காட்டுஞ்ரி June 2020 | 2020 : 3 KaattuManjari

காட்டுஞ்ரி June 2020 | 2020 : 3 KaattuManjari


நீருயர்ந்ததால் மலர் நீண்டதா? மலர் நீண்டதால் நீருயர்ந்ததா?
சேர நன்நாட்டு மக்கள் மட்டுமே அறிவரோ?

சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்ற கேரள முதல்வரான மாண்புமிகு விஜயன், பினராயி எனும் ஊரில் 1945ல் பிறந்தவர். பிஏ வரை படித்துள்ள விஜயன், பொதுவுடைமைக் கட்சியில் (சிபிஎம்) பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து, பலமுறை கேரள சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள மின்துறை அமைச்சராயிருந்து, பின் முதல்வராகி செவ்வனே ஆட்சிப் பணியாற்றி வருகிறார்.

ஷைலஜா டீச்சர் என்று பரிவுடன் அழைக்கப்படும் மாண்புமிகு கே.கே. ஷைலஜா, கேரளாவின் நலத்துறை அமைச்சர். பிஎஸ்சி, பிஎட்., பட்டங்களுடன் ஆசிரியர் பணியாற்றிய ஷைலஜா, பொதுவுடைமை சிந்தனையால் ஈர்க்கப்பட்டு சட்டசபைக்குள் நுழைந்தவர். தற்போதைய கோவிட்-19 நோய் நிர்வாகத்தை கேரளாவில் முன்னின்று நடத்தி இன்று உலகளவில் பாராட்டப்படும் மனிதக் ‘கொரோனா தேவி’யாவார். கேரளாவில் 2018ல் ஏற்பட்ட ‘நீபா’ எனும் வேறொரு வைரஸ் தாக்கத்தை இவர் திறம்பட செயலாற்றிக் கட்டுப்படுத்தியதை மையமாகக் கொண்டு, ‘வைரஸ்’ எனும் பெயரில் மலையாளத்தில் இவரை நாயகியாக்கி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சாபம்

மானுடம் சுரேஷ், செங்கப்படுத்தான்காடு

மனித சமுதாயம் பல்வேறு சூழ்நிலையில் தனது தணியாத கோபத்தைப் பிறருக்குச் சாபம் அளிப்பதன் மூலம் தீர்த்துக் கொள்கிறது. இம்முறையைப் பெரும்பாலும் உபயோகிப்பவர்களாகத் துறவிகளும், உடல்பலம் அற்றவர்களும்,திக்கற்ற மனிதர்களும், முதியவர்களும் ஒன்றும் இயலாதவர்களுமே.
    பலர் சாபமிடுகின்றனர், ஆனால் பல சமயங்களில் பலிப்பது இல்லை. இதன் காரணம் என்ன?
    கடவுளுக்கே சாபம் அளித்ததை பல புராணக் கதைகளில் நாம் அறியலாம். உதாரணமாக நாரத மகரிஷி மகாவிஷ்ணுவுக்கு சாபம் கொடுத்து ராம அவதாரத்தை ஏற்படுத்தியது.காந்தாரி கண்ணனுக்கு சாபமாக குலம் அழிந்து தனிமையான மரணத்தை தழுவுவது போன்ற பல சாபங்கள் புராணகதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    இவர்களது சாபம் பின் விளைவுகளை ஏற்படுத்தியதற்கு காரணமாக ஒரு பாவமும் அறியாமல்,தனது கடமைகளைச் சரிவர செய்து,சத்திய வாழ்க்கை மேற்கொள்ளும் தர்மாத்மாவாக இருந்த காரணத்தாலும், தனக்கு ஏற்பட்ட அநீதியால் ஏற்பட்ட உக்கிரத்தாலும் கொடுக்கப்பட்டவை. ஆனால் நிகழ்காலத்தில் சுயநல வாழ்க்கை மேற்கொண்டு அநீதியின் உருவாக வீற்றிருக்கும் மக்களால் கொடுக்கப்படும் சாபங்கள் பெரும்பாலும் பலிக்காமல் போவதில் ஒன்றும் வியப்பில்லை.
    ஆனால் வரமோ சாபமோ பெறுபவர் மற்றும் ஏற்படுத்துபவரின் தகுதியை பொறுத்தே அதற்குறிய பலாபலன்கள் ஏற்படும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

கொரோனா

மானுடம் சுரேஷ், செங்கப்படுத்தான்காடு

இயற்கை மற்றும் இயற்கையைச் சார்ந்து வாழும் உயிரினங்கள், செடிகொடிகள்,ஊர்வன,பறப்பன இவற்றில் உயர்ந்த பிறவியாக வர்ணிக்கப்படுவது ஆறறிவு படைத்த மனிதப்பிறவியே.
    மனித இனம் தோன்றிய காலந்தொட்டு பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் புவியில் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன.அதிலும் முக்கியமாக அறிவியல் சார்ந்த பற்பல வளர்ச்சியின் காரணமாகத்தான் கடவுளுக்கே நிகரானவன் என்ற மனநிலையை அடைந்த மனிதன் இன்று ஓரறிவு ஜீவிக்கு இருக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் அகத்துள் முடங்கி கிடக்கிறான். காரணம் கொரோனா நுண்ணுயிரி.
    பூமியில் தர்மம் அழிந்து அதர்மம் வேறூன்றும் காலத்தில் கடவுளின் அவதாரம் நிகழும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஒருவேளை அவ்வாக்கியத்தின்படி பூபாரம் தீர்க்கவே இந்நிகழ்வு ஏற்பட்டதோ? எவ்வாறு இருப்பினும் இயற்கையை அழித்து இயற்கை சார்ந்த வாழ்க்கையை ஏற்க மறுத்த மனித சமுதாயம் அதன் பலனாக அலறல், கதறல், மகிழ்ச்சி இது போன்ற உணர்வுகள் நான்கு சுவற்றுக்குள் கட்டுண்டு கிடக்கிறது.
    ஒருவரை ஒருவர் கைகுலுக்கவும், கட்டியணைக்கவும், காதலை பகிரவும், பாசத்தை பகிரவும், நட்பையும் நெருங்க முடியாமல் தூரத்தை வரையறுத்து நெருங்க முடியாமல் நிற்கிறான். பிறரை விமர்சித்து பிறரை பற்றியே யோசித்த மனிதன் தற்சமயம் தன்னை பற்றியும் தனது வாழ்வாதாரத்தைப் பற்றிய கவலையுடன் இருக்கின்றான். இதை இயற்கை தந்த சாபமோ? கடவுள் இட்ட சாபமோ? யாரறிவார்.
    உலகில் சிருஷ்டிக்கபட்ட அனைத்து உயிர்களுமே அன்பு செலுத்த பெறக்கூடிய தகுதி உடையவையே. சுயலாபம் மற்றும் பிறரை தாழ்த்தி தன்னை உயர்த்த எண்ணிய குறுக்கு புத்தியின் விளைவே தற்சமயம் உலகம் சந்தித்து கொண்டிருக்கும் பேரிடருக்கு காரணமாக இருந்தது.
    இனி வரும் காலத்தில் மனிதநேயத்தை வளர்த்து சுயநல போக்கை ஒழித்து மனிதனாக வாழ முயற்சிப்போம்.

ஆலத்தூரார் அறத்து ஆறு களஞ்சியத்தின் பேறுகள்

அன்பின் வழியது உயிர்நிலை

ஆலத்தூர் சி.. சாமி, வடக்குத் தெரு, ஆலத்தூர்

நம் பெரியவர்கள் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தும் போது "பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க" என்று மனமகிழ வாழ்த்துவார்கள்.
அந்த பதினாறு செல்வங்கள்.
1. கல்வி, 2.தீர்க்காயுள், 3.உண்மையான நண்பர்கள், 4. நீடித்த இளமை, 5.குறையாத வளமை, 6. நோயற்ற வாழ்வு, 7.தெளிந்த மனம், 8. தெய்வ வழிபாடு, 9. நல்ல குழந்தைகள், 10. அழியாப் புகழ், 11. மாறாத வார்த்தை, 12. தர்மம் செய்யும் பண்பு, 13.வற்றாத செல்வம், 14. நடுநிலை தவறாமை, 15. இன்பமான வாழ்வு, 16.அன்புபொருத்திய மனைவி.

மேலே குறிப்பிட்ட பேறுகளை, நாம் எப்படி அடைய முடியும் என்பதற்கு எனக்குத் தெரிந்த விவரங்களை உங்களுக்கு சொல்கின்றேன்.
    ஒரு ஊரில் குமரன் என்பவன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘உள்ளேவரலாமா’ என்று கேட்டனர். தந்தை ‘வாருங்கள்’ என்றார்.
    ‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…அவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு...எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் வரமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.
    குமரனின் தந்தை ‘வெற்றியை அழைக்கலாம்... ஏனெனில் நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.
    ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்… எல்லாவற்றையும்...வெற்றி...உட்பட…அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.
    ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.
பின் மூவரும், “அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.
அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.
உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.
    அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்...மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்... நான் இருக்கும் இடத்தில்தான் பணமும், வெற்றியும் இருக்கும்...ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’.
    அன்பு உள்ளம் இருந்தால்... நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும். இதையே வள்ளுவர்...
    அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு அன்புடைமை 8:80
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல், அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால். அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

***

மக்களை நாடி மருத்துவம்

அலைபேசி மருத்துவ ஆலோசனை

மு. சிவகுமார், மன்னங்காடு


மன்னங்காட்டில் மக்களின் நலன் கருதி மருத்துவ ஆலோசனை முகாம்.பெரியார்மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மையம், பெரியார் மருத்துவ குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி, ஹர்ஷமித்ரா மருத்துவமனை,திருச்சி, இவர்களுடன் இணைந்து அறிவியா ஆராய்ச்சி நிறுவனம், பட்டுக்கோட்டை,
    மக்களை நாடி மருத்துவம்- அலைபேசி மருத்துவ ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கும் கோவிட்-19 கிருமிக்கும் சம்பந்தம் இல்லை. இந்த முகாமில் சுமார் பத்து மருத்துவர்கள் மன்னங்காடு மக்களுக்காக சேவை செய்ய இருக்கிறார்கள். மருத்துவர்களின் பெயர்கள் மற்றும்அவர்களைப் பற்றிய நிபுணத்துவம் பின்பு தெரிவிக்கப்படும். நம் ஊரில் அந்தந்த பகுதிகளில் உள்ள மன்னை ‘வாட்ஸஅப்’ நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து தகவல் தெரிவிப்பார்கள். தன் உடல்நிலை சம்பந்தப்பட்ட செய்திகளை மருத்துவருடன் கலந்து ஆலோசிக்க விருப்பம் இருப்பவர்கள் விவரம் சேகரிக்கப்படுகிறது, விருப்பம் இருப்பவர்கள் தங்கள் பெயர்களை திருமதி. எஸ்.முத்துக்கண்ணு,திரு ராகவன், திரு. அஸ்வத், திருமதி. ராஜேஸ்வரி அல்லது திருமதி. சமுத்திரம் இவர்களிடம் தெரிவிக்கலாம். அலைபேசி மருத்துவ ஆலோசனை பற்றிய சந்தேகங்களை மேற்குறிப்பிட நபர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். பின்பு இதற்கான நேர அட்டவணை தொகுத்து அந்தந்த நபரிடம் கொடுக்கப்படும். இந்த ஆலோசனை முடிந்தவுடன் அனைத்து மருத்துவர்களும், அதாவது 9 மருத்துவர்களும் நம் ஊருக்கு வர இசைவு தந்திருக்கிறார்கள், அச்சமயம் நடமாடும் மருத்துவ உபகரணங்களோடு மக்களைச் சந்திக்க இருக்கிறார்கள். அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். நன்றி.
இவர்களுடன் களத்தில் மன்னங்காடு ஊராட்சி மன்றம் மற்றும் மன்னை ‘வாட்ஸ்ஆப்’ நண்பர்கள்

நெகிழி (Plastic)

மு. சிவகுமார்,  மன்னங்காடு

காலையில் எழுந்ததும் பல் துலக்கும் டூத் பிரஷ்ஷிலிருந்து, ரேஸர், சோப்புப் பெட்டி எனத் தொடங்கி அன்றாடம் நம் நடைமுறை வாழ்க்கைப் பயணத்தில் பயன்படுத்தும் பொருட்களில் நெகிழி முக்கியமாகி விட்டது நெகிழி எனப்படும் பிளாஸ்டிக். நெகிழியின் பயன்கள், அதை நாம் அன்றாட வாழ்வில் எப்படி இணைத்துக்கொண்டோம் அல்லது அது எப்படி நம்முடன் இணைந்து கொண்டது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். உலக அளவில் நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி கிலோகிராம் நெகிழி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம், ஒரு வருடத்தில் 8500 கோடி கிலோகிராம் பயன்பாட்டில் உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் குறிப்பு கூறுகிறது. இதனை நம் எண்ணத்தால் கூட கணக்கிட முடியாமல் உள்ளது என்பதுதான் எதார்த்தம்.
    நெகிழி இரண்டு வகைப்படும். அவை செயற்கை நெகிழி, இயற்கை நெகிழி. உலகம் முழுவதும் செயற்கை நெகிழியின் பயன்பாடு அதிகமாகி பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தும் நிலை உருவாகி உள்ளதைக் கண் கூடாகக் காண முடிகிறது.
    இயற்கை நெகிழி தாவரங்களிலிருந்து பெறப்படுவதால் அவை சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை, இவைகளைப் பற்றி விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்!
    சுமார் நாற்பதாண்டுகளாக செயற்கை நெகிழியின் பயன்பாடு உருவாகி, இப்பொழுது நெகிழியின் பயன்பாடு மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதன் பயன்கள் எண்ணிலடங்கா...!
    நெகிழியின் பயன்பாடு மருத்துவத்துறையில் தான் நம்மை அக்கிரமிக்க ஆரம்பித்தது. ஏனெனில், தொற்றுநோயை கட்டுப்படுத்த முதன்முறையாக உள்ளேவந்தது என்று கூறலாம். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நெகிழியால் தயாரிக்கப்பட்ட ‘சிரிஞ்ச்’ எனப்படும் ஊசி போடுவதில் ஆரம்பித்து மிகப் பெரிய பலனை உருவாக்கியது. இதனால் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் கொடிய நோயான எயிட்ஸ் தவிர்க்கப்பட்டது. ஆனால் மருத்துவத் துறையில் நெகிழியின் பயன் மிகவும் போற்றத்தகுந்தது. எடுத்துக்கட்டாக ரத்தத்தைச் சேகரித்து வைக்க உதவும் ரத்தம் சேமிக்கும் பைகள், இதய வால்வு, நெகிழியால் செய்யப்பட்ட கண், முக்கியமாக மாத்திரைகளின் பொதி(tablets pack), இருதயக் குழாய் அடைப்பு நீக்கி (Stunt) உயிர் காக்கப் பயன்படும் மருத்துவ உபகரணங்கள், மற்றும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என இந்த நெகிழி மிகப் பெரும் பங்காற்றி வருகிறது.
    மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்குரிய உடைகள், ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனக் குடுவைகளை நெகிழியால் உருவாக்கினார்கள். அவைகளால் மாசுபடுவது குறைக்கபட்டுள்ளது எனலாம். இதனால் இரசாயனமும் அதன் தன்மை மாறாதிருக்கும். இன்றும் வலிமையான கரிம அமிலங்கள் நெகிழி பாட்டில்களில்தான் அடைத்து வியாபாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், மற்ற எல்லா கொள்கலன்களும் அமிலத்துடன் வேதியியல் வினை புரிந்துவிடும்.
    நாம் இப்போது வீட்டிலும், வெளியிலும் சாதாரணமாகப் பயன்படுத்தும் நெகிழியால் ஆன தண்ணீர் பாட்டில்கள், மாசு பட்ட நீர் அருந்துவதை விடுத்து தூய்மையான நீரைக் கொண்டு செல்ல இலகுவாக பயன்படுகிறது. மற்றும் தண்ணீர் தூக்கும் நெகிழியாலான குடங்கள் மக்களுக்குப் பேருதவியாக உள்ளது.
    விவசாயத்திற்கு ஆழ்துளைக் கிணறு குழாய்கள் (PVC pipe), சொட்டு நீர்ப் பாசனத்திற்குப் பயன்படும் நெகிழிகள், வீடுகளுக்கான மேல்நிலை தண்ணீர் கொள்கலன்கள் (overhead tank), என்பன போன்ற எடை குறைவாகவும், நீண்ட நாள் பயன் தரக்கூடியதாகவும் இந்த நெகிழியாலானப் பொருள்கள் பெரிதும் பயன் உள்ளதாக இருக்கிறது. இவைகளின் தாக்கம் இரும்பு குழாய்களின் பயன்பாட்டை முற்றிலுமாகநிறுத்தி விட்டது என்று கூறலாம்.
    மின்சார உபயோகத்தில் ஸ்விட்சுகள், கம்பி (Wire), என நெகிழியின் பாதுகாப்பை வேறு உருவில் மாற்ற இயலாது. இந்த பயன்பாட்டிற்கு மாற்று வழியே இல்லை என்று கூறலாம். மின்சார அதிர்ச்சியை நெகிழியைத் தவிர வேறு எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. மின்னணுவியல் சாதனங்களில் இதன் பயன்பாடு பெரிய அளவில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக அச்சிடப்பட்ட சுற்றுப் பலகை (PCB) மற்றும் அதைச் சார்ந்த சாதனங்களில் இதன் பயன்பாடுகள் பெரிய அளவில் உள்ளது என்றால் மிகையாகாது.
    அது போல் தகவல் தொடர்பில் ஆப்டிகல் ஃபைபர் மூலம் டெலிபோன் சேவைக்கு ஒலிக்கற்றையை அனுப்பப் பயன்படுகிறது. நெகிழி நாரின் உதவி தகவல் தொடர்புத்துறையில் பெரிய புரட்சியாகும். இதனை கம்பியில்லா தகவல் தொடர்புமுறை என்றும் கூறலாம். கம்ப்யூட்டருக்கு (மடிக்கணினி) பயன்படும் பெரும்பாலானப் பொருட்கள் நெகிழியால் ஆனதாகும். மேலும் கணினியில் பயன்படும் வன்பொருட்கள்கூட (hardware) நெகிழி பாதி, உலோகம் பாதி என்ற உபயோகத்தில் உள்ளது.
    விமானத்தின் உட்புறம் முழுவதும் வலுவூட்டப்பட்ட நெகிழியாலானவை ஆகும். கப்பல், விமானம் வழியாகக் கொண்டு செல்லும் பொருட்களை எடை குறைவாகக் கொண்டு செல்ல நெகிழியாலான பெட்டிகளைத்தான் நாம் பிரயாணம் செய்ய பயன்படுத்துகிறோம். எடை குறைவான நெகிழி நாரால் ஆன படகுகள் இன்று கடலில் மீன் பிடிக்கச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
    வாகனங்களில் டயர்களில் உட்புறம் உள்ள டியூப்களில் 100% நெகிழி கலந்துள்ளது, இவை செயற்கை நெகிழியால் செய்யப்படுகிறது, ஏனெனில் இந்தவகை மீள்பொருள் நெகிழி காற்றை அவ்வளவு எளிதில் வெளியில் விட்டுவிடாது. அதேநேரத்தில் டயர்களில் பயன்படுபவை இயற்கை நெகிழி மற்றும் நைலான் நார்களால் ஆனது. வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் சிலவற்றில் மின்சார கடத்தல் தன்மை கொண்ட நெகிழி திரவமாகப் பயன்படுகிறது.
    விளையாட்டிற்கு உபயோகப்படும் பந்து, மட்டை, விளையாட்டு காலணிகள் நெகிழி மற்றும் அதன் நார்கள் மூலமே உருவாக்கப்படுகிறது.
    பழம், காய்கறி, முட்டை, மீன் என நெகிழிப் பெட்டிகளில் அடைத்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல பெரிதும் உதவுகிறது. உணவு பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதில் இதன் பங்கு பெரிதாகும். இன்று எல்லாவிதமான உணவு பொருட்களும் பொட்டலம் கட்டுதலில் நெகிழியால் பெரும் புரட்சியே நடந்துகொண்டிருக்கிறது.
    இன்று COVID-19 என்ற சுவாச தொற்றுவியாதியை அடுத்தவருக்கு பரவாமல் தடுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களாகிய உடல் கவசம், தலைக்கவசம், கை உறைகள் அனைத்திலும் நெகிழியின் பயன்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
    நெகிழியின் எதிர்மறைத் தாக்கங்களைப் பற்றி இன்னும் விரிவான தகவல்களும் அதனால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழலுக்கான கேடுகளையும் விரிவாக அடுத்த இதழில் பார்ப்போம்
.      


தஞ்சை தரணியின் தேடல்

அ. ஆறுமுகம், விக்ரமம்

மன்னர்கள் ஆட்சியில் “சோழ நாடு சோறுடைத்தது” என்ற சொல்லுக்கே தனி சொந்தம் கொண்டு, தங்கச் சுரங்கம் இன்றி வேறு தொழிற்சாலை தொழில் கண்டறியாது, வேளாண்மையே பிரதானம் என்று விவசாயம் கண்டு, செல்வம் செழித்து திகழ்ந்ததால், புலவர்கள் பாராட்டுக்கும் அள்ளி அள்ளி கொடுத்தது அரசு, அது அந்தக்காலம். பொற்காலம், வரலாற்றில் பொறிக்கப்பட்ட காலமது.
    சோழ நாடுதான் உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளைநிலம் கண்ட ஒரே சமவெளி நிலபரப்பு உடையது. காவேரியும், கல்லணையும் கொண்டு கண் எட்டிய தூரம் பச்சை நிற கம்பளி போத்திய விளைநிலம் கண்டதும் சோழ நாடுதான். அந்த சோழ நாட்டின் முக்கிய பகுதிதான் தஞ்சை தரணி.
    தமிழகத்திலேயே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்தான் பிரசித்தி பெற்ற பெரிய கோயில்கள் முதல் எண்ணற்ற சிறுகோயில்களும் உள்ளன என்ற பெருமையும் சிறப்பும் இன்றும் உண்டு.
    இயற்கைப் பொய்த்ததாலும், அண்டை மாநிலம் விவசாய பெருக்கம் கொண்டதாலும், அதனால் காவேரியும் கல்லணையும் தண்ணீர் காணாமல் தரைமட்டுமே காட்சியாய் கண்டதால் நெல் விவசாயம் கானல் நீராய் பொய்த்துப்போனதும் உண்மையே. இது காலத்தின் கோளாறாக இருந்துவிட்டுப் போகட்டும்.
    ஏன் பாழ்ப்பட்டு போனது நம் காய்கறி விவசாயம். ஆழ்துளை கிணறு கண்டறிவதற்கு முன்பே வாய்க்கால் தண்ணீர் பாசனம் இல்லாத நிலங்களைக் கிணற்று நீரால் வாளி/ஏற்றம் கொண்டு தண்ணீர் பாய்ச்சி செய்திட்ட வெண்டைக்காய், புடலை, பாவை, கத்தரி, சுரைக்காய், பரங்கி, சுண்டைக்காய், அவரை, கொத்தவரை, தக்காளி, முள்ளங்கி, மரவள்ளி, மிளகாய், கீரை வகைகள் இன்னும் எண்ணற்ற காய்கறி விவசாயம். அதில் கண்ட வருவாய் கொண்டுதானே நம் முன்னோர்கள் நம்மை வளர்த்து, படிக்க வைத்து, நமக்கு உண்டான நல்ல தேவைகளும் செய்து நம்மை ஆளாக்கினார்கள். ஏன் நாம் இழந்தோம் அந்த காய்கறி விவசாயம்? அதன் மூலம் பெற்றிட்ட வருமானம் என்ற கேள்வியின் தேடலே இப்பதிவு.
    நெல் விவசாயம் பொய்த்ததால், நம்மில் சிலர் விவசாயம் விடுத்து பிழைப்பு தேடி சிங்கப்பூர், அரபு நாடுகள் மற்றும் மற்ற அயல் நாடுகள் சென்றவர்களில் பலர் செல்வ சீமான்களாக மாறியதால் நாம் செய்து வந்த காய்கறி விவசாயத்தையும் மறந்து விட்டோமோ? என்று எண்ணத்தோன்றுகிறது. வாழ்வில் வலுவிழந்து விட்டோமோ வாழ்க்கையில் தடம் மாறி விட்டோமோ என்று நினைக்கத்தோன்றுகிறது?.
    நினைத்துப் பார்க்கிறேன், முன்பு நம்மை விட விவசாயத்தில் மிகவும் பின் தங்கிய, தண்ணீர் தாராளமாய் கிடைக்காத, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோயமுத்தூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் எப்படி முன்னேறினார்கள். ஆராய்ந்து பார்த்தல் அந்த ஊர் மக்கள் அதிகம் அயல் நாட்டில் கூலி வேலை நாட்டம் இல்லாமல், இருப்பதை கொண்டு கிடைத்ததை வைத்து காலத்திற்கேற்ப எப்படி எல்லாம் விவசாயம் செய்து பணம் பண்ணலாம் என்ற தீராக் கடும் முயற்சியும் அயராத கடின உழைப்பினாலும் என்பது கண்டறிதல் முடியும்.
    அவர்களைப்போல் நாமும் விஞ்ஞான வளர்ச்சி கொண்டும், இயற்கை விவசாய முறையை நடைமுறைப்படுத்தியும் அவர்கள் போல் விவசாய தானியங்களை விளைவித்துப் பெருக்கம் செய்தும், ஏற்றுமதி செய்தும் நாமும் ஏற்றம் காண முடியாதா? என்பதே என் இந்த தேடலின் பதிவு.
    இப்பதிவு படிப்பதற்கு மட்டுமல்ல சிறைப்பட்டு கிடக்கும் நம் சிந்தனைகளைக் கொஞ்சமாவது தட்டி எழுப்பி அயல் நாடு சென்று கூலிக்கு மாறடிக்காமல் நம் நிலத்தை பயன்படுத்தி நாம் கண்ட விஞ்ஞான வளர்ச்சி கொண்டு காலத்திற்கு ஏற்றாற்போல் நல்ல காய்கறி விவசாயம் செய்து முன்னேற முனைப்பு செய்வோம் வாருங்கள் என்பதே இத்தேடல்.
    நம்மில் உண்டு பலபேருக்கு தென்னந்தோப்பு, தென்னைக்கு தண்ணீர் இறைப்பதோடு கொஞ்சமேனும் காய்கறி விவசாயம் செய்தால் வீட்டுக்கு சமையலுக்கும் கிடைக்கும் மிதமிஞ்சி விளைவித்தால் நல்ல விலைமதிப்புள்ள வருவாயும் கிடைக்கும் என்ற எண்ணம் நம்மில் வரவில்லை என்பதே என் இத்தேடல்.
    படிக்கும் உங்களில் கொஞ்சம் பேராவது சிந்தித்து செயல் பட்டால் வெளிச்சம் கிட்டும் என் தேடலுக்கு. வளம் வந்து சேரும் நம் இல்லங்களுக்கு. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற சொல்லோடு இப்போது முடிக்கிறேன், என் தேடல் தொடரும் என்று.


குறளின் குரல் 3

கொடுப்பதற்கே இல்லறம்

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடுவடக்கு

இல்லறம் என்பது எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் உதவுவதை உயரிய நோக்கமாய் கொண்டிருத்தல் வேண்டும்! தான் உண்ணும் உணவை தனது இனங்களுக்கும் பகிர்ந்தளிக்க கரைந்து அழைக்கிறது காகம். காகத்திடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம் இது!
    பொதுவாக தர்மம் என்பது நான்கு யுகங்களிலும் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்ப்போம்... சத்யயுகத்தில் (க்ருதாயுகம்) சன்னியாசிகளைத் தேடிச்சென்று மக்கள் தர்மம் செய்திருக்கிறார்கள், த்ரேதாயுகத்தில் சன்னியாசிகள் ஓரிடத்தில் கூடி இருந்தார்களாம்....அவர்களுக்கு இல்லறத்தினர் தங்களால் இயன்ற அளவு தர்மம் செய்தார்கள்! த்வாபரயுகத்திலோ சன்னியாசிகள் வீடு தேடி வந்தார்கள்...இல்லையெனக் கூறாமல் இன்முகத்துடன் தர்மம் செய்து அவர்களை வழியனுப்பினார்கள். ஆனால் கலியுகத்திலோ வீடு தேடி வந்தாலும் வீடு நிறைய பொருள் இருந்தாலும் ‘இல்லை’ என்று திருப்பி அனுப்பி விடுவார்களாம்! ஒவ்வொரு யுகத்திலும் எவ்வாறு நடந்ததோ நாம் அறியோம்! ஆனால் கலியுகத்தில் நடப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!
    முஸ்லீம் சகோதரர்கள் ரமலான் பண்டிகையை ஈகைப் பெருநாளாகக் கொண்டாடி... வறியவர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். கிருஸ்துமஸ் தினத்தில் கிருஸ்துமஸ் தாத்தா வீட்டிற்கு வந்து பரிசுகளைக் கொடுத்து வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
    ஒரு ஊரில் செல்வச் செழிப்பு மிக்க கணவன் மனைவி அன்புடன் இல்லறம் நடத்தி வந்தனர். தன்னை நாடி வரும் வறியவர்க்கு இல்லை என்று சொல்லாமல் இயன்ற அளவு உதவினர். அவர்கட்கு மக்கட்பேறு இல்லை. அதனால் இருவருமே ஒருவரை ஒருவர் குழந்தையாகப் பாவித்து மகிழ்ந்தனர். இருவருக்குமே வயதாகி விட்டது. கொடுத்துக் கொடுத்து செல்வமும் கரைந்து கொண்டிருந்தது....இதனால் உறவினர்களின் கேலிக்கு ஆளாகினர்!
    கணவனும் மனைவியும் ‘தேசாந்திரம் போய் விடுவோம்’ என காசிக்கு சந்நியாசி உடை உடுத்தி தங்களோடு எதையும் எடுத்துக் கொள்ளாது திருவோடு ஒன்று மட்டும் வாங்கிக் கொண்டு நடை பயணமாய்க் கிளம்பினர்..
    கிடைக்கிற பிட்சையில் உண்டு... பார்த்த இடத்தில் படுத்துறங்கினர். ஒரு நாள் மிகவும் மோசமான ஒரு வறுமை மிகுந்த சந்நியாசி இவர்களிடம் வந்து ‘ஐயா...திருவோடு வாங்கக்கூட காசில்லை தங்கள் திருவோட்டைத் தருகிறீர்களா?’ என்றார். கொடுத்துக் கொடுத்து பழகிய கரங்கள் அல்லவா? கணவன் மறு பேச்சுப் பேசாமல் திருவோட்டை தானமாகக் கொடுக்க முன்வந்தார். மனைவியோ கொடுக்க மனசில்லாமல் ‘ஐயா... நாங்கள் இல்லறம் நடத்திய போது அனைவருக்கும் உதவி செய்தோம் ஆனால் இப்போது உதவும் நிலையில் நாங்கள் இல்லை’ என்றார்.
    கணவனுக்கோ துளியும் உடன்பாடில்லை! மலர்ந்த இதயத்துடன் ‘ஐயா.. அவள் கிடக்கிறாள் விடுங்கள்... தாங்கள் நான் உடுத்தியிருக்கும் உடையைக் கேட்டாலும் கொடுக்கத் தயார்..!’என்றார். ஒருவருக்குப் பசியைவிட மானம் பெரிது... ஆனால் அதனையும் இழக்கத் தயார் என ஒருவர் கூறினால் அவர் மனிதரே அல்ல! இறைவனுக்கு ஒப்பானவர்!‘ என்னை மன்னியுங்கள்...’ என சந்நியாசி அவர் காலில் விழுந்தார்! இல்லறம் நடத்தி கொடுத்துப் பழகிய இதயம் எதுவும் இல்லாத போதும் கொடுக்க நினைக்கிறது!
    துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை            
      இல்வாழ்க்கை 5:42
குரல் ஒலிக்கும்…


கொரோனாவிடம் கற்றவை

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடுவடக்கு

கொரோனா எனும் கொடிய வைரஸால் ஊரடங்கு எனும் ‘வாழ்க்கை முடக்கம்’ விதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஊரடங்கின் ஆரம்ப கட்டத்தில் மக்கள் பீதியில் இருந்ததென்னவோ உண்மை! கடைகளுக்குச் சென்று அவரவருக்கு வேண்டிய மளிகை, காய்கறி என தேவைக்கதிகமாகவே வாங்கிச் சேர்த்து வைத்தார்கள். என்ன நடக்கப் போகிறது?! என முகத்தில் கலவர ரேகைகளைப் படரச் செய்தது, அமெரிக்காவின் பலி எண்ணிக்கை!
    உறவுக்காரர்களை அலைபேசி மூலம் அவரவர் இல்லங்களில் இருக்கச் செய்து, அடுத்த வீட்டாருடன் பேசும் போது கூட முகக் கவசம் அணிந்து பேசினார்கள்! மாநில வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப் பட்டவர்கள், மாவட்ட வாரியாக என தொற்று எண்ணிக்கையைப் பார்த்து பெருமூச்சு விட்டோம்! கொரோனாவால் உலக அளவில் சுற்றுப்புறச் சூழல் தூய்மை அடைந்துள்ளது. கங்கை தனது தூய்மையான நீரை வெகு காலத்திற்குப் பின் பிரவகிக்கிறது! வெனிஸ் நகரத்து நீர் வழிப் பாதை கலங்காத நீரால் மக்களின்றி மாசற்று உள்ளது. வாகனப் போக்குவரத்து முடங்கியதால் கரியமில வாயுவின் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது!
    பொதுவாக துன்பத்தில் கற்கும் பாடம் வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டி! கொரோனாவால் மக்கள் கற்றது அதிகம். அனைவரும் வீட்டிற்குள் இருந்ததால் பரஸ்பர அன்பு மேலோங்கியது. உலக மக்கள் அனைவரும் நலம் பெற பல இடங்களில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி அனைவரும் ஓரினம் என்பதை நிரூபித்தோம்! நமது கை கூப்பி வணங்கும், ‘அஞ்சலி’ யோக முத்திரை உலகத்தால் பேசப்பட்டு நமது நாட்டில் இனிமேல் என்றும் கை குலுக்காமல் கை கூப்ப வேண்டும் எனும் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தினோம்!
    கை கழுவுதல் என்பது நமது நாட்டில் இன்றைய நாகரீகத்தில் தேவையற்ற ஒன்றாகி இருந்தது. விசேஷ வைபவங்களில் விருந்து உபச்சாரத்தில் கைகழுவாமல் சாப்பிடுபவர்களை இப்போது அதிகம் காண முடிகிறது! அந்த அளவுக்கு வேகம்... அடுத்த வேலையைப் பார்க்கும் அவசரம்! விவேகம் என்னவெனில் நம் கைகளில் சுரக்கும் வியர்வைச் சுரபிகளில் பாக்டீரியாக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அது நம் வயிற்றுக்குள் போனால் தீங்கை விளைவிக்கும்... அதற்காகத்தான் கை கழுவுகிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை! இப்போது சானிடைசர் கொண்டு கைகழுவிக் கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறோம்! இனியும் இது தொடர வேண்டும்!
    அடுத்தது ‘போக்குவரத்து’. அடுத்த வீட்டிற்கு போவதற்குக் கூட பைக் சவாரி செய்யும் நம் இளைஞர்கள் கொரோனா பயத்தால், வெளிப்பயணத்தைக் குறைத்து கிராமப் புறங்களில் விவசாய நிலங்களில் தங்கள் பொழுதை பயனுள்ள வகையில் செலவிட்டார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம்! பயணம் குறைவு! திருமண, துக்க வீடுகளில் அளவுக்கதிகமாக கூட்டம் கூடாமல், தனிமனித கட்டுப்பாட்டுக்கு பணிந்து நடந்து, இனியும் இவ்வாறு நடந்தால் தேவலாம் என சிந்திக்க வைத்திருக்கிறது!
    ஊரடங்கு எனும் இரண்டு மாத கால வாழ்க்கைக்குப் பழகி விட்டோம்! இதனால் ஏற்பட்ட பேரிழப்பையும் மறந்து...! உலகம் முழுமையும் விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்!

‘சிலம்பச் செல்விகள்

நமது பாரம்பரிய தற்காப்பு விளையாட்டுக் கலைகளில் சிலம்பம் வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது. எதிரியைக் கையிலிருக்கும் சிலம்பம் எனும் மூங்கில் கழியால் நிலை குலைய வைப்பதில் வல்லமை படைத்தவர்கள் சிலம்ப வீரர்கள்! ஆண்களே பெரும்பாலும் ஆர்வம் காட்டும் இந்த விளையாட்டில் மன்னங்காட்டில் இரண்டு பெண் வீராங்கனைகள் பயிற்சி பெற்று சாதனையும் படைத்துள்ளார்கள்!
    முதலாமவர் மன்னங்காடு வடக்கு அகிலா-மகேந்திரன் தம்பதியரின் மகள், அமிர்த ரெமீனா. இரண்டாமவர் அதே பகுதியில் வசிக்கும் சம்பூர்ணாதேவி-கண்ணப்பன் தம்பதியரின் மகள், சுஜிதா. ரெமீனா பதினோராம் வகுப்பும் சுஜிதா ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவரும் விக்ரமம் காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவிகள்!
    அமிர்த ரெமீனாவும், சுஜிதாவும் பள்ளியின் சிலம்ப ஆசிரியர் கணேசன் அவர்களிடம் ரெமீனா ஏழாம் வகுப்பிலிருந்தும் சுஜிதா ஆறாம் வகுப்பிலிருந்தும் பயிற்சி பெற்றனர். பள்ளி, மற்றும் பெற்றோர்களின் ஊக்குவிப்பாலும் ரெமீனா கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6-ல் எட்டாம் வகுப்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மதுக்கூர் வெஸ்டர்ன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த ‘South Zone Silambam Championship’ போட்டியில் ‘வேல்கம்பு’ பிரிவில் முதலிடமும், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 10ல் ஒன்பதாம் வகுப்பில் குழந்தைகள் தினத்தில் தஞ்சாவூர் TMSS Hall ல் செயிண்ட் ஆண்டனி மேல் நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற ‘State Open Silambam Championship’ போட்டியில் ‘வேல்கம்பு’ பிரிவில் மூன்றாமிடமும் ‘ஒற்றைக்கம்பு’ பிரிவில் இரண்டாமிடமும் பெற்றார்!
    சுஜிதா, 2016 ஆம் ஆண்டில் மதுக்கூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பதஞ்சலி யோக அகாடமி மற்றும் விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் ‘ஒற்றைக்கம்பு’ மற்றும் ‘கம்புச்சண்டை’ போட்டியில் முதலிடமும் “சுருள்வாள்’ போட்டியில் இரண்டாமிடமும் பெற்றார்!
    தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் ‘ஒற்றைக்கம்பு’, ‘வேல்கம்பு’ போட்டிகளில் முதலிடமும் ‘சுருள்வாள்’, ’கம்புச்சண்டை’ போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்றார். 2015-16 ஆம் கல்வி ஆண்டு கோடை விடுமுறையில் விக்ரமம் பள்ளியில் ‘கலாரத்னா’ டாக்டர் வேங்கைநாதன் (இந்திய தற்காப்புக் கலை & விளையாட்டுக் கழகம்) அவர்களால் இலவசமாக சிலம்பப் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத் தகுந்தது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை வழங்கிக் கொண்டிருக்கும் இருவரும் வருங்கால சிலம்ப வீராங்கனைகளுக்கு உதாரணமாய் திகழ்கின்றனர்.
    சற்றே காலதாமதமானாலும், மாணவிகள் இருவரையும் ‘காட்டு மஞ்சரி’ பாராட்டி வரவேற்கிறது! மேலும் ‘சிலம்பச் செல்விகள்’ இருவரும் சிலம்ப விளையாட்டுக்களில் தனித் திறமையுடன் வெற்றி பெற்று சாதனை புரிய வாழ்த்துக்கள்!

தொகுப்பு: எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடுவடக்கு
(தனித்திறமை படைத்தவர்களை மஞ்சரி ஆசிரியர் குழுவிடம் வாசகர்கள் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்!)

கண்கள்

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்கு

பரந்து விரிந்த உலகை
பார்த்து ரசித்த நம் ’கண்கள்’
நாம் இறந்த பின்னும்
பார்க்கட்டுமே....!
விழியிழந்தோர்க்கு வழிகாட்டியாய்...!

சுவடுகள்

சுஜிதா கண்ணப்பன், மன்னங்காடு வடக்கு

தனிமையின் சுவடுகள்
பிரிவின் அனுபவம்
நண்பனின் சுவடுகள்
ஆழ்ந்த நட்பின் அனுபவம்
பேரிடரின் சுவடுகள்
மனிதநேயத்தின் அனுபவம்
எல்லாச் சுவடுகளும்
வாழ்க்கையின் அனுபவம்

வளமாய் வாழ...

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்கு

தூய்மையாய் இரு
ஆரோக்கியமாய் வாழ...!
ஆரோக்கியமாய் இரு
சுகமாய் வாழ...!
சுகமாய் இரு
உயர்வாய் வாழ..!
உயர்வாய் இரு
உறுதியாய் வாழ...!

கொரோனாவே ஓடிவிடு!

 செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

காற்றில் கலப்பாயோ
நீரில் வருவாயோ
நிலத்தில் ஊடுருவுவாயோ என
பயம் கொள்ளும் வேளையில்
கணத்தில் நுழைந்து
எமனுக்கு இரையாக்கும்
விஷக்கிருமியே...!
தனித்திரு..! விழித்திரு...! வீட்டிலிரு...!
மந்திரத்தால் உறவுகளை
நேசிக்க வைத்தாய்...!
உலகையே ஊரடங்கிற்கு உள்ளாக்கினாய்...!
மனிதர்களின் உயிரைக் குடிக்கும்
குட்டிப்பிசாசே...!
மக்களின் நம்பிக்கையால்
உன்னை மண்டியிட வைப்போம்...!

பணம்

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

உயிரற்றவை அனைத்தும்
பேசுவதில்லை....
உன்னைத்தவிர...!

முதியோர் இல்லம்

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

கருவில் சுமந்தவளை
உயிரோடு புதைக்கும்
கல்லறை...!
எதிர்காலத்தில் உன்னையும்
வரவேற்கும்... ஆதலினால் இன்று
பெற்றோரை நேசி...! நாளை
பிள்ளைகளால் நேசிக்கப்படுவாய்...!

***

காற்றோடு....

இரா. பானுமதி,  மன்னங்காடு வடக்கு

தென்னங்காற்றே தென்னங்காற்றே என் கவலையைக் கேட்டிடு
வேப்பங்காற்றே வேப்பங்காற்றே என் வேதனையயைச் சுமந்திடு
சாரல்காற்றே சாரல்காற்றே சடுதியில் வந்திடு
என் மனதில் இருக்கும் பயத்தை நீயும் போக்கிடு
தேக்கங்காற்றே தேக்கங்காற்றே என் சிந்தையில் நுழைந்திடு
சூரிய ஒளியே சூரிய ஒளியே விடியலில் வந்திடு
என் மனதில் உள்ள அழுக்கைப் பிழிந்திடு
இறைவா இறைவா மன இறுக்கத்தைப் போக்கிடு
இனி வரும் நாளில் சுகத்தினைத் தந்திடு!

***

புடவை

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

கோமதி பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தாள். இன்று மட்டும்தான் இந்த வாய்ப்பு! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் இவளிடம் விஷயத்தை சொல்லவே இல்லை! அத்தனை குறுகிய எண்ணம். போகட்டும்! இன்றுதான் உள்ளூர் தொலைக்காட்சியில் எதார்த்தமாகப் பார்த்தாள். உடனே போய்விட மனசு பரபரத்தது.
    ஆனால் வீட்டை எப்படி விட்டுச் சென்றாளோ அப்படியேதான் இருக்கும். பிள்ளைகளும் இதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். நல்ல வேலையாக கணவன் அலுவலகம் சென்று விட்டான். இல்லாவிட்டால் அவனிடம் வியாக்யானம் செய்து போகவிடாமல் செய்து விடுவான்...மகனும் மகளும் கல்லூரி சென்று விட்டார்கள். உங்களை இதற்கு மேல் குழப்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை!
    ஒரு ஜவுளிக்கடை தனது ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாட வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இன்று மட்டும் புடவை ஒன்று ஐந்து ரூபாய்க்கும், லுங்கி ஒன்று ஒரு ரூபாய்க்கும் விற்பதாக விளம்பரம் செய்திருந்தது. அங்குதான் நம் கதை நாயகியின் புறப்பாடு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாத்திரங்களை அதனதன் இடத்தில் வைத்து விட்டு குளிக்க ஓடினாள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாய் ‘அரைமணி நேரத்தில்’ குளித்து முடித்தாள். மற்ற நாட்களில் எவ்வளவு நேரம் குளிப்பாள் என்கிறீர்களா? அதெல்லாம் இப்போ என்னத்துக்கு? ஸ்நானம் முடித்து அடுத்தது புடவை செலக்ஷன். இந்த நேரத்தில் மட்டும் ஆண்களை எண்ணி சற்றே பெருமூச்சு விடுவாள் கோமதி. காரணம் யாதெனில், ஆண்கள் எங்கே சென்றாலும் ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் சென்றால் மரியாதைக் கேட்காமல் கிடைத்து விடுகிறது! ஆனால் பெண்கள்?
    ஐநூறு ரூபாய் புடவை என்றால் துக்க வீடு மற்றும் ஆஸ்பத்திரி’ கடைத்தெருவிற்கு. திருமண வரவேற்பு எனில் ஆயிரம் ரூபாய் புடவை! முகூர்த்தத்திற்கு பட்டுப் புடவை, கோவிலுக்கு காட்டன் சாரி, வீட்டிலிருக்கும் போது வேலைக்காரிக்குக் கொடுக்க மனசில்லாத பழைய புடவை! இவற்றுள் ஒன்றில் மாற்றம் எனில் சக ‘பெண்களின்’ சாபத்திற்கு ஆளாக நேரும்! கோமதி இப்போது எந்தப் புடவை உடுத்துவாள் என்பது உங்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனிதானே! உடுத்த ஆரம்பித்தாள்....அந்தோ விபரீதம்!
    இது நேற்று ஆஸ்பத்திரிக்கு போனபோது உடுத்திய புடவையல்லவா? இன்றும் உடுத்தினால் ஒரு மாதிரியாகப் பார்ப்பாள் எதிர் வீட்டு தமிழரசி. கருப்பு நிறத்தில் உள்ள புடவையை எடுத்தாள். அடச்சே! இது சனீஸ்வரன் கோவிலுக்குப் போகும் போது... அடுத்தது சிவப்பு நிறத்தில்... இது மேல்மருவத்தூர் செல்லும் போது உடுத்த... மேல் வீட்டு சாந்தி நவக்கிரகத்திற்கும் பிரீதியான ஒன்பது புடவைகள் வாங்கி வைத்திருப்பதாக தமிழரசி சொன்னாள். எல்லாம் பீலா! சாந்தி பொய் சொல்வதில் கைகாரி! நேரம் சென்று கொண்டிருந்தது... கண்ணில் பட்ட ஆயிரம் ரூபாய் புடவை ஒன்றை எடுத்து அதற்கு மேட்சிங்க் பிளவுஸ் தேடினால் காணோம்!
    நேரத்தைக் கருத்தில் நிறுத்தி பிளவுஸுக்கு மேச்சிங் தேடுவதைக் கைவிட்டாள். ஆச்சா... அடுத்தது கண்ணெதிரே பார்த்த பிளவுஸை எடுத்து போட்டுக் கொண்டு புடவை உடுத்தினாள். அவசரமாய் தலைவாரி கிளிப் சொருகி, லேசாய் முகப் பவுடர் போட்டுக் கொண்டாள்.
    பர்ஸ், தண்ணீர் பாட்டில், கைப்பை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டர் சாவி தேடினாள். எப்போதும் வைக்கும் இடத்தில் சாவியைக் காணோம்! எங்கே தொலைந்தது? சாவி இல்லாத இடங்களாகப் பார்த்துத் தேடினால் எப்படிக் கிடைக்கும்? கோமதிக்கு மயக்கம் வரும் போலிருந்தது. காலையிலிருந்து சாப்பிடவில்லை! ஒரு வேளை சாப்பிடாமல் போனால் பரவாயில்லை! ஜவுளிக்கடையில் இந்நேரம் எத்தனை கூட்டமோ? சாவி தேடிக் களைத்து வெளியில் உள்ள வாசற்படியில் உட்கார்ந்தாள். எதேச்சையாக ஸ்கூட்டர் பக்கம் திரும்ப... சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது!
    அவசரமாய் எழுந்து வீட்டைப் பூட்டினாள். ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஜவுளிக்கடை நோக்கி விரைந்தாள்.
    கடைத் தெருவில் கூட்டமாய் நின்றிருந்தார்கள். ‘என்ன?’ என விசாரிக்கும் போது ஜவுளிக்கடை க்யூ இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறதாம்! ஆண்கள், பெண்கள் என வரிசையில் கலப்படமாய் நின்றிருந்தார்கள். புடவை, கைலி பற்றியே பேச்சாக ஒலித்துக் கொண்டிருந்தது. கடை சுமார் ஒரு கி.மீ தூரம் இருக்கும்! கோமதி வீட்டிற்குத் திரும்பி விடலாமா என யோசித்து....’ஆசை’ வரிசையில் நிற்கத் தூண்டி...ஸ்கூட்டரை ஓரமாய் ஸ்டாண்ட் போட்டு பூட்டி வரிசையில் வந்து நின்றாள். வரிசை நத்தையாய் நகர்ந்தது... வெயில் 38 டிகிரியில் தலையைக் ‘குளிப்பாட்டியது!’ கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் தீர்ந்து விட்டது.
    கோமதி அரை மணிக்கொரு தடவை தனக்குப் பின்னால் வந்தவர்களை ஆறுதலாக அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்தாள். இது நமது நாட்டின் சாபம்! ஆம். மக்கள் தொகை அப்படி! சரியாக மூன்று மணி நேரம் ஊர்ந்த வரிசை, கடை அருகில் வந்ததும்தான் நம் கோமதிக்கு உயிரே வந்தது!
    எதிரே அனைவரும் சிறிய துணிப்பையில் புடவை, வேட்டியுடன் வந்து கொண்டிருந்தார்கள். அனைவரது முகத்திலும் ஆத்ம திருப்தி! வரிசை நகர்ந்து கோமதிக்கு முன்னால் நின்றிருந்த பெண் கடையின் உள்ளே போக, கோமதி அவள் பின்னே ஏற... கடைச் சிப்பந்தி கோமதியை ‘நிற்கும்’படி சைகையில் கூறி... கடையின் கதவைச் சாத்தி.... ‘கையிருப்பு தீர்ந்தது’ எனும் அறிவிப்பை மாட்டினான்!

***

மழை...வரும் பின்னே!

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

தட்டான் தாழப் பறக்கும், எறும்புகள் முட்டையுடன் இடம் மாறும், பெரிய கரையான்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறும்....வீட்டில் ஈக்கள் அதிகம் மொய்க்கும், ஈசல்கள் புற்றிலிருந்து பறக்கும், நாய்கள் நடுச்சாலையில் மலம் கழிக்கும் இன்னும், சூரியன் மறையும் போது செவ்வானம் தோன்றும்.... நாட்டுக் கோழிகள் இறகுகளை வெயிலில் உலர்த்தும், கொம்புத்தவளை (மரப் பொந்திலுள்ள தவளை) கத்தும்...கம்பளிப்பூச்சிகள் முருங்கை மரத்தில் அதிகமாய் காணப்படும், நெற்பயிர்களைப் பூச்சிகள் முற்றிலும் அழித்து விடும்...கொக்குகள் நீர்நிலைகளை விட்டு வயற்காடுகளில் இரை தேடும்... இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் மழை வருவதற்கான அறிகுறிகளாய் இன்றும் நம்பப்படுகிறது!

***

மதமதக்யஞ் சாடி

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

கடந்த ஆண்டு ஒரு காலை நேரத்தில், தண்டூன்றி நடக்கும் மூதாட்டியொருவரை காணச் சென்றிருந்தேன். தொன்னூற்றாறு வயதடைந்து, ஓரளவு நடமாட்டத்துடன் இருந்த அவர் எனது நெருங்கிய உறவினர். பெயர் திருமதி கா. கோவிந்தம்மாள், எனது பெரியம்மா. அருகில் உள்ள வாட்டாகுடியில் பிறந்து மன்னங்காட்டில் வாழ்க்கைப்பட்ட இவரைச் சுற்றத்தார் அனைவரும் ‘ஆயா’ அல்லது ‘ஆயி’ என அழைப்பது வழக்கம். கல்வியறிவு அற்றவர், எனினும் இயற்கையாகவே அமையப்பெற்ற அறிவாற்றல் திறனால் சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கேள்விகளை அவ்வப்போது கேட்டுத் திணறடிப்பார்! நீர் கொதித்தால் பொங்குவதில்லை, ஆனால் பால் கொதித்தால் பொங்கி வழிகிறது, அது ஏன்? என்பது எனது பள்ளிக் காலத்தில் கேட்ட அவரது கேள்விகளில் ஒன்று!
    தாயை ஆயா என விளிப்பதும், தந்தையை அண்ணன் என விளிப்பதும் மன்னங்காடு கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த முறையாகும். தாயின் தாயை ‘அம்மாயி’ அல்லது ‘அம்மாச்சி’ என்பதும், தந்தையின் தாயை ‘அப்பாயி’ என்பதும் ஆங்காங்கே இன்றும் வழக்கில் உள்ள சொற்களாகும். அம்மாயி, அப்பாயி எனும் வார்த்தைகளில் ‘ஆயி’ எனும் விகுதி இருப்பதைக் காண்க. எனினும், கடந்த 25 ஆண்டுகளில் அம்மாயி, அப்பாயி போன்றவை வழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, ஆயா எனும் சொல் பாட்டியரைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறவினரல்லாத வயது முதிர்ந்த பெண்மணிகளை மரியாதை நிமித்தமாக விளிக்கும் சொல்லாகவும் ஆயா எனும் வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.
    ஆயா கோவிந்தம்மாள், எப்போதும்போல் பாசத்துடன் வரவேற்பார், என்னைப் பரிவுடன் அமரச் செய்தபின், நிறுத்தாமல் பேசிக் கொண்டேயிருப்பார். இடையிடையே ஓரிரு நொடிப் பொழுதுகள் மட்டும் நிறுத்திவிட்டுத் தொடர்வார். ஒவ்வொரு பேச்சிலும் நேற்று மாலை நடந்த ஏதாவது சுவாரசியமான நிகழ்ச்சியிலிருந்து, அவரது நீண்ட வாழ்க்கையின் ஊழிக்கால ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி வரை பல விஷயங்களும் அடங்கும். கணவனை இழந்து 45 ஆண்டுகள் தனிமையிலேயே வாழ்ந்துவிட்டவர். அவர் வயதொத்த முதியோர் பலரும் இயற்கையுடன் இணைந்துவிட்டனர். வயது ஆக ஆக தனிமைப் படுத்தப்பட்ட அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஆளில்லை. மாதத்தில் ஒருமுறை பார்க்கவரும் என்னைக் கண்டால் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. ஓரிரு மணி நேரப் பேச்சுக்குப்பின், புறப்படுகிறேன் ஆயா என்றால், ‘இப்பத்தான வந்த, அதுக்குல போரேங்கிறியே, சாய்ங்காலம் வர்றியா’ என்பார்!
    ஒருநாள், அவ்வாறான நீண்ட பேச்சொன்றின் இறுதியில்தான் ‘மதமதக்யஞ் சாடின்னா, தெரியுமாடாம்பி’ என்றார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை! ‘என்னது?’ என்றேன். ‘மதமதக்யஞ் சாடி’ என்றார் மீண்டும். தனது எட்டு வயதிலிருந்து யாரிடமும் இதுபற்றிப் பேசியதில்லை எனவும், கடந்த சில மாதங்களாக இதுபற்றிய நினைவுகள் வந்து கொண்டிருப்பதாகவும், அன்றுதான் முதன்முறையாக என்னிடம் இதைக் கூறுவதாகவும் சொன்னார். பேச்சைத் தொடர்ந்தவர், ‘நானும் பாத்தது இல்ல, சின்ன வயசில எட்டு பத்து வயசிருக்கிறப்ப, வாட்டாவடியில கெழங்கெட்டையுவ மதமதக்யஞ் சாடின்னு சொல்லி பேசுவ்வொ’, என்றார். அவர் தொடர்ந்து கூறிய செய்திகளில் இருந்து, எதை மனத்தில் கொண்டு பேசுகிறார் என ஏதோ புரியத்தொடங்கியது.
    தமிழகத்தின் பல இடங்களில் தொல்லியல் துறையினர் அகழாய்வில் அவ்வப்போது கண்டெடுக்கும் ‘முதுமக்கள் தாழி’யாக இருக்கக் கூடுமோ என்று அமைதியாக ஆயா கூறுயதைக் கேட்க ஆரம்பித்தேன்.
    ஓடியாடி உழைத்த காலம் போய், மிகமிக வயதாகி இடப்பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் அடங்கிவிட்ட நிலையில், உடலுக்குள் உயிர் எங்கோ ஓரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு தங்கிவிட்ட நிலையில், ஆர்வமுடன் உணவூட்டி, குளிப்பாட்டிப் பராமரிப்பவர்களுக்கும் அலுப்புத்தட்டும் நிலையில், படுத்துவிட்ட ஒருவர் மீண்டெழுந்து நடமாடுவது உறுதியாக இல்லை என்ற நிலையில், அவ்வுயிரை, அவ்வுடலை எவ்வாறு அனுப்பிவைப்பது?
    ‘குருது மாதிரி இருக்குமாம் அந்தச் சாடி’, ‘அந்த சாடிக்குள்ள சாவப்போரவ்வொள ஒக்காரவச்சு, சோறு, தண்ணியுங் குடுத்து, உசுரு அடங்குற வரையில வச்சிருந்துட்டு, அப்புடியே சாடியோட பொதச்சிப்புடுவ்வொளாம்’ என்றார் ஆயா மெல்லிய குரலில். வாட்டாகுடியில் அதுபோன்று யாரையாவது புதைத்து கேள்விப்பட்டிருக்கிறாயா ஆயா எனக் கேட்டேன். இல்லை, வயதான பெரியவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களும் யாரையும் அவ்வாறு உள்ளூருக்குள் புதைத்ததாகச் சொன்னதில்லை என்றார். ஆயாவின் வயதைக் கணக்கில் கொண்டு, அவர் கூறிய செய்திகளிலிருந்து, கிபி 1850க்குப் பின் கடந்த சுமார் 170 ஆண்டுகளாக நம் ஊர்ப்பக்கம் மதமதக்யஞ் சாடி முறை வழக்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை என யூகிப்பது கடினமாயில்லை.
    தமிழகத்தின் பல இடங்களில் கிடைத்த தாழிகளுக்குள் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரவியிருந்த ‘உலகாயதம்’ எனும் அக்கால மதத்தில் பலர் தாழிக்குள் சம்மணமிட்டு அமர்ந்து தவம் செய்தபடியே உயிர்துறந்து, தாழியுடன் புதைக்கபடுவதும் வழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. [இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றான சார்வாகம் அல்லது உலகாயதம், நேரடியாகக் காண்பதொன்றே நிச்சயமானதென்ற அடிப்படைக் கொள்கையை உடையது. எனவே கண்களால் காணமுடியாத ஒன்றாய் இருப்பதால், கடவுள் என்றேதுமில்லை என்பது அம்மதத்தின் கொள்கைகளில் ஒன்று].
    மதமதக்கா பானை, ஈமத்தாழி, ஈமப்பேழை, முதுமக்கள் தாழி என்றும், பச்சிளம் குழந்தைகளுக்குத் தொட்டில்பேழை என்றும் தாழிகள் அழைக்கப்பட்டன. மேலே ஆயா கூறியதுபோல் ஒருவரின் இறப்புக்கு முன்பே தாழியில் வைக்கும் முறையல்லாமல், இறப்புக்குப்பின் தாழியில் வைத்துப் புதைப்பதும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என அகழாய்வாளர்களின் விளக்கங்களும் உள்ளன. அப்படியெனில், உடலை எரிக்கும் முறை எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது எனும் கேள்வியும் எழுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இக்காலத்தில் உயிரற்ற உடலை எரிப்பது, புதைப்பது, உடற்பாகங்களைக் கொய்து விலங்குகளுக்கு உணவாக்குவது, ஆய்விற்காக தானமளிப்பது போன்ற வெவ்வேறு முறைகள் இருப்பதைப்போல், அக்காலத்திலும் பலவகையான ஈமச் சடங்கு முறைகள் நமது பண்பாட்டில் இருந்துள்ளன என நாம் உணரமுடிகிறது.
    
ஆயாவின் மனத்தில் அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் இக்கேள்வி எழக் காரணம் என்ன? சுமார் தொன்னூறாண்டுகள் மூளைக்குள் எங்கோ புதைந்து கிடந்த நினைவு திடீரென முளைத்ததன் காரணம் என்ன? தாம் நீண்டகாலம் வாழ்ந்து விட்டோம், இனி எப்படியோ? தமது மூதாதையரை இந்த வயதில் தானே மதமதக்யஞ் சாடிக்குள் இட்டிருப்பார்கள், புதைத்திருப்பார்கள் என நினைத்திருப்பாரோ? திருமதி. கோவிந்தம்மாள் காரிமுத்து [சனவரி 14, 2020ல் இயற்கை எய்தினார்]. 

உதவிக் கட்டுரை: ஆதிச்சநல்லூர் அகழாய்வும் முதுமக்கள் தாழியும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஆறுமுகமாசான சுடலை மா, சசிகலா கி. தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி. 2019.
அரசியல் அறிவோம்!

கோ.வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

சில நாட்களாக கண்டோமானால் நாளிதழ்களில் கொரோனா வைரஸ் காரணமாக நிர்வாகம் மற்றும் பொருளாதார ரீதியாக மாநில அரசு எடுக்க வேண்டிய முடிவை மத்திய அரசு எடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுக்குக் கொடுக்கப்பட்ட தன்னாட்சியை(autonomy) பறிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படிபட்ட குற்றச்சாட்டுகள் சுதந்திர இந்தியாவில் வருவது இயல்பே. இதை இந்நிகழ்வின் பின் செல்லாமல் அரசியலமைப்பு சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள சாராம்சத்தைப் பற்றிப் பார்ப்போம்.
    அரசியலமைப்புச் சாசனத்தில் இந்தியாவை 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநிலங்களின் ஐக்கியம். இந்தியா, அமெரிக்காவைப் போல் எந்தவித ஒப்பந்தத்தாலும் எல்லா மாநிலங்களும் ஒரே நாடாக இணைக்கப்படவில்லை. அதே போல் எந்த ஒரு மாநிலமும் இந்திய எல்லையிலிருந்து பிரிந்து செல்லவும் உரிமை இல்லை. அதே சமயம் மத்திய அரசுக்குக் கொடுப்பட்டுள்ள அதிகாரம் போல் மாநில அரசுக்கும் அரசியல் சாசனம் அதிகாரத்தை வழங்கியுள்ளது . மத்திய அரசு பாராளுமன்றத்தில் இயற்றும் சட்டத்தைப் போல் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. அதேபோல் சில முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கவும் மாநிலங்களுக்கு உரிமை உண்டு. இப்படி சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை தன்னாட்சி ( autonomy) என்று கூறுகிறோம். இதன்படி பார்த்தால் மத்திய அரசு எடுக்கும் முடிவு மாநில அரசுக்கு முரண்பாடாக அமையலாமல்லவா?.
    இப்படியான முரண்பாட்டை தவிர்க்க அரசியல் அமைப்புச் சாசனத்தில் முடிவை எடுக்க எந்தத் துறையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்று மொத்தம் மூன்று பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
1.மத்தியப் பட்டியல் (central list)
2. மாநிலப் பட்டியல் (state list)
3. பொதுப் பட்டியல் (concurrent list)
    மத்தியப் பட்டியல்: முதலில் மத்திய பட்டியலைப் பார்ப்போம். இதில் மொத்தம் 100 துறைகளில் மத்திய அரசு சட்டம் இயற்றவும் முடிவுகளை எடுக்கவும் சுதந்திரமாகச் செயல்படவும் அதிகாரம் உள்ளது. உதாரணத்திற்குப் பாதுகாப்பு துறையை எடுத்துக் கொள்வோம். மத்திய அரசில் பாதுகாப்புத் துறைக்கு என்று தனி அமைச்சர் உள்ளார். அவர்தான் முப்படைகளின் ஆலோசனைப்படி முடிவுகளை எடுப்பார். ஆனால் மாநிலங்களில் பாதுகாப்பு துறை என்று எந்த துறையும் இல்லை. அதேபோல் வெளியுறவுத் துறையின் கீழ் எந்த முடிவையும் சட்டத்தையும் மாநில அரசால் இயற்ற முடியாது. முழுக்க முழுக்க வெளியுறவுத்துறை என்பது மத்திய அரசின் கீழ் உள்ளது. மேலும் தொலைத்தொடர்புத்துறை பாஸ்போர்ட், குடியுரிமை முதலியன இதில் அடங்கும்.குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியா முழுக்க போராட்டங்கள் நடந்தாலும் எந்த மாநிலங்களிலும் அதை எதிர்த்து தனக்கான குடியுரிமை சட்டத்தை இயற்ற முடியாமல் இருப்பதை காணமுடிகிறது. அதே தருணத்தில் கேரளா, ராஜஸ்தான் முதலிய மாநிலங்கள் சட்ட மன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றின. இதை மத்திய அரசு "உங்கள் பட்டியலில் குடியுரிமை இல்லை" என்று அந்தந்த அரசுகளைக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
    மாநில பட்டியல்: அடுத்தது மாநிலப் பட்டியல். மாநில பட்டியலில் மொத்தம் 61 துறைகள் உள்ளன. உதாரணத்திற்கு காவல்துறை, பொது நலம் மற்றும் சுகாதாரம் முதலியன அடங்கும். பொது நலம் மற்றும் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் அடங்குவதால் ஒவ்வொரு மாநிலங்களும் தன்னிச்சையாக அதில் செயல்படுகின்றன. இதனால் பொது நலத்திற்காக அதிகம் செலவிடும் மாநிலங்களுக்கும் அதிகம் செலவிடாத மாநிலங்களுக்கும் பொதுநலத்தில் இருக்கும் பெரும் வேற்றுமையைக் காணலாம்.
    பொது பட்டியல் : மூன்றாவதாகப் பொதுப்பட்டியல். இவற்றில் காடுகள், மின்சாரம், கல்வி முதலியன அடங்கும். இதில் மொத்தம் 52 துறைகள் உள்ளன. இப்பட்டியலில் மத்திய அரசுக்கோ மாநில அரசுக்கோ சட்டத்தை இயற்றும் அதிகாரம் உள்ளது. ஒருவேளை சட்டத்தின் விதிகளில் ஒன்றுடன் ஒன்று முரண்பாடு ஏற்பட்டால் மத்திய அரசின் விதியே இறுதியாக நிலைபெறும் .
    மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலின் துறைகளை வேறு பட்டியலுக்கு அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் மாற்றிக்கொள்ளலாம். மேற்படி உள்ள மூன்று பட்டியல்களில் உள்ள துறைகளைக் கண்டோமானால் தேசிய அளவில் உள்ள துறைகளை மத்திய பட்டியலிலும், மண்டல மற்றும் உள்ளூர் பகுதிகளைச் சார்ந்த துறைகளை மாநில பட்டியலிலும், இரு மாநிலங்களுக்குப் பொதுவான அல்லது மத்திய மாநில அரசுக்கும் பொதுவான துறைகளைப் பொதுப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.
    நிகழும் சூழலை சுருக்கமாகப் பார்ப்போம். நமக்கு அதிகமாகப் பெருந்தொற்று பற்றிய பொதுநலம் மற்றும் சுகாதாரம் சார்ந்த முடிவை மத்திய அரசே எடுப்பதைச் செய்தியில் படித்திருப்போம். மத்திய அரசு பெருந்தொற்றைப் பேரிடர் என்று கருதி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம்,2005-ன் கீழ் முடிவை எடுத்துள்ளது. ஆனால் மேற்சொன்ன படி பொதுநலம் என்பது மாநில பட்டியலாக வருகிறது. அந்தந்த அரசின் பார்வையில் முடிவை எடுக்கும்போது இப்படியான முரண்பாடுகள் ஏற்படுகிறது.
    அவசர நிலையில் மத்திய மாநில அரசுகள் முடிவை எடுக்க தன் எல்லைகளை மீறினாலும் அரசியல் சாசனத்தின் படி அவற்றின் எல்லைகுள்ளேயே இருக்க வேண்டும் என்பதே இதன் உட்கருத்து.

மன்னங்காடு பேராசிரியர் மு.சிவக்குமார், மருத்துவர் அ.சின்னத்துரை ஆகியோரின் அறிவியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இயற்கை கிருமி நாசினி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை சுகாதார துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊ.ம.தலைவர் நா. வைத்திலிங்கம் அவர்கள் முன்னிலையில் May182020 அன்று வழங்கினார்.


படைப்பாளர் பற்றி...

கோ.வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு
பொறியியல் முடித்து போட்டித் தேர்வுக்காகப் படித்துக்கொண்டு பொழுது போக்கிற்காகப் புத்தகமும், நிகழ்வையும் பழமையையும் பதிவு செய்யும் நோக்கத்தில் முயற்சித்து வருகிறேன்.

சிவகுமார் முத்துசாமி, மன்னங்காடு
இணை நிறுவனர் , அறிவியா தொழிநுட்பக்கழகம், புதுமையான தொடக்க (startup) வணிகம். மனித உடல்நலம்/கால்நடை மற்றும் செல்லப் பிராணிகளுக்கான வேதியியல் இல்லா மருந்துகளைத் தயாரித்தல், மருந்து வணிகத்தில் புதுமையைப் புகுத்துதல், இவையே அறிவியாவின் நோக்கம். இடம்: மன்னங்காடு மற்றும் பட்டுக்கோட்டை. ஒருசில துளிகள் சமுதாய பணிகளில் பங்காற்றுவது.

ஆலத்தூர் சி அ சாமி, ஆலத்தூர்
என் படிப்பு: கெமிக்கல் டெக்னாலஜி. முன்பு சென்னையில், இப்பொழுது கத்தார் நாட்டில் கேஸ் கம்பேனியில் பயிற்சியாளராகப் பணி செய்கிறேன். நிறுவனர் மற்றும் தலைவர் சின்னையன் தனபாக்கியம் அம்மாள் அறக்கட்டளை, வடக்குத் தெரு, ஆலத்தூர். இதன் நேக்கம்:ஆதரவு இல்லாத குழந்தைகள், பெரியவர்களுக்கு முறையாக கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்வதற்கு. படித்தவர்களுக்கு எப்படி தன்னப்பிக்கையை வளர்த்து நேர்காணலில் வெற்றிப்பெற்று வேலைக்கு செல்வதற்கும், மற்றவர்களுக்கு தற்சார்வு வாழ்க்கையினால் நோயின்றி வாழ பயிற்சி வகுப்பு எடுக்கலாம் என்பது தொலைநோக்கு பார்வையாக இருக்கின்றது.

அ. ஆறுமுகம், விக்கிரமம்
சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றும் இவர், விக்ரமம் கிராமத்தில் விவசாயி என்பதில் பெருமிதம் கொள்கிறார். விவசாயத் தொழில் நுணுக்கங்கள் மட்டுமின்றி, விளைபொருட்களைச் சந்தைப் படுத்துத்தும் வணிக நுணுக்கங்களிலும் புதுமைகளைப் புகுத்துவதில் முனைப்பாக உள்ளார்.

இரா. வேலு, மன்னங்காடு மேற்கு
கல்வி:DME, B.Lit, MA, தமிழ் இலக்கியம் தொழில்: முதுநிலைப் பொறியாளர், பாரத மின்னணு நிறுவனம், சென்னை
பொழுது போக்கு:நூல்கள் வாசித்தல், கவிதை, கதை எழுதுதல்
புனைப் பெயர்: பட்டுக்கோட்டை கவிப்பிரியன்

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு 
விவசாயக் குடும்பம். படிப்பு பத்தாம் வகுப்பு. பொழுது போக்கு.. கவிதை, சிறுகதை எழுதுதல், இலக்கியப் புத்தகங்கள் வாசிப்பது.

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு தெரு
விவசாயக் குடும்பம். M.Sc, M.Phil, M.Ed., படித்தவர். விக்ரமம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை. கவிதை எழுதுதல் பொழுது போக்கு.

இரா.பானுமதி, மன்னங்காடு வடக்கு விவசாயக் குடும்பம். கவிதை எழுதுதல் பொழுது போக்கு. படிப்பு ஐந்தாம் வகுப்பு.

வெற்றிச்செல்வி கண்ணப்பன், மன்னங்காடு வடக்குத்தெரு 
விவசாயக் குடும்பம். தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரியில் BSc இரசாயனம், முதலாமாண்டு மாணவி. புத்தகங்கள் வாசிப்பது. கவிதை எழுதுதல் பொழுது போக்கு.

சுஜிதா கண்ணப்பன், மன்னங்காடு வடக்குத் தெரு 
விவசாயக் குடும்பம். விக்ரமம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சிலம்பக் கலையில் வல்லமையுடையவர். பொழுது போக்கு புத்தகங்கள் படிப்பது. கவிதை எழுதுதல்.

மானுடம் சுரேஷ், செங்கபடுத்தான்காடு
எனது பெயர் சுரேஷ். நான் செங்கபடுத்தான்காடு கிராமத்தை சேர்ந்தவன்.மின்னணு தொலைதொடர்பு துறையில் பட்டைய படிப்பை முடித்து தற்போது யூடியூப் மற்றும் பார்ட்காஸ்ட் துறையில் பேச்சாளர் மற்றும் எழுத்தாளராக உள்ளேன்.

துரைசாமி நவநீதம், மன்னங்காடு
இயற்கையியல், தமிழில் ஆர்வம். புது தில்லி எய்ம்ஸ் பல்கலையில் பிஎச்டி, பின் ஆராய்ச்சியில் துணைப்பேராசிரியர் பணி. தற்போது சென்னையில் அரிய நோய்களில் ஆய்வு, மற்றும் எழுத்துத் திறனுள்ளோரைக் ‘காட்டுமஞ்சரி’யால் இணைக்க முயல்வது.

***

வீழ்வானோ கோலியாத்து?

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

என்றோ, எங்கோ
கோலியாத்தை
வீழ்த்தினானாம் தாவீது!
மீண்டெழவே திறனின்றி
மாண்டானாம்
கோலியாத்து!
எங்கள்
கவண் கருவிகள்
பட்டை தீட்டப்படுகின்றன
ஆராய்ச்சியாளர் மூளைக்குள்
ஆய்வகப் பட்டறைகளில்!
உண்மையைப் புரிந்துகொள்
தன்மையை மாற்றிக்கொள்
ஓரங்கட்டி நில்!
உலகு
எமக்கு மட்டுமல்ல
உமக்கும்தான்
உமக்கு மட்டுமல்ல
எமக்கும்தான்
அதுதானே
இயற்கையின் விதி!
புரியாமல் கொல்கின்றாய்,
புரிந்துகொள், கரோனாவே
‘தீ’யைக் களைந்துவிடு
தீநுண்மியே, ‘தீ’யைக்
களைந்துவிடு!
பரிணாமப் பெருமரத்தில்
யாமொரு கிளை என்றால்
நீயுமொரு கிளைதானே!
நாளைமுதல்
பரிணாமப் பயணத்தில்
சென்றுவிடு உம்வழியில்!
நிற்காதே எம்வழியில்!
நேற்று வரை,
தமதாட்சித் தலைமையிடம்
வளைந்தோர், குனிந்தோர்
மண்டியிட்டோர், காலில் விழுந்தோர்
அவர்தான், அவரேதான்
உம்மிடம்
மண்டியிட வைத்தார்
எம்மை!
வீழ்க அவரது பிழை.
அரசியல் பிழை.
அறம் கூற்று ஆகட்டும்!
நுண்மியே,
‘தீ’தான் உன்
கருவி என்றால்
கோலியாத்தும்
மீண்டெழுவான்,
எழுந்தும் நிற்பான்
எமது பட்டறைத்
‘தீ’க்கவணுடன்!
இம்முறை
வீழ்ச்சி அவனுக்கல்ல!
நிற்காதே எம்வழியில்!
சென்றுவிடு உம்வழியில்!

***

கொரோனா தேவி

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

அவ்வப்போது மனிதரையும், விலங்குகளையும் கொள்ளை நோய்கள் தாக்குவதும், அலைக்கழிப்பதும் புதிதல்ல. காலங்காலமாய் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான். கரோனா தாக்கத்தை விடவும் நம்மை நிலைகுலைய வைத்தது, அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வெகுவாக முன்னேறி விட்டோம் இன்று எனும் மமதையும் செருக்கும்தான்.
    அறிவியலும் தடுமாற, கையறு நிலையில் மனம் தன்போக்கில் எங்கோ ஓரிடத்திற்குச் சென்று அமைதி நாடத்தானே செய்யும். அதைத்தான் சில வடக்கு, வடகிழக்கு மாநில மக்கள், குறிப்பாகப் பெண்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒருசில வாரங்களில் உபி, பிஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களின் கிராமப் பகுதிகளில் பலவயதுப் பெண்களும் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்று கொரோனா மாயி, கொரோனா மா, கொரோனா தேவிக்கு படையலிட்டு வழிபடத்தொடங்கி உன்னனர். விரதமிருந்த பெண்கள், நீளமான சிறு குழிகளை நிலத்தில் தோண்டி, ஊதுபத்தி ஏற்றி, குங்குமம், பூ, எலுமிச்சை, லட்டு, நெய், வெல்லம் போன்றவற்றை நீர் விளாவிப் படைத்து, குழியை மூடிக் காணிக்கையாக்குகிறார்களாம். இதுபோன்ற படையல் வழிபாட்டுமுறை அனேகமாக அப்பகுதியில் காலங்காலமாய் இருந்துவரும் வழக்கமாய் இருக்கலாம்.
    வடநாட்டில் பரவலாக இன்று பின்பற்றப்படும் சீத்தலா தேவி அல்லது சீத்தலா மாதா வழிபாடும், தமிழகத்தின் மாரியம்மன் வழிபாடும் கொள்ளை நோய்களுடன் தொடர்புடையவை. தீராத காய்ச்சல், காலரா, பிளேக், பெரியம்மை போன்றவற்றின் காப்பாளராக இந்த தேவிகள் போற்றப்படுகிறார்கள். இந்த வரிசையில் கொரோனா தேவியும் சேர்ந்துகொள்வதில் ஆச்சரியமேதும் இல்லை.
    நம்பகுதி மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலைக்கொத்தையும், மஞ்சளையும் நுண்ணுயிரிக் கொல்லியாகக் கொண்டிருப்பதைப்போல், சீத்தலா ஒரு கையில் துடைப்பமும், மறுகையில் குளிர்ந்த மருத்துவ குணமுள்ள நீர்கொண்ட பானையையும் ஏந்தி, கழுதை மீதேறி ஒவ்வோரிடமாகச் சென்று தூய்மையை நிலைநிறுத்தி நோயிலிருந்து மக்களைக் காப்பாளாம்!
    இதுவெல்லாம் நோயின் காரணி என்னவென்றே அறிந்திராத, அறியமுடியாத பழங்காலத்தில் கொள்ளை நோய்களை, எல்லாம்வல்ல தேவியராய் உருவகப்படுத்தி, அத்தேவியரின் சினத்தைத் தணிக்கும் நோக்குடன் மக்கள் தம் மனத்தையும் சாந்தப் படுத்திக்கொள்ளும் ஓர் அணுகுமுறை. இன்று நோயின் காரணி என்னவெனத் தெரிந்திருந்தும், அக்காரணியை மக்கள் கண்ணால் பார்க்க முடியாத நிலையில், கொரோனா நோயும், நோய்க்கிருமியும் ‘தேவி’யானது புரிந்து கொள்ளக்கூடியதே!

***

என்று நலம் வருமென்று தெரியலே

பட்டுக்கோட்டை கவிப்பரியன் (இரா. வேலு மன்னங்காடு மேற்கு)

கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி_அந்தோ
கணக்கின்றி மடிக்குது மக்களை!
கண்கலங்கி கதிகலங்கி அகில உலகமும்!
என்னசெய்வதென்று விழிபிதுங்கி பார்க்குது தங்களை!
பொன்னென்றும் பொருளென்றும் போராயுதங்களென்றும்
போற்றி வளர்த்திட்ட தேசங்கள்!
கொன்றொழிக்கும் இந்த கொரோனா கிருமியை
கொல்ல வழியின்றி சொல்லொணா துயரில் மிதக்குது!
அணு ஆயுதங்களையும்
நியூட்ரான் குண்டுகளையும்!
அண்டத்தை பலமுறை அழித்திடும் அளவிற்கு!

கொண்டாடி மகிழ்ந்துமே குவியலாய் குவித்திட்ட நாடுகள்!_அட
கொத்து கொத்தாக செய்திடும் மக்களை
புதைக்கவும் இடமின்றி கதறுது!
தலைமுடி அளவினில் ஆயிரத்தில் ஒருபங்காம் கொரோனா! _அது
உலகம் முழுதையும் தலைகீழாய் புரபுராட்டியே
நர்த்தனம் தினம் தினம் ஆடுது!
கண்டகண்ட மருந்துக்களை கண்ட கண்ட படி!
உண்டிட ஊடகம் பலவுமே
ஓய்வு ஒழிவின்றி கூவுது!
தலைவர்கள் தொண்டர்கள் சாமானியர் என!
தடையின்றி தாக்குது கொரோனா!
தலைகள் விழுவதை மறைத்தே அரசுகள்‌!
தகிடுதத்த வேலை பல செய்யுது!
தலையை பிய்த்துக்கொண்டு எப்போது தொலையும் என்றே!
திண்டாடும் அரசுகள் நாளொரு ஆரூடம் சொல்லுது!
ஊரடங்கு போட்டே கால அவகாசம் தேட!
உத்திகள் செய்தது ஒன்றுமே கை கொடுக்கலே!
ஊரும் அடங்கல உலகும் அடங்கல!
ஊற்றெடுப்பது போல
தொற்றும் அடங்காம பரவுவது!
உச்சத்திற்கு போயிதான் கீழே இறங்குமென!
உச்சாடனம் போல் தினம் போதனை!-அந்த
உச்சபட்சம் எட்டும் மாதம் எதுவென்று!
ஒவ்வொரு தினிசினில்
உளரல்கள் தான் கேட்க சகிக்கல!
கொரோனா கிருமியை
கொரோனா தேவியாய்
கோயில் கட்டி சிலர் வணங்கிறார்!-இந்த
தொழில் நுட்ப யுகத்திலும்
இத்தனை கூத்துக்கள்!
நடப்பது நமக்கொன்றும் புரியலே!
என்று நலம் வரும் என்று தெரியல!

ஃபேவிபைரவிர் (Favipiravir) என்றழைக்கப்டும் கோவிட்-19 நோய்க்கான மருந்தினை கிலென்மார்க் (Glenmark) எனும் இந்தியக் கம்பெனி வெளிக்கொணர்கிறது. இந்த மாத்திரைகள் ஃப்ளு சுரத்திற்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மருந்தாகும். மலேரியா மருந்தினை கோவிட்-19 நோய்க்குப் பயன் படுத்துவதுபோல் இதுவும் ‘மறுபயன்பாட்டு மருந்து’ எனும் பட்டியலின் கீழ் வருகிறது.
    ஃப்ளு சுரத்தை உண்டாக்கும் இன்ஃப்லூயென்சா வைரஸ் தீநுண்மிகளைப்போல், கரோனா நுண்மிகள் ‘ஆர்என்ஏ’வை மரபணுக்களாகக் கொண்டவை. இந்த ஆர்என்ஏ மரபணு உருவாக்கத்தில் முட்டுக்கட்டை போட்டு நோயாளிகள் உடலில் நுண்மியின் இனப்பெருக்கத்தை தடைசெய்வதே ஃபேவிபைரவிர் மருந்தின் வேலை.
    எனினும், ஒரு மாத்திரை சுமார் ரூ. 170 என விலைபோகும் இந்த 200 மிகி ஃபேவிபைரவிர் மாத்திரைகள், கரோனா தீநுண்மியை முழுமையாகக் கட்டுப்படுத்தும் திறனுள்ளதா எனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். (மருந்து வடிவம் source: Pubchem)

செய்தி: து. நவநீதம், மன்னங்காடு


Satire 

ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்கு,

எனது வெள்ளைக்காரப் பேராசிரிய நண்பரொருவர் சில நாட்களுக்குமுன் இமெயிலில் செய்தியொன்று அனுப்பியிருந்தார், மகாத்மா. அங்கே அவருடைய மாண்புமிகு மாட்சிமைதங்கிய மேதகு பிரெசிடென்ட் டிரம்ப், தலைகால் புரியாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும், ஏதாவது கேட்டால், முழங்கால் முட்டியை கழுத்தில் வைத்து நெரித்து விடுவார் போலிருக்கிறது என்றும், பயந்துபோய் எழுதியிருந்தார். கரோனாவிடம்கூட வாழக் கற்றுக்கொண்டு காலம் தள்ளி விடலாம் போலிருக்கிறது, இந்த மா.மா.மே.பி. டிரம்பின் ‘ரோதனை’ தாங்க முடியவில்லை, பேசாமல் மன்னங்காட்டிற்கு வந்துவிடலாமா என யோசிக்கிறேன் என்றார், மகாத்மா.
    தாராளமாய் வாருங்கள் என்றேன். பிறகு, யோசித்தவாறே, முன்பெல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவிற்குள், தமிழகத்துக்குள் வந்தால், சிவப்புக் கம்பளம் போட்டு, குனிந்துகொண்டு, கும்பிட்டுக்கொண்டு, வழிந்துகொண்டு வரவேற்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வெளிநாட்டுக்காரர்கள் என்ன, இந்தியாக்காரர்களே வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருகிறோம் என்றால், கம்பளத்தையே சிவப்புக் கொடியாக்கி, வராதே, வந்துவிடாதே என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கூவுகிறார்களே என்றேன், மகாத்மா!
    அதற்குப் பேராசிரிய நண்பர், கவலை வேண்டாம் அன்பரே, நான் வெள்ளை வேட்டியைத் தளரத்தளர தரையில் புரளுமாறு கட்டிக்கொண்டு, முழுக்கை சட்டையை அரைக் கையாக மடித்து விட்டுக்கொண்டு, நெற்றியில் வெள்ளைத் திருநீறும், கறுப்புச் சாயம் பூசிய தலையுமாய் ‘அம்பலமாய்’ வந்து இறங்கப் போகிறேன், என்றார். கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டைப் பெருமைப்படுத்த எண்ணி, தாராளமாய் வாருங்கள் என்று அவரது வெள்ளை வேட்டிக்கு ஈடாக வெள்ளைக் கொடியைக் காட்டிவிட்டேன், மகாத்மா.
    பாஸ்போர்ட், வீசா எல்லாம் தயார் செய்ய ஏகப்பட்ட படிவங்கள், மனுக்கள். அவர் வந்து சேரவேண்டிய முகவரி எவ்வளவு துல்லியமாகச் சரியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு துல்லியமாக எல்லாவற்றையும் பூர்த்தி செய்தோம்.

பெயர்: Peettar Vaalsu (முன்பு - Peter Walsh)
எண், தெரு: ௫௮ Thalaimai Saalai (58 Main Road)
ஊர்: Mannangkaadu (Mannankadu)
வழி: Thaamarangkoottai (Thamarankottai)
வட்டம்: Pattukkoottai (Pattukkottai)
மாவட்டம்: ThanJchaavoor (Thanjavur)
மாநிலம்: Thamizh Naadu (Tamil Nadu)
நாடு: Inththiyaa (India)


ஊரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு எனது குடும்பத்தினருடன் வரவேற்கச் சென்றேன். எந்தச் சிக்கலும் இல்லை, சென்னை வந்து சேர்ந்து விட்டார் பேராசிரியர்! சிறிது ஏற்பாட்டுடனேயே வந்திருப்பார் போன்று தெரிந்தது. இதயத்திற்கு நேரே வெளியே தனது வெள்ளைச் சட்டையின் மேல்பையில், மா.மா.மே.பி. டிரம்பின் முழங்கால் முட்டி பளிச்சென்று தெரிவது போன்ற படம் ஒன்றை வைத்திருந்தார். தமது இதய தெய்வத்தின் படத்திற்குப் பின்னால் சட்டைப் பையில் பத்து டாலர் நோட்டுகளை மடித்துக் கத்தையாக வைத்திருந்தார், மகாத்மா.

பேருந்திலேயே Mannangkaadu சென்று விடலாமா என்றேன். வேண்டாம் என்றவர், எங்கோ சென்று ஆம்புலன்ஸ் ஒன்றைக் கையோடு கொண்டு வந்தார். அதில் அவர் படுத்துக்கொள்ள, நானும் எனது குடும்பமும் அவருடன் உள்ளே புளி மூட்டைகள்போல் அடைந்து கொண்டோம். பேராசிரியரின் ஆம்புலன்ஸ் ‘திட்டத்தால்’ வழியில் பெரிய சிக்கல் ஏதும் இல்லை. தடுத்து நிறுத்திய ஓரிரு இடங்களில் இதய தெய்வத்திலிருந்து வெளிப்பட்ட டாலர் நோட்டுகள் பேசின. எப்படியோ ஆம்புலன்ஸில் ‘நோயாளிகள்’ போல ஊர்வந்து சேர்ந்தோம், பெருமூச்சு விட்டோம், மகாத்மா!

பேராசிரியர் Peettarக்கு, Mannangkaaduக்கு வந்த மகிழ்ச்சி தாளவில்லை! இரவு முழுவதும் தமிழர்களையும், என்னைப் போன்ற ‘ஒன்றுமறியா’ அப்பாவி கிராம ஜீவாத்மாக்களைப் புகழ்ந்து கொண்டே கண்ணயர்ந்து விட்டார். காலையில் எழுந்து பார்த்தால், விஏஓ, ஆர்ஐ, எஸ்ஐ (sub-inspector), டிஎஸ்பி, ஆர்டிஓ, எச்ஐ, எஸ்ஐ (sanitary inspector), எம்பிஎச்எஸ் என, நீல் ஆம்ஸ்ட்ராங் போன்று உடையணிந்த பலர் சமூக இடைவெளி விட்டு Peettarஐ சூழ்ந்து கொண்டனர், மகாத்மா! கோவிட்-19ன் தலைமையகமான சென்னையில் இருந்து வந்திருக்கின்றீர்கள் என இரவு முழுவதும் ‘ஊர்ப்பாதுகாவலர்கள்’ மூலமாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. பயம் வேண்டாம், ஏறுங்கள் இந்த கரோனா ஆம்புலன்சில் என்றனர்! பொடுபொடுவென்று இதயதெய்வத்துடன் சேர்ந்த பணக் கத்தைமேல் கை வைத்தவாறே பேராசிரியர் கிளம்பிச் சென்றுவிட்டார், மகாத்மா! அதைத்தான் வீடியோ எடுத்து அப்பவே வாட்ஸ்ஆப்பில் அனுப்பி விட்டார்களே, இன்னுமா பார்க்கவில்லை, பகிரவில்லை?

என்றென்றும் உன்போல் நம்பிக்கையுடன்
பப்ளியஸ் ஜீவாத்மா
June 15, 2020

காட்டுஞ்ரி June 2020 | 2020 : 3 KaattuManjari