rp

மன்னங்காடு ரா. ராம்ப்ரசாத் கதைகள், கவிதைகள்

ரா. ராம்ப்ரசாத் அவர்கள் தமது படைப்புகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறார்

கவிதைகள் கீழே. கதைகள் இங்கே

1. கடிதம்...சுமையின் வலி

(சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் இருந்து)

புலர்காலைப் பொழுதும்

அந்திமாலைப் பொழுதும்

உணர முடியாதவனாகிவிட்டேன்....

மூளைக்குள்

முகாமிட்டிருப்பதெல்லாம்

‘ஆறுகாசு வட்டிக் கடனை

ஐப்பசிக்குள் அடைத்து

பங்குனியில் பரிசம்

போட்டே தீரவேண்டும் இளையவளுக்கு...’

சாப்பாட்டிற்கென இருந்த

வடக்கிப் புறகரை வயலும்

ஒத்திக்கி விட்டாயிற்று!

வேலையில்லா மயிலைக்காளை

சுமையென

ஓட்டிவிட்டேன் சந்தைக்கு...

விழும் ஓர்உறை தேங்காயில்

கொப்பறைக்காய் போக

எஞ்சிய எழுபதுகாய் வாங்க ஆளில்லை!

நட்டத்திற்குப் பாதியாக விற்றாலும்

கைச்செலவு போக மிஞ்சுவது ஏதுமில்லை...

ஆயினும்

கட்டுக்குள் தான் இருக்கிறது கௌரவம்

உன் அம்மாவின் கைச்சாதுர்யத்தில்...

என்நிலை கொண்ட ஒருதந்தையை

உறவாக்கிக் கொள்ளலாமென்றிருக்கிறேன்

நீ கொண்ட பொறுப்புள்ளவனை

மைத்துனன் ஆக்கிக் கொள்வாயா?

சுமப்பவனுக்குத் தானே தெரியும் சுமையின்வலி!!

அன்பு அப்பா....

நன்றி: 20-4-2008 தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்

2. ஆயா

ரெட்டைவடச் சங்கிலியும்

திறுகாணி வளைவியும்

முந்தானை முடிப்பில் சில்லறையுமாய் திரிந்தாலும்

மாவத்தலிலும்

புளியவிதை சேகரிப்பிலும் செருவாடு சேர்ப்பவள்...

ஊரே ஆச்சியென அழைக்க

மக்களை அன்பு ஆட்சி கொண்டவள்...

முகூர்த்த நாள் குறிப்பது முதல்

சாந்தி முகூர்த்த நேரம் குறிப்பதுவரை

அவளது அனுபவமும் மொத்தமாகவும், சில்லறையாகவும்

ஊருக்கே அத்தியாவசம் ஆகிப்போனது...

யான் அறிந்த வரையில்

அவளிடம் ஆசிர்வாதம் பெறாத தம்பதிகள்

அவளும் அவள் கணவருமாகத்தான் இருக்கும்!

பிறந்து தலையெடுத்த பின்

பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் அறைக்காத்தவள்!

வீறிட்டு அலறும் பிள்ளையின்

வீறியம் கொண்டே

இன்னதென அனுமானிப்பவள்!

‘ஒரம்’ விழுந்த பிள்ளையின் வேதனையை

தாவாயாலே தனிப்பவள்!

சுருங்கச் சொல்வதெனில்

பிள்ளைத்தாச்சிகளுக்கென பிரத்யோக மருத்துவச்சி!

ஊருக்கே நாட்டமை

தந்தையென்றாலும்

கையேந்தி நின்றதில்லையாம் ஒருமுறைககூட

மாறாக பிறந்த வம்சம் தழைக்க

கொடுத்தும் இழந்தும் இருக்கிறாள் கடைசிவரை..

பெரும்புயலில் எழுந்து நிற்க

பச்சை மண்ணை அரபுதேசம் அனுப்பினேன்

கண்கலங்கிச் சொல்வாள்

கண்கலங்கச் செய்வாள்...

பெற்றபிள்ளைகளைப் போற்றுவாள்

அவள் பிள்ளையாக பிறக்கவில்லையேயென

எனை பொறாமையில் தள்ளுவாள்!

ஊறிய விதைநெல்லில் பாரம் பத்தாதென்பது முதல்

அறுவடைநெல் காய்ச்சல் பத்தாதென்பது வரை

விவசாயத்தில் பட்டம் பெறாத

வேளாண் விஞ்ஞானி!!

தொழுவத்தில் கட்டியமாடு

கத்துவது காளைக்கு என்பதை

உணர்ந்து முடிப்பவள்

விலங்கின் மொழி அறிந்தவள்...

ஒருமுறையாவது முழுவதுமாய் கேட்கவேண்டி

தூக்கமே வராதென

உறுதியாய் தெரிந்தபின்

தாலாட்ட சொல்லிக்கேட்டு

தூங்கி தோற்று போயிருக்கிறேன் பலமுறை...

எப்படியாயினும்

இதற்கு முற்பிறவியில்

இன்னாராக பிறந்திருப்பாள் என ஒப்பிடமுடியாது!

வேண்டுமாயின்,

வரும் தலைமுறை சொல்லிக்கொள்ளலாம்

இவள் ஆச்சியாக பிறந்திருக்க கூடுமென...!

காந்திபோல் நாட்டுக்கும்

தன்னைப்போல் வீட்டுக்கும்

தேவை ஓர்ஆள் உணர்த்தியவள்!

இன்ன காரியம்

இன்ன வேளையில்

தொடங்க ஒருநாள் காட்டி..

கொண்ட கொள்கை வென்றிட ஓர் உரமூட்டி..

மறந்தசெயல் தொடங்க ஒரு நினைவூட்டி..

வரும் தலைமுறைக்கெல்லாம் வழிகாட்டி..

எங்களுக்காகவே தெய்வமாகிப் போன மூதாட்டி..

எங்க ஆயா...

3. சொர்க்கம்

செவ்வாய் கிழமைச் சந்தையில்

பேரம்பேசி வாங்கி நட்ட மாங்கன்று

பிஞ்சுவிட்டதாக கடைசிச் செய்தி சொல்லிவைத்தாள்..

அதற்குள் ஆகிவிட்டது

ஆறு ஆண்டுகள்!

ஓட்டுவீட்டு சாந்தி மகள்

வயதிற்கு வந்திருப்பாள்..

வரும்போது

‘பச்சை பெல்ட்’ வாங்கியாரச் சொன்ன

அண்ணாவி தாத்தா..

முகம் மழிக்கும் போதெல்லாம்

உன் ஆசையின் வேகத்திற்கு வளரத்தெரியாதடி

என் மீசைக்கென்று சொல்லியும்

புரியாது மறுத்து,

நாளை மீசை வைத்து வாவெனப் போன

மாசிலாமனியாயா பேத்தி

என் விடலைப் பருவத்து மாங்குயில்

நினைவுக்குள் வந்து போகிறாள்...

வெகுநாள் பகையோடிருக்கும்

உடன் பங்காளியுடன்

உறவாட லயிக்கிறது மனது...

ஊர் சேர்ந்தவுடன்

வீராப்பிற்கு வைத்த வேலியை

பிய்த்தெறிய வேண்டும்...

தொலைவிலிருந்து

பார்க்கும் போதுதான் தெரிகிறது

ஊர் அழகு...

பிரியும்வரை

உணர முடியாத சொர்க்கம்

பிறந்த மண்...

4. நீ

நீ

எதிர் வீட்டை காலி செய்யும் வரை

எனக்கான உலகம்

ஜன்னல் அளவே இருந்தது ...

நீ

தலை உலர்த்துகையில்

சிவன்

நெற்றிக்கண் திறந்ததில்

தவறில்லை என்றுதான் தோனுகிறது...

நீ

கெட்டித் தயிரை

விரல்விட்டு கலக்கி பரிமாறுகிறாய்!

வெண்ணையெல்லாம் விரலோடு சென்றபின்

வெறும் மோர் எதற்கு

விரலைத்தா...

நீ

படித்த புத்தகங்களை

எடைக்கு இட்டிடாதே

அவையாவும் விலைமதிப்பற்றது!!

நீ எச்சில் தொட்டு

பக்கங்களை புரட்டிருப்ப்பதால்...

நீ

வேண்டாமென்று

ஒதுக்கிய

கறிவேப்பிலையை கூட

காதலித்திருக்கிறேன்

தெரியுமா உனக்கு...

நீ

பயணிக்கும் பேருந்தின்

பயணசீட்டை

விலை உயர்த்தி உள்ளது அரசு

கூட்டம் குறைக்க...

நீ

கோவில் பிரசாதம்

எடுத்துகொள் என்றாய்..

உன் கையால் பெற்றதால்

அது!!

இனி எனக்கு வரப்பிரசாதம்...

நீ

தவறுதலாய்

உச்சரித்த வார்த்தைகள் கூட

சரியாகி விடுகிறது! - கூடவே

அழகாய்

நா கடித்துகொள்வதில்...

நீ

வசிக்கும் தெரு ப்பக்கம்

தள்ளுவண்டி வியாபாரிகள்

வர யோசிக்கிறார்கள் – அழகான

உன் பேரம்பேசுதலில்

மறுப்பதற்கின்றி

நஷ்டமடைந்துவிடும் தொழிற்முடக்கத்தால்...

நீ

ப்ப.. ப்ப.. ப்ப..!

எனக்கூறி குருணை இறைக்கிறாய்..

செவிக்கு உணவில்லாதபோதுதானே

சிறிது வயிற்றுக்கு!என

தின்ன மறுக்கின்றன கோழிகள்...

நீ

சொல்லி

நிறுத்த வேண்டும்

என்பதற்காகவே புகைக்கிறேன்...

நீ

குளிக்கும் அறையில்

மஞ்சள் உரசும் கல்

நிறம் மாறி கிடக்கிறது!

உன் மேனிகண்ட நாணத்தில்

சிவந்து...

நீ

சிரிக்கிறாய்!

இல்லை இல்லை

பூக்களுக்கு வகுப்பெடுக்கிறாய் ...

நீ

திருடிய

என் கைக்குட்டைக்குள்

உனக்கு தெரியாமல்

எடுத்துவைத்த - உன்

கூந்தல் முடி உள்ளது

கவணமாய் பிரி...

நீ

அறிந்திருக்கமாட்டாய் - உன்

வீட்டு முற்றத்தில் சாய்த்து கிடக்கும்

பழைய சைக்கிளின் கதையை…

நீ

ஒட்டி பழகிய காலத்தில்

எனக்கு

அது தேர்!!

5. பிரகாசிகட்டும் இந்த அக்னி

முன்ன மாதிரியில்லை

நம் கிராமம்

குறையாக சொல்லவில்லை!

என் முப்பதுக்குள்

கண்டு, காணாமற் போனதை சொன்னேன்.

என்னில் பத்து குறைந்த எவர்க்கும்

ஆற்றை கடக்க தெரியாது!

என்னில் பாதி குறைந்த எவர்க்கும்

கிரிக்கெட்டை தவிர வேறு தெரியாது!

தளிர்களை சொல்லி தவறில்லை

சுண்டியும், நொண்டியும் வைக்க

தூர்வாரிய குளமுமில்லை..

ஏர்பூட்டா நிலமுமில்லை..

தவசு முனிபோல் சிறுத்து கிடக்கிறது மனசு!

ஊர்கூடி இழுத்த தேர்

உறவுகூடி இழுக்க குறைந்ததேன்?

உன் பாட்டனும்

என் பூட்டனும்

கட்டி திறந்த கோயிலை..

நீயும்

நானும் பூட்டி வைத்தோம்.

சாமத்தில் பெண் எடுத்து

சர்க்கரையோடு பால்பழம் தின்ற

கடைசி ஜோடி யாரோ?

தாம்பூலம் மாற்றிக்கொண்டோம்

நிச்சயம் மட்டும் நிச்சயமில்லை!

பாட்டன் சொத்தையே

வழக்கு தீர்த்து உரித்தாக்கி கொள்கையில்..

புறம்போக்கு புளியந்தோப்புக்கு

பட்டா இல்லாமலா போகும்!

அட மனிதா!!

இதுதான் நாம் அடைந்து கொண்ட

பரிணாம வளர்ச்சியா?

எருக்கை விடவா சிறந்தது

எக்காளக்ஸ்!!

எதை நீ இழந்து கொண்டிருக்கிறாய்

புரிகிறதா உனக்கு..

புண்ணில் மொய்க்கும் ஈவிரட்ட

புத்தியின்றி போய்விட்டோமே..

எங்கு துலைத்தோம்

நம் இயல்புகளை...

குறைகளை கூடி கற்றோம்!

நிறைகளை பாராட்ட நாதியில்லை.

ஆக! நாமும் குறையாளிகளே..

சுயநல சிலந்திவலையில்

சிக்குண்டு கிடக்கும்

அறியாமை இருட்டுக்கு

நீ

தீபந்தம் பிடிக்க வேண்டாம்

ஒரு

தீக்குச்சியாவது காட்டு!!

6. ஜீவனுள்ள ஏணி

விலங்கின் மதிக்கு - ஒரு நாளும்

விளங்குவதில்லை

தமக்கு ஐந்தறிவு, என்பதை

நான் ஏற்பதிர்க்கில்லை!!

தூக்கி பிடிக்குமுன்னே

முடிசூட்டி கொள்ள கிரீடம் பெறுவதாய்

தலைதாழ்த்தி பெற்றுகொள்கிறது!

மோத்தடியை!!

வெகுண்டெழுந்தால்

விரட்டி பிடிக்க

எவர்க்கும் திறனில்லை என்றாலும்

பூவரசங்குச்சிக்கு கட்டுபட்டே கிடக்கிறது

காளை திமிர் !!

ஏர் பிடிக்க இறங்கி விட்டால்

கிழக்கு பழுப்பத்தற்க்குள்

எட்டு விளாவும்

நெற்று தேங்காயை திருவி போட்டார்போல்

நீள் வட்டத்தில் உழுது கிடக்கும்..

சேறடிக்க புகுந்தாலோ

நாற்றங்கால் எங்கும்

சந்தன கூழ் ஆகும்!

உன்னை விதைத்து

உயிர்த்தெழும்

ஒவ்வொரு கதிரிலும்

உன் உழைப்பு நெல்மணியாய்

தெரித்துவிழும்!!

ஏற்றிய பொதியை

சுமக்கும் சக்தி அவற்றுக்கில்லை!

தார்குச்சிக்கு தப்பிக்க

முண்டி இழுப்பதை தவிர

வேறு வழியில்லை !

செலுத்திய திசையில் நேர்த்தியாய்

சாலைவிதி பிடிக்க தவறுவதுமில்லை..

இத்தனை உழைப்புக்கும்

நீ பெரும் கூலி

இல்லை! இல்லை!!

உன் தியாகத்திற்கு நிகராக

நீ பெரும் பரிசு

படி தவிடு

புளிச்ச தண்ணி

பண்டிகையென்றால் கூட ரெண்டு

வாழைப்பழ தோலு..

அறுவடை நெல்

வீடு சேர்ந்ததும்

வீராப்பாய் சொல்வான்

மாடாய் உழைத்தேன் என்று!

சிறிதும் நெருடல் இன்றி

அப்போதும்

அசை போட்டு கொண்டிருப்பாய் நீ..

கதைகள்

1. தாய் மனசு - சிறுகதை

ஜன்னல் ஓரத்தில் இடம் தேடிக்கொண்டு மனதில் அலைமோதிய நினைவுகளோடு ஊருக்கு பயணமானான் கதிரேசன். கண்ணுக்குள் நிலைகுத்தி நின்றாடியது மனைவியின் பிடிவாதம்..

அங்க போயி மரம் மாதிரி நிக்காம ஒங்க அப்பன் ஆத்தாகிட்ட பேசுங்க!

என்ன பேச சொல்றியே ,நீயே போய் கேட்டுப்பபாறேன்.

வாயிலே என்னமாத்தான் வருது, வாக்கப்பட்டு வந்தவ நான் பேசுறதுக்கும் அம்மாங்கிற உருக்கோட நீங்க பேசுரதுக்கும் வித்தியாசம் இருக்குங்க.

வெட்டியாத்தான் இறுக்கேன் வெள்ளாமைய நான் பார்க்கிறேன் அத்தான்கிட்ட சொல்லி ஊர்ல இருக்கிற அஞ்சுமா வயல கிரயத்துக்கு தரச்சொல்லுங்கிறான் தம்பி. ஊருலே குழி நூறுக்கு விலை போறதே குதிரை கொம்பா இருக்கு. வித்தவரை மிச்சம் பேசி பாருங்க உங்க அம்மாகிட்ட.

என்ன பேசுற நீ அதவச்சுதான் என் அப்பனும் ஆத்தாளும் வயிறு கழுவுறாங்க அத போயி விக்கசொல்றே..

அதுக்கென்னங்க மாதம் ஐநூரோ ஆயிரமோ அனுப்பிடலாம் நீங்க போறிங்களா இல்லையா? புடுங்கள் தாங்காமல் புறப்பட்டான் ஊருக்கு.

கதிரேசா..! நல்லா இருக்கியாப்பா? மருமொவ, புள்ளைங்கெல்லாம் எப்படி இருக்காங்க? குசலம் விசாரித்தாள் அம்மா, மகனின் முகத்தில் இருந்த குழப்பரேகையை படித்தபடி!

என்ன சொல்வதெரியாது கைபிசைந்து நின்றவனிடம்..

ராசா, வாரத்திற்கு விட்ட வயலில் வருமானம் இல்லங்கிறான் ஒத்தி எடுத்தவன். எங்களாலயும் முடியல,பரம்பர வயல தரிசு போடவும் மனசில்ல நல்ல விலை வந்தா வித்துவிடம்ப்பா.

அம்மா அத வித்திட்டா சாப்பட்டுக்கு.. என இழுத்தான் கதிரேசன்

அதுக்கென்னப்பா கரையொட்டிய வய கா காணி நிலம் போதும் எனக்கும் உன் அப்பனுக்கும் கஞ்சி ஊத்த. உன் மச்சினன் கூட இடம் தேடுறதாக சேதி கேள்விப்பட்டேன். பேசி பார்த்து தோதுப்பட்டா முடிச்சுடு ராசா.

வந்த வேளை சுமுகமானதில் சந்தோசமாய் புறப்பட்டான் கதிரேசன்.

என்ன பேசின நீ! குழப்பமாய் ஏறிட்டான் பேச்சியப்பன்

என் வயித்துக்குள்ள இருந்தவன். அவன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு புரியாதா? விடுங்க அவன் நல்லா இருக்கத்தானே இத்தனை கஷ்ட பட்டோம், நாம என்ன அள்ளிக்கிட்டா போக போறோம். புள்ளைங்க சந்தோசத்தை விட வேறென்ன பெரிசா வேண்டிகிடக்கு நமக்கு என்றவளை பெருமிதத்துடன் அணைத்தான் பேச்சியப்பன்.

மன்னங்காடு ரா. ராம்ப்ரசாத் கதைகள், கவிதைகள் Copyright © 2011 Ramamurthy Ramprasath, Mannankadu

தொடர்புக்கு:

ரா.ராம்ப்ரசாத்

மன்னங்காடு அஞ்சல்

தாமரங்கோட்டை வழி

தஞ்சாவூர் மாவட்டம்

Email: prasath555@yahoo.com.sg