apr2020

காட்டுமஞ்சரி Apr 2020 | 2020 : 2 KaattuManjari

காட்டுமஞ்சரி Apr 2020 | 2020 : 2 KaattuManjari

---

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும் திருக்குறள் 63: 622

துயர் வெள்ளமாய்ப் பெருகிவரினும், அறிவுடையவர் தமது உள்ளத்தின் உறுதியால் அத்துயருடன் போராட நினைத்த அளவிலேயே துயர் மறைந்து போகும். (வெள்ளத் தனைய இடும்பை... திருக்குறள் 63: 622)

அட்டையில்: 1. எலெக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் முதன்முதலில் 1966ல் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ். (Source: Proc Natl Acad Sci 1967;57:933). 2. கரோனா வைரஸ் (மஞ்சள்) மனித செல்லின்மேல் (சிவப்பு) கவரப்பட்டு, ஊடுருவ முயல்கிறது செயற்கையாக வண்ணமூட்டப்பட்டுள்ளது (MERS-CoV virus, ARS TECHNICA). 3. கரோனா வைரசின் Main Protein எனப்படும் என்சைம் வகைப் புரதத்தின் மூலக்கூறு வடிவம் (PDB:6LU7. Crystal structure of COVID-19 virus Mpro). 4. தற்போது தீவிர ஆய்வில் உள்ள COVID-19 சோதனை மருந்துகளின் மூலக்கூறு வடிவங்கள் (Source: www.wikipedia.org).

***

தெரியுமா உங்களுக்கு?

ஜாலியன்வாலாபாக் 1919 படுகொலைக்கு முந்தைய ஆண்டு மாகாத்மா காந்தி இன்ஃப்ளுயென்சா வைரஸ் ஏற்படுத்திய ஃப்ளு எனப்படும் கொள்ளை நோய்த் தாக்கத்தால் 1918ல் அவதிப்பட்டார். ஃப்ளு நோயினால் இந்தியாவில் பல இலட்சம்பேர் மாண்டனர். நோயிலிருந்து மீண்டபின் ‘வாழவேண்டும் எனும் எண்ணமே போய்விட்டது’ என்றாராம் மாகாத்மா!

***

இனிய புத்தாண்டு சார்வரியே!வருக!வருக!

பட்டுக்கோட்டை கவிப்பிரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு)

வா வா புத்தாண்டே வாழிய புத்தாண்டே!

வண்ணமலரக்கோலம்

வாயிலில் பூத்தாட!

வாழும் மாந்தரெலாம்

வாழ்த்தியுனைப் பாட!

வளமும் நலமும் கொண்டு

வா வா புத்தாண்டே!

அறுபது ஆண்டுக்கு ஒரு முறை என வைத்து!

அழகாய் வகுத்திட்டார்

ஆன்றோர்கள் முன்நாளில்!

அதன்படி வருகின்றாய்

சார்வரியே வருக!

அளவிலா பெருந்துயரை

துடைத்தெறியவே வருக!

விகாரி வருடமோ விடை பெற்று செல்கிறது!

விகாரமாக உலகமோ துடியாய் துடிக்கிறது!

விளங்காத புதிராய் கொரோனா வதைக்கறது!

விரைவில் மனிதகுலம்

நலமடைய நீ வருக!

புத்தாண்டிலேனும் புது வாழ்வு மலர்ந்திடுமா!

புலம்பும் மனித குலம்

புத்துணர்வு கொண்டிடுமா!

புன்சிரிப்பு புவியில் புதுத்தெம்புடன் வருமா!

புறப்பட்டு மிக விரைவில்

சார்வரியே நீ வருக!

அதர்மத்தின் பின்புலம்

மானுடம் சுரேஷ்,செங்கப்படுத்தான்காடு

புராணக் கதைகளில் கூறப்பட்ட கதைகளில் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட பின்புலத்தில் தான் கூறப்பட்டிருக்கும். ஒரு கதையை கூறும் போது அதனிடையே பல்வகையான கிளைக்கதைகள் கூறப்பட்டிருக்கும்.அதில் ஐந்தறிவு ஜீவிகளும் உரையாடல் நிகழ்த்துவது போல் பல சம்பாஷனைகளும் இருக்கும். இவ்வாறு நடக்கும் சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை ஆராய்வதை விட அதில் கூறப்பட்டுள்ள உட்கருத்தை புரிந்து கொண்டு செயல்படுவதே ஏற்றது.

உதாரணமாக, மகாபாரதத்தில் கர்ணனை வஞ்சகமாக கொன்றது ஏற்புடையதல்ல என்று தோன்றலாம். ஆனால் அதர்மம் என்ற மரம் ஆழ வேரூன்றி இருக்கும் சமயத்தில் கூறப்பட்ட நல்லுபதேசங்கள் அனைத்தும் புறக்கணிக்க பட்டன, மேலும் அதர்மத்தை அதர்ம வழியில் அழிக்க புறப்படும் நேரத்தில் அதர்மத்தில் பக்கம் நிற்கும் நல்லவர்களை தவிர்த்து அழிப்பது இயலாத காரியம் அதாவது பீஷ்மர், துரோணர், கிருபன்,விகர்ணன் போன்ற நல்லவர்களும் கூட தாம் அதர்மத்தின் பக்கம் இருக்கின்றோம் என்பதை அறிந்தும் பலவித காரணங்களுக்காக போர் செய்தனர், விதுரரை தவிர்த்து.

விதுரர் மட்டும் மகாபாரத போரில் கௌரவர்கள் பக்கம் போர் புரிந்து இருந்தால் பாண்டவர்களின் வெற்றி கேள்வியாகவே இருந்திருக்கும்.ஏனெனில் பலருக்கும் சில பலவீனங்கள் இருந்தன ஆனால் தர்மாத்தவான விதுரருக்கோ எவ்வித பலவீனமும் இருந்திருக்கவில்லை.

கர்ணனின் மரணம் அவருக்கு ஏற்பட்ட பலவித சாபமும், முற்பிறப்பில் அரக்கனாக பிறந்து நூறு கவசங்களுடன் பகவான் விஷ்ணுவிடம் போரில் தொண்ணூற்று ஒன்பது கவசங்களை இழந்து இறுதியில் மிஞ்சிய ஒரு கவனத்துடன் சூரியலோகத்தில் தஞ்சம் புகுந்தார்.பிறகு தான் குந்தி தேவி சூரியனை நோக்கி மந்திர உச்சாடனம் செய்ய அவரால் கர்ணனின் பிறப்பு ஏற்பட்டு பின் பகவான் விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணனின் ஆயுதமான அர்சுனனால் மரணம் ஏற்பட்டது.

இதேபோல் ராமாயணத்தில் சூரியனின் மகனான சுக்ரீவனை காத்து இந்திரனின் மகனான வாலியை அழித்தார்.அதே போல் மகாபாரதத்தில் இந்திரனின் மகனான அர்ச்சனை காத்து சூரிய புத்திரனான கர்ணனை வதைத்தார். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் அதர்மமாக தோன்றும் விடயங்களில் சரியான பின்புலத்துடன் ஆராய்ந்தால் அதிலுள்ள ஞாயமான பின்புலத்தை அறியலாம்.

நேர்மையின் மகத்துவம்

மானுடம் சுரேஷ்,செங்கப்படுத்தான்காடு

நடைமுறை வாழ்க்கையில் தேவை என்பதே முதன்மையாக கருதப்படுகிறது.நேர்மை, உண்மை எல்லாம் இரண்டாம் பட்சமே.

ஒருவருக்கு நேர்மையாக தோன்றுகிற விடயம் மற்றவருக்கு தவறாக தோன்றலாம்.சிலர் தான் நேர்மையான வழியில் இருக்கிறோமா என்பதை பிறரின் ஆலோசனைகள் மூலமாக பரிசோதித்து கொள்கின்றனர்.இன்னும் சிலரோ தனக்கு நன்மை தரும் எந்த வழிமுறையும் சரியானதே என்ற கண்ணோட்டத்தில் செயல்படுகின்றனர்.

இவற்றில் உங்களை பற்றி சரியாக அறிந்தவர் உங்களை தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை.தனிமையில் ஒவ்வொரு நாளும் செய்த விடயத்தையும், கடந்த காலத்தில் நீங்கள் நடந்து கொண்ட விதத்தையும் பகுத்தாயுங்கள்.நீங்கள் நேர்மையான வழியில் தான் இருக்கிறீர்களா என்பது மிகச்சரியாக புலப்படும்.

நிகழ்கால விளைவுகளை மட்டும் வைத்து நேர்மையான வழியில் பயணிப்பது தவறென யூகிக்க கூடாது.எந்நிலையிலும் தவறான வழிமுறை தான் முடிவில் வென்றது என்பதை எந்த சரித்திர குறிப்பிலும் காணமுடியாது.

ஒரு வழக்கு சொல்"உண்மை வாசலை தாண்டுவதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும்". இதனால் பொய் வென்றது என்று அர்த்தமல்ல,ஒரு பொய் சில மணிநேரம்,சில நாள்,சில வருடங்களுக்கு நீடிக்கலாம் ஆனால் முடிவில் உண்மையே(நேர்மை) வெல்லும்.

கோவிட்-19 நோய்த் தடுப்பு

மக்கள் சேவையில் உள்ளூர் ஆர்வலர் குழு

மன்னங்காடு இச்சடிக்கொல்லை, சோமரகொல்லை முதல் தெற்கு மன்னங்காடு, மூணுமாக்கொல்லை வரை உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள்களுக்கும், அவசர உதவிகளுக்கும் கீழுள்ள குழுவில் உள்ள எண்களை தொடர்பு கொள்ள வேண்டப்படுகிறார்கள்.

அரசின் உத்தரவை ஏற்று மக்கள் அனைவரும் வீட்டில் தனித்திருந்து வீட்டையும் நாட்டையும் காத்திட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு மக்களின் நலன் கருதி இக்குழுவின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்குழு அரசு அறிவித்துள்ள தடைக் காலம்வரை செயல்படும். இக்குழுவில் இணைந்து சேவை பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும்.

சுப்பிரமணியன் 9597156103

விஸ்வநாத் 9500644278

செந்தில் 9597345906

ரவிவர்மன் 9655668351

வீரபாண்டியன் 9003535694

வரதராஜன் 8940324094

ராகவன் 9940302046

அஸ்வத்தாமன் 9843766364

ராஜசேகர் 9585322308

முருகேஷ் 9159253956

சந்தசெல்வன் 8056957128

அமுதன் 8940730177

ஹரி 8870707726

பிரதீப் 8270704590

பாரதி நவநீதம் 6374049217

ந. குணசேகரன் 8940424979 (ஒருங்கிணைப்பாளர்)

ஊர் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் இருக்க தத்தமது பங்கினை வகிக்கிறார்கள்.

மன்னங்காடு அரசு அங்காடியில் பொருள் வாங்க வருவோர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் திரு. நா. வைத்திலிங்கம் அவர்கள் பாதுகாப்புக் கவசம் அணிந்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை வழங்குகிறார். உள்ளூர் ‘அறம் காக்கும் ஆர்வலர்கள்’ விற்கும் மலிவான விலை காய்கறிப் பட்டியல்.

முகக்கவசம்

கோ வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

உலகை உலுக்கும் கொரோனா நம் நாட்டையும் விட்டு வைக்காத நிலையில் ஆங்காங்கே அதை தடுக்க முயற்சிகள் அரசு சார்பாகவும், தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக மன்னங்காடு கிராமத்திலும் நோய் தடுப்பு ஆயத்தப்பணிகள் நடைபெறும் நிலையில், நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் தைக்கும் பணி தொடங்கப்பட்டது. முனைவர் சிவகுமார் அவர்களின் ஆலோசனையின் படி சமூக ஆர்வலர்கள் திரு. அஸ்வத்தாமன், திரு. ராகவன் ஆகியோரின் அயராத முயற்சியால் பயன்படுத்தாத வேட்டிகள் ஊர் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, தையல் இயந்திர வசதி இருப்பவர்களின் வீட்டில் கொடுத்து முகக்கவசம் தைக்கும் பணி துரிதமாக செயல்பட்டு வருகிறது. திருமதி. முத்துக்கண்ணு மற்றும் திரு. ரெகுநந்தன் ஆகியோர் தமது தையல் திறமை நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகக்கவசங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். உள்ளூர் திறமையால் உருவாகும் இந்த ‘Made In Mannankadu’ முகக்கவசங்கள் ஊர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

திருத்தம் - சனவரி 2020 இதழ், பக்கம் 17

திரு. கு. நா. வைத்திலிங்கம் அவர்கள்...இவருக்கு நாராயணமூர்த்தி எனும் மகனும், ஜெயபாரதி எனும் மகளும், சங்கீதா எனும் மருமகளும், உள்ளனர் என திருத்தி வாசிக்கவும். – ஆசிரியர் குழு.

மின்சாரம்

காயத்ரி வீரமுகிலன், மன்னங்காடு வடக்கு

இயற்கையின் அருங்கொடை நான்!

பஞ்சபூதங்களிலும் கிடைப்பேன்!

உலகிற்கு ஒளியூட்டுபவன் நான்!

அகிலமே என் கையில் அடங்கும்!

கண்ணிற்கு புலப்படா மாயவன் !

சாகா வரமுடையவன் !

எனை அள்ளவும் முடியாது !

கிள்ளவும் முடியாது!

முக்காலமும் நானே!

யூகித்துவிட்டாயா...

இப்படிக்கு நான்...???

மின்சாரம்!

என் சிட்டே...

இரா. பானுமதி, மன்னங்காடு வடக்கு

சிட்டு ஒன்னு எங்க வீட்டில் கூடு கட்டுது

அது ஜோடி சிட்டை அழைத்து வந்து காட்டி மகிழுது

சந்தோஷமாய் முட்டையிட்டு அடையும் காக்குது

குஞ்சு பொரிச்சு வெளியில் வந்து எட்டிப் பாக்குது

தாய்ச்சிட்டு இரை தேடி வெளியில் பறக்குது

குஞ்சு வெளிச்சம் பார்த்து வெளியில் வரத் துடிக்குது

தாய்ச்சிட்டு வெளியில் நின்னு பறந்து காட்டுது

அம்மாவுடன் குஞ்சு கும்மாளமாய் பறந்து போனது

நாம் சிட்டுக்களாய் பிறந்திருந்தால் கவலை இல்லையே

கடவுளிடம் வரம் கேட்போம்! சிட்டுக்களாய்ப் பிறந்திடுவோம்!

ஆட்டம்!

கோ வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

ஒவ்வொரு முகங்களும் கண்ணாடியின் வெளியே நீட்டிக்கொண்டு வேகமாக அடிக்கும் காற்றோடு சிரித்துக்கொண்டும் கத்திக்கொண்டும் வந்தது. சில முகங்கள் கொண்டு வந்த தீணிகளை கைமாற்றம் செய்துகொண்டிருந்தது. சிலர் கடன் வங்கி வந்த கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். சில முகங்கள் எட்டி எட்டிப் பார்த்து நம் முகமும் பதிவாகிறதா என்று முந்தியடித்துக்கொண்டது. எல்லா பள்ளி பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு நாலாம் எண் பேருந்து பள்ளியின் எல்லையைத் தாண்டியது. மதுரையிலிருந்துப் புறப்பட்ட அந்த வண்டி நான்கு மணிநேரப் பயணமாக தேனியின் சுருளி நீர்வீழ்ச்சிக்கு தன்னால் முடிந்த புகையை வழியெங்கும் கக்கிக்கொண்டே சென்றது. புனித தெரசா மகளிர் பள்ளியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் படிக்கும் அவர்கள் ஒவ்வொரு வருடமும் சுற்றியுள்ள மாவட்டங்களின் சுற்றுலா தலத்திற்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு தலைமை ஆசிரியர் கலந்தாலோசித்து முடிவாக சுருளியைத் தேர்ந்தெடுத்தனர். .

நீண்ட நேரப் பிரயாணதிற்குப் பின் சுருளியை அடைந்ததும் யாரையும் நகர விடாமல் வகுப்பாசிரியர் தலைமையாசிரியர் சொல்லி அனுப்பிய மனப்பாடம் செய்த விதிகளையெல்லாம் ஒப்பித்தார், போட்டி போட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கும் தண்ணீரைப் பார்த்ததும் எப்போது அந்த அம்மா விடும் என்று ஓடுவதற்காக ஒரு கூட்டம் காத்திருந்தது. போதனை முடிந்தது. ஒரே இரைச்சலாக கூட்டம் தொப்பென்று தண்ணீருக்குள் குதித்தது. அங்கு வந்த மற்றவர்கள் சிரித்துக்கொண்டே அவர்களை விட்டு விலகி கரையேறினார்கள். இடமே அதுவரை இருந்த தண்ணீரின் இரைச்சலை அவர்களின் இரைச்சல் முந்தியது. பொழுது சாய எல்லோரும் உடையெல்லாம் மாற்றிக்கொண்டு வண்டி ஏறி ஊருக்கு செல்ல ஆயத்தமானார்கள். வண்டி புறப்பட்டது. கொஞ்ச தூரத்திலேயே மின்னும் விளக்குகளும் ஐயனாரின் உயரமான ஒரு உருவத்தில் ஒளிகளும் மின்னியது. பேருந்தின் உள்ளே இருந்த அனைத்து தலைகளும் வெளிச்சத்தை பார்த்ததும் ஒரே தொனியில் வெளியே பார்த்தார்கள். உற்சாகம் இன்னும் கூடியது. இந்த நேரம் வெளியே விட்டால் இவர்களை அடக்குவது சிரமம் என்று வண்டியை நிறுத்த ஆசிரியர் அனுமதிக்கவில்லை. செந்தட்டி ஐயனார் கோவில் திருவிழா அன்று. ஊரே வண்ணமயமாய் ஜொலித்தது. தொகுதி உறுப்பினர் வருகிறார் என்று தப்புக் குழு நெருப்புத்தனலில் சூடேற்றிக்கொண்டிருந்தது. அது வரை எந்த வண்டியையும் அனுமதிக்கவில்லை. அந்த தப்புச் சத்ததிற்காக வண்டியில் சிறுமிகள் தலையை வெளியில் நீட்டிக்கொண்டே காத்திருக்க, நாலு கார்களில் ஒரு கூட்டம் கட்சிக் கொடியோடு ஐயனாரடி வந்து சேர்ந்தது. தப்புக்குழு ஆயதமானார்கள். தன் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். ஆட்டம் ஆரம்பமானது. பேருந்தில் இருந்த சிலர் ஆசிரியர் பேச்சைக் கேட்காமல் ஓட பெண் பார்வையாளர்களைப் பார்த்த தப்புக்குழுவுக்கு ஆட்டம் சூடு பிடித்தது. தப்புச்சத்ததின் அதிர்வு ஒவ்வொருத்தர் உடலிலும் கடக்க தொடங்கின. எம் எல் ஏ குழு ஐயனாரை கும்பிட்டு ஆட்டத்தை பார்க்கவந்தது தப்படிப்போரை இன்னும் சூடேற்றியது. கோயிலை சுற்றி முழுவதுமே அதிர்வுகள் காதை அடைத்தன.

அது வரை காத்திருந்த அமைதியையும் பொறுமையையும் அந்த அதிர்வுகள் சுக்கு நூறாக்கி தன்னை மறந்து பள்ளி சிறுமிகளை ஆட வைத்தது. கை கால் நீட்டி சுற்றி ஒரு தாளத்திற்கெல்லாம் அவர்கள் ஆடவில்லை. இன்னதான் செய்கிறோம் என்று தெரியாமல் ஆடினார்கள் ஆசிரியர் வெட்கிப்போய் பேருந்திலேயே அடங்கிபோனார். கேட்க அது வரை இருந்த ஆளும் இப்போது இல்லை. ஆட்டம் நீண்டு கொண்டே போனது. எம் எல் ஏ கூட்டம் கரைய தொடங்கியது. அடியும் அதன் அதிர்வைக் குறைத்துக்கொண்டே வந்தது. ஆட்டம் தன் உச்சநிலையை விட்டுத் தன்னிலை அறிந்து அடங்க தொடங்கியது பாத்திமாவை தவிர. தலையை விட்டு புர்கா காற்றில் அது ஒருபக்கம் ஆடிக்கொண்டிருந்தது. கை காலை வீசி அவள் ஆட்டத்தை யாரும் அருகில் நின்று பார்க்க முடியவில்லை. இரு ஊராற்கும் நடந்த கலவரம் போல் புழுதி பறந்து ஐயனார் கோவில் சன்னதியே வேறு விதமான தோற்றத்தை அன்று அடைந்தது. பாத்திமாவிற்கு சாமி தான் பிடித்து விட்டது என்று ஒரு சிலர் கை கூப்பி வணக்க எத்தனிதார்கள். அது வரை அடிக்கு ஆடிய ஆட்டம் பாத்திமாவின் ஆட்டத்திற்கு அடிக்க தொடங்கியது. அவளை யாரும் அடக்கவோ பிடிக்கவோ நினைக்கவில்லை. எப்படி அந்த இஸ்லாமிய பெண்ணிற்கு இத்தனை நாளாய் நம்மை பார்க்க வராத சாமி அவளின் ஆட்டத்திற்கு வந்தார் என்றெல்லாம் ஒரு கூட்டம் முணுமுணுத்தது. கோயிலே ஸ்தம்பித்து போனது. இரைச்சல் குறைந்தது அடி குறைந்தது ஆட்டம் குறைந்தது புழுதி அடங்கியது தனி ஆளாய் நரம்பு புடைக்க முகம் சிவந்து கண்ணெல்லாம் இரத்தமாய் இருக்க கீழே களைத்து போய் சரிந்தாள் அதுவரை வீட்டுக்குள்ளே அடங்கி இருந்த கோபங்கள், சம்பிரதாயங்கள்,வளர்ந்த பக்குவம், மூடியே வைத்திருந்த மனம் இவற்றை எல்லாம் அந்த பறை வெளிக்கொணர்ந்தது. வெளியே சத்தமாய் கூட பேசாத அவளை ஒரு காளியாய் பார்க்க அவர்கள் தோழியின் மனம் இடம்கொடுக்கவில்லை. பாத்திமா தன் ஆசையை தீர்த்துக்கொண்டாள். விட்டால் போதுமென்று ஆசிரியர் எல்லோரையும் ஏற்றி வண்டி அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டது. அந்த நெருப்பான ஆட்டத்தின் ஜுவாலையை பார்த்த அனைவருக்கும் பாத்திமாவை நெருங்க கொஞ்ச நேரம் பிடித்தது. ஜன்னல் ஓரத்தில் அமைதியாய் காற்று வாங்கிக்கொண்டே பாத்திமா யோசித்தாள். ஆட்டத்தின் மயக்கம் கண்ணை இழுத்தது. பேருந்தே ஒரு வித அமைதியில் ஆழ்ந்தது. பாத்திமா கண்ணயர்ந்தாள்.

***

உயிரின் உயிரியே...

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

சீனாவின் சின்ன உயிரியே

சீரழிப்பதற்கு எல்லையில்லையோ உனக்கு?

அகிலத்தின் ஆசு கவிகளும்

அருந்தவ ஆராய்ச்சியாளர்களும்

மூன்றாம் உலகப்போர் மூள்வது

நிச்சயம் ‘நீரால்’தான் என கட்டியம் கூற...

அந்தோ பரிதாபம்...!

இனம்...மதம்... மொழி...பாராமல்

மேலை நாடு... கீழை நாடு...என ஏழு கடல் தாண்டி..

உலகையே வலம் வருகிறாய்...!

அறிவியலையே அலற விட்டு ஆழம் பார்த்து...

அவரவர் இல்லங்களில் அகதிகளாக்கி விட்டாய்...!

கண்டம் விட்டு கண்டம் பாயும்

ஏவுகணைகளே தலைகுனிந்தன...!

உன்னால் உலகம் ஒன்றை புரிந்து கொண்டது

மனிதம்... மனிதம்...ஆம்! உலக மனிதம் ஒரே குலம்...

அனைவருக்கும் நீ பொது எதிரி..!

உலகம் கை கோர்க்கும்...

உனக்கு சாவு மணி அடிக்கும்...!

வெகு விரைவில்...!

வாழ்க நிலமுடன்...

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

குறுவைக்கு நாத்து விட்டு

குருத்தழுகிப் போச்சு

சம்பா நடவு நட்டும்

சட்டுன்னு கருகிப் போச்சு

தாளடி நடவுக்கோ

தாளாத தண்ணிப் பஞ்சம்

கோடையில வெதச்சதும்

சோடையா போக ...

என்னத்த வெதச்சு

எப்படி அழிஞ்சும்

நிலம் ஈர்த்தது.....

உயிர் காப்பான் உழவனை!

வைத்தான்... அடமானம்! தாலியை....

அடுத்த பருவத்தின் விதை, உரம் வாங்க ....

உலகின் பசி தீர்க்கும்

உழவன் அழியமாட்டான் ! குறளின் குரல் 2

அறம் வளர்ப்போம்

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

‘அறம்’ இந்த வார்த்தைக்குத்தான் எத்தனை வலிமை உள்ளது! ஔவையார் தனது ஆத்திச்சூடியில் அறம் எனும் தவத்தினை செய்ய வலியுறுத்துகிறார். நற்செயல்கள் எவைகளோ அவைகள் அனைத்தும் அறச் செயல்களே!

“உங்கள் வீட்டருகே இருக்கும் பாதையில் உள்ள முட்களை தினசரி அகற்றுங்கள். அதுவும் மக்களுக்குச் செய்யும் மகத்தான தொண்டு” என்றார் முகம்மது நபி! இன்னும் ஒருபடி மேலே சென்று உங்களின் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்றார் எசுபிரான்! தன்னை ஆங்கிலேயக் கனவான் ஒருவன் பூட்ஸ் காலால் உதைத்த போதும் அவனது பாதம் வலிக்குமே எனத் துடித்தவர் மகாத்மாவானார்!

இன்னும் மனிதர்களாகப் பிறந்து தங்களது அறச் செயல்களால் இன்னல்கள் சுமந்த மனிதகுலம் மறக்காத ரத்தினங்கள் பலர்! கலிங்கத்துப் போரில் மனம் மாறிய அசோகர் புத்த மதத்திற்கு மாறி இலங்கையிலும் புத்தரின் போதனைகளை பரவச் செய்தார். சாலையோரங்களில் மரங்களை நட்டார். கடையேழு வள்ளல்களை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது.

ஆயிரம் வார்த்தைகளால் கூற இயலாததை ஒரே ஒரு செயலால் உணர்த்திட இயலும் என்பார்கள்.

கல்கத்தா நகரில் ஒரு இளம் கிறிஸ்தவப் பெண் தான் நிர்வகிக்கும் அநாதை ஆசிரமத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு பெருந்தனக்காரர் ஒருவர் இல்லம் சென்று நிதி கேட்டார். அவர் இயல்பில் கோபக்காரர். இளம் பெண் தான் வந்த காரணத்தை அவரிடம் கூற... சற்றும் தாமதியாமல் அவரது முகத்தில் காறி உமிழ்ந்தார்! இளம் பெண் சிறிதும் கலங்காமல்... ‘இந்த வெகுமானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்! ஏழைகளுக்கு நிதி கொடுங்கள்!’ என்றார். பெருந்தனக்காரர் அவமானத்தில் உறைந்தே போனார்! மனம் மாறி உடனே ஒரு பெருந்தொகையை அவரிடம் நன்கொடையாகக் கொடுத்தார். அந்தப் பெண்ணே பிற்காலத்தில் ‘அன்னை தெரசா’ என அன்புடன் அழைக்கப்பட்டார்! அறம் வலிமை வாய்ந்தது என்பதற்கு இதனை விடவும் ஒரு சான்று வேண்டுமா?

‘என் உள்ளமே.... நம் உள்ளம் நிலையற்றது என எண்ணி இப்போதே அறம் செய்க! இன்றைய கதிரவனின் உதயத்தை நாம் கண்டோம்! மீண்டும் அவன் உச்சியை அடையும்போது நாம் காண்போம் என்பது ஐயமே! மேற்கில் கதிரவன் மறையு முன் எமன் நம் உயிரைக் கொண்டு போக வந்திடுவான், என எண்ணி இப்போதே அறவழியில் ஒழுகுவாயாக’! என்கிறது ஒரு முன்னோர் வாக்கு.

நாம் அதிகம் சம்பாதித்து பொருள் சேர்ப்பின் வாழும்போது பணக்காரன் என்ற பெயர் மட்டும் வரும். ஆனால் அந்தப் பொருளை ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் வள்ளல் எனும் பெயர் வாழ்க்கைக்குப் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். அவர் அன்று மூட்டிய அன்னதான நெருப்பு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு குருகுலக் கல்வி என மாணவர்கள் குருவிற்கு பணிவிடை செய்து கற்கும் கல்வி மாணவர்களை அற வழி நடக்க உதவியது. அடுத்து ஆசிரியர்கள் வீடு தேடி வந்து கல்வி கற்பித்தனர். சென்ற தலைமுறையினர் அரசுப் பள்ளிகளில் கல்வி பயில நேர்ந்தது. அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை என்ற வகுப்பி‌ல் நல்ல பழக்கங்களைப் பயிற்றுவித்தார்கள். ஆனால் இன்றைய நிலை? இளைய தலைமுறையினர் அற வழி நடப்பது பெற்றோர் ஆசிரியர்கள் கையில் உள்ளது.

பிறருக்கு தீங்கு எண்ணாமலும், தீங்கிற்கு துணை போகாமலும் இருத்தலே மிகப்பெரிய அறம்! அறத்தை விதைப்போம்... அறத்தை விளைவிப்போம்...!

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல் அறன் வலியுறுத்தல், குறள் 34:3

குரல் ஒலிக்கும்

மழை...வரும் பின்னே!

எஸ். முத்துக்கண்ணு, மன்னங்காடு வடக்கு

தட்டான் தாழப் பறக்கும், எறும்புகள் முட்டையுடன் இடம் மாறும், பெரிய கரையான்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறும்....வீட்டில் ஈக்கள் அதிகம் மொய்க்கும், ஈசல்கள் புற்றிலிருந்து பறக்கும், நாய்கள் நடுச்சாலையில் மலம் கழிக்கும் இன்னும், சூரியன் மறையும் போது செவ்வானம் தோன்றும்.... நாட்டுக் கோழிகள் இறகுகளை வெயிலில் உலர்த்தும், கொம்புத்தவளை (மரப் பொந்திலுள்ள தவளை) கத்தும்...கம்பளிப்பூச்சிகள் முருங்கை மரத்தில் அதிகமாய் காணப்படும், நெற்பயிர்களை பூச்சிகள் முற்றிலும் அழித்து விடும்...கொக்குகள் நீர்நிலைகளை விட்டு வயற்காடுகளில் இரை தேடும்... இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் மழை வருவதற்கான அறிகுறிகளாய் இன்றும் நம்பப்படுகிறது!

முற்காலத்திய கொள்ளை நோய்களும் கோவிட்-19 கொரோனா வைரஸ் கிருமியும்

பட்டுக்கோட்டை கவிப்பரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு)

மனித குலம் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்த முற்காலங்களில் சுமார் 75 விருந்து 80 ஆண்டுகளுக்கு முன் நம் ஊர் உட்பட பல்வேறு கொள்ளை நோய்களுக்கு ஆளாகியுள்ளது.குறிப்பாக காலரா, பெரியம்மை, பிளேக் என பல நோய்கள் பல நாடுகளில் கொத்து கொத்தாக மக்களை மடிந்துபோக வைத்திருக்கின்றன. அந்தக் காலங்களில் ஒரு வீட்டில் நோய் பாதிப்பு வந்துவிட்டால் நெருங்கிய உறவினர் தவிர மற்றவர்கள் வீடுகளையே காலி செய்து கொண்டு வேறு இடங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்துள்ளனர்.

‍‌‌‍‍‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌இறந்து போனவர்களை அடக்கம் செய்வதற்கு கூட ஆளின்றி ஒன்று இரண்டு பேர் மட்டும் இறந்த உடல்களை தென்னங்கீற்று மற்றும் கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டு போய் புதைத்திருக்கிறார்கள் என்றும் முதியவர்கள் கூற சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு படிப்படியாக பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு முத்தடுப்பு ஊசிகளும் போடப்பட்டு இன்றைய தலை முறைவரை மனித குலம் பிழைத்தது, வளர்ந்து பற்பல துறைகளிலும் முன்னேறி சாதனைகள் பல செய்தது. இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கோவிட்-19 வைரஸ் எனும் நுண்கிருமியால் இந்த கட்டுரை எழுதும் வரை 53000 உலக மக்கள் மடிந்தும் 10 இலட்சத்திற்கும் மேல் நோய் தொற்றுக்கு ஆளாகியும், தொடர்ந்து இறப்பும் நோய் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன.

மனித இனம் பரிணாம வளர்ச்சியில் கிட்டதட்ட 70 கோடி ஆண்டுகளாக பரிணமித்து வந்துள்ளது என்றும், பூமியில் 300கோடி ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அமிபா போன்ற நுண்கிருமிகள் எல்லாம் தோன்றி அவற்றிலிருந்து ஒரு செல்உயிர் பலசெல் பிராணிகளாக ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என பரிணாமமுற்று வந்துள்ள சூழ்நிலையில் இன்று கிட்டத்தட்ட நாம் வாழும் பூமி முழுவதையுமே இந்த கொரோனா ஆட்டிப்படைக்கிறது. இந்த கொடிய கிருமி சீன தேசத்து மாமிச அங்காடியில் இருந்து தான் முதன்முதலில் தோன்றியுள்ளது என்கின்ற ஊடக செய்திகள். இது வௌவால் மூலம் வந்ததென்றும், எறும்புத்திண்ணி மிருகத்தை தின்றவர்களிடமிருந்து வந்ததாகவும் பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலமே மட்டும் தொற்றிக் கொள்ளும் ஒரு கொடிய, இதுவரை மனிதகுலம் சந்தித்திராத பேராபத்து கிருமி ஆகும் இது மனித உடலுக்குள் புகுந்து 3 நாள் முதல் 14 நாட்கள் வரை எப்போது வேண்டுமானாலும் அதன் தாக்கத்தின் அறிகுறி தென்படும் என்றும், அதற்குள்ளாகவே இந்த நோய் தொற்றிய மனிதர்கள் யாரையெல்லாம் சந்திக்கின்றார்களோ அவர்களுக்கும் தொற்றிக் கொண்டு உடனே வெளித்தெரியாமல் 14 நாட்கள் கழித்தும் வெளிப்படலாம் என்றும் கூறுகின்றனர். இதனை முற்றாக ஒழிக்க மருந்துகள் இன்னும் பரிசோதனையில் தான் உள்ளது. HIV, மலேரியா போன்ற நோய்களுக்கு தரும் மருந்துக்களை பல்வேறு வகைகளில்கொடுத்து கொடுத்து பலரை மருத்துவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். இதற்கிடையில் பாரம்பரிய மருத்துவர்களும் பல்வேறு சித்த ஆயுர்வேத மருந்துக்களினால் இதனை குணப்படுத்தலாம் என்றும் கூறிவருகின்றனர். எதுவும் நிரூபிக்கப்பட்டதாய் இதுவரை தெரியவில்லை. இங்கிலாந்து நாட்டில் இந்த தொற்று நோயை கண்டுபிடிக்க நோய் தொற்றுள்ளவர்களின் இரத்த மாதிரிகளை மோப்ப நாய்களுக்கு பழக்கி அவற்றின் மூலம் கண்டு பிடிக்கும் வேடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆக மொத்த்தில் இந்த நோயை மனிதர்கள் தனித்திருத்தல் அரசுகள் தரும் எச்சரிக்கைகளை சரியாக புரிந்து கொண்டு அதன்படி நடத்தல், ஆட்டு மந்தைகள் போல் மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் கூடாது இருத்தல் மூலம் பெரும் அளவில் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் நிபுனர்கள் கூறிவருகின்றனர். இந்தக்கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்திய இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா போன்ற பல நாடுகள் படும் அல்லல்கள் சொல்லில் அடங்காது உள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. இந்தியாவில் டெல்லியில் சர்வதேச பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்ட இஸ்லாமியர் மாநாடு மூலமாக அதிகம் பரவிவருவது வேதனைதருவதாக உள்ளது. நமது நாடு சீனாவிற்கு அடுத்த படியாக மக்கள் தொகை நிறைந்தநாடு நாம் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு விபரீதங்கள் நேரிட வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அனைவரும் இதனை ஏனோ தானோ என்றும்,நமக்கு வராது என்றும் விளையாட்டாக கருதிவிடாமல் விழிப்புணர்வுடன் அரசுகள் தரும் கட்டுப்பாடுகள் அறிவுறைகளை கராராக அமல்படுத்தினால் இந்தப் பேரிடரையும் தாண்டி வந்துவிடலாம்.அதற்காக யாரும் அச்சப் பட தேவையில்லை,அச்சப்படுபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்கிறார்கள்.விழிப்பணர்வுடன் இருந்து தனித்து இருந்து தங்களை தாங்களே அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின் படி நடந்து கொண்டு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வீட்டிற்கு ஒருவர் வெளியில் செல்வதுடன் முகக்கவசம் அல்லது கைக்குட்டை போன்றவற்றை முறையாக அணிந்து கொண்டும் திரும்பி வந்ததும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதுடன் அணிந்து சென்ற உடைகளையும் துவைத்துவிட வேண்டும். இதுவரை கண்டிராத இன்னல்கள் பட நேரிடினும் உயிர் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இந்த கொடிய கொரோனாவையும் முற்கால நோய்களை காணாது செய்ததுபோல் வேரோடும் வேரடி மண்ணோடும் முற்றாக ஒழித்து நாமும் உலக மக்களும் நிம்மதியாக வாழலாம். இன்றைய ஆக முதன்மையான கடமை நமது விழிப்பணர்வும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்தல் ஆகியவையே.

***

கரோனா வைரஸ்

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

கரோனா வைரஸ் புதியதா?

வைரஸ் எனப்படும் நுண்கிருமிகள் மனிதர்கள் பரிணமிப்பதற்கு கோடானுகோடி ஆண்டுகளுக்கு முன்பே புவியில் தோன்றியவை. பல விண் மற்றும் புவிப் பேரிடர்களிலும் தப்பித்து, பிழைத்து, நிலைபெற்று காலங்காலமாய் வாழ்ந்து வருபவை. இருப்பினும் வைரஸ்கள் அறிவியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டு, அடையாளம் காணப்பட்டு, மனிதரின் அறிவியல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது சுமார் 130 ஆண்டு காலத்திற்குள்தான். டிஎம்வி எனப்படும் புகையிலை வைரஸ்தான் 1892ல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 1898ல் மாடுகளில் கோமாரி நோயை உண்டாக்கும் வைரஸ் கண்டறியப்பட்டது. எனினும் மனிதரைத் தாக்கும் வைரஸ்களைப் பொறுத்தவரையில், முதலில் ‘மஞ்சள் காய்ச்சல்’ நோயை உண்டாக்கும் வைரஸ் 1902ல் கண்டறியப்பட்டு, 1927ல்தான் நோய் வாய்ப்பட்டவரிடமிருந்து கிருமிகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.

வைரஸ்களின் வெளி, உள் அமைப்பைப் பொறுத்து பல வகைப்பாடுகள் அறிஞர்களால் உருவாக்கப் பட்டுள்ளன. பிரபல ‘பால்டிமோர்’ வகைப்பாட்டில் வைரஸ்களுக்குள் உள்ள மரபணுத் தொடர்பின் அடிப்படையில் ஏழு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அந்த ஏழு பிரிவுகளில் 28 வைரஸ் குடும்பங்களை உள்ளடக்கி உள்ளனர் விஞ்ஞானிகள். அக்குடும்பங்களில் ஒன்றே கரோனா வகை வைரஸ்கள் குடும்பம். கரோனா குடும்பத்தில் 4 பேரினங்களும், அப்பேரினங்களின் கீழ் சுமார் 40 சிற்றின வைரஸகளையும் ஆராய்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர் (பட்டியல் 1ல் காண்க). இந்த 40 சின்றினங்களில் ஒன்றே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் SARS-CoV-2 வைரஸ். கரோனா ஒரு புதிய வைரஸ் என்பதைவிட, ஓர் ஆதிக்கால வைரஸ் ஒன்றினை மனிதர்கள் புதிதாக அறிந்து கொள்ளத் தொடங்கி உன்னனர் என்பதே உண்மை.

வைரஸ்கள் பாக்டீரியாக்களைவிடவும் அளவில் சிறியவை. எனினும் பாக்டீரியா கிருமிகளைப்போலவே அளவிலும் அமைப்பிலும் வைரஸ்கள் பலதரப்பட்டவை (வேறுபாடுகளை படம் 1ல் காண்க).

கரோனா எங்கிருந்து வந்தது?

கோவிட்-19 நோய் சீனாவின் ஊஹான் பகுதியில் கடந்த டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அங்குள்ள மாமிசக் கடைகளில் உணவுக்கான பலவகைப்பட்ட உயிரினங்கள் விற்கப்படுவதால், அக்கடைகளில் இருந்த உணவுக்கான வௌவால் போன்றவற்றிலிருந்து கரோனா கிருமிகள் மனிதருக்குப் பரவியிருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது. அது எப்படியாயினும், இக்கிருமிகள் மனிதர் மூலமாகத்தான் சீனாவின் மற்ற பகுதிகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி, கொள்ளை நோய் எனப்பெயர் பெற்றுள்ளது.

MERS-CoV எனும் ஒருவகைக் கரோனா வைரஸ் நோய் 2012ல் சவூதி அரேபியா போன்ற மேற்கு ஆசிய நாடுகளில் சிறிய அளவில் மனிதர்களைத் தாக்கியது. வௌவாலில் 1990 வரை பரிணமித்து வந்த MERS-CoV வைரஸ் அதன்பின் ஒட்டகங்களுக்குப் பரவி, 2012ல் மனிதர்களுக்கும் தாவியது குறிப்பிடத்தக்கது.

முந்தைய கொள்ளை நோய்கள்

பெரியம்மை (smallpox) எனும் வைரஸ் நோய் அக்காலத்தில் பலமுறை, பல நாடுகளில் தோன்றி மறைந்துள்ளது. உலகெங்கும் ஆண்டிற்கு மூன்று, நான்கு லட்சம் பேரை பலிகொண்டதாம் இந்த பெரியம்மை. பிளேக் எனப்படும் பாக்டீரியா நோய் 1950க்களில் சீனாவில் தோன்றி இந்தியாவுக்குள் பரவி ஒரு கோடிக்கும் மேலானோரைப் பலி கொண்டதாம். இவற்றைவிடவும் மோசமாக, 1918ல் ஃப்ளு நோயை உண்டாக்கிய இன்ஃப்ளுயென்சா வைரஸ் 5 கோடிக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க வைத்தது. இந்நோயால் இந்தியாவில் உயிரிழப்பு மட்டும் சுமார் 1 கோடியென கூறப்படுகிறது.

நோயின் தன்மை

கொரோனா வைரஸ் மனிதரின் உடலுக்குள் நுழையும் பட்சத்தில், அவை தமது மேல்பரப்பில் உள்ள ஒருவகைப் புரதத்தின் மூலமாக நுரையீரலின் உள்பகுதியில் உள்ள ACE2 எனும் மற்றொரு புரத மூலக்கூறினால் கவர்ந்திழுக்கப்பட்டு செல்களுக்குள் நுழைகின்றன. உடலில் உள்ள செல்களில் இனப்பெருக்கம் செய்து தமது எண்ணிக்கையைப் பலமடங்காகப் பெருக்கி மனிதரை ஆட்கொண்டு நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவரைச் செயலிழக்கச் செய்கின்றன. இலேசான காய்ச்சலில் ஆரம்பித்து, உடம்பு வலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என மாறி, அதிகமான தொண்டைவலி, கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத்தினறல் என பரிணமிக்கும் தன்மை கொண்டது இந்நோய்.

கோவிட்-19க்கு மருந்தேதும் உண்டா?

தற்சமயத்தில் கோவிட்-19 நோயின் அறிகுறிகளுக்கு (symptoms) மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டோர் தேற்றி வைக்கப்படுகின்றனர். முன்பே பயன்பாட்டில் உள்ள, மற்ற நோய்களைக்கான மருந்துகள் பல கோவிட்-19 நோயைக் குணப்படுத்தும் பொருட்டு பரிந்துரைக்கப்பட்டு, அவற்றின் நோய் தணிக்கும் குணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. எனினும் இம்மருந்துகள் கோவிட்-19க்கு பயனளிக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரிய வரும்.

தடுப்பு மருந்துகள்

நோயுண்டுபண்ணும் கிருமிகளையோ அல்லது அதன் பகுதிப் பொருளையோ பாதுகாப்பான முறையில் உடலுக்குள் செலுத்தி, அக்கிருமியினால் பிற்காலத்தில் நேரும் நோயைத் தடுக்கும் அணுகுமுறையே vaccine எனப்படும் தடுப்பு மருந்து முறையாகும். Cowpox எனும் விலங்கு மற்றும் மனிதரைத் தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களை, அதைவிடவும் ஆபத்தான பெரியம்மை தாக்குவதில்லை என நுணுக்கமாகக் கண்டுணர்ந்த பிறகே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எட்வர்டு ஜென்னர் எனும் அறிஞர் Cowpox கிருமிகளை சிறுவர்களில் vaccine தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தி, பெரியம்மையைத் தடுத்தார். தற்போதைய கோவிட்-19க்கான தடுப்பு மருந்து பலநாடுகளில் ஆய்வில் உள்ளது. இத்தடுப்பு மருந்தின் நிறை குறைகளை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டபின் ஓரிரு கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வரலாம்.

மருந்து வரும் வரையில் என்னதான் செய்வது?

கடந்த நான்கு மாதங்களில் நோய் பரவிக் கொண்டிருப்பதன் தீவிரத்தைப் உணர்ந்து, வருமுன் காப்போம் எனும் தத்துவத்தின் அடிப்படையில் அரசின் பரிந்துரைகளை நாம் முழுமையாகச் செயல்படுத்துவதே, நம்மையும், சுற்றத்தாரையும், நாட்டையும், உலகையும் நோயிலிருந்து காப்பதற்கான வழி எனத் தெரிகிறது.

கல்லுக்குள் ஈரம்

அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்கு

சிந்தனைக்குள்

கவிதையைத் தேடுகிறான்

கவிஞன்!

கல்லூரிக்குள்

கல்வியைத் தேடுகிறான்

மாணவன்!

நடிப்புக்குள்

பணத்தைத் தேடுகிறான்

நடிகன்!

வரதட்சனைக்குள்

வளத்தைத் தேடுகிறான்

மணமகன்!

இலஞ்சத்துக்குள்

இலட்சத்தைத் தேடுகிறான்

அரசியல்வாதி!

கற்பனைக்குள்

ஓவியத்தைத் தேடுகிறான்

ஓவியன்!

கல்லுக்குள்

சிலையைத் தேடுகிறான்

சிற்பி!

இவர்களின்

நெஞ்சுக்குள்

ஈரத்தைத் தேடுகிறான்

இறைவன்!

தமிழ்

அகிலா மகேந்திரன், மன்னங்காடு வடக்

கல்தோன்றி மண்தோன்றா

காலத்திலே முன்தோன்றிய

மூத்தகுடி தமிழ்மொழி!

மனிதன் மனிதனுக்கே அறிவுரை

கூறிய நூல் - திருக்குறள்!

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

என்ற கருத்தை தந்தது

சிலப்பதிகாரம்

பங்காளி சண்டையை

பெருங்காவியமாய் தந்தது

மகாபாரதம்!

ஆங்கிலேயர்களும்

பொறாமைப்படும் அற்புத

விஷயம் தமிழர் பண்பாடு!

"ஒருவனுக்கு ஒருத்தி" எனும்

உன்னத பண்பாட்டை

உணர்த்துவது இராமாயணம்!

ஆனால் அடியோடு

அழிந்து கொண்டிருப்பதை

மறந்து விடுகிறோம்!

"வாழ்க தமிழ்” என்று

ஆர்வமாய் ஆர்ப்பரிக்கிறோம்

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும்

மனிதனை மட்டும் அசத்தலாக

ரசிக்கிறார்கள்! ஆனால்

தமிழ்மொழி பேசுபவர்களை

ஏளனமாய் பார்க்கிறார்கள்!

தமிழிலே படத்திற்கு பெயர்

சூட்டினால் வரியை ரத்து

செய்கிறது தமிழக அரசு!

இலவசம் என்று சொன்னால்

மட்டும் தாய்மொழியை

நினைத்துப் பார்ப்பாயா?

ஓ.... தமிழ் நெஞ்சங்களே

எதிர்காலமாவது தன்

தாய்மொழியை நேசிக்க

குழந்தைக்கு "பெயரை தமிழில்”

வையுங்கள்

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

மதமதக்யஞ் சாடி

துரைசாமி நவநீதம், மன்னங்காடு

கடந்த ஆண்டு ஒரு காலை நேரத்தில், தண்டூன்றி நடக்கும் மூதாட்டியொருவரை காணச் சென்றிருந்தேன். தொன்னூற்றாறு வயதடைந்த இவர் எனது நெருங்கிய உறவினர். உறவுமுறையில் சொன்னால், அவர் எனது பெரியம்மா. அதாவது, எனது தந்தையின் தமையனார் மறைந்த மு.வீ. காரிமுத்து அவர்களின் மனைவி, திருமதி கா. கோவிந்தம்மாள். அருகில் உள்ள வாட்டாகுடியில் பிறந்து மன்னங்காட்டில் வாழ்க்கைப்பட்ட இவரைச் சுற்றத்தார் அனைவரும் ‘ஆயா’ அல்லது ‘ஆயி’ என அழைப்பது வழக்கம். கல்வியறிவு அற்றவர், எனினும் இயற்கையாகவே அமையப்பெற்ற அறிவாற்றல் திறனால் சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கேள்விகளை அவ்வப்போது கேட்டுத் திணறடிப்பார்! நீர் கொதித்தால் பொங்குவதில்லை, ஆனால் பால் கொதித்தால் பொங்கி வழிகிறது, அது ஏன்? என்பது எனது பள்ளிக் காலத்தில் கேட்ட அவரது கேள்விகளில் ஒன்று!

தாயை ஆயா என விளிப்பதும், தந்தையை அண்ணன் என விளிப்பதும் மன்னங்காடு கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த முறையாகும். தாயின் தாயை ‘அம்மாயி’ அல்லது ‘அம்மாச்சி’ என்பதும், தந்தையின் தாயை ‘அப்பாயி’ என்பதும் ஆங்காங்கே இன்றும் வழக்கில் உள்ள சொற்களாகும். அம்மாயி, அப்பாயி எனும் வார்த்தைகளில் ‘ஆயி’ எனும் விகுதி இருப்பதைக் காண்க. எனினும், கடந்த 25 ஆண்டுகளில் அம்மாயி, அப்பாயி போன்றவை வழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, ஆயா எனும் சொல் பாட்டியரைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறவினரல்லாத வயது முதிர்ந்த பெண்மணிகளை மரியாதை நிமித்தமாக விளிக்கும் சொல்லாகவும் ஆயா எனும் வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.

ஆயா கோவிந்தம்மாள் எப்போதும்போல் பாசத்துடன் வரவேற்பார், அமரச் செய்தபின், நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பார். இடையிடையே ஓரிரு நொடிப் பொழுதுகள் மட்டும் நிறுத்திவிட்டுத் தொடர்வார். ஒவ்வொரு பேச்சிலும் நேற்று மாலை நடந்த ஏதாவது சுவாரசியமான நிகழ்ச்சியிலிருந்து, அவரது நீண்ட வாழ்க்கையின் ஊழிக்கால ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி வரை பல விஷயங்களும் அடங்கும். கணவனை இழந்து 45 ஆண்டுகள் தனிமையிலே வாழ்ந்துவிட்டவர். அவர் வயதொத்த முதியோர் பலரும் இயற்கையுடன் இணைந்துவிட்டனர். வயது ஆக ஆக தனிமைப் படுத்தப்பட்ட அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஆளில்லை. மாதத்தில் ஒருமுறை பார்க்கவரும் என்னைக் கண்டால் அவருக்கு அலாதி மகிழ்ச்சி. ஓரிரு மணி நேர பேச்சுக்குப்பின், புறப்படுகிறேன் ஆயா என்றால், ‘இப்பத்தான வந்த, அதுக்குல போரேங்கிறியே, சாய்ங்காலம் வர்றியா’ என்பார்!

ஒருநாள் அவ்வாறான நீண்ட பேச்சொன்றின் இறுதியில்தான் ‘மதமதக்யஞ் சாடின்னா, தெரியுமாடாம்பி’ என்றார். எனக்குப் புரியவில்லை! ‘என்னது?’ என்றேன். ‘மதமதக்யஞ் சாடி’ என்றார் மீண்டும். தனது எட்டு வயதிலிருந்து யாரிடமும் இதுபற்றிப் பேசியதில்லை எனவும், கடந்த சில மாதங்களாக இதுபற்றிய நினைவுகள் வந்து கொண்டிருப்பதாகவும், அன்றுதான் முதன்முறையாக என்னிடம் இதைக் கூறுவதாகவும் சொன்னார். பேச்சைத் தொடர்ந்தவர், ‘நானும் பாத்தது இல்ல, சின்ன வயசில எட்டு பத்து வயசிருக்கிறப்ப, வாட்டாவடியில கெழங்கெட்டெயுவ மதமதக்யஞ் சாடின்னு சொல்லி பேசுவ்வொ’, என்றார். அவர் தொடர்ந்து கூறிய செய்திகளில் இருந்து, எதை மனத்தில் கொண்டு பேசுகிறார் என புரியத்தொடங்கியது.

தமிழகத்தின் பல இடங்களில் தொல்லியல் துறையினர் அவ்வப்போது அகழாய்வின்போது கண்டெடுக்கும் ‘முதுமக்கள் தாழி’யாக இருக்கக் கூடுமோ என்று அமைதியாக ஆயா கூறுயதைக் கேட்க ஆரம்பித்தேன்.

ஓடியாடி உழைத்த காலம் போய், மிகமிக வயதாகி இடப்பெயர்ச்சி உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் அடங்கிவிட்ட நிலையில், உடலுக்குள் உயிர் எங்கோ ஓரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு தங்கிவிட்ட நிலையில், ஆர்வமுடன் உணவூட்டி, குளிப்பாட்டிப் பராமரிப்பவர்களுக்கும் அலுப்புத்தட்டும் நிலையில், படுத்துவிட்ட ஒருவர் மீண்டெழுந்து நடமாடுவது உறுதியாக இல்லை என்ற நிலையில் அவ்வுடலை, அவ்வுயிரை எவ்வாறு அனுப்பிவைப்பது?

‘குருது மாதிரி இருக்குமாம் அந்தச் சாடி’, அந்த சாடிக்குள்ள சாவப்போரவ்வொள ஒக்காரவச்சு, சோறு, தண்ணியுங் குடுத்து, உசுரு அடங்குற வரையில வச்சிருந்துட்டு, அப்புடியே சாடியோட பொதச்சிப்புடுவ்வொளாம்’ என்றார் ஆயா மெல்லிய குரலில். வாட்டாகுடியில் அதுபோன்று யாரையாவது புதைத்து கேள்விப்பட்டிருக்கிறாயா ஆயா எனக் கேட்டேன். இல்லை, வயதான பெரியவர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களும் யாரையும் அவ்வாறு உள்ளூருக்குள் புதைத்ததாகச் சொன்னதில்லை என்றார். ஆயாவின் வயதைக் கணக்கில் கொண்டு, அவர் கூறிய செய்திகளிலிருந்து, கிபி 1850க்குப் பின் கடந்த சுமார் 170 ஆண்டுகளாக நம் ஊர்ப்பக்கம் மதமதக்யஞ் சாடி முறை வழக்கில் இருந்திருக்க வாய்ப்பில்லை என நான் யூகித்தேன்.

தமிழகத்தின் பல இடங்களில் கிடைத்த தாழிகளில் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரவியிருந்த ‘உலகாயதம்’ எனும் அக்கால மதத்தில்பலர் தாழிக்குள் சம்மணமிட்டு அமர்ந்து தவம் செய்தபடியே உயிர்துறந்து, தாழியுடன் புதைக்கபடுவதும் வழக்கத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. [இந்தியாவின் மிகப் பழைமை வாய்ந்த மதங்களில் ஒன்றான உலகாயதம், நேரடியாகக் காண்பதொன்றே நிச்சயமானதென்ற அடிப்படைக் கொள்கையை உடையது. எனவே கண்களால் காணமுடியாத ஒன்றாய் இருப்பதால், கடவுள் என்று ஒன்றில்லை என்பது அம்மதத்தின் கொள்கைகளில் ஒன்று].

மதமதக்கா பானை, ஈமத்தாழி, ஈமப்பேழை, முதுமக்கள் தாழி என்றும், பச்சிளம் குழந்தைகளுக்குத் தொட்டில்பேழை என்றும் தாழிகள் அழைக்கப்பட்டன. மேலே ஆயா கூறியதுபோல் ஒருவரின் இறப்புக்கு முன்பே தாழியில் வைக்கும் முறையல்லாமல், இறப்புக்குப்பின் தாழியில் வைத்துப் புதைப்பதும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என அகழாய்வாளர்களின் விளக்கங்களும் உள்ளன. அப்படியெனில், உடலை எரிக்கும் முறை எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது எனும் கேள்வியும் எழுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இக்காலத்தில் உயிரற்ற உடலை எரிப்பது, புதைப்பது, ஆய்விற்காக தானமளிப்பது போன்ற வெவ்வேறு முறைகள் இருப்பதைப்போல், அக்காலத்திலும் பலவகையான ஈமச் சடங்கு முறைகள் நமது பண்பாட்டில் இருந்துள்ளன என நாம் அறியமுடிகிறது.

ஆயாவின் மனத்தில் அவர் இறப்பதற்கு சுமார் ஓராண்டுக்கு முன் இக்கேள்வி வரக் காரணம் என்ன? சுமார் தொன்னூறாண்டுகள் மூளைக்குள் எங்கோ புதைந்து கிடந்த நினைவு திடீரென முளைத்ததன் காரணம் என்ன? தாம் நீண்டகாலம் வாழ்ந்து விட்டோம், இனி எப்படியோ? தமது மூதாதையரை இந்த வயதில் தானே மதமதக்யஞ் சாடிக்குள் வைத்திருப்பார்கள், புதைத்திருப்பார்கள் என நினைத்திருப்பாரோ?

தூத்துக்குடி கழுகுமலை முதுமக்கள் தாழி, புதுச்சேரி முதுமக்கள் தாழி, திருமதி. கோவிந்தம்மாள், சனவரி 14, 2020ல் இயற்கை எய்தினார்.

உதவிக் கட்டுரை: ஆதிச்சநல்லூர் அகழாய்வும் முதுமக்கள் தாழியும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஆறுமுகமாசான சுடலை மா, சசிகலா கி. தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு – பன்னாட்டுக் கருத்தரங்கம். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி. 2019.

பெரிய கோவில் வாழ்க!

ஆ. இரா. பாரத ராஜா, மன்னங்காடு மேற்கு

சரித்திரம் படைத்து நிற்கும்

தஞ்சைப் பெரிய கோவிலே வாழ்க!

நரித்திறம் உடைத்து நிற்கும்

இராஜராஜ சோழனே வாழ்க!

மலைகளே இல்லா நகரில்

மலையென மலைக்க வைத்து,

கலையாத கலைகளோடு

சிலைகளைச் செதுக்கி வைத்து,

நிலையிலா உலக வாழ்வில்

நிலையான கோவில் கண்டு,

அலகிலா சோதியான பெரிய

ஆண்டவர் "லிங்கம்"நாட்டி,

உலகிலே பெரியதான

உன்னத" நந்தி" காட்டி,

கட்டடக் கலையின் திறமும்

கடவுளைப் போற்றும் அறமும்

திட்டமாய் வடித்து வைத்துத்

திறமிகு இராஜ ராஜன்

கட்டிய பெரிய கோவில்

காலங்கள் கடந்து நின்று,

ஞாலமே வணங்கும் வண்ணம்

ஆயிரம் ஆண்டுகள் கடந்ததம்மா!

ஆலயம் சிவமாய் நிலைத்ததம்மா!

இன்று

பாலங்கள் புதிதாய்க் கட்டி,

அமைச்சர்கள் திறந்தால் வீழும்!

காலங்கள் வென்று நிற்கும்

பெரிய கோவிலோ என்றும் வாழும்!

"யுனெஸ்கோ" போற்றுகின்ற

இணையிலாப் பெரிய கோவில்

குடமுழுக்குத் திருவிழாவால்,

தஞ்சையோ மிக அதிரும்!

தமிழரின் தலைகள் நிமிரும்!

தஞ்சைக்குப் பெருமை நாட்டி,

தமிழர்க்கு வலிமை கூட்டி

தாயெனக் காத்து நிற்கும்

பெரிய கோவில் வாழ்க! வாழ்க!

பெருமைகள் என்றும் சூழ்க!

***

மன்னங்காடு சமுதாயப் பணியில் ஆர்வலர்கள். வசதியற்றோருக்கு வழங்கப்படத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் உள்ளூரில் பயனடைந்தோரில் சிலர்.

படங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்டன. படம் பிடித்தவர்களுக்கும், காட்டுமஞ்சரிக்கு அனுப்பி உதவியவர்களுக்கும் நன்றி.

***

உள்ளூர் முகக்கவசம்

உலகை உலுக்கும் கொரோனா நம் நாட்டையும் விட்டு வைக்காத நிலையில் ஆங்காங்கே அதை தடுக்க முயற்சிகள் அரசு சார்பாகவும், தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக மன்னங்காடு கிராமத்திலும் நோய் தடுப்பு ஆயத்தப்பணிகள் நடைபெறும் நிலையில், நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் தைக்கும் பணி தொடங்கப்பட்டது. முனைவர் சிவகுமார் அவர்களின் ஆலோசனையின் படி சமூக ஆர்வலர்கள் திரு. அஸ்வத்தாமன், திரு. ராகவன் ஆகியோரின் அயராத முயற்சியால் பயன்படுத்தாத வேட்டிகள் ஊர் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு, தையல் இயந்திர வசதி இருப்பவர்களின் வீட்டில் கொடுத்து முகக்கவசம் தைக்கும் பணி துரிதமாக செயல்பட்டு வருகிறது.

திருமதி. முத்துக்கண்ணு மற்றும் திரு. ரெகுநந்தன் ஆகியோர் தமது தையல் திறமை நுணுக்கத்தைப் பயன்படுத்தி முகக்கவசங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். உள்ளூர் திறமையால் உருவாகும் இந்த ‘Made in Mannankadu’ முகக்கவசங்கள் ஊர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தகவல்: கோ. வெங்கடேஸ்வரன், மன்னங்காடு வடக்கு

***

தெரியுமா உங்களுக்கு?

கரோனா வைரஸ் குடும்பத்தில் 40க்கும் மேற்பட்ட சிற்றிங்கள் (வைரஸ் வகைகள்) உள்ளன. இக்குடும்பத்திலிருந்து ஏதாவதொரு சிற்றினம் அவ்வப்போது தலைவிரித்து ஆடிவிட்டு கண்காணாமல் ஓடிப்போய் விடுவது வழக்கம். இப்போது நாம் ‘கொரோனா’ அல்லது ‘கொறணி’ என்றழைக்கும் nCoV அல்லது SARS-Cov-2 வைரசும் அதுபோன்ற ஒன்றே. SARS-Cov-2 வைரஸ் ஆட்டத்தின் பரப்பும், உக்கிரமும் புதிது!

***

கொரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) – பொதுமக்கள் பார்வைக்கு

ஆலத்தூர் மு. அகிலன், ஆலத்தூர்

இது ஆசிரியர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒருபகுதி.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஆ. இரா. பாரத ராஜா, மன்னங்காடு மேற்கு

முத்தான தமிழினத்தின் நன்னாளே!

மூத்தகுடி கண்டறிந்த பொன்னாளே!

புத்தாண்டே, சித்திரையே,வருக!

பொலிவான நலவாழ்வு தருக!

கொடுமைகள், மடமைகள்அழிய

கொடியநோய் கொரோனா ஒழிய

கடமைநிறை கல்விநலம் தருக!

கபடமிலா உழவர்வளம்பெருக,

இனியதமிழ்ப் புத்தாண்டே வருக!

ஈடில்லாச் செல்வவளம்தருக!

புனிதமிகு தமிழ் தந்த தாயே!

பலநன்மை தந்திடுவாய் நீயே!

சித்திரைத் தமிழ்மகளே வருக!

சீர்மிகு நலவாழ்வு தருக!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கவிப்பரியன் (இரா. வேலு, மன்னங்காடு மேற்கு)

ஆங்கில நாட்டு சுரண்டலிடம்

அடிமைப் பட்டு இந்தியத்தாய்

ஓங்குபுகழும் மறையுண்டு

உதிரக்கண்னீர் வடிக்கயிலே

பாரதத்து நிலமெங்கும்

பாமர மக்கள் வாழ்வினிலே

பற்றும் பசியும் பெருகுகையில்

பாசம் இற்று வீழுகையில்

சுற்றம் எங்கும் பஞ்சத்தால்

சுழன்று சுழன்று வாடுகையில்

கொட்டிக்கிழங்கு குடல் நிரப்ப

உமரிக்கீரை உயிர் காக்க

விதைத்த தினையும் கருகுகையில்

விழிநீர் நெஞ்சைத் தழுவுகையில்

பட்டுக்கோட்டை வட்டமெலாம்

பஞ்சத்தாலே பதறுகயில்

ஏரிக்குளங்கள் வெடிப்புவிட

தவளையும் நண்டும் குடிபெயர

இடித்துயர் தாங்கும் இருதயமும்

ஏங்கி ஏங்கி வலுக்குரைய

சோக கீதம் எங்கெங்கும்

சொல்லில் அடங்கா நிலமை தர

சோர்ந்து துடிக்கும் மக்களினை

சூழும் வறுமைச் சிறைக்குள்ளே

செங்கப் படுத்தான் காட்டினிலே

சிரிக்கும் பின்பனி நாளினிலே

முசிறி முப்பத்திரு நாட்டை

முத்தமிழாலே பின்னி வைத்த

அரும்புகழ் அருணாசலக்கவியின்

அன்புத் ததும்பும் வீட்டினிலே

ஜெகமே போற்றும் சீர்கவிஞன்

சிந்தை மகிழப் பிறந்தாரே

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நீண்ட கவிதையின் ஒரு பகுதி.

அண்மையில் வெளியிடப்பட்ட ‘கதம்ப மணி ஆரம்’ எனும் ஆசிரியரின் நூலிலும் இடம்பெற்றுள்ளது.

திரும்பிப் பார்க்கிறார் - 2

பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் கல்லணைக் கால்வாயின் சிறு கிளை வாய்க்கால்களில் ஒன்று வடக்கு நோக்கிப் பாய்ந்து மன்னங்காடு முச்சந்தியருகில் கிழக்கே திரும்புகிறது. அந்த இடம் சுமார் 60 ஆண்டுகளுக்குமுன் எவ்வாறு காட்சியளித்தது என்று உள்ளூர் ஓவியத்திறனாளர் திரு. மு. சிவகாரிமுத்து அவர்கள் ‘வாட்டர் கலர்’ முறையில் படம் பிடித்துக்காட்டுகிறார்.

நீர்வீழ்ச்சி

சிறுவர்களால் ‘சறுக்கை’ என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் சுமார் எட்டு அடி உயரத்தில் செங்கல் மற்றும் சிமென்டினால் கட்டப்பட்ட திறந்தவெளி மதகு ஒன்று அமைந்திருந்தது. இந்த மதகின் மூன்று கண்களின் வழயாக வாய்க்கால் நீர் பிரிந்து, மூன்று பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த சற்று உயரமான படிக்கட்டுகளில் சறுக்கி வீழ்ந்து ஒரு சிறிய நீர்வாழ்சியையே ஏற்படுத்தியது! ஆடி மாதத்திலிருந்து காவிரி நீரும், ஐப்பசியிலிருந்து மழை நீரும் சருக்கையில் கொட்டும் ஒலி இதன் சுற்றுப்புறங்களுக்கு இடைவிடாத பின்னனியிசையை அல்லும்பகலும் அளித்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகையில்லை. மதகினையொட்டி தென்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த படித்துறை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. இந்த மதகின் நீரை ‘இப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், விதை நெல் ஊறவைப்பதற்கும் அதிகம் பயன்படுத்தினர்’ என்கிறார் ஓவியர் சிவகாரி. செய்தி: து. நவநீதம்

இன்று: சருக்கை இருந்த இடம் பாழ்பட்டு புதராய்க் காட்சியளிக்கிறது. ஓவியம், ஒளிப்படம் - மு. சிவகாரி

***

காட்டுமஞ்சரி Apr 2020 | 2020 : 2 KaattuManjari