மலை வேம்பு வெளியூரிலிருந்து புதிய மரவகை Exotic Melia dubia (Malai Vembu) in Mannankadu
ஆர்வமுள்ள உள்ளூர் விவசாயி மன்னங்காடு கிராமத்திலோ அல்லது அதன் சுற்றுப்புரங்களிலோ இயற்கையாக இல்லாத மலை வேம்பு மரவகையை இங்குள்ள ஆர்வமிக்க விவசாயி திரு. மு. இராமச்சந்திரன் பயிரிட்டு வளர்த்து வருகிறார். இம்மர வகையின் அறிவியல் பெயர் ‘மேலியா ட்யூபியா’ என்பதாகும். இவரின் வயலில் சுமார் 3 மீ வரை மளமளவென்று வளர்ந்துவிட்ட இந்த மரங்கள் சிறுசெடிகளாக ஏப்ரல் 2015ல் நடப்பட்டதாம். செடிகள் நெய்வேலியிலிருந்து பெறப்பட்டதாகக் கூறுகிறார். ஆறு, ஏழு மாதங்களில் இவ்வளவு உயரம் வளரும் உள்ளூர் மரவகை ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டும். சோதனை முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 320 கன்றுகளை நட்டு, இப்பொழுது சுமார் 280 மரங்கள் பிழைதிருப்பதாகக் கூறுகிறார். இளம் மலை வேம்பு மரம், இலையின் தோற்றம், பயிரிடும் விவசாயி மு. இராமச்சந்திரன், மலைவேம்புப் பழம் மற்றும் நாற்று. Photos by D. Navaneetham. Seed & sapling image by Hunsply,
Karnataka மலை வேம்பு மரத்தின் தன்மை வேம்பு (Neem) இனத்தைச் சேர்ந்த மலை வேம்பு மிகவேகமாக வளரும் ஒருவகை கடினத் தன்மையற்ற மரமாகும். நன்கு பராமரிக்கப்பட்டு வளர்ந்த மரங்கள் சுமார் 20 மீட்டர் உயரமும், 1.5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீ உயரத்திற்கு மேல் தாழ்வான மலைப்பகுதிகளில் வளரும். இமயமலை அடிவாரத்திலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரை இயற்கையாகவே பரவியிருக்கும் இம்மரங்கள் தென்னிந்தியாவின் மற்ற பகுதிகளில் செயற்கையாகப் பயிரிடப்படுகின்றன. மரத்தின் பயன்கள் ஐந்து, ஆறு வருடங்களில் அறுவடைக்குத் தயாராகும் மலைவேம்பு மரங்கள் காகிதம் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகவும், ‘ப்ளை உட்’ தயாரிப்பதற்கும், இலகுவான பெட்டிகள், தீக்குச்சி, தீப்பெட்டி, பென்சில் போன்ற பொருள்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. மலை வேம்பு தாவரத்தின் உயிரியல் வகைப்பாடு
சிறந்த முயற்சி இராமச்சந்திரன் மலைவேம்பு தவிர மேலும் சில புதிய மரவகைகளையும் பயிரிடத் திட்டமிட்டிருக்கிறார். இத்துடன் பாரம்பரியப் பயிர்களான நெல், தென்னை போன்றவற்றையும் ஆர்வமுடன் பயிரிட்டு வருகிறார். விவசாயத்தை ஓர் இலாபகரமான தொழிலாக்கும் நோக்கில் விடாமுயற்சியுடன் செயல்படும் இந்த பட்டதாரி விவசாயியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. Article by Duraiswamy Navaneetham. Based on on-site interview at Mannankadu on Oct. 16, 2015. குறிப்பு; நவம்பர் 2015ல் பலநாட்கள் பெய்த அடைமழையின் காரணமாக, இந்த மலைவேம்புத் தோட்டத்தில் தொடர்ந்து பலநாட்களுக்கு நீர் தேங்கியதால் இலைகள் உதிர்ந்து வேரும் செயலிழந்து மரங்கள் இறந்துவிட்டன. விவசாயி ராமச்சந்திரன் அனைத்து மலைவேம்பு மரங்களையும் களைந்துவிட்டு தற்போது நிலக்கடலை உளுந்து போன்றவற்றை பயிரிட்டுருப்பதாகக் கூறுகிறார். விவசாயத்தில் பொருள் இழப்பும், ஏற்படும் மனவருத்தமும் புதிதான ஒன்றில்லை. அவருடைய அடுத்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம். This page was created on Oct 27, 2015 and updated on Jan 24, 2016. See other News & Events |