காட்டுஞ்ரி January 2021 | 2021 : 5 KaattuManjari

காட்டுஞ்ரி January 2021 | 2021 : 5

 அரசியல் அறிவோம்

அமெரிக்கத் தேர்தல் முறை

கோ. வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலை நம் சட்டமன்ற தேர்தலைப் போல் உற்று நோக்கியவர்களுள் நீங்களும் ஒருவராக இருந்தால் அதில் ஆச்சரியமில்லை. கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தல், செய்திகளோடு மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்பட்டது. யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதோடு மட்டுமின்றி, அமெரிக்கத் தேர்தல் முறை, வாக்காளர் குழு (electoral college) மற்றும் சில மாநிலங்களின் தொகுதிகளைப் பற்றியும் அறிய மக்கள் ஆர்வம் காட்டினார்கள். கொஞ்சம் சிக்கலான முறையைக் கொண்டுள்ள அமெரிக்கத் தேர்தலைப் பற்றிச் சற்று விரிவாகக் காண்போம்.        

அனைத்து மாநிலங்களையும் ஒப்பந்தத்தின் மூலம் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதுதான் இன்றுள்ள அமெரிக்க ஒன்றியம் (USA). தற்போது மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன . அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் டி.சி. மட்டும் இம்மாநிலங்களுள் சேராமல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐம்பது மாநிலங்கள் மற்றும் ஒரு மாவட்டத்தை மக்கள் தொகை வாரியாகத் தொகுதிகளைப் பிரித்து, அதற்கு ஈடாக மொத்தம் 538 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த 538 உறுப்பினர்களை கொண்ட குழுவைத்தான் ‘வாக்காளர் குழு’வென்று அழைக்கிறார்கள். இவர்கள்தான் அமெரிக்க அதிபரை மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுப்பார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி மாநிலங்களுக்கு வாக்காளர் குழு உறுப்பினர் எண்ணிக்கை மக்கள் தொகை வாரியாக ஒதுக்கப்படும். அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியாவுக்கு 55 உறுப்பினர்களும், வயோமிங், வடக்கு டகோட்டா போன்ற மக்கள் தொகை அதிகமில்லாத மாநிலங்களுக்கு தலா 3 உறுப்பினர்களும், வாஷிங்டன் டி.சி.க்கு 3 உறுப்பினர்களும், என ஒதுக்கப்படுகிறது. அதிபராக வேண்டுமென்றால் 270 வாக்காளர் குழு உறுப்பினரின் வாக்குகளுக்கு மேல் பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

மக்கள் வாக்கு (Popular vote) மற்றும் வாக்காளர் குழு வாக்கு (Electoral College vote)

அமெரிக்கத் தேர்தலில் ஒரு வினோதமான முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எளிதாக விளக்க, எடுத்துக்காட்டாக, தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். இங்கு A என்ற கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றால் அவர் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றபடி A கட்சியுடைய தமிழ்நாட்டின் மொத்த சதவீத வாக்கு எண்ணிக்கை அவரை எவ்விதத்திலும் பாதிக்காது. அவ்வாறில்லாது, கலிபோர்னியாவில் A என்ற கட்சி மாநில அளவில் அதிக சதவீத மக்கள் வாக்குகளைப் பெற்றால் அங்குள்ள அனைத்து 55 வாக்காளர் குழு உறுப்பினர்களும் A கட்சியிலிருந்தே அதிபருக்கு வாக்களிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவர். இது போன்று, எந்தக் கட்சி, எந்த மாநிலத்தில், அதிக சதவீத வாக்குகளைப் பெருகிறதோ, அக்கட்சியிலிருந்தே அனைத்து வாக்காளர் குழு உறுப்பினர்களும் அதிபருக்கு வாக்களிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்! எதிர்க்கட்சி சிறிதளவே குறைந்த வாக்குகளைப் பெற்றாலும் ஒரு உறுப்பினரைக் கூட தேர்வு செய்யாது. அதாவது ஒரு மாநிலத்தில் அதிக மக்கள் வாக்குகளைப் பெற்று வென்ற அதிபர் வேட்பாளர் அந்த மாநிலத்தின் அனைத்து வாக்காளர் குழு வாக்குகளையும் அள்ளிச் சென்றுவிடுவார். நெப்ராஸ்கா மற்றும் மெயின் மாநிலங்கள் மட்டும் இம்முறையை கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் மாவட்ட வாரியாகவே இந்திய முறையைப் போன்று தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமெரிக்கத் தேர்தல் முறையின் குறைகள்

• 2016ஆம் ஆண்டில் அதிபர் டொனால்ட் டிரம்பை (46%) விட ஹிலாரி கிளிண்டன் (48%) அமெரிக்க அளவில் அதிக சதவீத மக்கள் வாக்குகளை (popular vote) பெற்றாலும் முக்கிய மாநிலங்களின் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களுடைய வாக்குகளின் மூலம் டிரம்ப் அதிபரானார்.
• முந்தைய தேர்தல்களின் கணிப்புப்படி சில மாநிலங்களை பாதுகாப்பான மாநிலம் (safe state) என்று அழைக்கப்படுகிறது. அம்மாநிலங்கள் ஒரு கட்சி சார்ந்தே வாக்களிப்பதால் தேர்தல் நேரங்களில் முடிவை பெரிதும் தீர்மானிப்பதில்லை. மாறாக, Swing state என்று அழைக்கப்படும் மாநிலங்கள், சூழலுக்கு ஏற்றவாறு கட்சிகளுக்கு வாக்களிப்பதால் இம்மாநிலங்களே தேர்தல் முடிவு, இழுபறி நேரங்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன. இந்த swing state களை ஆராய்ந்து, இருபெரும் கட்சிகளும் தேர்தல் பரப்புரை நேரங்களில் மற்ற மாநிலங்களை விட இம்மாநிலங்களுக்கு அதிக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. அதனால் உலகளவில் அதிக கவனத்தை ஈர்க்கிறது. அவர்களின் வாக்குகளும் முக்கியத்துவம் பெறுகிறன.
• மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால், கலிபோர்னியாவில் ஒரு வேளை A என்ற கட்சி 51% வாக்குகளை பெறுகிறது என்றால், 55 உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்தே செல்லும் பொருட்டு மீதமுள்ள 49% மக்கள் சிறுபான்மை கட்சிக்கு வாக்களித்தும் அதற்கு பிரதிநிதித்துவமோ அல்லது முக்கியத்துவமோ இல்லாமல் போய்விடுகிறது.

அமெரிக்கத் தேர்தல் முறையின் நிறைகள்

• அமெரிக்காவின் மொத்த வாக்குகளில், 50% மேல் வாக்குகளை பெற்றால் அதிபராகலாம் என்ற முறை (Popular vote system) இருந்தால் நியூ யார்க் போன்ற நகர வாக்காளர் தொகையைக் கொண்டே எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றுவிடும். கிராமபுர மக்கள் புறக்கணிக்கப்படுவர். இப்போதுள்ள அமெரிக்கத் தேர்தல் முறையால் சிறு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
• மாநில வாரியாக வாக்காளர் குழு முறையை (Electoral College voting system) விடுத்து மொத்த அமெரிக்காவில் பெரும்பான்மை வாக்கு முறையை (Popular vote system) கடைபிடித்தால், அதாவது மக்களே நேரடியாக தலைவருக்கு வாக்களித்தால் ஏதேனும் தேர்தல் எண்ணிக்கையில் குழப்பம் வரும் போது ஒரு மாநிலத்தை பாதிக்காமல் முழு நாட்டையே பாதிக்கும்.
    உலகிலேயே பழமையான மக்களாட்சி நாடான அமெரிக்காவின் தேர்தலின் விளைவு நம் கிராமங்களில் கூட எதிரொலிக்கலாம் . அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியே அதற்குக் காரணம். இனி வரும் காலங்களில் இந்தியத் தேர்தலும் உலகளவில் பேசப்படும் என்பதை நம் பொருளாதார மற்றும் அரசரீதியான உறவுகளே முடிவு செய்யும்.

***

தெளிவுறுவோம்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

வாக்காளர் குழு உறுப்பினர்கள்’, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல
இந்தியாவைப்போல் அமெரிக்காவிலும் Senate எனப்படும் மேலவை, House of Representatives எனப்படும் கீழவை ஆகியவை உள்ளன. மேலவையில், மாநிலத்துக்கு இரண்டு செனட்டர்களாக மொத்தம் 100 உறுப்பினர்களும், கீழவையில், மக்கள்தொகையின் அடிப்படையில் 435 உறுப்பினர்களையும் உள்ளடக்கி, மொத்தமாக 535 உறுப்பினர்களைக் கொண்டது அமெரிக்க நாடாளுமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களே, நாட்டின் சட்ட திட்ட உருவாக்கங்களில் ஈடுபடுபவர்கள். தலைநகரான வாஷிங்டன் டிசிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் யாரும் இல்லை! ஆனால், அங்கு வாக்காளர் குழு உறுப்பினர்கள் உண்டு!

கணக்கு: 535 + 3 = 538
மேலே கூறிய 535 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஈடாகவும், வாஷிங்டன் டிசிக்குத் தனியாக அளிக்கப்பட்டுள்ள 3 வாக்காளர் குழு உறுப்பினருமாக, மொத்தம் 538 உறுப்பினர்களைக் கொண்டதே அதிபரை மறைமுகமாத் தேர்ந்தெடுக்கும் ‘எலக்டோரல் காலேஜ்’. இவர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களைப்போல் அல்லாமல், ‘வாக்காளர் குழு உறுப்பினர்கள்’ (Electoral College members), சட்டம் இயற்றுவதிலோ, நிர்வாகத்திலோ பங்கேற்பதில்லை. தேர்தல் முடிந்ததும், அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே இவர்களது வேலை!

 ***

எனது பிறந்தநாள்

மானுடம் சுரேஷ்செங்கப்படுத்தான்காடு

நான் பிறந்த பொழுது 
குணமில்லை 
மனமில்லை
இன்ப-துன்பமில்லை
காண்பது யாவையும் மகிழ்வையே ஊட்டின
அசைவுகள் யாவும் அவ்வாறே
எனினும் தாயின் சிறு பிராயத்தில் கிட்டிய 
கனவு
மகிழ்ச்சி 
ஈடுபாடு 
போன்ற பல சுவைகளை இழந்து 
வயது வளர்ந்து வருகிறது
பின்னே செல்ல வழியில்லை
ஏனெனில் இது ஒரு வழிப்பாதை
நினைவு மட்டுமே நினைவு பிழைத்திருக்கும் வரை நிச்சயமாகத் தொடரும்
இப்பிறந்த நாளில் ஒரு வெறுமையுடன் பழையதை அசைபோடுகிறேன்
எனது ஆயுளில் இன்னும் ஓராண்டு கழித்து விட்டதென்று
"மனமே நான் உன்னை மறந்தாலும் 
நீ என்னை மறவாதே".
நன்றி

***

ஆலத்தூராரின் அறத்து ஆறு களஞ்சியம்

கல்விப் பலன்

ஆலத்தூர் சி. அ. சாமி, வடக்குத் தெரு, ஆலத்தூர்

தமிழர்களின் எண்ணம் என்னவென்றால், படித்தாலும், படிக்காமல் இருந்தாலும், வெளிநாட்டிற்குச் சென்று நன்றாக சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றனர். இது போன்று தவறான எண்ணத்தினை மாற்ற வேண்டும். ஏனெனில், கிராமத்தில் விவசாயம் செய்வதற்கும் படித்திருந்தால் தான் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்து நல்ல வருமானத்தினைப் பெறமுடியும்.

நாம் பழமொழி கேள்விப்பட்டிருக்கின்றோம்.

"பள்ளிக்கல்வி புள்ளிக்கு உதவாது, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது"

நாம் பள்ளியில் படித்த படிப்பினை வகுப்பறையில் தேர்வில் எழுதியது மறந்து விடாமல், நம் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்க வேண்டும்.

நாம் தொழிற்கல்வியை முடித்து விட்டாலும், வாழ்நாள் முழுவதும் அறம் சார்ந்த நூல்களைத் தொடர்ந்து பயின்று கொண்டு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் நாம் ஒற்றுமையாகவும், அறவழியிலும் பண்பாடுடன் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடியும்.

நல்ல புத்தகங்களைப் படித்து, அதனை நம்முடைய நண்பனாக ஆக்கிக் கொண்டால், அது நமக்கு இளமையில் வழிகாட்டியாகவும், முதுமையில் பொழுது போக்கியாகவும், தனிமையில் நல்ல துணையாகவும் அமையும்.

"கல்வி ஒழுக்கத்தினை அளிக்கும், மனவலிமை தரும், அறிவை வளர்க்கும், மற்றும் ஒருவனைத் தன்னம்பிக்கையுடன் இருக்கச் செய்யும்" - திரு. விவேகனந்தர்.  "படிப்பு வளருது, பாவம் தொலையுது" - பாரதியார்.

“அறிவே ஆனந்தம், அறிவே ஆணிவேர் அதுவே சக்தியும்........”

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!”

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” - புறநானூறு

                என் முதன்மையான கடமை பெற்று வளர்த்து வெளியே அனுப்புதல். தந்தையின் கடமையோ சான்றோனாக ஆக்குதல். ஆம், அம்மாக்கள்தான் பெற்ற பிள்ளைகளை 20 வயது வரை நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி அன்பும், பண்பும், பாசமும் உள்ளவர்களாக  வளர்க்க வேண்டும்.

          கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!

***

சிந்தையள்ளும் வண்ணத்துப்பூச்சி!

பட்டுக்கோட்டை கவிப்பிரியன், மன்னங்காடு மேற்கு

வண்ணங்கள் சிந்தையள்ளும் வண்ணத்துப்பூச்சி! - இயற்கை

வரைந்த உயிர் ஓவியங்கள்

வண்ணத்துப்பூச்சி!

வகைகளோ இருபதாயிரம்

வண்ணத்துப்பூச்சி!

வரலாறு ஐந்து கோடி கொண்ட

வண்ணத்துப்பூச்சி!

பப்புவா நியுகினி நாட்டு

வண்ணத்துப்பூச்சி-உலகின்ஆக

மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி!-அதுவே

அரசி அலெக்ஸ்சாண்ரியா

வண்ணத்துப்பூச்சி!

உலகின் மிகச் சிறிய

வண்ணத்துப்பூச்சி-அது

அமெரிக்க கண்டமதின்

வண்ணத்துப்பூச்சி!

பட்டுப்பூச்சி அக்காவோ வண்ணத்துப்பூச்சி!

பட்டை விஞ்சும் அழகு கொண்ட வண்ணத்துப்பூச்சி !

எத்தனையோ மலரின்

தேனை உண்டு வாழ்ந்திடும்!

எனினும் அத்தனை அழகினையும் இழந்து

மாண்டிடும்!

முட்டை

கம்பளி  கூட்டுப் புழு பருவம் கண்டிடும்

 

முடிந்த மட்டும் மகரந்த

தூள் சுமந்து தொண்டு செய்திடும்!

கண்ணுக்கு தெரியாமல்

விவசாய உதவிபுரிந்திடும்!

குழந்தைகட்கும் பெரியவர்க்கும் மகிழ்ச்சி

தந்திடும்!

கூட்டமாக கூடி வந்தால்

உள்ளம் துள்ளிடும்!

சிறுவயது நினைவலைகள் மின்னி வந்திடும்!-இந்த

பட்டாம் பூச்சியழகை எந்த

பறவை மிஞ்சிடும்!

 

***

கற்போம்...!

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

செதுக்கப்பட்ட துகள்களே! உங்களால்தான்

கற்கள் சிலைகளாக உயிர் பெறுகின்றன!

கழிக்கப்பட்ட எண்களே! உங்களால்தான்

விடைகள் கண்டு வியப்படைய முடிகின்றன!

ஒதுக்கப்பட்ட சாக்கடைகளே! உங்களால்தான்

எங்கள் இல்லங்கள் மணம் பெறுகின்றன!

நிந்திக்கப்பட்ட வார்த்தைகளே!  உங்களால்தான்

தன்மானம் தலை நிமிர முடிகிறது!

ஒடுக்கப்பட்ட மக்களே!  உங்களால்தான்

புரட்சிகள் வெடித்து புதுமைகள் காண முடிகின்றன!

இறந்து போன காலங்களே! உங்களால்தான்

நிகழ்காலங்களில் அனுபவங்கள் வாழ்கின்றன!

உதிர்ந்து போன பூக்களே! உங்களால்தான்

காய்கள் கனிகளாகி விதைகளாகின்றன!

விலக்கப்பட்ட வாசகங்களே! உங்களால்தான்

கவிதைகள் முழுமை அடைகின்றன!

***

குறளின் குரல் 5

வாழ்க்கையே தவம்

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

மனித வாழ்க்கையைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவதாக, இப்படித்தான் வாழவேண்டும் என எல்லைக் கோட்டிற்குள் வாழ்பவர்கள். இரண்டாவது ரகம், எப்படியும் வாழலாம் என வாழ்பவர்கள். முதல் ரகம் பிறருக்காக துன்பத்தை ஏற்றுக் கொள்வார்கள். இரண்டாவது வகையினர் தானும் துன்பப்பட்டு, பிறரையும் துன்பத்தில் மூழ்க வைப்பார்கள்.

                எவருமே இன்ப துன்பங்களுக்கு ஆட்படாமல் வாழ்வதில்லை. முப்பது வருடம் வாழ்ந்தாரும் இல்லை; முப்பது வருடம் கெட்டாரும் இல்லைஎன்பது மூத்தோர் வாக்கு. இதன் மூலம் சகல செல்வம், செல்வாக்குடன் வாழ்பவர்களாகட்டும், மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர்களாகட்டும், எதுவும் நிரந்தரமில்லை! என சுருங்கக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த வாழ்க்கையைச் செவ்வனே வாழ்கிறோமா, என்பதே சிறந்த வாழ்க்கை!

                எல்லா வசதிகளுடனும் வாழ்பவர்களுக்கு மெத்தையில் படுத்தும் உறக்கம் வராது. இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி வாடும் ஏழை, உழைத்த களைப்பில் நிம்மதியாக உறங்குவான்.

                கொங்கனவ முனிவர் எனும் தவ சிரேஷ்டர், ஒரு மலையில் அமர்ந்து தவம் புரிகிறார். தனது தவம் பூர்த்தியான நிலையில், தவத்தைச் சோதித்துப் பார்க்க எண்ணுகிறார். தலைக்கு மேலே பறந்து சென்று கொண்டிருந்த கொக்கை தனது பார்வையாலேயே எரிக்க, கொக்கு எரிந்து சாம்பலாகி விழுகிறது!

                உடனே தவ ஆவல் மேலோங்க... தவத்தை மேலும் பரிசோதிக்க... அருகிலிருந்த ஊருக்குள் செல்கிறார். ஒரு வீட்டின் முன் நின்று யாசகம் கேட்கிறார். வீட்டிலிருந்த பெண், தான் கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருப்பதாகவும், அதனால் சிறிது நேரம் பொறுத்தருளுமாறு வேண்டுகிறாள். முனிவருக்கு வந்ததே கோபம்! தனக்கு முதல் மரியாதை கிடைக்கவில்லையே என உடனே பார்வையாலேயே அவளை எரிக்க முற்படுகிறார்!

                அந்தப் பெண் சிரித்து... கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா?’ என்கிறாள். முனிவருக்கோ இரட்டை அதிர்ச்சி! தன்னை பெயர் சொல்லி வேறு அழைக்கிறாள்! அத்துடன் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித்  தெரிந்தது?! என அவளை வினவுகிறார். இந்த ஊரின் கடைசியில் உள்ள கசாப்புக்காரரிடம் சென்று கேளுங்கள்!என்கிறாள்.

                முனிவரும் சளைக்காமல் அவனைத் தேடிச் செல்கிறார். அவனது கடையருகில் சென்றதும், அவரை உபசரித்த கசாப்புக்காரன் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி, ‘அவர்கள் உங்களை இங்கு அனுப்பி வைத்தார்களா?’ என்கிறான்! அந்தப் பெண்ணை சந்தித்தது இவனுக்கு எப்படித் தெரிந்தது? முனிவருக்கோ பேரதிர்ச்சி!

                ‘நான் செய்யும் தொழில் கசாப்புத் தொழில்...! ஆனால் கண் தெரியாத எனது பெற்றோர் இருவருக்கும் பணிவிடை செய்து விட்டுத்தான் எனது தொழிலை பக்தியுடன் செய்கிறேன். நீங்கள் இறைவனை அடைய தவம் புரிகிறீர்கள். நீங்கள் சந்தித்த பெண்மணியும் நானும் வாழ்க்கையைத் தவமாய்க் கருதுகிறோம்!எனக் கூறி விட்டு, அவனது தொழிலைக் கவனிக்கச் சென்று விட்டான்! இறைவனை நாடும் தவமே உயர்வு! ஆனால் எந்த தொழில் அல்லது வேலை செய்தாலும், அதனைச்  செம்மையுடன் செய்யின், அதுவே தவம்! என்கிறது மேற்கூறிய கதை!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.                                 குறள், இல்வாழ்க்கை 5:50

குரல் ஒலிக்கும்…

***

நான்கு மறைகள் (சதுர் வேதங்கள்)

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

ரிக்: தெய்வங்களின் ஆதரவைப் பெறுவதற்காக மந்திரங்களையும், பிரார்த்தனைகளையும் கொண்டது.

யஜூர்: யாகங்களில் சொல்ல வேண்டிய மந்திரங்களைக் குறிப்பிடுவதாக அமைந்தது.

சாமம்: இறைவனை இசையால் வழிபடுவது.

அதர்வனம்: பகைவர்களை வெற்றி கொள்ளவும், வரும் ஆபத்து மற்றும் அழிவுகளைத் தடுக்கவும், வேண்டியவர்களின் அன்பைப் பெறவும், துர்தேவதைகளை விரட்டவும், எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே உரைக்கவும் செய்கிறது.

***

நட்பு

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

ஒரு முட்டைக்குள்

இரண்டு கருவாகிய நாங்கள்...

அதில் ஒரு கரு பிரிந்தாலும்

உருவாகாது

நட்பு எனும் உயிர்...

***

முடிவு

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

                லேசாக அடித்த ஊதல் காற்று சற்று பலமாக வீசத் தொடங்கியதும் மாரி துண்டை இறுக்கமாகப் போர்த்திக் கொண்டார். மேகங்கள் வட கிழக்கிலிருந்து கரும்புகையாய் தெற்கு நோக்கி எங்கும் பரவ ஆரம்பித்தது. மழை நிச்சயம் என உறுதி செய்து கொண்டார். தனது தற்கொலை முயற்சி இதனால் நின்று விடப் போவது இல்லை..!

                அடுத்த அரை மணியில் பெருமழை பிடித்துக் கொண்டது. மாரியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. வயது எழுபதைக் கடந்து ஏழு ஆண்டுகளாகிறது. மனைவி  இறந்து இரண்டு வருடங்களாகிறது. கூலித் தொழிலாளி. பிள்ளைகள் கிடையாது. தனிமை வெறுமையைக் கொடுக்க, தற்கொலைதான்  தீர்வு என முடிவு செய்து பல நாட்களாகிறது. இன்று தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார்!

                மழை இரைந்து பெய்ய....காற்றும் சற்று பலமாய் வீசத் துவங்கியிருந்தது. அவரது கொட்டகையில் கட்டியிருந்த பசுங்கன்று கயிற்றை அறுத்துக் கொண்டு வாசலில் வந்து நின்றது.

                சின்னப்பயலே எங்கடா கெளம்பிட்டே?” மாரி கேட்கவும்...

 கன்று குடிசையின் எதிரே வந்து நின்று, ‘பே...’ என்றது. மாரி சாக்குப் பையை தலையில் வாகாய் மடித்துப் போட்டுக் கொண்டு வாசலில் இறங்கவும், அந்த மழையிலும் கன்று துள்ளிக் கொண்டு குடிசையின் பின்னே ஓடியது. அவர் மின்னல் ஒளியின் துணையுடன் அதன் பின்னே சென்றார். வானம் குமுறிக் கொண்டு குடம் கொண்டு கொட்டுவது போல் மழை கொட்டத் துவங்கியது.

                கன்று அவரை அழைத்துச் செல்வது போல் வயற்காட்டுப்  பக்கமாய் ஓடியது... மாரி மேலே செல்லவும் இயலாமல், வீடு திரும்பவும் முடியாமல்... சிறிது நேரம் அப்படியே நின்றார். சாக்குப் பை முழுதுமாய்  நனைந்திருந்தது. குளிரில் நடுங்க ஆரம்பித்தார். தூரத்தில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் சத்தம் கேட்டது. எங்கிருந்தோ வந்து கொண்டிருந்த மழை நீர் காட்டாற்றையும் கடந்து பக்கத்திலிருந்த வயற் காட்டையெல்லாம் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

                மீண்டும் ஒரு மின்னல் வெட்டிய போதுதான் கவனித்தார். காட்டாற்றில் இரண்டு உருவங்கள் உருண்டு வந்தது தெளிவாகத் தெரிந்தது. தன்னையும் கன்றையும் மறந்தார். ஆற்றின் வலது புறமாய் ஓடினார். காட்டாற்றில் இறங்கினார். ஒரு பெண்ணும் பையனும் என யூகிக்க நேரமில்லை. வெள்ளத்தை எதிர்க்க இயலாமல் அதன் வழியிலேயே சென்று இருவரின் தலைமுடியையும் கொத்தாகப் பற்றினார். மாரிக்கு சிறு வயதிலிருந்தே வெள்ளம் பற்றிய அனுபவம் அதிகம். இருவரையும் கரை சேர்க்கும் பொருட்டு அவரது போராட்டம் சிறிது நேரமே நீடித்தது. இப்போது அவரது பிடியிலிருந்து இருவரும் நழுவ...

 மாரி தன் உயிரைக் காக்கும் பொருட்டுப் போராடத் துவங்கினார். ஆம்! அவர் தற்கொலை முயற்சியை மறந்திருந்தார்! கரையோரமாய் வெள்ளம் அவரை இழுத்துக் கொண்டு சென்றது. நன்கு வளர்ந்திருந்த நாணல்கள் அவரது கைக்கு அகப்பட அதனைப் பற்றிக் கொண்டார். வடக்கிலிருந்து வந்து கொண்டிருந்த வெள்ளம் அவரது கழுத்தைச் சுற்றிக் கொண்டு முட்களும், இலை தழைகளுமாய்ச் சென்று கொண்டிருந்தது.

                நாணலிலிருந்து அவரது பிடி நழுவ... வேறு ஏதேனும் தென்படுகிறதா எனக் கைகளால் அளைந்தார். வெள்ளம் அவரது போராட்டத்தைக் கவனியாமல் இழுத்துச் செல்லத் துவங்கி, அவரது நுரையீரலில் நீர் நிரம்ப வைத்துக்  கொண்டிருந்தது! மாரியின் உயிர் மரித்துக் கொண்டிருந்தது. 

***

தன்னம்பிக்கை

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

தாயின் கருவறையில்

நேற்று...

பள்ளியின்  கருவறையில்

இன்று...

சமூகமெனும் சமவெளியில்

நாளை...

தன்னம்பிக்கை எனும் திறவுகோலால்

உன்னைத் திறந்திடு... மனிதா!

உலகம் உன்னை வரவேற்கும்.

***

வியாபாரக் கல்வி

செல்வ அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

கல்வியைக் காசாக்கும் வஞ்சகர்கள்

அழியும் வரை

கண்கள் உறங்காது இறைவா!

கல்வியின் தரத்தைக் கூட்டி

கண்ணில் வழியும் குருதியைத்

துடைக்க வாராயோ இறைவா!

வியாபார நோக்கம் ஒழியும்

கல்விப் புரட்சி வெடிக்கட்டும்

கல்விக்கான விடியல் விடியும்வரை

காத்திருப்போம் .... காலம்

பதில் சொல்லும்.

***

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை                          குறள், வான்சிறப்பு 2:15

மழையின் சிறப்பு ஒருபக்கம் இருக்க, ஓரூரில் பெய்த மழையின் உண்மையான அளவைச் சொல்லி மழையைப் பாராட்டியவரும் உளரோ?

ஒருபுறம் அரசு வானிலை மையத்தின் பட்டும்படாத மழைக் கணிப்பு, மறுபுறம் எளிதாகக் கிடைக்கும் செயற்கைக் கோள்களின் வானிலைப் புள்ளி விவரங்கள், இன்னொருபுறம் அந்தப் புள்ளிவிவரங்கள் என்னவென்றே தெரியாமல், முற்றும்  புரிந்ததுபோல் சகட்டுமேனிக்குஆரூடம் கூறும் வெதர்மென்எனக் கூறிக்கொள்ளும் தனியார் வானிலைத் தீர்க்கதரிசிகள். இதுவெல்லாம் மழைவருவதற்குமுன் உள்ள கணிப்புகள். மழைப் பெய்து முடித்த பின்?

தூத்தல் (தூறல்), வாந்தோடிய (வழிந்தோடிய) மழை, ஒழவு மழை (உழவுக்கேற்ற மழை), பெருமழை, வெள்ளம் போன்றவைதான் மழைக்குப்பின் ஊரில் நாம் கேள்விப்படும் வார்த்தைகள். இன்னும் சிலர், ‘நம்மள மட்டும் ஒதுக்கிப்புட்டு சுத்தி எல்லா ஊர்லேயும் பேயிது’, ‘தொவரங்குறிச்சியில தூருன தூத்த நம்ம ஊருல இல்லய, ஏமாத்திப்புடுச்சுய்யா இந்த மானம், என்பர். சுருக்கமாகச் சொன்னால், வாரத்திற்கு ஒரு பெரிய மழையாகப் பெய்து, வான் நம்மைத் திருப்திப்படுத்த வில்லையென்றால், அதற்கு நன்றி நவில யாருமில்லை. தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் மழைமுகிலுக்கே என வான் உரக்கக் கூறுவதுதான் நாம் கேட்கும் இடிமுழக்கமோ

இவ்வாறாக மழைக்கு முன் கணிப்போருக்கும்,மழைக்குப் பின் வசைபாடுவோருக்கும் இடையில் நிற்கும் நம்மைப் போன்ற பெரும்பாலோர் ஓரிடத்தில் பெய்த உண்மையான மழையின் அளவுதான் என்ன என்றறிவது அவசியமாகின்றது. இக்கேள்விக்குப் பதில் வேண்டுமென்றால் மழையை அளவிடும் முறையை நாம் அறிந்திருக்க வேண்டும்.

மேட்டூரணையிலிருந்து காவிரியில் பாயும் நீரையும், கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் பாயும் நீரையும் கனஅடியில் கேள்விப்படுகிறோம். நமக்கெல்லாம் இப்போது பழகிப்போய், நம் ஊரின் பெரும்பாலோனோர் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் டாஸ்மாக்புட்டிப் பானங்களை மில்லி லிட்டரில் (மில்லி) எழுதக் காண்கிறோம். இவையிரண்டும் திரவத்தின் அளவைக் குறிக்க உதவும் கொள்ளளவு (முகத்தலளவு) முறை. எனினும் மழைநீர் என்பது திரவமாயினும், நீரை அளக்க நமக்கு நீட்டல் அளவைத் தேவைப்படுகின்றது. மேட்டூர் அணையின் நீர் மட்டத்தை 115 அடி என்று நீட்டல் அளவையில் கூறுவதைக் கருத்தில் கொள்ளவும். ஆயினும், அணை நீரின் உயரத்தைக் கொண்டு மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் மொத்த நீரின் இருப்பு எவ்வளவு என்று நேரடியாகக் கணிக்க முடியாது. இங்குதான் டிஎம்சிஎன்னும் தொடர்புடைய வேறொரு அளவீடு பயன்படுகிறது. கர்னாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை நீதிமன்றம் டிஎம்சியில்தான் கூறியதென்பதை நினைவுகூர்க.  [நீர் மற்றும் மிமீ, செமீ, கனஅடி, கனமீட்டர், டிஎம்சி போன்றவற்றிற்கும் இடையிலான தொடர்பை, தேவைப்படின் பின்னர் விளக்குவோம்].  

நீட்டல் அளவையான மில்லி மீட்டர், சென்டி மீட்டர், இன்ச், அடி, மீட்டர் போன்றவைதான் உலகம் முழுதும் மழையை அளக்கப் பயன்படுத்தப் படுகிறது.குளிர்ப் பகுதிகளில் வானிலிருந்து திடமாக விழுந்து சேர்ந்த பனிப் படிகங்களையும் இம்முறையிலேயே அளவிடுகிறார்கள்.

நம் ஊரைப் பொறுத்தவரை, ஓரிடத்தில் மேகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் வீழ்ந்து சேர்ந்த நீரின் உயரத்தை அளக்க வேண்டும். இது கடினமானதல்ல. வீட்டில் கிடைக்கும் தக்க கருவிகளின் மூலம் இதைச் செய்துவிடலாம். ஓரிடத்தில் வீழ்ந்து பூமியில் உறிஞ்சப்படாத நிலையில் 24 மணி நேரத்தில் தேங்கிய நீரின் உயரமே, அவ்விடத்தின் அன்றைய மழையின் அளவாகும். இதையே வானிலை நிலையங்கள் அளந்து, எடுத்துக்காட்டாகமதுக்கூரில் 10 மிமீ (1 செமீ), அதிராம்பட்டினத்தில் 16 மிமீ (1.6 செமீ) என அடுத்த நாள் அறிவிக்கின்றன. இவ்வளவு எளிதானதென்றால், இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ள மன்னங்காடு கிராமத்தில் எவ்வளவு மழை பெய்திருக்கும் என அறிய ஆவலாக இருக்குமல்லவா

ஆம். இந்த ஆவலின் விளைவாக பல ஆண்டுகளாக மன்னங்காடு கிராமத்தில், வானிலைப் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பாதுகாத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதன்முதலில், 2011 அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாளிலிருந்து தக்க கருவிகளின் மூலம் முறையாக அளவுகள் எடுக்கப்பட்டன. அம்முயற்சியில் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அக்டோபர் 2011லிருந்து ஜூன் 2012 வரையிலான மேற்கூறிய முழுமையான வானிலை அளவீடுகள் சேகரிக்கப்பட்டு அந்தந்த தேதியிலேயே, மன்னங்காடு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதன்பின் சிறிது இடைவெளிக்குப்பின் 2012 அக்டோபரிலிருந்து இன்றுவரை அவ்வப்போது சேகரிக்கப்பட்ட ஊரின் வானிலை  விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.  

கிட்டத்தட்ட ஓராண்டாக கோவிட்-19 சூழ்நிலை மனிதரை அடக்கி உட்கார வைத்துவிட்ட நிலையிலும், மன்னங்காடு ஊரின் மழை விவரங்களை விடாது சேகரிக்க முனைந்தோம். இந்த முயற்சியில் முன்னின்று முழுப்பங்காற்றி தரமான புள்ளி விவரங்களை நண்பர் கோ. வெங்கடேஸ்வரன் சேகரித்து உதவியுள்ளார். ஜூலை 2020லிருந்து அவர் சேகரித்த மழை அளவுகள் அவ்வப்போது மன்னங்காடு இணைய தளத்தில் சேர்க்கப்பட்டு இப்போது நீண்ட பட்டியல் வடிவில் உருக்கொண்டிருக்கிறது. கீழே, 2020 கோடையிலிருந்து மாத வாரியான மழை விவரம் வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.

2011லிருந்து 2020வரையிலான ‘மன்னங்காடு வானிலை’ப் புள்ளி விவரங்கள் மன்னங்காடு இணைய தளத்தில் நீண்ட பட்டியல் வடிவில் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு: http://www.mannankadu.org/weather

2020ன் மழை அளவீடுகளைச் சேகரித்து அளித்து உதவிய கோ. வெங்கடேஸ்வரன், மன்னங்காடு.

Graph வரைபடம்: துரைசாமி நவநீதம், மன்னங்காடு. காட்டுமஞ்சரிக்காக உருவாக்கப்பட்டது.

குறளின் பொருள்:

பெய்யாமல் பொய்த்து வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; அவ்வாறு மழையில்லாமல் வளம் கெட்டுத் துன்புறுவோர்க்குத் துணையாய் நின்று காக்க வல்லதும் மழையே.

***

தெருநாயே!

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

நாய் நன்றியுள்ள விலங்குதான். நாம் அதற்கு உணவளித்துப் பராமரிப்பதால், அதற்கு நன்றியாக நம்மையே சுற்றிச் சுற்றி வந்து, நம் வீட்டைப் பாதுகாப்பதிலும் பங்கெடுக்கிறது. ஊரகப் பகுதிகளில் நாம் பொதுவாகக் காணும் இவ்வகை நாய்கள், இரசம், கருவாட்டுக் குழம்பென்று நாம் உண்ணும் உணவையே உட்கொள்கின்றன. மாறாக, நகர்ப் பகுதிகளில், செல்லநாய்களில் பெரும்பாலானவை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவதில்லை. ஆயினும், அவை வீட்டுணவுடன்  நாய்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்பு வகை உணவுகளையும் பெறுகின்றன. மூன்றாவது வகை நாய்கள், வீட்டிற்குள் பாதுகாப்பாகவும் இல்லாமல்,வெளியில் ஊரக நாய்களைப்போல் வீட்டுப் பாதுகாப்பிலும் ஈடுபடாமல், கிடைத்ததைத் தின்று, பொது மக்களிடம் தெருநாய்என்று பெயர் வாங்கிக் கொண்டு, தமக்கெனக் கிடைத்த, உருவாக்கிக் கொண்ட தெருவுலகத்திற்குள் சுதந்திரமாக மட்டுமின்றி, வெற்றிகரமாகவும் வலம் வருபவை.

விலங்குகளின் எல்லைப் பாதுகாப்பு முறை

நாய், நரி, புலி, சிங்கம் போன்றவை குறுநில ஆட்சியாளர்கள் (territorial) மட்டுமல்லாது, அக்குறுநிலத்தின் எல்லைப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து, ஆங்காங்கே தமது சிறுநீரால் எல்லைக் கற்களைஅவ்வப்போது ஊன்றிவிட்டுச் செல்லும் வகையைச் சேர்ந்தவை. இந்த எல்லைகளை அந்தந்த இனத்தைச் சேர்ந்த, அல்லது, சமயத்தில் பிற உயிரினங்கள் மீறும்போதுதான் அவைகளுக்குள் சண்டைகள் மூளுகின்றன (territorial conflict). எல்லைகளைப் பாதுகாப்பதன் அடிப்படைக் காரணம், அவ்வெல்லைப் பகுதிக்குள் கிடைக்கும் உணவு அனைத்தையும் தமதாக்கிக் கொள்வதற்கே (food security). இக்காரணத்தாலேயே ஊரக நாய்கள், வீட்டைச்  சுற்றியுள்ள வேலிகளை நோட்டம் விட்டுக்கொண்டும், ஆங்காங்கே அவ்வப்போது, எல்லைக் கற்களை ஊன்றிக்கொண்டும், சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

தெருநாய்களின் வாழ்க்கை

அப்படியென்றால், தெருநாய்களின் நிலை? பரிதாபமானதுதான் என நாம் நினைத்தால், அது ஒரு மேலோட்டமான, சாமானியரியன் கருத்தெனத் தெரியும். தெருநாய்களைப் பற்றி நமக்குத் தெரியாததை அறிந்து வைத்திருக்கும் நாய்மேதைகளும் உள்ளனரென்றால், அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்று கேட்டு விடலாமே. பிடிக்கவில்லை என்றால் தெருநாயேஎன்று அம்மேதைகளைத் திட்டிவிட்டுப் போய்விடலாமே.

சென்னை, மதுரையைப் போல் கொல்கத்தா பெருநகரிலும் தெருநாய்களுக்குப் பஞ்சமில்லை. அதுபோல் நாய்க்கடிக்கும் பஞ்சமில்லை! அது ஒருபுறமிருக்கட்டும். இவ்வளவு தெருநாய்களுக்கான அன்றாட உணவு, அவைகளுக்குள் போட்டி, ஒண்டுவதற்கு இடம், இனப்பெருக்கம், குட்டிகளைப் பேணி வளர்ப்பது, தனிமனிதர் ஏற்படுத்தும் இடர், சாலை விபத்து, நகர நிர்வாகம் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் போன்ற அன்றாடப் பிரச்சினைகளை அவை எவ்வாறு சமாளிக்கின்றன?

பாலூட்டுதல், உணவுப் பங்கீடு

இவ்வகையான பன்முனைப் பிரச்சினைகளுள், தெருநாய்கள் தங்கள் குட்டிகளைப் பாதுகாத்து வளர்க்கும் அணுகுமுறைகளையும், கிடைக்கும் உணவினைக் குட்டிகளுடன் பங்கிட்டுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றைச் சமாளிக்கும் திறன்களையும் கொல்கத்தா அறிவியலார் நுணுகி ஆராய்ந்துள்ளனர்.

புதிதாக ஈன்ற குட்டிகள் பால்குடிக்கும்  திறனை ஆய்வு செய்ததில், [1] குட்டிகள் கேட்டுக் கொடுக்காமல், தாய்நாய் தானாகப் பால் கொடுக்க முன்வந்தால், 3லிருந்து  6 வாரக் குட்டிகளுக்கு நீண்ட நேரமும், 7 வாரத்திற்கு மேற்பட்ட குட்டிகளுக்குத் திடீரென நேரத்தை வெகுவாகக் குறைத்தும், புறக்கணித்தும், குட்டிகள் தன்னிச்சையாக வளரப் பாடம் புகட்டுகிறது என்றும், [2] தாய்நாய் தனக்கெனக் குட்டிகள் இருந்தும், பசியிலிருக்கும் மற்றொரு தெருநாயின் குட்டிகளுக்கு, ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்பாணியில் பாலூட்டுகிறது எனவும் அறியப்பட்டது.

மேலும், தன்நலத் தாய்நாய்கள், வெளியிலிருந்து கிடைத்த உணவில், தமக்கெனக் கணிசமான அளவை ஒதுக்கிக் கொண்டு, மீதியுள்ளதைத்தான் குட்டிகளுக்குத் தருமாம். அதேசமயத்தில், தன்நலம் பாரா தாய்நாய்கள், கிடைத்த உணவில் குட்டிகளுக்குக் கணிசமானதை ஒதுக்கிவிட்டு, மீதி கிடைப்பதைச் சாப்பிடுமாம்!    

பாட்டியின் அரவணைப்பு

நமது பாட்டிகள் நம்மைக் கருத்துடன் கவனிக்கிறார்கள் என்றால், தெருநாய்ப் பாட்டிகள் என்ன சும்மாவா? எடுத்துக்காட்டாக, ஒரு தெருநாய், குட்டிகளை ஈன்று வளர்க்கிறது (இது முதல் தலைமுறை நாய் [பாட்டி]). அதில் ஒரு குட்டி வளர்ந்து தானும் குட்டிகளை இடுகிறது (இவை மூன்றாம் தலைமுறைச் சிறுகுட்டிகள்) என வைத்துக் கொள்வோம். இந்நிலையில், குட்டிஈனும் பருவத்தில் இருப்பினும் பாட்டிநாய்க்குத் தனக்கெனச் சிறுகுட்டிகள் இல்லை. ஆகையால், பாட்டிநாய் தன் மகளின் புதிய குட்டிகளை வெகுவாகக் கவனிக்க ஆரம்பிக்கிறது. குட்டிகளின் இருப்பிடத்தைச் சுத்தம் செய்வது, உணவினைக் கொண்டுவந்து பேரக்குட்டிகளுக்குத் தருவது, தான் உண்ட உணவைக் கக்கிக் குட்டிகளுக்குத் தருவது, அரவணைத்துப் படுத்துக் குட்டிகளுக்கு உடற்சூடு தருவது, விளையாடுவது, பாதுகாப்பளிப்பது போன்றவை பாட்டியின் பொறுப்பான வேலை. இதுபோன்ற பல தெருநாய் வாழ்க்கை இரகசியங்களை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். 

எங்கே செல்லும் இந்தப் பாதை?

இந்தச் சாதாரணத் தெருநாய்களின் அன்றாடப் போராட்டமெல்லாம் உயிரிகள் காலூன்றப் போராடும் (Struggle for existence) கொள்கையின் ஓர் அங்கம் தானே? இந்தப் போராட்டம்தான் வல்லவைகளை நிலைத்து வாழவைத்து (Survival of the fittest), டார்வினின் பரிணாமத்தை உந்தி மேலெடுத்துச் சென்று, பரிணாமத்தின் பாதையை நிர்ணயிக்கிறது.

ஐந்தறிவு விலங்கென்று சற்றே நாம் இறக்கிக்கூறும் நாய்கள், ஆறாம் அறிவுக்குரிய செயல்களைச் செய்து வாழ்க்கைப் போராட்டக் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன என்றால், ஆறாம் அறிவுள்ளதாகக் கூறிக்கொள்ளும் நமக்கு அவ்வறிவு வேறொரு உயர்நிலைச் செயலுக்காகப் படைக்கப் பட்டுள்ளதோ? அல்லது, ஒருவேளை ஆறாம் அறிவென்பதே வெறும் மாயைதானோ?

***

நாய், பூனை வாழ்க்கைமுறை ஆராய்ச்சிகள், வளர்ந்த நாடுகள் பலவற்றில் நடைபெறுகின்றன. இந்தியாவில் இதுபோன்ற ஆராய்ச்சிகள் மிகக் குறைவு. காரணம், நிதிப் பற்றாக்குறை மட்டுமல்லாது, இதுவெல்லாம் ஒரு ஆராய்ச்சியா?எனும் பொதுமக்கள் உட்பட அறிஞர்களிடேயும் உள்ள இளக்காரப் பார்வையே என்கிறார், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக (IISc) அறிவியலார், முனைவர் இராகவேந்திர கடாக்கர்.

ஒரு தாய்நாய் தன் குட்டிகளையும், வெளியில் சென்றுவிட்ட பிற தெருநாய்களின் குட்டிகளையும் கண்காணிக்கிறது.

தெருநாய்களின் வாழ்கையை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற மாணவி Manabi Paul மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர் முனைவர் Anindita Bhadra, IISER, Kolkata.

Images, and Excerpted from Raghavendra Gadagkar, How to design experiments in animal behaviour: 15. Why do parents and offspring quarrel? Resonance Vol. 25:1595, 2020. 

***

பெயரில் என்ன இருக்கிறது?

மன்னங்காடு வண்ணத்துப் பூச்சி உயிர்ப்பன்மயம்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

நடிப்புச் சுதேசிகள்

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடீ!

உப்பென்றும் சீனியென்றும் உள்நாட்டுச்  சேலையென்றும்

செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடீ!’ 

கூட்டத்துடன் சேர்ந்து கோஷம் போடும் செயல்திறனற்ற, உதட்டளவில் மட்டும் உள்ளூர்ப் பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்களை, பாரதி அன்று, நடிப்புச் சுதேசிகள்என்றான்.

இன்று, நம்மில் பலரும் திராவிடம், தமிழகம், தமிழர், தமிழ், தாய்மொழி,தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்று பழம்பெருமை பேசும் வாய்ச்சொல் வீரராய் இருந்துகொண்டு நம் குழந்தை, பேரப்பிள்ளைகட்கு வடமொழி, இந்தியில் பெயர்களைத் தேடிப்பிடித்துச் சூட்டுகின்றோம்.

எத்தனை வடநாட்டார், தென்னிந்தியப் பெயர்களைத் தம் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள்? பலநூறு வருடங்களாக வடக்கில் புழங்கிப் புழங்கி அலுத்துப்போன பழம்பெயர்கள், இன்றைய வாளொடு முன்தோன்றிய மூத்தகுடித் தமிழர் வாரிசுகளுக்கு மாடர்ன்’  பெயர்களாகத் தோன்றுகின்றன! இது அறிந்தமையா, இல்லை அறியாமையா! இவர்களும், செப்பித் திரியும், ஆனால் செய்வதறியா நவீன நடிப்புச் சுதேசிகளோ?

வேறு யாரும் கண்டுபிடிக்காத சிறந்தபெயரை குழந்தைக்குக் கண்டு விட்டதாக இந்தச் சுதேசிகள் மகிழ்ந்து கொண்டிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். பழுப்பு வசீகரன்’, ‘மஞ்சள் அழகி என யாரோ, எங்கோ, யாருக்கோ தமிழ்ப் பெயர்களைக் கண்டெடுத்துச் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். யாரிந்தச் செயல் வீரர்கள்? யாருக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் இவை?

வண்ணத்துப் பூச்சி உயிர்ப்பன்மயம் (Butterfly biodiversity)

உயிர்ப்பன்மயம் என்பது நுண்ணுயிரிகள், காளான், பாசி, புல், பூண்டு, கொடி, புதர், மரம், புழு, பூச்சி, நீர்நிலை உயிரினங்கள், ஊர்வன, பறவை, பாலூட்டி போன்ற ஓர் இடத்தில் காணப்படும் பல்வேறு உயிரின வகைகளின் தொகுப்பைக் குறிப்பதாகும். மேலும், ஓரிடத்தின் உயிர்ப்பன்மயம் அவ்விடத்தின் இயற்கை வளத்தையும் பறைசாற்றுகிறது. மேலோட்டமான ஆய்வின் மூலம் மன்னங்காடு கிராமம் சிறந்த உயிர்ப்பன்மயத்தைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஊரின் மொத்த உயிர்ப்பன்மயத்தின் (Biodiversity) ஓர் அங்கம்தான் வண்ணத்துப் பூச்சிகளின் பன்மயம்.

உலகில்  சுமார் 18,000 வகை வண்ணத்துப் பூச்சிச் சிற்றினங்கள் (Species) உள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவை 6 குடும்பங்களின் கீழ்  (Family), பெரும்பிரிவுகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள், சுமார் 1,800க்கும் மேற்பட்ட சிற்றின வகை இந்தியாவில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிச் சிற்றினங்கள், தமிழகத்தில் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகளவில், மொத்த வண்ணத்துப் பூச்சி இனங்களில் வரியன்-வசீகரன்குடும்பவகை (Nymphalidae) மட்டும், மூன்றில் ஒரு பங்கு (30%) எனப் பெரும்பங்கு வகிக்கிறது. எனினும், தமிழகத்தின் 300 இனங்களில் நீலன்குடும்பவகை (Lycaenidae) பெரும்பான்மையானது என்றும், 90க்கும் மேற்பட்ட நீலன் சிற்றின வகைகள் தமிழகத்தில் உள்ளன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மன்னங்காடு வண்ணத்துப் பூச்சி உயிர்ப்பன்மயம்

கடந்த சில ஆண்டுகளாக, ஊரின் சில பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகள் கவனிக்கப்பட்டு, அவற்றை முறையாக அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலத்திய ஆய்வு முறையில், தக்க கருவிகளின் மூலம் வண்ணத்துப் பூச்சிகள் பிடிக்கப்பட்டு நிறம், நீல, அகல அளவுகள் போன்ற குறிப்புகள் எடுத்தபின், சில சமயங்களில் இறக்கைகள் மெழுகுக் காகிதத்தில் ஒத்தி பிரதியெடுக்கப்பட்டு, பின் பூச்சிகள் விடுவிக்கப்பட்டன. அப்படியல்லாது, இக்காலத்தில் மேலோட்டமான ஆய்விற்கு, ஒளிப்பட முறையே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறான ஒளிப்பட முறையே, மன்னங்காடு வண்ணத்துப் பூச்சி உயிர்ப்பன்மய களஆய்விலும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான எளிய ஆய்வு அணுகுமுறையால் வண்ணத்துப் பூச்சி உட்பட பிற எந்த உயிரினமும் துன்புறுத்தப் படுவதில்லை.

மன்னங்காடு கிராமத்தின் பகுதிகளான கன்னுத்தோப்பு, கீழக்காடு, சருவனோடை, அடம்புளி ஓடை (Includes a sprawling coconut grove, residential areas, banks of two long freshwater streams) போன்ற இடங்கள் அவ்வப்போது வண்ணத்துப் பூச்சிகளுக்காக கண்காணிக்கப்பட்டன. உள்ளூரில், பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், வல்லுனர் நூல்களின் உதவியுடனும், பிற தரமான அதிகாரபூர்வ இணையத் தரவுகளின் அடிப்படையிலும் அடையாளம் காணப்பட்டன.

இதுவரை 40 வண்ணத்துப் பூச்சிச் சிற்றினங்கள், ஊரின் பல்வேறு இடங்களில் கண்டு அடையாளம் காணப்பட்டு, அவைகளுக்கான பொதுப்பெயர், அறிவியல் பெயர்களுடன், வண்ணத்துப் பூச்சியியல் அறிஞர்கள் இட்ட தமிழ்ப் பெயர்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இப்பட்டியலில் நீல வசீகரன், புங்க நீலன், அந்திச் சிறகன், எலுமிச்சை அழகி போன்றோர் யாரெனக் காணலாம். மன்னங்காட்டில் காணப்பட்ட வண்ணத்துப் பூச்சிகளின் படங்கள், ஊரில் அவை காணப்பட்ட பகுதிகள் போன்ற தகவல்கள் பட்டியலின் அடியில் உள்ள இணைய முகவரியில் தரப்பட்டுள்ளது.

Butterflies of Mannankadu - மன்னங்காடு வண்ணத்துப் பூச்சிகள்

.

Common Name

Scientific Name

Vernacular -Tamil - தமிழ்

1

Angled Castor

Ariadne ariadne indica

வரி ஆமணக்குச் சிறகன்

2

Black Rajah

Charaxes solon

கறுப்புச் சிறகன்

3

Blue Mormon

Papilio polymnestor

நீல அழகி

4

Chestnut Bob

Lambrix salsala

கருஞ்சிவப்புத் தாவி

5

Common Cerulean

Jamides celeno

புங்க நீலன்

6

Common Crow

Euploea core

வெண்புள்ளிக் கருப்பன்

7

Common Evening Brown

Melanitis leda

அந்திச் சிறகன்

8

Common Grass Yellow

Eurema hecabe hecabe

-

9

Common Gull

Cepora nerissa

ஆதொண்டை வெள்ளையன்

10

Common Jay

Graphium doson

நாட்டு நீல அழகி

11

Common Jezebel

Delias eucharis

மஞ்சள் அழகி

12

Common Mormon

Papilio polytes

கறிவேப்பிலை அழகி

13

Common Pierrot

Castalius rosimon

கரும்புள்ளி நீலன்

14

Common Rose

Pachliopta aristolochiae

ரோஜா அழகி

15

Common Sailor

Neptis hylas

வெண்கருப்புச் சிறகன்

16

Common Silverline

Spindasis vulcanus

வெள்ளிக் கம்பிக்காரி

17

Common Wanderer

Pareronia valeria

நாடோடி

18

Crimson Rose

Pachliopta hector

சிவப்பு உடல் அழகி

19

Crimson Tip

Colotis danae

கருஞ்சிவப்புநுனிச் சிறகன்

20

Dark Evening Brown

Melanitis phedima

-

21

Eggfly, Danaid

Hypolimnas misippus

பசலைச் சிறகன்

22

Eggfly, Great

Hypolimnas bolina

பெரிய பசலைச்சிறகன்

23

Grass Blue, Lesser

Zizina otis

புல் நீலன்

24

Grass Blue, Dark

Zizeeria karsandra

கரும்புல் நீலன்

25

Indian Pioneer

Belenois aurota

கொக்கிக்குறி வெள்ளையன்

26

Indian Skipper

Spialia galba

நரைச்சிறகுத் தாவி

27

Lime Butterfly (Citrus Swallowtail)

Papilio demoleus

எலுமிச்சை அழகி

28

Mottled Emigrant

Catopsilia pyranthe

அவரை வெள்ளையன்

29

Pansy, Blue

Junonia orithya

நீல வசீகரன்

30

Pansy, Chocolate

Junonia iphita

சாக்லெட் வசீகரன்

31

Pansy, Lemon

Junonia lemonias

பழுப்பு வசீகரன்

32

Pansy, Yellow

Junonia hierta

மஞ்சள் வசீகரன்

33

Swift, Small Branded

Pelopidas mathias

வயல் துள்ளி

34

Swift, Parnara

Parnara spp.

-

35

Tawny Coster

Acraea violae

செவ்வந்திச் சிறகன்

36

Three-Spot Grass Yellow

Eurema blanda

முப்புள்ளி மஞ்சள் புல்வெளியாள்

37

Tiger, Blue

Tirumala limniace

நீல வரியன்

38

Tiger, Dark Blue

Tirumala septentrionis

கருநீல வரியன்

39

Tiger, Plain

Danaus chrysippus

வெந்தய வரியன்

40

Tiger, Striped

Danaus genutia

ஆரஞ்சு வரியன்

Observations as of Feb 2020. Images of butterflies observed in Mannankadu are available at: http://www.mannankadu.org/nature/butterflies


***

மன்னங்காடு கபடித் தொடர்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு மூன்றாம் ஆண்டு சுழல் கோப்பைப் போட்டி

து. வரதராஜன், மன்னங்காடு

பெருந்தலைவர் காமராஜர் நினைவு மூன்றாம் ஆண்டு சுழல் கோப்பைக்கான கபடித் தொடர் போட்டி, கடந்த நவம்பர் 7, 8 தேதிகளில், பட்டுக்கோட்டை வட்டம், மன்னங்காடு கிராமத்தில் நன்முறையில் நடந்தேறியது. பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இந்திரா காந்தி யூத் பவுண்டேசன்அறக்கட்டளையின் சார்பில், அதன் தலைவர் திரு. கே. மகேந்திரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நவம்பர் 7, 2020 சனிக்கிழமை மதியம் 1 மணி அளவில், கடந்த ஆண்டு முதல் பரிசு வென்ற, அருகில் உள்ள வேப்பங்குளத்திலிருந்து, சுழல் கோப்பையைக் கபடி அணி வீரர்களும், கபடி ரசிகர்களும் மற்றும் பொதுமக்களும் இருசக்கர வண்டிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கபடித் தொடர் போட்டியைத் தொடங்கினர்.

இந்தக் கபடிப் போட்டிகளுக்கு பட்டுக்கோட்டை வட்டத்திலிருந்து 42 அணிகள் பங்கு பெற்றன. சிறப்பு அழைப்பின் பேரில் நான்கு பெண்கள் அணிகளும் பங்கு பெற்றன.

இயக்குனர் சுசீந்திரன் அவர்கள், காணொளி வாயிலாகக் கபடிப் போட்டியினைத் தொடங்கி வைத்தார். திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள், பெண்கள் அணி விளையாட்டினைக் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சிக்கு மன்னங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள ஊர்களின் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வருகை தந்திருந்தனர். இயக்குனர் சந்தான மூர்த்தி அவர்களும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கெடுத்தார். காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் கபடிப் போட்டியின் தொடக்க உரையில் விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தினைக் கூறி இளைஞர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

இரண்டாவது நாள், ஞாயிற்றுக்கிழமை காலை நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப ஆட்டமும் நடைபெற்றது. இரண்டாவது நாள் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

சிறப்பாக நடந்து முடிந்த இக்கபடிப் போட்டியில் முதல் பரிசு ரூ. 25,000த்தை வேப்பங்குளம் அணியினரும், இரண்டாம் பரிசு ரூ. 20,000த்தை பள்ளத்தூர் அணியினரும், மூன்றாம் பரிசு ரூ. 15,000த்தை மதுக்கூர் அணியினரும் தட்டிச் சென்றனர்.

பெண்கள் அணியில், முதலிடம் தெக்கூர்இரண்டாமிடம் பூண்டிக் கல்லூரி, மூன்றாமிடம் கட்டுமாவடி, நான்காம் பரிசு கருக்காட்டிபட்டியும் பெற்றன. ஒவ்வொரு பெண்கள் அணிக்கும் ரூ. 3,000மும், கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும், பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், நடுவர்களுக்கும் உணவு, போக்குவரத்து வசதிகளும், மற்றும் பிற வசதிகளும் செய்து தரப்பட்டன. கபடி விளையாட்டு வீர்கள் போட்டியின் சட்டதிட்ட விதிகளை முறையாக அனுசரிக்கும் வகையில், தஞ்சாவூர் அமெச்சூர் கபடிக் கழக மேல்நிலை நடுவர் சித்தார்த் அவர்கள் தலைமையில், 10 நடுவர்கள் பங்கேற்றுச் சிறந்த முறையில் நடத்தித் தந்தார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் நினைவு மூன்றாம் ஆண்டு சுழல் கோப்பை கபடித் தொடர் போட்டிக்கு, பார்வையாளர்கள், ஆர்வலர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் நன்முறையில் ஆதரவளித்து, வெற்றிக்கு உதவினர்.

நன்றி: படம் தினகரன் 11.11.2020, தஞ்சாவூர்ச் செய்திகள்

இவ்வாண்டு போட்டியில் பங்கெடுத்த ஆண்கள் அணிகள்:

மதுக்கூர், விக்ரமம், வேப்பங்குளம், மூத்தாக்குறிச்சி, மன்னங்காடு, துவரங்குறிச்சி, அணைக்காடு, பட்டுக்கோட்டை, செபஸ்தியார்புரம், தொக்காலிக்காடு, பள்ளத்தூர், வீரியங்கோட்டை, சொக்கநாதபுரம், பொன்னவராயன்கோட்டை, மகிழங்கோட்டை, புக்கரம்பை, மருதங்காவயல்,தில்லங்காடு.

இவ்வாண்டு போட்டியில் பங்கெடுத்த பெண்கள் அணிகள்:

கட்டுமாவடி, கருகாட்டிப்பட்டி, தெக்கூர், பூண்டிக் கல்லூரி.

கடந்த 2019ல் வேப்பங்குளத்தில் நடத்திய பெருந்தலைவர் காமராஜர் நினைவு கபடிப் போட்டியில் வென்ற அணிகள்:

முதல் பரிசு - வேப்பங்குளம், இரண்டாம் பரிசு - பள்ளத்தூர் மூன்றாம் பரிசு - பழஞ்சூர்.

***

எப்போது வெற்றி பெற முடியும்?

மனோகரன் கந்தசாமி, ரெகுநாதபுரம், காசாங்காடு

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு திரைப்பட நடிகர் நடித்த திரைப்படங்களின் பெயர்கள்: அரச கட்டளை, உங்களுக்காக நான், உரிமைக்குரல், உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், ஊரே என் உறவு, எங்கள் தங்கம், என் கடமை, கொடுத்து வைத்தவள், சமூகமே நான் உனக்கே சொந்தம், தர்மம் தலைகாக்கும், நம் நாடு, நல்ல நேரம், நல்லதை நாடு கேட்கும், நல்லவன் வாழ்வான், நாளை நமதே, நான் ஆணையிட்டால், நான் ஏன் பிறந்தேன், நினைத்ததை முடிப்பவன், மக்கள் என் பக்கம் - இப்படியாக நாட்டுக்காகப் பொறுப்புள்ளவனாகவும், அன்னமிட்ட கை, எங்க வீட்டுப் பிள்ளை, எல்லைக் காவலன், என் அண்ணன், என் தங்கை, ஒரு தாய் மக்கள், கணவன், காவல்காரன், தலைவன், தாயைக் காத்த தனயன், தாய்க்குப் பின் தாரம், தொழிலாளி, நாடோடி மன்னன், நானும் ஒரு தொழிலாளி, படகோட்டி, பட்டிக்காட்டுப் பொன்னையா, பாக்தாத் திருடன், மதுரை வீரன், மலைக்கள்ளன், மன்னாதி மன்னன், மாட்டுக்கார வேலன், மீனவ நண்பன், ரிக்‌ஷாக்காரன், விவசாயி, வேட்டைக்காரன்  - இப்படி மக்களை கவரும் வகையில் பல தரபட்ட அவதாரங்களிலும் படங்களை உருவாக்கினார்! அவர் தான் பின்னாளில் தன் திட்டப்படியே, தமிழக முதல்வர் ஆன எம். ஜி. ராமச்சந்திரன்!!

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வழியாக மிதிவண்டி ஓட்டி வந்த தந்தையின் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் ஆவலுடன் கேட்கிறான். "என்ன கூட்டமாக மக்கள் நிற்கிறார்களே?" என்று. தந்தை சொல்லுகிறார்: "இவர் தான் நமது ஜில்லா கலெக்டர். ஜில்லாவில் இயங்கும் அனைத்து துறைகளும் இவரின் கட்டுப்பாட்டில் தான். மக்களின் கோரிக்கைகளைப் பெற்று ஆவண செய்வதே அவரின் கடமை" என்று. அந்த சிறுவன் வளர்ந்து கல்லூரியில் படிக்கும்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் வீட்டின் வழியாக நண்பர்களுடன் செல்லும்போது, கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப என்னும் பெயர்பலகையைப் பார்த்துச் சொல்கிறார். "ஒருநாள் இந்த பலகையை எடுத்துவிட்டு, உ. சகாயம் இ.ஆ.ப. என வைக்க வேண்டும்" என்று!!

இதுபோன்று சாதனையாளர்கள், தமது சிறுவயதில் இருந்தே, தம் எதிர்கால வாழ்க்கையில் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்கின்ற குறிக்கோள்களை உறுதியாக மனதில் பற்றி, தமது அனைத்து எண்ணங்கள், செயல்களிலும் பிரதிபலிக்குமாறு அடித்தளம் அமைத்து, தம்மை உருவாக்கிக் கொள்கிறார்கள். தமது லட்சியங்களை, நினைத்ததை, அந்தந்த காலகட்டங்களில் எளிதாக அடைந்து வருகின்றனர்.

சரி, இப்போது விடயத்திற்கு வருவோம்! தற்போது  அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நமது பகுதிகளில் வசிக்கும் பட்டதாரி மாணவர்கள், அண்மைக் காலமாகக் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது நல்ல அறிகுறி! பலரும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தேர்விற்குத் தயாராகி வருகிறார்கள்.  குறிப்பாக, பொறியியல் பட்டதாரிகள் அதிகம் பங்கேற்கிறார்கள்.

ஆனால், தொழில் நெறிஞர் (Professional) ஆக வேண்டுமெனில் (Doctor, Auditor, Collector, Ambassador, Scientist, etc..), சிறு வயதில் இருந்தே அந்த எண்ணம் மனதில் உருவாகி இருக்க வேண்டும். அப்போது தான் இலக்கை உறுதியாக அடைய முடியும். மாறாக, கல்லூரி வளாகத் தேர்வில் வேலை வாய்ப்பு கிட்டாதவர்கள், ஒரு மாற்று ஏற்பாடாக அரசு தேர்வாணையத் தேர்விற்குத் தயாராக நிறைய செலவு செய்கிறார்கள்; இப்படி ஈடுபாடில்லாமல் அரைகுறையாக முயற்சிப்பதில் வெற்றி கிட்டுவது அரிது.

மேற்சொன்ன தொழில் நெறிஞர்கள், பணிக்கான தேர்வுகளை வழக்கமான கல்லூரிப் பாடத் தேர்வாகக் கருதுவது முற்றிலும் தவறானது. பலர் எங்கே செல்ல வேண்டும் என்று தெரியாமலேயே சாலையில் பயணிக்கிறார்கள்எந்த விதமான இலக்கும் இல்லாமல் பயணித்து கொண்டே இருக்கிறார்கள்.

பிள்ளை பருவத்தில், அவர்களின் ஆர்வம் அறிந்து, அந்தத் துறையில் திறமையை வெளிப்படுத்தும் விதமான வாய்ப்புகளை, சூழலை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்க  முற்படக் கூடாது. இது பின்னாளில் பெற்றோர்கள் மீது உளவியல் ரீதியாக வெறுப்பை உண்டாக்கலாம்.

பெற்றோர்களின் உந்துதல், சுற்றுச்சூழல், இவைகளோடு தனி மனித வேட்கை இருந்தால் வெற்றி உறுதி! 

***

மனம் ஒரு குரங்கு

மானுடம் சுரேஷ், செங்கப்படுத்தான்காடு

                குரங்கிலிருந்து மனிதப் பிறவி ஏற்பட்டது என்ற வாக்கினாலோகுரங்கு தன் கையில் அகபட்டதை உருப்படியாக உபயோகிக்காமல் இருக்கும் காரணத்தினாலோஒரு கணம், ஒரு  நிலையில் இல்லாமல் நிலைமாறும் காரணத்தினாலோகூட்டமாக வாழும் வாழ்க்கையை வாழ்வதாலோ என்னவோபாலூட்டும் வழக்கத்தை உடையதாலோசிலர் தனது புஜபல பராக்கிரமத்தை நிருபிக்க சில வேடிக்கை நிகழ்வுகளை ஏற்படுத்துவதாலோ என்னவோ மனித இனம் குரங்கின் குணத்தை ஒத்தே செயல்படுகிறது.

                இந்த ஜன சமுதாயம் பல நேரங்களில் தனது துறையில் முழுமையான செயல்பாட்டைத் துறந்து, லாப நோக்குடன் அரைகுறையாக, ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு தாவும் வழக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

                எதுவாயினும் குரங்கு குரங்காய் இருக்குகட்டும். வேதாத்திரி மகரிஷி கூறியது போல் மனிதன் கால்நடை அல்லமனத்தால் நடப்பவன்.அதனால் தான் மனிதன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறான்.

***

இயற்கை எரிபொருளைத் திடப்பொருளாகச் சேமிக்கலாம்!

மு. சிவகுமார், மன்னங்காடு

இந்த நூற்றாண்டுக் கண்டுபிடிப்பில், ஒரு திருப்புமுனையாக, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் (National University of Singapore) பொறியியல் ஆராய்ச்சியாளர்கள், இயற்கை வாயுவை, எரிவாயு ஹைட்ரேட்டுகள் அல்லது சாலிடிஃபைட் நேச்சுரல் கேஸ் (SNG) ஆக மாற்றுவதற்கான ஒரு முறையை வகுத்துள்ளனர். சில நேரங்களில் எரியக்கூடிய பனி’ என்று அழைக்கப்படும் எஸ்.என்.ஜி. என்பது வெடிக்காத திடப்பொருளாகும். இது எளிதில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலத்திற்கு சேமிக்கலாம்.

                ஒரு புதுமையானகுறைந்த நச்சுத்தன்மை உடைய கலவையைப் பயன்படுத்தி, மற்றும் இவற்றில் பெரும்பாலான வழக்கமான நீர் - வாயுவிலிருந்து திடமாகும் செயல்முறையை, வெறும் 15 நிமிடங்களில் செய்து முடித்து இருக்கிறார்கள். இந்த சிறப்பான அறிவியல் செயல்முறை நீர் மூலக்கூறுகளால் உருவாகும் பனி போன்ற கூண்டுகளில்” சிக்கியுள்ள இயற்கை வாயுவின் மூலக்கூறுகளைக் கொண்ட துகள்களாக அதிக அளவு வாயுவை மாற்றுகிறது.

                இவை சாதாரண வளிமண்டல அழுத்தத்தில்மற்றும் நிலையான உறைவிப்பான் மாறுபடாத நிலையில்சேமித்து வைத்துப் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம்.  புதிய சேர்க்கைக் கலவையில் எல்-டிரிப்டோபான் (L-Tryptophan) என்ற அமினோ அமிலமும் சேர்த்து வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது மக்களின் உணவில் அத்தியாவசியமானதசையை உருவாக்கும் அமினோ அமிலம் ஆகும். இங்கு இயற்கை வாயுவை திட ஹைட்ரேட்டுகளாக மாற்ற இந்த அமினோ அமிலம் பெரிதும் பயன்படுகிறது. இந்த ஆராய்ச்சி பெட்ரோலிய எரிபொருள்களின் ஒரு புதுமையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தற்போதுள்ள தரங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக - குறைந்த நச்சுத்தன்மையுடனும்கையாள பாதுகாப்பானதாகவும் திட ஹைட்ரேட்டுகள் விளங்கும் என்பதில் எந்த விதமான அச்சமும் இல்லை. எரிவாயு ஹைட்ரேட் உருவாக்கம் இதேபோன்ற செயல்முறை இயற்கையில் நிகழபொதுவாக மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும்.

                இந்த கண்டுபிடிப்பு இயற்கை எரிவாயுவின் பொருளாதார மற்றும் நீண்டகால சேமிப்பிற்கான வழியின் திறவு கோலாகும். இது இந்தியா போன்ற நாடுகளின் மின்சாரத் தடை இடையூறுகளைப் பெரிதும் தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போழுது நாம் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு உருளைகளின் பயன்பாடுகளில்இந்த திட நிலை எரிபொருள்கள் பயன்படுத்துவது, வரும் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மற்றும் வீட்டுக்கு வீடு பயன்படுத்தும் எரிவாயு உருளைகளால் விளையும் ஆபத்துக்களை களைய, திட எரிவாயு உருளை கட்டிகள் பெரிதும் பயனுள்ளதாகவும் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கருதலாம்.

Source: December 2020, NUS news, Singapore.

பட்டாம் பூச்சிதான் பட்டுப் பூச்சியோ கவிஞருக்கு?

பல்லவி  

‘பூப்பூவாப் பறந்து போகும்

பட்டுப் பூச்சி அக்கா - நீ

பளபளன்னு போட்டிருப்பது

யாரு குடுத்த சொக்கா?’

பாடல் வரிகள்: வாலி

பாடியவர்: எம்.எஸ். இராஜேஸ்வரி

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

இயக்கம்: என்.சி. சக்கரவர்த்தி

திரைப்படம்: திக்குத் தெரியாத காட்டில், 1972

***

To Federalist Mahatma, From Publius Jivatma

ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்குக் கடிதம் 5

ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்கு,

வணக்கம், நீ திருந்து, ஊருலகம் திருந்தும்எனும் பொருளில்  ‘Think globally, act locally’ என அடிக்கடி கூறுவாயல்லவா? சிலர் நிச்சயமாக அதைப் பொருட்படுத்துகிறார்கள், உண்மைதான். ஆனால் மீதமுள்ள பலர்? கிசான்* என்றொரு நடுவனரசுத் திட்டம். மயக்கம் போட்டுவிடாதே மகாத்மா, இது ரூ. 78,000 கோடித் திட்டமாம்! அதாவது 5 ஏக்கருக்குக் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சுமார் 13 கோடி விவசாயிகளுக்கு, ஆண்டுக்குத் தலா ரூ. 6,000 நேரடியாக வங்கிக் கணக்கில் ஏறிவிடுமாம். கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு சிறிய விவசாயிகள் தமது தொழிலை முன்னேற்றுவார்கள், தாமும் முன்னேறுவார்கள், இதுதான் நோக்கமாம். இதன் விளைவாக நாடும் பொருளாதாரத்தில் முன்னேறும், இதுதான் எதிர்பார்ப்பாம். 

மன்னங்காடு கிராமத்தில், 315 விவசாயிகள் கிசான் பயனாளிகளாம். அரசின் கிசான் பயனாளிப் பட்டியலை எடுத்துப் பார்த்தால்தான் தெரிகிறது, அதில் பலருக்குச் சாகுபடி நிலமே இல்லை என்பதும், ஒரே வீட்டில் இரண்டு பேருக்குப் பலன், பலருக்கு எட்டுப்பத்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது என்பதும்! மேலும் சிலர் பொதுவுடைமை, சோஷலிசம் பேசித் தமக்குப் பலன் தரும் அரசையே ஊழல் அரசு என வறுத்தெடுக்கும் வாய்ச்சொல் வீரர்கள். அரசின் பயனாளிப் பட்டியலின் சுவாரசியம் என்னவென்றால், ஊரில் திடீரென்று உழத்தியர் (பெண் விவசாயிகள்) எண்ணிக்கை அதிகமாகி விட்டதுதான். உழவர்  வெறும் 132 (42%) பேரும், உழத்தியர் 183 (58%) பேரும் பயன் பெற்று, உழத்தியர் தீவிர விவசாயத்தில் தலைமையேற்கும் புதுயுகத்தில் ஊர் நுழைகிறது என்றால் பெருமைதானே மகாத்மா!

மூன்று தவணைகளில், மொத்தம்  ரூ. 18,90,000 மன்னங்காடு கிராமத்திற்குக் கிடைத்துள்ளது. இதில் உழத்தியர் மட்டும் ரூ. 10,98,000தைத் தட்டிச் சென்றுள்ளனர்! இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது என்று நீதானே சொன்னாய். வாழட்டும் விவசாயி, விளையட்டும் விவசாயம்! வருந்தாதே மகாத்மா. யாருக்குத் தெரியும், இன்னும் சில ஆண்டுகளில் 6K உருமாறி 60Kயானாலும் ஆகலாம்! விடலாமா என்ன? பந்திக்கு முந்திக்கொள்ள வேண்டும், மகாத்மா!

அது கிடக்கட்டும் மகாத்மா. இப்போதெல்லாம் புதுவகைச் சோதிடர்கள் ஆங்காங்கே முளைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழைய சோதிடர்கள் எப்படி என்றால், நெற்றியில் பட்டை பூசிக்கொண்டு, ஜாதகக் கணக்கீடு செய்து நட்சத்திரம், இராசி, கிரக நிலை என்று ஆரூடம் கூறி, கோயில், பரிகாரம் என சுத்தலில் விடுவார்கள். இந்தப் பழையவகைச் சோதிடரின் இரசிகர்கள், சோதிடரைச் சுற்றிய நேரம்போக மீதி நேரங்களில் கோயில், குளம் என்று சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அது ஒருபுறம் இருக்க, இப்போதைய புதிய ஆரூடவாசிகள் சற்றுச் சாமர்த்தியசாலிகள், மகாத்மா. அவர்கள் காற்றுப்போல் எங்கெங்கோ தோன்றி, மேகம்போல் தலைக்குமேல் நின்றுகொண்டு, ஆரூடங்களை பொழியும் புதிய வானிலைச் சோதிடர்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட், வாட்ஸ்ஆப், கொஞ்சம் இங்கிலீஸ் என்று சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கே தண்ணி காட்டுகிறார்கள் என்றால் பாரேன். வங்கக் கடலில் கொஞ்சம் காற்று அழுத்தக் குறைவு என்றால் போதும், நமக்கு இரத்த அழுத்தம் அதிகமாகும் அளவுக்குப் பிய்த்து வாங்குகிறார்கள். 

ஒரு வானிலைச் சோதிடர், நிவர்** புயல் வருகிறது, தென்னையின் பச்சை மட்டைகளை வெட்டு, என்கிறார். ஆனால் மற்றொருவர், வேண்டாம் எளணியை மட்டும் வெட்டுதலைக்கனம் குறையும் என்கிறார். பழைய கஜா#வுக்குப்பின் மரத்தில் தேங்காயே இல்லை. இருக்கின்ற கொஞ்சநஞ்ச தேங்காய்களை வெட்டவே ஆள் கிடைக்கவில்லை. இதில் எங்கே மகாத்மா எளணி வெட்டுவது? இன்னுமொரு சோதிடர் எதையும் வெட்டாதீர், நிவர் திசையே வேறு, எனக்குத் தெரியும் என்கிறார்.

பேசாமல், பழைய வானிலை விஞ்ஞானி ரமணரையே கேட்டுவிடலாம் போலிருக்கிறது! எப்போதும் போல் அவர் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஆங்காங்கே காற்று அடித்தாலும் அடிக்கலாம், மேகம் வந்தாலும் வரலாம், மழை பெய்தாலும் பெய்யலாம், எளணியை வெட்டினாலும் வெட்டலாம், சும்மா இருந்தாலும் இருக்கலாம், மிதமான புயல்தான் என இதமாக அதிரடியில்லாமல், வெட்டு, குத்து இன்றி எதாவது அகிம்சையாகச் சொல்லிவிட்டுப் போவார்.

சில காலமாக ஊருக்கு ஊர் இந்தப் புதிய வகை இம்சைச் சோதிடர்களின் தொல்லை, மகாத்மா.  முதலில் ஆல்ஃபாசோதிடர் ஜான் பிரதீப். அவரைச் சென்னை வெள்ளம் கொண்டுவந்து சேர்த்தது. பிறகு பீட்டாசெல்வகுமார் வந்தார். அதன்பின் காம்மாகணியன். இப்போது டெல்டாவெதர்மேன் ஹேமசந்தர். ரோதனை தாங்க முடியவில்லை மகாத்மா! வானிலைச் சோதிடர்களின் இரசிகர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் பல்கலையின் பட்டதாரிகள் போலும். சோதிடர்களின் வானிலை ஆரூடங்களைப் பக்தியுடன் ஆராதித்து, பிரசாதம்போல் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தெருவில் போவோர், வருவோர் அனைவருக்கும் வாட்ஸ்ஆப்பில் உடனுக்குடன் அனுப்பி விடுகிறார்கள். இந்த எப்சிலான்இரசிகர்களை என்னவென்று சொல்வது? பேசாமல் ஐப்பசி, கார்த்திகையில் இராஜஸ்தான் போன்ற புயலும், மழையும் இல்லாத இடத்துக்குச் சென்று விடலாம் போலிருக்கிறது மகாத்மா!

என்றென்றும் உன்போல் நம்பிக்கையுடன்

பப்ளியஸ் ஜீவாத்மா

December 20, 2020

1. * Pradhan Mantri Kisan Samman Nidhi of the Union Government, 2019. 2. ** Nov 26, 2020ல் புதுச்சேரிக்கருகில் கரையைக் கடந்த Nivar எனும் ஈரானியப் பெயர் கொண்ட புயல். 3. # Nov 18. 2018ல் வேதாரணியத்துக்கருகில் கரையைக் கடந்த Gaja எனும் இலங்கைப் பெயர் கொண்ட புயல்.

***

அட்டையில்: உள்ளூரில் படம் பிடிக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள்.

படங்கள்: துரைசாமி நவநீதம்

***

காட்டுஞ்ரி January  2021 | 2021 : 5