா என்னாகும்?’ என்றேன். ‘அடேங்கப்பா! பைத்தியமே பிடிச்சுடும்!’ என்றார்.

‘அது மாதிரிதான் எனக்கு சத்தமும்!’ சத்தமில்லாமல் சொன்னதும், சத்தம் போடப் போன வரை அம்மா அவள் வாய் பொத்தி அனுப்பி வைத்தாள். இப்படியாக ‘சத்தம்’ என்னை சமூகத்தின் பார்வையில் விலக்கியே வைத்திருந்தது! எனக்கு நண்பர்களே இல்லை, என பெரிய வருத்தம் என் அம்மாவுக்கு!

‘இதற்கு ஒரு முடிவே இல்லையா’... என அம்மா வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் புலம்புவாள்.

நான் கண்டு கொள்வதே இல்லை! ஒரு நாள் அப்பா சந்தோஷமாய் வந்தார். ’என்ன!’ என எனக்கும் அம்மாவுக்கும் ஒரே ஆவல்... ‘நாம எல்லாரும் நார்த் இண்டியா டூர் போகப் போறோம்’ என்றார். எனக்கும் சந்தோஷமாய் இருந்தது. அம்மா இரண்டு வார சுற்றுலாவுக்கு ஒரு மாத சாமான்களை கட்டி வைத்தாள். எத்தனை குறைத்தும் நான்கு பெட்டிகளும், இரண்டு பெரிய கைப்பைகளும் அடக்கம்! சுற்றுலா எங்கே எனச் சொல்லவில்லையே... இமயமலை அடிவாரம் என ஏதோ சொன்னார். சரி, எங்கேயோ இந்த சத்தமில்லா இடத்தை விட்டு ஒரு புதிய உலகைக் காணும் சந்தோஷத்தில், கனவில் மூழ்கினேன். என்ன இருந்தாலும் நான் நடுத்தரக் குடும்பம் அல்லவா? கனவு வேறு, நனவு வேறாகத்தான் முடிவு இருக்கும். பார்க்கலாம்...

முதலில் டெல்லி வரை விமானத்தில் சென்றோம். பிறகு அங்கிருந்து ரயில் பிரயாணம்... காசி, கயா என சென்றோம்! இறுதியில் ஹரித்வார்! ஆஹா.. என்னே அற்புதம்... உண்மையிலேயே இந்தியாவில் பிறந்ததற்காய் நான் பெருமிதம் கொண்டேன்! அத்தனை அற்புதமான இடம்! ஆனால் ஏதோ ஒன்று.. அது என்ன? ஆமாம்... நிசப்தம்! எனக்குள் என்னவோ செய்தது. சத்தமில்லா உலகமும் உண்டா?

காலை எழுந்தவுடன், என் காதை அடைப்பது போல் ஒரு பிரமை! என்னால் சத்தமின்றி இருக்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் பால்கனியில் நின்று, எதிரே இருந்த மலையைப் பார்த்து முடிந்த மட்டும் அடி வயிற்றிலிருந்து ஒலி எழுப்பினேன்! அது திரும்பவும் நான் சொன்னதையே சொன்னது. அம்மாவும், அப்பாவும் ஓடி வந்து பார்த்து ஆச்சர்யப் பட்டார்கள். ‘அப்பா, எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு!’ இரண்டு கைகளையும் உலுக்கிச் சொன்னேன்.அப்பா புரிந்து கொண்டார்! உடனே ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். இப்போதெல்லாம் சத்தமின்றி என்னால் இயங்கவே முடியவில்லையே... சொல்ல மறந்து விட்டேன்! நான் கல்லூரி சென்று, எனக்கென நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டேன்!

ஞாயிற்றுக் கிழமை என்றாலே எங்கள் வீட்டில் நண்பர்கள் கொண்டாட்டம்தான்!

‘என்னால தாங்க முடியலை...’ அம்மா இப்போதெல்லாம் காதைப் பொத்திக் கொள்கிறாள்.அடடா..! சொல்ல மறந்து விட்டேனே! இப்போது நாங்கள் வசிப்பது, ஒரு பெரிய பள்ளியின் அருகில் எப்போதும் சத்தமாய்...!

29.12.2012

10. சுதேசி

ராஜேஸ்வரிக்கு நீண்ட நெடு நாளைய ஆசை...சொந்தக் காசில் ஒரு புடவையாவது வாங்க வேண்டுமென்று! புடவை எடுக்க எப்போது காசை சேமித்து வைத்தாலும் அதற்கு ஏதாவது ஒரு வகையில் செலவு வந்து விடுகிறது. அவளிடம் நெருங்கிப் பழகுபவர்கள் இவளை புடவை விஷயத்தில் ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். எல்லோரும் வருடத்திற்கு குறைந்தது இரண்டு புடவைகளாவது சொந்தமாய் எடுத்து விடுகிறார்கள். விஷேச வீடுகளில் பெண்கள் புடவைகளின் ரசனை பற்றிப் பேசும் போது ராஜேஸ்வரி வெறுமனே அவர்களது வாயைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

சுமாரான வசதிதான் அவளது குடும்பம். பிறந்த வீடும் நடுத்தரக் கீழ்த்தட்டுதான்! உறவினர்களின் திருமணத்திற்கு வைத்துக் கொடுக்கும் புடவை, கருமாதிப் புடவை, அப்புறம் சொந்தக்காரர்களில் சிலர் வெளிநாடுகளிலிருந்து வரும்போது கொண்டு வந்து கொடுக்கும் புடவை என அவள் வைத்திருக்கும் ஒவ்வொரு புடவைக்கும் ஒரு கதையுண்டு!

ராஜேஸ்வரியின் கணவன் முத்துவேல், அவளைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை! வருமானமும் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்துக்கே செலவாகி விடுகிறது. அப்புறம் சொந்தக்காரர்களின் விசேஷம்.. நடவு, களையெடுப்பு என வரவை மீறும் செலவு. இருவரும் பிள்ளைகளுக்கு மட்டும் பிறந்த நாள், தீபாவளி என உடைகள் எடுத்து அழகு பார்ப்பதோடு சரி!

நேற்று ராஜேஸ்வரி வழக்கம் போல் மளிகைக் கடைக்குப் போய் விட்டுத் திரும்பும் போது, கடை வாசலில் அந்த சிறிய ரக மோட்டார் சைக்கிள் அவளை ஈர்த்தது. அப்படியென்ன அதில்? வித விதமான புடவைகள் சுமார் மூன்றடி உயரத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது! “புடவை வேனுமாம்மா?” கடைக்குள்ளிருந்து குரல் கேட்கவும் ராஜேஸ்வரி பயந்தது போல், ”அதெல்லாம் ஒண்ணும் வேணாம்!” சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். கண்கள் என்னவோ புடவையை விட்டு அகல மறுத்தது! புடவைக் காரனுக்கு பெண்களின் நாடி தெரியாதா என்ன?

கடையை விட்டு வெளியில் வந்தான். மோட்டார் சைக்கிளுக்கும் முன்னாள் போய்க் கொண்டிருந்தவளின் பின்னே மோ. சைக்கிளை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

“உங்க வீடு எங்கேம்மா இருக்கு?” அவள் அருகில் சென்றபடி கேட்டுக் கொண்டே வந்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாய்யா...!” புடவைக் காரனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னாள். புடவைக்காரன் விடுவானா? அவளின் வேக நடைக்கு ஈடு கொடுத்து வீடு செல்லும் வரை பின்னாலேயே சென்று வீட்டை அடைந்தான்.

முத்துவேல் அப்போதுதான் வயலிலிருந்து திரும்பி இருந்தான்.

“என்னய்யா வேணும்?” அதட்டினார் போலக் கேட்கவும் கொஞ்சம் தயங்கியது போல்

“சும்மா... புடவை...” என இழுத்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! ராஜேஸ்வரி, இங்கே வா.” அதற்குள் ராஜேஸ்வரி வீட்டின் பின் பக்கமாய்ப் போயிருந்தாள்.

“ராஜேஸ்வரி...கொஞ்சம் வந்துட்டுப் போயேன்!” முத்துவேல் முன்பு அழைத்ததே அவளுக்குக் கேட்டது. பயந்து போய் விழாதது போல் இருந்தாள். இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை.

“இந்தா வந்துட்டேங்க...” மூச்சிரைக்க வந்து அவனெதிரே நின்றாள்.

“புடவை விக்கிறவரை நீ கூப்ட்டியா?” அவனது குரலில் கோபம்.

“அந்தம்மா கூப்பிடலைங்க...நான்தான் கூப்பிட்டேன்!” புடவைக்காரன் நிலைமை உணர்ந்து ஆஜரானான்.

“எங்க வீட்ல புடவை எடுக்கிற நிலைமைல இப்போ நாங்க இல்லய்யா...”

‘அப்புறம் எப்போ இருந்துச்சு!’ ராஜேஸ்வரி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“சரிங்கய்யா...கொஞ்சம் தண்ணி குடுங்கம்மா...!”

“தண்ணி குடு ராஜேஸ்வரி..”

தண்ணீர் கொண்டு வர அவள் உள்ளே போனதும்...புடவைக்காரன் மெல்ல முத்துவேலுவிடம் பேச்சுக் கொடுத்தான். விவசாயம், மின்சாரப் பற்றாக்குறை என ஆரம்பித்து தன்னுடைய வியாபாரத்தில் வந்து நிற்கும்போது முத்துவேல் அவனுடன் நெருங்கியிருந்தான்.

“சும்மா புடவையை பாக்கச் சொல்லுங்கய்யா..” அமைதியாய்ச் சொல்லி விட்டு புடவைக் கட்டைத் தூக்கி திண்ணையில் போட்டான். பக்கத்து வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடி வந்தார்கள். பிரித்துப் போட்ட புடவைகளைப் பார்த்து விட்டு அவர்கள் வீட்டிற்கு ஓட...பத்து நிமிடத்தில் அங்கே மகளிர் கூட்டம் சேர்ந்தது. புடவைக்காரன் புடவைகளைப் பிரித்துப் போட... ஒரே புடவை விமர்சனக் குரலாக இருந்தது. ஆளாளுக்கு இரண்டு மூன்று புடவை என உடம்பில் வைத்து அழகு பார்த்துக் கொண்டார்கள். முத்துவேல் அவன் மனைவியை வெளியில் விடவே இல்லை! ராஜேஸ்வரிக்கு அழுகையாய் வந்தது. திண்ணையிலிருந்து ஒரே சந்தோஷக் கூச்சல்!

அரை மணிக்கு மேலாய் புடவை வியாபாரம், சுறு சுறுப்பாய் இருந்தது. புடவைக் காரனுக்கு நல்ல வியாபாரம்.

“ அப்ப நா வரவாய்யா...?” புடவைக்காரன் வீட்டிற்குள் குறல் கொடுத்தபோது எதேச்சையாய் ராஜேஸ்வரியைப் பார்த்து விட்டான். அவள் முகம் சோகம் அப்பிக் கிடந்தது!

“ஐயா...கொஞ்சம் இப்படி வர்றீங்களா...” முத்துவேலை புடவைக்காரன் அழைக்கவும் வெளியில் வந்தான்.

“ உங்க மனைவியைக் கூப்பிட்டு இதுல ஒரு புடவை எடுத்துக்கச் சொல்லுங்கய்யா...”

முத்துவேல் விழித்தான்.” தப்பா நினைக்காதீங்க! எங் கூடப் பொறந்த பொண்ணா நினைச்சு குடுக்கிறேன்!”

ராஜேஸ்வரி கணவனைப் பார்க்க அவன், புடவைக்காரனைப் பார்த்தான்.

“இந்தாங்கம்மா...உங்களாலே எனக்கு பதிமூணு புடவை வியாபாரம் ஆச்சு. உங்களுக்கு ஒரு புடவை கொடுக்கறதுல குறைஞ்சு போயிடப் போறதில்லே...” மூட்டையைக் கட்டாமல் வைத்திருந்தான்.

முத்துவேல் தலையசைக்க ராஜேஸ்வரி புடவையைப் பிரித்தாள். அவளுக்குப் பிடித்த புடவையை எடுத்துக் கொண்டாள். அரக்கு நிறத்தில் சந்தன நிற சாயத்தை அள்ளித் தெளித்தார் போன்ற டிசைன். ராஜேஸ்வரிக்கு மிகவும் பிடித்திருந்தது.

”இது என்ன விலை?” என்றான் முத்துவேல்.

“விலையெல்லாம் என்னத்துக்கு ஐயா...!”

“சும்மா சொல்லுங்க...”

“முன்னூத்தி இருபது...”

“பிடிங்க” முத்துவேல் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களை புடவைக் காரனிடம் கொடுக்க மறு பேச்சின்றி வாங்கிக் கொண்டான். சிறிது நேரத்தில் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

இரண்டு வாரம் கழித்து ஊரில் திருவிழா வந்தது. பக்கத்திலிருந்த பெண்களெல்லாம் புடைவைக் காரன் புடவையை உடுத்த...ராஜேஸ்வரியும் உடுத்திக் கொண்டு புறப்பட்டாள்.

மூன்றாவது வீட்டிலிருக்கும் பெண் இவள் புடவையைப் பார்த்து...”ஐ... நல்லாருக்கே..! இது யார் கொடுத்தது..?” என்றாள். ராஜேஸ்வரிக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை! 10.1.2012

11. தியாகி

கோவிந்தனுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக முன்னேற்றக் கட்சி அலுவலகத்தில் தனக்கு எடு பிடி வேலை! அதுவும் மாலை வேளைகளில் மட்டும்! கட்சி ஆட்களில் ஒருவரைப் பிடித்து இந்த வேலையை வாங்கி விட்டான்.

எடு பிடி என்றால் எத்தனை பேரைப் பார்க்கலாம். கட்சி ஆட்களிடம் பழக்கம் வைத்துக் கொண்டு அரசியல் பழகி பெரிய ஆளாகி விட வேண்டும் என்பது அவனது லட்சியம்.

கோவிந்தனுக்கு வயது முப்பத்தி மூன்று. இன்னும் திருமணமாகவில்லை. அம்மாவுடன் வாசம். அப்பா இல்லை. ஊரில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கிறான். மின்சார மோட்டார்கள் ரிப்பேரும் உண்டு. நல்ல சம்பாத்தியம். சம்பாதிப்பதை எல்லாம் குடும்பச் செலவுக்குப் போக கட்சிக்கென்றே மீதமிருக்கும் மொத்தத்தையும் செலவு செய்வான். கட்சிக் கூட்டம் என்றால், கொடிக்கு ஆகும் செலவை இவன் மட்டுமே ஏற்றுக் கொள்வான். அதனால் கட்சி விசுவாசிகளிடம், ‘கொடி கோவிந்தன்’ என்றால் பிரபலம்.

கட்சி அலுவலகத்தில் மாலை வேளைகளில்தான் கட்சி ஆட்கள் நிறைய வருவார்கள். கட்சியைப் பற்றிய விவாதம் நடக்கும். த.மு.க கட்சி மாநில அளவிலான கட்சி. இது வரை இரண்டு தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. மூன்று எம்.எல்.ஏக்களை சட்ட மன்றம் அனுப்பி உள்ளது. அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் நடத்தி சிறை செல்வார்கள். கோவிந்தனும் இரண்டு முறை சிறை சென்றுள்ளான். கட்சிக் குறிப்பேடு புத்தகத்தில் அவனது பெயர் உள்ளது.

அவன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆனது. கட்சி ஆட்களுக்கு டீ,காபி ‘பாட்டில்கள்’ சப்ளை என வேலை பெண்டு நிமிரும். கையில் காசும் புரளும். கட்சி ஆட்கள் சிகரெட், கூல்டிரிங்ஸ் என வாங்கி வரக் கொடுக்கும் சில்ல றைகளே அவை! வீட்டிற்குப் போகும் போது இரவு மணி பத்தரையைத் தாண்டிவிடும். சில நேரம் கூடுதலாகவும் ஆகும்.

அம்மா கோபித்துக் கொள்வாள். அவன் சமாதானம் சொல்வான். அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுவோரை உன்னிப்பாக கவனிப்பான். தினசரி செய்தித்தாள் படிப்பான். அப்படித்தான் ஒரு நாள் படிக்கும் போது அவர்களது கட்சி திருச்சியில் பேரணி நடத்துவதாக செய்தி வெளியாகி இருந்தது. அலுவலகமே பரபரப்புடன் செயல் பட்டது. வட்டார அளவில் தொகுதியில் அதிகத் தொண்டர்களை காண்பித்தால்தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும்.

கோவிந்தன், “அண்ணே...நா எங்க ஆளுங்களைக் கூட்டியாரண்ணே...!’ என்றபோது கட்சி உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்தார்கள்.

“உங்க ஆளுங்களுக்கு சம்பளம் யார் குடுக்கறது?” என்றார் பொருளாளர்.

“சம்பளமெல்லாம் என்னத்துக்கு? உங்களுக்கு நா ஆள் சேக்குறேன். லாரி மட்டும் ஏற்பாடு பண்ணிருங்க!” என்றபோது சிரித்த வாய் மூடியது.

பேரணிக்கு ஒரு மாதம் முன்பிருந்தே கோவிந்தன் ஆள் சேகரிக்க ஆரம்பித்தான். ஊர் ஊராய்ச் சென்று தான் கட்சியில் சேர்ந்தால் ‘இன்னன்ன செய்வேன்’ என்று அவனது இனத்தாரிடம் எடுத்துரைத்தான். கூட்டம் கணிசமாய்ச் சேர கட்சி விசுவாசிகளுக்கு உதறல் எடுத்தது. பேரணிக்கு முதல் வாரம் மாவட்டத் தலைவருக்கு பேரணி லாரிகளின் எண்ணிக்கை வியப்படைய வைத்தது. அதிலும் கோவிந்தனின் விபரம் சொன்னதும் அதிர்ச்சியானது!

பணம் செலவு செய்யாமல் இத்தனைக் கூட்டத்தை கூட்டியவனின் பெயரை வட்டாரத்திலிருந்து மாவட்டம் வரை முணுமுணுக்க வைத்தது. பதினான்கு ஊர்களில் ஒன்பது லாரி மக்களைச் சேர்த்திருந்தான் கோவிந்தன்! கட்சியில் ஆரம்ப முதல் உறுப்பினராயிருந்த விசுவாசிகளுக்கு இத்தனை கூட்டம் சேர்ந்ததில்லை. கோவிந்தனின் பெயர் மாவட்டத் தலைமைக்குச் சென்றடைந்தது. இதனால் பேரணியின் போது கட்சித் தலைவருக்கு மாலை மரியாதை செய்யும் வாய்ப்பைப் பெற்றான்! கோவிந்தன் தாயிடமும் நண்பர்களிடமும் சொல்லிச் சொல்லி சந்தோஷப் பட்டான். கட்சித் தலைவருக்கு கட்சி சின்னம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அளிக்க முடிவு செய்திருந்தான்.

பேரணி நாளும் வந்தது. கோவிந்தன் சோறு தண்ணி இல்லாமல் கட்சிப் பொறுப்பை தலைமேல் சுமந்தான். மொத்தம் பதினைந்து லாரிகளில் தொண்டர்கள் படை திருச்சி நோக்கிச் சென்றது. கோவிந்தன் கட்சித் தலைவரை அருகில் பார்த்ததும் தலை மேல் கை குவித்துக் கும்பிட்டான். மாலை அணிவிக்கும் போது மாவட்டத் தலைவர் இவனைப் பற்றி தலைவரின் காதில் கிசுகிசுத்தார். தலைவர் கோவிந்தனைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். கோவிந்தன் மோதிரம் அணியப் போனபோது தடுத்து அவன் விரலைப் பிடித்து மோதிரத்தை அணிவித்த போது அருகிலிருந்தவர்கள் கரகோஷம் செய்தார்கள்.

வீடு திரும்பிய கோவிந்தனுக்கு தூக்கம் வரவில்லை! தலைவர் மோதிரம் அணிவித்த காட்சியே நினைவில் வந்து வந்து போனது! இரவில் அடிக்கடி விளக்கைப் போட்டு மோதிரத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.

மறு நாள் கட்சி அலுவலகம் சென்ற போது இவனிடம் யாருமே முகம் கொடுத்துப் பேசவில்லை. கோவிந்தன் நிலைமையைப் புரிந்து கொண்டான். மறுநாள் பத்திரிகைகளில் கோவிந்தன் அணிவித்த மோதிரம் பற்றிய செய்தி வெளியானதில்; கட்சி விசுவாசிகள் அடி வயிறு கலங்கினார்கள். கோவிந்தனைக் கழற்றி விட தருணம் பார்த்தார்கள். அந்தத் தருணம் விரைவிலேயே வந்தது.

எவ்வாறெனில் மாவட்டத் தலைவரை உட்கட்சிப் பூசலால் கட்சித் தலைமை கட்சியை விட்டே நீக்கி விட்டது! தொண்டர்கள் துடித்தெழுந்தார்கள்! போக்குவரத்து உடனடியாக நிறுத்தப் பட்டது. தொண்டர்கள் கடைகளை துவம்சம் செய்தார்கள்! பயமின்றி செயல்பட்ட போக்குவரத்துகளை அடித்து நொறுக்கினார்கள்! கோவிந்தன் செய்வதறியாது துடித்தான்! தண்ணீர் கூட அருந்தவில்லை. கட்சி அலுவலகம் சென்றான்.

“தீக் குளிக்கற மாதிரி பாவனை செய்தோம்னா நம்ம வட்டத்தோட பேர் வெளியில வரணும்!” என்றார். செயலாளர்.

“மோகன், நீங்க இறங்கி செயல் பட்டா...”

“அண்ணே...தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கண்ணே!” மாணவர் அணித் தலைவர் மோகன் தயங்கவும் கோவிந்தன் அருகில் சென்றான்.”நா தயாரா இருக்கேன்!” கைகளை உயர்த்திச் சொன்னான். அவர்களின் திட்டமும் அதுதானே!

துரிதமாய் ஏற்பாடு செய்யப் பட்டது. அவனிடம் மண்ணெண்ணெய் என்று சொல்லி பெட்ரோல் வாங்கப் பட்டது! மறு நாள் காலை...அலுவலக வாசலில் கோவிந்தன் பெட்ரோலை ஊற்றிக் கொள்ள, அவனறியாமல் எங்கிருந்தோ வந்த தீக்குச்சி அவனைத் தீண்டியது! தீயின் நாக்குகள் அவனைத் தீண்டி ருசிக்க ஆரம்பித்த போது... அலறியவாறு சுற்றிச் சுற்றி வந்ததை வேடிக்கை பார்த்து விட்டு, பிறகே கட்சி விசுவாசிகள் முதல் உதவி அளிக்க முன் வந்தார்கள். அதற்குள் தீ கோவிந்தனை முழுவதும் சாப்பிட்டு முடித்து...கதையையும் முடித்து வைத்தது!

மறுநாள் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப் பட்டான் கோவிந்தன்! மாவட்டத் தலைவர் கோவிந்தனின் தாயை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அதற்கடுத்த நாள் திருப்பதிக்குச் சென்ற சுமோ கார் விபத்துக்குள்ளாக அதிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாக; மக்கள் கோவிந்தனை மறந்து திருப்பதி விபத்தைப் பேச ஆரம்பித்தார்கள்! 3.2.2012

12. தப்பு

வைத்தி மூன்றாவது முறையாக தனது டிவிஎஸ் ௫௦ யுடன் அந்த ‘அமைதி இல்ல’த்தை பார்வையிட்டான்! தெருவில் தன்னை யாரும் கவனிக்கிறார்களா? என சுற்றிலும் நோட்டமிட்டான். அனைவரும் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கினார்கள்! முந்தாநாள் ‘ரூபி’ திருமண மண்டபத்தில் வைத்து இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தான்! வைத்தி யார்? இது வரை... போலீஸ் கையில் சிக்காத கொள்ளைக்காரன்! அவனது நகை கொள்ளைக்கு திருமண மண்டபங்கள் தான் ஆள் தேர்வு செய்யுமிடம்!

திருமண மண்டபங்களில் வேலையாளாகச் சேர்ந்து விடுவான். மெதுவாக பெண்களின் பேச்சை கவனிப்பான்.(நகைகள் அதிகமாய் அணிந்திருக்கும் பெண்களை) அதில், வீட்டில் ஆண்கள் இல்லாத பெண்களாக தேர்ந்தெடுப்பான்! பிறகுதான் நோட்டமெல்லாம்! இரண்டு, மூன்று நாட்களில் அந்த வீட்டிலிருக்கும் நகைகள், இவன் கைகளில் மின்னும்! பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதும். படித்து விட்டுச் சிரிப்பான்! அவனை யாரும் பிடிக்க முடியாதாம்...! உண்மைதான், போலீஸ் கைகளில் சிக்காத கொள்ளையன்! ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் ‘சம்பாத்தியம்’, எனும் கொள்கையை வைத்திருந்தான்.

இது வரை அவன் ‘சேமித்த’ நகைகள் வீடாகவும், பிள்ளைகளின் வாழ்க்கையாகவும், எந்தக் குறைபாடு மின்றி போய்க் கொண்டிருக்கிறது. ‘அமைதி இல்லம்’ வீட்டை நோக்கி அவனது வாகனத்தில் போகும் போது ’மணி பன்னிரெண்டைத் தாண்டி இருந்தது. தெரு விளக்குகள் மின் பற்றாக் குறையால் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன! லேசான மழை வேறு! வைத்திக்கு எல்லாம் சாதகமாக இருந்தது.சந்தோஷம் பிடிபடவில்லை...!

வீட்டின் அருகில் போகும்போது... என்ன அது?! ஸ்பீக்கர் வைத்த மோட்டார் சைக்கிள்? ‘போலீஸ்’ என ஆங்கிலத்தில் எழுதி இருந்ததைப் படித்ததும், சர்வாங்கமும் ஒடுங்கியது! வைத்தி தனது டிவிஎஸ் வண்டியை ஒரு மரத்தின் அடியில் நிறுத்தினான். இந்த வீட்டிற்கு யாரும் விருந்தினர் வந்திருப்பார்களோ!? ‘இப்படியேத் திரும்பி விடலாமா?’ என யோசித்த போது, வீட்டிலிருந்து வந்த சத்தம்,அவனை ஈர்த்தது!

வீட்டின் பின் பக்கமாக பூனையாய் நடந்தான்... ஒரே ஒரு ஜன்னல் மட்டும் லேசாகத் திறந்திருந்தது. உள்ளே...

காக்கி பேண்ட், பனியன் சகிதம் தலைமைக் காவலர், திவாகரன்!(வைத்திக்கு ஏற்கனவே அவரைத் தெரியும்) காக்கி சீருடையில் பனியன் சகிதமாய்... நிச்சயமாக இவர் இந்தப் பெண் மணிக்கு அவர் உறவினர் இல்லை!

அவர்கள் பேச்சை கொஞ்சம் உற்றுக் கேட்டான்! ”சொன்னாக் கேளுங்க...எங்கிட்டே இருக்கற நகைங்க எல்லாத்தையும் உங்க கிட்ட குடுத்துட்டேன். எங்கிட்டே இப்போ இருக்குறது இந்த தாலிச் சரடு ஒண்ணுதான்!” கெஞ்சலாய்ச் சொன்னாள், அந்தப் பெண்! ஏதோ ‘தவறான உறவு’ நமக்கேன் என திரும்ப எத்தனித்த போது, அந்தப் பெண்ணின் கூக்குரல் வைத்தியை திரும்பி வரவழைத்தது.

“நீ என்ன பெரிய பத்தினியா? கழட்டு தாலியை!” திவாகரன் அதட்டலாய்ச் சொன்னார். வைத்தி தனது வாகனம் இருக்குமிடம் சென்றான். அதனைத் தள்ளிக் கொண்டே போய், தெரு முனைப் பெட்டிக் கடையில் ‘ஒரு ரூபாய்’ தொலை பேசியில் ௱ அழுத்தி,” போலீஸ் ஸ்டேஷன்தானே! தெருவின் பெயரைச் சொல்லி, அமைதி இல்லம்ங்க்கிற வீட்ல ஒரு திருடன், உள்ள இருக்கான், உடனே வாங்க ஸார்!” என்றான். திருட வந்தவன், காவல்காரனாக...காவல் காரன், திருடன் ஆனான்! 1.1.2012

13. சுவீகாரம்

“சார், மீனாட்சியம்மாவும், அவங்க ஹஸ்பண்ட் சதாசிவமும் வந்திருக்காங்க!” நர்ஸ் சொல்லவும்,டாக்டர் மாதவன், ”அப்படியா? கொஞ்ச நேரம் என்னோட ரூம்ல வெய்ட் பண்ணச் சொல்லுங்க. இதோ வந்துட்டேன்!” மாதவனை ஒரு வித பரபரப்பு சூழ்ந்து கொண்டது.

மீனாட்சி, சதாசிவம் தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். இருவரும் பேரப் பிள்ளைகள் எடுத்து விட்டார்கள். அப்படியானால் அவர்களது தாய், தந்தையரின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தள்ளாத வயது! சதாசிவம் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி அவருக்கு உற்ற துணை! அதற்கு மேல் அவர்கள் குடும்ப விஷயத்தைப் பற்றி உங்களிடம் சொல்லத் தேவையில்லை! (ஆறு வரியில்தானே உங்களோடு அறிமுகம்.) விஷயத்திற்கு வருவோம். டாக்டர் மாதவனிடம், ஆறு ஆண்டுகளுக்கு முன் அறிமுக மானவர்கள்தான் மிஸ்டர், மிசஸ் சதாசிவம் தம்பதி. இப்போது மாதவன் குடும்பத்தில் இருவரும் கலந்து விட்டார்கள். வாழ்விடம்தான் வேறு! வசிப்பிடம் என்னவோ இதய நோய் டாக்டரான மாதவனின் இதயத்தில்! நோயாளிகளைப் பார்த்து முடித்தவுடன் அவர்கள் இருக்குமிடம் வந்தான் மாதவன். நாற்காலியில் அமர்ந்ததும்,

“பாட்டி, தாத்தா... எப்பிடியிருக்கீங்க?”என்றான்.

“இருக்கோம்பா,,,” இருவரும் ஒரு சேர சொன்னதும்

“என்ன.. குரல்லே உற்சாகத்தைக் காணும்?” இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். முகம் வாடிப் போய் இருந்தது.

“என்ன நடந்தது?”

“இவரும், நானும் ஏதாவது இல்லத்திலே போய் சேர்ந்துடலாமான்னு...”

“வ்வாட் இல்லம்? என்ன பாட்டி சொல்றீங்க?! தாத்தா, பாட்டிக்கு மூளை சதி பண்ணுதா? என்னென்னவோ சொல்றாங்களே!” சதாசிவத்தைப் பார்த்துக் கேட்டான் மாதவன்.

“உண்மைதாம்ப்பா! எங்களுக்கு பண வசதிக்கு பஞ்சமில்லை. எங்களால சமைச்சு சாப்பிட முடியலையேன்னு ஆள் வெச்சோம். ஆனா எத்தனை ஆள் வந்தாலும், வயசானவங்கன்னு எங்களை எமாத்தறாங்க! அதனால...”

“போதும், தாத்தா. உங்களுக்குத்தான் நான் இருக்கேனே!”

“உனக்கு கல்யாணம் ஆகிட்டா...”

“தாத்தா, எனக்கு சின்ன வயசிலேர்ந்து தாத்தா பாட்டின்னாக்க ஒரு ஏக்கம்... எனக்கு அம்மா, அப்பா வழியிலே உங்களை மாதிரி வயசானவங்களே இல்லை! நா அதை நினைச்சு ரொம்ப நாள் கவலைப் பட்ருக்கேன்! நான் பெரியவன் ஆனதும் நம்ம கூட யாராவது ஒரு தாத்தா பாட்டியை வச்சுக்கனும்னு! எனக்கு நீங்க கிடைச்சவுடனே சந்தோஷப் பட்டேன்...”

“ஆனா...”

“பாட்டி, நீங்க எதுவும் சொல்ல வேணாம்! உங்களுக்கு, வயசானாக்க வர்ர வியாதி வந்தாச்சு! நமக்கு யாருமே இல்லைன்னு...ஒண்ணு செய்வோம், ஒண்ணு நீங்க என்னை... நோ, நோ...நானே உங்களை தத்து எடுத்துக்கறேன்!’ இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!

“வயதானா நம்மளால இனி எந்தக் காரியமும் ஆகாதுங்கற முடிவுக்கு பெரும் பாலானவங்க வர்றதால பெரிய சுவர் ஒண்ணை அவங்களாகவே எழுப்பிக் கிறாங்க! உங்களாலே எதுவும் உடல் ரீதியா முடியாது! ஒத்துக்கிறேன். மன ரீதியா முடியும். எனக்கு லைப் அட்வைசர் தேவைப் படறாங்க. நீங்களா இருந்தா சந்தோஷப் படுவேன்!” புன் சிரிப்புடன் மாதவன் சொல்லவும்,இருவரும் சம்மதப் பார்வையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்!

14. தீர விசாரிப்பதே

கல்யாண மண்டபமே வெறிச்சென்றிருந்தது. முகூர்த்தம் 10.30 லிருந்து ௧௨ வரை! எனக்கு பஸ் வந்தது எட்டு மணிக்கு. ஒரே பஸ்தான். இடைப்பட்ட இரண்டரை மணி நேரத்தை சும்மாவாலும் எங்கே போக்குவது? மாப்பிள்ளை வீட்டாரின் சார்பில் நான் வந்திருந்தேன். மாப்பிள்ளையின் தந்தை எனக்கு வேண்டியவர். திருமணத்திற்கு சற்று முன்பே வரச் சொல்லியிருந்தார். தனிப்பட்ட முறையில் பல வகைகளில் உதவி புரிந்தவர்.

மண்டபத்தில் ஒரு சிலர் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். இன்னும் அவ்வளவாக யாரும் வந்து சேரவில்லை! தாலி கட்டும் நேரத்தில் அவசர அவசரமாய் வந்து அட்சதையைத் தூவி விட்டு, மொய் எழுதி, அடித்துப் பிடித்து முதல் பந்திக்கு முந்தி, கை கழுவவில்லை எனினும் சாப்பிட்டு முடிவதுதான் இப்போதெல்லாம் கல்யாணம்! இன்று போல் தர்ம சங்கடம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. நான் தாலி கட்டும் நேரத்திற்குத்தான் செல்வேன். மக்களோடு மக்களாய்க் கலந்து மணமக்களை வாழ்த்துவேன்.

கல்லூரிப் பெண்களைப் போல் உள்ளவர்கள் ஏழெட்டுப் பேர் குதூகலித்தவாறு வந்து கொண்டிருந்தார்கள். வயது! எனக்கு இரண்டு பையன்கள். மூத்த பையனுக்கு திருமணம் பேசி இடையில் நின்று விட்டது. அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு?

“வாங்க..ரகு சார்! ரொம்ப நேரமாச்சா வந்து?” மாப்பிள்ளையின் தந்தை வேணுகோபால் சிரித்தவாறு மண்டப நுழைவிலிருந்து வந்து கொண்டிருந்தார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வந்தேன்”

“ஹலோ அங்க்கிள்...” மாப்பிள்ளை கைகுலுக்கி வரவேற்றான். எம்.பி.ஏ முடித்து சொந்தமாய் பிசினஸ் செய்கிறான். இப்போதெல்லாம் சாதரணமாக உள்ளது படிப்பு. முந்தைய தலைமுறையை பொறாமைப் பட வைக்கிறது. நல்ல வளர்ச்சிதான்.

அனைவரும் மண்டபத்தினுள் சென்றோம். சிற்றுண்டி அருந்தி விட்டு வந்தோம். எனக்கு தாம்பூலப் பையாய் மணமக்கள் பெயர் பொறித்த சிறிய தோள் பை வழங்கும் பணியைக் கொடுத்தார் வேணுகோபால். அப்போதுதான் கவனித்தேன் மணமகளின் பெயரை. வாகீஸ்வரி! என் மகனுக்கு நிச்சயித்த பெண்ணின் பெயரும் அதுதான்.

அந்தப் பெண்ணாக இருக்குமோ? கல்யாணப் பத்திரிகை என் வசம் இல்லை. நான் இருக்குமிடம் திருவாரூர். மனைவி பிள்ளைகள் பாண்டிச்சேரியில் இருக்கிறார்கள். பத்திரிகையை அங்கே அனுப்பி விட்டார்கள். மனைவிதான் போனில் விஷயம் சொன்னாள். மண்டப வாயிலில் வைத்திருந்த வரவேற்பு தட்டியையும் நான் கவனிக்கவில்லை.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

எனக்கு பெண்ணைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாய் இருந்தது. எதிரே இருந்த பேனர் தட்டியையும் இங்கிருந்துதான் கவனிக்க முடிந்தது. பெண் முகம் அவ்வளவாய்த் தெரியவில்லை.

“ரகு மாமா எப்பிடி இருக்கீங்க?” என் தூரத்துச் சொந்தக்காரப் பெண் அழைத்தது என் காதில் விழத் திரும்பினேன். ”நல்லாயிருக்கேன்மா...”

“உங்க பையனுக்கு கல்யாணம் பேசி நின்னு போச்சாமே!” என சத்தமாய்க் கேட்கவும் அருகில் நின்றிருந்த இரண்டொரு பேர் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். நான் மௌனம் காத்தேன். அவளின் இங்கித அளவீடு எனக்குத் தெரியும். நல்ல வேலையாய் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு போனது.

நேரம் 10.30. அய்யர் மந்திரம் ஓத ஆரம்பித்திருந்தார். உறவினர்களின் கூட்டம் மேடையில் கூட ஆரம்பித்தது. நான் மூன்றாவது வரிசையில் இரண்டாவது ஆளாக உட்கார்ந்தேன். மணமகன் அழைத்து வரப்பட்டு மந்திரம் ஓத சடங்குகள் ஆரம்பித்தது. அடுத்து மணமகள் அழைத்து வரப்பட்டாள்! எனக்கு தலை சுற்றியது. என் மகனுக்கு நிச்சயம் செய்த அதே வாகீஸ்வரிதான்!

எப்படி? இந்தப் பெண்தான் சரியில்லையே! பாவம், வேணுகோபால் எத்தனை சிரமப் பட்டு மகனைப் படிக்க வைத்து, என்ன பிரயோசனம்? அவனுக்கு வாழ்க்கையை நல்லதாக அமைத்துக் கொடுக்க முடியவில்லையே. நான் தப்பித்துக் கொண்டேன்.

௧௧.௪௫ க்குத் தாலி கட்டினார்கள். நான் வாழ்த்த மனமின்றி அட்சதை தூவினேன். எழுந்து போய் தாம்பூலப் பை வழங்க முற்பட்டேன். திருமணம் ஒரு வழியாய் நிறைவு பெற்றது. கூட்டம் கலைய ஆரம்பித்தது. வேணுகோபாலிடம் இனி சொன்னால் என்ன, சொல்லா விட்டால் என்ன? அவரது மகனின் வாழ்க்கை அஸ்தமிக்க அவரே காரணமாகி விட்டார்.

“சார்...” திரும்பினேன்.

“அடடே... நீங்களா..!” நான் இந்த இடத்தில் இவரை எதிர்பார்க்கவில்லை.

மணப்பெண் வாகீஸ்வரியின் அலுவலக முதலாளி.

“நீங்க இந்தப் பெண்ணை மிஸ் பண்ணிட்டீங்களே சார்”

“என்ன சொல்றீங்க?’ என விழித்தேன்.

“உங்களை யாரு சந்திரன் கிட்ட விசாரிக்கச் சொன்னது?”

‘இவருக்கு எப்படித் தெரியும்?’ நான் என் மகனுக்கு திருமணம் பேசி முடித்ததும் மணமகளை விசாரிக்க அவளது அலுவலகம் சென்றேன்.

“வாகீஸ்வரி நல்ல பொண்ணு சார்! நீங்க ஏன் சந்திரனை விசாரிச்சீங்க?”

‘பின்னே யாரை விசாரிக்கறது? சந்திரன் எங்களுக்கு தூரத்து உறவு”

“அந்தப் பொண்ணு பின்னாடி சுத்த அவனுக்கு ஆசை. அதுக்கு அவளுக்கு விருப்பமில்லை. நீங்க வந்து அவங்கிட்ட கேட்டவுடனே இல்லாததும் பொல்லாததுமாய்ப் போட்டுக் குடுத்துட்டான்.”

என்னைச் சுற்றியிருந்தவர்கள் சுழன்றார்கள்! தீர விசாரிப்பது மெய்தான் என யார் சொன்னது? பொய்யாகிப் போனதுவே! மணமக்கள் மணமேடையைச் சுற்றி வர...நான் மனதார வாழ்த்தினேன். மகனுக்கு மணம் பேசி முடிக்கும் தகப்பன்மார்களே தயவு செய்து பெண்ணைப் பற்றி அலுவலகத்தில் விசாரிக்காதீர்கள்! 2.2.2012

15. நன்கொடை

புதிய திரைப் படம் பார்ப்பதென்றால் கவுதமனுக்கு மிகவும் விருப்பம்! எத்தனை ரூபாய் கொடுத்தாவது பார்த்து விடுவான். கல்லூரி நாட்களில் துவங்கிய பழக்கம் திருமணமாகி, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாகியும் தொடர்கிறது!(மனைவி சாந்திக்கு இதெல்லாம் பிடிப்பதில்லை! கணவனுக்காக ஒத்துக் கொள்வாள்.) அதுவும் பட வெளியீடு அன்றே குடும்பத்தோடு பார்த்து விடுவான்! படத்தைப் பற்றி நண்பர்களிடம் விமர்சிப்பதில் தனிக் கவுரவம்!

இன்று அவனுக்கு மிகவும் பிடித்தமான முன்னணி கதாநாயகனின் திரைப்பட வெளியீடு! சாந்தி குழந்தைகளுடன் முதல் நாளன்றே கிளம்பி விட்டான். அலுவலகம் இல்லா விட்டால் பகலில் முதல் காட்சிக்கே போய் விடுவான். அலுவலகம் இருந்ததால், இரவு முதல் காட்சிக்கு கிளம்பி விட்டார்கள். சினிமா அரங்கினுள் கூட்டம் அலை மோதியது. மோட்டார் சைக்கிளை அதற்குரிய இடத்தில் நிறுத்தி, டோக்கன் வாங்கி, டிக்கெட் கொடுக்குமிடம் வந்தார்கள். திடீரென அரங்கின் எதிரே எழுந்த இரைச்சல்.. அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியது! ரசிகர்கள் உற்சாகமாய் விசிலடித்து மேள தாளத்துடன் திரைப் படத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் தலைமையேற்று வந்தவனின் தலையில் பால் குடம் ஒன்று! அவனது கழுத்தில் மாலையும் போடப் பட்டிருந்தது!

எதிரே இருந்த முன்னணி நாயகரின் பேனருக்கு முதலில் சூடம் காட்டினார்கள். பிறகு பாலாபிஷேகம் நடத்த, மேளச் சத்தம் காதைப் பிளந்தது! வெளியில் தார்ச் சாலையில் பத்தாயிரம் வாலா பட்டாசு மூச்சு விட நேரமின்றி வெடித்துக் கொண்டிருந்தது! போக்கு வரத்தைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை!” மத்தியானம் மன்றத் தலைவர் வர நேரமாயிடுச்சாம்!” கூட்டத்தில் ஒருவன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். மின் ஒளி அலங்காரம் அந்த இடத்தையே பகலாக்கியது.

கவுதமன் மனைவி பிள்ளைகளுடன், ஒரு ஓரமாக நின்றான். ரசிகர்கள் கூட்டம் அரங்கை நெளிய வைத்தது! “வீட்டுக்குப் போயிட்டு இன்னொரு நாளைக்கு வரலாமே!”

சாந்தி சொல்லவும், கவுதமனுக்கு மனசே இல்லை! நாளை, இந்தப் படத்தைப் பற்றி அலுவலகத்தில் விமர்சிக்கும் முதல் ஆள் அவனாக மட்டுமே இருக்க வேண்டும்!

“இரு சாந்தி!” கவுதமன் மனைவியை அமைதிப் படுத்தினான்.

“வீட்ல சொல்றாங்கல்ல.. போய்ட்டு நாளைக்கு வாங்க சார்!” அவன் பின் பக்கமிருந்து ஒருவன் சத்தமாய்ச் சொன்னான். சாராய வாடை ‘குப்’பென்று முகத்தில் வீசியது. அப்போதுதான் அவன் கண்ணில் அந்தப் பையன் தெரிந்தான். “மா...ணிக்கம்!” கூட்டத்தினுள் நீல நிற முழுக்கால் சட்டை அணிந்தவன் இவனைத் திரும்பிப் பார்த்து அருகில் ஓடி வந்தான். இவர்கள் மகனின் பன்னிரண்டு வயதுதான் அவனுக்கும் இருக்கும்.

“எனக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கக் கூடாதா சார்..! டிக்கெட்டெல்லாம் தீந்து போயிடுச்சே!’ என்று வருத்தமாய்ச் சொன்னான்.

“எப்படியாவது...” கவுதமன் வாய் திறந்தவுடன் சாந்தி இடை மறித்தாள்.

“இன்னைக்கு வேணாங்க.. வாங்கடா பசங்களா!” கணவனின் பதிலுக்குக் காத்திராமல் பிள்ளைகள் பின்னே வர மோட்டார் சைக்கிள் இருந்த இடம் நோக்கி விரைந்தாள் சாந்தி.

பதினைந்து நிமிடத்தில்...வீடு வந்த பின்னரே சாந்தி வாய் திறந்தாள்.

“தெரியாமத்தான் கேக்குறேன். இப்படித்தான் உங்க கவுரவத்தை நிலைப் படுத்திக்கணுமா?”

கவுதமன் பேசாமல் நின்றான்.

மறு நாள் காலை. “அப்பா...நேத்து தியேட்டர் வாசல்ல ஒரு அண்ணா நின்னாங்களே.. அவங்க கூப்பிடறாங்க..”மகள் சொல்லவும் கவுதமன் வெளியில் வந்தான். மாணிக்கம்!

“என்னப்பா... காலையிலேயே?”

“நேத்து நீங்க வந்துட்டு திரும்பீட்டிங்கல்ல சார்! இந்தாங்க டிக்கெட்...” கையில் முதல் வகுப்பு டிக்கெட்.

கவுதமன் சமையலறைக்குள் பார்த்தான். ’அங்கே இல்ல. இங்கே இருக்கேன்.” பக்கத்திலிருந்த அறையிலிருந்து மனைவியின் குரல்!

“எத்தனை ரூபாய்ப்பா ஒரு டிக்கெட்?” சாந்தி மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்கவும் அவன் கவுதமனைப் பார்த்தான்.

“ஏன் நானூறு ரூபாய்தான்!” கவுதமன் சாதாரனமாய்ச் சொன்னான்.

“நாலு பேருக்கு ஆயிரத்து அறுநூறா? ஏங்க இத்தனை ரூபா குடுத்து ஒரு நடுத்தரக் குடும்பஸ்தன் அந்தப் படத்தைப் பாத்துத்தான் ஆகணுமா?”

மாணிக்கம் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். சாந்தி அவன் கையை இறுக்கிப் பிடித்து கணவனின் எதிரே அவனை நிறுத்தினாள்.

“இன்னிக்கு இவன் ப்ளாக்ல டிக்கெட் விக்கிறவன். நாளைக்கு யார் தெரியுமா?” கணவனைக் கேட்டாள். அவன் பேசாமல் நின்றான்.

“வழிப்பறி! அதுவுமில்லேன்னா கள்ளச்சாராயம் எரிப்பான்,,, இது ரெண்டும் இல்லேன்னா பிக் பாக்கெட்டுங்க! நம்ம பாக்கெட்ல கூட கை வப்பான்!”

“அதுக்கு நாம என்ன செய்றது?” கவுதமன் மௌனமாய்க் கேட்டான்.

“இந்தப் பணத்தை அப்படியே கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடையா குடுத்துடுவோம்!”

மாணிக்கம் சாந்தியை முறைத்தான்.

“இல்லேன்னா நாமளே உருவாக்கின சமூக விரோதியை நாமதான் அனுபவிக்கணும்!”

“அக்கா... நா ஒரு நாளும் நீங்க சொல்றது மாதிரி ஆயிட மாட்டேன்கா!” கெஞ்சும் தொனியில் சொன்னான் மாணிக்கம்.

“இதப் பாருடா... இப்ப வர்ர சினிமாவை உங்க வயசுப் பசங்க பார்க்கறதே சமூக விரோதம்! உங்களுக்கு நல்லது எது, கெட்டது எதுன்னு இந்த வயசுல புரியாது! நாங்க சொல்லாமலேயே எல்லாத்தையும் விரல் நுனியிலே வெச்சிருக்கீங்களே! அப்ப உள்ள ஹீரோவெல்லாம் படம் பாக்கறவங்களுக்கு பாடமா இருந்தாங்க! ஆனா இப்போ? பெரிய ஹீரோவோட பின்னணியிலே உங்களை மாதிரி சமூக விரோதி வீட்டுக்கு வீடு வளர்க்கப் படறாங்க! அப்ப வெல்லாம் வில்லன் தான் கடத்தல் தொழில் செய்வார்! இப்போ ஹீரோவே கடத்தல் பண்றார்! ஹீரோ நம்மளை வெச்சு பெரிய ஆளாயிடறார்! நீங்க பெரிய ஹீரோவை வெச்சு வில்லனா ஆயிட்டீங்க!”

தன் மகன் வாழ்க்கையை எண்ணியே சாந்தி இந்த முடிவுக்கு வந்தாளோ? தவறுகள் வெளியில் இருந்து பெறப் படுவதில்லை. அது நம் ஒவ்வொருவரின் இல்லத்திலிருந்தும்தான்!

“சரி மாணிக்கம். நீ போ! உங்கப்பாவை நான் நாளைக்கு வந்து பாக்கறேன். உன்னோட படிப்புக்கு, நா ஏற்பாடு பண்றேன்!” கவுதமன் அமைதியாய்ச் சொன்னான். 3.1.2012

16. நல்லவன்

“இது என்ன... சாப்பாடா?” முகுந்தன் தட்டில் கை கழுவி எழுந்து வெளியில் சென்று விட்டான். வேணி அதிர்ந்தாள். மூன்று மாதங்களாக வளர்த்த கோழிக் குஞ்சை மகன் ஊருக்கு வந்த பின் கழுத்தைத் திருகி, சிறகுகளை ஆய்ந்து கண்டத் திப்பிலி, மிளகு, சீரகம் என வாசனைப் பொருளாக வைத்து ரசம் வைத்திருக்கிறாள்.

முகுந்தன் அதனை வேண்டாம் என எத்தனை சுலபமாய்ச் சொல்லி எழுந்து விட்டான்.

வேணிக்கு அழுகை அழுகையாய் வந்தது. தகப்பனில்லாப் பிள்ளை தத்துவாரி என ஊர் ஏசக் கூடாதென்று எத்தனை பக்குவமாய் நடந்து கொண்டு உணவு சமைத்துப் போடுகிறாள். அவன் கிஞ்சித்தும் அதனை உணர்வதில்லை. எதைச் செய்தாலும் இப்படித்தான். வயதுக் கோளாறு.

“வேணி...கொஞ்சம் கடுகு இருந்தா குடேன்” எதிர் வீட்டு சுப்பு கேட்டுக் கொண்டே வந்தாள்.

“இருங்க வர்றேன்.” வீட்டினுள் நுழைய சுப்புவும் பின் தொடர்ந்தாள். எதிரே முகுந்தன் சாப்பிட்ட தட்டு அவர்களை வரவேற்றது.

“இதென்ன...சாப்பிடாதது மாதிரி இருக்கே...முகுந்தன் சாப்பிடலயா?” என மோவாயில் கை வைத்தவாறு கேட்டாள்.

“அவன் சாப்பிடத்தான் உக்காந்தான். நாந்தான் குளம்புல மறந்துட்டு உப்பை ரெண்டு வாட்டி போட்டுட்டேன்.”

“அடக் காலமே...!” சடுதியில் பேச்சை முடித்துக் கொண்டாள்.

இவளிடம் அவனைப் பற்றிச் சொன்னால் ஊரெங்கும் தம்பட்டம் அடித்து விடுவாள்.

“அப்ப நா வர்றேன்.” சுப்பு எதுவும் வெறும் வாய்க்கு அவலாகக் கிடைக்கவில்லை என்கிற ஏமாற்றத்துடன் சென்றாள்.

வாசலில் மோட்டார் சைக்கிள் நிற்கும் ஓசை கேட்டது. வேணி வெளியில் வந்து பார்த்தாள். முகுந்தன் நின்றிருந்தான். “அம்மா நா கோடியக்கரை வரைக்கும் போய்ட்டு வாரேன்.”

“யார் கூட...?” வேணி பதறினாள்.

“ஏம்மா பதற்ரே...?”

‘அங்கேயெல்லாம் தனியாப் போவேணாம்”

“தனியாப் போவேனா? நா, மணி, சுரேஷ் எல்லாருமாத்தான் போறோம். சும்மா சுத்திப் பாத்துட்டு வர்றோம்!”

“தம்பி...கொஞ்சமாச் சாப்பிட்டுப் போடா!”

“போம்மா...எனக்கு ஒமட்டிக்கிட்டு வருது!” மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து வளைத்து ஒடித்து ஓட்டினான். எதிரே வந்த சேவல் கிளர்ந்த படி பறந்து சென்று விறகுப் பரண் மேல் உட்கார்ந்தது.

வேணி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றாள். கோழிக் குழம்பு அப்படியே இருந்தது. அதனை எடுத்து பெரிய எவர் சில்வர் கிண்ணத்தில் சாய்த்தாள். அடுத்த தெருவில் இருக்கும் அவள் தங்கை ராகினியின் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். மகன் செய்ததைச் சொல்லி விட்டு உட்கார்ந்தாள்.

“அவன் எப்படி செஞ்சாலும் நீ அவனை விட்டுக் குடுக்க மாட்டியே...!” ராகினி அக்கா சொன்ன குறையைக் கேட்டு கேலியாகச் சொன்னாள்.

“என்னடி பண்றது?” குரலில் கவலை ஆட்கொண்டிருந்தது.

“அக்கா...நீ செய்யிறது சரியில்லே! அவன் எதுக்கு இப்போ கோடியக்கரைக்குப் போனான்?”

“சும்மா சுத்திப் பாக்கனும்னான்.”

“அதெல்லாம் அவ்வளவு நல்ல இடம் இல்லை!”

வேணி அதற்கு பதில் சொல்லாமல் அவளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.

இரவு ஒன்பது மணியைத் தொட்டதும் மனசு படபடக்க ஆரம்பித்தது. ராகினி சொன்னதே நினைவில் வந்து போனது. ‘அப்படியாக இருக்குமோ!’ அவளது தம்பி கடத்தல்காரர்களுக்கு உதவியாக இருந்து நிறைய சம்பாதித்தான். பிறகு கடத்தல் கும்பல்களுக்குள் போட்டி வந்து தம்பியைத் தீர்த்துக் கட்டி விட்டார்கள். ஆந்தை ஒன்று வாசலுக்கு மேல் இரட்டைக் கத்தலுடன் பறந்து சென்றது. இரண்டு முறைக் கத்தினால் கலகம்! ஐயையோ...! வேணி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். கதவைச் சாத்தி பூட்டினாள். சுரேஷ் வீடு அடுத்த தெருவில் உள்ளது. மணி குடும்பத்தாருடன் இவள் பேசி இரண்டு வருடமாகிறது. சுரேஷ் வீட்டுக்குப் போவது என்றே தீர்மானித்தாள். அதற்குள் முகுந்தன் எந்தப் பிரச்சினையுமின்றி வீடு திரும்ப வேண்டும் என முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைப்பதாக வேண்டிக் கொண்டாள். அவர்களது குல தெய்வம் வீரனார். போன வாரம்தான் மகன் கிணற்றில் கால் இடறி விழுந்ததற்கு பிழைத்தால் வீரனாருக்கு இரட்டைக் கிடா வெட்டுவதாக வேண்டிக் கொண்டாள். அதனால் இப்போது வேறு தெய்வம். மண் சாலையைக் கடந்து தெரு விளக்கின் அடியில் புளிய மரத்தடியில் துண்டு விரித்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“வேணியக்காவா?” மரத்தடியிலிருந்து ஒரு குரல்.

“யாரது... சீனியா?”

“ஆமாக்கா...” எழுந்து இவளருகே வந்தான்.

“என்னக்கா... இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டே...!”

“இந்தப் பய மத்தியானம் பன்னெண்டு மணிக்கிப் போனவன் இன்னம் காணும்டா...” முடிப்பதற்குள் அழுகை முந்திக் கொண்டது. உடல் லேசாக நடுங்கத் துவங்கியது...மூக்கைச் சிந்தி முந்தானையில் துடைத்தாள். முகுந்தனுக்கு ஏதோ ஆகிவிட்டதாய் உள் மனசு பயம் காட்டிக் கொண்டிருந்தது.

“அதுக்கு ஏன் அழுவுறே? பயலுகளோட சுத்திட்டு திரும்பி வந்துருவான். அவன் நம்பர் இருக்கா?”

“இல்லடா... முந்தா நேத்துதான் என்னோட போன் தொலைஞ்சு போச்சு. புதுசா ஒண்ணு வாங்கித் தரேன்னான்.” இப்போது அழுகை தாராளமாக வந்தது.

மரத்தடியில் உட்கார்ந்தவர்கள் ஒவ்வொருவராக இவர்களிடம் வந்து குழுமினார்கள். சீனி அவர்களிடம் இவளது பிரச்சினையை எடுத்துச் சொன்னான்.

“அடப் பாவமே! முகுந்தன் படிச்ச பயலாச்சே... அப்படியெல்லாம் போக மாட்டானே!” என்றான் இப்போதுதான் திருமணமான நாகராஜ்.

“சுரேசு...மணிப்பயளுக்கெல்லாம் கொஞ்சம் அத்துப் படிதான்!”

“சீனி... அந்தக்கா வேறே பயந்து போயிக் கிடக்கையிலே நீ வேறே பயம் காட்றியா?”

“இப்ப என்னடா செய்யலாம்? அவன் நம்பரு வேற யார்கிட்டயும் இல்லையே...!”

“மணிப் பய நம்பரு என்ன கிட்ட இருக்கே...!” நாகராஜ் சொல்லவும் எல்லோருக்கும் கொஞ்சம் உயிர் வந்தது. அவனிடமிருந்த போனை ஆளாளுக்கு பிடுங்க முயற்சிக்க நாகராஜ் யாருக்கும் கொடுக்காமல் மணிக்கு முயற்சித்தான். எல்லோரும் தலையை நீட்டி அவனையே பார்த்தார்கள். ஊரில் புறச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்க ஆரம்பித்தது. அவ்வப்போது சீறிட்டுப் பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் வெளிச்சம் இவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. ஆங்காங்கே நாய்களின் சத்தம் விட்டு விட்டுக் கேட்டது. தூரத்து கரும்பு வயல்களில் நரிகளின் ஊளைச் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“என்னடா சொல்றான்?”

“ஆமா... போன், தொடர்பு எல்லைக்கு வெளியில இருக்குன்னு வருது!”

“பேண்டு கால் சட்டைக்குள்ள போட்டிருந்தாலும் அப்படித்தாண்டா வரும்! இங்க கொண்டா நா டிரை பண்ணி பாக்குறேன்.” சீனி பிடுங்க எத்தனிக்க போன் ஒலித்தது.

“அடிக்கிறாண்டா..!.” அனைவரும் ஒரு சேரக் கத்தினார்கள். வேணி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மணியா...? சரி...சரி. அப்படியா! சரி சரி! எப்போடா? அட...! ம்.... ம்...ஆங்... போனை வைக்கவா? வச்சுட்டாண்டா! வேணியக்கா பயலுவ நல்லாத்தான் இருக்கிறாணுவ தா.. முத்துப்பேட்டைக் கிட்டக்க வந்துட்டாய்ங்களாம்!”

“அக்காவுகிட்ட குடுத்து பேசச் சொன்னா என்னடா...” சீனி அதட்டவும்

“அவய்ங்க மோட்டார் சைக்களிலே வரும் போது பேசுறது எனக்கே புரியலை! அதுக்கு எங்க புரியப் போவுது? யக்கா... நீ போய் வீட்ல இரு. சீனி, அக்காவைக் கொண்டு போயி வீட்டுல விட்டுட்டு வாடா.. நேரங் கெட்ட நேரமா இருக்கு!” என்றதும் சீனி சைக்கிளை எடுத்தான்.

அனைவரும் கலைந்து சிறிது தூரத்தில் சென்று தலைகளை ஒன்றாக வைத்து கிசுகிசுத்ததை போகும் போது வேணி கவனிக்கவில்லை.

வீட்டிற்குச் சென்று மணி பார்த்த போது இரண்டு முட்களும் ஒரே நேர்க் கோட்டுடன் இருந்தது. வேணி சிறிது நேரம் விழித்திருந்து அவளையுமறியாமல் கண்ணயர்ந்தாள். திடீரென கார் சத்தம் கேட்கவும் எழுந்தாள். வெளியில் லைட்டைப் போட்டு தாழ்ப்பாளை உருவினாள்... அங்கே அவள் கண்ட காட்சி...!

அம்பாசிடர் காரிலிருந்து முகுந்தன் ஒரு பெண்ணுடன் இறங்கினான்! அவனது புது மனைவி?

“பெரியம்மா... அவனை எதுவும் சொல்லாதீங்க...!” மணி ஓடி வந்து வேணியைப் பிடித்துக் கொண்டான்.

வேணி ஓடிப் போய் மகனைக் கட்டிக் கொண்டாள்! மணியும் சுரேஷும் ஆச்சர்யம் தாங்காமல் பார்த்தார்கள்.

“முகுந்தா நீ உயிரோட வந்துட்டியாடா... உம் மாமான் மாதிரி வரப் போறியோன்னு கலங்கி நின்னேண்டா... உயிரோட அருமை எனக்குத்தான் தெரியும்!” மணியும், சுரேஷும் கட்டிப் பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்திக் கொண்டார்கள். முகுந்தன் விரும்பிய பெண் தலைகுனிந்து வீட்டினுள் அடிவைத்தாள்.

முகுந்தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டான். வேணி மகனை எப்போது உயிருடன் பார்ப்போம் என ஆவலுடன் இருந்ததால்...அங்கே எந்தத் தவறும் நிகழாதது போல் இருந்ததைக் கண்டு வானத்திலிருந்த நட்சத்திரங்கள் சிரித்துக் கொண்டன! 7.2.2012

17. நிறம் மாறிய நட்பு

ராமுவின் மோட்டார் சைக்கிளுக்கு ஏழு வயதாகிறது. இந்த TVS 50 ஐ வாங்கியதிலிருந்து ஓய்வே இல்லை. வருடத்திற்கு ஒரு முறை சர்வீசுக்கு விட்டிருந்தாலும் இப்போது இப்படி நடு ரோட்டில் அவ னைக் கைவிடும் என நினைக்கவே இல்லை. மளிகைப் பொருட்கள் அதில் இருந்தது. சிறிய மளிகைக் கடை வைத்திருப்பவன் ராமு. இப்படி அடிக்கடி தொந்தரவு கொடுத்தால் என்னதான் செய்வது? அவன் பிழைப்பு என்னாவது? ஒரு மர நிழலில் நின்றவனை ரோட்டில் வருவோர் போவோர் வேடிக்கை பார்க்க நேரமின்றி அவரவர் வாகனங்களில் பறந்து கொண்டிருந்தார்கள்.

பதினோரு மணி வெயிலைப் பற்றி உங்களிடம் சொல்லவே வேண்டியதில்லை. சே! என்ன பிழைப்பு இது?

கடையில் மனைவி நின்று கொண்டிருப்பாள். வீட்டில் சமையல் வேறு செய்ய வேண்டும். என் எதிரே ஒரு Xylo கார் மெதுவே வந்து நின்றது. யாரேனும் வழி கேட்க நிறுத்துகிறார்....கார்க் கதவைத் திறந்து கொண்டு சூரியக் கண்ணாடி அணிந்து, ஜீன்ஸ் டி ஷர்ட் சகிதம் இறங்கிய ஒருவர் என்னருகில் வந்தார்.

“என்னடா பாத்துக்கிட்டே இருக்கே...!’ குரலைக் கேட்டதும் அடையாளம் கண்டு கொண்டேன்.

“சுரேஷ்....!” விழிகள் விரிய வாய் பிளந்தேன். அவன் சினிமா டைரக்டர் சுரேஷ். என் பால்ய நண்பன். பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.

“என்ன இந்த நடு ரோட்ல நின்னுக்கிட்டு இருக்கே?” அவனைத் தொடர்ந்து இருவர் இறங்கினர்.

“பைக் ரிப்பேர். நீ எங்கே இந்தப் பக்கம்?”

“பக்கத்துல உள்ள கயறு தொழிற்சாலையிலதான் ஷூட்டிங். எங்க மாமா கயறு தொழிற்சாலைதானே! இப்படியே சும்மா இருக்கப்போ ஊரைப் பாத்துட்டு வரலாம்னு கிளம்பினேன். ராமு நீ இன்னும் மளிகைக் கடையேதான் வெச்சிருக்கியா? இவன் பி.ஏ எகனாமிக்ஸ்.காலேஜ்ல யுனிவர்சிட்டி தேர்ட் ரேங்க். ஐயா ரெண்டு சப்ஜெக்ட்ல அரியர்!” சிரித்தவாறே தன் சகாக்களிடம் காலரை உயர்த்திச் சொன்னான்.

‘சரி இப்படியே ஓட்டிடறதுன்னே இருக்கியா? ராமு, நீ சென்னைக்கு வாயேன். அங்கே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல கடை வெக்கலாம்.” ராமுவின் தோளைத் தட்டியவாறே சொன்னான் சுரேஷ்.

“எனக்கு சென்னை ஒத்துவராது சுரேஷ்.” ராமு சொன்னதும் பக்கத்திலிருந்தவனிடம் சுரேஷ் ஏதோ சொல்லவும் அவன் காருக்குள் சென்று சிறிய அட்டை ஒன்றை எடுத்தது வந்தான்.

“இந்தா என்னோட விசிட்டிங் கார்ட்! நீ நல்லா யோசிச்சு அப்புறமா ஒரு முடிவுக்கு வா!”

“சுரேஷ்... அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுப்பா!” ராமு மறுபடியும் சொன்னான்.

“என்ன சார் நீங்க! சார் இது மாதிரி எத்தனை பேருக்கு உதவியிருக்கார்.” என்றான் உதவியாளன்.

“அப்ப நா வர்றேன் ராமு.”

“வீட்டுக்கு வந்துட்டுப் போயேண்டா..” என உதட்டு நுனி வரையே வந்த வாசகம் மீண்டும் உள்ளே போயிற்று. அவன் இன்று இருக்கும் நிலை என்ன?

“சரிடா.” என்று மட்டுமே முணு முணுக்க முடிந்தது.

சுரேஷ் ராமுவின் தொடக்கப்பள்ளி நண்பன். நடுத்தரக் குடும்பம். ராமுவின் தந்தை ஊரில் பெட்டிக் கடை வைத்துக் குடும்பம் நடத்தினார். ராமுதான் கடைக்குட்டி. அவனுக்கு முன் மூன்று பெண்கள். உயர் நிலைப் பள்ளிப் படிப்புடன் படிப்பை நிறுத்தி, தம்பியைப் படிக்க வைத்தார்கள். ராமு பி.ஏ படிப்பில் உயர்ந்த போது தந்தை காலமானார். அக்காமார்களை கரை சேர்க்க பெட்டிக் கடையை மளிகைக் கடையாக உயர்த்தினான்.

அதில் வந்த வருமானத்தை வைத்தே சிரமப்பட்டு மூவரையும் கரை சேர்த்தான். அவனும் திருமணம் செய்து கொண்டான். சுரேஷ் அவனோடு படித்த போது கவிதை, கதை, நாடகம் என கவனம் செலுத்தினான். படிப்பு சற்று ஒதுங்கிக் கொண்டது. வீட்டில் சுரேஷை ராமுவுடன் ஒப்பிட்டே திட்டு வார்கள்.

வீடு வந்ததும் வசந்தியிடம் ஒன்று விடாமல் சொன்னான்.

“என்னங்க நீங்க? வந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது. போய்த்தான் பாருங்களேன்.” ஆவல் ததும்பச் சொன்னாள் வசந்தி.

“சென்னையில எனக்கு என்ன புரியும்? இங்கே மளிகைக் கடை வைக்கிறதும் சென்னையில ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடை வைக்கிறதும் ஒண்ணா? நமக்கெல்லாம் ஒத்து வராது வசந்தி!”

வசந்தி கணவனை சற்று விட்டுப் பிடிக்க நினைத்தாள். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பேச்சை எடுத்தாள். ராமு சற்று அசைந்து கொடுத்தான். ஒரு வாரத்தில் ராமு சென்னைக்குச் செல்வது என முடிவாயிற்று. இங்கே மளிகைக் கடையை வசந்தி கவனித்துக் கொள்வது. சென்னையில் ஓரளவு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும் வசந்தியை அங்கே அழைத்துக் கொள்வது என முடிவாயிற்று. ராமு சேமிப்புக் கணக்கில் உள்ள பணம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டான். மனைவி பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டு நல்ல நாள் பார்த்து சென்னைக்கு ரயில் ஏறினான்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த பங்களாவின் எதிரே ஆட்டோவில் போய் இறங்கிய போது அதிகாலை ஐந்தரை மணி. கேட்டருகே பதினைந்து பேருக்கு நின்றிருந்தார்கள். வாட்ச் மேன் பிடித்துத் தள்ளினான். ராமு விசிட்டிங் கார்ட் எடுத்துக் காட்டினான். கார்ட் வழி கொடுத்தது. உள்ளே போக பதினைந்து நிமிடமானது. வீட்டில் ஆங்காங்கே வேலையாட்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

“ஹல்லோ சார். சார் சொன்னாரு நீங்க வருவீங்கன்னு! தூங்கிட்டேன் சார். ராத்திரி ரெண்டு மணிக்குத்தான் படுத்தேன்.” என்றவாறே உதவியாளன் வந்தான்.

“உங்க பேர் என்ன...?” ராமு கேட்க, பெட்டி அவன் கைக்கு மாறியது.

“சேகர் சார்.” அவன் பின்னோடு சென்றான். “சுரேஷ் எங்கே இருக்கான்?”

“அவரு மும்பை போயிருக்கார்.” ஹாலின் வலது புறமிருந்த லிப்டில் ஏறினோம்.

“என்னை வரச் சொன்னானே...!” இரண்டாவது தளத்தில் லிப்ட் நின்றது. இடது புறமிருந்த அறையைத் திறந்தான்.

‘சொல்லிட்டுத்தான் போனார். ஒரு ஹிந்திப் படம் புக் ஆகும் போலத் தெரியுது. அதுக்காக கதை டிஸ்கஷன் போயிருக்கார். உங்களுக்கு வந்து ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்கார். சார் வாக்குக் குடுத்தா கண்டிப்பா நிறைவேத்தி வச்சிருவார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு எதுனா வேணும்னா இந்த பட்டனை அழுத்துங்க.” சொல்லி விட்டு சாவியை அவனிடம் நீட்டி விட்டு வெளியேறினான்.

ராமு அருகிலிருந்த கட்டிலில் உட்கார்ந்து அறையை சுற்றிலும் பார்த்தான். அவனது தேவைக்கும் அதிகமான வசதி இருந்தது. மின் விசிறியைப் போட்டு கட்டிலில் சாய்ந்தான். சிறு வயது நினைவு எட்டிப் பார்த்தது.

சுரேஷ் தொடக்கப் பள்ளியில் இவனிடம் காப்பி அடித்தே பரீட்சை எழுதுவான். அப்போதெல்லாம் படிப்பு மட்டும்தான் உலகம் என்றெண்ணிய காலம். ராமு வகுப்பில் முதல் மாணவன். அதனால் எல்லோரிடமும் அவனுக்கு மரியாதை இருந்தது. ஆனால்... இப்போது இந்த அறையில் யார் யாருக்காக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது? காலம் எதுவும் செய்யும். முதலில் ஓடத்தில் வண்டி ஏறியது. இப்போது வண்டியில் ஓடம் ஏறுகிறது!

ராமுவுக்கு நேரத்திற்கு காபி சாப்பாடு என வந்தது. டி.வி பார்த்தான். ஒரு நாள் மட்டும் அந்த அறையில் அடைந்து கிடக்க முடிந்தது. மறு நாள் கீழ்த் தளத்தில் இறங்கி உட்கார்ந்து கொண்டான். சினிமா சம்பந்தப் பட்டவர்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். ராமு அவர்கள் பேசுவதைக் கேட்டு புரியாமல் விழித்தான். மறு நாளும் அதே மாதிரி வந்து உட்கார...சுரேஷின் உதவியாளர் ஒருவன் அருகில் ஓடி வந்தான்.

“சார்.. நீங்கதான் சாரோட நண்பரா?” என்றான். ராமு ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான்.

“சார், ஒரு பையன் ஊருக்குப் போயிட்டான். இன்னிக்கு ஷூட்டிங் போயாகணும். உங்களோட உதவி கொஞ்சம் தேவைப் படுது. நீங்க வர்றீங்களா?”

கெஞ்சியது போல் கேட்க, ராமு ஒத்துக் கொண்டு பயணத்திற்கு உரிய ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தான்.

மகாபலிபுரம் செல்லும் வழியில் உள்ள பங்களாவில் படப் பிடிப்பு. சுரேஷ் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்தை அவனது பிரதான உதவியாளன் இயக்குகிறான். ராமுவின் வேலை கண்டின்யுனிடி. அதாவது ஒரு காட்சியில் நடிகர்கள் என்ன உடை, தலை அலங்காரம் செய்திருக்கிறார்கள்; அறையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பதிவு செய்து மீண்டும் அந்தக் காட்சியின் இணைப்பில் அதனை எடுத்துச் சொல்வது. ராமுவுக்கு நேரம் போவதே தெரியவில்லை. உரிய சம்பளமும் கிடைத்தது.

அன்று இரவு பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்பினான். விடியற்காலம் நான்கு மணிக்கே எழ வேண்டுமாம். மனைவி பிள்ளைகளுடன் பேசவே நேரமில்லை. இரண்டு நாட்கள் சென்றே பேசினான். நிலைமையை விளக்கிச் சொன்னான். அதன் பிறகு தொடர்ந்து படப் பிடிப்பு இருந்தது. ராமு காட்சிகளை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான். தனக்குத் தெரிந்த யோசனைகளையும் உதவியிடம் சொல்ல ஆரம்பித்தான். அனைவரும் அவனை வியப்புடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

இரண்டு வாரம் சென்றது. ஒரு சிக்கலான காட்சிக்கு விடை தெரியாது உதவி விழித்த போது ராமு சுலபமாய் காட்சியை விவரித்தான். உதவி ராமுவைக் கட்டியணைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

“இத்தனை திறமையையும் மறைச்சு பொட்டலம் மடிச்சுக்கிட்டிருந்தீங்களா சார்..!” என படப்பிடிப்புக் குழுவே வியந்தது.

ராமுவை உதவி இயக்குனர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டார்கள். மளிகைக் கடை மறந்து போனது. சுரேஷுக்கு தொலை பேசி மூலம் விஷயத்தைச் சொல்ல தான் ராமுவிடம் நேரில் வரும் போது பேசுவதாகத் தெரிவித்தான். ராமு... இயக்கம், கேமரா கோணங்கள், வசனம், மேக்கப் என எல்லா படப்பிடிப்புக் கல்வியும் கற்கத் துவங்கினான். ஒரு வழியாக அடுத்த வாரம் சுரேஷ் வரப் போவதாக பேச்சு அடிபட்டது. ராமு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான்.

“கண்டிப்பா உங்களை, சார் மளிகைக் கடை வைக்கவே விட மாட்டார் சார்!” என தோளில் தட்டினான் உதவி இயக்குனர்.

அன்று வழக்கம் போல் படப்பிடிப்பு முடிந்து இரவு ஒரு மணிக்குத்தான் கண்ணயர்ந்தான். உறங்கிக் கொண்டிருந்தவனை அழைப்பு மணி வெகு நேரம் அழைத்தது. ராமு வாரிச் சுருட்டி எழுந்து மணி பார்த்தான். நான்கு இருபது. கதவு திறக்க எதிரே உதவியாளன் சோர்வான முகத்துடன்.

“என்ன சேகர்?”

“சார் நைட் வந்தார். உங்களை ஊருக்குப் போக டிக்கெட் எடுத்துக் குடுக்கச் சொல்லிட்டாரு...!”

“ஏன்...?”

“................”

“சொல்லு சேகர்!”

“மளிகைக் கடைல பொட்டலம் போட்டவனுக்கு சினிமாவைப் பத்தி என்னடா தெரியும்னாரு!”

ராமு எதுவும் பேசவில்லை. “டிக்கெட்டைக் கிழிச்சுப் போடு! அவன் இல்லாம எனக்கு பிழைக்கத் தெரியும்!”

என்று மட்டும் சொன்னான் ராமு! 1.3.2012

18. பசி

தேவகி கணவனையும் குழந்தையையும் அலுவலகம், பள்ளி என அனுப்பி விட்டு, மீதமிருந்த வீட்டு வேலைகளைக் கவனித்தாள். கைப் பேசி அழைக்கவும் கையிலெடுத்து திரையை நோக்க சுமி என்றிருந்தது.

இப்போ என்னத்திற்கு அழைக்கிறாள்? “என்னக்கா?” என்றாள்.

“நீ அன்னிக்கு சொன்னியே பதார்த்தம்..” என மறு மொழி வந்தது.

“அதுக்கென்ன இப்போ?”

“அதுக்கு எல்லா பொருட்களும் வாங்கிட்டேன். நீ வந்து செய்து...”

“அக்கா, இப்போ நா அவசரமா ஒரு வளை காப்புக்குப் போயாகணும்! ரொம்ப வேண்டியவங்க. இதோ, குளிச்சிட்டு கொஞ்ச நேரத்தில ரெடியாகணும். நீ வேற தொனப்பாதே!” அவளிடம் சொல்லாமலேயே கைப் பேசியின் தொடர்பைத் துண்டித்தாள்.

“இவளுக்கு வேற வேலையே இல்லை. பத்திரிகையில படிப்பதை வேகப் பண்ணி தின்றாக வேண்டும்!’ தனக்குள் பேசியவாறே வேலையில் கவனமாய் இருந்தாள். அழைப்பு மணி ஒலிக்கவும் ஜன்னல் வழியே பார்த்து கதவு திறந்தாள். எதிர் வீட்டு பவித்ரா.

“வாங்க, பவி... நீங்க ரெடியாயிட்டீங்க! எனக்கு எங்கே ஒழியுது... நா இன்னும் குளிக்கவே இல்லையே!”

“அப்படியா...சரி, வீட்ல இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. இதோ முடிச்சிட்டு வந்துடறேன். குளிச்சிட்டு, சாப்பிடுங்க. நா அப்புறமா வரேன்.” எழுந்து வெளியே போகவும் கதவு சாத்தி, குளிக்கப் போனாள். பத்து நிமிடத்தில் குளித்து, உடை மாற்றி, தட்டில் உப்புமாவை எடுத்து வைத்த போது மீண்டும் அழைப்பு மணி! ‘யாராய் இருக்கும்?’ தேவகி கதவு திறக்க, “நீங்க எலக்ட்ரிக் பில் கட்டிட்டீங்களா?” மேல் வீட்டு ரகு.

“அடடா... மறந்தே போய்ட்டேனே! இன்னிக்கு கடைசி டேட். நீங்க கட்டிட்டீங்களா?”

“நா வேலைய முடிச்சிட்டேன். உங்களை இ.பி ஆபீஸ்ல கேட்டாங்க. இன்னும் டூ அவர்ல டிஸ் கனெக்ட் பண்ணிடுவாங்களே...!” மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான்.

‘ரா...ஸ்கல்ஸ்!’ மனசுக்குள் சொல்லி, “பரவாயில்லே, இதோ போயிடறேன்.”

‘இந்த வீட்டிற்கு குடி வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவனுக்கு இது போன்ற வேலைக்கெல்லாம் நேரம் இருக்காது. பிள்ளைகள் சிறு வயதினர். அதனால் எல்லா வேலைகளையும் அவளே பார்க்க வேண்டிய கட்டாயம்! இந்த ரகு, எப்போதும் இப்படித்தான். உதவி செய்வது போல்... பாவனை செய்து, இவளால் முடியாத வேலைகளைச் சொல்லிக் காண்பிப்பான். அதில் ஒரு அல்ப திருப்தி! தேவகி, இப்போது ‘வளைகாப்பா? இ.பி பில்லா?’ எனும் குழப்பத்தில் இருந்தாள்.பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. இரவு இரண்டு சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டது. இப்போது சாப்பாடா முக்கியம்? உப்புமாவை மூடி வைத்து விட்டு, கதவைச் சாத்தி, பவித்ரா வீட்டிற்கு ஓடினாள். விஷயத்தைச் சொன்னாள்.

“இப்போ என்ன பண்றது பவி!”

“ இதுக்காக ஏன் பதற்ரீங்க? வளைகாப்புக்கு போற தெருவுக்கு அடுத்த தெருவுலதானே இருக்கு இ.பி ஆபீஸ். வரும் போது பணத்தைக் கட்டிட்டு வந்துடுவோமே!” பவித்ரா சொன்னது மனதுக்குப் பிடித்தது.

“சரி, எனக்குப் பதட்டத்தில ஒரு நிமிஷம் எதுவுமே புரியலை! பில் கட்டலைன்னா எங்க வீட்டுக்கார்ரு என்னை உண்டு இல்லேன்னு பண்ணிடுவார்!” நெஞ்சில் கை வைத்தவாறே சொன்னாள்.

“வீட்டைப் பூட்டிட்டு சீக்கிரமா கிளம்புங்க...”

“இதோ, ஒரு நிமிஷத்தில...!” பரபரப்புடன் ஓடினாள்.

வீட்டருகே சென்ற போது மயக்கம் வந்தது. ஒரு செம்பு தண்ணீர் எடுத்துக் குடித்தாள். காலியான வயிறு தண்ணீரைக் கண்டதும் வலியெடுத்தது. மணி பார்த்தாள். பதினொன்று நாற்பது. பணம் எடுத்துக் கொண்டு, கைப்பையுடன் கதவு பூட்டி படியிறங்கினாள்.

வளைகாப்பு வைபவத்தில், கூட்டம் அதிகமாய் இருந்தது. எல்லோரும் பெண்ணுக்கு ஆசீர்வாதம் செய்ய வெகு நேரமாகிவிடுமே...”பவி, எனக்கு நேரமாகிடும்! இந்த பணத்தை நீங்களே வச்சுக் குடுத்துடுங்க. நா கிளம்பறேன். வீட்டுக்காரங்க கிட்டே சொன்னா, சாப்பிட்டுட்டு போகலாம்பாங்க! எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை!” கூட்டத்தில், தன்னை யாரும் கவனிக்கா வண்ணம் எழுந்து வெளியில் வந்தாள்.

மின்சார அலுவலகம் மக்கள் வரிசை பாம்பு வடிவில் நெளிந்து வளைந்திருந்தது. தேவகி வரிசையின் இறுதியில் போய் நின்று கொண்டாள். எப்படியும் இன்று பணம் கட்டியே தீர வேண்டும்! மர நிழலை அடுத்து வரிசை வெயிலுக்குப் போனது.

“அடடா! இந்த அம்மாவைப் பாருங்கப்பா!’ வயதான பெரியவர் பதறினார்!

“தண்ணி கொண்டு வாங்கைய்யா...!” அருகில் நின்ற பெண் எல்லோரையும் அதட்டினாள்.

தேவகி, மயக்கமாகி விழுந்திருந்தாள்! கரு விழிகள் மிரண்டது... அலுவலகத்திலிருந்த பானையில் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் அடித்தார்கள்! தேவகி கண் விழித்தாள். மரத்தினடியில் இருந்த பெஞ்சில் அவளைக் கிடத்தியிருந்தார்கள். கூச்சமாய் உணர்ந்தாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திருக்கக் கூடாதாம்மா... பாருங்க, தலை அந்தக் கல்லுல அடி பட்டிருந்தா என்னாகும்?” யாரோ ஒரு பெரியவர், உரிமையுடன் சொல்லி,

“அட்டையைக் குடுங்கம்மா, நானே கட்டிட்டு வந்துடறேன்.” என்றார்.

“ரொம்ப நன்றிய்யா.” அவரை வணங்கினாள்.

“என்னம்மா..! எம் பொண்ணா இருந்தா செய்ய மாட்டேனா!?” பணமும், அட்டையும் கை மாற பத்து நிமிடத்தில் வேலை முடித்து வீடு திரும்ப.. ‘என்ன அங்கே கூட்டம்?’ ஓடினாள். பத்துப் பதினைந்து பேர் நின்றிருந்தார்கள்.

“பாவம், எத்தனை பாசமா வளர்த்தான்... அதுதான் அவனால தாங்கிக்கவே முடியலை!”

“என்ன... என்னாச்சு!?” தேவகி கூட்டத்தை விலக்கிப் பார்த்தாள். அவர்களது இரவுக் காவலன் சுருண்டு போய்க் கிடந்தான்.

‘அவனோட பேரன் நாலு நாளைக்கு முன்னாடி இறந்து போய்ட்டான் இல்லையா... அதுலேர்ந்து சாப்பாடே சரியில்லையாம், தேவகி. இன்னைக்கின்னு யார் வீட்லயும் சாப்பாடே இல்லை!”பக்கத்து வீட்டு அம்மாள் வருத்தமாய்ச் சொல்லவும்...

“அப்படியா! எங்க வீட்ல இருக்கு எடுத்திட்டு வர்றேன்.”

தேவகி நடையில் வேகம் கூட்டி, சிறிது நேரத்தில் திரும்பினாள்.

கையில் தண்ணீர் பாட்டிலுடன், காலையில் அவள் சாப்பிட வைத்திருந்த உப்புமாவும் இருந்தது! 31.11.2012

19. பெரிதினும் பெரிது

“நல்லாக் கேட்டுக்க ....வெங்கடேஷ், நாலு மணிக்கு கடைக்கு கண்டிப்பா வருவான். திரும்பப் போகும் போது ஒரு ரெண்டு நிமிஷத்துக்குப் பிறகு நீ பின்னாடியே போறே...உனக்குப் பின்னாடி நாங்க வர்றோம். அந்த மதகுப் பாலத்துக் கிட்டே வச்சு அவன் கதையை முடிக்கிறோம்!” கிருஷ்ணன் சொல்லவும் பாலு இடை மறித்தான்.

“எனக்கென்னவோ பயமாயிருக்கு மாமா... அவன்...”

“அதான் நாங்க இருக்கோம்ல...” ராபர்ட் உற்சாகமூட்டினான்.

“ இல்ல இப்பத்தான் முதல்ல...” பாலு குளறவும்...

“டேய்...சரியான தொட நடுங்கியா இருக்கான்டா இவன்! இவன் கதையை...” என கிருஷ்ணன் பயம் காட்ட

“ஐயையோ...! என் கதையா? வேணவே வேணாம்! உங்களைக் கும்பிட்டு கேட்டுக்கறேன்!” தலைக்கு மேல் கும்பிடு போட்டான் பாலு.

“மவனே...அப்பிடி வா வழிக்கு!” கிருஷ்ணன் பாலுவின் தோளில் தட்ட அவன் கை இரும்பினால் செய்தது போல் இருந்தது.

“சரி, எல்லாரும் கிளம்புவோம். சொன்ன நேரத்துக்கு கண்டிப்பா வர்றோம்.”

பூம் பூம் மாடு கணக்காய் தலையாட்டினான் பாலு. பாலுவின் தந்தையை வெங்கடேஷின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்து விட்டார்! இதற்கு முன் வெங்கடேஷின் தாத்தாவை பாலுவின் தாத்தா கொலை செய்திருந்தார். அதற்கு பதிலாகத்தான் வெங்கடேஷின் தந்தை கொலை! இப்போது மூன்றாவது தலை முறையாகப் பழி தொடர்கிறது! கொலை செய்பவர்கள் அனைவருமே பொருளாதார பலம் பெற்றதால் கொலைக்குப் பின் பழியிலிருந்து தப்பிப்பது எளிதாகி விடுகிறது.

பாலு சிறு வயதிலிருந்து வெளியூரில் படித்து வந்ததால் அவ்வளவாய் ஊர் அனுபவம் கிடையாது. விடுமுறைக்கு சித்தி, பெரியம்மா வீடு எனப் போய் விடுவான். அம்மா ஊர்ப் பிரச்சினை அறியாது அவ னைப் பொத்தி வளர்த்தாள். கிருஷ்ணன் அவனின் தாய் மாமன். அவனது நண்பன்தான் ராபர்ட்.

பாலுவுக்கு இந்தக் கொலையில் கொஞ்சம் கூட விருப்பமில்லை! ஆனால் ஊர் வழக்கம் என்று ஒன்று உள்ளதே! கோவிலுக்கு ஆட்டுக் கிடா வெட்டி பலியிடுவது போல் இந்தப் பகுதிக்கு ‘கொலை’ சாதாரணமான ஒன்று. பழி வாங்கல் பாரம்பரிய வழக்கம்! பாலு ஊரிலேயே இருந்திருந்தால் அவனுக்கும் கொலை வெறி தானாகவே உருவாகி இருக்கும்! இங்கே கொலை செய்யாத குடும்பத்தை விரல் விட்டு எண்ணி விடலாம்! அவர்களைக் கோழையைப் போல் நினைப்பார்கள். அவர்களைக் கொலை செய்யும் குடும்பத்தார் ஒரு ‘மாதிரி’யாகப் பார்ப்பார்கள். ஊரின் தன்மை அப்படி!

‘என்ன செய்யலாம்? வெங்கடேஷைக் கொலை செய்தால்... நிச்சயம் சில வருடங்களில் நானும் கொலை செய்யப் படுவேன். அவனைக் கொலை செய்யா விட்டால் சமூகக் குற்றம் வந்து விடும்.’ இருந்தாலும், தன் தந்தையைக் கொலை செய்ததை நேரில் பார்த்ததால் அவனுள்ளும் அந்த துடிப்பு லேசாய் இருக்கத்தான் செய்தது!

இன்று... திட்டமிட்டவாறு கொலை செய்யும் நாள்! காலையிலிருந்து ஒரு தோப்பில் வைத்து மறுபடியும் திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது! கத்தியை எப்படி சொருக வேண்டும்? எப்படி உருவ வேண்டும்? என பயிற்சி நடந்தது. பிராந்தி பாட்டில்கள், கோழி பிரியாணி என அந்த இடமே அமர்க்களப் பட்டது.

பாலு இப்போது கொலையாளி ஆகியிருந்தான். அந்த அளவுக்கு இரண்டு வாரமாக ‘மூளைச் சலவை’ செய்யப் பட்டிருந்தான்.

திரும்பத் திரும்ப அவன் தந்தையின் கொலை விவரிக்கப் பட்டிருந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேரும் பயணித்து கடைத் தெரு வந்தார்கள். மூவரின் இடுப்பிலும் கத்தி சொருகப்பட்டிருந்தது. முழுதாக ஒரு அடி நீளம்! பரோட்டாக் கடையில் மைதா மாவு பிசைந்து கொண்டிருந்தவர் இவர்களை வழக்கம் போல விசாரித்தார்.

அருகில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் இருந்தது. கொலை செய்தவர்களை நேரில் பார்த்த சாட்சிக்கு நாளை போலீஸ் இவர்களை விசாரணைக்கு அழைக்கும்.

நேரம் 3.15 ! இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களே உள்ளன! ‘வெங்கடேஷ்...எங்கப்பாவை உங்கப்பா எப்படிக் கொன்னார் தெரியுமா?’ பாலு பற்களை நெறித்தான்.

கிருஷ்ணனும், ராபர்ட்டும் ரோட்டில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பள்ளிக் கூட வாகனங்கள் பள்ளிகளிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தன.

அதோ... வெங்கடேஷ் வந்து விட்டான்! கிருஷ்ணனும், ராபர்ட்டும் தயாரானார்கள். பாலு இடுப்பில் சொருகியிருந்த கத்தியைத் தடவிப் பார்த்துக் கொண்டான். மாலை நேரமாகையால் போக்குவரத்து அதிகமாயிருந்தது. பரோட்டாக் கடையில் கூட்டம் சேரத் துவங்கியது. கூலி வேலைக்குச் சென்றவர்கள் ஆங்காங்கே குழுமி நின்றிருந்தார்கள். இரங்கல் செய்தி வாகனம் ஒன்று இறந்தவரின் பெயரை விளம்பரம் செய்து கொண்டு மெதுவாகச் சென்றது.

‘உன்னையும் இது மாதிரி நாளைக்கு சொல்லப் போறாங்க பாரு!’ பாலு தனக்குள் பொறுமியவாறு வெங்கடேஷை ஓரக் கண்ணால் பார்த்தான். அவன் சிரித்தபடியே பைக் அருகில் நின்று யாருடனோ கைப் பேசியில் பேசிக் கொண்டிருந்தான். கழுத்தில் கிடந்த தங்கச் செயின் வெயில் பட்டு பள பளத்தது.

வெங்கடேஷ் மணி பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தான். நான்கு மணி என்பது அவன் ‘ஒயின் ஷாப்’ போகும் நேரம். அந்த நேரத்தைக் கற்று வைத்திருந்த படியால் அவர்களுக்கு வசதியாகி இருந்தது.

நேரம் 3.40!

கொலைகாரர்கள் மூவரையும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது! வெங்கடேஷின் சிறு அசைவையும் கவனிக்கத் துவங்கினார்கள். அப்போதுதான் அவர்களின் வலது பக்கத்திலிருந்து வந்து நின்றது அந்த ஆட்டோ!

ஆட்டோவிலிருந்து நான்கு தடியன்கள் அவசரமாய் இறங்கினார்கள். அவர்களின் கையில் துப்பாக்கி! என மூவரும் உணர்வதற்குள்....நொடிக்கும் குறைவான நேரத்தில் மூவரையும் சுட்டுத் தள்ளினார்கள்! பாலு, கிருஷ்ணன், ராபர்ட்,,,ரத்த வெள்ளத்தில் துடி துடித்துச் செத்துப் போனார்கள்! அந்த இடமே அலறல் சத்தத்தில் இரண்டு பட்டது!

பாலு திடுக்கிட்டு விழித்தான்! வியர்வையில் உடம்பெல்லாம் நனைந்து போயிருந்தது. நடந்தது அத்தனையும் கனவா? மணி பார்த்தான். நான்கு மணி! விடி காலைக் கனவு பலிக்கும் என்பார்களே...! அம்மா அமைதியாய் தூங்கிக் கொண்டிருந்தாள். ‘எப்படியோ நான் வேங்கடேஷைக் கொன்றால் நிச்சயம் இது போல் கொல்லப் படுவேன்! கனவு எனக்கு உணர்த்தி விட்டது! வேண்டாம்...மன்னிப்பே உத்தமம்! மாமாவும், ராபர்ட்டும் என்னை மூளைச் சலவை செய்தது போல் நானும் அவர்களை மன மாற்றம் செய்வேன்!’ தனக்குள் சொல்லியவாறு உறுதியுடன் எழுந்தான். 2.2.2012

20. மருந்து

அனைவரும் வெளியில் வந்தார்கள். எல்லோர் முகத்திலும் திருப்தி குடி கொண்டிருந்தது. தனபால் அத்தானுக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டதாம். அக்கா பூங்கோதை கணவனது ஒப்புதலை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். மாப்பிள்ளை (இனிமேல் ஆகவிருக்கும்) ரமேஷ் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். அவனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

“என்ன ரமேஷ்....பொண்ணை உனக்கு பிடிச்சிருக்குதானே...!” முதன் முதலாக பெரியக்கா வீட்டு மாமா வாய் திறந்தார். பெண் பார்த்து சீர் எல்லாம் பேசி முடித்து விட்டார்கள். இப்போது கேட்டால் எப்படியும் ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்.

“பிடிக்கலைன்னா விடவா போறீங்க...!”

சசி டி.வியை நிறுத்தினாள். ‘ச்சே! என்ன டி.வி சீரியலோ...அரைத்த மாவையே அரைக்கிறார்கள். வித்தியாசமாய் சிந்தித்தால் என்ன...? எந்த வீட்டில் இப்போது மாமியார் மருமகள் பிரச்சினை உள்ளது? மருமகளை மாமியார் கொடுமைப் படுத்திய காலம் மலையேறி விட்டது. கேள்வி கேட்டால், ஏதோ ஓர் இடத்தில்.... நடக்கிற உண்மையைத்தானே எழுதுகிறோம் என்கிறார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதினால் என்ன? பார்க்கும் அனைவரையும் திருத்தலாமே! காலத்திற்குத் தகுந்தாற்போல் சிந்தனையும் மேம்பட்டால்தானே சமுதாயம் மறுமலர்ச்சி அடையும். சிந்தனையை வியாபாரம் செய்பவர்கள் சமுதாயத்தை எப்படி சீர் செய்ய முடியும்?

அந்தக் காலத்தில் அவ்வளவாய் படிப்பறிவில்லாமல் இருந்தது. குடும்பச் சிக்கலில் சிக்கித் தவித்தார்கள். இப்போது எத்தனையோ மாற்றம் கண்டும் இவர்கள் வீட்டுப் பிரச்சினையை வெளியில் கொண்டு வருகிறார்கள். விளம்பரம் செய்து காசு சம்பாதிக்கிறார்கள். அவ்வளவே! இதனைப் பார்த்து பெண்கள் தங்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு திருப்தி அடைகிறார்கள்.’ சசி ஒரு தொலைதூரப் பார்வையில் சிந்தனை செய்தாள்.

கைப்பேசி சினுங்கவும் எடுத்தாள். கணவன் கணேஷ் பேசினான். மாலையில் வர நேரமாகுமாம். அதனால் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் எனச் சொல்லி விட்டான். “எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்க எண்ணியவள் போனை ஆப் செய்தாள். திரும்ப முயற்சித்தால் கோபம் வரும். பிள்ளைகள் வீடு திரும்பும் நேரம் ஏதேனும் டிபன் செய்தே ஆக வேண்டும். மணி பார்த்தாள். 4.30.

அப்போதுதான் கீழே ஒரே சத்தமாக இருந்தது. சசி வீட்டைப் பூட்டி விட்டுக் கீழே இறங்கினாள். வாட்ச் மேனைச் சுற்றி ஏழெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் வாய்க்கு வந்தபடித் திட்டித் தீர்த்தார்கள்.

“என்ன நடந்துச்சு...?” சசி தாமோதரின் அப்பாவைக் கேட்டாள்.

“இவன் என்ன காரியம் செஞ்சுருக்கான் தெரியுமா? நாலு சாத்து சாத்தினாத்தான் சரியா வரும்.”

இவளிடம் எதுவும் சொல்லாமல் வாட்ச்மேனையே கரித்தவாறு நின்றார்கள்.

“யாருமில்லைன்னு இரக்கப் பட்டோம் பாருங்க. அதுக்கு கூலி குடுத்திருக்கான்.”

சசி பொறுமை இழந்தாள். எனினும் பொறுமையோடு ஸ்டெல்லாவைக் கேட்டாள்.

“பணத்தைத் திருடிட்டான் சோனு அம்மா.” பல்லைக் கடித்தவாறு கீச்சுக் குரலில் சொன்னாள்.

“ஐயையோ...! யாரோட பணத்தை...?”

“நம்ம குருநாதன் அப்பா இருக்காரில்லே... அவுரு ரெண்டாயிரத்தி சொச்சம் பணம்

வெச்சிருந்தாரில்லே ...” ஸ்டெல்லா இப்படித்தான் பேசுவாள்.

“ம்...!?”

“அதைப் பர்சிலே கொண்டு போனாரில்லே...நழுவிக் கீழே விழுந்துடிச்சு... அதை எடுத்துக் குடுக்கலாமில்லே...அதைச் செய்யாமே...இவன் வெச்சுக்கிட்டான். இவன் எடுத்ததை நம்ம பார்வதியக்கா பாத்துட்டாங்க. ஆனா அவன் அதைக் கவனிக்கலை....” வாட்ச்மேன் பாண்டியன் கண்களைக் கசக்கியவாறு அங்கே இல்லாத குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டிருந்தான். பார்வதி அங்கே கூட்டிப் பெருக்கும் பெண்.

பாண்டியனுக்கு வயது எழுபது இருக்கும். மதுரைப் பக்கம் உள்ள ஒரு கிராமம். இந்தக் காலனிக்கு அவன் வரும்போது ஐம்பதைத் தாண்டியிருந்தான். நல்ல உழைப்பாளி. பொய் பேச மாட்டான். தான் உண்டு. வேலையுண்டு என்று இருப்பான். இவனா இப்படிச் செய்தான்? யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லையே!

“பாண்டி அண்ணே... ஏன் இப்பிடி செஞ்சீங்க?” சசி அதட்டினாள்.

பாண்டியன் தலை குனிந்தவாறு நின்றிருந்தான்.

“அவனை அண்ணா போடுங்க...பெரிய இவரு!” என வாட்ச்மேனைப் பிடரியில் தட்டிவிட்டுச் சென்றான் மூணாவது மாடி டான்ஸ் மாஸ்டர் சங்கர்.

“இப்ப என்னய்யா பண்றது? எவனை நம்பி வாட்ச்மேனாப் போடறது? பழகின ஆட்களே இந்த வேலை பாத்தா...புதுசா வர்றவனை எப்படி நம்புறது?” படபடவெனப் பொரிந்தார் நிருபர் சிங்காரம்.

“போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் குடுக்க வேண்டியதுதான். அப்பத்தான் இவனை வேறே இடத்துல வேலைக்கு வெச்சுக்க மாட்டாங்க.” என்றார் தாமோதர் அப்பா.

அதுவும் நல்ல ஐடியாதான்.

“என்னன்னு கம்ப்ளைண்ட் பண்றது? இது மாதிரி ரெண்டாயிரம் பணம் எடுத்துட்டான்னா! நம்ம அப்பார்ட்மென்ட்டுக்குத்தான் கேவலம்.”

“அடிச்சுத் துரத்தி விடுங்க சார்.” என்றார் சிங்காரம்.

“துரத்தி விட்டா யார் சார் காவல் காக்கிறது? வேற ஆளை ஏற்பாடு பண்ணிக்கிட்டு போகச் சொல்லுவோம். அப்பார்ட்மென்ட் மேனேஜ்மென்ட்டுக்கு தெரியப்படுத்திட்டு முடிவு செய்வோம்.” என்றார் தாமோதர் அப்பா.

அவர் சொல்வதை ஆமோதித்தபடி அனைவரும் செல்ல பாண்டியன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

சசிக்கு பரிதாபமாகவே இருந்தது! காரணம் அவள் குழந்தைகள் இருவரையும் பாண்டியன்தான் வளர்த்தான்.

சசிக்கு வீட்டு வேலைகள் இருக்கும் போது பாண்டியன்தான் பிள்ளைகளுக்கு கார்டியன். இப்போதும் பாண்டியனை ‘தாத்தா’ என்றே பாசமாய் விளிப்பார்கள்.

மாலையில் கணேஷ் வீடு திரும்பியதும் எல்லாவற்றையும் சொன்னாள். பொறுமையுடன் கேட்டவன்,

“பாண்டியனை ராத்திரி ஒன்பது மணி வாக்கிலே வரச் சொல்.” என்றான்.

“எதுக்குங்க?” என்றாள் எதுவும் புரியாமல்.

சொன்னபடி பாண்டியன் வந்தான். கணேஷின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

“ஐயா...நா கல்யாணம் பண்ணிக்காத அருமை இப்பத்தான் எனக்குப் புரியுது. நடந்தது என்னன்னு...”

“எல்லாம் எனக்குத் தெரியும்! எழுந்திரு.”

“ரொம்ப நல்லதுய்யா...இனி நா செத்தாலும் பரவாயில்லே!”

“என்னங்க... எனக்கு ஒண்ணுமேப் புரியலையே...!” சசி இருவரிடையே நின்று குழம்பினாள்.

“குருநாதன் அப்பாவுக்கும் கூட்டிப் பெருக்கிற பொம்பளைக்கும் ரொம்ப நாளா...இது! அது பாண்டியனுக்குத் தெரியும். நேத்து ஏதோ தப்பு நடந்திருக்கணும். அதை பாண்டியன் பாத்துட்டார்.”

“எப்படிய்யா இத்தனை கரெக்டா சொல்றீங்க?”

கணேஷ் மேலும் தொடர்ந்தான்.

“ஆமா...அவங்க ரெண்டாயிரம் ரூபா எடுத்திட்டேன்னு சொன்னப்போ பேசாமே எடுத்தது மாதிரி இருந்தீங்களே...ஏன்?”

“எனக்கு சாட்சி இல்லைய்யா!”

“சரி...இதைக் கிளற ஆரம்பிச்சோம்னா நாறத்தான் செய்யும்! நீங்க கவலைப் படாதீங்க பாண்டி...ஊர்ல எங்க அண்ணா குடும்பத்தோட இருக்கார். அவருக்கிட்டே போயிடுங்க. உங்களை நாங்க கவனிச்சுக்கிறோம்.”

“ஐயா....” பாண்டியன் வார்த்தைகளின்றி கண்ணீரில் கரைந்தான். அவனது மன வேதனைக்கு மருந்தாக இருந்தது கணேஷின் வார்த்தைகள்.

21. மன்னிப்பு

குழந்தைகள் சீருடையுடன் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தனியார் பள்ளியின் எதிரே இருந்த மைதானத்தில் வண்ணக் கொடிகளின் அலங்காரம். தலைமை விருந்தினரை வரவேற்கும் விதமாக நுழைவுக் கேட்டருகே ரங்கோலிக் கோலமிட்டு அழகு படுத்தியிருந்தார்கள். ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் மேளம் முழங்கிக் கொண்டிருந்தது.

ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிதான் அது. பள்ளியின் ஒன்பதாம் ஆண்டு விழா நடக்கவிருந்தது. ஆசிரியைகளும், ஆசிரியர்களும் புத்தாடை புனைந்து முகத்தில் சந்தோஷம் நிலை பெற்றிருக்க, மாணவர்களைக் கலை நிகழ்ச்சிகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் மேடை முன் அனைத்து மாணவர்களும் அமர்ந்திருக்க, பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் அரவிந்த். அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன். இரண்டு வயதில் கார் விபத்து ஒன்றில் இடது கால் எலும்பு உடைந்து விட்டதால் வலது கால் ஒன்றே துணை. நடக்க சிரமப் பட்டாலும் படிப்பில் கவனம். வகுப்பில் முதல், இரண்டாம் இடத்தைப் பிடிப்பான். பேச்சுப் போட்டியில் முதலிடம்! வேறு பள்ளிகளுக்குச் சென்றும் போட்டியில் கலந்து கொண்டு கோப்பைகள் வாங்கியிருக்கிறான். பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறான். இன்றைய நிகழ்ச்சியிலும் ‘மன்னிப்பு’ என்கிற தலைப்பில் பேசவுள்ளான்.

அவனுக்கு இரண்டு சகோதரிகள். இருவரும் அதே பள்ளியில் படிப்பதால் அரவிந்துக்கு உதவி செய்வார்கள். அரவிந்துக்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து ஆர்வம் கொப்பளித்தது. தானும் அது போல் விளையாடவே முடியாதா என்று ஏங்கினான். அவனது முகக் குறிப்பை உணர்ந்த அவனது வகுப்பாசிரியை ரெஜினா அவனருகில் வந்தாள். வாஞ்சையுடன் தலை முடியைக் கோதினாள்.

“அரவிந்த்...உனக்கு என்ன கண்ணா வேணும்?” அரவிந்துடன் அவள் பாசமாய் இருப்பவள்.

“எனக்கு எதுவும் வேணாம் மிஸ்...“ புன் சிரிப்புடன் தலை குனிந்தான் அரவிந்த்.

மணி ஐந்து. ஆறு மணிக்கு கலை நிகழ்வுகள் ஆரம்பம். குழல் விளக்குகளும் வண்ண விளக்குகளும் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. மாணவர்களுக்கு எதிரே இருந்த கட்டிடத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் அந்த இடமே கலகலப்பாகக் காணப்பட்டது.

ஆசிரியர்கள் அங்குமிங்கும் இயங்கிய வண்ணம் இருந்தார்கள். தலைமை விருந்தினர் வரும் ஆராவாரம் கேட்டது. இரண்டு பெலோரோ கார்களும் ஒரு இன்டிகாவும் வந்து நின்றன. தலைமை ஆசிரியரும் ஏனைய ஆசிரியர்களும் விருந்தினரை வரவேற்க ஓடினார்கள். தலைமை ஆசிரியர் விருந்தினரை எதிர் கொண்டு அழைத்தார். தலைமை விருந்தினர் சுற்று வட்டாரத்தில் பிரபல வியாபாரி! அரவிந்துக்கு அவரை எங்கோ பார்த்த நினைவு வந்தது.

மேடையில் இருந்த நாற்காலியில் நடுவில் அமர்ந்தார். அரவிந்த் இப்போது அவரை நேரே பார்த்தான். சட்டென்று எழுந்த நினைவு மின்னல் அவரை அடையாளம் காண்பித்தது! இவர்தான் அவனை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போனவர்! அரவிந்த் திரும்பிப் பார்த்தான். அனைத்து மாணவர்களின் கவனமும் தலைமை விருந்தினரின் மேல் இருந்தது. அவர் அருகில் இருந்தவரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

இப்போது நன்றாக இருட்டியிருந்ததால் வண்ண விளக்குகள் அதிகப் படியான ஒளியைக் காண்பித்து பார்ப்பவர்களை பரவசப் படுத்திக் கொண்டிருந்தன. நிகழ்ச்சியின் ஆரம்பமாய் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்கள். மாணவர்களுடன் அரவிந்தும் எழுந்து நின்றான். கண்கள் தலைமை விருந்தினரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தன. நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆவதற்கான ஆயத்தங்கள் நடந்தன. முதலில் பள்ளியின் தாளாளர், இயக்குனர் எனப் பேசி முடித்து தலைமை விருந்தினர் பேச ஆரம்பித்தார்.

முதலில் மாணவர்கள் எப்படி ஆசிரியர்களிடம் நடந்து கொள்வது என விவரித்து விட்டு, பின் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நடந்து கொள்வது எவ்வாறு என எடுத்துரைத்தார். அடுத்த நிகழ்ச்சியாக பேச்சுப் போட்டி ஆரம்பித்தது. அரவிந்தன் ஒரு காலை விந்திய படி நடந்தான்...தலைமை விருந்தினர் அவனையே உற்றுக் கவனித்தார். அரவிந்தன் மைக் பிடித்து பேசக் கூட்டத்தினர் உற்சாக குரல் கொடுத்தார்கள்.

“நான் இன்று பேசவிருக்கும் தலைப்பு ‘மன்னிப்பு’ முதலில் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் தலைமை விருந்தினர் அவர்களை வரவேற்கிறேன். இவர்தான் எனது பேச்சுத் திறமைக்கு ஆசான். கால் விபத்துக்குள்ளான போது அனைவரின் இரக்கமும் என் மீது படிந்தது. கேள்விக்குறியை ஆச்சர்யக் குறியாக்கும் நோக்கில் பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டேன். தலைமை விருந்தினர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்தான்...’ எனும் போது மின்சாரம் துண்டித்தது.

தலைமை விருந்தினர் அரவிந்தின் அருகில் ஓடி வந்தார்.

“தம்பி...என்னை மன்னிச்சிருப்பா..” அரவிந்தனைத் தூக்கி உச்சி முகர்ந்தார்.

“இனி இந்தத் தப்பை ஒரு போதும் செய்யவே மாட்டேன்.!”

மீண்டும் மின்சாரம் வந்தது! அரவிந்தன் தலைமை விருந்தினரை மன்னித்தான். 9. 2 .2012

22. மாமி மெஸ்

செல்லா மாமியின் சாப்பாட்டுக் கடை ஸ்ரீரங்கத்தின் எங்கள் பகுதிக்கு மிகவும் பிரசித்தம். அதிலும் அவள் கை மணம் இருக்கிறதே...வாய் பாட்டிற்கு எதையாவது பேசிக் கொண்டே இருக்கும். கை மாத்திரம் சமையலில் கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

மனைவியிடம் கோபமாய் உள்ளவர்கள் இங்கேதான் சாப்பிடுவார்கள்.

“சீக்கிரம் ஆத்துக்காரிய அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்தப் பாருடா அம்பி.” என மனைவி இல்லாமல் சாப்பிட வருவோருக்கு புத்தி சொல்வாள். செல்லா மாமி ஒரு நடைமுறை ஞானி. நிறைய புத்தகம் படிப்பாள்.

“ஏன் மாமி, அவங்க கஸ்டமரா வந்தா உங்களுக்கு நல்லதுதானே!” என்பேன்.

“அடக் கிறுக்கா...ஆம்படையா கையால ஒரு வாய் சாப்பிடறதுக்கும் அடுத்த வீட்டு சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கு தெரியுமா? எத்தனைதான் வகையா நான் சமைச்சாலும் காசு குடுத்து சாப்பிடுறதுதானே!... உனக்கும் கல்யாணம் ஆகும். அப்ப தெரியும் ஆம்படையா கைம்மணம்!”

ஆனால்... எல்லோருக்கும் பிடிக்கும் மாமியின் கைம்மணம், அவளின் கணவனுக்கு மட்டும் வாய்க்கவில்லையே ஏன்? செல்லா மாமியைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் அறிமுகம் செய்து வைக்கிறேன்.

செல்லா மாமியின் இயற்கைப் பெயர் செல்லம். சின்ன வயதிலேயே நெருங்கிய உறவில்தான் கல்யாணமாம்! திருமணமான சில மாதங்களிலேயே அவள் கணவன் அவளை விட்டு ஓடிப் போய் விட்டானாம். அப்போது எனக்கு மூன்று வயதிருக்கும் என்றாள் அம்மா.

அப்போது ஸ்ரீராம் அவள் வயிற்றில் ஐந்து மாதமாம்...மாமியின் அம்மாவின் துணையோடு அப்பளம், வடகம், சுத்து முறுக்கு என்று பலகாரங்கள் விற்றும், சாப்பாட்டுக் கடையும்தான் தொழில்!

ஸ்ரீராம் பிறந்து, பார்வைக்கு நல்ல வெண்மை நிறமாக அழகாய் இருந்தான். செல்லா மாமி ரொம்ப எதிர் பார்ப்புடனே மகனை வளர்த்தாள். ஆனால் அவனது மூளை களிமண்ணால் நிரப்பப் பட்டது போல் எந்த வளர்ச்சியுமின்றி இருந்தது. பள்ளிப் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அனுப்பினாள் மாமி. அவன் படித்தானா? பத்து வயது வரை இரண்டாவது வகுப்பைத் தாண்டவே இல்லை! ஸ்ரீராமுக்கு சுத்தமாய் எழுதப் படிக்கவே வராது! வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாய் பலகாரம் போட்டு விற்பான். கூலி ஆட்களுடன் சேர்ந்து மூட்டை தூக்குவான். பெயிண்டிங் வேலை செய்வான். கட்டிட வேலை செய்வான்.

“இவனுக்கு யார்தான் பொண்ணு குடுப்பாங்க?” என்று கேட்டால்

“அதைப் பத்தி நான்தான் கவலைப் படணும்!” என்று மாமி வாயடைப்பாள்.

இப்போது அவளது அம்மா இறந்து போய் இரண்டு வருடங்களாகி விட்டது. ஸ்ரீராம் உடல் உழைப்பால் கை கால்கள் உருண்டு திரண்டு இளைஞனாகி, பயில்வான் கணக்காய் இருக்கிறான். இப்போதும் அதே வேலைகள்தான் செய்து வருகிறான். நாங்கள் அவனை ‘அக்ரகாரத்துப் பயில்வான்’ என்போம்.

நான் எம்.காம் முடித்து வங்கித் தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்த போது எனக்கு புனேயிலிருந்து மத்திய அரசு வங்கி வேலைக்கான உத்தரவு வந்தது. அம்மாவுடன் நம்பெருமாளை தரிசனம் செய்து விட்டு, திரும்பிக் கொண்டிருந்த போது, கடையில் நின்று மாமி என்னை அழைத்தாள்.

நானும் அம்மாவும் போனோம். “என்னடா ராசப்பா... உனக்கு வேலை கிடைச்சிருச்சாமே! கேட்டதும் எத்தினி சந்தோஷம் தெரியுமோ நேக்கு. பொதுவா எங்க ஆளுங்கதான் பேங்க் உத்யோகத்திலே அதிகம் இருப்பா! அந்தக் காலத்துல தொழிலை வெச்சு ஜாதியைப் பிரிச்சாளே...உன்னையும் ஸ்ரீராமையும் வெச்சு எப்படி ஜாதி பிரிப்பா? நல்லாரு! புத்திதான் பலம்..! ‘புத்தியுளான் பலமுளான் ஆவான். பலமுளான் புத்தியர்றால் எத்தனை விதத்திலும் இடர் வந்தே தீரும்’னு ஒரு அனுபவ வாக்கு சொல்லுது!” அம்மா அவளை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கும் அம்மாவுக்கும் டிகிரி காப்பி போட்டுக் கொடுத்தாள்.

நானும் அம்மாவும் வீடு திரும்பும் போது அம்மா மாமியைப் பற்றி பொருமியவாறே வந்தாள். மாமியை அம்மா புரிந்து கொள்ளவில்லை! பொறாமைப் படுவதாய் நினைத்து விட்டாள். அவளுக்கு எடுத்துச் சொன்னாலும் விளங்காது...

நான் சென்னை சென்று புனே ரயிலைப் பிடித்து ஒரு வாரத்தில் பணியில் சேர்ந்தேன். மொழிப் பிரச்சினை...சாப்பாட்டுப் பிரச்சினை, நண்பர்கள் பிரச்சினை என ஒரு மாதம் எனக்கு கண்ணைக் கட்டினார் போல இருந்தது. என்னோடு பணியில் உள்ள முஸ்தபா என்னை சாப்பாட்டுப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதாய் வாக்குக் கொடுத்திருந்தார். சப்பாத்தியும், காயும் என்னைக் காயப்போட்டு விட்டது. வங்கியிலிருந்து இரண்டு தெரு தள்ளி அந்த மெஸ் இருந்தது. தென்னிந்திய அய்யங்கார் ஓட்டல்!

அற்புதங்கள் சில நேரம் நடந்தே விடுகிறதே...! முஸ்தபாவைக் கட்டிப் பிடித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். “ அசைவம் எதிர் பார்க்க முடியாது.” என்றார்.

“பரவாயில்ல சார். ரசமும், சாதமும் போதும்!” என்றேன். சுமாரான நடுத்தர ஓட்டல்.

ஓட்டல் வைத்திருந்த அய்யங்கார் அன்று வெளியில் போயிருந்தார். நான்கு பேர்தான் பரிமாறினார்கள். சாப்பாடு சுமார்தான். இங்கேயெல்லாம் அம்மாவின் கைம்மணம் கிடைக்குமா? ஏனோ மாமியின் நினைவு வந்தது. அய்யங்காரும் திருச்சிதானம்! எனக்கு பழம் நழுவி வாயில் விழுந்தது. காலை டிபனும் இங்கேயே முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

மறுநாள் காலை, எட்டு முப்பதுக்கெல்லாம் ஓட்டலுக்கு ஆஜரானேன். அய்யங்கார் கல்லாவில் உட்கார்ந்து பணம் எண்ணிக் கொண்டிருந்தார். ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். நான் வந்ததை அவர் கவனிக்கவில்லை. சரி, பிறகு பேசிக்கொள்வோம் என கையலம்பி சாப்பிட உட்கார்ந்தேன். என் எதிரே நாற்காலி இழுபடும் ஓசை. நிமிர்ந்தால்...அய்யங்கார்.

“நேத்து சொன்னாங்க. உங்களுக்கு எந்த ஊர்?” அவர் என் எதிரே உட்கார்ந்தார்.

“ஸ்ரீரங்கம்.” என்று சொல்லவும் அவரது நெற்றி உடனே சுருங்கியது.

“நீங்களும் ஸ்ரீரங்கமா?” என்று கேட்டவுடன் “இருங்க...” அவசர வேலையாய்ப் போவது போல் போனார்.

நான் சாதாரணமாய் நினைத்தேன். அவரை அல்லது அவரின் சாயலை எங்கோ பார்த்தது போல் ஒரு நினைவு. மறுநாள் வந்தவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. யாரிடமும் அவர் அதிகம் பேசவும் இல்லை. சுபாவம் போலும். இரண்டு நாள் கழித்து...’யார் அது?’ கல்லாவில் உட்கார்ந்தவனைக் கண்டு அசந்தே போய் விட்டேன். அச்சு அசலாய் ஸ்ரீராமின் சாயல். என்ன, ஸ்ரீராம் தடியனாக இருப்பான். இந்தப் பையன் ஒல்லியாக இருக்கிறான். எனக்கு கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. இருந்தாலும் தீர விசாரிப்பதே மெய், எனும் அடிப்படைத் தத்துவம் நினைவில் வர...

கல்லாவின் அருகில் போனேன். அவன் ஹிந்தியில் யாரிடமோ உரையாடிக் கொண்டிருந்தான். இப்போது சரிப்பட்டு வராது. அம்மாவுக்கு போன் செய்தேன். இப்போது சொல்லக் கூடாது என்றிருந்தவன், அம்மா கூறிய செய்தியைக் கேட்டு, அதிர்ச்சியடைந்தேன். ஸ்ரீராம் போலீஸ் கேஸில் ஆஜராகி உள்ளானாம். அதிலும் தங்க பிஸ்கட் கடத்தல்! என்ன வேலை என்று கேட்காமல் போனதால் மாட்டிக் கொண்டானாம்.

“அவனோட அப்பா பேர் என்னம்மா?” என்றேன்.

“இப்போ என்னத்துக்கு அந்த படு பாவிக்காரனைக் கேக்குறே?” என சத்தம் போட்டாள்.

நான் பேச்சை முடித்துக் கொண்டேன். மறு நாள் ஓட்டலுக்குப் போன போது அவர் உட்கார்ந்திருந்தார்.

என்னைத் தொடர்ந்து சிங் ஒருவர் அவரிடம் வந்து “மிஸ்டர் பஞ்சோபகேசன்...” என விளித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மறுநாள் அம்மாவிடம் பேசிய போது ஸ்ரீராமை விசாரித்தேன். கேஸ் பலமாய் உள்ளதாம். ஸ்ரீராமுக்கு யாரும் ஆட்கள் இல்லையாம். அதனால் அவன் வெளியிலேயே வர முடியாது என்றாள்.

“அவனோட அப்பா பேரு பஞ்சாபகேசனாம்மா?” என்றேன்.

“அந்தக் கடங்காரன் பேரு அதான்! அவன் இருந்திருந்தா இந்தப் பயலுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?”

எனக்கு எல்லாமே விளங்கியது. என்னை எந்த சக்தி புனேக்கு இழுத்து வந்தது? அதுவும் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஊரை விட்டு ஓடி வந்து இங்கே எந்தச் சலனமும் இன்றி இன்னொரு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவரை நல்லவராக்கி, எந்தத் தவறும் செய்யாத செல்லா மாமியையும், ஸ்ரீராமையும் குற்றவாளியாக்கி இருக்கிறதே...

நான் அம்மாவிடம் மாமியின் கணவர் பற்றிச் சொல்லவில்லை. ஊருக்குப் போய்ச் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆறு மாதம் கழித்தே ஊருக்குப் போனேன். அம்மாவிடம் ஸ்ரீராமை விசாரித்து இரண்டு நாள் கழித்து செல்லா மாமியைப் பார்க்கப் போனேன். இளைத்துக் கறுத்துப் போனவளாய் காணப் பட்டாள்.

“வாடா ராசப்பா.. உனக்கு சொன்ன புத்திமதி எனக்கே வந்து வாய்ச்சுடுத்து பாத்தியா! புத்தியில்லாப் பையனைப் பெத்தேன்...” அதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை.

ஆறுதல் சொல்லும் நிலையைத் தாண்டி இருந்தாள். மெஸ் வழக்கம் போல் செயல் பட்டுக் கொண்டிருந்தது. பஞ்சாபகேசனைப் பற்றி நான் யாரிடமும் சொல்லவே இல்லை. அவர் காணாமல்... அல்ல செத்துப் போனவராகவே இருக்கட்டும்! 23.1.2012

23. முதலும் முடிவும்

“எனக்குன்னா நாய்ன்னாலே அலெர்ஜி....எங்க ‘சூசி’க்கு நாய்ப் பைத்தியம் தெரியுமோ...!”

அஜிதா தனது மகளைப் பற்றி, அடுத்த வீட்டுத் தோழியான ஜென்சியிடம் முகம் சுழிக்க சொல்லிக் கொண்டிருந்தாள். தெரு விளக்குகள் ஆங்காங்கே பளிச்சிட ஆரம்பித்தன. வெளிச்சப் போர்வை விலகி கருமை படற ஆரம்பித்தன. சிறுவர்கள் கீழே கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

“எப்படி சமாளிக்கப் போறீங்க? சூசிம்மா...” ஜென்சி கேட்டதும் அஜிதா தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

“அவளோட அப்பாவாச்சு... அவளாச்சு!” சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசல் கேட்டருகே பைக் வந்து நிற்கும் சத்தம். அஜிதாவின் கணவன். பின் பக்கமிருந்து துள்ளிக் குதித்து இறங்கியது மூன்று வயது சுட்டிப் பெண் சூசி!

“அம்மா...” சந்தோஷப் பிளிறலில் அபார்ட்மென்ட்டே அதிர்ந்தது. கையில் சிறிய துணிக் கடை மஞ்சள் பை. அதனுள் ஏதோ ஒரு வஸ்து நெளிந்தது!

‘அம்மா நா என்ன கொந்து வந்துருக்கேன்னு சொல்லுங்க...” சூசிக்கு ‘ட’ னா உச்சரிப்பு வராது.

“என்னது...!?” அஜிதா. கணவனாகிய சேகர் மகளைப் பார்த்தான்.

“குத்தி நாய்ம்மா...ஜிம்மி!” பைக்குள்ளிருந்து கை முஷ்டி அளவே இருந்த தெரு நாய்க் குட்டியை வெளியில் எடுத்தாள். “உவ்வே...!’ அஜிதாவுக்கு உண்மையிலேயே வாந்தி வரும் போல இருந்தது...

“ஐயோ... இந்தச் சனியனை எங்காவது கொண்டு போய் விட்டுட்டு வாங்களேன்...!” முகத்தை இறுக மூடிக் கொண்டாள்.

சூசிக்கு முகம் கறுத்து விட, நாய்க் குட்டியை திரும்பவும் பைக்குள் போட்டாள். சேகர் இருதலைக் கொள்ளி எறும்பானான்.

“அஜி...எதுவானாலும் வீட்டுக்குள்ளே போய்ப் பேசிக்குவோம்.” சேகர் பொறுமையாய்ச் சொன்னான்.

“இத முதல்ல தூக்கிப் போட்டுட்டு வாங்க!” மனைவி ஒற்றை விரலை வெளியில் நீட்டிக் கட்டளையிட....

சேகர் வேறு வழியின்றி குழந்தையிடமிருந்து நாய்க் குட்டியைக் கோபமாய்ப் பிடுங்கினான். உடனே சூசி பெருங் குரலெடுத்து அழ, பையை அவளிடமே விட்டு விட்டு இருவரும் வீட்டினுள் செல்ல, சூசி அழுது கொண்டே வெளியில் நின்றது.

“இதை எந்தக் குப்பத்திலேர்ந்து எடுத்திட்டு வந்தீங்க?” .

‘என்ன சூசிம்மா நீங்க! சின்னக் குழந்தை தானே...ஒரு ரெண்டு நாள் விளையாடிட்டு கொண்டு போய் விட்டுடலாம். பாவம்! அது அழறதைப் பாருங்களேன்!” ஜென்சி குழந்தையை அணைத்துக் கொள்ள அது இன்னும் அழுகையைக் கூட்டியது.

“என்னால சகிச்சுக்கவே முடியாது ஜென்சி. பாருங்க. இப்பவே குடலைப் புரட்டி எடுக்குது.” வாஷ் பேசின் அருகே ஓடினாள்.

“சூசி அப்பா...உங்களுக்குத்தான் சூசியம்மாவைத் தெரியுமே...பின்ன எதுக்கு இந்த வேலை பண்ணினீங்க?” ஜென்சி கேட்டாள்.

“நானா...? சூசிதான் நாய்க் குட்டியைக் கண்டதும் ஒரே சத்தம். அங்கே உள்ளவன் நாய்க் குட்டியைப் பிடிச்சுக் கொடுத்தான். அம்மாடி, இங்க வாடா!” குழந்தை நாய்க் குட்டிப் பையுடன் தேம்பிய படி தகப்பனிடம் வந்தது.

“அம்மாக்கு வாமிட் ஆகுது பாத்தியா? கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவோமா?”

“ம்க்கும்...மாத்தேன் போ!” துணிப் பையைப் பிடித்திருந்த கைகள் இறுகியது. அஜிதாவோ உண்மையாகிலும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

சேகர் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்த படி உட்கார்ந்திருந்தான். சடாரென எழுந்தான்! மகளின் கைகளிருந்த பையைப் பிடுங்கிக் கொண்டு வெளியில் சென்று பைக்கை உரும விட்டான்.

ஜென்சி முன்பே வீட்டை விட்டுப் போயிருந்தாள். சூசி அலறியதைக் காதில் வாங்காமல் பைக் சென்றது! அஜிதா வாந்தி எடுப்பதை விட்டு அறைக்குள் சென்று கட்டிலில் படுத்தாள்.

பத்து நிமிடத்தில் மீண்டும் பைக் சத்தம்.

வீட்டினுள் வந்தவன் அஜிதாவைப் பார்த்து,”கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன்! சூசி எங்கே?” என்றான்.

“ஜென்சி அழைச்சிட்டுப் போயிட்டாங்களோ என்னவோ...’

“என்னவோவா!? அவங்க அழைச்சிட்டுப் போனதை நீ பாத்தியா?” என்றான்.

“இல்லை...”

“என்னது..!?”

‘ஏங்க சத்தம் போடறீங்க? அவங்க வீட்டுக்குத்தான் போயிருப்பா.” மனைவி சொன்னதைக் கேட்டு ஜென்சியின் வீட்டை நோக்கி ஓடினான். மறு நிமிடமே திரும்பி வந்தான்.

‘சூசி அங்க இல்ல...!” உடல் அதிரக் கத்தினான். பின்னே ஜென்சியின் குடும்பம் பதறியபடி வந்து கொண்டிருந்தது!

“ஐயோ..என்ன சொல்றீங்க?’ அஜிதா தலை முடியை வாரிச் சுருட்டிக் கட்டினாள்.

“சேகர்.. கொஞ்சம் பொறுமையா இருங்க. தேடிப் பாப்போம்!” ஜென்சியின் கணவர் சொன்னதும், ஜென்சி

“சூசி.. சூசி ..” என சமையற் கட்டுப் பக்கமாய்ச் சென்றாள். காணவில்லை.

“ஐயையோ...! இப்போ நா என்ன பண்ணுவேன்! சூசி...!” என அஜிதா சத்தமாய் அலற.. சேகர் அவளின் கன்னத்தில் ஒரு அறை விட்டான்! ”இப்போ எதுக்குக் கத்துறே! சின்னக் குழந்தையோட சந்தோஷம் முக்கியமா? நீ முக்கியமா?”

“சேகர்.. என்ன பண்றீங்க? முதல்ல குழந்தைய எங்கேன்னு தேடுங்க?” ஜென்சி அதட்டினாள்.

“சூசி.. நீ எங்கேடா போயிட்டே?” அஜிதா அழுதவாறே வெளியில் ஓடினாள். சிறிது நேரத்தில் அங்கே ஏழெட்டு பேர் சேர்ந்தார்கள். விஷயத்தைக் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டு ஆளாளுக்கு ஒன்றைச் சொன்னார்கள்.

“இந்த நேரத்தில எங்கே போயிருப்பா? கீழே பசங்க விளையாடிட்டு இருப்பாங்க...அவங்களைப் போய்க் கேளுங்க...” எதிர்வீட்டு மாமி பதறினாள்.

அஜிதா கீழே போய் விட்டு உடனே மேலே வந்தாள்.” அவங்க பாக்கலியாம்!” களைத்துப் போனவளாய் வந்து மேலே விழுந்தாள். நேரம் ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“இப்போ என்ன செய்யலாம் சேகர்?” எதிர் வீட்டுக்காரர் கேட்டதுதான் தாமதம்,

“கழுத்துல செயின் போட்டிருந்தாளே...!” என அரற்றினாள் அஜிதா.

“சேகர், வேற வழியில்லை. போலீசுக்குத்தான் போகணும்!” என்றாள் ஜென்சி.

சேகர் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழ, அஜிதா தலையில் அடித்துக் கொண்டாள்.

“எவ்வளவு சீக்கிரம்தான் கீழே போயிருக்கா...யார் கண்ணிலேயும் படாம எப்படிப் போனா?”

“ஒரு சவரனுக்கு கொலை பண்றதெல்லாம் சாதாரணமாப் போச்சே!”

“ஒரு சின்னக் கவனக் குறைவா இருந்தா பசங்க நம்மள எப்படி ஏமாத்திடறாங்க தெரியுமா?”

“என்ன சேகர், போலீசுக்குத்தான் தகவல் குடுக்கணும்.” ஜென்சியின் கணவன் சொன்னதும் இருவரும் அருகிலுள்ள காவல் நிலையம் சென்றார்கள். சேகர் சோர்ந்து போயிருந்தான்.

“என்ன சார் இது? குழந்தை வீட்ல இருக்கும் போதெல்லாம் காணாமப் போனா....அத்தனை கவனக் குறைவாவா இருக்கறது? கம்ப்ளைன்ட் எழுதிக் குடுத்திட்டுப் போங்க. ஒரு பிள்ளையை ஒழுங்கா வள க்கத் தெரியலியே...!” இன்ஸ்பெக்டர் கடுப்பாய்ப் பேச சேகர் மௌனம் காத்தான். ஜென்சியின் கணவனே கம்ப்ளைய்ன்ட் எழுதி சேகரிடம் கையெழுத்து வாங்கினான்.

இருவரும் திரும்பி வரும்போது சேகர் ஒரு நப்பாசையில் ரோட்டின் ஓரங்களில் பார்த்துக் கொண்டு வந்தான். ‘எவன் கடத்திக் கொண்டு போய்....’ சேகருக்கு அதற்கு மேல் கற்பனை செய்ய முடியவில்லை! தெரு நாய்களும், பெருச்சாளிகளும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.

வீட்டை அடைந்ததும் எல்லோரும் அவரவர் இல்லத்திற்கு போயிருந்தார்கள். வீடு ஒரு வித அமானுஷ்ய மௌனத்தில் இருந்தது. அஜிதா அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லிக் கொண்டே பிழியப் பிழிய அழுதாள்.

“குழந்தை இல்லேன்னா நா செத்துடுவேம்மா...!” என்றாள்.

சேகர் கையில் கிடைத்த குச்சி ஒன்றைத் தட்டியவாறு அமைதியாய் இருக்க

“சேகர்.. சூசி கிடைச்சிட்டா...” ஜென்சி கீழிருந்து கத்தவும் இருவரும் கீழே ஓடினார்கள்!

“சூ...சி..!” இருவரும் ஒரு சேர அழுதார்கள். அஜிதாதான் குழந்தையைத் தூக்கினாள்.

“வாட்ச் மேன் மாடிப் படிக்கு கீழே பழைய சாமானெல்லாம் கட்டி ஒரு மூட்டை வெச்சிருப்பானே.. அதுக்குப் பின்னாடி படுத்துத் தூங்கிட்டு இருந்திருக்கா!” ஜென்சியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

சூசி தூக்கத்தில் விழித்து அழுதாள். ”ஜிம்மி எங்கேம்மா...?”

“அப்பா காலையிலே பிடிச்சுட்டு வருவாங்க கண்ணம்மா..!” அஜிதாதான் சொல்கிறாளா? சேகர் அவளையே பார்த்தான். 25.1.2012

24. லட்சியவாதி

‘ஒரு மனிதன் லட்சியத்தை அடைய தூசியை விட அடக்கமாயிருத்தல் அவசியம்!’ வாசுதேவன் அடக்கமாயிருந்தான்.

‘நீ அடையும் லட்சியம் வெகு தூரத்தில் இல்லை. இதோ தொட்டு விடும் தூரம்தான்!’ மேற்சொன்ன மகாத்மாவின் வாசகப் படியும், கீழே குறிப்பிட்ட யாரோ ஓர் அறிஞர் சொன்ன சொற்படியும்தான் நம் கதையின் நாயகன் நடந்து கொள்கிறான். ஆனால் அவனது இலக்கு இன்னும் கானல் நீராகவே தெரிந்து கொண்டிருக்கிறது. வாசுதேவன் இயற்கையிலேயே நல்ல அறிவாளி.

ஆனால் இந்த சோம்பேறிகள் பயன் படுத்தும் வாசகம் இருக்கிறதே...அதுதான் இந்த ‘அதிருஷ்டம்’! அது அவனை எட்டிப் பார்க்கவே இல்லை. ‘ஆசை இருக்கு தாசில் பண்ண...அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க!’ என்கிற பழமொழிப் படிதான் வாழ்க்கைக் கட்டை வண்டியை ஓட்டுகிறான்.

அவனது ‘துரதிருஷ்டம்’ பள்ளி இறுதி வகுப்பிலிருந்து ஆரம்பித்தது. இறுதி வகுப்பு படிக்கும் வரை அவன் படிப்பில் பள்ளியில் முதல் மாணவன். ஒரு ஏழை மாணவன் கல்லூரி செல்வது அப்போதெல்லாம்- அதாவது அறுபதுகளில் குதிரைக் கொம்பு! வாசுதேவனோ தான் எப்படியேனும் கம்பவுண்டர் வேலைக்குப் படிக்கவேண்டும் என்று கனவு கண்டான். கூடப் படித்த மாணவர்கள் சிரிப்பார்கள். வசதியான மாணவர்களோ பொறாமைக்கு உட்பட்டார்கள். காரணம் அவனது மதிப்பெண்கள், டாக்டர் அல்லது ஒரு வக்கீல், என்ஜீனியர் அல்லது அதற்கு சமமான படிப்புக்கு உள்ள மதிப்பெண்கள்.

எல்லாவற்றிலும் அநேகமாய் தொண்ணூறைத் தாண்டித்தான் எடுப்பான். கணக்கு ஆசிரியர் பலகையில் எழுதியதும் உடனே எழுதி விடை சொல்வான். ஆசிரியர் கேட்கும் பொதுக் கேள்விகளுக்கு அவர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு யோசிக்காமல் பதில் சொல்வான். போட்டுக் கொள்ள ஒரே வேட்டி சட்டைதான்! இதனை வைத்தே அவனது வறுமையை நீங்கள் அளவீடு செய்து கொள்ளுங்கள்.

ஆனால் முகம் எப்போதும் மலர்ந்த தாமரைதான்! அறிவுக்களை தாண்டவமாடும். வயிறு அரை வயிற்றுக் கஞ்சியோடுதான் பெருமையடையும். எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றான். அவனது தாய்க்கும் தந்தைக்கும் மாவட்டத்திலேயே முதலிடம் என்றால் என்னவென்றே தெரியவில்லை!

ஆசியர்கள் அவனை மருத்துவப் படிப்பிற்கு சிபாரிசு செய்தார்கள். வாசுதேவனோ கம்பவுண்டரிலேயே குறியாய் இருந்தான். அவனது வசதிக்கு அந்தப் படிப்புதான் போதுமானதாம். தேர்வு முடிவுகள் வெளியான பின் தனது லட்சியமான கம்பவுண்டர் படிப்புக்கு எழுதிப் போட்டான். நான்கைந்து இடத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. அவனது ஊருக்கருகில் உள்ள கல்லூரியிலேயே சேர்ந்தான். எட்டு கிலோ மீட்டர் தூரம்.

வாசுதேவன் கண்களில் எதிர்காலக் கனவுகளோடு படுத்திருந்தான். பொழுது விடிந்தால் கல்லூரிக்குப் போக வேண்டும். அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த ஊர் மாணவர்கள் வந்திருப்பார்கள் என்கிற நினைவுகளுடன் தூங்கிப் போனான். விடியற்காலம் திடீரென விழித்தான். காரணம்...அவன் அம்மா போட்ட சத்தம்! போர்வையைத் தள்ளி விட்டு எழுந்து ஓடினான். அவனது அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்து அம்மா தலையிலடித்துக் கொண்டே அழுதாள்.

“ஐயையோ...! அம்மா... என்னம்மா அப்பாவுக்கு...?!” அலறியபடியே வாசுதேவன் தாயைப் பிடித்துக் குலுக்கிக் கேட்டான்.

“தெரியலையேடா...” எனும் போது நல்ல பாம்பு ஒன்று வீட்டினுள்ளிருந்து வெளியில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அடுத்த அரை மணியில் ஊர் கூடியது. பாம்பை அடித்துத் தொங்க விட்டிருந்தார்கள். கல்லூரிக்குப் போக வேண்டிய வாசுதேவன், கருமம் செய்ய வேண்டிய காலத்தின் சூழ்நிலை உருவாகி இருந்தது! அவன் அப்பாவுக்கும், படிப்புக்கும் சேர்த்தே அழுதான். மொட்டை போட்டு, குடம் உடைத்தான். உற்றார் உறவினர்கள் பதினைந்து நாட்கள் கூடவே இருந்து துக்கம் அனுஷ்டித்து விட்டு பதினாறாம் நாள் காரியம் செய்து விட்டுப் போனார்கள்.

வாசுதேவன் செய்வதறியாது திகைக்கும் போதுதான் தேங்காய் வியாபாரி வந்தார்.

“பத்தாயிரம் வந்துட்டு வாசுதேவன்!” என்றபோது நிமிர்ந்து கேள்விக்குறியுடன் பார்த்தான்.

“உங்கப்பா செத்த அன்னிக்கு ரெண்டாயிரம். அப்புறம் கருமாதி முடிய பத்தாயிரம் வந்துட்டு.”

“நா எப்பிடியும் குடுத்துடுவேன் ஐயா...”

“எப்பிடிக் குடுப்பே?”

தலை கவிழ்ந்தது. கண்களில் கண்ணீர் பெருகி மண்ணைத் தொட்டது.

“கவலப் படாதய்யா...நா இருக்கேன்ல!” தோளைத் தட்டினார். வாசுதேவன் நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்தான்.

‘எப்பிடியாச்சும் என்னையப் படிக்க வைங்கய்யா..’ எனக் கேட்க மனசு நினைந்த போது...

“நம்ம பட்டறையில கணக்கெழுத ஆள் இல்லே...இருந்த பய சொல்லாமக் கொள்ளாம ஓடிப் போயித்தான். உன்னையப் பாத்ததும் உசிரு வந்திருக்கு..!” என்றபோது அவனுக்கு உலக உண்மை உறைத்தது!

மறு நாளிலிருந்து கணக்கெழுதப் போனான். ‘எப்படியும் இரண்டு ஆண்டுகளில் கணக்குத் தீர்ந்து விடும்.’

இப்படித்தான் தப்புக் கணக்குப் போட்டான் வாசுதேவன். கணக்கு முடிந்ததும் படிப்பைத் தொடங்கலாம் என் பது அவனின் திட்டம். தன்னோடு படித்த பையன்களில் சுமாராகப் படிக்கும் பையன்கள் கூட ஒவ்வொரு படிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள். முதலாளியோ அவனை மிகச் சரியாக கணக்குப் பண்ணி வைத்துக் கொண்டார். நான்கு ஆண்டுகளாகியும் கணக்கு தீர்ந்த பாடில்லை. அவன் கொடுக்க வேண்டிய பணத்தில் இன்னும் பாதித் தொகை இருக்கிறதாம். வட்டியும் அசலும் கொஞ்சம் போலத்தான் தீர்ந்திருக்கிறதாம்.

வாசுதேவன் நிம்மதியில்லாமல் தவித்தான். அம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டினான். வேலை முடித்து இரவு ஒன்பது, பத்து மணி வாக்கில்தான் வீடு திரும்புவான். நிம்மதிக்கு சாராயம் விற்குமிடம் தேடிப் போனான். அங்கே வயிறு முட்டக் குடித்து விட்டு வீதியில் சாய்ந்து கிடந்தான். வேலைக்கு ஒழுங்காய்ப் போகாமல் வீட்டிலிருக்கும் பொருட்களைப் போட்டு உடைத்தான். அவனது நட்பு வட்டாரத்தில் அவனைப் போன்றோர்களே சேர்ந்தார்கள்.

முதலாளி அவனது கணக்கைத் தீர்த்துக் கொண்டு வேலையை விட்டுப் போகும்படி சொல்லி விட்டார். வாசுதேவனுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. யாரிடம் பணம் கேட்பது? நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் சாராயம் வாங்கிக் கொடுத்து தங்களின் ‘மேலான’ யோசனையை எடுத்துச் சொன்னார்கள். அதன்படி முதலாளியால்தான் அவனது வாழ்க்கை இந்த அளவில் மோசமானது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஆகையால் முதலாளியைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள்! நட்பு வட்டாரத்திலிருந்த அறுவரும் இதற்கு உடன் பட்டார்கள். ஒரு நாள் குறித்து நல்ல பட்டாக் கத்தி இரண்டு வாங்கப் பட்டது. இரண்டு பேர் கொலை செய்வது, நான்கு பேர் உடலை அப்புறப் படுத்துவது என முடிவு செய்யப்பட்டு, அன்றைய தினத்திலிருந்து சாராயம் குடிக்க ஆரம்பித்தார்கள்... ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு மிகையான போதையில் நால்வர் ரோட்டை அளந்தவாறு தள்ளாட... எதிரே, சுமை ஏற்றிய லாரி சத்தம் செய்தபடி வர அவர்கள் அதனைப் பொருட்டாக எண்ணாமல் நேரே நிற்க... வாசுதேவன்தான் முதலில் அடிபட்டுச் செத்தான்...!

அடக்கமாயிருந்த வாசுதேவன் அடக்கமானான்...! 16. 3 .2012

25. வலி

“இன்னியோட நாலு தடவையா வந்துட்டான் வேலு! உன்னையப் பாக்க. நீ வீட்லே தங்க மாட்டியா?” அம்மா கேசவனை கோபித்துக் கொண்டாள்.

“எங்கேம்மா எனக்கு நேரம்? யாராவது ஒரு பெரிய மனுஷன் என்னைப் பார்த்து பேச ஆரம்பிச்சா அதிலேயே நேரம் போயிடுது!” சலிப்பாய்ச் சொன்னான் கேசவன்!

“இன்னிக்கு சாயங்காலம் வர்றேன்னான்...”

“வரட்டும், சரி... எனக்கு சாப்பாடு போடுங்க.ராக்கி சாப்ட்டானா?”

“எங்கே... நீ வந்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணி அழுதுக்கிட்டே தூங்கிட்டான்!”

கேசவன் ‘ராக்கி’ என்றது மகன் ‘ராகவ்’வைத்தான்.கேசவனுக்கு டெல்லியில் மத்திய அரசு உத்தியோகம். மனைவி இரண்டு பிள்ளைகளுடன் அங்கேயே வாசம். எப்போதாவது ஊர் வரும் போது, மனைவி பிள்ளைகளுடன் வருவான். இப்போது மனைவி வரவில்லை. பெரிய மகன் ஏழு வயது ராகவ்வுடன் ஊர் வந்து பத்து நாட்கள் ஆக உள்ளது.

வேலு, கேசவனின் சிறு வயதில் அவனைத் தூக்கி வளர்த்த வேலைக்காரன்! மாட்டு வண்டியில் தூக்கி வைத்துக் கொண்டு நிறையப் பேய்க் கதைகள் சொல்வான். கேசவன் குலை நடுங்க கேட்டுக் கொள்வான்!

பம்பரம்,சிலம்பம், என விளையாட்டுக்கள் மூலம் அவனை சந்தோஷப் படுத்தி தானும் சந்தோஷப் படுவான். கேசவனின் சின்ன வயது வாழ்க்கையில் வேலுவுக்கு நிறையப் பங்கு உண்டு.

வேலுவுக்கு இப்போது வயதாகி விட்டது. என்றாலும் கேசவன் வந்தால், அவனைப் பார்க்க வந்து விடுவான். சிறு வயதுச் சம்பவங்களைச் சொல்லி மகிழ்வான்! கேசவனும்,பழைய நினைவுகளில் லயித்து விடுவான்.கேசவனிடம் அத்தனை பிரியம் வேலுவுக்கு!

“ராக்கி எந்திரிச்சிட்டான்! அவனை சமாதானப் படுத்தி எப்படியாவது சாப்பிட வைப்பா..”

அம்மா சொல்லவும்,கேசவன், மகனை சாப்பிட அழைத்தபோது, வேலு வந்து கொண்டிருந்தான்.

வழக்கமான விசாரிப்புக்கள்... டெல்லி வெயில் பற்றி கேட்டான் வேலு.

“தம்பி அப்பிடியே உங்களை மாதிரியே இருக்குது...!”வேலு சொல்லவும் கேசவன் அதனை ஆமோதித்தான்.

“தாத்தா... “ என வேலுவைப் பார்த்து சிரித்தபடியே வந்தான் ராகவ்.

“உனக்கு ஏற்கனவே தெரியுமா?!” என ஆச்சர்யப் பட்டான்.

“உங்களைப் பாக்க அடிக்கடி வந்தேன்ன தம்பி, அதில நாங்க ரெண்டு பேரும் கூட்டாளி ஆகிட்டோம்!”முகமெல்லாம் சிரிப்பாய்ச் சொன்னான், வேலு.

வேலு தான் வாங்கி வந்த கடலை மிட்டாயை ராகவுக்கு கொடுக்கப் போனான்..

கேசவன்,”ராகவ்.. அதெல்லாம் நேஷ்ட் டி! ஈ வரும். அப்புறம் பீவர் வரும்...!” மகனை அதட்டினான்.

வேலு புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ப்ளீஸ் அப்பா, அது ஒன்னும் அழுக்கு இல்லை!” மகன் கெஞ்ச, வேலுவுக்கு இப்போது புரிந்தது. தலை மெதுவாகக் கவிழ்ந்தது! அப்போது உள்ள ‘தம்பி’ வேறு, இப்போதிருக்கும் தம்பி வேறு!

வேலு அந்த இடத்தை விட்டு சட்டென்று நகர முடியாமல் நின்று கொண்டிருன்தான்! சிறிது நேரம் கழித்து எதுவும் நடக்காதது போல், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்!’இனி வருவதில்லை... என முடிவு செய்து கொண்டான்! நடை தளர வீட்டை நோக்கிப் பயணித்தான்!

ஆயிற்று.. கேசவன் விடுப்பு முடிந்து விட்டது! ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தான்.முதல் வகுப்பு டிக்கெட். குறிப்பிட்ட நேரத்திற்கு பெட்டி படுக்கைகளுடன், ரயில்வே நிலையம் வந்தான். ரயில் புறப்பட... அவசரமாய் ஒரு வெளி நாட்டுத் தம்பதி ஓடி வந்து ஏறினார்கள். அவர்களின் கையில் ஒரு சின்னஞ்சிறு ஆண் குழந்தை. இரண்டு வயதிற்குள் இருக்கலாம்... இவர்களைப் பார்த்து புன்னகைத்தது. கேசவன் மகனிடம் குழந்தையைக் காண்பித்தான். ராகவ்வின் விழிகள் விரிந்தது... குழந்தையின் அருகில் சென்று, கையிலிருந்த ௫ ஸ்டார் சாக்லேட்டைக் குழந்தையிடம் கொடுத்தான். அவ்வளவுதான்... வெளிநாட்டுத் தம்பதிக்கு வந்ததே கோபம்!

“நோ..நோ..திஸ் சாக்லேட் இஸ் நேஸ்ட்டி!”

என உடனே மறுத்தார்கள். கேசவனுக்கு சட்டென்று முகம் மாறியது. ராகவ்வைத் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான். ஏனோ... வேலுவின் நினைவு சட்டென்று வந்து போனது! தலை தானாகக் கவிழ்ந்தது! 21.12.2012

26. வீடு

“என்னாலே இனி தாங்கவே முடியாதுங்க...வீட்டுக்காரர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் எத்தனை நாள் ஆளாகுறது! ‘எலி வளையானாலும் தனி வலை வேணும்’னு ன்னு சும்மாவா சொன்னாங்க...சொந்த வீடு கட்டியே ஆகணும்.”

என் மனைவி ஏனைய பெண்மணிகளைப் போல் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்க மாட்டாள்! என என் உறவினர், நண்பர்கள் மத்தியில் பெருமையுடன் அடிக்கடி சொல்லப் போக...அவள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்து சொந்த வீடு கட்ட நச்சரித்து வருகிறாள்.

நான் அரசு உத்தியோகமோ, தனியார் கம்பெனியிலோ வேலை பார்ப்பவன் அல்ல. சொந்தமாய் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறேன். அதாவது தஞ்சாவூரிலிருந்து வரும் தேங்காய்களை இங்கிருக்கும் (சேலம்) வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரம் செய்கிறேன்.

பிள்ளைகள் இரண்டு பேரும் எட்டு, பத்து என படித்து வருகிறார்கள். அவர்களை பெரிய படிப்பு படிக்க வைக்க இப்போதே சேமித்து வருகிறேன். இதில் சொந்த வீடு கட்டுவது எங்கே? பிள்ளைகள் வேறு

“வாடகை வீடா ன்னு பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்கப்பா...”

என்கிறார்கள்.

மூன்று மாத கால போராட்டத்திற்குப் பிறகு வீடு கட்டுவதென முடிவாயிற்று. எல்லாம் கடன்தான். லோன் போட என் மனைவியின் உறவினர் முன் வந்தார். ஏனெனில் என்னை நம்பி வங்கியில் கடன் கொடுப்பாரில்லை. ஊரில் பத்து ஆண்டுகளுக்கு முன் சொந்தமாய் பத்து சென்ட் நிலம் ஒன்று வாங்கிப் போட்டிருந்தேன். அதில்தான் கட்ட வேண்டும்.

வீடே சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தது. என் மனைவி எனக்குப் பிடித்த சமையலாகச் செய்து போட்டாள்.

பிள்ளைகள் தங்களுடைய நோட்டுப் புத்தகத்தில் வீடு படம் வரைந்து தள்ளினார்கள். என்னிடம் காண்பித்து இதே டிசைனில் வீடு கட்ட வேண்டும் என்றார்கள். தன் நண்பர்களுக்கு போனில் தெரிவித்து தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

என் இளைய மகன், “அப்பா...எனக்கு ஒரு ரூம். அண்ணாக்கு ஒரு ரூம். டூடூ க்கு ஒரு ரூம் போதும்ப்பா...!” என்றபோது அனைவரும் சிரித்தோம். டூடூ என் பது எங்களின் செல்ல நாய்க்குட்டி.!

வங்கியில் கடனுக்காக போய்க் கொண்டிருந்தோம்...நான்கு மாத காலத்திற்குப் பிறகே கடன் அனுமதிக்கப் பட்டது. முதல் கட்டமாய் கடனின் முதல் தவணையைக் கொடுத்தார்கள். நல்ல நாள் பார்த்து ஒரு வாஸ்து நாளில் மனை முகூர்த்தம் செய்தோம். இருபது லட்ச மதிப்பீட்டில் வீடு கட்டுவதென முடிவாயிற்று.

எங்களின் உறவுக்காரரே கட்டிடப் பொறியாளர். என்பதால் என் மனைவியே வீடு கட்டும் இடத்தில் நின்று கண்காணித்தாள். வீடு லிண்டல் மட்டம் ஏறியது. என் மனைவி வீட்டைப் பார்த்து விட்டு தனது ஸ்கூட்டியில் வரும்போது எதிரே ஒரு பசு மாடு வர...ஸ்கூட்டி வழுக்கி விழ கால் பிசகி மூட்டு நழுவியது. அவ்வளவுதான்!

எனக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்தது. குடும்பத்தில் எல்லாருக்குமாக உழைத்த மனைவிக்கு...எல்லாரும் உழைத்தும் முடியவில்லை. எனக்கு வியாபாரம் இரண்டு கண்கள். மூன்றாவது கண்தான் குடும்பம். எல்லோருக்கும் வீட்டு நினைவு வாட்டி எடுத்தது. நண்பர்கள் உறவினர்கள் வேறு, ‘எப்போது வீட்டைக் கட்டி முடிப்பீர்கள்’ என நச்சரிப்பு செய்தார்கள்.

மனைவியின் உடல் நலம் பற்றி யாரும் அவ்வளவாய் அக்கறை எடுத்துக் கொள்ளாதது என் என்று எனக்குப் புரியவில்லை. வீடே எல்லோருக்கும் பிரதானமாய்ப் பட்டது. என் மனைவி சற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். வங்கியில் வேறு பணத்தை புஸ்வானம் விட்டதாக மேலாளர் சிடு சிடுத்தார்.

இந்தக் கவலையிலேயே சென்ற எனக்கு எதிரே வந்த வாகனம் கவனம் சிதற...கண நேரத்தில் தூக்கி எறியப் பட்டேன்! இரண்டு வாரங்கள் கழித்தே நான் உயிரோடு இருப்பதை உணர்ந்தேன்.

என் குடும்பமே நான் உயிரோடு திரும்பியதற்கு சந்தோஷத்தில் அழுதது.

“அப்பா...நமக்கு வீடே வேண்டாம்! எங்காவது போய் குடிசையில் இருப்போம்”

என்றான் என் இளைய மகன்.

“வாஸ்து பாத்தீங்களா இல்லையா சார்?” என்றாவாறே வந்தார். சக வியாபாரி.

“ஜாதகம் பாத்துத்தானே வீடு கட்டினீங்க...” என்றாள் உறவுக்காரப் பெண். இப்போது மனைவி எனக்கு பணிவிடை செய்தாள். நானும் படிப் படியாய் குணமடைய ஆரம்பித்தேன். வீட்டை எப்படியும் கட்டி முடிக்க வேண்டும் என என் மனைவி முயற்சித்து கூரை போடும் அளவிற்கு கொண்டு வந்தாள்.

பிறகு வேலை கிடு கிடுவென நடந்தது. மூன்றே மாதத்தில் வீடு பூச்சு முடிந்தது. இறுதி வேலை முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருந்தது. வாங்கிப் பணம் மிகுந்த உதவியாய் இருந்தது. ஒரு வழியாய் வீடு வேலை முடிந்தது.

வீட்டைக் கட்டிப் பார். என்கிற பழமொழியை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். வீடு கிரகப் பிரவேசத்திற்கு அவ்வளவாய் உறவினர், நண்பர்களை அழைக்கவில்லை! ஒவ்வொரு மாதமும் வீட்டுக்காரர் வாடகைக்கு எங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் இழந்த நிம்மதியை யார் தரப் போகிறார்கள்?

எங்கள் வீட்டின் எதிரே ஒரு குடிசை முளைத்தது... பழைய தகரம் விற்பவர்களாம். சிறு குடிசை. பகல், இரவு எனப் பாராமல் உழைப்பார்கள். எந்த நேரமும் சந்தோஷம்தான்... எனக்கு அவர்களைப் பார்த்தபோது பொறாமையாக இருந்தது...! இதற்கு முன் வீடு காட்டி முடித்தவர்களைப் பார்த்து பொறாமைப் படுவேன். இப்போது வீடே இல்லாதவர்களைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.

கட்டுரைகள்

1. உறவுத் தூண்கள்

இந்தியாவின் மக்கள் தொகை 136 கோடி சில்லரையாம். உலகின் எழுநூறாவது கோடியும் இந்தியாவில்தான் பிறந்துள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் அபாயம்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் விழிப்புணர்வு அடைந்து ஓன்று, இரண்டு குழந்தைகளைப் பெற்று இன்புற்று ஒரு தலைமுறையாகிவிட்டது. அவர்களின் பொருளாதாரத் தேவைகளையும் மேல், நடுத்தர,கீழ் வர்க்கங்கள் பூர்த்தி செய்து ஓரளவு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளோம்.

எந்த வினைக்கும் எதிர் வினை உண்டல்லவா? மக்கள் தொகைக் கட்டுப்பாட்டால் நாம் அடைந்திருக்கும் எதிர்வினை: தாய், தந்தையின் உடன் பிறந்த ரத்த உறவுகளை! ஆம்! இன்றைய தலைமுறையினருக்கு உறவுத் தூன்களில் ஏதேனும் ஒரு தூன்தான் குலுக்கல் முறைபோல் வாய்த்து விடுகிறது.

ஏற்கனவே நகர்ப்புறங்கள் கூட்டுக் குடும்பங்களை இழந்து விட்டது. கிராமப்புறங்கள் இழந்து கொண்டிருக்கிறது. இந்த உறவு வழி நன்மைகள் சென்ற தலைமுறைகளோடு முடிந்துவிட்டது. நிகழ்கால சந்ததியினர் எதிர்காலத்தை எதிர் கொள்வது ஒற்றை விறகில் அடுப்பெரிவது போன்றது. பாசப் பகிர்வு, கோபப்பார்வை, உதவிக்கரம், அன்பு இவைகளை யாருடன் பகிர்ந்துகொள்வது?

விழாக் காலங்களில் சக உறவுகளோடு கொண்டாடும் இன்பத்திற்கு அளவீடும் உண்டோ? துன்ப காலங்களில் சொந்த உறவுகளைத் தேடி அலையும் கண்கள் இல்லாதவர் மக்கள் போல்வர் கயவர் ஆவார். இந்த உறவுகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய் கொன்டிருக்கிறது. கிராமப்புறங்களில் கணவன், மனைவி பிரச்சினைகளை உறவினர்களே களைந்து சேர்த்து வைக்கும் நிகழ்வு சாதரணமாக காணக் கூடியது. இனிவரும் காலம் உறவுப் பற்றாக்குறையால் தவிப்பது உறுதி!

தேவை : மணமக்கள் பகுதிபோல் தேவை: அத்தை, மாமா, பெரியம்மா ,பெரியப்பா என விண்ணப்பிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. தாய், தந்தை வழி வரும் உரிமை பாசங்களை எந்த அளவீடும் அளவிடமுடியாது.

எதிர்கால சந்ததியினர் இந்த உறவுகளை இழந்திருப்பது வேதனையே! நம் கண் எதிரே காணாமற் போனவைகளில் மேற்கண்ட உறவுகளும் அடக்கம்!

2. நிற்க அதற்குத் தக

உயர் நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறன் கடந்த கல்வி ஆண்டுகளில் அதிசயிக்கத் தகுந்த முறையில் உள்ளது. பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வைக்கிறது! ஒவ்வொரு பள்ளிகளும் தங்களின் தேர்ச்சி சதவிகிதத்தை ப்ளக்ஸ் போர்டுகள், தினசரிப் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிவித்து தங்கள் பள்ளிகளே சிறந்தவை என விளம்பரம் செய்கின்றன. நல்லதுதான்!

ஆனால் இதன் பின்னணி...மாணவ மணிகள் இதன் காரணமாக இழப்பவை திரும்பப் பெற முடியாதவை. சந்தோஷமான விளையாட்டு, செய்திப் பத்திரிகைகள் வாசிப்பது, முக்கியமாக வீட்டில் பெரியவர்களுக்கு செய்யும் சிறு உதவிகள் என நடை முறைக் கல்வியை இழக்க நேரிட்டு விட்டது! இதில் வீடுகளில் விளையாடும் விளையாட்டு இல்லாததால் அந்த விளையாட்டுக்களே அற்றுப் போகும் நிலை உருவாகி விட்டது. அந்த இடத்தைத் தொலைக் காட்சிகள் கவர்ந்து கொண்டன! பத்திரிகைகள் வாசிக்க நேரம் இல்லாததால் உலக ஞானம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகவும் குறைவு.

கல்வி கற்றலில் ஆரம்ப காலங்களில் குருகுல வாசக் கல்வி, பணிவு, பண்பு, நல்ல பழக்கங்கள் என ஒருவரை சமூகத்தில் சிறந்த மனிதராக உருவாக்கியது. அடுத்த பரிணாம வளர்ச்சியில் திண்ணைப் பள்ளிக் கூடம்... அதிலும் நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும் என்கிற நோக்கத்திலேயே கல்வியின் பயணம் தொடர்ந்தது! சென்ற தலை முறையில் சண்டித்தனம் செய்யும் மாணவர்களை வசதியானவர்கள் கான்வென்ட்டில் படிக்க வைப்பார்கள். பிள்ளைகள் சில வருடங்களிலேயே திருந்தி நல்வழிக்கு வந்து விடுவார்கள்.

இப்போது...தனியார் பள்ளிகளின் தாக்கங்கள் அதிகம். காலையில் எழுந்தவுடன் படிப்பு, பிறகு பள்ளியில் படிப்பு, மாலை முழுதும் படிப்பு... என படிப்பே மாணவர்களின் நேரங்களை திருடிக் கொண்டு விட்டது! இதன் பக்க விளைவுகளில் ஒன்று...பெற்றோருக்கு கீழ்ப்படியாமை! முதலில் கீழ்ப்படிதல் என்பது வீட்டில் பெரியவர்கள் சொல்லும் சிறு உதவிகளைத் தட்டாமல் செய்வது. இதனால் நடைமுறை வாழ்க்கை அறிவு, அனுபவம் சிறு வயதிலேயே பதிந்து விடுகிறது. பெற்றோர்கள் குறிப்பிட்ட காலம்...அதாவது பிள்ளைகள் பெரியவர்களானதும் அவர்களிடம் சிறு உடல் உழைப்பு மூலம் உதவியை எதிர் நோக்கும் போது அந்த உதவி அவர்களிடமிருந்து கிடைக்காமற் போய் விடுகிறது.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை

அரும் பசிக்குதவா அன்னம்

தாகத்தைத் தீராத் தண்ணீர்

தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன்

குரு மொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீரா தீர்த்தம்

பயனில்லை எழும் தானே!

என்கிறது விவேக சிந்தாமணி எனும் நூல். இந்தப் பாடலை எழுதியவர் பெயர் புலப்படா விட்டாலும், முதலில் சொல்லப்பட்ட ‘ஆபத்துக்கு உதவாப் பிள்ளை’ வாழ்க்கை நடை முறைக் கல்வியைக் கடை பிடிக்காத பிள்ளையே! படித்து, பட்டம் பெற்று விட்டால் பணிந்து நடப்பது வந்து விடுமா? குரு குலக் கல்வியில் குருவுக்கும் அவரது பத்தினியாகிய மனைவிக்கும் மாணவர்கள் பணிவிடை செய்தார்கள். இதனால் பெற்றோர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் உயர்ந்தவர்களாக ஆனார்கள். ஆனால் இன்றைய கல்வி, மாணவர்களை சுயநல வாதிகளாக ஆக்கிக் கொண்டுள்ளது.

பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ந்தவுடன் பொருளாதார ரீதியாகவும், உடல் உதவி மூலமாகவும் எதிர் பார்க்கும் போது...பொருளாதார உதவி மட்டுமே கிடைக்கும். எதிர் காலத்தில் உடல் ரீதியாக கிடைக்கும் உதவி என்பது கேள்விக் குறிதான்!

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

போன்ற இறவாப் புகழ் பெற்ற வரிகள் வெறும் மனப் பாடப் பகுதிகளாகிக் கொண்டிருகிறது. எதிர் கால சமுதாயத்தை எங்கே கொண்டு செல்கிறது கல்வி...? இதோ ஒரு உண்மை உதாரணம். ஒரு தம்பதியினர் உயர்ந்த படிப்பு படித்து, நல்ல சம்பளத்தில் வேளையில் உள்ளனர். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் தற்போது இருவருமே விவாகரத்துக்குத் தயாராக உள்ளனர். அவர்களிடையே உண்டான பிரச்சினை என்ன? இருவருமே ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்பதில்லை. கணவனுக்கு செய்யும் சிறு உதவிகளை மனைவி செய்வதில்லை! அவள் தான் நமக்குச் செய்வதில்லையே, நாம் ஏன் அவளுக்குச் செய்ய வேண்டும்? என கணவனும் அவள் சொல்வதைக் கேட்பதில்லை! விளைவு? இருவருக்கும் நாளொரு சண்டையும் பொழுதொரு பிரச்சினையும்! இதன் பின் விளைவு விவாகரத்து! இவர்கள் வருங்காலத் தலை முறையினருக்கு ஒரு முன்னுதாரணம்.

இந்தத் தம்பதியினர் கண்டிப்பாக வாழ்க்கைக்கு தகுதியுள்ளவர்களா? இவர்களது எதிகால வாழ்க்கையை எண்ணிப் பார்ப்போம். இருவருமே மறுமணம் செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் அப்போதும் இந்த நிலை தொடர்ந்தால்...என்ன செய்வது? இது போல பலரது வாழ்க்கை இனி இப்படித்தான்! வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை அமர்த்தலாம். கணவன், மனைவியரிடையே பெற்றோர், சகோதரர்களிடையே எதிர் பார்க்கும் உதவிகளை அவரர்தானே செய்ய முடியும்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல், கணினிப் பாடங்களுக்கு ‘ப்ராக்டிகல்’ வைப்பது எதற்காக? அது போல் தான் வாழ்க்கைக் கல்வியும். வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொள்ள நேரம் கிடைக்காத கல்வியைத் தரமுள்ளது என எப்படிச் சொல்வது? வரும் கல்வியாண்டில் அரசு புத்தகச் சுமையைக் குறைத்திருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று! அது போல் கல்விச் சுமையைக் குறைத்தால் மட்டுமே வாழ்க்கைக் கல்வியைக் கற்க முடியும்! இல்லா விட்டால் வாழ்க்கைக் கல்வி எனப்படுவது... ஏட்டுச் சுரைக்காய்தான்! கறி சமைக்க முடியுமா?

உயர்ந்த மதிப்பெண்கள் பொருளுதவிக்கு!

உயர்ந்த வாழ்க்கை நல்ல சமுதாயத்திற்கு!

3. நோயற்ற வாழ்வு

கடந்த பத்து ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நமது நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. எத்தனை முன்னேறினாலும் ஏழை ஏழையாக இருப்பதும் பணக்காரன் பெரும் பணக்காரனாக மாறுவதும் கண்கூடாகக் காண்கிறோம். இதன் பலா பலன் என்ன தெரியுமா? எதிர்கால இந்தியர்கள் நோயுற்ற மனிதர்களாக உலக அரங்கில் திகழப் போகிறார்கள். சுகாதாரம் என்பது பெண்களின் ௩௩ சத இட ஒதுக்கீடு மற்றும் ஊழல் ஒழிப்பு போல பகல் கனவுதான்! ஆம்! ஒரு பணக்கார இந்தியனின் வீட்டில் கட்டாயம் இருப்பது கழிவறை! ஏழை இந்தியனின் வீட்டில் கட்டாயம் இல்லாதிருப்பதும் அதுதான்!

நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் சதுர அடிக்குள் அடங்கி, ‘மனை’ என்கிற திருநாமத்தைச் சுமந்து சில நாட்களிலேயே விற்பனைக்கு கட்டம் கட்டப்பட்டு விடுகிறது! வயல்கள் மனைகளாக மாறும் போது அந்த இடம் உயர்த்தப் பட்டு வீடுகள் கட்டப்பட வேண்டும். அப்போதுதான் மழை நீர் வடிய வசதியாக இருக்கும். ஆனால் அவ்வாறு எங்கேனும் உள்ளதா? தொடர் மழையால் மழை நீர் வடிகால் வசதியற்று வீதிகளிலேயே பல நாட்கள் தங்கி விடுகிறது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டு தார்ச் சாலையின் மேல் தண்ணீரில் படகு விடும் சாதனைகள் நடந்தேறுவது வாடிக்கையாகி விட்டது. நகர, மாநகரங்களில் கொசுக்கள் உருவாக வசதியாகி விடுகிறது. கிராமங்கள் கழிப்பறையின்றி சுகாதாரக் கேட்டை உருவாக்குகின்றன. நகரங்கள் மூடப்பட்டதாய்ச் சொல்லப்படும் திறந்த சாக்கடைகள் மூலம் தொற்று வியாதிகளை உருவாக்குகின்றன.

நமது நாடு மக்கள் தொகையில் சடுதியில் முன்னேறிக் கொண்டிருந்தாலும் சுகாதாரத்தைப் பொறுத்த மட்டில் மிகவும் பின் தங்கியே உள்ளது. இதன் எதிர் விளைவுகள், புதிய உயிர்க் கொல்லி தொற்று நோய்கள் உருவாகிக் கொண்டு வருகிறது. நாம் குப்பைகளை வீசியெறிந்து குப்பை சேமிப்புகளை உருவாக்கி வட்டியாக மலேரியா, வைரஸ், சிக்கன் குனியா என உயிர்க் கொல்லி நோய்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்!

சில மாதங்களுக்கு முன்பு வரை தொலைக்காட்சிகளில் பிரபல சினிமா கதாநாயகனைக் கொண்டு சுகாதாரத்துறை மூலம் சுகாதாரத்திற்கான விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பேருந்தில் செல்பவர்கள் வாழைப்பழத் தோலை வெளியில் வீசுகிறார்கள். அது வெளியில் நிற்கும் வெளிநாட்டவர் மீது விழுகிறது. உடனே விளம்பரக் குரல் எச்சரிக்கிறது. வெளிநாட்டவர் நம்மை என்ன நினைப்பார்கள் எனப்படுவதே அது! இப்படியாக இன்னும் சில...அப்படியானால் நம் நாட்டவர் மீது வீசலாம் என்பது போல் உருவாக்கப் பட்டுள்ளது! அதாவது வெளிநாட்டவரின் பழியுரைக்கு உட்படாதீர்கள் என்பதே அதன் சாரம்!

நமது கிராமங்கள் மற்றும் நகரங்களின் தெருக்கள் அரசியல் வாதிகளின் வருகையில் மட்டும் ஒரு நாள் சுத்தம் செய்யப்படும்! அதிலும் அவர்கள் வரும் முக்கிய வழிகள் மாத்திரம்! ஒரு புறம் நமது நாடு மருத்துவத் துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. வெளி நாட்டவர் சிகிச்சைக்கு வருவதைப் பெருமைப் படுத்திக் கொண்டிருந்தாலும், தொற்று வியாதிகளை அறவே ஒழிக்கும் காலம் என்று வரும்? சுகாதாரக் கேட்டை முழுமையாக விரட்டியடிப்பது எப்போது? மழைக்காலங்களில் மருத்துவமனைகள் தொற்று நோய்க்காரர்களால் நிரம்பி வழிகிறது. பேருந்துகளில், ரயில்களில் பயணம் செய்பவர்கள் மூலமே வியாதிகள் எளிதாகப் பரவுகிறது!

மதுபானக் கடைகளில், சிகரெட் அட்டைகளில் உள்ள எச்சரிக்கை விளம்பரம் போல நகர்ப்புறங்களில் ‘அசுத்தம் செய்யாதீர்’ விளம்பரமும் ‘தெய்வமே’ என உள்ளது. பாலிதீன் பைகளின் அராஜகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை! அதனை ஒழிக்க வேண்டும். அல்லது மறு சுழற்சி முறையைக் கொண்டு வர வேண்டும். குப்பைகள், கழிவுப் பொருள்களை உரிய முறையில் அகற்ற வேண்டும்!

அரசு தொற்று நோய்களுக்கு மருந்து கொடுத்து மக்களுக்கு சேவை செய்வதை விட, தொற்று நோய்கள் வராமல் தடுக்கும் சுகாதார நிலையை உருவாக்க வேண்டும்! மக்களை சுகாதாரக் கட்டாயத்திற்கு உட்படுத்த வேண்டும்! குறைவற்ற செல்வமான நோயில்லா எதிர் கால சந்ததியினரை உருவாக்க வேண்டும். தனி நபர் சுகாதாரமே பொதுச் சுகாதாரத்திற்கு வழி வகுக்கும்! தூய்மை விழிப்புணர்வை தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் விளம்பரம் மட்டும் செய்யாமல் நடைமுறையில் செயலுக்கு கொண்டு வர வேண்டும்!

இலவச மருத்துவ உதவி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். அது போல் சுகாதாரமும் பேணப்படுவது அதனை விடவும் அவசியம். இதனை நாமும் அரசும் செயல் முறையில் காண்பித்து எதிர் கால இந்தியாவை சுகாதார இந்தியாவாக்க வேண்டும்!

4. மதிப்பிற்குரிய பொதுமக்களே...

சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நமது தேசத்தில் அரசியல், திரைப் படப் புகழ் அல்லாத ஒருவர் மக்களால் பேசப்படும் தலைவராக உருவானவர், என்றால் அவர் அன்னா ஹசாரே ஒருவர்தான்! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் செழிக்க ஆரம்பித்த போது யாரேனும் ஒரு அவதார புருஷர் வந்து நம்மைக் காப்பாற்றுவாரா? என நாட்டின் ஊழல் வளர்ச்சி அறிந்த இதயங்கள் ஏங்கித் தவித்தது உண்மை. ஹசாரே காந்திய வழியில் ஊழலை ஒழிக்க ௧௯௭௫-ல் ராணுவத்தில் தான் வகித்த பதவியை விட்டு தன்னுடைய கிராமத்தை அவர்கள் வழியில் சென்று உருமார்றினார். இன்று மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தி எனும் குக்கிராமம் உலகெலாம் பிரசித்தம். ௧௯௯௪-ல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை துவக்கினார்.

இது வரை சினிமாக் கதாநாயகர்கள் மட்டுமே ஊழல் ஒழிப்பாளர்களாக திரைப் படங்களில் செயல் பட்டு வந்தார்கள். மக்கள் அதனைப் பார்த்து ரசிப்பார்கள். சினிமாக்காரர்கள் அன்றைய நிலவரக் கதையம்சம் எப்படியோ அதனைக் கூவி விற்றார்கள்! பத்திரிகைகளும் பொது மக்களாகிய நாமும் உரிய மதிப்பெண்கள் கொடுத்து சிறந்தத் திரைப் படங்களுக்கு, கதைகளுக்கு உயரிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தோம். கொடுத்துக் கொண்டிருக்கிறோம்! மற்றபடி இது தப்பு என மக்களாகிய நாம் கவலைப் பட்டதுண்டா?

நாமெல்லாம் ‘வாழ்க்கை’ என ஏற்றுக் கொண்ட லஞ்ச ஊழலை அன்னா ஹசாரே துணிந்து சவாலாக எடுத்துக் கொண்டார். ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை.’ என்றார் ஔவையார். ஆணையும், பெண்ணையுமே அப்படிச் சொன்னார். இன்று நம் தேசிய அளவில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு. ஒன்று லஞ்சம் கொடுப்போர், இரண்டாவதாய் லஞ்சம் வாங்குவோர்! இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும், எழுதிக் கொண்டிருக்கும் நானும் கண்டிப்பாக இந்த இரண்டு ஜாதியரில் ஒருவர்தான்.

ஊழல் என்பது புரையோடிய புண் அல்ல. புற்று நோய்! சமீபத்தில் இந்திய அளவிலான பொதுஜன பத்திரிகை ஒன்று ஹசாரேவை இவ்வாறு எழுதுகிறது...சென்ற ஆண்டின் தார்மீகப் பேரொளி! இன்னும் ‘இந்தியன் தாத்தா’ ‘இரண்டாவது காந்தி’ என வர்ணிக்கும் ஊடகங்களும் உண்டு.

சென்ற டிசம்பர் ௨௭-ல் ஹசாரே ஒரு நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அதற்கு ஆதரவாக சில ஆயிரக் கணக்கானோர்களே கூடினார்கள். காரணம், அவரது உடல் நலம் குன்றியது என சொல்லப் பட்டது. பெரிதாக எதிர் பார்க்கப்பட்ட போராட்டம் அது! இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை ௧௨௬ கோடி! மிகவும் குறைவாக எதிர் பார்த்தாலும் ஒரே ஒரு கோடிப் பேர்களாவது அதில் ஈடு பட்டு சிறை சென்றிருக்க வேண்டும்! ஆனால் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே... ஹசாரேவின் உடல் நலம் ஒரு காரணமே! அதுவே காரணம் அல்ல.

ஹசாரேவைப் பற்றி நகர்ப்புறங்களும், மாநகரங்களும் மட்டுமே அறிந்திருப்பதுதான் காரணம். இந்தியாவின் ௭௦ சதவீத மக்கள் வாழ்வது கிராமங்களில்தான். அவர்களுக்கு தொலைக் காட்சி செய்திகளாகவும், பத்திரிகைச் செய்திகளாக மாத்திரமே ஹசாரே சென்றுள்ளார். ஒரு இயக்கம் என்பது மக்களால் உணர்வு பூர்வமாக செயல் பட வேண்டும். செய்தி பூர்வமாக அல்ல! அதற்கு ஆங்காங்கே தன்னலமற்ற தொண்டர்களை நியமிக்க வேண்டும். அல்லது உருவாக்க வேண்டும். இவையெல்லாம் வரலாறு நமக்கு சொன்ன பாடங்கள். ஒரு இயக்கம் என்பது நாட்டின் கடைக் கோடியில் வாழும் ஏழை, பணக்காரனையும் சென்றடைய வேண்டும்.

‘லோக் பால் என்றால் என்ன?’என்று நாட்டின் ஒரே ஒரு நபராவது கேட்பாராகில், அந்தப் போராட்டம் வெற்றியடைய வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் அவர் மூலமாக லஞ்ச லாவண்யம் பெருக வாய்ப்பு உண்டு. ‘பொது மக்கள்’ என்பது நமது நாட்டில் மிகவும் குறைவு! காரணம் ஏதேனும் ஒரு கட்சி அடிமைகளாகவே அனைவரும் வாழ்ந்து வருகிறோம்! அரசியல் கட்சிகள் தத்து எடுத்து விடுகிறது!

அரபு நாடுகளான எகிப்து, லிபியாவில் முபாரக்கும், கடாபியும் ஒழிக்கப் படவில்லையா? எனக் கேட்கிறார்கள். அது போல் ஊழலை ஒழித்தால் என்ன? என்பது சில அறிவு ஜீவிகளின் வாதம். ஏகாதிபத்தியமும் லஞ்சமும் ஒன்று அல்ல. ஏகாதிபத்தியம் எனப்படுவது தனி மனிதனின் அராஜகம்! அவர்களை மக்கள் ஒன்று கூடி அழித்தொழிக்கலாம்! ஊழல் என்பது மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. மக்களால்தான் வாழ்கிறது! பாலும் தண்ணீரும் ஒன்றாகக் கலந்திருப்பது போல் ஊழலும் மக்களோடு மக்களாகக் கலந்து விட்டது!

அன்னப் பறவைகளாக ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் போராடி வருகிறார்கள். அவர்கள் ஊழலை ஒழித்து விடுவார்கள் என மீதமிருக்கும் கோடிக் கணக்கானோர் வாய் பொத்தி லஞ்ச லாவண்யத்தை வளர்த்துக் கொண்டிருப்பதா? ‘முடியாது என்பது முயற்சி செய்யாமல் இருப்பதுதான்!’ என்பது அனுபவ வாக்கு. ஊர் கூடினால்தான் லோக் பால் எனும் தேரை இழுக்கலாம்! அனைவரும் கூடுவோம்! அன்னப் பறவைகளாவோம்!

5. கடிதத்தின் கடிதம்

அன்புள்ளம் கொண்ட செல்போன், மெஸ்சேஜ், எஸ்எம்எஸ், மற்றும் இணையதளம் ஈன்றெடுத்த ஈ மெயில், டிவிட்டர், பேஸ்புக் ஆன்லைன்...இன்ன பிற தெரிந்தும் தெரியாத தகவல் தொடர்பு களுக்கு...கடிதம் எழுதும் அன்புக் கடிதம். நீங்கள் நலமா? நான் நலமுடன் இருக்கிறேன்...என்று சொல்ல ஆசைப் படுகிறேன்!

நிற்க. (ஐயோ! உட்காருங்கள்!!) இது அந்த ‘நிற்க’ அல்ல!

என்னைப் பற்றி உங்களுக்கு அவ்வளவாகத் தெரிய வாய்ப்பில்லை! அதனால் ஒரு சிறிய அறிமுகம். நான் பிறந்தது...ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருக்கும், எழுத்து என்பதன் பரிணாம வளர்ச்சி தொட்டு நான் இருந்து வருகிறேன்... மன்னிக்கவும். இருந்து வந்தேன்!

ஆரம்ப காலங்களில் அதாவது முதலில் பறவைகள் மூலமே நானும் மக்களோடு மக்களாய் வாழ்க்கையைத் துவக்கினேன். உதாரணத்திற்கு நளனும் தமயந்தியும் அன்னப் பறவை மூலம் என்னை தூதாக்கி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர், கால மாற்றத்தின் வளர்ச்சியில் அவரவர் கண்டு பிடிப்புகளுக்கும் வசதிகளுக்குத் தகுந்தாற்போல குடும்ப உறவுகளுக்கும், கடைநிலை முதல் நாடாளும் மன்னவர்கள் வரை தூதாக செயல் பட்டேன். உறவுகளை இணைக்கும் பாலமாகவும், காதலர்களின் உள்ளக் கிடக்கையை வெளிப் படுத்தும் மன இயல் இணைய தளமாகவும் செயல் பட்டேன்!

காகிதம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு நான் முதலில் கப்பல்கள், பிறகு ரயில்களிலும், அதன் பின் விமானத்திலும் என் சேவை தொடர்ந்தது. தொடர்கிறது.

பெருந் தலைவர்களின் அனுபவங்கள் கடிதங்களில் பரிணமிக்க ஆரம்பித்த போது... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! நமது தேசத்தில் மகாத்மா சிறையிலிருந்த போது தொண்டர்களுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்றவை.

ஜவகர்லால் நேரு மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதம் மகளை நாடாளும் தகுதியைப் பெற வைத்ததே! டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் ‘தங்கைக்கு’ எழுதிய கடிதம் கற்பனையா? அல்ல. உயிரோட்டமுள்ள அறிவுரைப் பெட்டகம் அன்றோ! எத்தனையோ தலைவர்களின் புகழ் பெற்ற கடிதங்கள் புத்தகங்களாக வெளியிடப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளனவே! பல அறிஞர் பெருமக்களின் கடிதங்கள் அருங்காட்சியகத்தில் வீற்றிருக்கின்றன. சில வல்லுனர்களின் கடிதங்களோ கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் விடப் பட்டிருக்கின்றன! வரலாறுகளின் வழித் தடங்கள் கல்வெட்டுகள் மட்டுமல்ல! கடிதங்களும்தான்...! இன்றைய வரலாற்றை நாளைய வாரிசுகள் எப்படி உணருவார்கள்?

தயவு செய்து இதெல்லாம் தற்புகழ்ச்சி என்று எண்ண வேண்டாம்! என்னைப் பற்றிய விபரங்களை எதிர் காலத் தலைமுறை தெரிந்து கொள்ளவே எழுதுகிறேன். அவர்களுடைய நேரத்தைத் தான் நீங்கள் பிடித்துக் கொண்டீர்களே!

நான் சிறு வயதுப் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதும் பயிற்சியின் மூலம் எழுத்துப் பயிற்சி அளித்துள்ளேன். இதன் மூலம் அவர்கள் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நல்ல சிந்தனையாளர்களாகவும் வளர்ச்சி அடைந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன்! பிள்ளைகளை வெளியூரில் வெளி நாடுகளில் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு நான்தான் கடவுள்! தபால்காரர்தான் பூசாரி!

நான் போர் முனையில் செயல் பட்ட வீரனுக்கும் அவனது நினைவை மட்டுமே தாங்கிய

பெற்றோருக்கு உயிரோட்டமான இணைப்பை ஏற்படுத்தினேன். பள்ளி முதல், கல்லூரி வரை விடுதியில்

தங்கிய மாணவ மணிகளுக்கு பெற்றோர்களின் பாச மழைக்கும் ஆசை யாய் அறிவுரைத் தூதுவனாய் செயலாற்றி அவர்களின் வாழ்க்கையை மேம்பட வைத்தேன். எத்தனையோ அன்பு இதயங்களை இணைக்கும் பாலமாக செயல் பட்டேன். பிரிந்திருக்கும் கணவன் மனைவிக்கும் இணைக்கும் இதயமானேன்!

இன்று எனது நிலைமை...!

மொழிப் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு ஐந்து, பத்து மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத் தரும் மனப் பாடமாக வைத்து விட்டீர்கள்! கடிதம் எனப்படுவது... அலுவலக நிமித்தம் மட்டுமே செயல்படும் வெறும் தகவல் பரிமாற்றம்! உங்களைப் போல்! உங்களில் உயிர் உண்டா? உணர்ச்சி உண்டா? ஆசை, பாசம் மதிப்பு மரியாதை, எதிர்பார்ப்பு இவையனைத்தும் எங்கே?

சாலைப் பாதுகாப்பு வாரம், சேமிப்பு வாரம்...சேமிக்காத வாரம் என எல்லாவற்றுக்கும் ‘வாரம்’ எடுத்து விழாக் கொண்டாடுவது போல், எனக்கும் அரசு ஒரு ‘வாரம்’ விழா எடுக்க வேண்டும்! சிறந்த கடிதப் பரிமாற்றத்திற்கு வெகுமதி வழங்கி, பாராட்டுப் பத்திரம் வழங்க வேண்டும். அப்போதுதான் நான் அழியாமல் நிலைத்திருப்பேன். இல்லாவிட்டால், நானும் கால வெள்ளத்தில் மூழ்கி விடுவேன்!

விஞ்ஞான தகவல் வாரிசுகளே...மனிதர்களையும் உங்களைப் போன்ற எந்திரமாக்கி விட்டீர்களே! மனிதர்களே...உங்கள் பணத்தை வங்கியில் சேமிப்பது போல், அன்பை, தகவல்களை என் மூலம் சேமியுங்கள்! அது நாளைய தலைமுறைக்கு வரலாறாகும்!

இப்படிக்கு,

பிரிய மனமின்றி... பிரியா விடை பெறும்,

அன்புக் கடிதம்.

6. மழை நீரே மகத்தான நீர்

வரு முன் காப்போம் என்கிற வரிசையில் ‘மழை நீர் சேகரிப்பு’ மிகவும் முக்கியத்துவம் நிறைந்த ஒன்று.

மழை நீரைச் சேமித்தால் ஆழ் துளைக் கிணறுகளுக்கு வேலையே இல்லை! இதன் பொருட்டு மின்சாரம் சேமிக்கப்படும். விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் குறையின்றி கிடைக்க வாய்ப்புள்ளது. மூன்று போகம் விவசாயம் செய்து பயன் பெறலாம். இதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒன்றுதானே! இதிலென்ன புதுமை? எனக் கேள்வி எழுப்பலாம்.

இதில் அரசின் முயற்சி முழு அளவில் செயல் பட வேண்டும். வட்டார அளவில் ஒவ்வொரு கிராமங்களிலும் எந்த முறையில் நீர் சேமிப்பு வசதி உள்ளது எனக் கணக்கிட வேண்டும். பிறகு அந்தந்த கிராம மக்களிடம் வீடுகளில் சேமிப்பது எவ்வாறு? ஊர் வாரித் தண்ணீரை சேமிப்பது எவ்வாறு? என

உணர்வு பூர்வமாக தெரிவிக்க வேண்டும். இதுவரை அரசுக் கட்டிடங்களில் மட்டுமே மழை நீர் சேமிக்கும் குழாய்கள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. ஊர் வாரித் தண்ணீர் சேமிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஒரு இடத்தில் கூட நடை முறைப் படுத்தப் படவில்லை. ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாய சேமிப்பை நடைமுறைப் படுத்த வேண்டும்!

கிராமப் புறங்களில் கூட மின்சாரத்தையே நம்பி குடி தண்ணீருக்காகப் போராடும் அவலம். தண்ணீர் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஓர் உயிர் ஆதாரம். அதனை செயற்கை மின்சாரத்தை நம்பி இருக்கும்படியான சூழல் உருவாகி விட்டது! அல்ல. உருவாக்கிக் கொண்டோம். இதிலிருந்து மீள ஒரே வழி...மழை நீரைச் சேமிப்பதுதான். செயல் அளவில் மந்தமாகச் செயல்படும் இத்திட்டம் இன்னும் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள ஒரு வறண்ட கிராமத்தில் மழை நீரை, அதாவது ஊர் வாரித் தண்ணீரைச் சேமித்து மூன்று போகம் விவசாயம் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஊர் வாரித் தண்ணீர் சென்று கடலில் கலக்கும் இரண்டு ஓடைகளில் தடுப்புச் சுவர் எழுப்பி, ஒரே ஆண்டில் பெய்த மழை நீரைச் சேமித்து அடுத்த ஆண்டே விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆழ் துளைக் கிணறுகளுக்கு வேலையே இல்லாமற் போய் விட்டது. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் ஏரிகள் நிறைந்த மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீரை ஏரிகளில் சேமித்துப் பயன் பெறலாம். இதனால் மழைக் காலங்களில் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும். அடுத்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளிலும் சேமித்துப் பயன் பெறலாம்.

மின்சாரப் பற்றாக் குறையால் மாநிலமே தவிக்கும் இந்த வேளையில்; தண்ணீர் பற்றாக் குறையாலும் தவிக்க வேண்டுமா? மழை நீராகிய உயிர் நீரை அரசியல் படுத்தாமல் நடைமுறைப் படுத்தி நீரைச் சேமிப்பதோடு அல்லாமல் மின்சாரத்தையும் சேமிக்கலாம். இதனால் மழைக்காலங்களில் படகு விடும் அவலமும், வெயில் காலங்களில் வறட்சித் தாக்கமும் வெகுவாகக் குறையும்.

நன்றே செய்க. அதையும்

இன்றே செய்க!

7. ‘கட் அவுட்’ கலாசாரம்

கண்ணெதிரே தெளிவாகத் தெரிவதை, ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என உவமை கூறுவதுண்டு. அது போல் எத்தனையோ தெளிவான தவறுகளை நாம் தெரிந்தே, ‘சரி’ எனச் செய்து வருகிறோம். அவற்றுள் ‘ப்ளக்ஸ் போர்ட்’, ‘கட் அவுட்’ எனப்படும் தற்போதைய தொழில் நுட்ப மோகத்திற்கு அடிமையாகாதோர் வெகு சிலரே! இதன் அடிப்படை விளம்பரம். இது ஆரம்பத்தில் சினிமாக்காரர்களுக்கு அத்தியாவசியமாய்த் தேவைப் பட்டது. பின் அரசியல், ஏனைய விழாக்கள் என வளர்ச்சியடைந்து தற்போது குடும்ப விழாக்களில் வந்து நிற்கிறது!

பூப் புனித நீராட்டு, திருமணம், வளைகாப்பு, பள்ளியில் முதல் மதிப்பெண், இறப்பு எனக் குடும்பம் சார்ந்த இதன் விளம்பரப் பட்டியல் நீளும்.

ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது உடல் ரீதியான ஒரு இயற்கை நிகழ்வு! அதனை ஊரறிய தெரிவித்தல் என்பது தங்களின் கௌரவமாய்க் கருதப்படுகிறது. இதன் பின் விளைவு, பக்க விளைவுகள் விவரிக்க முடியாத ஒன்று. தங்கள் வீட்டுப் பெண் பெரிய பெண்ணாகி விட்டாள் என்பதை ஊர் முழுதும் தமுக்கடித்துச் சொல்லாமல் நாகரிகமாய் ப்ளக்ஸ் போர்டில் தெரிவிக்கிறார்கள். ஒருவர் ஒரு தவறைச் செய்தால் தவறு. அதனையே பலபேர் செய்தால் நாகரிகம்! ஒரு மதம் சம்பந்தப்பட்ட விழா எனில் பன்னெடுங்காலமாக அனுபவம் மிக்க பெரியவர்களால் வகுக்கப் படுகிறது. அதனைக் காலத்தின் வசதிகளுக்குத் தகுந்தாற் போலக் கண்ணியம் கருதி செய்து வருவதே பண்பட்ட நாகரிகம்.

அடுத்து திருமணம். இரண்டு வீட்டார் சம்பந்தப்பட்ட வாழ்க்கை விழா. இதனையும் உற்றார் உறவினர் மட்டுமே அறிய வேண்டும். அதற்காக நல்ல நாள் பார்த்து பத்திரிகைக் கொடுத்து சுற்றத்தை அழைக்கிறார்கள். தங்களின் பிள்ளைகளுக்கு நல் வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதிக்கவே அழைக்கப் படுகிறார்கள். இதனையும் சாலை ஓரத்தில் விளம்பரம் செய்து தங்களின் மணமக்கள் இவர்கள்.

(இவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையாக இருப்பினும், வயது முதிர்ந்த பெரியோரும் அடக்கம்) இவர்களை அனைவரையும் கண்டு களியுங்கள் என்பது போல் உள்ளது.

தமிழர் பண்பாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? குடும்பம் என்பது ஒரு கௌரவமான அமைப்பு. அதனை விளம்பரப் படுத்துதல் எந்த விதத்தில் சமுதாய கெளரவம் என்பது புரியவில்லை. சடங்குகளை எவ்வாறு பாரம்பரியம் மாறாமல் செய்கிறோமோ அது போல் இதனையும் கருதவேண்டும்.

அது போலவே இறப்பு விளம்பரமும்! ஆரம்ப காலத்தில் அதாவது டெலிபோன்கள், செல்போன்கள் இல்லாத கால கட்டத்தில் தங்கள் வீட்டின் துக்கத்தை தினசரி பத்திரிகைகள் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இன்று தகவல் தொடர்பு பெருகிய காலத்திலும் துக்கமும் விளம்பர மோகத்திற்கு ஆட்பட்டு விட்டது, பெரிய சோகம்! அதனையும் ப்ளக்ஸ் போர்டுகள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன.

சிறு குழந்தைகள் விபத்தில், வியாதியில் பலியானால் அவர்களும் ப்ளக்ஸ் மூலம் முச்சந்திக்கு வந்து விடுகிறார்கள். சாலைகளில் செல்பவர்கள் அதனைப் பார்த்து வெறுப்பில் திட்டுகிறார்கள். பிறரது பச்சதாபத்தால் குழந்தையை இழந்தவர்களுக்கு என்ன வந்து விடப் போகிறது? ஒரு குடும்பத்தின் குழந்தை இறப்பின் சோகம் அவர்களுக்குத்தான். முகம் தெரியாதவர்களுக்கல்ல!

எல்லாவற்றையும் விட தலையிலடித்துக் கொள்ளும் விஷயம் வளைகாப்பு! இது அநேகமாய் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு வீட்டில் வளைகாப்பு எனில் வீட்டிலிருக்கும் ஆண்களே வளைகாப்பு நடைபெறும் சமயத்தில் வெளியில் சென்று விடுவார்கள். இப்போது இதுவும் வீதிக்கு வந்து விளம்பரம் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டுப் பெண்ணிற்கு வளைகாப்பு என ஆண்களின் போட்டோக்கள் வரிசைப் படுத்தப் படுகிறது. நல்ல வேலையாக வளைகாப்பு நடத்தப்படும் பெண்ணின் முகம் இடம் பெறாதது பெரிய ஆறுதல்!

இன்னும் ஏனைய குடும்ப விழாக்களும் முச்சந்திக்கு வருமுன் தயவு செய்யுங்கள் சமூகத்தினர்களே....

யார் தலையிலாவது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலிக்குப் பிறகு அரசு சட்டம் இயற்று முன், பின் வருவதை யோசித்து இந்த கலாசாரத்தை விட்டொழியுங்கள்! கண்ணியம், உயிர்பலி காத்திடுங்கள்! (5.2.2012)

மன்னங்காடு எஸ். முத்துக்கண்ணு படைப்புகள் Copyright © 2011-2012, S. Muthukkannu, Mannankadu

தொடர்புக்கு:

எஸ். முத்துக்கண்ணு

மன்னங்காடு அஞ்சல்

தாமரங்கோட்டை வழி

தஞ்சாவூர் மாவட்டம் 614 613

S. Muthukkannu, Mannankadu Post, Thamarankottai Via, Thanjavur District 614 613