காட்டுமஞ்சரி Jan 2020 | 2020 : 1 KaattuManjari காட்டுமஞ்சரி Jan 2020 | 2020 : 1 KaattuManjari மஞ்சரிக்குள்... 1. ஈடு இணையிலாது எங்கள் ஊர் மஞ்சரியே நீ வாழ்க!2. பொய்யோ? மெய்யோ? 3. தென்னை உச்ச மகசூலுக்கு, தென்னங்கன்றே அடிப்படை 4. பயில்முறை ‘ஹேம்’ வானொலி 5. தாய்மையின் பரிசு 6. டி.என்.ஏ. என்பது என்ன? 7. குறளின் குரல். பேச்சே மூச்சு 8. தமிழ் மகனே 9. நாளைய சரித்திரம் 10. தொழில் முனைவோருக்கு: சோறின்றி அமையாது உலகு 11. கீச்சுக்கள் 12. அடையாளம் 13. இரசவாதம் 14. முதியோர் இல்லம் 15. தாய் மனசு 16. ஒத்தையடிப் பாதை 17. அம்மையப்பனே! 18. இனியண்டார் கோயிலின் பரிணாமம் & இனியண்டார் ஆலமரம் 19. புயலெனும் ஆழிப்’பெருங்காத்து’: ஒரு வரலாற்றுப் பார்வை 20. ‘அ’னா 21. அற்புத சாதனை நம்முள்ளே யோகமாய்! 22. புத்தாண்டே பொலிக! 23. திரும்பிப் பார்கிறார் 24. உதயணன் யானை மீதேறிய பழங்கதை 25. குருதி 26. சூரிய கிரகணம் 26 டிசம்பர் 2019 27. மன்னங்காடு ஊராட்சித் தேர்தல் 28. மன்னங்காடு ஊராட்சித் தலைவர் 29. ‘வைத்தியர்’ வாழ்க! 30. மகாத்மாவுக்குக் கடிதம் ஈடு இணையிலாது எங்கள் ஊர் மஞ்சரியே நீ வாழ்க! பட்டுக்கோட்டை கவிப்பிரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு) முசுகுந்தன் நாடுகளாம் முசிறி முப்பத்திரண்டு ஊர்களிலே!பசுமை நிறைந்த ஊர் பாசம் மலர்ந்து செழிக்கும் ஊர்! விசுவாசம் மிகுந்த மக்கள் வீறுநடை போடும் ஊர்! சக மனித உள்ளங்களை சமமாக மதிக்கும் ஊர்! பழம்பெருமையில் சிறந்த பாங்கான தங்க ஊர்! பரங்கியர்கள் ஆள்கையிலும் பற்பல தேசவளம் குவித்த ஊர்! பலபிரிவு மக்களரும் பண்பாடு பக்குவமாய் காத்த ஊர்! பகிர்ந்து தொழில் புரியும் பரந்த நெஞ்சம் கொண்ட ஊர்! கற்றோரை கணக்கின்றி கருத்தாகத் தந்த ஊர்! மாற்றூர் ஆட்களையும் மதித்து ஆதரிக்கும் ஊர்! ஆற்றுநீர் வளமும் ஏரிக்குளங்களையும் ஏராளம் பெற்ற ஊர்! ஆற்றல்கள் நிரம்பிய அற்புதர்களை அடுக்கடுக்காய்த் தந்தஊர்! வாழ்முனீஸ்வரர் முதல் வீரனார் பெரியாச்சி ஐயனார்! தாழ்ச்சியின்றி மக்கள் வாழ பிள்ளையார் இனியாண்டார் முனியையா! காழ்ப்புணர்ச்சியின்றி காக்கின்ற தெய்வங்களாய் பொதியழகர் சகிதம்! ஆழ்ந்த பக்தியுடன் அனுதினமும் ஊர்மக்கள் வணங்கும் ஊர்! மாட்சிமை பொருந்திய எம் மன்னங்காடு அமைவிடமோ! வடக்கில் காசாங்காடு வடகிழக்கில் வாட்டாகுடி கிழக்கனிலோ! அத்திவெட்டி பிச்சினிகாடு தெற்கில் துவரை தென்கிழக்கில் தாமரை! மேற்கில் கள்ளிக்காடு எனநீண்டு புதுப்பொலிவாய் நிற்கிறது! உள்ளூர் கட்டமைப்போ மேலமன்னங்காடு கீழமன்னங்காடு! பல்லாக்கொல்லை இச்சடிக்கொல்லை முடுக்குக்காடு இன்னும் பிறவும்! வாடிக்குளம் வண்ணாத்தி ஓடை சீவாடி அடைக்கநாத்தார்! கா குளம் வெட்டுப்பள்ளம் என நீண்டு விரிவடையும்! அறிவுக் கண்ணைத் திறப்பதற்கு ஆரம்பப் பள்ளிக்கூடம்! பெருமைகளை பறைசாற்றிவரும் நவநவமாய் மாந்தர் குழாம்! அனைத்துவித அரசியலும் ஊருக்குள் சுழன்று வரும்! அத்தனையும் படம்பிடிக்கத் தளிர்விடும் மஞ்சரியே! நீ வாழ்க!! உள்ளே... வீரன் யானை மீதேறியதுவலிமையையும் வீரத்தையும் நச்சென்று எடுத்துச் சொல்ல இதைவிடவும் சிறந்த காட்சி வேறொன்றில்லை. இந்த ‘பாகுபலி’ வீரன் யானையின் துதிக்கையில் கால் வைத்து ஏறும் விதம் அத்திரைப்படக் காரர்களின் சொந்த கற்பனையில் உதித்ததாக இருக்கலாம். இருப்பினும், இக்காட்சிக்கான சுவாரசியமான இலக்கியப் பின்னணி ஒன்று உண்டு! பக்கங்களைப் புரட்டுக... பொய்யோ? மெய்யோ ? மகாகவி பாரதியார், உலகை நோக்கி வினவுதல் நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்சொற்பனந்தானோ ? பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும்ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ/ காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் சோலை பொய்யாமோ? இதை சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை இலக்கிய ஆய்வுப் போட்டி காண்பது சக்தியாம் இந்தக் காட்சி நித்தியமாம். இலக்கிய ஆய்வுப் போட்டி:பாரதியாரின் ‘பொய்யோ? மெய்யோ?’ எனும் இக்கவிதை பொருட்செறிவு மிக்கது. மனத்தில் சந்தேகத்துடன் பல கேள்விகளைக் கேட்கிறார், கேட்டுக்கொண்டே செல்கிறார், கடைசியில் நெத்தியலடித்தாற்போல் பாரதியிடமிருந்து பதிலும் வருகிறது. அந்த எதிர்மறைப் பதில்கள் மிக உறுதியானவை. தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றாக்கி விடுகிறார் பாரதி. பொய்யல்ல, எல்லாம் மெய்யே. மகாகவி ஏதோ ஒன்றை நமக்கு அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறார் எனத் தெரிகிறது. போட்டி வாசகர்கள் செய்யவேண்டியது இதுதான். 1. நீங்கள் இப்பாடலின் கருத்தை எவ்வாறு உணர்கின்றீர்கள்? 2. ஏன் பாரதிக்கு இந்த சந்தேகங்கள் வருகின்றன? 3. இக்கவிதைக்கு உங்கள் மனத்தில்படும் விளக்கம் என்ன? எழுதியனுப்புங்கள். பரிசு வாசகர்களின் சிறந்த கருத்துக்கள், விளக்கங்கள் காட்டுமஞ்சரி இதழில் இடம்பெறும். தென்னை உச்ச மகசூலுக்கு, தென்னங்கன்றே அடிப்படை இரா. மாரிமுத்து , காசாங்காடு கற்பக விருட்சமாம் தென்னையின் நல்ல மகசூலுக்கு அடிப்படைக் காரணமாகத் திகழ்வது தகுதியான குணங்களுடைய தாய் மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட வாளிப்பான கன்றுகளாகும். நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை என்பர். அதுபோல், சிறந்த தாய் மரம் நல்ல விதைகளைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தாய் மரத்தின் குணங்களும் நெற்று சேகரிப்பும் 1. தேங்காய் நெற்றுகள் சேகரிக்க தேர்வு செய்யப்படும் தாய் மரம் 20 முதல் 45 ஆண்டு, நடுத்தர வயதுடையதாக இருத்தல் வேண்டும். 2. கொண்டைப் பகுதியில் பசுமையான மட்டைகளின் எண்ணிக்கை 35லிருந்து 40 வரை இருப்பதுடன், விரிந்த குடை வடிவ அமைப்பு காணப்பட வேண்டும். 3. மாறி மாறி காய்க்கக்கூடிய மரங்களைத் தவிர்த்து சீரான மகசூலை, தொடர்ந்து கொடுக்கக்கூடிய மரங்களைத் தெரிவு செய்தல் வேண்டும். 4. எந்த நேரத்திலும் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில் 12 குலைகளுக்குக் குறைவில்லாமல் தாய்மரம் இருக்க வேண்டும். மானாவாரி தென்னையில் 100 காய்கள் மற்றும் இறவை தோப்புகளில் உள்ள மரங்கள் 150 காய்கள் காய்க்கக் கூடிய திறன் உள்ளவைகளாக இருக்க வேண்டும். 5. காய்கள் நடுத்தரமாகவும் நீண்ட உருண்டை வடிவ அமைப்பும் உள்ளதாக இருக்க வேண்டும். அத்துடன் 12 மாத வயதுடைய நெற்றுகளை மட்டுமே அறுவடை செய்து சேகரிக்க வேண்டும். 6. நெற்றுகளை விதைக்கு அறுவடை செய்கையில் அவற்றைக் கயறு மூலம் மரங்களில் இருந்து இறக்குவது சிறந்தது. 7. ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரை நெற்றுகள் சேகரிக்க தகுந்த காலமாகும். வீரிய ஒட்டுத் தென்னை வகைகளில் இருந்து நெற்றுகள் எடுக்கக் கூடாது. அறுவடை செய்யப்பட்ட நெற்றுகளைப் பதப்படுத்த சுமார் 15 நாட்கள் வெயிலில் உலரவிட்டு பின்னர் 15 தினங்கள் நிழலில் வைத்து, பின் நடுதல் வேண்டும். தென்னை நாற்றங்கால் 1. நல்ல மணற்பாங்கான, தண்ணீர் வசதியுள்ள, வெளிச்சம், ஓரளவு நிழல் தரும் பகுதியில் நாற்றங்கால் அமைக்கவேண்டும். 2. சத்துக்கள் குறைவாய் உள்ள நிலங்களுக்கு தொழுஉரம் ஹெக்டேருக்கு 15 டன் போட்டு நன்கு உழவு செய்து பின் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 3. நெற்றுகளில் தண்ணீர் இல்லாதவற்றைத் தவிர்க்கவும். 4. நெற்றுக்களை 30 செமீ ஆழத்தில், 30 செமீ இடைவெளியில் நெற்றின் காம்புப் பகுதி மேல் நோக்கி அல்லது படுக்கை வசத்தில் வைத்து நடவு செய்யலாம். பாத்தியின் அகலம் 5 நெற்றுகள் கொண்டதாகவும், நீளம் 50 நெற்றுகள் கொண்டதாகவும் அமைத்து, சுற்றிலும் கரை எடுக்கவும். 5. மணற்பாங்கான நிலங்களில் வாரம் இருமுறையும், மற்ற மண் வகைகளுக்கு வாரம் ஒரு முறையும் தண்ணீர் கட்டவேண்டும். நெற்றுகளில் உள்ள உறிமட்டை முழுமையாக நன்கு நனைந்து முளைப்பதற்கு உரிய ஈரத்தினைக் கொடுக்கும் அளவற்கு இருத்தல் அவசியம். நல்ல பராமரிப்பில் உள்ள நாற்றங்காலில் நெற்றுகள் நட்ட 3 மாதம் முதல் 5 மாதங்களுக்குள் முளைத்துவிடும். இதன் பின்னர் முளைத்து வருவனவற்றை நாற்றுகள் பறித்து தேர்வு செய்யும் தருணத்தில் ஒதுக்கிவிட வேண்டும். தரமான தென்னங்கன்றுகளுக்கு உரிய குணங்களாவன 1. நாற்று நட்ட 9 மாதத்தில் 5 - 7 இலைகள் இருக்கும். 2. இலைகள் சில பிரிந்து காணப்படும். 3. முளைத்த கன்றின் கழுத்துப் பகுதி நல்ல தடிமனாக இருத்தல், சீரான வளர்சியுடையவை சிறந்தவை. ஏனையவற்றை ஒதுக்கிட வேண்டும். 4. அதிக வேர்கள், தகுதியான கன்றின் எடை இவைகள் நல்ல தரமான கன்றுகளுக்கு சான்றாகும். தென்னகன்று நடவு முறை தென்னைக்கு தகுந்த இடைவெளி, வரிசைக்கு வரிசை 7.5 மீட்டரும், மரத்திற்கு மரம் 7.5 மீட்டரும் கொடுக்க வேண்டும். 1) தென்னங்கன்றுகள் நடவு செய்ய 1x1x1 மீட்டர் நீள, அகல, ஆழ குழி எடுக்க வேண்டும். 2) சத்து நிறைந்த 30 செமீ மேல் மண்ணுடன் சம அளவு நல்ல மக்கிய எருவினை கலந்து குழியில் இட்டு 30 செமீ வரை நிரப்பிட வேண்டும். செம்மண், மணல், மக்கிய எரு இவைகளை சம அளவாகக் கலந்தும் குழியில் இடலாம்.3) தரமான தென்னங்கன்றினை குழியின் நடுப் பகுதியில், கழுத்துப் பகுதி மூழ்கும் அளவில் இரண்டு அடிக்குக் கீழ் நடவு செய்து மண்ணை சுற்றிலும் நன்கு மிதித்து விடுதல் வேண்டும். 4) காற்றில் கன்று அசைவு ஏற்படாமல் இருக்க பக்கவாட்டில் குச்சியினை ஊன்றி அத்துடன் தண்டினை இணைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் சீக்கிரம் வேர்கள் மண்ணில் இறங்கும். 5) இலைகளில் நீராவிப் போக்கினைக் குறைத்து இளம் கன்றுகளை காப்பாற்ற நிழல் கொடுக்க பனை ஓலை அல்லது கீற்று கொண்டு மறைக்க வேண்டும். நடவு செய்து மூன்று நான்கு மாதங்களில் அவைகளைப் பிரித்து விடலாம். 6) தென்னங்கன்றுகள் நடவு செய்திட சிறந்த பட்டங்களான ஆடி மற்றும் மார்கழியில் நடவு செய்தல் வேண்டும். இளம் தென்னகன்று பராமரிப்பு 1. நட்ட கன்றுகளுக்கு 10 முதல் 20 லிட்டர் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் கொடுக்க வேண்டும். 2. மழைக்காலங்களில், நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளின் குழிகளில் தண்ணீர் தேங்கி விடாதபடி வெளியேற்றி விட வேண்டும். வெளியிலிருந்து தண்ணீர் குழிக்குள் செல்லாமல் குழியினைச் சுற்றிலும் கரைகட்டி வைப்பது நல்லது. 3. தென்னங்கன்றுகளைச் சுற்றிலும் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 4. நீர் பாசனம் செய்வது, உரமிடுவது போன்ற உழவியல் முறைகளால் படிப்படியாக குழியினை மண்ணால் நிரப்பலாம். 5. வளர்ந்த 4 வயது மரத்தின் மத்தளப்பகுதி முற்றிலும் மண்ணுக்குள் இருக்க வேண்டும். இதனால் அதிக வேர்கள் உண்டாகும், பயிர் மண்ணிலுள்ள உணவினை நன்கு கிரகிக்கும்.மேலும் வலுவாக மண்ணில் பிடித்துக் கொள்ள வும் உதவுகிறது. மேலே கூறிய வண்ணம் தென்னை தாய்மரத் தேர்வு, நெற்று சேகரிப்பு, நாற்றங்கால் பராமரிப்பு, கன்றுத்தேர்வு செய்து முறையாக நடுவதன் மூலம் அதிக மகசூல் கொடுக்கக் கூடிய மரங்களை தோப்புகளில் பெற்று தேங்காய்களின் உற்பத்தியைப் பெருக்கிட முடியும். [இக்கட்டுரை ஆசிரியர் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தனது ஆராய்ச்சி அனுபவம் மற்றும் தென்னை விவசாய அனுபவத்தில் பெற்ற பலனை தக்க தருணத்தில் நாம் அறியத் தந்திருகிறார்]. Re-typed
on Dec182019 DN பயில்முறை ஹேம் வானொலி ² Amateur Ham Radio மனோகரன் கந்தசாமி, ரெகுநாதபுரம், காசாங்காடு ஹேம் வானொலி என்பது இரு வழித் தொலைத்தொடர்பு சேவையாகும். இது உலகெங்கிலும் உரிமம் பெற்று இயக்குபவர்கள் (Ham Radio Operators), தங்களது பல்வேறு வகையான தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம், இவர்களுக்கென பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (International Telecommunication Union) ஒதுக்கப்பட்ட வானொலி அதிர்வெண்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், சோதனைகள் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர்.
[கஜா புயல் தாக்கிய நாளன்று நம்மில் பலரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தபோது, இக்கட்டுரை ஆசிரியர் பட்டுக்கோட்டையில் அரசு ஏற்பாடு செய்திருந்த அவசரகால பேரிடர் தகவல் தொடர்பில் தமது ஹேம் அனுபவத்தைப் பயன்படுத்தித் தொண்டாற்றி நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த பெருமளவில் உதவினார். புயல் முடிந்தபின், வீழ்ந்த மரங்களால் சாலைகள் பயனற்று இருந்தபோது, பட்டுக்கோட்டையில் இருந்து ரெகுநாதபுரம் வரை சாலையில் கிடந்த மரங்களில் ஏறிக்குதித்து நடந்தே தமது வீட்டினை அடைந்து, அழிவுகளைக் கண்டார். பின், மீண்டும் வந்தவழியே பட்டுக்கோட்டைக்கு ஹேம் பணிக்குத் திரும்பினார். ‘ஹேம் ரேடியோவால் பயன் உண்டா?’ எனும் கேள்விக்கு, இவருடைய செயலே ‘உண்டு’ எனும் நேரடி எடுத்துக்காட்டு. மேலும், ஹேமின் முக்கியத்துவத்தை உணர்ந்து மன்னார்குடி எஸ்.டி.இ.டி. கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்து ஹேம் லைசென்ஸ் பெறவும் உதவியுள்ளார்]. தாய்மையின் பரிசு காயத்ரி வீரமுகிலன், மன்னங்காடு வடக்கு ஐயிரண்டு திங்களும் ....!கண்ணும் கருத்துமாய் ....! கருவாய் உனை சுமந்து .....! கற்பனையால் முகம்தீட்டி....! உணர்வோடு உரையாடி ...! திக் திக் நிமிடங்களில் ....! பக் பக் வென படபடக்க ...! ஆ...ஆ... என்ற அலறலுடன் ....! வீர் வீர் என்ற அழுகுரலுடன் ...! பிஞ்சுவிரல் பாதம்பதிக்க ...! பூமியில் பிரவேசித்தாய் ....! கொஞ்சும் தமிழால் ...! பூவிதழில் கதை கதைக்க...! குறுநகையால் களவாட ....! பிறர்மனம் கவரும் கள்வனாய் ....! எண்ணிய வண்ணமாய் ....! தாய்மைக்கு கிடைத்த பரிசடா -- நீ என் "தங்க மகனே".....! டி.என்.ஏ. என்பது என்ன? சுருக்கமாகச் சொன்னால், டிஎன்ஏ என்பது உயிரினங்களில் மரபணுக்களை உள்ளடக்கி, அவ்வணுக்களை ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு இனப்பெருக்கத்தின் மூலமாக எடுத்துச் செல்லும் ஒருவகை நீண்ட மூலக்கூறு எனலாம். H2O, CO2 போன்று ஒருசில அணுக்களால் ஆன எளிய மூலக்கூறு அமைப்பைப் பெற்றில்லாமல் ஹைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் போன்ற ஆயிரக்கணக்கான அணுக்களை முறைப்படி இரட்டை வடங்களில் கோர்வையாக்கி, நீண்டு சுழன்று மேலேறும் ஏணி அல்லது படிக்கட்டு போல் தோற்றமளிக்கக் கூடிய மூலக்கூறு அமைப்பினைப் பெற்றுள்ளது டிஎன்ஏ. இந்த சுழன்ற ஏணி அமைப்பினுள் உயிரினங்களின் அன்றாட உடற்செயலியல் வினைக் காரணிகளையும், பாரம்பரியப் பண்புகளையும் சூத்திரமாக தம்முள் சுருக்கி வைத்திருக்கும் ஒருவகை ‘ப்ளூ பிரிண்ட்’ மூலக்கூறுதான் டிஎன்ஏ என அழைக்கப்படும் ‘டீஆக்சி ரைபோ நியூக்ளிக் அமிலம்’ எனும் இயற்கையின் விந்தை. [டிஎன்ஏவைப் பற்றிய விரிவான தகவல்களைப் பின்னர் வெளிவரும் இதழ்களில் காண்போம்]. குறளின் குரல் 1 பேச்சே மூச்சு எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு உலக உயிரினங்களுள் மனிதர்களுக்கு இயற்கை அளித்த வரம் பேச்சு. பேச்சும் ஒரு கலைதான். அவரவர் சிந்தனைகள், எண்ணங்கள், குணநலன்களைப் பொறுத்தே பேச்சு அமைகிறது.'நேர்படப் பேசு' என்கிறார் பாரதியார். நேர்மையாகப் பேசுகிறவர்களே சான்றோராகிறார்கள். வெள்ளந்தியான பேச்சை இன்றும் கிராமப்புறங்களில் கேட்டு ரசிக்கலாம். சிலர் பேசினால் கேட்பவர்களுக்கு சிரிப்பில் வயிறு புண்ணாகும். இன்னும் நக்கல் பேச்சு, பொடி வைத்துப் பேசுவது, வசீகரப் பேச்சு, வசியப் பேச்சு என பேசிக்கொண்டே போகலாம். ஆழமான கடல், அலைகளால் ஆர்ப்பரிக்காது அமைதி காக்கும். அது போல் ஆழமான அறிவுடை மாந்தர் அதிகம் பேசார். மாணவர்களிடம் அன்போடும் அறிவோடும் பேசும் ஆசியர்களே பின்னாளில் நினைவு கூறப்படுகிறார்கள். நம் வீட்டிற்கு வரும் விற்பனைப் பிரதிநிதிகள் நம்மைக் கவரும் விதமாகப் பேசி விற்பனைப் பொருளை நம்மிடம் விற்று விடுகிறார்கள். பேச்சே இங்கு மூலதனம். சிலரது பேச்சு கேட்பவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்து கேட்பவர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்கிறது. எனது உயர்நிலைப் பள்ளி கணக்கு ஆசிரியர், கல்லூரி மாணவராய் இருந்தபோது பேரறிஞர் அண்ணா அவரது கல்லூரி மாணவர்களிடையே ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினாராம். உரை நிகழ்ந்த ஒரு மணி நேரமும் மாணவர்களிடேயே எவ்வித சலசலப்பும் இல்லை எனச் சொன்னார். அண்ணாவின் பேச்சு அத்தனை அறிவு மிகுந்தது. அதனால்தான் அண்ணா 'பேரறிஞர்' எனப் போற்றப் பட்டார். பேச்சுக்கு மாபெரும் சக்தி உண்டு! எந்தவொரு வன்முறை , போராட்டம் , பேரணி,உண்ணாவிரதம் என்றாலும் இறுதியில் பேச்சு வார்த்தைகள் மூலமாகவே தீர்வு காணப்படுகிறது. மஹாத்மா காந்தியும் அஹிம்சை வழிப் போராட்டங்களை மேற்கொண்டு பேச்சு மூலமாகவே சுதந்திரம் பெற்றுத் தந்து புகழ்பெற்றார். 'ஒன்னு சொல் புத்தி வேணும். இல்லேன்னா சுய புத்தி வேணும் ' என்பார்கள் அனுபவசாலிகள். சொல் புத்தி என்பது பிறர் பேச்சைக் கேட்பது, சுய புத்தி என்பது சுய அறிவைக் கொண்டு செயல்படுவது. இரண்டு புத்தியும் இன்றி செயல்படுபவர்களால் சமூகத்திற்கே கேடு விளைகிறது. ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு இடத்தில உரை நிகழ்த்தச் சென்றார். கூட்டத்தினரைப் பார்த்து வியந்த அவரது உதவியாளர், ' உங்கள் பேச்சைக் கேட்டு இத்தனைக் கூட்டமா!" என்று வியப்புற்றாராம் . 'என்னைத் தூக்கில் போட்டால் கூடத்தான் இத்தனை கூட்டம் கூடும்!' என சர்ச்சில் அமைதியாகக் கூறினாராம். அரட்டைப் பேச்சுப் பேசினாலும் அடுத்தவர்களை சிந்திக்க வைக்கும் சில கருத்துக்களைக் கூறினால் பிறரது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் உதவுபவராகிறீர்கள்! வெட்டிப் பேச்சுப் பேசினாலும் நல்லவர், தீயவர்களை பகுத்தறியும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் பேசுவோம்! நாம் இல்லாதபோதும் நம்மைப் பாராட்டும் விதமாக! நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - திருக்குறள், நீத்தார் பெருமை 3:28 (குறளின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்) தமிழ் மகனே இரா. பானுமதி, மன்னங்காடு வடக்கு சங்கொலி எழுந்தது சங்கடம் தீர்ந்ததுதைரியம் கொள்வாய் தமிழ் மகனே சூரியன் விழித்ததும் கதிரொளி கண்டதும் கவலையை விடுவாய் தமிழ் மகனே ஆற்றல் நிறைந்து ஆக்கம் உயர்ந்திடும் பேதைமை விடுவாய் தமிழ் மகனே வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட விலகிடும் சஞ்சலம் தலை நிமிர்ந்து மங்கள சங்கொலி மகிழ்ந்திட கேட்குது மயக்கத்தை விடுவாய் தமிழ் மகனே தமிழினம் என்றால் தரணி போற்றிடும் தமிழுக்கு என்றும் தனிஇடம் உண்டு! நாளைய சரித்திரம் வே. வெங்கடாசலம், மன்னங்காடு வடக்கு ஓ மனிதா...!தோல்வி கண்டு துவண்டு விடாதே – அது வெற்றியின் அறிகுறி ஏழ்மை கண்டு ஏங்கி விடாதே – அது நிலைகாட்டும் கருவி மடமையில் மயங்கிவிடாதே – அது அறிவுக்கு எதிரி அச்சம் கொண்டு அடங்கிவிடாதே – அது வீரத்திற்கு எதிரி பசிப்பிணியில் புழுங்கிவிடாதே – விடுத்து உணவுக்கு விதைபோடு காதல் தோல்வியில் கலங்கிவிடாதே – அது கலியுகத்தின் துட்சம் மனிதனே நினைவுகொள்...! கல்லறையில் எழுதப்படுவதல்ல உன் சரித்திரம் உன் நம்பிக்கையில் முயற்சியில் உழைப்பில் தோன்றுவது தான் நாளைய சரித்திரம் From: www.mannankadu.org/publications தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு: பொறுப்புடன் செயலாற்றுதல். பொருளீட்டி உயர்தல். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் தேவை. நீங்கள் சமுதாயப் பொறுப்பிலும் பங்கேற்றுக்கொண்டு அத்துடன் பொருளீட்டவும் விருப்பம் உள்ளவரா? சமையல் வேலையை விருப்பமுடன் செய்பவரா? நாளொன்றுக்கு இரண்டு, இரண்டரை மணி நேரம் வேலை செய்யத் தயாராய் உள்ளவரா? எழுதப் படிக்கவும் சிறு கணக்குகள் போடவும் தெரிந்தவரா? அப்படியானால் மேலே படியுங்கள்.வங்க தேசத்தில் ‘கிராமீன் வங்கி’ எனும் கிராம மக்களை மேம்படுத்தும் வெற்றிகரமான அமைப்பு இயங்கி வருகிறது. இந்த புகழ் பெற்ற நிறுவனம் மிகச் சிறிய முதலீடுகளின் மூலம், பெண்களை அடிப்படையாகக் கொண்ட சிறிய குழுக்களை உருவாக்கி, அவர்களின் உழைப்பை மூலதனமாக்கி, ஆக்கமுள்ள தொழில்களில் ஈடுபடுத்தி அவர்தம் குடும்பப் பொருளாதார முன்னேற்றத்திற்கு வகைசெய்து பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறது. வங்கியைக் கருவியாகக் கொண்ட இந்த சமுதாய நலப் புரட்சியை ஏற்படுத்தியவர் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் எனும் மாமனிதர் ஆவார். சமுதாய, பொருளாதார மாற்றங்களை பெரிய அளவில் கண்டு கொண்டிருக்கும் நாம், சமீப சில ஆண்டுகளில் கண்கூடாகக் கிராமங்களில் காணும் அவலம் ஒன்று உண்டு. அது எதுவெனில், வேலைத் தொழிலாளராய் இருக்கட்டும், மனைவியை இழந்த ஆடவராய் இருக்கட்டும், வீட்டிலிருக்கும் முதியவர்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவருமே தமது வயிற்றை நிரப்புவதற்கு அன்றாடம் தடுமாறிக் கொண்டிருப்பதுதான். இருப்பினும் அவர்கள் எவ்வாறோ வழிகண்டு தமது பிரச்சினைகளை சமாளித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுப் பொட்டலங்களை விற்கும் கடைகளே இவர்களின் சரணாலயங்கள். சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்ட தரமான உணவுக்காக, சமுதாய விளிம்பில் தள்ளப்பட்டு ஏங்கி நிற்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் நம்மைச் சுற்றி கூடிக்கொண்டே செல்கிறது என்பதுதான் நாம் உணர மறுக்கும் உண்மை. இந்த சிறிய பிரச்சினைக்கு வழிகாண நம்மிடம் திறமை இல்லையா அல்லது நேரமில்லையா? நாள் முழுதும் வயல்வெளிகளில் வெயிலில் காய்ந்துகிடந்த நம் பெற்றோர்களின், முன்னோர்களின் காலம் நம் கண் முன்னேயே வரலாறாகிவிட்டது. நம்மிடம் அபரிமிதமாக வந்துசேர்ந்துவிட்ட ‘நேரம்’ எனும் மதிப்பற்ற செல்வம் பெரும்பாலும் தூக்கம், அதற்கப்பால் டிவி, யூடியூப், வாட்ஸ்ஆப் எனும் ஊடகப் பொழுதுபோக்கிலேயே செலவிடப்படுகிறது. ஊராரின் பல்வேற்பட்ட விழாக்களிலும், சாலையில் நின்று பேசியும் தேவைக்கு அதிகமான நேரத்தினைச் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு தம்மைச்சுற்றி ஒரு திரையை உருவாக்கிக் கொண்டு ‘சுபிட்ச’மாக இருப்போருக்கு இடையில், கையில் இருக்கும் நேரத்தை ஓரளவு சிரத்தையுடன் முயன்று பயனுள்ளதாக்குவதற்கும், உடல் சக்தியை தரமான செயல் செய்யப் பயன்படுத்த எண்ணுவோரும் ஆங்காங்கே இருக்கக் கூடும். அவ்வாறானவர்களை ஒருங்கிணைப்பதே இந்த ‘கிராமீன்’ முயற்சி. சிறிய அளவில் தரமான, சுகாதாரமான உணவினைத் தயாரிக்க, அதைப் பொறுப்புடன் தேவையுள்ளோருக்கு பகிர்ந்தளிக்க விருப்பமுள்ள 4-5 பெண்கள் ஒன்றுகூடி செயல்பட அழைக்கப் படுகிறார்கள். எவ்வாறு செயல்படுவது, தொழில் விரிவடைவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். ‘நானே முதாலாளி, நானே தொழிலாளி’ எனும் இந்த ‘கிராமீன் உணவு’ அமைப்பில் பங்கெடுப்போர் அனைவரும் சமம். உயர்வு தாழ்வுக்கு இடமில்லை. பங்காளர்களின் ‘பொறுப்பு-உழைப்பு’ எனும் இருபக்க அச்சாணிகளே இந்த உணவு வண்டியை ஓட்டிச்செல்லும். விரயமாகும் உடல் சக்தி பொருள் சக்தியாக மாறுவதால், சேரும் வருவாயும் பங்கிடப்படும். பங்காளராக விருப்பமுள்ளோர் கீழ் கண்டவற்றைக் கருத்தில் கொள்ளவும். 1. நாளொன்றுக்கு ஓரிரு மணிநேர உழைப்பே முதன்மையான மூலதனம். 2. சிறிய முதலீடு: ஒரு பங்காளரின் முதலீடு ரூபாய் 2500 மட்டும். 3. மிதிவண்டி, ஸ்கூட்டர் வைத்திருப்பது நலம். கட்டாயமில்லை, எனினும் (உரிமத்துடன்) முறையாக ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம். 4. விறகு, காஸ் அடுப்புகளில் சமைக்கத் தெரிந்திருத்தல் நலம். 5. காய்கறி வாங்குவதிலிருந்து வரவு செலவுகளைக் கவனிப்பது வரை இடைப்பட்ட அனைத்து தொடர்புடைய வேலைகளிலும் மாறிமாறிப் பங்கேற்க வேண்டும். 6. வயது வரம்பில்லை. பட்டதாரிகளும் பங்காளராக ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஆயினும் தனிச் சலுகை ஏதும் இல்லை. 7. இவ்வமைப்பில் ‘தொழிலாளி’யாய் இருப்பதால் சம்பளம் என்பது இல்லை. ஆனால் ‘முதலாளி’யாய் இருப்பதால் இலாபத்தில் பங்கு உண்டு. ஆர்வமுள்ளோர், தமது பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை 9962565743 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்ஆப் செய்யவும் (அழைக்க வேண்டாம். உங்கள் விருப்பத்தைத் தெரிந்து கொண்டபின் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம்). சோறின் றமையா துலகெனின் யார்யார்க்கும் உழைப்பின் றமையா துயர்வு - கிராமீன் புதுக்குறள்! நன்றி காட்டுமஞ்சரியின் ஆக்கப் பணிக்கு உதவும் பொருட்டு, முனைவர் மு. சிவகுமார் அவர்கள் TOSHIBA மடிக்கணினியை வழங்கி உதவியுள்ளார். திரு. சிவகுமார் அவர்களுக்கு ஆசிரியர் குழு மனங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறது. ‘கீச்சு’கள்... கோ.வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு ஏ குயிலே நீயோ ?உன்கூவல் இதுவல்ல ஏ மயிலே நீயோ ? உன்அகவல் இதுவல்ல பறக்கும் சகாக்களே கொஞ்சம் கண்டியுங்கள் இயற்கை செயற்கையாவதற்குள் முடிந்தால் தண்டியுங்கள் பொய்யாகத்தான் தெரியும் சற்றுச் சிந்தியுங்கள் கண்களை மூடுங்கள் நிசப்தத்தை உணருங்கள் அந்தக் கீச்சொலிகள் உங்கள் காதுகளையும் எங்கோ தொலைவிலிருந்து நாள்முழுவதும் இசைக்கும்! சில விட்டுவிட்டு சில விடாத 'ஹாரன்'களாய்! அடையாளம் பட்டுக்கோட்டை கவிப்பிரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு) பஞ்சநாதன் ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு பட்டணத்தில் இருந்து மூன்று சக்கரவாகனத்தில் தனது சொந்த ஊருக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனது இளமைக்கால நினனைவலைகள் இடையிடையே மின்னிமின்னி வந்து சென்றன.எங்கு பார்த்தாலும் உழவர்கள் கலப்பையை தோளில் சுமந்துகொண்டு ஏர் மாடுகளை மல்லுக்கட்டி இழுத்துக்கொண்டு வயல்களை நோக்கிப் போவதும், போகின்ற வழிகளில் நாற்றுவிடப்பட்டுள்ள நாற்றங்கால்கள் சிறு சிறு குளங்கள் போலவும், பெரிய பெரிய பாத்திகள் போலவும் நீர் நிரம்பிக் காணப்பட்டன. விதைக்கப்பட்ட விதைநெற்களை சிட்டுக்குருவிகள் போன்ற சிறு சிறு பறவைக் கூட்டங்கள் கொத்தித் தின்றுவிடாமல் அடிக்கடி விவசாயிகளின் குழந்தைகள் சென்று பார்வையிட்டு வந்த வண்ணம் இருந்தனர். காவிரிநதியின் கிளை ஆறுகளை வெகுதூரம் வரை பெரிய மற்றும் சிறிய வாய்க்கால்களாக வெட்டி பாசனத்திற்குப் பயன்படுத்துவர். அந்த வாய்க்கால் நீரோட்டம் சில்லென்று செல்லமாக வீசும் மெல்லிய பூங்காற்றாய் தவழ்ந்து தவழ்ந்து அருகில் செல்வோரின் மேனியெங்கும் சிலிர்க்க வைக்கும். ஏலே முனியா! நம்ம வயலுக்கு நாளைக்கு பரம்படிக்கனுமுடா, ஒன்னு ரெண்டு பயலுக இருந்தா கூட்டிக்கிட்டு வெள்ளென வந்திரு, வெதெ நெல்லு மூட்டையில கட்டி தண்ணிக்குள்ள கெடக்குது. அது முளை விடுறதுக்குள்ள நாத்து விட்டாகணும், என்றார் சிவலிங்கம். வயல்கள் தோறும் வரப்பு வெட்டுவதும், எருவடிப்பதும், நீர்ப்பாய்ச்சுவதும், நாற்றுப்பறிப்பதுமாக பல்வேறு விவசாயம் சார்ந்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முந்திக்கொண்டு நாற்றுவிட்ட பலரின் வயல்களில் நாத்து விளம்புவதும், பத்துப் பனிரெண்டு பெண்கள் முக்காடிட்ட படி இணைவரிசையில் குனிந்து நின்றுகொண்டு சேலைகளை மடித்து இடுப்பில் சொறுகிக்கொண்டு நாற்றுமுடிகளைப் பிரித்து சிறு சிறு கொத்துகளாக இடதுகையில் நாற்று முடியும் வலது கையினால் சேற்று வயலில் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் நாற்றுக் கொத்தின் வேர் பகுதியுடன் சேர்த்து சேற்றில் ஆழ அழுத்தி நடவு நடுவார்கள். சிலர் கயிற்று நடவு நடுவதும் உண்டு. கயிற்று நடவு என்றால் நடவு நடப்படும் வயலின் இணை வரப்புகளில் இரு பக்கங்களிலும் முளைக்கொம்புகளை அடித்து இரண்டு கொம்புகளிலும் நீண்ட கயிற்றினைக் கட்டி நாற்றுகள் ஒரே வரிசையாக அமையுமாறு செய்து கையிற்றை ஒட்டி வரிசையாக நட்ட பிறகு அடுத்த வரிசைக்கு செல்வார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியின் முழு அரங்கேற்றமும் கண்கொள்ளா காட்சிகளாக இருந்ததெல்லாம் மனதில் அசைபோட்ட வண்ணம் கண்களை ஆவலுடன் சாலையின் இருமருங்கும் ஓடவிட்டபடி வந்துகொண்டிருந்தான் பஞ்சநாதன். ஆட்டோ குண்டும் குழியுமான செம்மண் ரோட்டில் குலுங்கி குலுங்கி குலுங்கி குலுங்கி படாத பாடுபட்டு வந்தது. ஊர் வந்ததும் முதலில் வரவேற்றது தனது இளைய பிராயத்தில் பாலிய நண்பர்களுடன் எத்தனையோ முறை மேலே ஏறிக் குதித்து ஆற்றில் நீந்தச் சலிக்காது இடம் கொடுத்த தன் முழுஉருவு இழந்து பரிதாபமாக நின்ற பாலம் தான். அது எதோ மனதை திடுக்கிட வைத்தது. கரையைத் தழுவி முழுகொள்ளளவும் நீரோடிய ஆறு. ஆடிப்பெருக்கில் ஊரே குதூகலித்த ஆறு. ஆடவர்களும் சின்னஞ்சிறார்களும் தேர்கட்டி இழுத்து வந்து ஆற்றுக்கு அர்ப்பணித்துக் கொண்டாடி மகிழ்ந்த ஆறு. மாதர்கள் ஆசை ஆசையாக நவதானிய முளைப் பாலிகைகளை வளர்த்து அணியணியாய்த் திரண்டு ஆற்றில் மிதக்கவிட்டு அழகிற்கு அழகு சேர்த்த ஆறு. இத்தனைக்கும் மேலாக ஊருக்கே சோறுபோட்ட ஆறு. பாளம் பாளமாக வெடிப்புற்றுக் காணப்பட்டது. ஆற்றின் கரைகளில் கோரைப்புற்கள் கொடிகட்டி ஆடிநின்ற காலம் மலையேறிப்போக, அதையே நம்பி அவற்றை அறுத்து, கிழித்து, காயவைத்து, பதப்படுத்தி, சாயம் ஏற்றி, பாய் நெய்து பிழைத்த குடும்பங்கள் எத்தனை! எத்தனை!! இன்று அந்த ஆற்றோரக் களிமண்கூட வெடித்து வெடித்து சிதறிக் கிடந்தன. சற்றுத் தொலைவில் வானளாவ உயர்ந்து நிற்கும் வைகோற்போர்கள் வரிசையாக நிற்கும் வண்ணாத்தி ஓடை களத்துமேடு இருந்த அடையாளத்தையே காணமுடியவில்லை. அடடா எத்தனை மாடுகள் பூட்டி போரடித்த இடம். எத்தனை பேர்களின் வயிற்றுப்பாட்டிற்கு வழி செய்த இடம், இப்படி அடையாளம் தெரியாது கிடக்கிறதே என்று எண்ணியவனின் கண்களை நிலைகுத்தச் செய்தன, அவன் கண்ட மற்றொரு காட்சி. ஒரு நாற்றங்கால் முழுமையுமே பட்டுப்போய் கன்னங்கரேலென்று கருகிய பயிரைக் கண்டபோது, உள்ளமே கருகியதுபோல் தோன்றியது. நாற்றங்காலே கருகிப்போகும் கொடுமையையும் காணவேண்டி வந்ததே என்று. மனது துடிதுடித்தது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமா? நாம் பிறந்த மண்ணா? எங்கும் பசுமை போர்த்திய இயற்கை அன்னை எழிலெலாம் இனிமேல் பம்ப் செட்டுகளின் புண்ணியத்திலே தானா? நினைக்க நினைக்க மனது கனத்தது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு என்ற செய்த்தித்தாள் விளம்பரம் இவை எவை பற்றியும் கவலையின்றி தலைகீழே தொங்கிக்கொண்டிருந்தது. இரசவாதம் துரைசாமி நவநீதம், மன்னங்காடு இக்காலத்தில் நாம் வேதியியல் என அழைக்கும் அறிவியல் பிரிவுதான் முன்பு ரசாயனம் என்றும், அதற்கும் முற்காலத்தில் ரசவாதம் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால், நாம் இங்கு பேசப்போவது, நாம் சாப்பிடுகிறோமே ரசம், அது பற்றிய வாதம்! அதாவது தக்காளி ரசவாதம்! வெங்காயத்தை உரித்தாலும் சரி, அதன் விலை ஏறினாலும் சரி, கடையில் வாங்கினாலும் சரி, கண்ணில் நீர்வருகிறது. ஆனால் தக்காளியோ, கொழுகொழு, மொழுமொழுவென்று, பார்த்தாலே சிரிப்புதான் வருகிறது. அதுமட்டுமா, நியாமான விலையைவிடவும் தக்காளி விலை அவ்வப்போது குறைவாகத்தானே கண்ணுக்குப்படுகிறது. விலை குறைந்துவிட்டால் சிரித்துக் கொண்டுதானே வங்கிச் செல்கிறோம்!அது இருக்கட்டும், தக்காளி கனி வகையைச் சேர்ந்ததா, அல்லது காய் வகையைச் சேர்ந்ததா? அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் தக்காளிப்பழம் முளைக்கக்கூடிய விதையைக் கொண்டிருப்பதால் அது பழவகைதான். ஆனால் அது பழக்கடையில் கிடைப்பதில்லை! காய்கறிக்கடையில் கிடைப்பதால் அது காய்கறி வகையும்தான். பல நாடுகளில் சட்ட ரீதியில் தக்காளியாகப்பட்டது காய்கறி வகையேயென அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த நாடுகளில் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டிருப்பதே. நமக்கு அந்த பிரச்சினை இல்லை. நம்மில் யார் கடந்த முறை காய்கறி வாங்கியபோது ரசீதில் 18 சதவீதமோ, 118 சதவீதமோ தக்காளிக்கு ஜி.எஸ்.டி. வரி கட்டியது? அரசின் ஏமாளித்தனத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. தக்காளிச் சிரிப்பு! ஐரோப்பியர்களின் சாப்பாடு சுவைக்கத் தொடங்கியதே அக்காலத்தில் அவர்கள் கப்பல் கப்பலாக ஏற்றிச் சென்ற நம் ஊர் புளி, மிளகு, ஏலம், கிராம்பு போன்றவற்றை அவர்கள் உணவில் போட்டதால்தானாம் என வரலாறு கூறுகிறது. உண்மையிலேயே ஐரோப்பிய உணவுகளைச் சாப்பிட்ட இந்தியர்களுக்கு மட்டும்தான் தெரியும் ஐரோப்பியர் உணவில் எதைப்போட்டாலும் தேறாது என்று! அப்படியென்றால், நம்மூர் உணவு எப்போதுமே சுவையுடனேதான் இருந்ததா? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே நமது சாப்பாட்டை மிஞ்ச எதுவுமே இல்லையா? வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று சும்மாவா சொல்கின்றோம்! அப்படியானால் கேரட்டும், சௌவ்சௌவ்வும், பீட்ரூட்டும் எங்கிருந்து வந்தன? ஐரோப்பியர் நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டும் சென்றனர், சிலவற்றைக் கொடுத்துவிட்டும் சென்றனர் என்பதுதான் உண்மை போலும். இனி ரசவாதத்திற்கு வருவோம். தக்காளி 1945ல் தான் மன்னங்காட்டிற்குள் நுழைந்தது என்பதும் அப்போதுதான் ஊரில் முதன் முதலில் தக்காளி ரசமும் தயாரிக்கப்பட்டது என்பதும், அந்த முதல் தக்காளி ரசத்தைச் சுவைத்த ஊர்ப் பெண்மணிகள் முகம் சுளித்ததும் வரலாற்று உண்மை! சிரிக்கிறீர்களா? அதுதான் தக்காளிச் சிரிப்பு! தக்காளி ரசச் சிரிப்பு! அமரர் மு.வீ. துரைசாமி மற்றும் பச்சைப்பிள்ளை என்கிற அமரர் பொ. அருணாச்சலம் ஆகிய இருவருமே இக்கிராமத்தில் முதன் முதலில் தமது குடத்தடிகளில் (வீட்டுக்கு வெளியில் கை, பாத்திரங்களைக் கழுவுமிடம்) தக்காளி விதைகளை ஊன்றி முளைக்க வைத்தவர்கள். அவர்கள், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ விழுந்த சிலகாலத்தில் சிங்கப்பூர், மலேயாவிலிருந்து தாயகம் திரும்பியபோது தம்முடன் தக்காளி விதைகளையும் எடுத்து வந்திருந்தனர். முளைக்க வைத்துக் காய்த்த செடிகளில் இருந்து பறித்த தக்காளிப் பழங்களைப் பயன்படுத்தி ஊரில் முதல் தக்காளி ரசத்தைத் தயாரித்தவர்களும் அவர்களே. அவர்களுடைய தக்காளி ரசங்களை ருசித்துவிட்டு முகம் சுளித்த உள்ளூர் பெண்மணிகளின் முகத்தைப் பார்த்த அந்த இரு தக்காளி ரசக்காரர்களின் முகம் எப்படி இருந்திருக்கும்? நினைத்தால் சிரிப்புதான் வருகிறது, தக்காளி ரசச் சிரிப்பு! கூழும், பழஞ்சோறும், புளிக்குழம்பும் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் ரசத்தண்ணிக்கு எளிதில் அங்கீகாரம் அளித்துவிடுவார்களா என்ன? இது ஒரு ரசமான விஷயம் அல்லவா? அச்சமயத்தில் சில காலத்திற்கு ஊரெங்கும் தக்காளி ரசப் பேச்சுத்தானாம், கிண்டல்தானாம்! மலேயாவில் தக்காளி கிடைத்ததென்றால், அது மலேயர்களின் பாரம்பரிய உணவுப் பயிரா? இல்லை, அவர்கள் பாரம்பரிய உணவில் தக்காளி இல்லை. மலேயர்கள் நமக்குச் சற்று முன்னரே கொழுமொழு தக்காளியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தக்காளி ரசம் வைக்கக் கற்றுக்கொண்டு, ஒருவேளை முகம் சுளிக்காமல் சாப்பிட்டிருப்பர் போலும்! தென் அமெரிக்க நாடுகளே தக்காளியின் பிறப்பிடம், பூர்வீகம் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அங்கிருந்து ஐரோப்பியர்கள் பல புதுப்புது வகையான விதைகளை எடுத்தோ, கடத்தியோ சென்று உலகின் வெவ்வேறு இடங்களில் பயிரிட்டனர் (இவ்வாறு தாவரங்களும் விலங்குகளும் அவர்களால் இடம்விட்டு இடம் எடுத்துச் செல்லப்பட்டுப் பரவியதை ‘கொலம்பியன் எக்சேஞ்ச்’ என்பர் வரலாற்று அறிஞர்). அவ்வாறு ஊர்சுற்றி விட்டுத்தான் தக்காளியும், தக்காளி ரசமும் மன்னங்காட்டிற்கு வந்து சேர்ந்தது என்றால் சிரிப்பாக இல்லையா? தக்காளி ரசவாதச் சிரிப்பு! Dec52019 முதியோர் இல்லம் காயத்ரி வீரமுகிலன், மன்னங்காடு வடக்கு பரிதவித்த அன்பு மகனின்எதிர்காலத்தை எண்ணி தன் மானத்தை அடகு வைத்து தரமான கல்வி கொடுத்து தரணி போற்றும் தலைவனாய் மதிக்கவைத்த பெற்றோர்களை உள்ளத்தில் தாங்காவிட்டாலும் சொந்த இல்லத்தில் இருக்க இடமின்றி இன்று முதியோர் இல்லத்தில் வைப்பது தான் உனக்கு கல்வி கற்றுத் தந்த அறிவோ? ‘வாசகர் வார்த்தைகள்’ |காட்டுமஞ்சரி ஒரு தரமான இதழாக வெளிவர ஆசிரியர் குழுவினரும், ஆலோசகர்களும், ஆர்வலர்களும் தத்தமது நேரங்களை நன்கொடையாக்கி இதழை முழுமையாக்கித் தந்திருக்கின்றனர். |‘வாசகர் வார்த்தைகள்’ மற்றும் தகவல் படிவம்: www.mannankadu.org/kaattumanjari/vaasakar தாய் மனசு இரா. இராம்ப்ரசாத், மன்னங்காடு கிழக்கு ஜன்னல் ஓரத்தில் இடம் தேடிக்கொண்டு மனதில் அலைமோதிய நினைவுகளோடு ஊருக்கு பயணமானான் கதிரேசன். கண்ணுக்குள் நிலைகுத்தி நின்றாடியது மனைவியின் பிடிவாதம். அங்க போயி மரம் மாதிரி நிக்காம ஒங்க அப்பன் ஆத்தாகிட்ட பேசுங்க! என்ன பேச சொல்றியே, நீயே போய் கேட்டுப்பபாறேன். ஒத்தையடிப் பாதை எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு அவரவர் ஊருக்குள்ள அம்மையப்பனே! மன்னங்காடு சுந்தர்ராஜ் (அ. சோமசுந்தரம், மன்னங்காடு மேற்கு) அனுதினமும் உனைத் தொழுவேனே!அற்புதக் கூத்தினை அனுதினமும் செய்வோனே! அணுவின் அணுவாகி அருட்பெரும் பேரொளியாகி அண்டங்களும் பிரகாசித்திட அளப்பரியா ஆற்றலாகி அனைத்தயும் தனதாக்கி அன்னையினும் கருணையாகி அன்பின் பொருளாகி அகிலங்களை ஒன்றாக்கி அடிமுடியைத் தேடவைத்து அண்ணாமலையாக உருவாகி அன்னையாய் அப்பனாய் அழகிய நடனமாடி அடியாரின் இதயவாசியாகி அறம்புகழும் சித்தனாகி அருவமாகி உருவமாகி அறுபத்து நான்கு கலையுமாகி அதிரவைக்கும் கலைஞனாகி அக்கினியாகி அன்னமாகி அருங்குளிராகி அறிவுத்திறனாகி ஆடலாகி பாடலாகி ஆனந்தப் பரப்பிரம்மமாகி ஆட்சியும் செய்கின்றாய்! ஆறுசக்கரப் பூக்களிலும் ஆயிரமிதழ் தாமரையிலும் ஆன்மாவையும் கவனித்திடவே அம்மையப்பனே! அனுதினமும் உனைத்தொழுவேனே! (From: www.mannankadu.org/publications) இனியண்டார் கோயிலின் பரிணாமம் இனியண்டார் அல்லது இனியாண்டவர் கோயில் என்றழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் வடக்கு மற்றும் தெற்கு மன்னங்காட்டிற்கு இடைப்பட்ட பகுதியில், சாலையின் கீழ்புரத்தில் அமைந்துள்ளது. இனியண்டார் ஆலமரம்
புயலெனும் ஆழிப்‘பெருங்காத்து’ - ஒரு வரலாற்றுப் பார்வை துரைசாமி நவநீதம், மன்னங்காடு ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டிப் போரடித்த’ தமிழர் கதையை பழஞ்செய்யுளில்தானே படித்திருக்கிறோம். அத்தமிழர் காட்டு யானைகளை அல்லவா தமது நெற்போரில் பயன்படுத்தியிருப்பார்கள். இந்த ‘கஜா’ எனும் யானை கடலில் இருந்தல்லவா வந்து நமது மா, புளி, தென்னை மரங்களுடன் சேர்த்து நம்மையும் துவைத்துப் போரடித்துவிட்டுச் சென்றது. என்ன செய்ய! கனிவில்லையே கஜாவுக்கு. மந்தமாருதத்தின் அடங்கா மூத்த சகோதரியோ இந்த கஜாவெனும் சண்டமாருதம்? இந்த அட்ச ரேகைகளுக்கு வெளியே, அதாவது கோட்டைப்பட்டினத்திற்கு தெற்கிலும், தரங்கம்பாடிக்கு வடக்கிலும், கரையைக் கடந்த புயல்களினால் இவ்வூரின் மரங்களுக்கு காற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, 1984 டிசம்பரில் சிதம்பரத்திற்கும் கடலூருக்கும் இடையில் கடலைக் கடந்த புயல் மன்னங்காடு ஊரில் மரங்களையோ வீடுகளையோ சேதமாக்கவில்லை, ஆனால் அப்புயலால் ஏற்பட்ட சற்று காற்றுடன் கூடிய வெள்ளப் பெருக்கால் நெல் வயல்களுக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது. அவ்வெள்ளத்தால் ஊருக்குக் கிழக்கில் உள்ள பாட்டுவனாச்சி வடிகால் நிரம்பி கரைபுரண்டு பிச்சினிக்காட்டையும் சருவனோடை-அடம்புலியோடையையும் தொட்டுக்கொண்டு ஓடியது பலருக்கும் நினைவிருக்கும். அதுபோல், ஊருக்கு மேற்கில் வண்ணாத்தி ஓடை, கரம்பை தாழ்நிலப்பரப்பு, காவளம் நீர்நிலை போன்றவை வெள்ளநீரால் இணைந்து பெருங்கண்மாய் போல் காட்சியளித்ததும் இந்த 1984 வெள்ளத்தில்தான். பட்டியல்கள் காட்டுமஞ்சரிக்காக உருவாக்கப்பட்டவை. டிசம்பர் 2019. Data source IMD 2019. ‘அ’னா எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு தனக்கு எதிரே அமர்ந்திருந்த தம்பதியை கேள்விக்குறியுடன் நோக்கினார் மனநல மருத்துவர் டாக்டர் இரவீந்திரன். அவர் அருகில் தனது பெற்றோருடன் சுமார் ஏழு வயதில் ஒரு சிறுவன். ‘உங்களுக்கு என்ன ப்ராப்ளம்’? எனும்போது பையன் மேஜையில் கையூன்றினான். ‘எங்களுக்கு ஒன்றும் ப்ராப்ளம் இல்ல சார், இதோ இவன்தான்’! சுதாகர் தன் மகனை நாற்காலியில் சரிவர அமர்த்தினான்.‘இவனுக்கு படிப்பே வர மாட்டேங்குது டாக்டர்... அதுவும் இங்க்லீஷ் மொத்தமா ரொம்ப மோசம்’! சுதாகர் சொல்லி முடிப்பதற்குள் நளினி உதடு மடித்து அடிக்க ஆரம்பித்தாள். ‘நோ, நோ அடிக்கிறதுக்கு நீங்க இங்கே வரலை. பிரச்சினையை சொன்னீங்கன்னா அதுக்கு ட்ரீட்மென்ட் குடுப்போம்...’ சுதாகர் சொல்ல ஆரம்பித்தான். சுதாகர் நளினி தம்பதியின் ஒரே மகன் திலீப். தம்பதி இருவரும் வேறு வேறு வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள். எல்லா பெற்றோரையும் போல இரண்டு வயதில் திலீப்பை ப்ரீகேஜியில் சேர்த்து மூன்று வயதில் எல்கேஜியில் சேர்த்தார்கள். திலீப் ஏபிசிடி எழுதுவதைக் காட்டிலும், ‘அ’னா, ‘ஆ’வன்னாவில்தான் அதிக கவனம் செலுத்தின். வீட்டுச் சுவர்கள், சோபா, மேஜை, டீப்பாய் என எங்கினும் உயிர் எழுத்துக்களை நேராகவும், தலைகீழாகவும், பக்கவாட்டிலும் சாக்பீஸ், ஸ்கெட்ச் பேனாக்களில் எழுதி ‘அழகு’ படுத்துவான். நளினி ஆங்கில எழுத்துக்களை எழுதி பயிற்சி கொடுப்பாள். திலீப் ஏனோ தானோவென்று கிறுக்கி வைப்பான். பள்ளியில் ஆசிரியர்கள் ‘இவனுக்கு தமிழ் நல்லா வருது மேடம்’ ஆனா இங்க்லீஷ்ல கொஞ்சம்கூட இன்ட்ரெஸ்ட் இல்லே...! பேசாம நீங்க தமிழ் மீடியத்துலேயே போட்ருங்க. எங்களுக்கும் தலைவேதனை குறையும்!’ என்றார்கள். தீயை மிதித்தது போலானார்கள் இருவரும். ‘அப்புறம் என்ன? தமிழ் மீடியத்துல போடவேண்டியதுதானே’ என்றார் இரவீந்திரன். ‘அதெப்படி டாக்டர்? எங்க வீட்டு வேலைக்காரி, பால்காரன், கார் டிரைவர் வீட்டுப் பிள்ளைங்க எல்லாம் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கும் போது நாங்க எப்படி தமிழ் மீடியத்துல சேர்க்கிறது? சொசைட்டில நாங்க எப்டி தலை நிமிர்ந்து நடக்கிறது?’ என்றாள் நளினி. இரவீந்திரன் சிரித்துக்கொண்டார். ‘ம்... அப்புறம் என்ன செஞ்சீங்க?’ ‘ஸ்கூலே இவன ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுது... ஆனா அவன் மாறல... அதே பல்லவிதான்...? ’இப்ப இவன் செகன்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறான். இதுவரை மூணு ஸ்கூல் மாத்திட்டோம்...!’ ஆனா எல்லா ஸ்கூல்லயும் இவன்தான் தமிழ்ல ஃபர்ஸ்ட்! ஆனா வேற சப்ஜெக்டுல எல்லாம் போராடி பாஸ் மார்க் வாங்க வைக்க நாங்க படறபாடு இருக்கே...’ இரவீந்திரன் புன்னகைத்தவாறு கையமர்த்தினார். ‘கணித மேதை இராமானுஜம் தெரியுமா?’ ‘தெரியும் டாக்டர்... அவரத் தெரியாம... இருக்கமுடியுமா?’ என்றான் சுதாகர். ‘அவரும் இதுமாதிரிதான் சின்னவயசுல கணக்குல மட்டும் நூத்துக்கு நூறு வாங்குவாராம். பாக்கி சப்ஜெக்ட்ல பெயில் மார்க் கூட வாங்கி இருக்கார்...’ நளினியும் சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘இப்போ உங்களுக்குத்தான் ட்ரீட்மென்ட் குடுக்கணும்! உங்கள் பையன் பெரிய ஜீனியஸா வருவான் சார்...! அவனுக்கு தமிழ்ல ஆர்வம் அதிகம்! நீங்க அவனை ஒரு டாக்டராவோ, என்ஜினியராவோதான் பாக்குறீங்க...ஏன்? தமிழ் மீடியத்துல படிச்ச அத்தன பேரென்ட்சும் தமிழை மரியாதைக் குறைவாத்தான் நினைக்கிறாங்க...! உங்க பையன் விளையாட்டுல ஆர்வமா இருந்தா என்ன செய்வீங்க? ‘தனியா ஸ்போர்ட்ஸ்க்கு கோச்சிங் கொடுப்போம்...’ என்றாள் நளினி. ‘அது மாதிரிதான் தமிழும்! தமிழுக்குன்னு கோச்சிங் கொடுத்து இலக்கண, இலக்கியமெல்லாம் படிக்க வைங்க! இருவரின் பார்வையும் டாக்டரை ஆச்சரியத்துடன் பார்த்தன. ‘நீங்க ரெண்டு பெரும் படிச்சு உயர் பதவியில இருக்கறவங்க. அவன அவன் கோணத்துல பார்த்து தமிழ் மீடியமே படிக்க வைங்க! அவன் எதிர்காலத்துல ஒரு பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ, இன்னும் ஒரு தமிழ் அறிஞனாகவோ வர வாய்ப்பிருக்கு...! இருவரும் திலீப்பைத் தூக்கி முத்தமிட்டார்கள். டாக்டர், திலீப்பின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அற்புத சாதனை நம்முள்ளே யோகமாய்! மன்னங்காடு சுந்தர்ராஜ் (அ. சோமசுந்தரம், மன்னங்காடு மேற்கு) யோகம் என்பது செல்வ சிறப்பல்ல, உயிரின சிறப்பும் இதனுள் சூட்சுமமாக இருக்கும் இறைசக்தியின் சிறப்புமாகும்!. உடல், உயிர், மனம் என்பது பஞ்சபூதத்தின் ஒருங்கிணைப்பாக இருந்து செயல்படுகிறது!சதையும் எலும்பும் நரம்பும் மண் தத்துவமாகவும் உடலாகவும், இரத்தம், வியர்வை, எச்சில், சுக்கிலம், சுரோணிதம், சளி ஆகியவை நீர் தத்துவமாகவும், சுவாசம் எனும் வாயுவாகிய பிராணனன் காற்று தத்துவமாகவும், உண்ட உணவு வலது நாசி வழியாக இயங்கும் அபானன் வாயுவால் எரிக்கப்பட்டு, வெப்பம் எனும் நெருப்பு தத்துவமாக விளங்கி, உடலை அழியாத தன்மையாக பாதுகாக்கிறது! பல மேகங்கள் வானில் வலம் வருவதுபோல் பல எண்ணங்கள் தோன்றும் மனம் ஆகாய தத்துவமாக விளங்கி செயல்படுகிறது! உடல், உயிர், மனம் எனும் மூன்று நிலைகளும் ஒன்றிணைவால் பஞ்சபூதமான நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஒன்றிணைந்து நேர்த்தியாக வலிமையுடன் செயல்பட, இதனை கவனித்து, கண்காணித்து, பாவ புண்ணிய பதிவுகளை செய்யும் ஆறாவது சக்தியாக விளங்கும் ஆன்மா தானே விரும்பி, தன்னை பஞ்சபூதத்துடன் இணைத்து, அதாவது மனதை ஆளுமை செய்து, தான் சார்ந்த உயிரையும் உடலையும் பாதுகாப்பதே யோகமாகும்! இந்த யோகம் எனும் நிலை சுவாசப் பயிற்சி என்பவற்றால் ஆசனங்கள், முத்திரைகள், பிராணயாமம், தியானம், குண்டலினி தியானம் எனும் பயிற்சிகளை கயிறாக பிணைத்து உயிரினை மேன்மைப்படுத்துவதாகும்! யோகம் பற்றி விரிவாக இனிமேல் பயணிப்போம் இனிமையாக! தொடரும்.... புத்தாண்டே பொலிக! ஆ. இரா. பாரதராஜா, மன்னங்காடு மேற்கு ஆங்கிலப் புத்தாண்டே வருக!தீங்கிலா நன்மைகள் பெருக, ஏங்கிடும் ஏழ்மைகள் கருக, ஓங்கிடும் செல்வங்கள் தருக! பொல்லாமை, இல்லாமை ஒழிக! கல்லாமை, கயமைகள் அழிக! வல்லாட்சி, வன்மங்கள் மடிக! நல்லாட்சி நாட்டிலே விடிக! மதவாதம், இனவாதம், மொழிவாதம் தீயதீவிரவாதம், பயங்கரவாதம் என்ற - பக்கவாதங்கள் தொலைக! உயர் - சொர்க்கமென மக்கள் துயர் இன்றி நலத்தோடு வாழ்க! ஊழல்கள் இல்லாத ஆட்சி! உழவர்கள் வாழ்விலே மாட்சி! இளைஞர்கள் உழைப்பால் மாற்றம்! பெண்களின் நிலைமையில் ஏற்றம்! இந்திய நாட்டிலே வருக! உலகினில் உற்சாகம் பிறக்கட்டும்! திலகமென பாரதம் சிறக்கட்டும்! புதியதோர் உலகம் செய்யப் புத்தாண்டே வருக! பொலிக! திரும்பிப் பார்கிறார் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் நம்மைச் சுற்றி எவ்வளவோ மாற்றங்களைப் பார்த்துவிட்டோம். ஆங்கில வழிக் கல்வி, வீட்டுக்கு வீடொரு பட்டதாரி, உயர்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர், ஊருக்குள் தார்ச் சாலைகள் என்று மாற்றங்கள் எனும் பிரளயம் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கிறது.பழையன கழிய வேண்டியதுதான், அதற்காக பழையன மறந்துவிட முடியுமா? நினைவிலிருந்துதான் போய்விடுமா? முறையாக ஓவியக்கலை பயின்ற உள்ளூர்த் திறனாளர் மு. சிவகாரிமுத்து அவர்கள் மன்னங்காடு கிராமத்தின் இரு கோயில்கள் அன்று எவ்வாறு எளிமையாக இருந்தன என‘வாட்டர் கலர்’ முறையில் நமக்குக் காட்சிப்படுத்தித் தந்திருக்கின்றார். 1970வாக்கில் கீழக்காடு முனியன் கோயிலின் தோற்றம். சாலையிலிருந்து மேற்கு நோக்கிய பார்வை. 1965வாக்கில் மேலக்காடு முனியன் கோயிலின் தோற்றம். தெற்கு நோக்கிய பார்வை. உதயணன் யானை மீதேறிய பழங்கதை துரைசாமி நவநீதம், மன்னங்காடு உதயணன் எனும் அன்றைய காப்பியத் தலைவனொருவன் பட்டத்து யானையின் மீது அதன் துதிக்கையில், தந்தத்தில் அடிவைத்து ஏறும் காட்சியை நம் கண்முன்னே படமாக்கிக் காட்டுகிறது ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான ‘உதயணகுமார காவிய’த்தின் கீழ்வரும் செய்யுட்கள்! யாழிசை ஒன்றையே கருவியாகக் கொண்டு இருவேறு யானைகளை, இருவேறு சூழ்நிலைகளில் தன் இசையால் மயக்கி, அந்த மயங்கிய யானைகள் உதயணனைத் தமது மேலேற வைக்கும் அக்கால ‘பாகுபலி’க் காட்சிதாம் இவை!மைவரை மருங்கில் நின்ற மலையென இலங்கு கின்ற தெய்வநல் லியானை கண்டு சென்றதன் வீணை பாடப் பையெனக் களிறுங் கேட்டுப் பணிந்தடி இறைஞ்சி நின்று கையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான் (உதயணகுமார காவியம், உஞ்சைக் காண்டம் 19) விளக்கம்*: கரிய மலைக்கருகில் நின்ற மலைபோன்ற தோற்றமுடைய தெய்வ யானையைக் கண்டு உதயணன் யாழினை இசைத்துப் பாடினான். அந்த இசைக்கு மயங்கிய யானை உதயணனின் திருவடிகளை வணங்கி, தனது துதிக்கையை அவன் தன்மீது ஏறுமாறு கொடுக்க, உதயணன் அந்த யானை மீதேறினான், தவப் பள்ளியை அடைந்தான். ... பிரிந்தநல் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம் பரிந்தநல் காத லாலே பணிந்திடு மாறு போல இருந்துதன் பணிந்த யானை எழின்மருப்பு அடிவைத்து ஏறிப் பெருந்தகை ஏவிக் கோட்டு பெருங்கையால் தோட்டி கொண்டான் (உஞ்சைக் காண்டம் 98) விளக்கம்*: பிரிந்து சென்ற புதல்வர் திரும்பி வந்து அன்பு மிகுதியால் பெற்றோரைப் பணிவது போல், (பிரச்சோதனன் எனும் மன்னனின்) பட்டத்து யானை உதயணனை (அவனது யாழிசைக்கு மயங்கி)ப் பணிந்தது. அதன் தந்தக் கொம்பில் கால்வைத்து ஏறி, அந்த யானை துதிக்கையால் எடுத்துத் தந்த அங்குசத்தைக் கையில் கொண்டான். ... * பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்களின் உரையிலிருந்து எளிமையாக்கப் பட்டுள்ளது. ஐஞ்சிறு காப்பியங்கள்: உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. ஐம்பெருங்காப்பியங்கள்: சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி , குண்டலகேசி. *** ஐஞ்சிறு காப்பியங்கள்: உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி. ஐம்பெருங்காப்பியங்கள்: சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி , குண்டலகேசி. படைப்பாளர் கவனத்திற்கு 1. காட்டுமஞ்சரிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அசலாக, படைப்பாளரின் சொந்த சிந்தனைகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். 2. படைப்புக்கள் தெளிவான கருத்துக்களை உள்ளடக்கி படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும். 3. வேறு எங்கோ முன்பே இதழ்களில் வெளியான மற்றொருவரின் படைப்பினைத் தனதென கூறிக் கொண்டு மற்றுமொரு இதழில் வெளியிட முயல்வது படைப்பாளர் தர்மமன்று. சட்டத்திற்கும் புறம்பானதாகும்! 4. படைப்புகள் ஆராயப்பட்டு தகுதியான படைப்புக்களை ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கும். 5. காட்டுமஞ்சரியில் வெளியாகும் படைப்புக்களின் உரிமை படைப்பாளருக்கே. 6. படைப்புகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம். சமர்ப்பிப்போர் மின்னணு அச்சு செய்து அனுப்புதல் நலம். படைப்பாளர் கணினிப் பயிற்சி உடையவராக இருந்தால் ‘Google Transliteration’ முறையைப் பயன்படுத்தி தமிழில் அச்சேற்றி அனுப்பலாம். 7. தாளில் தெளிவாக எழுதி ஆசிரியர் குழுவினரிடமோ, ஆர்வலரிடமோ நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம். 8. சமர்ப்பிப்போர் பெயர், முகவரி, தொலைத்தொடர்பு எண் ஆகிய விவாங்களைத் தவறாமல் குறிப்பிட வேண்டும். எழுத்துக்களை சமர்பிக்கும் படிவம்: www.mannankadu.org/kaattumanjari அடுத்த இதழில்… பெயரில் என்ன இருக்கிறது? நம்மில் பலரும் திராவிடம், தமிழகம், தமிழர், தமிழ், தாய்மொழி என்று வாய்ச்சொல் வீரராய் இருந்துகொண்டு நம் குழந்தை, பேரப்பிள்ளைகட்கு வடமொழி, இந்தியில் பெயர்களைத் தேடிப்பிடித்துச் சூட்டுகின்றோம். எத்தனை வடநாட்டார் தென்னிந்தியப் பெயர்களை தம் குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள்? பலநூறு வருடங்களாக வடக்கில் வழங்கும் பெயர்கள் தமிழர்களுக்கு ‘மாடர்ன்’ பெயர்களாகத் தோன்றுகின்றன இன்று! வேறு யாரும் கண்டுபிடிக்காத ‘சிறந்த’ பெயரை குழந்தைக்குக் கண்டு விட்டதாக மகிழ்ந்து கொண்டிருக்கும் போது, யாரோ, எங்கோ, யாருக்கோ தமிழ்ப் பெயர்களைக் கண்டெடுத்து சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். எந்த செயல் வீரர் யாருக்குச் சூட்டிய பெயர்கள் இவை? விடை அடுத்த இதழில்!
குருதி சௌபாக்கியா சுரேஷ், பட்டுக்கோட்டை விடுகதை: சிவப்பு நிறத்தில் இருப்பேன்! ஓடிக்கொண்டே இருப்பேன்! நான் யார்? என்னைப் பற்றிய சில தகவல்கள்: சூரிய கிரகணம் 26 டிசம்பர் 2019 துரை ஆ .ந., சென்னை
‘வைத்தியர்’ வாழ்க! ஆ. இரா. பாரதராஜா, மன்னங்காடு மேற்கு தொடக்கம் முதலே தொண்டுகள் கண்டாய்!அடக்கம் என்பதை அணியெனக் கொண்டாய்! கடுமையாய் உழைத்ததால் வெற்றியும் வந்தது! நடுமையும் பொறுமையும் தலைமையைத் தந்தது! 'நல்லவர் இவர்'என மக்கள் தேர்ந்தனர் 'வல்லவன் நான்'என செயலிலும் காட்டிடு! முடங்கிக் கிடக்கின்ற ஊராட்சி முதுகெலும்பை அடங்கிப் போகாமல், ஆற்றலுடன் நேர்நிறுத்தி, ஊழலற்ற ஊராட்சி உம்மால் நிலைக்கட்டும்! வாழையென மன்னன்காடு வளர்ந்து தழைக்கட்டும்! 'வைத்தியம்' செய்திடவே வந்துள்ளார் வைத்திலிங்கம்! தரித்திரத்தை மாற்றியவர் தலைவர் வைத்திலிங்கம்! சரித்திரத்தில் நிலைத்திட்டார்! சமத்துவத்தை நிறைத்திட்டார்! என எல்லோரும் போற்றிடவே நம்ஊரை ஆண்டிடுக! நல்லாட்சி தந்திட்டு நலத்தோடு வாழ்ந்திடுக! ஊர்உள்ள பெருமக்கள், உற்றார், உறவினர்கள் நற்றுணையாய் ஒத்துழைத்து, நம்ஊரின் பெயர்போற்றி ஒற்றுமையாய்ச் செயலாற்றி ஊர்ப்புகழைக் காத்திடுக! மன்னங்காடு ஊராட்சித் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தமிழக அரசினால் நடத்தப்படும் ஊராட்சித் அமைப்பிற்கான கடந்த தேர்தல் 2011ல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் மன்னங்காடு ஊராட்சி மன்றத்திற்கான ஊராட்சித் தலைவர், புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது வார்டுகளுக்கான உறுப்பினர்கள் மற்றும் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர்களை தேர்வு செய்வதற்கான ‘நேரடித் தேர்தல்’ டிசம்பர் 30, 2019 அன்று நடைபெற்றது. அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலின் வாக்குகள் சனவரி 2, 2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அன்றிரவு வெளியிடப் பட்டன. செல்லுபடியான 1559 வாக்குகள் தந்த தேர்வு முடிவுகளை வலதுபக்கப் பட்டியல்களில் காண்க. ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சனவரி 6, 2020 அன்று மன்றத்தின் முதல் கூட்டத்தில் பதவி ஏற்றனர். வரும் சனவரி 11, 2020 அன்று ஊராட்சித் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ‘மறைமுகத் தேர்தல்’ நடைபெறும். மன்னங்காடு ஊராட்சித் தலைவர்திரு. கு. நா. வைத்திலிங்கம் அவர்கள் மன்னங்காடு ஊராட்சி மன்றத்தின் தலைவராக டிசம்பர் 30, 2019 அன்று நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவரது தந்தையார் திரு. நாராயணசாமி வேளாளர், தாயார் திருமதி. பார்வதி அம்மாள் ஆவர். அறுபத்தாறு வயதுடைய இவர் 1953ல் பிறந்தவர், பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர். ஊராட்சித் தலைவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார். இவருக்கு நாராயணமூர்த்தி எனும் மகனும், சங்கீதா எனும் மகளும் உள்ளனர். ஊராட்சித் தலைவரையும், ஊராட்சி உறுப்பினர்களையும் வாழ்த்துகிறோம், செவ்வனே பணிசெய்திட வேண்டுகிறோம். செய்திகள், பட்டியல்கள்: து. நவநீதம். பட்டியல் தயாரிப்பில் உதவி: சி. இராகவன். ஒளிப்படம்: இரா. முருகானந்தம். மன்னங்காடு எப்பகுதி எந்த வார்டில்: வார்டு 1. ஆதிதிராவிடர் தெரு மேற்கு மற்றும் சுற்றுப்பகுதி. 2. இச்சடிக்கொல்லை, சுற்றுப்பகுதி. 3. கீழக்காடு. 4. ஆதிதிராவிடர் தெரு கிழக்கு மற்றும் முதன்மைச் சாலை. 5. மேலக்காடு. 6. தெற்குவெளி, சுற்றுப்பகுதி. 7. புதுக்குடி. 8. தெற்கு மன்னங்காடு, சுற்றுப்பகுதி. 9. மூனுமாக்கொல்லை, சுற்றுப்பகுதி.
(Data source https://tnsec.tn.nic.in) To Federalist Mahatma From Publius Jivatma ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்குக் கடிதம் ஃபெடரலிஸ்ட் மகாத்மாவுக்கு,நீயோ மகாத்மாகிவிட்டாய். உம்மைப் போன்றோர் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காணக் கிடைக்கிறார்கள். என்னைப் போன்ற ஜீவாத்மாக்களோ மலிந்து கிடக்கிறார்கள். ஒன்றா, இரண்டா, 137 கோடி பேர்! கடந்த 2018 நவம்பரில் புயலடித்ததே, நினைவிருக்கிறதா மகாத்மா? பலருக்கு கூரை பிய்ந்துபோய் தண்ணியும், இலை, தழைகளும் கொட்டின. ஆனால் சிலருக்குக் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியதே தெரியுமா மகாத்மா?! கஜா புயலடித்தவுடன் வெகுதூரத்தில், நகரத்திலிருந்தோர் எம் துயரநிலை கண்டு வண்டி வண்டியாக, வாரிவாரி அல்லவா வழங்கினார்கள்? நிவாரணப் பொருளே தேவைப்படாத நானுமல்லவா ரொட்டிப் பாக்கெட்டுக்கு முண்டியடித்துக் கொண்டு முதலில் போய்க் கையை நீட்டினேன். எனக்கு ரொட்டிப் பாக்கெட் கிடைத்த பெருமிதத்துடன் திரும்ப, எனக்குப் பின்னால் நின்ற பெண்மணிக்கு ரொட்டியுடன் சேர்த்து போர்வையும் கிடைத்தபோது என்முகத்தைப் பார்த்தாயா மகாத்மா? ஒருநாளா? இருநாளா? பலநாட்களாய் காலை, மாலையென சாலையோரத்தில் காத்துக் கிடந்தேனே நிவாரணப் பொருட்களுக்கு. என்னிடம் ஏது பேஸ்ட், ஏது பிரஷ், ஏது சோப்பு. அவர்கள் கொடுத்து அனுபிதையல்லவா வீட்டில் அடுக்கி வைத்து வேடிக்கை பார்த்தேன் நான். சிறு பொருட்கள் கிடக்கட்டும். பெட்டிப் பெட்டியாய் அரிசியாம், உளுந்தாம், அஞ்சறைப் பெட்டி சாமான்களாம். எல்லோருக்குமா? இல்லை மகாத்மா, எங்கள் பத்துப் பேருக்குத்தான். மற்றவர் கூரைகள் காற்றில் சரிந்து தொங்கினால் அரசு கவனிக்காதா? நான் மெனக்கெட்டுச் சேர்த்து அடுக்கி வைத்திருந்தேனே படுதாக்கள், அதையா தானமாகக் கொடுக்க முடியும்? நியாயமா மகாத்மா? ஊருக்குள் செல்லும் பாதையெல்லாம் மரங்கள் குறுக்கும் நெடுக்குமாய். அதை நகர்த்தி சுத்தம் செய்ய ஏது மகாத்தமா சக்தி என் உடலில்? பொக்லைனோ, ஜேசிபியோ கொண்டு வந்து துரிதமாக நகர்த்தி வழி செய்து தரவில்லையே இந்த அரசு. ஏன் மகாத்தமா? ஓர் இரகசியம். காதைக்கொடு மகாத்மா. எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் மட்டும்தான் புயல் நிவாரணம். எல்லோரிடமும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால், மற்றவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூடவேவாம் என என்போல் ‘ஒன்றுமே கிடைக்காத’வர்கள் சாலையில் பேசிகொண்டார்கள்! நியாயமா மகாத்மா? அப்புறம் இன்னொன்று, நூறு ரூபாய்க்கு 20 ரூபாய் கமிஷன் என்று ஏதோ ஏற்பாடாம். மேலிடத்திலும் கீழிடத்திலும் காயை நகர்த்தி வெறும் இருபதாயிரம் ரூபாயை கையில் அட்வான்சா கொடுத்து விட்டால், இன்னொரு இலட்சம் தானாகவே சாங்சனாகி விடுமாம், வங்கிக் கணக்குக்குச் சென்றுவிடுமாம். கேள்விப்பட்டேன் அவ்வளவுதான்! போய்வருகிறேன் மகாத்மா. உள்ளாட்சித் தேர்தல் வருகிறதாம், ஊரில் வேட்பாளர்கள் நான்கைந்து பேராம். கடந்த பல தேர்தல்களில் கொட்டியதுபோல், மறுபடியும் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஏதாவது கொட்டும். நாலு ஓட்டு எங்க வீட்டுல, விடலாமா மகாத்மா! என்றென்றும் உன்போல் ஏழையாய் பப்ளியஸ் ஜீவாத்மா டிசம்பர் 15, 2019
சமர்ப்பிக்க 1. நேரடியாக ஆசிரியர் குழுவினரிடம், 2. மின்னஞ்சல் மூலமாக (info@mannankadu.org) 3. இணையத்தில் படிவம் வழியாக (www.mannankadu.org/kaattumanjari) எழுத்தாளர் தமது படைப்புக்களை சமர்ப்பிக்கலாம். * காட்டுமஞ்சரி வார இதழா? மாத இதழா? பருவத்திற்கொரு முறையா, ஆண்டிற்கிருமுறையா? ஆண்டிற்கொருமுறையா? மாமாங்கத்திற்கொரு முறையா? அல்லது ஒரே முறையா? என்பது கேள்வி! பதில்: படைப்பாளர் எழுத்தும் வாசகர் வாசிப்புமே முடிவு செய்யும்! காட்டுமஞ்சரி மின்இதழை ‘வாட்ஸ்ஆப்’ல் பெற்றிட, வாசகர் கருத்துக்களைத் தெரிவிக்க, படிவத்தில் பதிவிடுக: www.mannankadu.org/kaattumanjari/vaasakar எழுத்துக்களை சமர்பிக்கும் படிவம்: www.mannankadu.org/kaattumanjari முன் அட்டையில்: முனியன் கோயில் வளாக மின்னடியான், மன்னங்காடு கோபால கிருஷ்ண பாரதியார் இயற்றிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் கூறப்பட்டுள்ள பல கிராமக் கடவுள்களில் மின்னடியானும் ஒன்று. சில ஊர்களில் இக்கடவுள் முன்னடியான் என்றும் அழைக்கப்படுகிறது. (கீழே,Tamil Virtual University Academyயிலிருந்து எடுக்கப்பட்ட ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ செய்யுட்கள்). மின்னடியான். படங்கள் து. நவநீதம்.“வீரன் இருளன் காட்டேரி வெறியன் நொண்டி சாமுண்டி தூறித்தூண்டி நல்லண்ணன் தொட்டியச்சின்னான் பெத்தண்ணன் மாரிமுனியன் சங்கிலியும் மாடன் கறுப்பன் பாவாடை மூறிக்காத்தான் குழியிரிசி மோகினிசப்த கன்னிகையும்” “சேரிமன்னாரன் மின்னடியான் சிறுபாட்டுடையான் பனைமரத்தான் மாரியாண்டி வழிமறித்தான் மலையன் சாத்தான் பக்கிரியும் ஏரியம் சினும்பாயி இடையன் நல்லான் பேயன் ஊமையொடு வீறுங்கல்லன் பெத்தாச்சி வீட்டுத்தெய்வம் ...” Copyright © KaattuManjari. A Tamil electronic magazine to showcase local creativity. For private circulation. A publication of Mannankadu Duraiswamy Kaveri Ammal Trust, Mannankadu 614 613, Tamil Nadu, India. Available: www.mannankadu.org, contact: info@mannankadu.org January 2020 n 2020 : 1 காட்டுமஞ்சரி Jan 2020 | 2020 : 1 KaattuManjari |