காட்டுஞ்ரி September 2020 | 2020 : 4 KaattuManjari


காட்டுஞ்ரி September  2020 | 2020 : 4


எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

இரா. குணசீலன், கோயம்புத்தூர்

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
மனிதனை விழித்தெழச் செய்வதே எழுத்து!
எழுத்தே தவம்!
எழுதுவதே வழிபாடு!
புரியும்படி எழுதுவது வரம்!
புரியாமல் எழுதுவது சாபம்!
எழுத்துக்கும் உயிர் உண்டு..!
பிறமொழி கலந்து எழுதும்போதெல்லாம்
எழுத்துகள் விபத்துக்குள்ளாகின்றன!
நல்ல சிந்தனைகளைத் தரும்போதெல்லாம்
எழுத்துகள் மணிமகுடம் அணிந்துகொள்கின்றன!
தவறான சிந்தனைகளைத் தரும்போதெல்லாம்
எழுத்துகள் கற்பிழந்து நிற்கின்றன
பொய் சொல்லும்போதெல்லாம்
எழுத்துகள் தற்கொலை செய்துகொள்கின்றன!
உண்மை சொல்லும் போது மட்டுமே
எழுத்துகள் தலைநிமிர்ந்து நிற்கின்றன!
பிழையோடு எழுதும்போது
எழுத்துகள் நோய்வாய்ப்படுகின்றன!
தன்னம்பிக்கை தரும்போதெல்லாம்
எழுத்துகளுக்கு சிறகு முளைத்துவிடுகின்றன!
இப்படி...
எழுத்துக்கும்
உயிர்
உணர்வு
மானம்
கற்பு
நலம்
கேடு
சிறகு
ஆகியன உண்டென உணர்வோம்.

மௌனமாய் இரு...

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்கு
உனக்கு ஒன்று பிடிக்காதபோது
உன்னை யாருக்கும் புரியாதபோது
உன்னை விட்டு பிறர் விலகும்போது
உன்னோடு யாரும் பேசாதபோது
உன்னை குறை கூறும்போது
உன்னை பிறர் வெறுக்கும்போது
உனக்கு சொல்லொன்னாக் கோபம் வரும்போது
மௌனமே சிறந்தது,,,,!

மேலெடு

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் ‘மேலெடு’ அல்லது ‘மேலடு’ எனும் எடை அதிகமான காதணி நமது ஊர்ப் பக்கங்களில் உள்ள பெண்மணிகளால் அணியப்பட்டது. இப்போதும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொண்ணூரைத் தொட்டுக் கொண்டிருக்கும் அல்லது கடந்த பெண்மணிகளில் சிலர் மேலெடு அணிந்திருப்பதைக் காணலாம்.
    அக்காலத்தில் பெண்களின் பதின்மப் பருவ (டீன் ஏஜ்) வயதில் காது குத்துதல் எனப்படும் மேலெடு போடுதல் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்ப்போம்!
    முதலில் தட்டார் எனும் நகை செய்பவர் காதை கத்தியால் அறுத்து முதலில் சிறு வட்டமான ஓட்டை போடுவார். இந்தக் காயத்திற்கு மருந்து ஈர்க்குச்சியில் துணியைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து காது ஓட்டைக்குள் சொருகி வைப்பார். தினசரி துணியை எடுத்து விட்டு மாற்றுத் துணி வைப்பர். ஒரு வாரம் கழித்து ஆறி விடும்! அதன் பின் ஈயத்தினால் ஆன வளையங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக மாட்டி விடுவர். பிறகு காதில் பனை ஓலைச் சுருளை மாட்டுவர்.
    காது ஆறுவதற்கு மூன்று மாதங்களாகும். அதற்குப் பின் வசதிக்குத் தகுந்தாற் போல் தங்கம் அல்லது வெள்ளியால் ஆன மேலெடு போடுவர். காலப் போக்கில் எடை அதிகரிப்பதால் ஓட்டை கீழே இழுத்துக் கொண்டு மூன்று அல்லது நான்கு அங்குலம் பெரிதாகும். முகத்தை ஒட்டிய காதின் சிறு பாகத்தில் (Tragus) போடுவது ‘குருடு.’ காதின் மேல் விரிந்த பாகத்தில் (Drum) போடுவது ‘கொப்பு’. காதின் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையில் காதின் ஓரத்தில் போடுவது மூன்றும் முறையே, ‘ஒண்ணப்பு’, ‘பச்சைக்கல்’, ‘தட்டை’.எனப்படும். காதில் இருநூறுக்கும் மேற்பட்ட அக்குப்ரஷர் புள்ளி உள்ளன. எனவே, காது குத்துவதால் உடலின் பல பாகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
    மன்னங்காடு கிராமத்தில் அண்மைக் காலம் வரை பயன்பாட்டில் இருந்த பெரிய துளைக் காதணிகள்.

படம் 1. இந்த வகைக் காதணிகள், கீழே தொங்காமல் காதின் துளைக்குள்ளேயே பொருந்துமாறு வடிவமைக்கபட்டவை. இவ்வாண்டு சனவரில் மறைந்த சுமார் 97 வயதுடைய திருமதி கோவிந்தம்மாள் கடைசி வரை இதனை அணிந்திருந்தார். மேலடு வகையைச் சேர்ந்ததென்றாலும், ‘பெரிய கல்தோடு’ என்றே இதை அழைத்தனர்.

படம் 2. இந்த வகைக் காதணிகள், காதிலிருந்து கீழே தொங்குமாறு வடிவமைக்கபட்டவை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்வரை மூத்த பெண்மணிகள் கிடைமட்டக் குழாய் போன்ற இந்த வகைக் காதணிகளுடன் மன்னங்காடு கிராமத்தில் உலா வந்தனர். படத்தில், வடிவ ஒற்றுமையுள்ள, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பான, இலங்கைப் பெண்மணியின் அணிகலன்.

தமிழகத்தின் பிற இடங்களில் வழக்கில் இருந்த காதணிகள்.

படம் 3. வெவ்வேறு வடிவங்களும், எடையும் கொண்ட இதுபோன்ற காதணிகள், பொற்கொல்லரின் கற்பனைக்கு ஏற்றவாறும், அணிபவரின் செல்வச் செழிப்பிற்கு ஏற்றவாறும் அமைந்தவை. தண்டட்டி, பம்படம் எனும் பெரியவகைக் காதணிகள் தென்காசி, கன்னியாகுமாரிப் பகுதிகளில் வழக்கில் இருந்துள்ளன (இருந்துவருகின்றன).

தகவல் மற்றும் படம் 1: துரைசாமி நவநீதம், மன்னங்காடு.

நன்றி: படங்கள்  2 & 3, இணையத்தில் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டு காட்டுமஞ்சரிக்காக ஒன்றிணைக்கப்பட்டவை.

***

பெண்ணே....!

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

தாயின் கருவறையில் உருவாகி
அவள் முகத்தை பொலிவாக்கி
பத்து மாதங்கள் பணிவாய்
பனிக் குடத்தில் மிதந்தவளே....!
உலகைக் கண்டு பிறந்தவுடன் அழுது
நீ முதல் அடி வைக்க மகிழ்ந்தேன்
பெற்றோரின் முகம் மலர... நீயோ
அழும் கண்களோடு பள்ளிக்குச் சென்றாய் !
பெண்ணாய் பூப்பெய்து இரண்டாம் அடியில்
தடம் பதித்து தாளாத கனவுகளில் மிதந்தாய்
கல்லூரிப் பருவத்தில் கலையோடு கலந்தாய்
திருமண பந்தத்தில் திருப்பமாய் திசை மாறினாய்
கணவனுக்காகக் கண காலம்...
பிள்ளைகளுக்காகப் பல காலம்... என
வாழும் பெண்ணே... உனக்கென வாழ்வது எப்போது?
மெழுகுவர்த்தியாய் உருகிவிடாதே...! சிலையாக நிலைத்து நில்!
மதித்து வணங்குவோர் மாநிலத்தில் உண்டு!

கோவிட்-19 ஊரடங்கும் சுற்றுச்சூழலும்

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்கு

கொரோனா எனும் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் ஆளாகி பலியானவர்களின் எண்ணிக்கையும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குணமானவர்களின் எண்ணிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
    கொரோனாவின் குடும்பம்: ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் பட்சத்தில் கோவிட்-19 7வது வைரஸாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2002ல் சார்ஸ் எனும் தொற்று கண்டறியப்பட்டது. இது வௌவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்குப் பரவியது.

ஊரடங்கால் சமுதாய நன்மைகள்:
    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு
எனும் வள்ளுவனின் வாக்குக்கேற்ப முகம் தெரியா உறவுகளிடம் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தது மனித நேயத்தைக் காட்டுகிறது. நகரம், மாநகரங்களில் துரித உணவுகளைத் தவிர்த்து வீட்டு உணவுகளை விரும்பி உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

ஊரடங்கால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள்:
    போக்குவரத்துத் தடையால் காற்றுமாசு, ஒலி மாசு குறைந்துள்ளது. ஓசோன் படலத்தில் உண்டான துளையின் அளவு குறைந்துள்ளது. வனவிலங்குகள் சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. இயற்கை ஓரளவு மகிழ்கிறது.
    கொரோனா ஒழிக்கப்பட வேண்டிய வைரஸ் என்றாலும் அது உலகுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பாடங்கள் ஏராளம்!

ஒரு மௌனத்தின் வலி

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

அரைத் தூக்கத்தில் படுத்திருந்த விறகு வெட்டி வசீலியெவ்க்கு விழிப்பு வந்தது. காட்டின் பறவைகள் ஒலியை மீறி சருகுகள் சரசரக்கும் ஒலி கேட்டது. தலைக்கு மேலே பைன் மரக்கிளைகள் நண்பகல் சூரிய ஒளிக்குள் தலையசைத்தன. சருகில் நடக்கும் ஒலி மிக அருகில் வந்து கொண்டிருந்தது. அவன் கூர்மையாக கவனித்துக் கொண்டே அசையாது படுத்திருந்தான். நேற்று வந்த கரடியாகத்தான் இருக்கும். இன்று அது தப்பிக்க முடியாது. கைக் கோடரியைச் சத்தமில்லாமல் அருகில் எடுத்து வைத்துக் கொண்டான்.
    ஒலி மிக அருகில்... வசீலியெவ்வின் பார்வை மட்டும் ஒலி வந்த திசையை நோக்கியது. கிழிந்த கோட்டுக்குள் யார்...?! அவன் சட்டென துள்ளிக் குதித்து எழுந்தான்! கோடரியை இலக்கின்றி வீசியெறிந்தான்.
    “தா...தா...தான்யா...!?” நா குளற... ரத்த நாளங்கள் விம்மியது...! உதடுகள் துடிதுடிக்க கண்களிலிருந்து கண்ணீர் பிரவாகம்...! ஆம்! அவன் மகள் தான்யாவேதான்! இருபத்தியிரண்டு தினங்களுக்கு முன்பு நாஜிப் படையினரால் வலுக் கட்டாயமாய் பிடித்துச் செல்லப்பட்ட தனது ஆறு வயது செல்ல மகள் உயிரோடு வந்து விட்டாள்...!
    ஒரே எட்டில் அவளைத் தூக்கி முத்தமழை பொழிந்தான்! தான்யா சிரித்தாள்! அப்பாவை இறுகக் கட்டிக் கொண்டாள்.
    “எப்படியம்மா வந்தாய்? உன்னை அந்த நாசக்காரர்கள் ஒன்றும் செய்யவில்லையா?” கோட்டைக் கழற்றி கைகள் கால்களை பரிசோதித்தான். என்ன ஆச்சர்யம்?! ‘என் மகளை நாஜிக்கள் சித்திரவதை செய்யவில்லையா?’ வசீலியெவ் விறகு... கோடரியை மறந்தான். மகளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக கிராமத்தை நோக்கிச் சென்றான். சந்தோஷ நடை அவனைப் பின்னுக்குத் தள்ளுவது போலிருந்தது.
    சே! இன்று என்னுடன் யாருமே விறகு வெட்ட வரவில்லையே! இந்த மகிழ்வை உடனே யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமே!
    தான்யா வசீலியெவ்க்கு ஆறாவதாய்ப் பிறந்த கடைசிக் குழந்தை. அவன் வசிக்கும் தெருவுக்கே செல்ல மகள்! அவளின் மூன்று வயதிலிருந்தே புரியாத மழலையில் ரஷ்யாவின் விடுதலை கீதத்தை பாடி எல்லோரையும் மகிழ்விப்பாள். அனைவரும் ஆவலுடன் கேட்டு ரசிப்பார்கள்...! ஒரு நாள் மிகைல் தாத்தாவோடு விறகு பொறுக்க பைன் காட்டிற்குள் சென்ற போது நாஜிக்கள் அவளைத் தூக்கிச் சென்று விட்டார்கள்! மிகைல் தாத்தாவால் பரிதவிக்கத்தான் முடிந்தது. அழுகையும் புலம்பலுமாய் ஓடிப்போய் ஊருக்குள் நடந்ததைக் கூறினார்.
    இளசுகள் கொதித்தெழுந்தார்கள்...! நாஜிக்களின் கொடூரத்திற்கு முடிவு கட்டப் போவதாய்ச் சூளுரைத்தார்கள். தான்யாவின் தாய் வலோத்யா மயக்கமுற்றாள்! உணவைத் துறந்தாள்! தூக்கம் மறந்தாள்!
    நாஜிக்கள் எத்தனைக் குழந்தைகளை இரக்கமே இல்லாமல் கைகள், கால்களை துண்டித்து சித்ரவதை செய்கிறார்கள். இவர்களின் இன வெறித்தாகம் எப்போது தீரப்போகிறது?
    வசீலியெவ் தான்யாவைச் சுமந்து கொண்டு ஊர் எல்லைக்குள் வந்து விட்டான். தான்யா கண்களை உருட்டியவாறு நெடுகிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். முதலில் குதிரை மேய்த்துக் கொண்டிருந்த மாஸ்லெவ்தான் அவன் கண்களில் பட்டான்.
    “ஏய்… மாஸ்லெவ்! தான்யா முழுமையாய் வந்து விட்டாள்! இதோ...” மாஸ்லெவ் நம்ப முடியாமல் குதிரையை விட்டு விட்டு இவர்களை நோக்கி ஆச்சர்யத்துடன் ஓடி வந்தான்.
    “என்னால் நம்பவே முடியவில்லையே...! நம் தான்யா முழுமையாக வந்து விட்டாளா?” வசீலியெவின் தோளிலிருந்து தன் தோளுக்குத் தான்யாவை மாற்றிக் கொண்டான். அவளைத் தூக்கிக் கொண்டே ஆடிக்கொண்டு ஓடியது வசீலியெவ்க்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பை வரவழைத்தது. தெரு மக்கள் நிலமையை உணர்ந்து ஒவ்வொருவராகச் சேர்ந்து வசீலியெவ் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். தான்யா அனைவரையும் பார்த்துக் கையசைத்துச் சிரித்தாள்.
    வசீலியெவ்வின் வீடு வந்தபோது அவனின் மூன்று பிள்ளைகளும் மனைவி மட்டுமே இருந்தார்கள். நேரம் செல்லச் செல்லக் கூட்டம் அதிகமாகி தான்யாவை அவர்களிடமிருந்து பிரித்தெடுப்பதற்கு வலோத்யா சிரமப்பட்டாள்.
    அவர்களது மூத்த பிள்ளைதான் உதவினான்.
    தான்யாவை வாரியணைத்து முத்தமிட்டு அவளது ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டி புதிய உடைகளை அணிவித்தாள்.! “என் கண்ணே... நீ அம்மா இல்லாமல் சாப்பிட மாட்டாயே!” சமையல் உள்ளினுள் சென்று இரண்டு ரொட்டியும் வேகவைத்த பருப்பும் எடுத்து வந்தாள். தான்யாவிடம் “ஆ.. காட்டு.” என்றாள். தான்யா வாய் திறந்தாள்... “ஓ....!”வென அலறி... மயங்கிச் சாய்ந்தாள் வலோத்யா! தான்யாவின் நாக்கு முழுமையாய் துண்டிக்கப்பட்டிருந்தது!


என்று தணியும்....

செல்வ. அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

வாணிபம் செய்ய வந்ததால்
வந்தது ஆங்கிலேய ஆதிக்கம்
அடிமை வாழ்வே ஆனந்தமென
அகமகிழ்ந்தனர் இந்தியர்! அந்தோ...
துன்பமே சூழ்ந்தது.. துடைத்தெறிந்தனர் புரட்சியால்!
நாடு சுதந்திரமாகி எழுபத்துமூன்று ஆண்டினை
நன்றே கடந்தது...!
லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி...
கலப்பட மளிகைப் பொருட்கள்...
சாதி கேட்கும் பள்ளிப் படிவம்...
கமிஷன் விரும்பும் அதிகாரம்...
இம்மாட்சிமைக் காட்சிகள் இந்திய மண்ணில்...!
ஆயிரம் பாரதி.. இலட்சம் காந்தி....கோடி கலாம்...
மீண்டும் பிறந்தாலும்... அல்ல...!
இவர்கள் வழியைப் பின்பற்றினால்
அன்றுதான் உண்மைச் சுதந்திரம்...!
‘வல்லரசு இந்தியா’ என்று சொன்ன
கலாம் வழி நடந்தால்...
‘நல்லரசு இந்தியா’ ஆகும்!

உதிரமற்ற உறவு

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

அன்று...(தந்தைக்கு)
முழங்கை சிராய்ப்பு ....!
தங்கை மிளகாய்ப்பூண்டு அரைத்து
சுண்ணாம்புடன் அப்பினாள் !
அக்கா சுக்குப் பொடி தூவினாள் !
அண்ணன் திட்டி டிங்க்சர் ஊற்ற....
தம்பியோ சுடு மணல் சலித்துப் போட்டான்!
ஆழமற்ற காயத்திற்கு
ஆழமான ஒத்தடங்கள்....!
இன்று...(மகனுக்கு)
முழங்கை ஒடிந்தது ....!
நூற்றியெட்டு துடியாய்த் துடிக்க
நூதன வைத்தியம் ஆரம்பம்....
ஐசியுவில்... ஆர்த்தோவின் ஆலோசனைக்கே ஆயிரம்!
தொடர் வண்டியாய் கம்ப்யூட்டர் பில்
ஓரிரு நாட்களில் பல ஆயிரங்கள் !
சிஸ்டர் பல்ஸ் பார்த்து ஊசி போட்டாள்
சிஸ்டர் சாப்பாடும் கொடுத்து குட்பை சொன்னாள்....!
நான் ‘ஒரு குடும்பத்தின் ஒரு வாரிசு’
சகோதர ஒத்தடங்களை எந்த ‘டாட் காம்’மில் பெறலாம் ....?

குறளின் குரல்  4

அறமது செய்யின்...

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு   

அறம் வாழ்க்கையில் எத்தனை இன்றியமையாதது என்பதனை ஆன்றோர் நமக்கு பல வழிகளில் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்கள். உலகம் கொரோனா வைரஸ் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் பிறருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்தில் பலர் தங்களால் இயன்ற அளவில் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள்... வருகிறோம்! அவர்களைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்.
    தனது எதிர்காலப் படிப்புக்குத் தந்தை சேமித்து வைத்த சில லட்சங்களை கொரோனாவால் உணவின்றித் தவிக்கும் ஏழைகளுக்குச் செலவிடச் செய்த பெண்ணை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்! இன்னொரு சிறுமியோ உண்டியலில் தான் சேமித்து வைத்த சில நூறு ரூபாய்களை அள்ளி வழங்கினாள்!
    சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அறத்தை வலியுறுத்த வேண்டும். அதற்குச் சிறந்த உதாரணம் சென்னையில் ‘உதவும் கரங்கள்’ எனும் ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வரும் வித்யாகர் என்பவரை உதாரணமாகக் கூறலாம். வித்யாகர் தனது பெற்றோரால் சிறு வயதில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து தத்து எடுக்கப்பட்டவர். அவர் வளர்ந்து இளைஞரானதும் உதவும் கரங்கள் அமைப்பை ஏற்படுத்தி சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற பலருக்கு ஆலமரமாகத் திகழ்கிறார்!
    ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
    ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும் - ஏற்றவர்க்கு
    நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
    இல்லை என மாட்டார் இசைந்து.

என ஔவையாரின் நல்வழி அறத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. இதன் பொருள்; ஆற்றிலே வெள்ளம் வருவது நின்று போய் மணல் காய்ந்து நடப்பவர் கால் சுடுகின்ற அந்த நாளிலும் அந்த ஆறு, ஊற்று நீரால் உலகத்து மக்களை உய்விக்கும். அது போல் உயர்குடியில் பிறந்தவர்கள் வறுமையடைந்தாலும் தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு மனம் ஒப்பி இல்லை எனக்கூற மாட்டார்கள். மேலும் தனது ஆத்திச் சூடியில் ‘தானமது விரும்பு’ எனவும் ஔவையார் கூறுகிறார். தானம் செய்ய ஆசை கொள் என்பதே இதன் விளக்கம்!

ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து              குறள் இல்வாழ்க்கை 5:48
குரல் ஒலிக்கும்…


இடர்மிகு பொற்காலம்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு 

    காவிரி வளநாட்டின் மாற்றாந்தாய்ப் பிள்ளைகளான பட்டுக்கோட்டையின் சுற்றுப் பகுதிகள், ஆதியில் காவிரிப் பேராற்றின் கருணைக்கண் படாத வானம் பார்த்த மேட்டு நிலங்களாய் காய்ந்து கிடந்தன. இருப்பினும் அந்நிலங்கள் ஆங்கிலேய நிர்வாகத்தின் ‘கருணைக்கண்’ பட்டு ஏதோ ஒரு மாற்றத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தன. ‘காவிரி மேட்டூர்த் திட்ட’த்தின் ஒரு பகுதியாக, நம்முடைய தற்கால அரசுகள் கனாக்காணக்கூட முடியாத வளர்ச்சித் திட்டமான ‘கல்லணைக் கால்வாய்த் திட்ட’த்தை 1930ல் இருந்து 1940 கால கட்டத்தில் ஆங்கில அரசு செயல்படுத்திக் கொண்டிருந்தது. அந்தப் பெருந்திட்டத்தின் கடைமடைச் சிற்றூர்களில் ஒன்றான மன்னங்காடு கிராமத்திற்கும் ஒருநாள் அக்கால்வாயில் காவிரி நீர்ப் பாய்ந்து வளம் சேர்க்கும்.
    அந்த வளர்ச்சித் திட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் அதே 1930 -1940க்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்துக்குள்தான் அடுத்தடுத்து ஆறு ‘பெருங்காத்து’கள் (புயல்கள்) மன்னங்காடு கிராமத்தைச் கசக்கிச் சாறு பிழிந்துவிட்டுச் செல்லப்போகின்றன (பழைய பெருங்காத்துகள் பற்றிய விரிவான கட்டுரையை காட்டுமஞ்சரி இதழ் 2020:1ல் காண்க). ஒத்தடம் கொடுப்பதுபோல், வறுமையாலும் புயலாலும் கசங்கிக் கிடந்த மக்களுக்கு இடையே ஒருவழியாகக் காவிரியின் நீர் கல்லணைக் கால்வாயின் சிறு வாய்க்கால்கள் வழியாகக் கசிந்தோடத் தொடங்கும்.
    அனல் கக்கும் கோடையிலும் காவிரியின் ஈரம் கசிந்திறங்கி, சோர்ந்து கிடந்த மரங்களின் வேர்களின் முகத்தில் நீர் தெளிக்க ஆரம்பிக்கும். ஊர்ப் பெருங்குடி நிலக்கிழார்களுக்குத் தெரியாமல் வாய்க்காலுக்குள் கால் வைக்கக் கூடாதென்றும், காவிரி நீரைப் பயன்படுத்தினால் வெள்ளையர் வரி போட்டு வீடு, கழனிகளை ஏலம் விட்டுவிடுவார்கள் எனும் வதந்திகள் ஆங்காங்கே சிறுவர்களையும் பெரியவர்களையும் சற்றுக் கடிவாளம் போட்டு வைக்கும். மக்களுக்கு முன்பாகவே மரங்களுடன் சேர்ந்து பலதரப்பட்ட தாவர வகைகளின் வேர்களும் விழித்தெழுந்து தெம்புபெற ஆரம்பிக்கும்.
    தொடர்கதையாகிவிட்ட புயலெனும் இயற்கைப் பேரிடர் ஒருபுறம், கல்லணைக் கால்வாயின் காவிரி நீர் பற்றிய புரளிகள் மறுபுறம். நிச்சயமற்ற நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் என மன்னங்காடு கிராமத்தில் பலரும், பிழைப்பு தேடி சிங்கப்பூருக்குச் செல்ல ஆரம்பித்ததும் இந்தக் கால கட்டத்தில்தான். அவரில் சிலர் அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு ஊர் திரும்பப் போவதில்லை. அதிலும் சிலர் காலனின் பிடியில் சிக்கித் திரும்பி வரவே போவதில்லை. மக்கள் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த இந்த இக்கட்டான காலத்தில் பிறந்த குழந்தைகள் பள்ளி செல்லும் வயதடையும் காலம் வரும் போது, பள்ளிக் கல்விமுறை சற்றுப் பரிணமித்திருக்கும். மன்னங்காடு காவிரி நீரின் கருணையால் சற்று வளம் பெற்றிருக்கும். சுழன்றடித்த புயல்களும் சற்று ஓய்ந்து நிற்கும். சிங்கப்பூருக்குச் சென்றிருந்த சிறுவர்கள் பிழைத்து மீண்டு இளைஞர்களாக தமது உடல் உழைப்பை ஊருக்கு அளிப்பார்கள். அவ்விளைஞர்களின் திரைகடலோடித் தேடிய திரவியம் ஊரின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருக்கும். ஆங்கிலயர்கள் பிடி விடுபட்டிருக்கும், அப்பிடியை விடவும் கடுமையான ஊர்ப் பெருந்தனக்காரர்களின் பிடியும் சிறிது நெகிழும். இவ்வாறான மாற்றங்கள் நிறைந்த காலத்தை மன்னங்காடு வரலாற்றில் ‘இடர்மிகு பொற்காலம்’ எனச்சொல்வது மிகையா?

திறனோர் போற்றுதும்

‘பிஏபிடி’ இராமச்சந்திரன்

வாழ்க்கைச் சுருக்கம்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

BABT Ramachandran, Mannankadu

தஞ்சையின் வானம் பார்த்த பூமியாயிருந்த கானல் மேட்டுப்பகுதி நிலங்களுக்குச் செயற்கையாக அமைக்கப்பட்ட கல்லணைக் கால்வாயின் கிளை வாய்க்கால்களின் வழியாக நீரோட ஆரம்பித்து, மன்னங்காடு கிராமத்திற்கும் வந்துசேர, உள்ளூர் விவசாயிகள் தம் உழைப்பால் ஊரின்மேல் பச்சை எனும் புதுச்சாயத்தைச் சற்றுப் பரவலாகப் பூச ஆரம்பித்திருந்தார்கள். அவ்வாறான சூழலில் உழவுத் தொழிலையே முதன்மையாகக் கொண்ட குடும்பம் ஒன்று ஊரின் உள்ளே கிழக்குப் பகுதியில் திரு. சீனிவாசன் ஐயா மற்றும் திருமதி. அகிலாண்டம் அம்மையார் ஆகியோரை தலைமையாகக் கொண்டிருந்தது.
    சீனிவாசன்-அகிலாண்டம் தம்பதி ஐந்து பெண் மகவுகளைப் பெற்று சீருடன் வாழ்ந்துவரும் காலத்தில் கடைசியாக ஆண் குழந்தையொன்றையும் ‘இடர்மிகு பொற்கால’த்தின் நடுவில், 1937, அக்டோபர் மாதம் 16ம் நாள் ஈன்றெடுத்தனர். அக்குழவிக்கு இராமச்சந்திரன் எனப் பெயர்சூட்டி, பல பெண் குழந்தைகளுக்குப் பின் தோன்றிய குழந்தையானதால் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.
    திண்ணைக் கல்வியிலேயே முடங்கிக் கிடந்த காலம், மாற்றம் பெற்று, முறையான தொடக்கப் பள்ளிக் கல்வி ஊருக்குள் முளைவிட்டுக் கொண்டிருந்தது. உள்ளூரில் தொடக்கப் பள்ளிப் படிப்பு நிறைவடைந்த நிலையில், உயர்நிலைக் கல்வியைப் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார் இராமச்சந்திரன். அப்போதைய 11 ஆண்டு ‘எஸ்எஸ்எல்சி’ படிப்பைச் செவ்வனே முடித்து கல்லூரிக்குச் செல்ல ஆயத்தமானார். அந்த சமயத்தில் ஊரின் தெற்கில் உள்ள அதிராம்பட்டினத்தில் 1955ல் காதிர் முகைதீன் கல்லூரி இயங்க ஆரம்பித்திருந்தது. அங்கு ‘பியுசி’ எனும் புகுமுகக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றார். அக்கல்லூரியிலேயே இளங்கலை படிப்பில் வரலாற்றுத் துறையில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சியுற்று ‘பிஏ’ பட்டத்துடன் வெளியேறினார். அதன்பின் ஒரத்தநாடு அரசுக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சித் துறையில் சேர்ந்து ‘பிடி’ (இப்போதுள்ள ‘பிஎட்’ படிப்பு போன்றது) எனும் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுத் தேர்ந்தார்.
    கல்லூரியோ, கல்லூரிப் படிப்போ, கல்லூரிப் பட்டமோ குதிரைக் கொம்பாக இருந்த 1950க்களில் திரு. இராமச்சந்திரன் இரண்டு பட்டங்களுடன் ஊர் திரும்பியது ஒரு சாதனைதான். அவர் முயன்று படித்துப் பெற்ற ‘பிஏ’, ‘பிடி’ எனும் பட்டங்கள், வேலை பெற்றுத்தரும் வெறும் பட்டங்களாக மட்டும் அமையாமல், காலப்போக்கில் இராமச்சந்திரன் அவர்களின் அடையாளமாகவே மாறிவிட்டன. ஆம், மரியாதை நிமித்தமாகவும், அறிந்தும் அறியாமலும், இளையோரும் மூத்தோருமாக அவரை ‘பிஏபிடி’ என்றோ, ‘பிஏபிடி சார்’ என்றோதான் அழைத்தனர்! மன்னங்காடு மட்டுமின்றி மற்ற சுற்றுப்புற ஊர்களிலும் பட்டங்களால் மட்டுமே அடையாளம் சுட்டப்பட்ட கிராமவாசி இவர் ஒருவரே!
    இரண்டாவது பட்டம் பெற்ற ஒருசில மாதங்களிலேயே வேலை அவரைத் தேடிவந்தது. ஒரத்தநாடு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பணியைத் தொடங்கிய சில காலத்தில் இவரது பெற்றோர், மூத்தாகுறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட சரோஜா எனும் பெண்ணை அவருக்கு மணம் முடித்து வைத்தனர். சரோஜாவும் அக்காலத்திய எஸ்எஸ்எல்சி வரை பயின்றவர். அச்சமயத்தில் கணவனும் மனைவியும் மேற்கல்வி பெற்று இணைந்திருந்த குடும்பம் ஊரிலேயே இது ஒன்றுதான் எனில் அது மிகையில்லை.
    சில ஆண்டுகள் ஓரத்தநாட்டுப் பணிக்குப்பின் மாறுதல் பெற்று பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியரானார். அதன்பின் அருகில் உள்ள காசாங்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார். உள்ளூரில் அப்போது இலக்கியத் தொண்டாற்றி வந்த திருவள்ளுவர் மன்றத்தின் செயலராகவும் சிலகாலம் பொறுப்பாற்றினார்.
    ஆசிரியப் பணியில் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு இணையாக விவசாயத்திலும் ஆர்வம் காட்டினார். நெல், நிலக்கடலை, தென்னை சாகுபடியில் முழு மூச்சாக ஈடுபட்டு, முழு நேர ஆசிரியராகவும், பகுதிநேர விவசாயியாகவும் தமது நேரத்தைச் செலவிட்டுச் சுறுசுறுப்புடன் செயல்பட்டார்.
    பின்னர், சற்றுத் தொலைவில் உள்ள பெரியகோட்டை அரசுப் பள்ளியிலும், அதன்பின் கண்கொடுத்த வணிதம் எனும் கிராம அரசுப் பள்ளியிலும் பணியாற்றிய பின், பதவி உயர்வு பெற்று, மீண்டும் அருகில் உள்ள காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கே திரும்பி, உதவித் தலைமை ஆசிரியாராகப் பொறுப்பேற்றார். அத்துடன், சற்றுத் தளர்வு பெற்றிருந்த தமது உழவுத் தொழிலுக்கும் ஊக்கம் கொடுத்து செம்மையாக்கினார். இச்சமயத்தில் திருவோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைக்க, அந்த வாய்ப்பைப் புறக்கணித்து காசாங்காடு பள்ளியிலேயே பணியைத் தொடர்ந்தார். தமது 54 வயதில், 1992ம் ஆண்டில் ஆசிரியப் பணியிலிருந்து ‘விருப்ப ஒய்வு’ பெற்று விவசாயத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
    இராமச்சந்திரன்-சரோஜா தம்பதிக்கு அலெக்சாண்டர், பாஸ்கர், சத்தியநாதன் எனும் மகன்களும், நீலா எனும் மகளும் உள்ளனர். ஆர்ப்பாட்டமற்ற செயல்பாடு, அமைதியான அணுகுமுறை, வயதில் சிறியோரையும் மரியாதையுடன் நடத்தும் கண்ணியம், செருக்கற்ற கல்வித்தகுதி ஆகியவற்றைக் கட்டமைப்பாகக் கொண்டு ஆசிரியத் தொழிலில் கர்மவீரராகவும், விடாப்பிடியான விவசாயியாகவும் வாழ்ந்த ‘பிஏபிடி’ அவர்கள் ஏப்ரல் 20, 2014ல் புகழுடல் எய்தினார்.

நன்றி: இக்கட்டுரைக்கான படம் மற்றும் அடிப்படைத் தகவல்களைச் சேகரித்து உதவியவர், தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் திரு. இரா. சத்தியநாதன், மன்னங்காடு அவர்கள்..


பெருமைமிகு பிஏபிடி சார்!

ஆ. இரா. பாரதராஜா, மன்னங்காடு மேற்கு

பிறப்பு முதல் இறப்புவரை
உழைப்பு ஒன்றே
அணிகலனாய்க் கொண்டாய்!

சிறப்புத்தரும் செல்வமென
செகம் போற்றும் ஆசிரியர்
பணியினையே கண்டாய்!

தரித்திரத்தை உடைத்தெறிந்து
தரமான கல்வி கற்று
திறமான ஆசிரியர் ஆனாய்!

சரித்திரத்தைப் படித்துவிட்டுச்
சளைக்காமல் பணியாற்றி
சரித்திரமாய் நீயாகிப் போனாய்!

உரித்தெடுத்த கோழிபோல
ஒல்லியான உடல்கொண்டு
ஓயாமல் உழைப்பாயே அய்யா!

பிரித்தெடுத்த பாகங்கொண்ட
சைக்கிளிலே பயணித்து
பள்ளிக்கு வந்திடுவாய் மெய்யாய்!

புத்தகத்தைப் பார்க்காமல்
வரலாற்றை மாற்றாமல்
பாடத்தை நடத்திடுவாய் இனிதாய்!

சத்தம் எவர் போட்டாலும்
சட்டென்று கோபமுற்று,
மறந்திட்டு மகிழ்வாயே தாயாய்!

இராமச்சந்திரன் சார் என்றால்
யாருக்கும் தெரியாது
இதுதானே யாமறிந்த உண்மை!

‘நம்ம பிஏபிடி சார்’ என்றால்
அனைவருமே அறிந்திருப்பர்
அதுதானே உம்அறிவின் நன்மை!

பட்டுக்கோட்டைப் பள்ளிக்கு
நடந்து சென்றே படித்ததாக
யாமெல்லாம் அறிந்திட்ட செய்தி!

சிட்டுப்போலப் பறந்திட்டு,
பட்டங்களை முடித்திட்டுப்
பெற்றிட்டாய் ஆசிரியர் தகுதி!

எளிமையினை வாழ்வினிலே
எந்நாளும் கொண்டிட்ட
ஏற்றமிகு மகாத்மா காந்தி!

வலிமைமிகு ஆற்றுக்குள்
வண்டியிலே எரு ஏற்றி,
மாட்டோடு சென்றிடுவாய் நீந்தி!

வளமையுடன் இருந்தாலும்
‘வாத்தியார்’ என்றாலும்
உழவராக வாழ்ந்திடுவாய் என்றும்!

இளமைமுதல் உழைத்திட்டு,
இனிமைமிகு மனைவி, மக்கள்
யாவரையும் போற்றிடுவாய் நன்று!

தலைமைஆசிரியர் ஆனாலும்
தற்பெருமை இல்லாதது
உம்முடைய உயர்மரபுப் பண்பு!

நிலைமை மிக உயர்ந்தாலும்
மாறாத தனித்துவமே
ஆசானே, உம்முடைய மாண்பு!

மன்னன்காடு, காசாங்காடு, வீடு
மறக்காத தோப்பு, வயல்காடு
இவைதானே பிஏபிடி நாடு!
மன்னன் போல உயர்ந்திடலாம்!
மனிதனாக வாழ்ந்திட்டாய்
ஆசானே, உமக்கு எவர்ஈடு?

சிலம்பில்லை...குழம்ப வேண்டாம்! 

காட்டுமஞ்சரியின் இந்த இதழில் வெளியாகியுள்ள படைப்பொன்றின் ஆசிரியர், தமது ஆக்கத்தின் ஒரு பகுதியாகக் கீழ்வரும் வரிகளை ‘மேற்கோளிட்டு’ச் சேர்த்திருந்தார். படைப்பின் அந்தப் பகுதியை மட்டும் நீக்கி, இங்கு கீழே தந்துவிட்டு மீதியை படைப்பாளரின் பெயரிலேயே வேறெந்த மாற்றமும் இன்றி வேறொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
    கீழே [அடைப்புக் குறிகளுக்குள்] கொடுக்கப்பட்டுள்ள நீக்கப்பட்ட பகுதி இலக்கிய நூலொன்றை ஆதாரம் காட்டிச் சில காலமாகவே பல சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவ்வரிகள், கூறப்பட்டுள்ள இலக்கிய நூலுடன் தொடர்புடையதல்ல. படைப்பாளர், எப்பொருள் எங்கு காண்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்டு, தெளிவுற்று, தம் படைப்புக்களில் மேற்கோளிடவும்.
    காட்டுமஞ்சரி எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் ஒரு பயில் களம். ‘பிழையோடு எழுதும்போது எழுத்துகள் நோய்வாய்ப்படுகின்றன’ எனக் கவியொருவர் இந்த இதழின் முதல் கவிதையில் எடுத்துரைக்கிறார். எழுத முனைவோர் அக்கருத்தை மனத்தில் கொண்டு சொற்பிழை, பொருட்பிழை, மேற்கோள் பிழைகளைத் தவிர்த்து தமது எழுத்துத் திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

நீக்கப்பட்ட மேற்கோள்:
[“தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
காசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?”
எனும் சிலப்பதிகாரக் கூற்றுடன் சான்று கூறலாம்].
    - காட்டுமஞ்சரியின் சார்பில் துரைசாமி நவநீதம், மன்னங்காடு


ஆலத்தூராரின் அறத்து ஆறு களஞ்சியம்

பணமா? பாசமா?

ஆலத்தூர் சி.அ. சாமி, வடக்குத்தெரு ஆலத்தூர்

என் கண்ணால் கண்டதை இங்கு கதையாக தருகிறேன்.
இரண்டு குடும்பத்தில் நடந்த கதை இதில் எது சரி எது தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
பணமென்னும் காகிதத்தால் பலபேர் மாறிட்டார்
குணம்தன்னை மதித்திடவே அவரெல்லாம் மறந்துட்டார்.....
இருக்கின்ற இருப்பாளே அவருன்னை மதிக்கிறார்
இல்லாத மனிதரையோ ஏளனமாய் பார்க்கிறார் .......
பொன் பொருளை தேடியே புலர்கிறார் மனிதரே
பொய்யான நடிப்போடே வாழ்கிறார் உலகிலே ......
பாசமாய் இருந்தவனை பணமோ மாத்துது
பாசம்கொண்ட மனிதனையோ பங்காளி ஆக்குது........
வாழும்போது நாடகம்தான் எத்தனைதான் மனிதனே
உன் நடிப்பெல்லாம் புரிந்திடுமே இறுதியில் உண்மையில்.......
கொரோனா ஊரடங்கில்: விமானம் போக்குவரத்தும் பொது போக்குவரத்தும் இல்லை, 14 நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும்.

    முதல் நபர்: இவர் படித்தவர் ஒரு நல்ல கம்பெனியில் வளைகுட நாட்டில் வேலைப்பார்த்து வருகின்றார். இவரை சுற்றியிருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள். ஆனால் எட்டு பெயர்களிடம் மட்டும் தென்னை மரத்து நாண்பர்களாக இருப்பார்கள். இவருடைய தாயார் இறந்துவிட்டார், ஊருக்கு போக வேண்டும் என்கின்ற ஆசையும் இருந்தது ஆனால் சுற்றியிருந்த நண்பர்கள் பேச்சை கேட்டு போக முடியவில்லை. அதற்கு காரணம் பணத்தாசையை மட்டும் சொன்னார்களே தவிர போவதற்கு எந்த வழியும் சொல்லவில்லை, மற்றவர்களின் சொல்படி இவரும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருந்துவிட்டார்.
    இரண்டாம் நபர்: இவர் படிப்பறிவு அவ்வளவாக இல்லை தன்னுடைய மதிநுட்பம் வைத்து சிறிய கம்பெனியில் வளைகுட நாட்டில் வேலைப்பார்த்து வருகின்றார். இவரை சுற்றியிருப்பவர்கள் எல்லாம் நுட்பமாக படித்தவர்கள் அல்ல. இவருடைய தாயார் இறந்துவிட்டார், ஊருக்கு போக வேண்டும் என்கின்ற ஆசையும் இருந்தது, இதனை கேட்ட சுற்றியிருந்த நண்பர்கள் உதவியுடன், ஒரு கர்ப்பிணிப் பெண் (அதுக்குரிய இருக்கை விட்டுக் கொடுத்து) தயவால் விமானத்தில் இருக்கை கிடைத்ததோடு அம்மாவின் இறுதி அஞ்சலி செலுத்தும் பாக்கியமும் கிடைத்தது.
    முதல் நபர் (கோடீஸ்வரர்) பணத்திற்கு மனம் இடம் கொடுத்ததினால் அம்மா இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள முடியாது போனது. இரண்டாம் நபர் (பணத்தினை சேமிக்காதவர்) பாசத்திற்கு மனம் இடம் கொடுத்து தன்னம்பிக்கையோடு விடா முயற்சியும் செய்ததால் அம்மா இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள முடிந்தது.
    பாசம் என்பது ஒருவழிப் பாதையல்ல! இருவழிப்பாதை. அதாவது கொடுத்துப் பெறுவது. கேட்டுப் பெறுவதல்ல. இது புரிந்துவிட்டால் சிக்கல்களே இல்லை...
    உறவுகள் உறுதியாக இருப்பதற்கான அடிப்படையே ஒருவருக்கொருவர் கொடுக்கும் நம்பிக்கையும், மரியாதையும்தான்...
    ஒருவருக்கு மற்றொருவர் மரியாதை கொடுக்கத் தவறுவதுகூட விரிசலுக்குக் காரணமாகலாம். இது கணவன் - மனைவி உறவுக்கு கூடப் பொருந்தும்...
    `முதலில் உன்னை மதிக்கக் கற்றுக் கொள். அப்போதுதான் மற்றவர்களும் உன்னை மதிப்பார்கள்’ என்பது கன்ஃப்யூஷியஸின் பொன்மொழி...!
    தன்னை உணர்ந்தவர் கௌரவம் பார்க்க மாட்டார்; யாரிடமும் தனக்கான மரியாதையை கேட்டுப் பெறவும் மாட்டார்...
    ஆம் நண்பர்களே...!
    ஒருவருக்கொருவர் மற்றவர்களை தன்னைவிட கீழ் நிலையில் உள்ளவர் என்று தரக் குறைவாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மரியாதை (அன்பு) செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்...!
    சுயநலமில்லாத இந்த பழக்கம் மற்றவர்களிடத்து பெரிதும் விரும்பச் செய்யும்...!
    ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உள்ளவர்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் அய்யமில்லை...
    பணமிருக்கும் வரை இருந்த உறவு பணமில்லையென்றால் பறந்து போய்விடுமே!
    அன்பு (பாசம்) காட்டினால் உறவு மலரும்... மலர்ந்த உறவு வற்றாத அன்பால் (பாசத்தால்) பிரிந்திட வாய்ப்பில்லையே! வாழ்க்கையில் பணத்தைவிட அன்பே (பாசமே) வலிமையானது! வாழப் பணம் வேண்டும் ஆனால் வாழ்வைச் சுவைக்க இனிய அன்பு (பாசம்) வேண்டுமே.

கொரோனா ஒரு பார்வை

மானுடம்சுரேஷ், செங்கப்படுத்தான்காடு      

கொரோனா நுண்ணுயிரி உருவான விதம் அது பரவிய விதம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மேலும் அதனிடமிருந்து தற்காப்பு நடவடிக்கைகள் சகலரும் அறிந்ததே
    ஆனால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு சில அறிகுறிகள் தென்படும் ஆனால் கொரோனா சுமார் ஒரு மாதத்தில் இதற்குரிய அறிகுறிகள் தென்படும் என்று கூறப்படுகிறது.ஆனால் இதற்குரிய முறையான மருத்துவத் தீர்வு எட்டப்படவில்லை என்பதே உண்மை.
    என்னுடைய ஐயம் என்னவென்றால் நமது பட்டுக்கோட்டையின் சுற்றுப்பகுதிகளில் பல்வேறுபட்ட சிகிச்சைக்காக பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் கடந்த சுமார் மூன்று மாதங்களில் எவ்வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமலே பலரும் நடைமுறை வாழ்க்கையை தொடர்ந்தனர்.இதில் அவர்களுடைய நோயின் தாக்கம் தற்காலிகமாக நிறுத்தபட்டதா? அல்லது மருத்துவர்களின் மானசீக பிரார்த்தனையால் பிழைத்தனரா?
    இதிலும் ஒருசிலர் தனது பகையை தீர்க்க கொரோனாவை ஆயுதமாகவும் உபயோகிக்க துவங்கியுள்ளனர்
    நான் கடவுளிடம் கேட்கிறேன் "கடவுளே கொரோனா என்ற பாசக்கயிற்றின் கட்டிலிருந்து எங்களை எப்போது விடுவிப்பாய்?"

ராகு, கேதுப் பெயர்ச்சி

மானுடம் சுரேஷ், செங்கபடுத்தான்காடு

வாழ்வில் மக்கள் பல்வேறுபட்ட நம்பிக்கையுடன் பயணிக்கின்றனர்.அதில் ஒன்றான சோதிடம் அதாவது தற்சமயம் வானில் சூரியனை சுற்றி வரும் ஐந்து கிரகங்கள் மற்றும் ஒளி கிரகமான சந்திரன் மற்றும் சூரியனையும் சேர்த்து ஏழு கிரகங்கள் மேலும் சூரிய சந்திரனின் வெட்டுப்புள்ளியான ராகு,கேதுவையும் சேர்த்து ஒன்பது கிரகமாக வரையறுத்து அந்த கிரகங்களின் நகர்வு மற்றும் பூமிக்கு கிடைக்கும் ஒளியளவு மாறுபாட்டை வைத்து பலன்களை கூறும் காலக்கணித முறையே சோதிடம்.
    வான் மண்டலத்தை பன்னிரண்டு கட்டங்களாகப் பகுத்து அதில் ஏழு கிரகங்களுக்கும் அந்த பகுப்பை அளித்து சுய ஒளியில்லா சாயா கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு, கேதுவுக்கு மட்டும் சுய வீடு (கட்டம்) அளிக்காமல் அது எந்த வீட்டில் இருக்கின்றதோ அவ்வீட்டை தனது சுய வீடாக பாவித்து அது சஞ்சரிக்கும் நட்சத்திர அதிபதி, பார்க்கும் கிரகங்கள், அவ்வீட்டின் அதிபதியின் நிலையை பொருத்தே பலனை தருவார்கள்.
    இந்த ராகு-கேது ஆவணி மாதம் 16ம் திகதி (1.09.2020) செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதியும்,சூரிய ஓரையும், அதிகண்ட நாமயோகத்துடன் கூடிய சித்தயோகத்தில் மதியம் 2:10 க்கு மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதத்தில் ரிசப ராசியில் ராகு பகவானும்,கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்தில் விருச்சிக ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகின்றனர்.
    இந்த கிரகப் பெயர்ச்சியால் பன்னிரெண்டு ராசிக்கான பலன்களைப் பார்ப்போம்.
மேஷம்: காலப்புருஷனுக்கு முதல் ராசியான மேஷ ராசிக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் பெயர்ச்சி ஆகின்றனர்.மேஷத்திற்கு 2ல் ராகு சஞ்சரிக்கும் காலத்தில் திடீர் பணவரவு, குடும்பத்தில் சில சிறுகுழப்பங்கள், பேச்சில் கவனமும்,சிறு உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. கேது 8ல் இருப்பதால் உயில், சொத்து பிரச்சினைகள், ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.விநாயகர், முருகன் வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
ரிஷபம்: ஜென்மத்தில் ராகு சஞ்சரிப்பதால் அதீத ஆசை மற்றும் புதுவித முயற்சியில் சற்று கவனமும், பெண்கள் மற்றும் ஆடம்பர பொருட்களில் நிதானமும் தேவை.கேது 7ல் சஞ்சரிப்பதால் மனைவி, மக்கள் தொடர்பு மற்றும் பங்குதாரர்கள் வகையில் அசட்டையான போக்கை தவிர்த்து கவனத்துடன் செயல்படுவது நல்லது. தினமும் விநாயகர் மற்றும் மாலை வேளைகளில் ஏமதீபம் (குபேரனுக்கு வடக்கு முக தீபம்)ஏற்றி வழிபடுதல் நல்லது.
மிதுனம்: ராகு,கேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மையை அடையப்போகும் ராசியான மிதுனத்திற்கு 12ல் ராகுவும்,6ல் கேதுவும் பெயர்ச்சி அடைவதால் சத்ரு பயம் நீக்கும்,உடல் ஆரோக்கியம் மேலோங்கும், நிரந்தர வருமானம் ஏற்படும், சுப விடையங்கள், அயல்நாட்டு வருமானம் ஏற்படும்.பெருமாள் மற்றும் ராகு காலத்தில் காளிதேவி வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
கடகம்: கால புருஷனுக்கு 4ம் வீடான ஜலராசியான கடகத்திற்கு 11 மற்றும் 5 இடத்தில் ராகு,கேது பெயர்ச்சி ஆவதால் நன்மையும் தீமையும் கலந்தே பலன் கிடைக்கும்.பேச்சைக் குறைத்து அமைதியான போக்கையும், நேர்மையான வழியில் நடப்பது ஏற்றது. இறை வழிபாட்டை மேற்கொள்வதின் மூலம் மன அமைதியைப் பெறலாம்.
சிம்மம்: 10 மற்றும் 4 இடங்களில் ராகு,கேது பெயர்ச்சி நிகழ்வதால் அதிக கவனம்,வண்டி வாகனம்,வீடு சொத்து மற்றும் தாயார் வகையிலும் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.சுமூகமான போக்கை கடைப்பிடிப்பது நல்லது. புதிய தொழில் மற்றும் முயற்சியை தற்சமயம் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கன்னி: 9 மற்றும் 3 இடங்களில் ராகு,கேது பெயர்வு நிகழ்வதால் ஒரு சில தடைகளை கடந்தே முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களில் அதிக கவனமும்,இளைய சகோதர வகையில் சில பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
துலாம்: ராசிக்கு 8 மற்றும் 2ம் இடத்தில் ராகு,கேது பெயர்ச்சி இருப்பதால் பணம், வாக்கு, குடும்பம், உடல் நிலையில் அதிக கவனம் மற்றும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.எந்நிலையிலும் பொறுமை காப்பதே சாலச்சிறந்தது.
விருச்சிகம்: ஜென்மத்தில் கேதுவும் 7ல் ராகுவும் பெயர்ச்சி ஆவதால் சோம்பல், மனைவி, பங்குதாரர்கள் வகையிலும், மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் செயல்படுவது ஏற்றது.தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.
தனுசு: 6 மற்றும் 12ல் ராகு,கேது பெயர்வு நிகழ்வதால் நற்பலன்களை அதிகமாக பெறும் ராசிகளில் தனுசுவும் ஒன்று. ஆன்மீக வழியை பின்பற்றினால் அதிகபட்ச நற்பலன்களை பெறலாம். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் வாய்ப்பு அதிகமுள்ளது.
மகரம்: 5 மற்றும் 11ல் ராகு,கேது பெயர்ச்சி நிகழ்வதால் பிள்ளைகள், நண்பர்கள்,பூர்வீக சம்பந்தமான பிரச்சினைகளை சந்தித்தாலும் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உங்கள் இயல்பான குணத்துடன் நடைபோடுவீர்கள்.
கும்பம்: 4 மற்றும் 10 இட ராகு,கேது பெயர்சியால் ஒரு சில மறைமுக பிரச்சினைகளை தவிர்த்து ஆடம்பர மற்றும் சுகபோகத்தில் திளைக்கும் ராசியாக கும்பராசி திகழ்கிறது.வாகனங்களில் பயணிக்கும் சமயத்தில் மிதவேகத்துடனும், கவனத்துடனும் பயணிப்பது ஏற்றது.
மீனம்: 3 மற்றும் 9 இடத்தில் ராகு, கேது பெயர்ச்சி நிகழ்வதால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள், குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்ள ஏற்ற சமயம்.டிசம்பர் மாதத்திற்கு பிறகு நிரந்தர வருமானம், தொழில் வாய்ப்புகள் ஏற்படும். இந்த பெயர்ச்சி தங்களது முழு ஆற்றலையும்,சில இடமாற்றத்தை சந்திக்கும் காலகட்டம்.பெரியோர்கள் மற்றும் குருமார்களின் ஆசியை பெறுவதால் நன்மையை அடையலாம்.


அரசியல் அறிவோம்

‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மீறல்’

கோ.வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

    இந்திய பிரதமர் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் மத ரீதியான ஒரு விழாவிற்குச் சென்று இருந்த போது நாடே அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். அதை ஆதரித்து சிலரும் எதிர்த்து சிலரும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அவற்றில் அதிகம் எழுதப்பட்டது “ PM violates the basic structure of the constitution” என்பதே. அதாவது “பிரதமர் அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறியுள்ளார்” என்பதுதான். இந்த நிகழ்வின் அரசியல் விவாதங்களை ஓரங்கட்டிவிட்டு, இதுபற்றிய அரசியலமைப்புச் சாசனத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். 

இந்தியா கலாச்சாரம் , பொருளாதாரம் , அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவை. இவ்வாறான வேறுபாடுகளை நீக்கி அனைவருக்கும் பொதுவான ஒரே சாசனத்தை இயற்றுவதென்பது எளிதல்ல. அவ்வாறு இயற்றப்பட்டு அத்தனை தடைகளையும் தாண்டி 70 ஆண்டுகளாக நிலைத்து நிற்கச் செய்யுமானால் அவற்றின் அடித்தளம் என்பது மிகவும் உறுதியானது. ஏதேனும் ஒரு கருத்து தன் மைய புள்ளியை விட்டு விலகினால் அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியவை. சரி, அது என்ன “அடிப்படைக் கட்டமைப்பு”? 

    ஓரு கேள்வியிலிருந்து தொடங்குவோம். செங்கல், சிமெண்ட், வண்ணம், நாற்காலி, தொலைகாட்சிப் பெட்டி. இவற்றில் எதை நீங்கள் வீடு கட்ட அடிப்படைப் பொருளாகத் தேர்ந்தெடுப்பீர்கள்? கண்டிப்பாக முதல் இரண்டாகத்தான் இருக்கும். கட்டப்படும் வீட்டிற்கு அவை அனைத்துமே தேவை தான், ஆனால் அடிப்படை என்பது முதல் இரண்டே. அதே போல் அரசியல் சாசனத்தில் மொத்தம் தற்போது 448 சரத்துகள் (articles) இருந்தாலும் அவற்றின் அடித்தள அமைப்பு என்பது சில கருத்துக்கள் மூலமாகவே அமையப் பெற்றுள்ளது . அவையே ‘basic structure of the constitution’ என்று கூறப்படுகிறது. மக்களாட்சி (democracy), சமத்துவம் (equality), சகோதரத்துவம் (fraternity), மதச்சார்பின்மை (secularism), ஒற்றுமை (unity), சுதந்திரம் (liberty), ஆட்சிநெறி (sovereignty-இறையாண்மை), இவையே அடிப்படைக் கருத்தாகக் கருதப்படுகிறது. இக்கருத்துக்களைக் கொண்டே இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. ஒரு தனிப்பட்ட வகுப்பினரை மேம்படுத்தும் வகையிலோ அல்லது உதவும் வகையிலோ தன் நடுநிலையை காக்கும் அரசியல் சாசனத்தில் அதன் மைய புள்ளியை விட்டு விலகி போகும்படி மாற்றங்கள் நிகழ்ந்தால் அதன் விளைவென்பது மக்களின் மன ரீதியான மாற்றங்களோடு இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் சட்ட ஒழுங்கையும் சீர்கெடுக்கும்.

சமத்துவம் என்னும் கருத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவகுப்பினர் , அட்டவணை சமூகம் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அவரவர்க்கான மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறான இட ஒதுக்கீடு சமூக மற்றும் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்படுவதைத் தடுக்க வழங்கப்பட்டு வருகிறது. அதுவே ஒரு சமூகம் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்படுவதைத் தடுக்க இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டே வந்தது. அதற்கான தக்க காரணமும் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருந்தாலும் அவர்கள் சில வருடங்களிலேயே வேறு தொழில் செய்து தன் நிலையை சீர் செய்யும் வாய்ப்பு உள்ளது. அதுவே மூன்றாயிரம் வருடங்களாக சமூக மற்றும் அரசியல் ரீதியாகப் பிற்படுத்தப்படுபவர்கள் தன் பொருளாதார நிலையில் இருந்து மீண்டாலும் சமூக பின்னடைவு என்பதைக் கருதியே அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இவை ஒருபுறமிருக்க 2018 ஆம் ஆண்டு மேலே கூறிய கருத்தை மீறும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த வகுப்பினருக்கு (economically weaker sections) பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அரசியல் சாசனத்தில் அரசு மாற்றம் கொண்டு வந்தது. அப்போது எழுந்த முதல் குற்றச்சாட்டு ‘அரசு, சமத்துவம் என்னும் அடிப்படைக் கட்டமைப்பை மீறியுள்ளது’ என்பதே.

பிளவுப்பட்ட இந்தியாவை ஒன்று சேர்க்க சுதந்திரம் பெரும் வாய்ப்பாக அமைந்ததைப் பயன்படுத்தி அடிப்படை கருத்துக்களைச் சேர்த்து வளமான, சமமான, உறுதியான இந்தியாவை உருவாக்கியுள்ளார்கள். இந்தியாவின் அரசியல் சாசனமென்பது மாற்றங்களைக் காலத்திற்கேற்ப ஏற்றுக்கொள்ளக் கூடியவை. அவ்வாறான மாற்றங்கள் ஒருபோதும் பிளவை ஏற்படுத்தி விடக்கூடாது. அவ்வாறான பிளவு அதன் அடித்தளத்தையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை.

நிகழ்வுக்கு வருவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற பிரதமர் என்பவர் தன் சுய காரணங்களுக்கு அல்லாமல் மக்களின் தலைவராக மதம் சார்ந்த சடங்கிற்குச் சென்றது ஒரு மதம் சார்ந்த வகுப்பினரை ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இங்கு மதச்சார்பின்மை என்னும் நடுநிலை கோட்பாடு மீறப்பட்டுள்ளது. இவை மற்ற மதத்தினரை மன ரீதியாக மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் மேலேகூறிய எதிர்ப்புகள் எழுந்தன.

***

திருமுருகன் அருள்க!

பட்டுக்கோட்டை கவிப்பிரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு)

ஞாலம் காக்கும் வேலவனே - திரு
நாவெலாம் பாடும் சண்முகனே!
கோல மயில் கொண்ட கந்தனே!
குன்றத்தில் அமர்ந்த குமரனே!
வெண்குடை தரித்த வேதநாயகியின்!
தண்மடி தவழ்ந்த தவபுதல்வா!
நன்று நன்றென்றுன் நாமம் துதிப்போர்க்கு!
நலம் பல புரியும் பரமகுரு!
தவத்தொழில் பெரிதா தவமுனி பெரிதா!
தனியே நிற்கும் சண்முகன் பெரிதா!
ஈடில்லா ஈசன் இளம் மகனை
எங்கும் வீடுகள் உள்ள வாசனை!
தேடி லாபமிலை எனார்க்கும்!
தித்திக்கும் அருள் கொடுப்பனை !
போற்றி புகழுவோமே!
பல கவியும் புனையுவோமே!

உரிமை

வே. அருள்செல்வன், மன்னங்காடு

அதிகாரத்தை எட்ட முடியாதவர்களை அதிகாரம் நோக்கி நகர்த்துவதற்கான கருவி இட ஒதுக்கீடு.ஏன் அவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும்?அனைவரும் சமம் எனும் சட்டத்தினை கடந்து மானுட அடிப்படையில் அவர்கள் சற்று மேல் எழ அதிகாரம் வேண்டும்.
    தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சித் தலைவர் ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்தவர் தன் இளம் வயதில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்கிறார் "என் பள்ளி நாட்களில் பள்ளியில் மதிய உணவு உண்பதுதான் வழக்கம் அன்று மதிய உணவு எனக்குப் பிடிக்க வில்லை. என் அப்பா வேலை செய்யும் வீட்டில் அவருக்குத் தரும் உணவு சுவையாக இருக்கும் உண்ணலாம் என, என் அப்பா வேலை செய்த வீட்டிற்குச் சென்றேன். அங்கு என் தந்தைக்குத் தந்த சோற்றை எனக்குக் கொடுத்தார். அந்த பாத்திரத்தில் இருந்த உணவு உண்ணுவதற்கு ஏற்றது அல்ல. இருப்பினும் உண்டேன். உண்ட உடன் சோறு புளித்து விட்டது எனத் தெரிந்து கொண்டேன். அது தான் என் அப்பாவிற்குத் தினசரி உணவு. நான் மீண்டும் பள்ளி திரும்பி விட்டேன்.
    அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியில் குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் முழங்காலுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது கூடுதலாகப் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது இந்த துயரம் ஜாதியின் பெயரால் நிகழ்ந்தது இரு நிகழ்வுகளுக்கும் அடிப்படைக் கூறு ஜாதி. 

மேலாடை அணிய முயன்றாலோ புளித்த உணவை உண்ணமாட்டேன் என மறுத்தாலோ மேல் ஜாதி ஆதிக்கவாதிகளால் அவர்கள் வேலை இழப்பார்கள் அவர்களுக்கு வேறு யாரும் வேலை தர மறுப்பார்கள் அவர்களின் குடும்பம் உணவின்றி தவிக்கும் கூடுதலாக உரிமையைக் கேட்டதற்காகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் அதன் சாட்சி கீழ் வெண்மணி. 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒன்று கூடி வாழ்ந்த தமிழ்ச் சமூகம் பின்னாளில் சனாதன கடவுள்களுக்கு அருகில் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்குக் கீழ் பல படிநிலைகள் உருவாகி அதன் அடிப்படையிலே மக்களின் உரிமைகளும் பொருளாதார வளர்ச்சியும் இருந்தது. இவை இரண்டுமே ஜாதிக் கட்டமைப்பு வலுப்பெறக் காரணமாக இருந்தது. அதன் நீட்சி பின்னாளில் பள்ளிகள் திறக்கப்படும். ஒடுக்கப்பட்டவர்கள் நுழையமுடியாமல் தடுக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்க முற்படும் போது பொருளாதாரம் பெரும் தடையாக இருந்தது. 

இந்த தடைகளைத் தகர்க்க, உரிமைகள் மறுக்கப்படாமல் கிடைக்க,குறிப்பாக ஆதிகக்கவாதிகளால் இவை இரண்டையும் மீற முடியாமல் செய்ய, சட்டத்தின் ஊடாக செய்த ஏற்பாடே இட ஒதுக்கீடு. ஏற்ற தாழ்வுகளைச் சரிசெய்யும் அதிகாரத்தினால் விளையும் நன்மைகள் அனைவருக்குமானதாக இருக்க, அனைத்து சமூகத்தினரும் அதிகாரத்தில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்கே இட ஒதுக்கீடு.   


அரசுப் பணி

மனோகரன் கந்தசாமி, ரெகுநாதபுரம், காசாங்காடு

• சில மாதங்களுக்கு முன் ISROவில் பணி புரியும் நண்பரை சந்திக்க திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தொடர்வண்டியில் பயணம் செய்தேன். எதிரே அமர்ந்திருந்த கேரள மாநில இளம் தம்பதியினருடன் உரையாடும் போது, அவர் திருச்சியில் விமானநிலைய மேலாளர் பணியில் இருப்பதாகச் சொன்னார். நம்மவர்கள் எத்தனை பேருக்கு இந்தப் பதவி இருப்பது தெரியும்?

• சென்னை விமானநிலையத்தில் வான்வழி கட்டுப்பாடு நிலையத்தில் இயக்குனராக அண்மையில் பணிநிறைவு பெற்ற நண்பர், தமக்குப் பிறகு இப்பதவிக்கு வருவதற்கு தமிழ் மக்கள் யாரும் வரிசையில் இல்லை என்று வேதனையுடன் பகிர்ந்தார்.

• நாட்டுச்சாலை திரு.ஜெயபால், மாவட்டக் கல்வி அதிகாரி அவர்கள் இணையவழிச் சந்திப்பில், ‘எங்கள் கிராமத்தில் 40 வருடங்களுக்கு முன் 34 பேர் அரசுப்பணியில் சேர்ந்து இருந்தோம், இன்றோ வெறும் நான்கு பேர் மட்டுமே இருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டுப் பேசினார்.

இவையெல்லாம் நடுவனரசுப் பணிகளில் தமிழர்களின் குறைந்து வரும் பங்களிப்பு, குறிப்பாக அரசுத்துறைகளில் நம் பகுதி மக்களின் ஈடுபாடற்ற இன்றைய நிலைமை. பல நேரங்களில் நான் மாநில, நடுவன் அரசுத் துறை சம்பந்தமான காரியங்களில் அலையும் போது யாராவது நம் (தமிழ்) மக்கள் இருக்கிறார்களா என்று தேடித் தோல்வி அடைந்திருக்கிறேன்.
    பொதுவாகக் கல்லூரிப் படிப்பு முடித்த நமது இளைஞர்களிடையே, ஒரு பணியில் சேர்ந்து, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படை முனைப்பு இல்லாமல் இருக்கிறது. சிலரோ முகவர்கள் மூலம் அயல்நாடு செல்ல பணத்தைக் கட்டி (பெரும்பாலும் பொருத்தமில்லா) பணிகளுக்குச் செல்ல அலைகிறார்கள், ஏமாறுகிறார்கள். இப்போக்கிற்கான காரணிகள்: சிலருக்கு இன்னமும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற நெருக்கடி உருவாகவில்லை; அதாவது மற்றவர்கள் உழைப்பில் காலத்தை ஓட்டி விடலாம் என்கின்ற சொகுசான சோம்பேரித் தனம். இதன் காரணமாக குறிக்கோளும், ஆர்வமும் இல்லாமலும் படிப்பது தான், முடித்த பிறகு மற்றவர்களைச் சார்ந்த நிலைப்பாடு எடுப்பது.
    அரசு பணியில் ஆர்வமுள்ள சொற்பமான இளைஞர்களோ, தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளை (TNSPC) மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். நடுவனரசில் ஆயிரக்கணக்கான துறைகளில் கொட்டிக் கிடக்கும் பணியிடங்களுக்குப் போட்டி போடுவதற்கு யாருமே முன் வருவதில்லை; மேலும் மனதளவில் இந்த ஆங்கில வழி தேர்வுகளுக்கு ஆயத்தம் செய்து கொள்ளும் உந்துதல் இல்லை என்பது தான் வேதனை. இந்த பதவிகளில் எளிதாக பிற மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
    வெற்றி பெற எளிதான வழி: போட்டிகளில் பங்கேற்பது மட்டுமே! பல தேர்வுகளில் மிகவும் சாதாரணமாக, இயல்பாக பங்கேற்றாலே வெற்றி பெற முடியும். நான் அடிக்கடி சொல்லுவேன்: நான் படிப்பில் முதல் மாணவன் ஆனது எப்படி என்றால், என்னோடு படித்தவர்கள் என்னை விட படிப்பறிவில் மட்டமாக (முட்டாள்களாக) இருந்தது தான் என்று!
    நடுவனரசின் சில பதவிகள்: வருமான வரி ஆய்வாளர், சுங்க அதிகாரி, அமலாக்க துறை அதிகாரி, வங்கி அதிகாரி, புலனாய்வு துறையில் ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைப் பொறியாளர், தகவல் தொடர்பு துறைகளில் பொறியாளர், கனிம வள அதிகாரி, நீர் மேலாண்மை அதிகாரி, மற்றும் இன்னும் பல
    விவசாயக் குடும்ப பெற்றோர்கள், தம் பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்கான நிதியைத் தரமுடியுமே தவிர தொழிலை/வாழ்வை அமைத்துத் தரக் கூடிய பின்னணி அவர்களிடத்தே இல்லை. இதை மாணவர்கள் உணர்ந்து, படித்துக் கொண்டிருக்கும் சூழலில் இருக்கும் வாய்ப்புகளை, தொடர்புகளைப் பயன்படுத்தி ஆராய்ந்து, எதிர்காலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.


வாழ்வு நிலைப்பதில்லை

க. கென்னடி, மட்டங்கால்

கற்பக் கோடிக் காலம்
வாழப்போவதாக கற்பனையில்
மூழ்கிடும் மனிதா!
ஏழேழு பிறவிக்கும்
வாழப் பொருளிருந்தும் எதுவும்
உன் கூட வருதா!
ஓடியாடி ஓய்ந்து
உடம்பு மண்ணில் வீழ்ந்தால்
ஒன்றுக்கும் பயனில்லையே!
இதில் மண்ணென்ன
பொன்னென்ன பொருளென்ன ஒன்றும்
உனக்கில்லையே!
தானென்ற அகம்பாவம்
தன்னையே அழிக்கும்
தலை மீது அடி வீழ்ந்தால்
தடுமாறி முழிக்கும்
வீணான ஆசைகளும்
வேண்டாமே உனக்கும்
வெற்றியோ தோல்வியோ – அது
நடப்பதுதான் நடக்கும்
நேற்றுவரை இருந்ததெல்லாம் இன்றுவரை இருக்கவில்லை
இன்றுவரை இருப்பதெல்லாம் நாளைவரை இருப்பதில்லை
காலம் நிலைப்பதில்லை கனவும் பலிப்பதில்லை
வசதிகள் பல இருந்தும் வாழ்வு நிலைப்பதில்லை
மனித வாழ்வு நிலைப்பதில்லை

புது மருந்துச் சோதனை வெள்ளோட்டம் (Clinical Trial)

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

வெள்ளோட்டம் என்பது என்ன?

ஒரு நோய்க்காக புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தையோ, புதிய மருத்துவக் கருவியையோ அல்லது முன்பே பயன்பாட்டில் உள்ள மருந்தை புதிய நோய் ஒன்றுக்கோ, தகுதியுள்ள ஆய்வாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர் (volunteers) மீது கட்டுப்பாடான சூழலில் பயன்படுத்தி, புதிய மருந்தின் செயல்பாடு, வீரியம், பக்கவிளைவு (அதுபோல் கருவியின் பாதுகாப்புத் தன்மை) ஆகியவற்றை கண்டறிவதே 'கிளினிகல் டிரையல்' எனப்படும் புதிய மருந்துச் சோதனை வெள்ளோட்டமாகும்.
    புதிய மருந்துகள் பொதுவாக ஆய்வகங்களில் அறிவியல் அறிஞர்களால் விரிவாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் பயன்பாடு சிறு ஆய்வக விலங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட பின்னரே, மனிதரில் 'வெள்ளோட்ட முறையில்' சோதிக்க பரிந்துரை செய்யப்படுகின்றன. அதாவது, புதிய மருந்து ஆய்வகச் சோதனையில் நிச்சயமான பலனைத் தராவிடில் அம்மருந்து மனிதரில் சோதனைக்கு அனுமதி பெறாது.

வெள்ளோட்டப் படிநிலைகள்
    வெள்ளோட் டம் பொதுவாக நான்கு கட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. அவை முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட சோதனை (Phase I, II, III and IV) எனப்படும். முதல் கட்ட சோதனையில் 20லிருந்து 100 வரையான சோதனை ஆர்வலர்கள் மீதும், இரண்டாம் கட்டத்தில் 100-300, மூன்றாம் கட்டத்தில் 300-3000 ஆர்வலர்களின் மீதும் மருந்தைச் செலுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்படும் (படம் 1). ஒவ்வொரு கட்டத்திலும் மருந்து செலுத்தப்பெற்ற ஆர்வலர்கள் தீவிரமாகக் கண்கானிக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு கட்ட இறுதியிலும் சோதனையில் பெறப்பட்ட முடிவுகள் ஆராயப்பட்டும். தீவிர பக்கவிளைவுகள் இருப்பின் அக்கட்டத்திலேயே சோதனை மருந்து ஆய்வு நிறுத்தப்பட்டு விடும். எதிர்பார்த்த அளவு பலன் இருக்குமாயின் அதே மருந்து அடுத்த கட்ட பெரிய ஆய்விற்கு அனுமதிக்கப்படும்.
    மூன்றாம் கட்ட சோதனையை வெற்றிகரமாகக் கடக்கும் மருந்துகளே (கருவிகளே) நோயாளிகள் பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டு மருந்துக் கடைகளிலும் மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன. எனினும் இந்த நான்காவது கட்ட நிலையை எட்டும் மருந்துகளும் அதுவரை காணப்படாத புதிய பக்க விளைவுகளை ஏதேனும் ஏற்படுத்துகிறதா, கொடுக்கப்பட்ட நோய்க்கு முறையான பாதுகாப்பு அளிக்கிறதா என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
    மாத்திரை மருந்துகளோ (Symptomatic medicines), தடுப்பு ஊசி மருந்துகளோ (Vaccines), மருத்துவக் கருவிகளோ (Medical devices), எதுவாயினும் இவ்விதமான பல கட்ட சோதனைகளுக்குப் பின்பே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளை எட்டுகின்றன. மேலே கூறப்பட்ட பலகட்ட வெள்ளோட்ட படிநிலைகளை மருந்துகள் தாண்டி வர பல ஆண்டுகள் ஆகலாம். பொண்ணுக்கு வீங்கி (Mumps) நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நான்கு ஆண்டுகளும், தட்டம்மைக்கு 9 ஆண்டுகளும் தேவைப்பட்டன. இவை குறைவான கால ஆய்விலேயே பயனாளிகளை எட்டியவை என்ற சிறப்பினைப் பெறுகின்றன. ஆயினும், மற்ற தடுப்பூசி மருந்துகள் பயனுக்குக் கொண்டுவர இதைவிடவும் நீண்டகாலம் தேவைப்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, முறையாக ஆய்வு செய்யப்பட்ட, தரமான, பாதுகாப்பான தடுப்பு ஊசி பயனுக்குவர ஒருசில ஆண்டுகளேனும் தேவைப்படும் என்பதை மனத்தில் கொள்வது நலம்.
    சில அரசுகள், கோவிட் -19 தடுப்பு மருந்துகள், முதல் அல்லது இரண்டாம் கட்ட வெள்ளோட்ட நிலையில் இருக்கும்போதே, கரோனா நுண்மிக்கான மருந்துகள் தயாராகிவிட்டன, விரைவில் கிடைக்கும் என அறிவிப்பது, பொதுமக்களுக்குத் தவறான நம்பிக்கையை ஊட்டுவதுடன், மருத்துவ மற்றும் நோயாளி பாதுகாப்பு விதிகளை மீறுவதுமாகும்.

வெள்ளோட்டத்தின் பயன்
இந்தியாவின் புனே சீரம் மருந்தாராய்ச்சி நிறுவனத்துடன் (Serum Institute), ஆஸ்ட்ரா-செனகா/ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை இணைந்து உருவாக்கிய 'கோவிஷீல்டு' (Covishield) தடுப்பு மருந்து, மூன்றாம் கட்ட சோதனையில் சிலருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், பல நாடுகளில் கோவிஷீல்டு சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சீராய்வுக்குபின் மீண்டும் தொடர்கிறது. இதுவே சோதனை வெள்ளோட்டத்தின் பயன் எனவும் கொள்ளலாம். சோதனை வெள்ளோட்டம் இல்லாமல் நேரடியாக இலட்சக் கணக்கானோருக்கு தடுப்பு மருந்து அளிக்கப்படுமாயின், நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடக்கூடும்.
    கோவிட்-19 தடுப்பூசி ஒருமுறை போட்டுக்கொண்டால் போதுமா?
    தடுப்பு ஊசி மருந்தின் தன்மைக்கு ஏற்றவாறும், நோய்க் கிருமியின் தன்மைக்கு ஏற்றவாறும் தடுப்பு மருந்துகள் பொதுவாக ஒருவருக்கு ஒருமுறையோ, அடுத்தடுத்து சிலமுறையோ போடப்படுகின்றன. ஃப்ளு சுரத்திற்கான தடுப்பூசி ஒருவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் போடப்படுவதைக் கருத்தில் கொள்ளவும்.
    உலகில் முழுதும் கோவிட்-19 நோய்க்கு 170க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் சோதனையில் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் 'Covaxin' எனும் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமும், ‘ZyCoV D’ எனும் தடுப்பு மருந்தை சைடஸ்-கேடிலா நிறுவனமும் இரண்டாம் கட்ட வெள்ளோட்டத்தில் சோதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்தவரை நான்காம் கட்ட வெள்ளோட்டச் சோதனை (Phase IV)க்குப் பிறகே , நீண்டகால கண்காணிப்புக்குப் பின்னரே, ஒரேமுறை தடுப்பூசி செலுத்தினால் போதுமா என்பது தெளிவாகும். பயனுள்ள மருந்து வரும்வரை பொறுப்புடன் நோயைக் கையாண்டு நம்பிக்கையுடன் பொறுமை காப்போம்.

(படம் 1)


வாசகர் வார்த்தை

திருமதி சித்திரா கிருஸ்ணா இலண்டன் நகரிலிருந்து எழுதுகிறார்.

ஏப்ரல் காட்டுமஞ்சரியில் வெளியான ‘உயிரின் உயிரியே’. எஸ். முத்துக்கண்ணுவின் வரிகள் அருமையான, அற்புதமான உலகையே ஆட்டிப்படைக்கும் Corona வைப் பற்றிய ஓர் உண்ணையான உணர்வுபூர்வமான கவிதை. ‘வாழ்க நிலமுடன்’ படைப்பும் அருமையோ அருமை. இதற்கு முன்னரும் முத்துக்கண்ணுவின் ஆக்கங்களை படித்துள்ளேன். வாழ்க வளமுடன். கல்லுக்குள் ஈரம். அகிலா மகேந்திரன் மனிதனின் அருமையான தேடல். மகிழ்ச்சி. வாழ்க தமிழ் வளர்க கவித்துவம். நன்றி


கேசவநந்த பாரதி வழக்கு

கோ. வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இந்த வழக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வழக்கை அதுவரை இல்லாத அளவுக்கு பதிமூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதுவே இன்றுவரை அதிக நீதிபதிகள் கொண்டு விசாரித்த வழக்காகும்.
    அரசு நெறிமுறைக் கொள்கைகள் (Directive principles of state policy [DPSP]) என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மக்களை மேம்படுத்த அரசியல் சாசனத்தில் இருக்கும் கொள்கைகள். இவற்றை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. இவற்றை செயல்படுத்த அரசு எடுக்கும் வழிகள் அடிப்படை உரிமைக்கு (fundamental rights [FR]) முரணாக அமைந்தால், இவ்விரண்டில் (FR & DPSP) எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியதே இந்த வழக்கு.

இதற்கு முன்னர் நடந்த கோலக்நாத் வழக்கில் (Golaknath Case) அரசு நெறிமுறைக் கொள்கைகளுக்காக அடிப்படை உரிமையை மாற்றக்கூடாது, அவை புனிதமானது என்று தீர்ப்பானது. அதை எதிர்த்து இந்திரா காந்தி அரசு அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு அரசு கொள்கைகளுக்காக அடிப்படை உரிமையை மாற்றும் அதிகாரம் உள்ளது என்று மாற்றங்களையும் கொண்டு வந்தது. அவ்வாறான கொள்கைகளையும் நீதித்துறை ஆய்வுக்கு (Judicial Review) உட்படுத்தப்படாது என்றும் மாற்றம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து நடந்த கேசவநந்த பாரதி வழக்கில் அடிப்படை உரிமையில் மாற்றங்களை எதிர்த்து ஆறு நீதிபதிகளும் ஆதரித்து ஆறு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்க, மீதமிருந்த ஒரு நீதிபதியான ஹச்.ஆர். கண்ணா கூறியதாவது ‘அரசியல் சாசனத் திருத்தங்கள் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்’ என்றும் அரசின் கொள்கைகள் ‘அடிப்படை கட்டமைப்பை’ (Basic structure) மீறக்கூடாது என்றும் தீர்ப்பளித்தார். எனவே 7:6 என்ற பெரும்பான்மையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்துதான் ‘அடிப்படைக் கட்டமைப்பு’ என்ற கோட்பாடு பிறந்தது. இந்த வழக்கு நீதிதுறையை மேலும் உறுதியாக்கியது. இந்த வழக்கால் கேசவநந்த பாரதி என்ற பெயர் நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி இவர் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை, முன்புள்ள ‘அரசியல் அறிவோம்’ -
‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மீறல்’ எனும் கட்டுரையுடன் தொடர்புபடுத்துக.


இவ்விதழின் படைப்பாளர்கள் பற்றி...  

இரா. குணசீலன், கோயம்புத்தூர்
தமிழ் மொழியில் இரட்டை எம்ஏ பட்டங்கள். காரைக்குடி அழகப்பா பல்கலையில் பிஎச்டி பட்டம். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர் பணி. தமிழக ஆளுநரிடம் சொல்லேருழவர் விருது பெற்ற இவர்
தமிழ் எழுத்துரு டிஜிட்டல் (இலக்க) உள்ளடக்கதில் ஆய்வு செய்து வருகிறார்.

ஆ. இரா. பாரதராஜா, மன்னங்காடு மேற்கு
சமுதாயப் பணியில் மிகுந்த ஈடுபாடுள்ள இவர் நாவன்மையும், கவித்திறனும் உள்ளவர். பள்ளியில் ஆசிரியராகப் திறம்படப் பணியாற்றி, அச்சேவையில் இருக்கும்போதே முனைவர்ப் பட்டத்தையும் பெற்று, தற்போது சென்னை SRM Institute of Science and Technology தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

கோ.வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு
பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுக்காகப் படித்துக்கொண்டு பொழுது போக்கிற்காகப் புத்தகமும், நிகழ்வையும் பழமையையும் பதிவு செய்யும் நோக்கத்தில் முயற்சித்து வருகிறேன்.

ஆலத்தூர் சி. அ. சாமி, ஆலத்தூர்
கல்வி, கெமிக்கல் டெக்னாலஜி. முன்பு சென்னையில், இப்பொழுது கத்தார் நாட்டில் கேஸ் கம்பேனியில் பயிற்சியாளராகப் பணி. நிறுவனர் மற்றும் தலைவர் சின்னையன் தனபாக்கியம் அம்மாள் அறக்கட்டளை, வடக்குத் தெரு, ஆலத்தூர். இதன் நேக்கம்: ஆதரவு இல்லாத குழந்தைகள், பெரியவர்களுக்கு முறையாக கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வது.

இரா. வேலு, மன்னங்காடு மேற்கு
கல்வி: DME, B.Lit, MA, தமிழ் இலக்கியம் தொழில்: முதுநிலைப் பொறியாளர், பாரத மின்னணு நிறுவனம், சென்னை. பொழுது போக்கு:நூல்கள் வாசித்தல், கவிதை, கதை எழுதுதல். புனைப் பெயர்: பட்டுக்கோட்டை கவிப்பிரியன்

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்குத் தெருவில் விவசாயக் குடும்பம். படிப்பு பத்தாம் வகுப்பு. பொழுது போக்கு.. கவிதை, சிறுகதை எழுதுதல், இலக்கியப் புத்தகங்கள் வாசிப்பது.

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்குத் தெருவில் விவசாயக் குடும்பம். M.Sc, M.Phil, M.Ed., படித்தவர். விக்ரமம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை. கவிதை எழுதுதல் பொழுது போக்கு.

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்குத் தெருவில் விவசாயக் குடும்பம். தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரியில் BSc இரசாயனம், முதலாமாண்டு மாணவி. புத்தகங்கள் வாசிப்பது, கவிதை எழுதுதல் பொழுது போக்கு.

மானுடம் சுரேஷ், செங்கப்படுத்தான்காடு.
எனது பெயர் சுரேஷ். நான் செங்கப்படுத்தான்காடு கிராமத்தை சேர்ந்தவன்.மின்னணு தொலைதொடர்பு துறையில் பட்டைய படிப்பை முடித்து தற்போது யூடியூப் மற்றும் பார்ட்காஸ்ட் துறையில் பேச்சாளர் மற்றும் எழுத்தாளராக உள்ளேன். 

வே. அருள்செல்வன், மன்னங்காடு
இளநிலைப் பொறியியல் பட்டத்துடன் தற்போது வளைகுடா அமீரகத்தில் பணியாற்றி வருகின்றார். மன்னக்காடு கலைஞர் வாசகர் வட்டத்தில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.

க. கென்னடி, மட்டங்கால்
மத்திய அரசின் பாதுகாப்புப் படை அமைப்பான ‘சிஆர்பிஎப்’ல் பாதுகாப்பு வீரராகப் பணியாற்றியவர். வேளாண்மையிலும் தமிழ்க் கவிதை புனைவதிலும் ஆர்வமுள்ளவர். தற்போது கந்தர்வகோட்டையில் தமக்குச் சொந்தமான மருத்துவ ஆய்வகத்தை நிர்வகித்து வருகிறார்.

மனோகரன் கந்தசாமி, ரெகுநாதபுரம், காசாங்காடு
கல்வி: B.E., M.B.A. திருச்சி BHEL, பாரத கனமின் தொழிலகத்தில் இணைந்து, பின் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணி (DRDO, Hyderabad). வட அமெரிக்காவில் கணினித் துறையில் பணியாற்றியபின் தற்போது ரெகுநாதபுரத்தில் ஒருங்கிணைந்த செயல்முறைப் பண்ணைய விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

துரைசாமி நவநீதம், மன்னங்காடு
இயற்கை மற்றும் தமிழில் ஆர்வம். புது தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவ அறிவியல் கழகத்தில் பிஎச்டி, பின் ஆராய்ச்சியில் துணைப்பேராசிரியர் பணி. தற்போது சென்னையில் அரிய நோய்களில் ஆய்வு, மற்றும் எழுத்துத் திறனுள்ளோரைக் ‘காட்டுமஞ்சரி’யால் இணைக்க முயல்வது.

***

To Federalist Mahatma, From Publius Jivatma

பெடரலிஸ்ட் மகாத்மாவுக்குக் கடிதம் 4

ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்கு,
மகாத்மா, நீ தென்னாப்பிரிக்காவில் ஓரளவு தமிழைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டாய். தமிழில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றம் பற்றி நான் சொல்லப் போவதைக் கேள். கரோனா கொள்ளைநோய் வந்ததிலிருந்து தமிழ் மொழி வளர்ந்திருப்பது போன்று தெரிகிறது மகாத்மா. கரோனா வருவதற்கு முன்பு 'தனித்திரு, வீட்டிலிரு, விலகியிரு' என்றால், கூட்டத்தில் சேராமல் தனித்தே இருக்கவேண்டும், தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கவேண்டும், மற்றவர்களிடம் ஒட்டிக்கொண்டு நிற்காமல் விலகியே இருக்கவேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் நோய் உட்பட எந்த சூழலையும் கட்டுக்குள் வைக்க அரசுக்கு உதவ முடியும் என்றுதான் பொருள். ஆனால் கரோனாவுக்குப்பின் வளர்தமிழில் இவற்றின் பொருள் என்னவென்றால், 'கூட்டத்திலேயே இரு, சாலையிலேயே இரு, மற்றவருடன் நேரிசலிலேயே இரு' என்பதுதான்.
    வளர் தமிழின் பொருள் மாறினால் போதுமா? பரவலாகச் செயல்படுத்துவது எங்ஙனம்? ஊரடங்கு என்றும், ஊரடங்கிற்குள் இரண்டாவது ஊரடங்கு என்றும், முதல் ஊரடங்கும் இரண்டாவது ஊரடங்கும் ஒரே நேரத்தில் காலாவதியானதும் மூன்றாவது ஊரடங்கு ஆரம்பிக்கும் போதே அதனுடன் சேர்த்து ஞாயிறு ஊரடங்கு என்று தெரியாமல் நினைத்த நேரத்தில் சுற்றித் திரிந்து அலுத்துக் கிடந்த நண்பரொருவர், தன் மகனுக்குத் திருமணம் என ஆரம்பித்தார், மகாத்மா. கரோனா பாதிப்பால் நாற்பது பேருக்குமேல் கூட்டம் சேர்க்க வேண்டாம் என்று அரசு கூறியதல்லவா? வளர் தமிழில் நாற்பது என்றால் நானூறோ, எண்ணூறோ அதற்கு மேலோ என்று பொருள். நிச்சயஓலை எழுது விழாவன்று நானூறும், திருமணத்தன்று எண்ணூறுக்கும் மேல் ஊரைக் கூட்ட வேண்டும் என நண்பர் மொழிபெயர்த்து, ஒரு மாதத்தில் மகனின் விழாவை முடித்துவிட சுறுசுறுப்பானார், மகாத்மா.
    வீட்டுவாசலில் நடைபெற்ற திருமண விழாக்கள் காலத்தால் வழக்கொழிந்துபோய், சமீப இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளாக மண்டபம், பிளெக்ஸ் போர்டு, ஐஸ்கிரீம் என்று ஏகக் கலாட்டாவாய் இருந்துவிட்டு, இப்போது கரோனாவால் திருமண அரங்குகளை அரசு மூடி வைத்திருக்கும் நிலையில், பாதுகாப்பான விழாவாக மகனுக்குத் திருமணத்தை வீட்டிலேயே முடித்துவிடப் போகிறேன் என்றார் நண்பர்.
    நான் நண்பரிடம், கரோனா சூழலில் வளர்தமிழ்க் கணக்கைக் கொள்ளாமல், பழந்தமிழ்க் கணக்கின்படி 'நாற்பது' பேரை வைத்து விழாவை முடித்து விடுங்களேன் என்றேன், மகாத்மா. அவ்வளவுதான், நண்பர் குதித்தார் பாருங்கள். அது எப்படி? ஊர் முழுதும் இருபது வருசமாய் எவ்வளவு மொய் செய்திருக்கிறேன். நாற்பது என்றால் எண்ணூறுக்கு மேல் என்றுதான் பொருள். எல்லோரும் இதைத்தானே செய்கிறார்கள் என்றார். சரி, வேலைக்கு ஆகாது என மனத்தில் கொண்டு, நண்பர் மகனின் நிச்சயவோலை எழுதும் விழாவன்று முதல் ஆளாக முகமூடியுடன் சென்று, அவர்கள் கொடுத்த 'ரெடிமேட்' இனிப்புப் பெட்டியை ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக் கொண்டு கூட்டம் கூடுவதற்குள் தனித்திருக்க வீட்டிற்கு ஓடிவந்து விட்டேன் மகாத்மா!
    திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்க, நண்பரை வழியில் பார்த்தேன். விழா அழைப்பிதழ் அச்சடிப்பது பற்றி மகிழ்ச்சியாகக் கூறினார். அவரிடம் முன்பு உடைந்த என் மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே, நிச்சயதார்த்த நிகழ்ச்சிதான் நல்லபடியாக முடிந்து விட்டதே, திருமணத்தை கரோனா முடிந்ததும் வைத்துக் கொள்ளலாமே என்றேன். இம்முறை குதிக்கவில்லை, அதற்குப் பதிலாக Sergey Bubka போன்று ‘போல் வால்ட்’ தாண்டினார், மகாத்மா!
    அப்புறம் என்ன, திருமணத்திற்குச் சென்றேன். கூட்ட நெரிசலில் கரோனா நுண்மியே நசுங்கிக் காணமல் போய்விடும்போல் இருந்தது. பார்வையாளர்களைவிட மண மேடையில் தான் அதிகக் கூட்டமாகக் தெரிந்தது. மணமக்களுக்குப் பின்னால் நெருங்கிய உறவினர் கும்பல் எப்போதும்போல் நெருக்கமாக நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. மேள மங்கல ஒலி, தாலியின் முதல் முடிச்சு, ஆண்கள் அனைவரும் 100 மீட்டர் ஓட்டம் முடித்து விருந்துப் பந்தியில், இவை மூன்றும் ஒரே சமயத்தில் நடந்தால் அது எந்த ஊரென்று உனக்குத் தெரியுமே மகாத்மா. ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தேன், பின்னால் உசைன் போல்ட் நெரிசலில் திணறி ஓடிவந்து கொண்டிருந்தார்.
சாப்பாடு முடிந்து, மொய் நெரிசலுக்குள் நுழைந்து பணத்தைச் செலுத்திவிட்டுப் பார்த்தால், சில இளசுகள் ‘QR code’ வழியாக ‘RuPay’யில் மொய் ‘transfer’ செய்துவிட்டு ‘transaction ID’ஐ திருமண வீட்டாருக்கு ‘WhatsApp’ செய்து கொண்டிருந்தார்கள்! வீடு திரும்பி, அப்பாடா என்று தனித்திருக்க ஆரம்பித்தேன். அடுத்த திருமணப் பெருவிழா பக்கத்து ஊரில் இன்னும் நான்கு நாட்களில்! தயாராகிக் கொண்டிருக்கிறேன், மகாத்மா.

என்றென்றும் உன்போல் நம்பிக்கையுடன்
பப்ளியஸ் ஜீவாத்மா
செப்டம்பர் 13, 2020